அவதாரிகை –
கீழில் திரு மொழியில் –
ஊரிலே ஸ்திரீகள் ஆனவர்கள் தந்தாம் அகங்களில் இவன் செய்த தீம்புகளை சொல்லி –
தாயாரான யசோதை பிராட்டிக்கு வந்து முறைபட்டு –
உன் மகனை இங்கே அழைத்து கொள்ள வேணும் -என்றபடியையும் –
அதுக்கு ஈடாக அவள் அவனை அழைத்த பிரகாரங்களையும் சொல்லுகையாலே –
அவன் ஊரில் இல்லங்கள் தோறும் செய்த
நவநீத ஸௌர்யாதி க்ரீடா விசேஷங்களை அனுபவித்தாராய் நின்றார் –
(சக்ரவர்த்தி திரு மகன் பெருமாள் குணங்களை அயோத்யா மக்கள் சொல்ல கேட்டு உகந்தானே
அதே போல் இங்கும் யசோதை இவன் சேஷ்டிதங்கள் இவர்கள் சொல்ல கேட்டு உகப்பதே பிரயோஜனம் )
ப்ராப்த யௌவநைகளான பெண்களோடே அவன் இட்டீடு கொண்டு -ஓன்று கொடுத்து
ஓன்று வாங்குகை-இது தானும் வார்த்த விஷயத்தில் -என கொள்க –
விளையாடுகையாலே அவனால் ஈடுபட்ட பெண்கள் -மாதாவான யசோதை பிராட்டி பக்கலிலே வந்து –
தங்கள் திறத்திலே அவன் செய்த தீம்புகள் சிலவற்றை சொல்லி –
1-ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் -(விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட)
2-ஆஸ்ரித ரஷகனாய் –
3-ஆஸ்ரிதர் கட்டவும் அடிக்கவும் படி எளியனாய் –
4-ஆஸ்ரிதர்க்கு நல் சீவனான தன்னை பூதனை கையில் அகப்படாமல் நோக்கி கொடுத்தவனாய்–
5-ஆஸ்ரிதர்க்கு தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யுமவனாய்-
6-ஆஸ்ரிதர் ஆர்த்தி அறிந்து சென்று உதவுமவனாய் –
7-நித்ய ஆஸ்ரிதையான பூமிப் பிராட்டிகாக நிமக்னையான பூமியை உத்தரித்தவனாய் –
இப்படி சர்வ விஷயமாக உபகாரங்களை பண்ணினவன் –
எங்கள் திறத்தில் அபகாரங்களை செய்யா நின்றான் –
ஆன பின்பு இவன் கீழ் ஜீவிக்க போகாது –
இவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் என்று பல காலும் சொல்லி
முறைப்பட்ட பிரகாரத்தை தாமும் அப்படியே பேசி –
அவனுடைய அந்த லீலா வியாபார ரசத்தை அனுபவிக்கிறார் இத் திருமொழியில் –
————–
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில் கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் -2 -10-1 – –
பதவுரை
ஆற்றில் இருந்து–யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு
விளையாடுவோங்களை–விளையாட நின்ற எங்கள் மேல்
சேற்றால் எறிந்து–சேற்றை விட்டெறிந்து
வளை–எங்களுடைய கை வளைகளையும்
துகில்–புடவைகளையும்
கைக் கொண்டு–(தன்) கையால் வாரி யெடுத்துக் கொண்டு
காற்றில்–காற்றிலுங் காட்டில்
கடியன் ஆய்–மிக்க வேகமுடையவனாய்
ஓடி–(அங்கு நின்றும்) ஓடி வந்து
அகம் புக்கு–(தன்)வீட்டினுள்ளே புகுந்து கொண்டு
(வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதறுகின்ற எங்களைக் குறித்து)
மாற்றமும்–ஒரு வாய்ச் சொல்லும்
தாரானாய்–அருளாமல் உபேக்ஷியா நின்ற பெருமானால்
இன்று முற்றும்–இப்போது முடியா நின்றோம்;
வளைத் திறம்–(தான் முன்பு வாரிக் கொண்டு போன) வளையின் விஷயமாக
பேசானால்–(தருகிறேன், தருகிறிலேன் என்பவற்றில் ஒன்றையும்) வாய் விட்டுச் சொல்லாத அப் பெருமானால்
இன்று முற்றும்–இன்று முற்றும் –
இது வயிறு எரிந்து சொல்லும் வார்த்தை-இரு கால் சொல்கிறது –ஆற்றாமையின் மிகுதி
ஆற்றிலிருந்து –
சிலர் எங்களது -என்று அபிமாநிக்கும் நிலத்திலே இருந்தோமோ –
சர்வ சாதாரணமான ஸ்தலத்திலே அன்றோ நாங்கள் இருந்தது –
இத்தால்
ஏகாந்தமாய் -இவனுக்கு வந்து தீம்பு செய்ய ஒண்ணாதபடி பலரும் போவார் வருவாரான
ஸ்தலத்திலே அன்றோ
விளையாடுவோங்களை
நாங்கள் அந்ய பரைகள் அன்றோ –
தன் இடையாட்டம் பட்டமோ –
நாங்கள் முன் தீமை செய்தோம் ஆகிலுமாம் இறே-
தன்னைக் கடைக் கண்ணால் கணிசித்தோமோ –
தன்னை இங்கு இட்டு (இங்கிட்டு இங்கே )எண்ணினார் இல்லை கிடீர் –
சேற்றால் எறிந்து-
சேற்றை இட்டு எறிந்து –
பிறர் அறியாதபடி -கைகளாலே ஸ்பர்சித்தால் ஆகாதோ-
இது ஏது என்று பிறர் கண்டு கேட்கும்படி சேற்றை இட்டு எறிய வேணுமோ –
வளை துகில் கை கொண்டு –
நாங்கள் குளிகைக்காக கழற்றி இட்டு வைத்த வளைகளையும் துகில்களையும் வாரிக் கொண்டு
இடைப் பென்கள் ஆகையாலே ஆபரணங்களையும் பரிவட்டங்களையும் களைந்து இட்டு வைத்து இறே குளிப்பது
காற்றில் கடியனாய் ஓடி –
துடர அகப்படாதே காற்றிலும் காட்டிலும் கடியனாக ஓடி –
தன் ஜீவனத்தில் ஒன்றும் குறையாடதபடி கொண்டால் –
எங்கள் ஜீவனத்தையும் கொண்டு போக வேணுமோ –
அவனுக்கு ஜீவனம் -இவர்களுடைய வளையல்களும் துகில்களும் –
இவர்களுக்கு ஜீவனம் –அவன் தன்னுடைய வடிவு இறே
(திருக்கோளூர் பதிகம் -இதே போல் -தனது ஜீவனம் தேடித் போனாள் –
அவள் தானே திருத்தாயாருக்கு ஜீவனம் -முகத்தை வைத்து போகலாகாதோ )
அகம் புக்கு –
பின் தொடர்ந்து சென்றாலும் காணப் போகாதபடி தன் அகத்திலே சென்று புக்கு
வழி பறித்து அசாதாரண ஸ்தலத்திலே ஆய்த்து இருப்பது
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் –
நாங்கள் தன் பேரை சொல்லி அழைத்தாலும் -அதுக்கு ஒரு மாற்றம் தானும் சொல்லுகிறான் இல்லை –
வார்த்தையும் -ஏதேனும் வளையும் துகிலுமோ
(உம்மைத்தொகை -வளை துகில் தர வில்லை -வார்த்தையும் தர வில்லை
மாற்றமும் தாராரோ -திருப்பாவை -தூ மணி மாட பாசுரம் போல் )
ஒரு வாரத்தை தன்னை ஆகிலும் தந்தால் ஆகாதோ –
இப்படி ஒரு வார்த்தையும் உட்பட சொல்லாதவனாலே இன்று முடிவோம் –
ஒரு வார்த்தை பேரில் ஜீவிப்பார் போலே காணும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் –
தருவன் என்னுதல் -தாரேன் என்னுதல் -வளை இடையாட்டமாக
ஒன்றும் சொல்லாதவனாலே இன்று முடிவோம்
முற்றதும் -என்ற இது –
முற்றும் -என்று குறைந்து கிடக்கிறது
முற்றுதல் முற்றலாய் -அதாவது –
முடிவாய் -முற்றும் என்றது -முடிவோம் என்றபடி –
————————————————
குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த
வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு
விண் தாய் மரத்தானால் இன்று முற்றும்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – 2-10 2-
பதவுரை
குண்டலம்–கர்ண பூஷணங்களானவை
தாழ–(தோள் (அளவும்) தாழ்ந்து தொங்கவும்
குழல்–திருக் குழல்களானவை
தாழ–(அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும்
நாண்–திருக்கழுத்திற் சாத்தின விடு நாணானது
தாழ–(திருவுந்தி யளவும்) தாழந்தசையவும்
எண் திசையோரும்–எட்டு திக்கிலுமுள்ள (தேவர் முனிவர் முதலியோர்) எல்லாரும்
இறைஞ்சி தொழுது–நன்றகா [ஸாஷ்டாங்கமாக] வணங்கி
ஏத்த–ஸ்தோத்ரம் பண்ணவும்
(இப்படிப்பட்ட நிலைமையை யுடையனாய்)
வண்டு அமர் பூ குழலார்–வண்டுகள் படிந்து கிடக்கப் பெற்ற பூக்களை அணிந்த கூந்தலையுடைய
இடைச்சிக(ளான எங்க)ளுடைய(ஆற்றங்கரையில் களைந்து வைக்கப் பட்டிருந்த)
துகில்–புடவைகளை
கைக் கொண்டு–(தனது)கைகளால் வாரிக் கொண்டு
விண் தோய் மரத்தானால்–ஆகாசத்தை அளாவிய (குருந்த) மரத்தின் மேல் ஏறியிரா நின்றுள்ள கண்ணபிரானால்
இன்று முற்றும்;
வேண்டவும்–(எங்கள் துகிலை தந்தருள் என்று நாங்கள்) வேண்டிக் கொண்ட போதிலும்
தாரானால்–(அவற்றைக்) தந்தருளாத கண்ணபிரானால்
இன்று முற்றும்;
குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ –
குண்டலம் -காதுப்பணி-அது திருத் தோள்கள் அளவும் தாழ்ந்து அசைய
திருக் குழல்களும் அதுக்கு பரபாகமாம்படி அத்தோடு ஒக்க தாழ்ந்து அசைய
திருக் கழுத்தில் சாத்தின விடு நாண் ஆனது திரு உந்தி அளவும் தாழ –
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த –
எட்டு திக்கிலும் உண்டான தேவ மனுஷ்யாதிகள் எல்லாம் –
இவ் வடிவு அழகையும் சேஷ்டித வைலக்ஷண்யத்தையும் கண்டு பக்ன அபிமானாராய் வணங்கி ஸ்தோத்ரம் பண்ண –
வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு –
வண்டுகள் மாறாத பூக்களாலே அலங்க்ர்தமான குழலை உடையவர்களுடைய
கரையிலே இட்டு வைத்த பரியட்டங்களைக் கைக் கொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் –
இவர்களுக்கு எட்டாதபடி விண்ணிலே தோய வளர்ந்த குருந்த மரத்திலே இருந்தவனால் இன்று முடிவோம்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் –
துகிலைப் பணித்து அருளாய் -என்று அபேஷிக்கவும் கொடாதானாலே இன்று முடிவோம் –
—————————————————-
தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும் -2-10 3-
பதவுரை
தடம் படு–இடமுடைத்தான [விசாலமான]
தாமரைப் பொய்கை–தாமரைப் பொய்கையை
கலக்கி–உள்ளே குதித்து கலங்கச் செய்வது (அக் கலக்கத்தினால் சீற்றமுற்று)
விடம் படு–விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின
நாகத்தை–காளிய ஸர்ப்பத்தை
வால் பற்றி ஈர்த்து–வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு)
படம்படு–படமெடுக்கப்பெற்று
பை–மெத்தென்றிருந்த
தலை மேல்–(அந் நாகத்தின்) தலை மேல்
எழப் பாய்ந்திட்டு–கிளாக்குதித்து (அத் தலையின் மீது நின்று)
உடம்பை–(தன்) திரு மேனியை
அசைத்ததனால்–அசைத்து கூத்தாடின கண்ணபிரானால்
இன்று முற்றும்;
(அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்)
உச்சியில்–(அவனுடைய) படத்தின் மீது
நின்றானாள்–நின்றருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்
தடமுடை –
இடமுடைத்தான தாமரைப் பொய்கை என்று இறே பிரசித்தி காளியன் புகுவதற்கு முன்பு
பின்பு இறே நச்சு அழல் பொய்கையாயிற்று-இப்படிப் பட்ட பொய்கையை –
நிபபாத ஹ்ரதே தத்ர சர்ப்ப ராஜச்ய வேகத தேந அதிபததா தத்ர ஷோபித ச மகாக்ரத -என்கிறபடியே
பெரிய விசையோடு உள்ளே குதித்து கலங்க பண்ணி
விடும்படி நாகத்தை வால் பற்றி ஈர்த்து –
இப்படி கலக்கினவாறே க்ருதனாய் -விஷத்தை உமிழ்ந்து கொண்டு கிளர்ந்த
காளியனாகிற சர்ப்பத்தை ஒரு சரக்காக நினையாதே வாலைப் பிடித்து இழுத்து
படும்படி பைம் தலை மேல் எழப் பாய்ந்திட்டு
படத்தை உடைத்தாய் -கோபத்தாலே விஸ்தர்மான அதன் தலை மேலே –
அதிர்த்தியாலே விஷத்தை கக்கும்படி கிளறக் குதித்து –
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் –
காளியனுடைய க்ரோதத்தையும்-கிளர்த்தியையும் -அவன் பணங்களிலே
இவன் சென்று குதித்த படியையும் கரையில் நின்று கண்டு
இப்பாம்பின் வாயிலே அகப்பட புகுகிறான் இத்தனை -எல்லாரும் முடிந்தோம் –
என்று படுகாடு பட்டு விழுந்து கிடக்கிற அனுகூலரான கோப கோபி ஜனங்கள்
தரித்து எழுந்து இருக்கும்படியாக -அங்கே நின்று திருமேனியை
அசைத்தாடினவனாலே இன்று முடிவுதோம்
உச்சியில் நின்றானால் -இன்று முற்றும் –
அவன் இளைத்து விழுந்து சரணம் புகுந்த அளவும் -அந்த பணத்தின் மேலே
நெருங்க மிதித்து நின்றவனாலே இன்று முடிவுதோம்
இத்தால் –
பிரதிகூலனை சமித்து –
அனுகூலரானவர்களுடைய வயிற்று எரிச்சலை போக்கினவன்
ஸ்வ சேஷ்டிதங்களாலே எங்களை இப்படி வயிறு எரியும்படி பண்ணா நின்றான்
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை
இரு கால் சொல்லுகிறது ஆற்றாமையின் உடைய அதிசயம்
———————————————–
தேனுகனாவி செகுத்துப் பனம் கனி
தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்
அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும் -2 10-4 – –
பதவுரை
தேனுகன்–தேநுகாஸுரனுடைய
ஆவி–உயிரை
செகுத்து–முடிக்க நினைத்த அத் தேனுகனை
பனங்கனி–(ஆஸிராலிஷ்டமான) பனை மரத்தின் பழங்கள் (உதிரும்படியாக)
(பனை முன் வலி வந்தால் -கனி -வல்லினம் -ஐ போய் அம் வரும் -நன்னூல் -பனம் கனி -பனங்கனி )
எறிந்திட்ட–(அந்த மரத்தின் மேல்) வீசி யெறிந்த
தடம் பெருந் தோளினால்–மிகவும் பெரிய தோளாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து)
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து–தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து
ஆன் நிரை–பசுக்களின் திரளை
காத்தானால்–ரக்ஷித்தருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்
அவை–அப் பசுக் கூட்டத்தை
இன்று முற்றும்
தேனுகன் இத்யாதி –
க்ர்ஹீத்வா பிரமனேனைவ சோம்பரே கத ஜீவிதம் தஸ்மின் னேவ சசிஷேப தேனுகம் த்ர்ணா ராஜினி
தத பலான்ய நேகானி தாளாக்ரான் நிபந்தர ப்ர்திவ்யாம் பாதயா மாச மகாவோதா கனா நிவ —என்கிறபடியே
கழுதை யான வடிவைக் கொண்டு -தன்னை நலிவதாக வந்து நின்ற
தேனுகன் ஆகிற அசுரனனுடைய பிராணனை -ஆகாசத்திலே எடுத்து சுழற்றிய வேகத்தாலே முடித்து –
ஆசூரமான பனையினுடைய பழங்களும் உதிரும்படி தான் எறிந்திட்ட மிகவும் பெரிய திருத் தோளாலே
வானவர் இத்யாதி –
தனக்கு இடுகிற சோற்றை விலக்கி – மலைக்கு இடுவித்தது அடியாக மிகவும் குபிதனாய
தேவர்களுக்கு நிர்வாஹனான இந்த்ரன் ஆய்ப்பாடியில் உள்ள கோபர்களும் கோப
கோபீ ஜனங்களும் கடலிலே போம் புகும்படி வர்ஷிக்க சொல்லி –
புஷ்கலா வர்ததாதி-மேகங்களை ஏவி விடுகையாலே
அவற்றால் வந்த வர்ஷத்தை முன்பே -ரஷகம் -என்று சொன்ன மலை தன்னையே குடையாக எடுத்து தடுத்து –
உள்ளத்தில் தான் செய்யும் உபகாரம் அறியும் பசுக்களை ரஷித்தவனாலே இன்று முடிவுதோம்
(கோபர்களுக்கு கூட செய்நன்றி -இருக்குமோ இருக்காதோ ஆ நிரை களுக்கு இருக்குமே
கோவிந்த பட்டாபிஷேகம் ஸூரபி வந்து செய்ததே
ஆகவே ஆநிரை காத்தானால் இன்று முற்றும் )
அவை இத்யாதி –
அம் மழையிலே ஈடுபடாத படி நோக்கி -அவற்றை உஜ்ஜீவிப்பத்தவனாலே இன்று முடிவுதோம் –
இத்தால்
ரஷ்ய வர்க்கத்துக்கு வந்த வர்ஷாபத்தை போக்கினவன்
எங்களுக்கு விரஹ ஆபத்தை விளைத்து நலியா நின்றான் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-
———————————————
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்க பிடி உண்டு
வேய்த் தடம் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்
அடி உண்டு அழுதானால் இன்று முற்றும் – 2-10 -5-
பதவுரை
ஆய்ச்சியர் சேரி–இடைச் சேரியிலே
(இடைச்சிகள் கடைவதாக)
அளை–(மத்தை நாட்டி) உடைத்த
தயிர்–தயிரையும்
பால்–(காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும்
உண்டு–அமுது செய்து
(அவ் வளவோடு திருப்தி யடையாமல்)
பேர்ந்து–பின்னையும் (ஒரு கால் வெண்ணை திருடப் புகுந்த வளவிலே)
அவர்–அவ் இடைச்சிகள்
(ஒளிந்திருந்து)
கண்டு–(இவன் திருடுகின்ற போதில்) கண்டு
பிடிக்க–(இவனைத் தங்கள் கையில்)அகப் படுத்திக் கொள்ள
பிடி யுண்ட–(அவர்கள் கையில்) பிடிபட்டு
(அதற்கு தப்ப மாட்டாமல்)
வெண்ணை–வெண்ணெயை
கொள்ள மாட்டாது–(தான் நினைத்தபடி) கைக் கொள்ள மாட்டாமல்
அங்கு–அவர்கள் வீட்டில்
ஆப்புண்டு இருந்தானால்–கட்டுண்டிருந்த கண்ணபிரானால்
இன்று முற்றும்
அடியுண்ட அமுதினால்–(அவர்கள் கையால்) அடிபட்டு அழுத கண்ணபிரானால்
இன்று முற்றும்
அளை-மத்தை நாட்டி உடைத்த
ஆய்ச்சியர் சேரி -இடைச்சிகள் சேரியிலே
அளை தயிர் பால் உண்டு –
அவர்கள் கடைவதாக மத்து நாட்டி உடைத்த அளவிலே வைத்த தயிரையும் –
காய்ச்சுவதாக வைத்த பாலையும் அமுது செய்த
அன்றிகே –
அளை தயிர் என்றது –
அபிநிவேச அதிசயத்தாலே தன் கை உள் அளவும் போக விட்டு அலையப்பட்ட தயிர் என்னவுமாம் –
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடி உண்டு –
மீண்டு ஒரு கால் வெண்ணெய் களவு காண -என்று புகுந்த அளவில்
அவர்கள் ஒளித்து இருந்து கண்டு பிடிக்க அவர்கள் கையிலே பிடி பட்டு –
வேய் இத்யாதி –
பசுமையாலும் சுற்றுடைமையாலும் -வேய் போல் இருப்பதாய் –
பெரிதாய் இருந்துள்ள தோளை உடையவர்களுடைய -வெண்ணெயை அபஹரிக்க மாட்டாதே –
அங்கு இத்யாதி –
அங்கு அவர்கள் கட்ட கட்டுண்டவன் ஆகையாலே இன்று முடிவுதோம் –
அடி உண்டு இத்யாதி –
கட்டுன அளவும் அன்றிக்கே -அவர்கள் அடிக்க -அவர்கள் கையாலே -அடி உண்டு இருந்து
அழுதவனாலே இன்று முடிவுதோம்
இத்தால் –
அனுகூலான அபலைகளுக்கு கட்டி வைக்கலாம்படி பவ்யனாய் இருந்தவன் –
எங்களுக்கு அபவ்யனாய் மிறுக்குகளைப் பண்ணா நின்றான்
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-
————————————————–
தள்ளித் தடர் நடை இட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
துவக்கற உண்டானால் இன்று முற்றும் -2 10-6- –
பதவுரை
(காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே)
தள்ளி தளர் நடை இட்டு–தட்டித் தடுமாறி தளர் நடை யிட்டு
(நடக்க வேண்டும்படியான)
இளம் பிள்ளையாய்–இளங்குழந்தையாய்
(இருக்கச் செய்தே)
கள்ளத்தினால்–(தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே
வந்த–(தன்னைக் கொல்ல)வந்த
பேய்ச்சி அவளை–பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை
உள்ளத்தின் உள்ளே உற நோக்கி–(’நம்மை நலிய வருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே (எண்ணி) உறைக்கப் பார்த்து
(பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே)
முலை–அம் முலையை
உயிர் துள்ள சுவைத்ததனால்–(அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
துவக்கு அற–(அம் முலையில் தடவிக் கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி
உண்டானால்–(அம் முலையிற் பாலை) உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
(அவாப்த ஸமஸ்த காமன் -இருந்தாலும் பலவும் செய்வேன் -கர்ம பலன் எனக்கு ஒட்டாது –
நான் செய்தாலும் -கீதை ஸ்லோக தமிழ் ஆக்கம் இது )
தள்ளித் தடர் நடை இட்டு –
காலூன்றி நடக்கத் தரிப்பு இல்லாமையாலே தடுமாறித் தளர் நடை இட்டு –
இளம் பிள்ளையாய் –
முக்த சிசுவாய்
இத்தால் நடைக்கு கூட பலம் இல்லாத அதி பாலனாய் இருக்கச் செய்தே -என்கை
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி –
பிறர்க்கு தெரியாதபடி தன் மனசினுள்ளே -தன்னை நலிவதாக வருகிறவள் இவள் -என்று
அவளை உறைக்கப் பார்த்து
கள்ளம் இத்யாதி –
தன் வடிவை மறைத்து தாய் வடிவு கொண்டு க்ரித்ரிமத்தாலே வந்த
பூதனை உடைய முலைப்பாலோடே அவள் உயிரையும் அவள் துடிக்கும்படி
பசையற உண்டவனாலே இன்று முடிவுதோம்
துவக்கற இத்யாதி
அவள் நச்சு முலையை உண்ணா நிற்க செய்தே -அந் நெஞ்சிலே
தனக்கு ஒரு ஸ்பர்சம் அற உண்டவனாலே இன்று முடிவுதோம் –
இத்தால்
ஆஸ்ரிதர்க்கு நல் ஜீவனான தன்னை பூதனை கையில் அகப்படாமல் நோக்கி
உபகரித்தவன் -எங்களுக்கு தன்னைத் தராமல் அருமைப் படுத்தா நின்றான் –
ஆன பின்பு -அவனால் நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை –
——————————————————–
மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7 – –
பதவுரை
மா வலி–மஹாபலியினுடைய
வேள்வியில்–யாக பூமியிலே
மாண் உரு ஆய் சென்று–பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி
மூ அடி தா என்று–(என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று
இரந்து–யாசித்துப் பெற்ற
இம் மண்ணினை–இந்தப் பூமியை
(அளந்து தன் வசப்படுத்தத் தொடங்கின வளவிலே)
ஓர் அடி இட்டு–(பூமிப் பரப்படங்கலும் தனக்குள்ளே யாம்படி) ஓரடியைப் பரப்ப வைத்து (அளந்து)
இரண்டாம் அடி தன்னிலே–இரண்டாவது அடியைக் கொண்டு அளக்கத் தொடங்கின வளவிலே
தாவி அடி இட்டானால்–மேலுலகங்களடங்கலும் தனக்குள்ளே யாம்படி) தாவி அடி யிட்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
(தேவேந்திரனாகிய ஒரு ஆஸ்ரிதனுக்காக இப்படி)
தரணி அளந்தானால்–லோகத்தை அளந்தவனாலே
இன்று முற்றும்.
மாவலி வேள்வியில் –
இந்திரனுடைய ஐஸ்வர்யத்தை பலத்தாலே அபகரித்து கொண்டு –
கோவாகிய மாவலி -(9-8-)என்கிறபடியே
தன்னரசாய் -அழிக்க ஒண்ணாதபடி -ஒவ்தார்யம் என்பதொரு குணத்தை
உடையனாய் இருந்த மகா பலியினுடைய யாகத்திலே
மாண் உருவாய் சென்று –
கள்ளக் குறளாய்-(திருமொழி) -என்றபடியே
அவனை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணுகைக்காக வாமன வேஷத்தை கொண்டு
வடிவு அழகாலும் -நடை அழகாலும் -(உருவாய் சென்று-இரண்டுக்கும் வியாக்யானம்)
அவனை அபர்ஹசித்தனாய் தான் சொன்னது மாறாமல் செய்யும்படி சென்று
மூவடி தா என்று இறந்த இம் மண்ணினை
அவன் சடக்கென இசைந்து தருகைக்காகவும் –
பின்பு ஓரடிக்கு அவனை சிறை வைக்காகவும் –
என் காலாலே மூவடி தா – என்று இரந்து பெற்ற இப்பூமியை
மண் என்கிற இது
மற்ற லோகங்களுக்கு எல்லாம் உப லஷணம்
ஓரடி இத்யாதி –
அளக்கிற அளவிலே பூமிப் பரப்பு அடங்கலும் தனக்குள்ளே ஆம்படி
ஓரடி இட்டு இரண்டாம் படி தன்னிலே
தாவடி இத்யாதி –
ஊர்த்த லோகங்கள் அடங்கலும் தனக்கு உள்ளே ஆம்படி
தாவி -அடி -இட்டவனாலே இன்று முடிவுதோம்
(தாவி அன்று உலகம் எல்லாம் -திருமாலை )
தாரணி இத்யாதி
திருவடிகளின் மார்த்தவம் பாராதே ஓர் ஆஸ்ரிதனுக்காக
இப்படி லோகத்தை அளந்தவனாலே இன்று முடிவுதோம்
இத்தால் –
தன்னை அழிய மாறியும் ஆஸ்ரித ரஷணம் செய்யும் அவன்
எங்கள் அபேஷிதம் செய்யாதே ஈடுபடுத்தா நின்றான் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் முடிவுதோம் -என்கை
——————————————————-
தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய்
வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் -2 10-8 –
பதவுரை
தாழை–(கரையிலே) தாழைகளையும்
தண் ஆம்பல்–(உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களை யுமுடைய
தடம் பெரும்–மிகவும் பெரிய
பொய்கை வாய்–தடாகத்தினுள்ளே
வாழும்–வாழ்ந்து கொண்டிருந்த
முதலை–முதலையின் வாயாகிய
வலைப்பட்டு–வலையிலே அகப்பட்டுக் கொண்டு
வாதிப்பு உண்–துன்பமடைந்த
வேழம்–ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய
துயர்–வருத்தம்
மனத்துன்பம் -உடல் துன்பம் ஒரு பொருட்டு இல்லையே -தொழும் காதல் களிறு அன்றோ
கெட–தீரும்படியாக
விண்ணோர் பெருமான் ஆய்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் என்பதைத் தோற்றுவிக்கப் பெரிய திருவடியை வாகனமாக உடையவனாய்
(அப்பொய்கைக் கரையிலே சென்று)
ஆழி–சக்ராயுதத்தாலே
(முதலையைத் துணிந்து)
பணி கொண்டானால்–(கஜேந்திராழ்வரனுடைய) கைங்கர்யத்தை ஸ்வீக்ரித்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;
அதற்கு–அந்த யானையின் திறத்தில்
அருள் செய்தானால்–(இப்படிப்பட்ட) கிருபையைச் செய்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;புஷ்ப்பத்தை திருவடியில் இடுவித்துக் கொண்டவனாலே இன்று முற்றும்
வாதிப்பு உண்-வருந்தின -வாதிப்பு -உபாதை
தாழை இத்யாதி –
கரையிலே தாழைகளையும் -உள்ளே குளிர்ந்த ஆம்பல்களையும் உடைத்தாய் –
மிகவும் பெரிதாய் இருந்துள்ள பொய்கை யிடத்திலே
தாழை -கரையில் உண்டான சோலைக்கு உப லஷணம்
மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -(3-5-)-என்றார் ஆழ்வார்
ஆம்பல் -உள்ளுண்டான புஷ்பங்களுக்கு எல்லாம் உப லஷணம்
வைகு தாமரை வாங்கிய வேழம் – என்கிறபடியே தாமரை நெருங்கி பூத்துக் கிடக்கிறது கண்டு அது பரிக்கைக்கா இறே
உள்ளே துஷ்டச்தவம் கிடக்கிறது என்று அறியாதே ஸ்ரீ கஜேந்த்திரன் தான் இப்பொய்கையிலே –
அத்ய ஆதரத்தோடே சென்று இழிந்தது
வாழு முதலை வலைப்பட்டு –
நெடும் காலம் எல்லாம் -நம் சாப மோஷத்துக்கு ஓரானை வருவது எப்போதோ –
என்கிற நினைவோடு -அதினுள்ளே வர்த்திக்கிற முதலை யாகிற வலையிலே அகப்பட்டு –
(வாழும் சோம்பர் போல் வாழும் முதலை
ஜனன மரண -தாடை மேல் கீழ் பற்கள் -)
வாதிப்புண் வேழம் துயர் கெட –
கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹா ஆகர்ஷதே ஜலே -என்கிறபடியே அது நீருக்கு இழுக்க தான் கரைக்கு இழுக்க –
திவ்யம் வர்ஷண ஹஸ்ரகம்-என்கிறபடியே நெடும் காலம் இப்படி பாதைப்பட்ட
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய – கையில் பூ செவ்வி அழியாமல் திருவடிகளில்
சாத்தப் பெற்றிலோமே -என்கிற க்லேசம் தீரும்படி யாக
விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானமை தோற்ற -பெரிய திருவடியை மேல் கொண்டு சென்று
க்ராஹஞ்ச்சக்ரென-என்கிறபடியே திரு ஆழியாலே முதலையைத் துணித்து
அந்த சிறையை விடுத்து -அவன் கையில் பூவைத் தன் திரு வடிகளிலே -இட்டுக் கொண்டு
இப்படி ரஷித்தவனாலே இன்று முடிவுதோம்
அதற்கு இத்யாதி –
கைம்மாவுக்கு அருள் செய்த -என்கிறபடியே
அந்த ஆனைக்கு அப்படி அருள் செய்தவனால் இன்று முடிவுதோம்
இத்தால்
ஆஸ்த்ரிதனுடைய ஆர்த்தி தீர சென்று ரஷித்தவன் –
எங்களை ஆர்த்தைகளாய் ஈடு படும்படி பண்ணா நின்றன் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை
—————————————————-
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -2 10-9 –
பதவுரை
(கடலில் நீரை முகந்து கொண்டு)
வானத்து–ஆகாசத்திலே
எழுந்து–கிளம்பின
மழை முகில் போல்–வர்ஷிக்கப் புக்க மேகம் போல
(கறுத்த நிறத்தை யுடைய)
ஏனத்து உரு ஆய்–ஒரு வராஹத்தின் ரூபமாய் (அவதரித்து)
கானத்து–காடு நிலங்களில்
எங்கும்–எல்லாவிடத்திலும் (திரிந்து)
மேய்ந்து–(கோரைக் கிழங்கு முதலியவற்றை) அமுது செய்து
களித்து–செருக்கடைந்து
விளையாடி–விளையாடி,
(பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று)
இடந்த–(அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த
இம் மண்ணினை–இந்தப் பூமியை
தானத்தே–யதாஸ்தாநத்தில்
வைத்தானால்–(கொணர்ந்து) வைத்து நிலை நிறுத்தின கண்ண பிரானால்
இன்று முற்றும்;
தரணி–(இப்படி கடலில் மூழ்கிப் போன) பூமியை
இடந்தானால்–கோட்டாற் குத்தி எடுத்துக் கொணர்ந்த கண்ண பிரானால்
இன்று முற்றும்;
வானத்து எழுந்த மழை முகில் –
ஆகாசத்தில் நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே –
இத்தால்
திருமேனியின் நிறத்தை சொல்கிறது
எங்கும் கானத்து மேய்ந்து –
காட்டிலே ஒரு பிரதிபஷ பயம் அற எங்கும் சஞ்சரித்து –
கோரைக் கிழங்கு முதலானவற்றை ஜீவித்து –
களித்து விளையாடி –
ஜாத் உசிதமான கர்வத்தோடு கூடிக் கொண்டு விளையாடி –
ஏனத் துருவாய் –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை உடையனாய்
இடந்த இத்யாதி –
அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த இந்த பூமியை –
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே -என்னும்படி
ஸ்வ ஸ்தானத்திலே வைத்தவனாலே இன்று முடிவுதோம் –
தரணி இத்யாதி
இப்படி நிமக்நையான பூமியை எடுத்தவனால் இன்று முடிவுதோம் –
இத்தால்
பிரளய ஆபன்னையான பூமியை எடுத்தவன் –
எங்களை விரஹ பிரளயத்தே தள்ளா நின்றான் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-
————————————————————-
நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார்-
அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லை புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கு இவை வல்லார்க்கு ஏதம் ஓன்று இல்லையே -2 10- 10- –
பதவுரை
நல் மங்கைமார்கள் தாம்–(பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள்
அம் கமலம்–அழகிய செந்தாமரைப் பூப் போன்ற
கண்ணன் தன்னை–கண்களை யுடைய கண்ண பிரான் (செய்த தீம்பு) விஷயமாக
அங்கு வந்து–அந்தக் கண்ண பிரானுடைய வீட்டுக்கு வந்து
அசோதைக்கு–(அவன் தாயான) யசோதைப் பிராட்டி யிடத்திலே
முற்பட்ட–(தங்கள் ஆர்த்தி தோற்றக்) கதறிச் சொன்ன
அவர் சொல்லை–அவ் விடைச்சிகளின் சொல்லை,
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த
இவை–இப் பாசுரங்களை
இங்கு–இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே)
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
ஒன்று ஏதம்–ஒரு வகைக் குற்றமும்
இல்லை–இல்லையாம்.
அங்கமலக் கண்ணன் தன்னை –
சிகப்பாலும் விகாசகத்தாலும் செவ்வையாலும் -அழகிய தாமரைப் பூ போல் இருக்கிற
திருக் கண்களை உடையவனைப் பற்ற
அசோதைக்கு
தாயாரான ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு
மங்கை நல்லார்கள் தாம் –
பருவத்தால் இளையராய் –
ஸ்ரீ கிருஷ்ணன் அளவிலே ஸ்நேகிநிகளாய் இருக்கிற பெண்களானவர்கள் தாங்கள்
அங்கு வந்து முறைப்பட்ட –
அவன் அகத்திலே வந்து தங்கள் ஈடுபாடு தோற்ற முறைப்பட்டு
அவர் சொல்லை –
அவர்கள் சொல்லை
மங்கை நல்லார் ஆனவர்கள் தாம் -அங்கமல கண்ணன் தன்னைப் பற்ற
அங்கு வந்த அசோதைக்கு -முறைப்பட்ட சொல்லை –
என்று அந்வயம்
புதுவைக் கோன் பட்டன் சொல் இவை –
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த சொல்லான இவற்றை
இங்கு வல்லவர்க்கு
இந்த லோகத்தில் சாபிப்ராயமாக வல்லவர்களுக்கு
ஏதம் ஓன்று இல்லையே –
பொல்லாங்கு என்னப்பட்டவை ஒன்றும் இல்லாதபடி போம்
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –