ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2-4–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

வெண்ணெய் அளைந்த  — ப்ரேவேசம்
மாதாவான யசோதை பிராட்டி -அவனுடைய அவதாரத்தின் மெய்ப்பாட்டால் -வந்த பால்ய அனுகுணமாக –
அவனை அனுசரித்துக் கொண்டு -காது பெருக்கி -திரியும் கடிப்பும் –முதலானவை இட்டு –
காது குத்தி -பெருக்கி தலைக் கட்டின அநந்தரம்-

பிள்ளைகளை காது பெருக்கினால் -அந்த செடி நீங்க குளிப்பாட்டும் கிரமத்திலே-இவனை மஞ்சனமாட்ட வேணும் என்று உத்யோகித்து –
அதுக்கு வேண்டும் உபகரணங்களையும் சம்பாதித்து வைத்து -நீராட வா -என்று அழைத்து -அவன் இசையாத அளவிலும்
விடாதே நிர்பந்தித்து -அவசியம் இன்று திரு மஞ்சனம் செய்ய வேண்டின ஹேதுவையும் அவனுக்கு அறிவித்து –

திருமஞ்சனம் செய்தால் பின்பு திரு மேனிக்கு அலங்காராமாக சாத்துகைக்கு உருப்பானவை பாகத் தான் தேடி வைத்த –
அங்க ராகாதிகளையும் காட்ட இசைந்து வருகைக்கு உடலாக அவனுக்கு அபிமதமான அபூபபலாதிகளையும் முன்னிட்டு –
அவன் பக்கல் தனக்கு உண்டான ஸ்நேஹாதிகளையும் சொல்லி –
புழுதி அளைந்த பொன் மேனி காண நான் மிகவும் விரும்பி இருப்பேன் -ஆனாலும் கண்டவர்கள் –
ஒருத்தி பிள்ளை வளர்த்தபடி என் -என்று பழிப்பார்கள் –
அவ்வளவுமேயும் அன்றி -நீ புழுதியும் உடம்புமாய் இருக்கிறபடியை காணில்
உனக்கு அபிமதையான நப்பின்னை பிராட்டி சிரிக்கும் -என்றால் போலே சிலவற்றையும் சொல்லி –
அவனை வருந்தி உடன்படுத்தி மஞ்சனமாட்டிய பிரகாரத்தையும் –

தாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு பாவன பிரகர்ஷத்தாலே -தத் அவஸ்தாபன்னராய் கொண்டு
அவள் அப்போது பேசின பாசுரங்களை எல்லாம் -தத்காலம் போலே அவனைக் குறித்து பேசி –
அவனை மஞ்சனம் ஆட்டுகையாகிற ரசத்தை தாமும் அனுபவித்து
ஹ்ருஷ்டராகிறார் இத் திருமொழியில்-

————————————————————

வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 4-1 – –

வெண்ணெய் அளைந்த குணுங்கும் –
வெண்ணெய் அமுது செய்யும் போது அதில் உண்டான அபிநிவேச அதிசயத்தாலே –
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -என்று
கை நிறையும் அத்தனையும் வயிறு நிறையும் என்னும்  மௌவ்க்யத்தாலே –
வெண்ணெய் தாழிக்கு உள்ளே திருக்கைகள் உள்ளளவும்  நீட்டி அள்ளியும்-
முழுதும் வெண்ணெய் அளைந்து -என்கிறபடியே வெண்ணெயை முழுக்க இருந்து அளைந்து –
அமுது செய்கையாலே திருமேனி எங்கும் -வெண்ணெய் முடையாய் இறே இருப்பது –

விளையாடு புழுதியும் –
அதுக்கு மேலே -விளையாடப் புக்கால் புழுதியிலே போய் இருந்து அளைந்து விளையாடுகையாலே –
அந்த வெண்ணெய் பசையோடே திருமேனி எங்கும் புழுதியும் பற்றி இறே கிடப்பது கொண்டு –
இப்படி வெண்ணெயால் வந்த குணுங்கு நாற்றத்தையும் -விளையாடின போதைப் புழுதியும் கொண்டு –

திண்ணென-திண்ணியதாக-நிச்சயமாக என்றபடி –
இவ்விரா இத்யாதி –
இந்த ராத்ரியிலே உன்னைக் கண்டூதியாலே -உடம்பை படுக்கையில் தேய்த்துக் கொண்டு கிடக்க நான் சம்மதியேன்
திண்ணென ஒட்டேன்-நிச்சயமாக உன்னை இப்படி கிடக்க ஒட்டேன் -நான் நீராட்டியே விடுவேன் -என்ன
எனக்கு குளிக்கைக்கு வேண்டும் அவை கொண்டு வந்தாயோ -என்ன –

எண்ணைய்-இத்யாதி -உன் திருமேனிக்கு முந்துற சாத்துகைக்கு எண்ணைய் காப்பும் –
பின்பு அது கழற்றுகைக்கு புளிக்காப்பும் கொண்டு அநேகம் போது இல்லையோ நான் இருக்கிறது –
நண்ணல் அரிய பிரானே -ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத உபகாரன் ஆனவனே –
நாரணா -மேன்மைக்கும் நீர்மைக்கும் பிரகாசமான திரு நாமம் இறே இது –
நீர்மையிலே இறே இவளுக்கு இப்போது நோக்கு
நீராட வாராய் -ஒட்டேன் என்று பிரேமத்தால் சொன்னாலும் -உபகரணங்களை முன்னிட்டாலும்
பிரயோஜனம் இல்லையே -நீ வந்தால் இறே பிரயோஜனம் உள்ளது –
ஆன பின்பு நீராட வர வேணும் என்று அபேஷிக்கிறாள்-

—————————————————–

கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 – –

கன்றுகள் சிதறி ஓடிப் போனால் -பசு கறவாது ஆகையாலே -பால் கிடைக்காமல் போகவே –
உனக்கு ஜீவனமான வெண்ணெய் குறைந்து விடும் -என்று கருத்து –

கன்று இத்யாதி -இவள் அழைக்கச் செய்தேயும் வாராதே -லீலாபரனாய் நின்று -கன்றுகள்
வெருண்டு ஓடுகிறது காண்கைக்காக-அவற்றின் செவியிலே கட்டெறும்புகளைப் பிடித்திட –
அத்தைக் கண்டு சொல்கிறாள்-
கன்றுகள் வெருண்டு  ஒடும்படியாக அவற்றின் செவியிலே முறியக் கடிக்கும் கட்டெரும்புகளை பிடித்து இட்டால் –
தென்றி இத்யாதி -வெருண்டு ஓன்று போன வழி ஓன்று போகாதே சிதறி -காண ஒண்ணாதபடி ஓடிப் போய் விடுமாகில் –
வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் -வெண்ணெயில் உண்டான விருப்பத்தால் -அத்தை திரட்டி  இருந்து –
நீ விழுங்கும் படியை காணக் கடவன் –
கன்று உண்டால் அன்றோ பசு கறக்கலாவது
பசு கறந்தால் அன்றோ பால் உண்டாவது
பால் உண்டாய் வெண்ணெய் உண்டாக வேணும்
ஆகையால் உன்னுடைய ஜீவனம் கிடாய் குறையப் புகுகிறது -என்கை-

நின்ற மரா மரம் சாய்த்தாய் -ஓர் ஆஸ்ரிதனுடைய -சுக்ரீவனின் -ரிஷ்யமுக பர்வதத்தில் விருத்தாந்தம்
அதி சங்கையை போக்குகைக்காக –
நினைத்தபடி இலக்கு குறிக்க  ஒண்ணாதபடி  நெருங்கி நின்ற மராமரங்களை மறுபாடு உருவ எய்து சாய்த்தவனே –

நீ பிறந்த திருவோணம் இன்று -நீ அவதரித்த திருவோணம் நஷத்ரம் காண் இன்று –
இது தான் வைஷ்ணவ நஷத்ரம் ஆகையாலும் -அவதாராந்தரங்களிலே இந்த நஷத்ரம் அந்வயம்
உண்டாக கூடுகையாகையாலும் தர்ம ஐக்யத்தை பற்றி சொல்கிறது –
நீ நீராட வேண்டும் -பிறந்த நாளைக்கும் குளியாது இருப்பார் உண்டோ –
சர்வதா நீ இன்று திரு மஞ்சனம் செய்ய வேணும் என்ன –
மாட்டேன் -என்று ஓடப் புக்க வாறே
எம்பிரானே ஓடாதே வாராய் -என்னுடைய நாயகனே -ஒடலாகாது காண் -வாராய் -என்கிறாள் –

—————————————–

பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரோடு நெல்லிக் கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய் -2 4-3 – –

பேய்ச்சி இத்யாதி -வஞ்சனையால் வந்த பேய்ச்சி -என்கிறபடியே -தன் வடிவை மறைத்து –
என் வடிவைக் கொண்டு வந்த பேய்ச்சி உடைய முலையை -அவள் முடியும்படி உண்டமை கண்டு இருக்க செய்தே
பின்னையும் நில்லாது என் நெஞ்சம் -இத்தைக் கண்டால் அஞ்சி ஓட வேண்டி இருக்க -பின்னையும்
என் நெஞ்சானது -உன் பக்கல் சிநேகம் அடியாக தரிக்க மாட்டாதே –
ஆய்ச்சி எல்லாரும் கூடி அழைக்கவும் -பேய்ச்சி பட்டுக் கிடக்கிற படியும் –
நீ அவள் மேல் இருந்து முலை உண்கிறபடியையும் கண்டு –
இடைச்சிகள் எல்லாரும் பீதைகளாய் கூப்பிடச் செய்தேயும் -நான் அஞ்சாமல் வந்து உன்னை எடுத்து –
முலையைத் தந்தேன் -இப்படி அன்றோ எனக்கு உன் பக்கல் உண்டான சிநேகம் –
ஆன பின்பு நான் சொன்னது செய்ய வேணும் காண் -என்கை –

காய்ச்சின நீர் இத்யாதி -உன்னுடைய திருமேனிக்கு அனுகுணமாக நெல்லியோடே காய்ச்சின
திரு மஞ்சநத்தை கடாரத்திலே பூரித்து வைத்தேன் –
வாய்த்த இத்யாதி -பேய்ச்சி உடைய வஞ்சனையில் அகப்படாதே -அவளை நிரசித்து -உன்னை நோக்கித்
தருகையாலே -நன்றான புகழை உடையனாய் -அனுபவிப்பார்க்கு ஆகர்ஷகம் ஆகும்படி
நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனே –
மஞ்சனம் ஆட நீ வாராய் -மாணிகத்துக்கு மாசு ஏறினால் போல் -உன் திருமேனியில் வந்தேறியான
புழுதி முதலானவை போம்படி திருமஞ்சனம் செய்ய வர வேணும் –

——————————————-

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 – –

கஞ்சன் இத்யாதி -கம்ச ப்ரேரிதனாய் வந்த அதி க்ரூரரான சகடாசுரனை -முலை வரவு தாழ்த்தி
சீறி நிமிர்த்த திருவடிகளாலே கலக்கு அழியும்படியாக உதைத்து
வஞ்சகம் இத்யாதி -தாய் வடிவு கொண்டு வந்த வஞ்சகியான பேய்ச்சி முடியும்படியாக
அவள் முலையிலே-உன் திருப் பவளத்தை வைத்து -உண்ட உபகாரகன் ஆனவனே
சகடாசுரன் கையிலும் பூதனை கையிலும் அகப்படாமல் உன்னை நோக்கி தந்த உபகாரகன் ஆனவன் அன்றோ என்கை –

மஞ்சளும் இத்யாதி -உன் திருமேனிக்கு நிறம் பெற சாத்துகைக்கு ஈடான மஞ்சளும் –
உன் திருமுடிக்கு அலங்காரமாக சாத்த தக்க செங்கழுநீர் வாசிகையும் –
உன் திருமேனிக்கு அனுகுணமாம்படி ஆறிக் குளிர்ந்து மணத்து இருக்கிற சாந்தும் –
உன்னுடைய திருக் கண்களுக்கு சாத்துகைக்கு ஈடான அஞ்சனமும் கொண்டு வந்து வைத்தேன் –
அழகனே நீராட வாராய் -இவை எல்லாம் மிகையாகும்படி  அழகை உடையவனே –
உன் அழகு தோன்றும்படி திரு மஞ்சனம் செய்ய வர வேணும் –

————————————————-

அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உருதியேல் நம்பீ
செப்பிள மென் முலையாளர்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் நீ இங்கே வாராய் -2 4-5 – –

அப்பம் இத்யாதி -அப்பத்தையும் அத்தோடு சேர்ந்த சிற்றுண்டி ஆகிற அபூப விசேஷத்தையும் –
அக்காரம் பாலில் கலந்து -பாலிலே கருப்பு கட்டியை இட்டு பிசைந்து
சொப்பட இத்யாதி -நன்றாக
தின்னல் உருதியேல் நம்பீ -பிள்ளைத் தனத்தில் பூர்த்தியை  உடையவனே -அமுது செய்ய வேணும் என்று –
அதிலே உற்று இருந்தாயாகில் -நீராட வேண்டும் என்று மேலே அந்வயம்-
செப்பு போலே இருக்கிற சந்நிவேசத்தை உடைத்தாய் -இளையதாய் -ம்ர்துவாய் -இருக்கிற முலையை உடையவர்கள் –
சிறு புறம் பேசிச் சிரிப்பர் -நீ நீராடாமல்  இருக்கிற வடிவை கண்டால் -தோற்றின புன்மைகளை
காணாத இடங்களில் சொல்லி சிரியா நிற்பர்கள்
சிறுமை -புன்மை
புறம் பேசுகையாவது -காணாத இடத்தே சொல்லுகை
சொப்பட நீராட வேண்டும் -அதுக்கு இடம் அறும்படியாகவும் நன்றாக நீராட வேணும் -என்ன –
அவ்வளவிலும் அவன் வாராமையாலே –
சோத்தம்பிரான் இங்கே வாராய் -பிரானே உன்னைத் தொழுகிறேன்
இங்கே வாராய் என்று அழைக்கிறாள்

——————————————-

எண்ணைய்க் குடத்தை  உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே
வண்ணம் அழகியபிரானே மஞ்சனமாட நீ வாராய் – 2-4 6- –

எண்ணை இத்யாதி -அகத்தில் உள்ளார் எல்லாரும் அந்ய பரராம்படியாக எண்ணைய்க் குடத்தை  உருட்டி-
அத்தை இறைப்பார் வழிப்பராய் கொண்டு வ்யாகுலாபடா நிற்கச் செய்தே-
இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி -அத்தை விட்டு இங்கே ஓடி வர வேண்டும் படி -கிடந்தது உறங்குகிற
சிறு பிள்ளையை தேள் எறிந்தால் போல் வீரிட்டு கூப்பிடும்படியாக கிள்ளி எழுப்பி –
கண்ணைப் புரட்டி விழித்து-அருகு நின்றவர்கள் முகத்திலே -அப்பூச்சி -என்று கண்ணின் இமையை
அகவாய் புறவாயாக புரட்டி விழித்து –

கழகண்டு செய்யும் பிரானே -இப்படி துஸ் சஹமான தீம்புகளை செய்யும் ஸ்வ தந்த்ரன் ஆனவனே –
ஒருத்தர் கையிலும் அடங்காதானாய் இரா நின்றாயே ஆனாலும் நான் இப்போது சொல்லிற்று செய்ய வேணும் காண் என்ற கருத்து –

உண்ணக் கனிகள் தருவன்-நீ விரும்பி அமுது செய்யும்படி நாவல் பழம் முதலான பழங்களை தருவன் –
ஒலி கடல் இத்யாதி -கோஷிக்கிற கடலின்  திரைக் கிளப்பத்தை உடையான ஜலம் போலே
திருமேனியின் நிறம் அழகிய நம்பீ
மஞ்சன் ஆட நீவாராய் -உன்திரு மேனியில் அழகு தோன்றும்படி
திருமஞ்சனம் ஆட நீ வர வேணும் –

—————————————–

கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் எம்பிரானே
சிறந்த நல் தாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய் – 2-4 7- –

கறந்த இத்யாதி -பிராப்த காலங்களிலே கறந்த நல்ல பாலும் –
பாலுக்கு நல்லது ஆவது நாழியும் உழக்கு நெய் போருகை
தயிரும் -அந்த  பாலிலே உறைந்த தயிரும்
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் -அப்படி இருந்துள்ள தயிரை கடைந்து –
தாழி யிலே சேர்த்து உறி மேல் வைத்த வெண்ணெயும்
பிறந்த இத்யாதி -நீ பிறந்த அன்று தொடங்கி-என் நாயகனே -இவை நான் பெற்று அறியேன் –
சிறந்த இத்யாதி -குற்றம் உண்டானாலும் மறைக்க கடவ மிகவும் ஸ்நேகினியான
தாயானவள் தான் பழி தூற்றா நின்றாள் என்று -லோகம் சொல்லும் அத்தை பற்ற –
அந்யருடைய முன்பு அபூர்த்தி பூர்வகமாகவும் வாய் விட மாட்டேன்
மஞ்சனம் ஆட நீ வாராய் -இப்படி உன்னுடைய ஸ்நேகிநியான எனக்கு பிரியமாக
நீ மஞ்சனம் ஆட வர வேணும் –

—————————————

கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –

கன்றினை இத்யாதி -கன்றுகள் மேய்க்க போன இடத்தே -வெருண்டு துள்ளி ஓடும் அது காண்கைக்காக
ஒரு கன்றை வாலிலே ஓலையைக் கட்டி -உன்னை நலிகைக்காக கன்றுகளின் நடுவே கலசி வந்த
நின்றதோர் ஆசுரமான கன்றை குணிலாக கொண்டு ஆசூரமான விளா வினுடைய
பழங்கள் உதிர எறிந்து –
பின் இத்யாதி -அதுக்கு பின்பாக ஓடிச் சென்று -ஒரு பாம்பை பிடித்து கொண்டு ஆட்டினாயோ  தான் –
நீ இப்போது செய்கிற தீம்பால் அவையும் செய்தாயாக நான் கேட்டதும் கூடும் இறே
துடர்ந்து -என்று கதி வாசியாய் சென்று என்றபடி

நின் இத்யாதி -உன் படிகள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை -அது கிடக்கிடு
நீ பிறந்த திரு நல் நாள் -நீ அவதரித்த விலஷனமான திரு நட்ஷத்ரம் இன்று காண்
நன்று நீராட வேண்டும் -நன்றாக நீ  திரு மஞ்சனம் செய்ய வேணும் –
ஒரு நாளும் நீராடாதாரும் பிறந்த நாளில் நீராடாதார் இல்லை இறே
நாரணா நீராட வாராய் -சர்வ ஆதமாக்களோடும் ஒழிக்க ஒழியாத சம்பந்தத்தை உடையவனே
என்னுடைய சொல்லை மறுத்து ஒடலாகாது காண் -வாராய் –

————————————-

பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9 – –

பூண் இத்யாதி -பசுக்களை அடைத்து திறந்து விடும் தொழுவிலே புக்கு –
ஜாதி உசிதமாக தொழுக் களிலே புகுந்து -விளையாடா நிற்கும் இறே –
புழுதி அளைந்த பொன் மேனி -பால்ய அனுகுணமாக புழுதியை இருந்து அளைகையாலே
அது திருமேனி எங்கும் வியாப்தம் ஆனாலும் பொன்னுக்கு புழுதி ஏறினால் போல்
இருக்கும் படியைப் பற்ற சொல்லுகிறது

காணப் பெரிதும் உகப்பன் -நீராடிக் காண்பதிலும் முக்த பாவம் தோற்றுகையாலே
இப்படி இருக்கிற உன் திருமேனியை காண்கைக்கு மிகவும் விரும்பி இருப்பன் –
ஆகிலும் கண்டார் பழிப்பர் -நான் உகந்து இருந்தாலும் உன்னைக் கண்டவர்கள் –
ஒருத்தி பிள்ளை வளர்த்த படி என் -என்று ஏசுவார்கள் –

நாண் இத்தனையும் இலாதாய் -ஏகதேசமும் லஜ்ஜை இல்லாதவனே
நற்பின்னை காணில் சிரிக்கும் -நீ புழுதியும் உடம்புமாய் இருக்கிற படியை
நற்பின்னை காணும் ஆகில் மைத்துனன் ஆனமையால் சிரிக்கும் –
நாட்டார் பழிக்கு அஞ்சுகிற  மாத்ரமோ -நற்பின்னை சிரிப்புக்கு  லஜ்ஜிக்க வேண்டாவோ
நீ செய்யாது ஒழிகிறது நிர் லஜ்ஜன் ஆகையாலே இறே என்று கருத்து –

மாணிக்கமே  என் மணியே -வடி வழகுக்கு  ஒன்றே உபமானம் ஆவது ஓன்று இலாமையாலே
அங்கும் இங்கும் கதிர் பொருக்கிகிறாள்
மாணிக்கம்  போலேயும் -மரகதம் போலேயும் இருக்கிற வடிவு அழகை உடையவனே -என்கை
மஞ்சனம் ஆட நீ வாராய் -இப்படி இருக்கிற உன் திருமேனியில் வந்தேறியான
அழுக்கு கழிந்து விளங்கும் படி திரு மஞ்சனம் ஆட வர வேணும் –

———————————-

அவதாரிகை –
நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார் –

கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை
பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10- –

கார்மலி மேனி நிறத்து -நீர் கொண்டு எழுந்த காள மேகத்தில் காட்டில் மிகுத்து இருந்துள்ள திருமேனி நிறத்தை உடைய –
கண்ண பிரானை உகந்து -ஆஸ்ரிதனுக்கு சுலபனாய் -உபகாரனும் ஆனவனை ஆதரித்து கொண்டு
வார்மலி இத்யாதி -கச்சில் அடங்காமல் -விம்மும்படியான முலையை உடைய
யசோதை பிராட்டி மஞ்சனம் ஆட்டிய பிரகாரத்தை
பார்மலி இத்யாதி -பூமியில் அடங்காத ஏற்றத்தை உடைத்தாய் -பழையதாய் இருந்துள்ள
திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளி செய்த
சீர்மலி செம்தமிழ் வல்லார் -சீர் மலிகையாவது -சப்த லஷணங்களில் குறைவற்று இருக்கையாலே – அழகு மிக்கு இருக்கை
அன்றிக்கே –
பகவத் குணங்களால் நிறைந்து இருக்கிற என்னுதல்
செம் தமிழ் ஆர்ஜவ யுக்தமான தமிழ் -அதாவது -சப்தத்தின் உடைய பிரசன்னதையாலே
உள்ளில் கிடக்கிற அர்த்தம் தானே பிரகாசிக்கும் படியாக இருக்கை –
பாடல் -பாட்டுக்கள் வல்லார்
இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் -தீவினை யாதும் இலரே
தீவினை ஒன்றும் இல்லாதவர் ஆவர் –
அவர்களுக்கு ஒரு துஷ் கர்மங்களும் இல்லை என்கை-

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: