ஸ்ரீ பெரிய ஆழ்வார் திரு மொழி -2-2– ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

அவதாரிகை –
ஆழ்வார்கள் எல்லாரும் ஸ்ரீ கிருஷ்ண அவதார ப்ரவணராய் இருந்தார்களே ஆகிலும் –
அவர்கள் எல்லாரையும் போல் அன்றிக்கே –
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அதி ப்ரவணராய் –
அவ் வதார ரச அனுபவத்துக்காக கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-என்கிறபடியே
அவ் வதார ரசம் உள்ளது எல்லாம் அனுபவிக்கிறவர் ஆகையாலே –

முதல் திருமொழியிலே
அவன் அவதரித்த சமயத்தில் -அங்குள்ளார் செய்த உபலாவன விசேஷங்களையும் –

அநந்தரம்-1-2
யசோதை பிராட்டி அவனுடைய பாதாதி கேசாந்தமான அவயவங்களில் உண்டான அழகை
ப்ரத்யேகம் பிரத்யேகமாக  தான் அனுபவித்து –
அனுபுபூஷுக்களையும் தான் அழைத்துக் காட்டின படியையும் –

அநந்தரம் -1-3-
அவள் அவனைத் தொட்டிலிலே ஏற்றித் தாலாட்டின படியையும் –

பிற்காலமாய் இருக்க தத் காலம் போலே பாவனா பிரகர்ஷத்தாலே யசோதாதிகளுடைய
ப்ராப்தியையும் சிநேகத்தையும் உடையராய் கொண்டு –
தாம் அனுபவித்து –

அநந்தரம் –
அவன் அம்புலியை  அழைக்கை-1-4-
செங்கீரை ஆடுகை -1-5-
சப்பாணி கொட்டுகை -1-6-
தளர் நடை நடைக்கை -1-7-
அச்சோ என்றும் -1-8-
புறம் புல்குவான் என்றும் -1-9-
யசோதை பிராட்டி அபேஷிக்க
முன்னும் பின்னும் வந்து அணைக்கை ஆகிற பால சேஷ்டிதங்களை-
தத் பாவ யுக்தராய் கொண்டு அடைவே அனுபவித்துக் கொண்டு வந்து –

கீழ்த் திரு மொழியிலே -2-1-
அவன் திரு ஆய்ப்பாடியில் உள்ளோரோடு அப் பூச்சி காட்டி விளையாடின சேஷ்டிதத்தையும் –
தத் காலத்திலேயே அவள் அனுபவித்து  பேசினால் போலே தாமும் அனுபவித்து பேசி ஹ்ர்ஷ்டரானார் –

இனி -2-2-
அவன் லீலா வ்யாபாரச்ராந்தனாய் –
முலை உண்கையும் மறந்து –
நெடும் போதாக கிடந்து உறங்குகையாலே –

உண்ணாப் பிள்ளையை தாய் அறியும் -என்கிறபடியே
யசோதை பிராட்டி அத்தை அறிந்து –
அம்மம்  உண்ணத் துயில் எழாயே-என்று அவனை எழுப்பி –
நெடும் போதாக முலை உண்ணாமையை அவனுக்கு அறிவித்து –
நெறித்து பாய்கிற தன் முலைகளை உண்ண வேண்டும் என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் -விடாதே நிர்பந்தித்து  முலை ஊட்டின பிரகாரத்தை

தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு –
தத் பாவ யுக்தராய் கொண்டு –
அவனை அம்மம் உண்ண எழுப்புகை முதலான ரசத்தை அனுபவித்து
பேசி ஹ்ர்ஷ்டராகிறார் இத் திரு மொழியில் –

—————————————-

அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே -2 2-1 –

பதவுரை

அரவு அணையாய்–சேஷசாயி யானவனே!
ஆயர் ஏறே–இடையர்களுக்குத் தலைவனே!
நீ இரவும் உண்ணாத–நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல்
உறங்கிப் போனாய்–உறங்கிப் போய் விட
இன்றும்–இப் போதும்
உச்சி கொண்டது–(பொழுது விடிந்து) உச்சிப் போதாய் விட்டது;
ஆல்–ஆதலால்
அம்மம் உண்ண–முலை யுண்பதற்கு
துயில் எழாய்–(தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்;
வரவும் காணேன்–(நீயே எழுந்திருந்து அம்மமுண்ண வேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்!
(உனக்குப் பசியில்லை யென்போமென்றா)
வயிறு அசைத்தாய்–வயிறுந்தளர்ந்து நின்றாய்;
வன முலைகள்–(எனது) அழகிய முலைகள் (உன் மேல் அன்பினால் நெறித்து)
சோர்ந்து பாய–பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
திரு உடைய–அழகை உடைய
வாய் மடுத்து–(உன்) வாயை வைத்து
திளைத்து–செருக்கி
உதைத்து–கால்களாலே உதைத்துக் கொண்டு
பருகிடாய்-முலை யுண்பாய்.
ஓ யே –அசைச் சொற்கள்

அரவு ஆணை இத்யாதி –
மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமானவற்றை பிரகிருதியாக உடைய
திரு அனந்தாழ்வானைப் படுக்கையாய் உடையனாய் இருந்து வைத்து –
நாக பர்யங்கம் உத்சர்ஜ்ய ஹ்யாகத -என்கிறபடியே
அப் படுக்கையை விட்டு -போந்து -அவதீரணனாய்-
ஆயருக்கு பிரதானன் ஆனவனே –

அப் படுக்கை வாய்ப்பாலே  பள்ளி கொண்டு போந்த வாசனையோ –
ஆயர்  ஏறான இடத்திலும் படுக்கை விட்டு எழுந்து இராதே பள்ளி கொள்ளுகிறது –
அவன் தான் இதர சஜாதீயனாய் அவதரித்தால்-
சென்றால் குடையாம் (முதல் திருவந்தாதி )-என்கிறபடி -சந்தானுவர்த்தயாய்
அடிமை செய்யக் கடவ -திரு வனந்தாழ்வானும் அவனுடைய அவஸ்த அனுகுணமாக
பள்ளி கொள்வதொரு திருப் படுக்கையான வடிவைக் கொள்ளக் கூடும் இறே –
ஆகையால்-அங்கு உள்ள சுகம் எல்லாம் இங்கும் உண்டாய் இருக்கும் இறே கண் வளர்ந்து அருளுகிறவனுக்கு-

அம்மம் உண்ணத் துயில் எழாயே –
முலை உண்ண- என்னாதே- அம்மம் உண்ண -என்றது
சைசவ அனுகுணமாக-(அவன்) -அவள் சொல்லும் பாசுரம் அது ஆகையாலே
துயில் -நித்தரை
எழுகையாவது-அது குலைந்து எழுந்து இருக்கை-
எழாய்-என்கிற இது எழுந்து இருக்க வேணும் என்கிற பிரார்த்தனை

இரவும் இத்யாதி –
நீ ராத்திரி உண்ணாதே உறங்கி -அ
வ்வளவும் இன்றிக்கே இன்றும் போது உச்சிப் பட்டது –
ராத்திரி அலைத்தலாலே கிடந்தது உறங்கினால் -விடிந்தால் தான் ஆகிலும் உண்ண வேண்டாவோ –
விடிந்த அளவேயோ போது
உச்சிப் பட்டது காண்

ஆலும் ஓவு மாகிற அவ்யயம் இரண்டும்
விஷாத அதிசய ஸூசகம்

வர இத்யாதி –
நீ எழுந்து இருந்து அம்மம் உண்ண வேண்டும் என்று வரவும் கண்டிலேன் –
அபேஷை இல்லை என்ன ஒண்ணாதபடி
வயிறு தளர்ந்து இரா நின்றாய்

வன முலைகள் சோர்ந்து பாய –
வனப்பு -அழகும் பெருமையும்
முலைகள் ஆனவை உன் பக்கல் சிநேகத்தால் நெறிந்து-பால் உள் அடங்காமல் வடிந்து பரக்க-
உனக்கு பசி உண்டாய் இருக்க -இப் பால் இப்படி வடிந்து போக -உண்ணாது ஒழிவதே -என்று கருத்து –

திரு உடைய வாய் மடுத்து –
அழகிய திருப் பவளத்தை மடுத்து -திரு-அழகு –
இவ் வன முலையிலே உன்னுடைய திரு உடைய வாயை அபிநிவேசம் தோற்ற மடுத்து –

திளைத்து இத்யாதி –
முலை உண்ணுகிற ஹர்ஷம் தோற்ற கர்வித்து கால்களாலே
என் உடம்பிலே உதைத்து கொண்டு -இருந்து உண்டிடாய் –

பருகுதல்-பானம் பண்ணுதல் –

————————————-

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை  உணாயே- 2-2 2- –

பதவுரை

எம் பிரான்–எமது உபகாரகனே!
வைத்த நெய்யும்–உருக்கி வைத்த நெய்யும்
காய்ந்த பாலும்–(ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும்
வடி தயிரும்–(உள்ள நீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
நறு வெண்ணெயும்–மணம் மிக்க வெண்ணெயும்
இத்தனையும்–(ஆகிய) இவை யெல்லாவற்றையும்
நீ பிறந்த பின்னை–நீ பிறந்த பிறகு
பெற்று அறியேன்–கண்டதில்லை;
எத்தனையும்–(நீ) வேண்டினபடி யெல்லாம்
செய்யப் பெற்றாய்–நீ செய்யலாம்;
ஏதும் செய்யேன்–(அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்ய மாட்டேன்;
கதம் படாதே–நீ கோபியாதே கொள்;
முத்து அனைய முறுவல் செய்து–முத்தைப் போல் வெண்ணிறமாக மந்த ஸ்மிதம் பண்ணி
மூக்கு உறிஞ்சி–மூக்கை உறிஞ்சிக் கொண்டு
முலை உணாய்–முலை உண்பாயாக.

வைத்த இத்யாதி –
பழுதற உருக்கி வைத்த நெய்யும் –
செறிவுறக் காய்ந்த பாலும் –
நீர் உள்ள்து வடித்து கட்டியாய் இருக்கிற தயிரும் –
செவ்வையிலே கடைந்து எடுத்த நறுவிய வெண்ணையும்

எம்பிரான் நீ பிறந்த பின்னை -இத்தனையும் பெற்று அறியேன் –
என்னுடைய நாயகனே நீ பிறந்த பின்பு –
இவை ஒன்றும் பெற்று அறியேன் –

அன்றிக்கே –
இத்தனையும் என்றது –
ஏக தேசமும் என்றபடியாய்-
இவற்றில் அல்பமும் பெற்று அறியேன் என்னுதல்-

இப்படி என்னை களவேற்றுவதே-என்னைப் பிடித்தல் அடித்தல் செய்ய வன்றோ
நீ இவ்வார்த்தை சொல்லிற்று என்று குபிதனாக –
எத்தனையும் செய்யப் பெற்றாய் –
உனக்கு வேண்டினது எல்லாம் செய்யக் கடவை

ஏதும் செய்யேன் கதம் படாதே –
நான் உன்னைப் பிடித்தல் அடித்தல் ஒன்றும் செய்யக் கடவேன் அல்லேன் –
நீ கோபிக்க வேண்டா –
கதம்-கோபம்

முத்தனைய -இத்யாதி –
முத்துப் போலே ஒளி விடா நிற்கும் முறுவலை செய்து –
அதாவது –
கோபத்தை தவிர்ந்து
ஸ்மிதம் பண்ணி கொண்டு -என்கை

மூக்கு உறிஞ்சி முலை உணாயே –
முலைக் கீழை -முழுசி -முட்டி -மூக்காலே உரோசி இருந்து
முலையை அமுது செய்யாய் –

—————————————-

தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்க கில்லார்
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன் திறத்தர் அல்லர் உன்னை நான் ஓன்று உரப்ப மாட்டேன்
நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே -2 -2-3 – –

பதவுரை

தம் தம் மக்கள்–தங்கள் தங்கள் பிள்ளைகள்
அழுது–அழுது கொண்டு
சென்றால்–(தம் தம் வீட்டுக்குப்) போனால்
தாய்மார் ஆவார்–(அக் குழந்தைகளின்) தாய்மார்கள்
தரிக்க கில்லார்–பொறுக்க மாட்டாதவர்களாய்
வந்து–(தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து
நன் மேல் பூசல் செய்ய–உன் மேல் பிணங்க
வாழ வல்ல–(அதைக் கண்டு) மகிழ வல்ல
வாசு தேவா–கண்ண பிரானே!
உந்தையார்–உன் தகப்பனார்.
உன் திறத்தர் அல்லர்–உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்;
நான்–(அபலையான) நானும்
உன்னை–(தீம்பில் ..) உன்னை
ஒன்று உரப்ப மாட்டேன்–சிறிதும அதட்ட வல்லமை யற்றிரா நின்றேன்;
(இவையெல்லாங் கிடக்க)
நந்த கோபன்–நந்த கோபருடைய
அணி சிறுவா–அழகிய சிறு பிள்ளாய்!
நான் சுரந்த முலை–எனது பால் சுரந்திருக்கிற முலையை
உணாய்–உண்பாயாக

தம் தம் இத்யாதி –
ஊரில் பிள்ளைகளோடே விளையாடப் புக்கால் எல்லாரையும் போல் அன்றிக்கே –
நீ அவர்களை அடித்து குத்தி விளையாடா நின்றாய் –
இப்படி செய்யலாமோ -தம் தம் பிள்ளைகள் அழுது சென்றால் –
அவர்கள் தாய்மாரானவர்கள் பொறுக்க மாட்டார்கள் –

வந்து நின் மேல் பூசல் செய்ய –
அவர்கள் தாங்கள்-தங்கள் பிள்ளைகளையும் பிடித்து கொடு வந்து உன் மேலே
சிலுகு -சண்டை -இட்டு பிணங்க

வாழ வல்ல –
அதிலே ஒரு சுற்றும் இளைப்பு இன்றிக்கே -பிரியப்பட்டு –
இதுவே போகமாக இருக்க வல்ல –

வாசு தேவா –
வாசு தேவன் புத்திரன் ஆனவனே –
பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ

உந்தையார் இத்யாதி –
உன்னுடைய தமப்பன் ஆனவர் உன்னிடை யாட்டம் இட்டு எண்ணார்-
உன்னை சிஷித்து வளர்க்கார் என்றபடி –
(இடையாட்டம் வியாபாரம் -சேஷ்டிதம் )

உன்னை இத்யாதி –
தீம்பனான உன்னை -அபலையான நான் -ஒரு வழியாலும் தீர
நியமிக்க மாட்டேன் –
(அஹம் த்வாம் -நான் உன்னை )

நந்த கோபன் அணி சிறுவா –
ஸ்ரீ நந்த கோபர்க்கு வாய்த்த பிள்ளாய் –
அணி -அழகு –
இவன் தீம்பிலே உளைந்து சொல்லுகிற வார்த்தை

நான் சுரந்த முலை உணாயே –
அவை எல்லாம் கிடக்க –
இப்போது நான் சுரந்த முலையை அமுது செய்யாய் –

—————————————

கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
பஞ்சி  அன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே ஆயர் கூட்டத்து அளவு அன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை உணாயே -2-2-4-

பதவுரை

அமரர் கோவே–தேவர்களுக்குத் தலைவனே! (நீ)
கஞ்சன் தன்னால்–கம்ஸனாலே
புணர்க்கப்பட்ட–(உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப் பட்ட
கள்ளச் சகடு–க்ருத்ரிம சகடமானது
கலக்கு அழிய–கட்டு (க்குலைந்து உருமாறி)-சந்தி பந்துகள் குலைந்து – அழிந்து போம்படி
பஞ்சி அன்ன மெல் அடியால்–பஞ்சைப் போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால்
பாய்ந்த போது–உதைத்த போது
நொந்திடும் என்று–(உன் திருவடிகளுக்கு) நோவுண்டாகுமே யென்று
அஞ்சினேன் காண்–பயப்பட்டேன் காண்;
(என்னுடைய அச்சம்)
ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல்–இடையர் திரளினுடைய (அச்சத்தின்) அளவல்ல காண்;
கஞ்சனை–(உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த) கம்ஸனை
உன் வஞ்சனையால்–உன்னுடைய வஞ்சனையினாலே
வலைப் படுத்தாய்–(உன் கையிற்) சிக்கும்படி செய்து கொன்றவனே!
முலை உணாய்.

பஞ்சி என்கிற இது
பஞ்சு என்பதற்கு போலி –

கஞ்சன் இத்யாதி –
உன் மேலே கறுவதலை உடையனான கம்சனாலே உன்னை நலிகைக்காக –
கற்ப்பிக்கப் பட்ட க்ர்த்ரிமமான சகடமானது -அசூரா விஷ்டமாய் வருகையாலே -கள்ளச் சகடு -என்கிறது –

கலக்கழிய –
தளர்ந்தும் முறிந்தும் (திருவாய் )உடல் வேறாக பிளந்து வீய -என்கிறபடியே கட்டுக் குலைந்து
உரு மாய்ந்து போம்படியாக

பஞ்சி இத்யாதி –
பஞ்சு போன்ற மிருதுவான திருவடிகளாலே உதைத்த போது -திருவடிகள் நோம் -என்று
பயப்பட்டேன் காண் –

அமரர் கோவே –
தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே –
உன்னைக் கொண்டு தங்கள் விரோதியைப் போக்கி –
வாழ இருக்கிற அவர்கள் பாக்யத்தால் இறே –
உனக்கு ஒரு நோவு வராமல் இருந்தது -என்கை –

ஆயர் கூட்டத்து அளவன்றாலோ –
ஆயருடைய திரள் அஞ்சின அளவல்ல காண் -நான் அஞ்சின படி –

ஆல் ஒ என்றவை
விஷாத ஸூசகமான அவ்யயங்கள்
(அசைச் சொற்கள் )

கஞ்சனை இத்யாதி –
உன் திறத்திலே வஞ்சனைகளை செய்த கம்சனை –
நீ அவன் திறத்தில் செய்த வஞ்சனையாலே தப்பாதபடி அகப் படுத்தி முடித்தவனே

முலை உணாயே –
இப்போது முலையை அமுது செய்ய வேணும் –

—————————————————-

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2-2-5 – –

பதவுரை

வாசுதேவா–கண்ண பிரானே!
தீய புந்தி–துஷ்ட புத்தியை யுடைய
கஞ்சன்–கம்ஸனானவன்
உன் மேல்–உன் பக்கலிலே
சினம் உடையவன்–கோபங்கொண்டவனா யிரா நின்றான்;
சோர்வு பார்த்து–(நீ) தனியாயிருக்கும் ஸமயம் பார்த்து
மாயம் தன்னால்–வஞ்சனையால்
வலைப் படுக்கில்–(உன்னை) அகப் படுத்திக் கொண்டால்
வாழ கில்லேன்–(நான்) பிழைத்திருக்க சக்தை யல்லேன்;
தாயர்–தாய்மார்களுடைய
வாய் சொல்–வாயினாற் சொல்லுவது
கருமம் கண்டாய்–அவச்ய கர்த்தவ்ய கார்யமாகும்;
சாற்றி சொன்னேன்–வற்புறுத்திச் சொல்லுகிறேன்;
போக வேண்டா–(நீ ஓரிடத்திற்கும்) போக வேண்டா;
ஆயர் பாடிக்கு–திருவாய்ப் பாடிக்கு
அணி விளக்கே–மங்கள தீபமானவனே!
அமர்ந்து வந்து–பொருந்தி வந்து
என் முலை உணாய்

தீய புந்திக் கஞ்சன் –
துர் புத்தியான கம்சன் –
பிள்ளைக் கொல்லி இறே-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோதின பாபிஷ்டன் இறே –

உன் மேல் சினமுடையன் –
தேவகி உடைய அஷ்டம கர்ப்பம் உனக்கு  சத்ரு -என்று
அசரீரி வாக்யத்தாலே கேட்டு இருக்கையாலும் –
பின்பு துர்க்கை சொல்லிப் போந்த வார்த்தையாலும் –
நமக்கு சத்ரு வானவன் கை தப்பிப் போய் நம்மால் கிட்ட ஒண்ணாத ஸ்தலத்திலே புகுந்தான் –
இவனை ஒரு வழியாலே ஹிம்சித்தாய் விடும்படி என் -என்று இருக்கையாலும் –
உன்னுடைய மேலே மிகவும் குரோதம் உடையவன் –

சோர்வு பார்த்து –
அவிழ்ச்சி பார்த்து -அதாவது
நீ அசஹாயனாய் திரியும் அவசரம் பார்த்து -என்கை-

மாயம் தன்னால் வலைப் படுக்கில் –
உன்னை நலிகைக்காக மாயா ரூபிகளான ஆசூர பிரகிருதிகளை
திர்யக்காகவும் ஸ்தாவரமாகவும் உள்ள வடிவுகளை கொண்டு நீ வியாபாரிக்கும்
ஸ்தலங்களில் நிற்கும் படி பண்ணியும் –
நீ அறியாமல் வஞ்சனத்தால் நழுவாதபடி பிடித்து கொள்ளில் –

வாழ கில்லேன் –
நான் பின்னை ஜீவித்து இருக்க ஷமை அல்லேன் -முடிந்தே விடுவேன் –

வாசு தேவா –
உன்னாலே இறே சாதுவான அவரும் சிறைப்பட வேண்டிற்று

தாயர் இத்யாதி –
தாய்மார் சொல்லு கார்யம் காண்-அதாவது
உத்தேச்யதையாலும்
பரிவாலும்
தாய்மார் வாக்கால் சொல்லுவது
பிள்ளைகளுக்கு அவசிய கரணீயம் காண் -என்கை-

சாற்றிச் சொன்னேன் போக வேண்டா –
இது தன்னை குன்னாம் குருச்சியாக  -ரகஸ்யமாக -அன்றிக்கே
எல்லாரும் அறியும் படி பிரசித்தமாக சொன்னேன் –
லீலா அர்த்தமாகவும் நீ தனித்து ஓர் இடத்தில் போக வேண்டா

ஆயர் பாடிக்கு அணி விளக்கே –
திரு வாய்ப்பாடிக்கு ஒரு மங்கள தீபம் ஆனவனே –
அணி-அழகு

இத்தால்-
எனக்கே அன்று -உனக்கு ஒரு தீங்கு வரில் -இவ்வூராக இருள் மூடி விடும் கிடாய் -என்கை

அமர்ந்து இத்யாதி –
ஆன பின்பு பரபரப்பை விட்டு பிரதிஷ்டனாய் வந்து
உனக்கு என்று சுரந்து இருக்கிற முலையை அமுது செய்ய வேணும் –

————————————

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே -2 2-6 – –

பதவுரை

மின் அனைய–மின்னலை யொத்த
நுண்–ஸூக்ஷ்மமான
இடையார்–இடையை யுடைய பெண்களின்
விரி குழல் மேல்–விரிந்த (பரந்த) கூந்தலின் மேல்
நுழைந்த–(தேனை உண்ணப்) புகுந்த
வண்டு–வண்டுகள்
(தேனை யுண்டு களித்து)
இன் இசைக்கும்–இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலே
இனிது–போக்யமாக
அமர்ந்தாய்–எழுந்தருளி யிருப்பவனே!
உன்னை கண்டார்–உன்னைப் பார்த்தவர்
இவனை பெற்ற வயிறு உடையாள்–இவனைப் (பிள்ளையாகப்) பெற்ற வயிற்றை யுடையவள்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ–என்ன தபஸ்ஸு பண்ணினாளோ!
என்னும்–என்று கொண்டாடிச் சொல்லுகிற
வார்த்தை–வார்த்தையை
எய்துவித்த–(எனக்கு) உண்டாக்கின
இருடீகேசா–ஹ்ருஷீகேசனே!
முலை உணாய்.

மின் இத்யாதி –
மின்னோடு  ஒத்த நுண்ணிய இடையை உடையவர்கள் என்னுதல்-
மின்னை ஒரு வகைக்கு ஒப்பாக உடைத்தாய் -அவ்வளவு இன்றிக்கே
ஸூஷ்மமான இடையை உடையவர்கள் என்னுதல் –

விரி குழல் நுழைந்த வண்டு –
விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –

இன்னிசைக்கும் இத்யாதி –
மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே –
ஸ்ரீ பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-
தாழ்ந்தார்க்கு  முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே
திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே-
பரம சாம்யாபந்நருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே ஸ்ரீ பரம பதத்தில் –
இங்கு இரண்டுமே சித்திக்குமே –
(ரெங்க ராஜ ஸ்தவம் அஹ்ருத ஸஹஜ தாஸ்யம் பரிகொடாதவர்கள் -அஹங்காரம் இல்லாதவர் )

உன்னைக் கண்டார் இத்யாதி –
நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால்
வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் –
நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும்  உண்டு இறே –
அவ்வளவு அன்றிக்கே –
லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் –
இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை –
எனக்கு உண்டாக்கித் தந்த

இருடீகேசா –
கண்டவர்களுடைய சர்வேந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாத படி உன் வசம்
ஆக்கிக் கொள்ளும் வைலஷண்யத்தை உடையவனே –
(யாத்ர நாந் யத்ர பஸ்யதி பூமா )
முலை உணாயே-

———————————-

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 -7- –

பதவுரை

கண்டவர்கள்–(உன்னைப்) பார்த்தவர்களான
பெண்டிர் வாழ்வார்–(தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள்
நின் ஒப்பாரை–உன்னைப் போன்ற குழந்தைகளை
பெறுதும்–பெறுவோம் (பெற வேணும்)
என்னும்–என்கிற
ஆசையாலே–ஆசையினாலே
போக்கு ஒழிந்தார்–(உன்னை விட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்;
வண்டு உலாம்–வண்டுகள் ஸஞ்சரிக்கிற
பூ–புஷ்பங்களை யணிந்த
குழலினார்–கூந்தலை யுடையவர்கள்
கண் இணையால்–(தமது) இரண்டு கண்களினாலும்
கலக்க நோக்கி–(உனது) திருமேனி முழுவதும் பார்த்து
உன்–உன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
உண்ண வேண்டி–பாநம் பண்ண ஆசை கொண்டவர்களாய்
கொண்டு போவான்–(உன்னை) எடுத்துக் கொண்டு போவதற்கு
வந்து நின்றார்–வந்து நிற்கிறார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ முலை உணாய்.

பெண்டிர் இத்யாதி –
ஸ்வ பர்த்தாக்களுக்கு பார்யைகளாய் வர்த்திப்பராய்
உன்னைக் கண்டவர்கள் –
உன்னைப் போலே இருக்கும் பிள்ளைகளை பெற வேணும் என்னும் ஆசையாலே
கால் வாங்கி
போக மாட்டாதபடியாய் விட்டார்கள் –

வண்டுலாம் பூம் குழலினார் கண் இணையால் கலக்கி நோக்கி-
பெருக் காற்றிலே இழிய மாட்டாமையால்
கரையிலே நின்று சஞ்சரிப்பாரைப் போலே மதுவின் சமர்த்தியாலே உள்ளே அவஹாகிக்க மாட்டா
வண்டுகள் ஆனவை மேலே நின்று சஞ்சரிக்கும் படி -பூவாலே அலங்க்ர்தமான குழலை உடையவர்கள் –
தன்னுடைய கண்களால் உன்னுடைய சமுதாய சோப தர்சனம் செய்து –

கலக்க நோக்குகையாவது –
ஓர் அவயவத்தில் உற்று நிற்கை  அன்றிக்கே
திருமேனியை எங்கும் ஒக்க பார்க்கை –

கீழ் -பெண்டிர் வாழ்வார் -என்று
பக்வைகளாய் பர்த்ரு பரதந்த்ரைதகளாய்-
புத்திர சாபேஷைகளானவர்களை சொல்லிற்று –

இங்கு வண்டுலாம் பூம் குழலினார் என்று –
ப்ராப்த யவ்வனைகளாய்-
போக சாபேஷைகளானவர்களை சொல்லுகிறது –

உன் இத்யாதி –
உன் வாக் அமிர்தம் புசிக்க வேண்டி –
உன்னை எடுத்து கொண்டு போவதாக வந்து நின்றார்கள்-

கோவிந்தா –
சர்வ ஸுலபனாணவனே –
உன் ஸுவ்லப்யத்துக்கு இது சேராது -நீ முலை உணாயே –

————————————————–

இருமலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரி செய்தாய் உன்
திரு மலிந்து திகழ் மார்பு தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே -2 2-8 – –

பதவுரை

இரு மலை போல்–இரண்டு மலை போலே (வந்து)
எதிர்ந்த–எதிர்த்து நின்ற
மல்லர் இருவர்–(சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய
அங்கம்–உடம்பை
எரி செய்தாய்–(பயத்தாலே) எரியும்படி செய்தவனே!
வந்து–(நீ) வந்து
என் அல்குல் ஏறி–என் மடி மீது ஏறிக் கொண்டு
உன்–உன்னுடைய
திரு மலிந்து திகழும் மார்வு–அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது
தேக்க–(முலைப் பாலால்) நிறையும்படி
ஒரு முலையை–ஒரு முலையை
வாய் மடுத்து–வாயிலே வைத்துக் கொண்டு
ஒரு முலையை–மற்றொரு முலையை
நெருடிக் கொண்டு–(கையினாலே) நெருடிக் கொண்டிருந்து
(மிகுதியாயிருப்பது பற்றிப் பால் வாயிலடங்காமையினால்)
ஏங்கி ஏங்கி–இளைத்திளைத்து
(இப்படி)
இரு முலையும்–இரண்டு முலையையும்
முறை முறை ஆய்
மாறி மாறி
இருந்து–பொருந்தி யிருந்து
உணாய்–உண்பாயாக.

இரு மலை இத்யாதி –
வடிவின் பெருமையாலும் -திண்மையாலும் இரண்டு மலை போலே வந்து
அறப் பொருவதாக எதிர்த்த சாணூர முஷ்டிகர் ஆகிற இரண்டு மல்லருடைய சரீரம் ஆனது
பய அக்னியால் தக்தமாம்  விழும் படி  பண்ணினவனே-

உன் இத்யாதி –
உன்னுடைய அழகு மிக்கு விளங்கா நின்று உள்ள மார்பானது
மலிதல் -மிகுதி —
திகழ்ச்சி -விளக்கம்
அன்றிக்கே-
திரு என்று பிராட்டியை சொல்லுகிறதாய் –
அவள் எழுந்து அருளி இருக்கையாலே
மிகவும் விளங்கா நின்று உள்ள உன்னுடைய மார்வு என்னவுமாம் –

தேக்க -தேங்க –
முலைப் பாலாலே நிறையும் படியாக –
வந்து என் அல்குல் ஏறி -என் மடியிலே வந்து ஏறி –

ஒரு முலை இத்யாதி –
ஒரு முலையைத் திருப் பவளத்திலே வைத்து -ஒரு முலையைத் திருக் கையால் பற்றி –
நெருடிக் கொண்டு -இரண்டு முலையும் மாறி மாறி –
பால் பாவின மிகுதி -திருப் பவளத்தில் அடங்காமையால் நடு நடுவே இளைத்து இளைத்து -அமர இருந்து –
அமுது செய்ய வேணும் –

———————————–

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
செங்கமல முகம் வெயர்ப்ப தீமை செய்தீம் முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக வளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே -2 2-9 – –

பதவுரை

அம்ம–தலைவனே!
(அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னை யடைந்த)
அங்கு–அக் காலத்திலே
விம்ம–(அவர்கள் வயிறு) நிரம்பும்படி
அமரர்க்கு–(அந்த) தேவர்களுக்கு
அமுது அளித்த–(க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த
அமரர் கோவே–தேவாதி ராஜனே!
அம் கமலம் போது அகத்தில்–அழகிய தாமரைப் பூவினுள்ளே
அணி கொள் முத்தம் சிந்தினால் போல்–அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி
செம் கமலம் முகம்–செந்தாமரை மலர் போன்ற (உனது) முகமானது
வியர்ப்ப–வியர்த்துப் போக
இ முற்றத்தூடே–இந்த முற்றத்திலேயே
தீமை செய்து–தீம்பைச் செய்து கொண்டு
அங்கம் எல்லாம் புழுதி ஆக–உடம்பெல்லாம் புழுதி படியும்படி
அளைய வேண்டா–புழுதி யளையாதே;
முலை உணாய்–முலை யுண்ண வாராய்.

நிறத்தாலும் -மணத்தாலும் -செவ்வியாலும் -விகாசத்தாலும் அழகியதாய் இருக்கும் –
தாமரைப் பூவின் இடத்தில் –
போது -புஷ்பம் –
அகம் -இடம்

அணி இத்யாதி –
நீர்மையாலும் -ஒளியாலும் -அழகாய் உடைத்தான முத்துக்கள் ஆனவை
சிதறினால் போலே

செங்கமலம்  இத்யாதி –
சிவந்து மலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திரு முகமானது
குறு வெயர்ப்பு அரும்பும்படியாக –

(அங்கமலம் உபமானத்துக்கு
செங்கமலம் திரு முகத்துக்கு
மீண்டும் மீண்டும் சொல்வது ஆதார அதிசயத்தால் )

தீமை இத்யாதி –
இம் முற்றத்துள்ளே  நின்று தீம்புகளை செய்து -உடம்பு எல்லாம் புழுதியாக இருந்து –
புழுதி அலைய வேண்டா –

அம்ம -ஸ்வாமி என்னுதல்-
இவன் சேஷ்டித தர்சனத்தால் வந்த ஆசார்ய உக்தி ஆதல் –

விம்ம இத்யாதி –
விம்ம-நிரந்தரமாக –
துர்வாச சாபோபஹதராய் அசுரர்கள் கையில் ஈடுபட்டு சாவாமைக்கு மருந்து பெறுகைக்கு
உன்னை வந்து ஆஸ்ரயித்த தேவர்களுக்கு -அத்தசையில் வயிறு நிரம்ப அம்ர்தத்தை இடுகையாலே
அவர்களுக்கு நிர்வாஹனானவனே-

முலை உணாயே –
அப்போது அவர்கள் அபேஷைக்கு அது செய்தால் போலே –
இப்போது என்னுடைய
அபேஷைக்காக நீ முலை உண்ண வேணும் என்கை-

————————————————-

(ஓங்கி உலகளந்த உத்தமன் -மூன்றாம் பாசுரம்
ஊழி முதல்வன் -நான்காம் பாசுரம்
இங்கே ஒரே பாசுரத்தில்
இரண்டும் பரத்வ எளிய பரமாகவே அனுபவம் )

ஓட ஓட கிண் கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயை பற்ப நாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்து இட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை யாடி
ஓடி ஓடி போய் விடாதே உத்தமா நீ முலை உணாதே -2 2-10 – –

பதவுரை

ஓடஓட–(குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால்
ஒலிக்கும்–சப்திக்கின்ற
கிண் கிணிகள்–பாதச் சதங்கைகளினுடைய
ஓசைப் பாணியாலே–ஓசையாகிற சப்தத்தால்
பாடிப் பாடி–இடை விடாது பாடிக் கொண்டு
அதனுக்கு ஏற்ற கூத்தை–அப் பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை
அசைந்து அசைந்திட்டு–வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து
ஆடி ஆடி–ஆடிக் கொண்டு
வருகின்றாயை–வருகின்ற உன்னை
பற்பநாபன் என்று இருந்தேன்–(வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணி யிருந்தேன்;
நீ–நீ
ஆடி–ஆடிக் கொண்டே
ஓடி ஓடி போய் விடாதே–(என் கைக்கு எட்டாதபடி) ஓடிப் போய் விடாதே
முலை உணாய்.

ஓட ஓட இத்யாதி –
நடக்கும் போது மெத்தென நடக்கை அன்றிக்கே –
பால்யத்துக்கு ஈடான செருக்காலே பதறி ஓட ஓட –
பாத சதங்கைகளான கிண் கிணிகள் த்வனிக்கும் த்வநியாகிற சப்தத்தாலே
பாடிப்பாடி –
அதனுக்கு ஏற்ற கூத்தை -அசைந்து அசைந்து இட்டு –
ஆடி ஆடி –
அந்த பாட்டுக்கு தகுதியான ந்ர்த்தத்தை
திரு மேனி இடம் வலம் கொண்டு -அசைந்து அசைந்திட்டு நடக்கிற நடையாலே-ஆடி ஆடி –
கூத்தன் கோவலன் -(திருவாய் -10-1-)-இறே-

நடக்கிற நடை எல்லாம் வல்லார் ஆடினால் போலே இறே இருப்பது –
ஆகையால் விரைந்து நடந்து வரும் போது –
திருவடிகளில் சதங்கைகளின் உடைய ஓசைகள் தானே பாட்டாய்-
நடக்கிற நடை எல்லாம் ஆட்டமாய்  இருக்கும் ஆய்த்து –

அன்றிகே –
கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசை தாளமாய் –
வாயாலே பாடிப் பாடி –
அதனுக்கு ஏற்ற
கூத்தை அசைந்து அசைந்திட்டு
ஆடி ஆடி என்று பொருளாகவுமாம்

வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் –
இப்படி என்னை நோக்கி வாரா நின்றுள்ள உன்னை –
கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -என்கிறபடியே வேறு ஒரு ஆபரணம் வேண்டாதே –
திரு நாபி கமலம் தானே ஒரு ஆபரணம் ஆம்படி இருப்பான் ஒருவன் அன்றோ –
இவனுக்கு வேறு ஒரு ஆட்டும் பாட்டும் வேணுமோ –

சதங்கை ஓசையும் நடை அழகும் தானே
பாட்டும் ஆட்டுமாய் இருந்தபடி என்-என்று
ஆச்சர்யப்பட்டு இருந்தேன் -என்னுதல்

அழிந்து கிடந்ததை உண்டாக்கும் அவனன்றோ –
நம்முடைய சத்தையை தருகைக்காக வருகிறான் என்று
இருந்தேன் -என்னுதல்-

ஓடி ஓடி இத்யாதி –
இவள் சொன்னதின் கருத்து அறியாதே -இவள் நம்முடைய நீர்மையை சொல்லாமல் –
ஸுவ்ந்தர்ய பிரகாசமான மேன்மையை சொல்லுவதே -என்று –
மீண்டு ஓடிப் போக தொடங்குகையாலே-

இப்படி ஆடி ஆடி கொண்டு என் கைக்கு எட்டாதபடி -ஓடி ஓடி போய் விடாதே –
நீ புருஷோத்தமன் ஆகையாலே –
ஆஸ்ரித பரதந்த்ரனான பின்பு -என் வசத்திலே வந்து –
என் முலையை உண்ண வேணும் -என்கிறாள் –

(ஆஸ்ரிதற்கு அடங்கினால் தானே நீ உத்தமன் புருஷோத்தமன்-என்றவாறு )

———————————————–

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்றசிந்தை பெறுவார் தாமே -2 2-11 – –

பதவுரை

வார் அணிந்த–கச்சை அணிந்து கொண்டிருக்கிற
கொங்கை–ஸ்தநங்களையுடைய
ஆய்ச்சி–யசோதை
மாதவா–மாதவனே!
உண்–முலையை (உண்பாயாக)
என்ற–என்று (வேண்டிச்) சொன்ன
மாற்றம்–வார்த்தையைக் குறித்தனவான
நீர் அணிந்த குவளை–நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின்
வாசம்–நல்ல வாசனை
நிகழ் நாறும்–ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரி லவதரித்தவரும்
பார் அணிந்த–பூமி முழுவதும் அழகாகப் பரவிய
தொல் புகழான்–பழமையான கீர்த்தியை யுடையவருமான
பட்டர் பிரான்–பெரியாழ்வார் அருளிச் செய்த
பாடல்–பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்
சீர் அணிந்த–குணங்களாலழகிய
செம் கண் மால் மேல்–சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலிடத்தில்
சென்ற–பதிந்த
சிந்தை–மநஸ்ஸை
பெறுவர்–அடைவார்கள்

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி –
ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை பரிசாரகரானவர்கள்  கட்டி
இலச்சினை இட்டுக் கொண்டு திரியுமா போலே –
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு போக்யமான முலைகள்
பிறர்கண் படாதபடி கச்சாலே சேமித்துக் கொண்டு திரிகையாலே –
வாராலே அலங்க்ர்தமான முலையை உடையவளான ஆய்ச்சி என்று
ஸ்லாகித்துக் கொண்டு அருளிச் செய்கிறார் –

மாதவா உண் என்ற மாற்றம் –
ஸ்ரீ யபதி யாகையாலே -அவாப்த சமஸ்த காமனான அவனை –
அவதாரத்தின் மெய்ப்பாட்டுக்கு ஈடாக முலை உண் என்ற சப்தத்தை –

நீர் இத்யாதி –
நீருக்கு அலங்காரமாக அலர்ந்த செங்கழு நீருடைய பரிமளமானது ஒருபடிபட
பிரகாசியா  நிற்கிற  ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹராய் –

பார் இத்யாதி –
பூமியில் ராஜாக்களுக்கு பிரதானனான பாண்டியனும் –
ஞாதாக்களில் பிரதானரான செல்வ நம்பி தொடக்கமானவர்கள்
அன்றிக்கே
பூமி எங்கும் கொண்டாடும்படி வ்யாப்தமாய் –
வந்தேறி அன்றிக்கே –
ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான புகழை உடையராய் ப்ராஹ்மன உத்தமரான
ஸ்ரீ பெரியாழ்வார் அருளி செய்த பாடலை அப்யசிக்க வல்லவர்கள் –

சீர் இத்யாதி –
ஆத்ம குணங்களாலே அலங்க்ர்தனாய்-
அவயவ சோபைக்கு பிரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையனாய் –
இவை இரண்டையும் ஆஸ்ரிதர் அனுபவிக்கும்படி அவர்கள் பக்கல் வ்யாமோகத்தை உடையவனாய் –
இருக்குமவன் விஷயத்தில் –

அன்றிக்கே –
சீர் இத்யாதிக்கு –
ஆஸ்ரித பாரதந்த்ரம் ஆகிற குணத்தாலே அலங்க்ர்தனாய் –
இந் நீர்மைக்கும் மேன்மைக்கும் ப்ரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையவனாய் –
சர்வ ஸ்மாத் பரனாய் -இருக்குமவன்
விஷயத்திலே என்று பொருளாகவுமாம்

சென்ற இத்யாதி –
பாடல் வல்லார் தாம் செங்கண் மால் பக்கலிலே
ஒருபடி படச் சென்ற மனசை உடையவர் ஆவர் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: