ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-1–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

அவதாரிகை –
கீழ் இரண்டு திரு மொழியிலும் –
அச்சோ என்றும் –
புறம் புல்குவான் -என்றும் -அவன்
சைசவ அனுகுணமாக ஓடி வந்து -மேல் விழுந்து
முன்னும் பின்னும் அணைக்கும் ரசத்தை –

தான் அனுபவிக்க ஆசைப் பட்டு –
அவனைக் குறித்து பிரார்த்தித்து –
அவன் அப்படி செய்ய –
யசோதை பிராட்டி அனுபவித்தால் போலே –
இந்த சேஷ்டிதங்களினுடைய ரசத்தை அனுபவிக்க ஆசைப் பட்டு –
தாமும் அப்படியே பிரார்த்தித்து –
தத் காலம் போலே அனுபவித்து –
இனியரானார் –

சிறு பிள்ளைகள் அப்பூச்சி காட்டி விளையாடும் அத்தையும் –
அவதாரத்தின் மெய்ப்பாடு தோற்ற அவன் ஆஸ்ரிதத்தை
தத் காலத்தில் உள்ளார் அனுபவித்து ஹ்ர்ஷ்டராய் பேசினால் போலே –
பிற் காலமாய் இருக்கச் செய்தேயும் – தத் காலம் போலே -தாமும் அனுபவித்து பேசி –
ஹ்ருஷ்டராகிறார் இத் திருமொழியில்-

———————————————-

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி
பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2-1 1- –

பதவுரை

மெச்ச–(அனைவரும்) கொண்டாடும்படி
ஊது–ஊதுகின்ற
சங்கம்–ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை
மிடத்தான்–இடக் கையில் ஏந்தியுள்ளவனும்
நல்வேய்–நல்ல வேய்ங்குழலை
ஊதி–ஊதுபவனும்
பொய் சூதில்–க்ருத்ரிமமான சூதிலே
தோற்ற–(தம்முடைய சொத்துக்களை யெல்லாம்) இழந்தவர்களாய்
பொறை உடை–பொறுமை சாலிகளான
மன்னர்க்கு–பாண்டவர்கட்கு
ஆய்–(தான் எல்லா வகைத்) துணையுமாயிருந்து
(துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்)
பத்து ஊர்–பத்து ஊரையும்
பெறாது–அடைய முடியாமல்
அன்று–அக் காலத்திலே
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்த–அணி வகுத்துச் செய்து
அத் தூதன்–அந்தப் பாண்டவ தூதனான கண்ணன்
அப் பூச்சி காட்டுகின்றான்–அப்படிப் பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி காட்டுகின்றான்;
அம்மனே–அம்மா!
அப் பூச்சி காட்டுகின்றான்-.
(தலை கேசம் வைத்து மறைத்து -கண்ணை புரட்டி -சங்கு சக்கரம் காட்டி -அப்பூச்சி காட்டுதல் (

மெச்சூது சங்கம் இடத்தான் –
ஆஸ்ரித பரதந்த்ரனான பாண்டவ பஷ பாதி -என்று
எல்லாரும் மெச்சும் படியாக ஊதிகிற பாஞ்ச ஜன்யத்தை  இடக் கையிலே உடையவன் –

மெச்ச -என்கிற இது –
மெச் என்று கடைக் குறைத்தலாய் கிடக்கிறது –
மெச்ச ஊதுகிற என்கிறபடி –
மெச்சுதல்-கொண்டாட்டம் –

ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனி தான் பிரதிகூலர் மண் உண்ணும் படியாகவும் –
அனுகூலர் வாழும்படியாகவும் இறே இருப்பது –
யஸ்ய நாதேன தைத்யானம் பல ஹாநி ரஜாயாத -தேவானாம் வவ்ர்தே தேஜ -ப்ரஸாத சைவ யோகிநாம் -என்கிறபடியே –

நல்வே யூதி –
இதுவே அவதாரத்துக்கு அனு குணமான நிரூபகம் –
அனுகூலர் வாழும்படி நல்ல குழலை ஊதுமவன் –

குழலுக்கு நன்மையாவது –
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து –
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் -இத்யாதிப் படியே –
தன்னுடைய த்வநியாலே -சேதன அசேதன விபாகமற ஈடுபடுத்த வற்றாகை –
ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் திருக் குழலும் இவ் வதாரத்தில் கை தொடானாய் இறே இருப்பது –

பசு மேய்த்து திரியும் காலத்திலும் -ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கம் -என்றும் –
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் -(6-4-)-என்றும்
சொல்லக் கடவது இறே –

பொய் சூதில் தோற்ற –
க்ரித்ரிமமான சூதிலே பராஜிதராய் -சர்வஸ்வத்தையும் இழந்த –
செவ்வையில் இவர்களை ஜெயிக்க போகாது இறே –
க்ரித்ரிமத்தாலே இறே இவர்களை ஜெயித்தது –

பொறை உடை மன்னர்க்காய் –
அவர்கள் செய்தது க்ரித்ரிமம் என்று அறிந்து இருக்க செய்தேயும் –
க்ரோத விக்ரிதி இன்றிக்கே -ஷமையை உடையராய் இருந்த ராஜாக்களுக்காய் –
துரியோதநாதிகள் இவர்கள் சர்வஸ்வத்தையும் அபஹரிக்கும் இத்தனை அல்லது
இவர்கள் ஷமையை அபஹரிக்க மாட்டார்கள் இறே –
ஆகையாலே பொறை உடை மன்னர் என்று -பொறையை இவர்களுக்கு நிரூபகமாக சொல்லுகிறது –

மன்னர்க்காய் –
யஸ்ய மந்த்ரீஸ் ச கோப்தாஸ் ச ஸூஹ்ருதைர்ஸ் ஏவ ஜனார்த்தன -என்கிறபடியே
அவர்களுக்கு சர்வ விதமான துணையும் தானேயாய் கொண்டு -பர தந்த்ரனாய் –
லிபஜித்து கொடுத்து -கூடிக் கலந்து இருக்கில் -தீர்க்க ஜீவிகள் ஆகலாம் -என்ன –
அவர்கள் -நாங்கள் அது செய்யோம் என்ன –

ஆகிலும் சிறிது குறைவாகிலும் கொடும் கோள்-அவர்களை நான் பொருத்துகிறேன் -என்ன –
அவர்கள் அதுக்கும் இசையாமையாலே –
ஆனால் அவர்கள் ஐவர்க்கும் தலைக்கு இரண்டு ஊராக பத்தூர் தன்னை கொடும் கோள் -என்ன
இவை ஒன்றும் நாங்கள் செய்வது இல்லை –

வீர  போக்யை  அன்றோ வஸூந்தரை
யுத்தத்தை பண்ணி  ஜெயித்தவர்கள் ஜீவிக்கும் இத்தனை -என்ன –

ஆனால் அது தன்னை செய்யும் கோள் -என்று போந்து
இத் தலையையும் யுத்தத்தில் பொருத்தி –
அன்று பாரத யுத்தத்தில் கையும் அணியும் வகுத்து –
சாரதியாய் நின்று நடத்தின ஆஸ்ரித பஷ பாதியான அந்த தூதனானவன் –

அப் பூச்சி –
பயங்கரமாய் உள்ளது –
அதாவது –
லோகத்தில் பாலரானவர்கள் எதிர் தலைக்கு பயங்கரமாக காட்டுவன சில சேஷ்டிதங்கள்

இவ்விடத்தில் விசேஷம் உண்டு –
அது ஏது என்னில் –
நீர்மையை கண்டு -நம்மிலே ஒருவன் -என்று இருக்கும் அவர்கள் பயப்படும்படி
ஈஸ்வரத்வ சிஹ்னங்களைக் காட்டுகை –

இவ் விடத்தை  ஸ்ரீ உய்ந்த பிள்ளை-ஸ்ரீ திரு வரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீ எம்பெருமானார்
காலத்தில் எழுந்து அருளி இருந்தார் ஒரு அரையர் – பாடா நிற்க –
திரு வோலக்கத்திலே
அத் தூதன் என்று -பெருமாளை காட்டுவது –
அப் பூச்சி என்று கண்ணை இறுத்து கொண்டு வருவதாக அபிநயிக்க –

ஸ்ரீ உடையவர் பின்னே சேவித்து எழுந்து அருளி இருந்த ஸ்ரீ எம்பார் –
திருக் கைகளை திருத் தோள்களோடு சேர்ந்து காட்ட –
அவரும் அப்படியே அபிநயித்து கொண்டு வர –
இதுக்கடி என் என்று விசாரித்து புரிந்து பார்த்து அருளி –
ஸ்ரீ கோவிந்த பெருமாள் இருந்தீரோ -என்று அருளிச் செய்தார்-என்று பிரசித்தம் இறே –

(சங்கம் இடத்தான்–அப்பூச்சி காட்டுகின்றான்-இருப்பதால் )

அப் பூச்சி என்கிறது -இரண்டு திருக் கையில் ஆழ்வார்களையும்
அம்மனே என்கிறது -கண்டு பயப்பட்டு சொல்லுகிற வார்த்தை –

—————————————————-

மாயன் அன்று ஓதிய வாக்கு -ஸ்ரீ கீதாச்சார்யன் -உபநிஷத் பசுவைக் கறந்து அருளிச் செய்த
ஸ்ரீ கீதாம்ருதம் -அலைவலை-பஹு ஜல்பிகம் -சொல்லலாமோ –

மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன்
சிலை வளைய திண் தேர் மேல் முன்னிற்ற செங்கண்
அலைவலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 2- –

பதவுரை

மலை புரை–மலையை ஒத்த
தோள்–தோள்களை யுடைய
மன்னவர்–அரசர்களான
மாரதரும்–மஹா ரதரும்-பீஷ்மாதிகள்- (ஆத்மாநம் -அஸ்வங்களை ரக்ஷித்து போர் செய்வார் )
மற்றும் பலரும்–மற்றும் பலவகை அரசர்களும்
குலைய–அழியவும்
நூற்றுவரும்–(துர்யோதநாதிகள்) நூறு பேரும்
பட்டு–மரணமடைந்து
அழிய–வேர் அற்ற மரம் போல் -உருவமழிந்து போகவும்
பார்த்தன்–அர்ஜுனனுடைய
சிலை–(காண்டீவமென்னும்) வில்
வளைய–வளையவும்
(நூற்றுவரை வெல்வதை விட ஐவரை வேள்வித்ததே பெரிய விஷயம் )
திண் தேர் மேல்–(அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின் மேல்
(பார்த்த சாரதி இருப்பதாலேயே வந்த திண்மை உண்டே )
முன் நின்ற–(ஸாரதியாய்) முன் புறத்தில் நின்ற
செம் கண்–(வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை யுடையனாய்
அல வலை–(அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன்
(பிதற்றுவது போல் -ஜயத்தையே சொல்லி புகழுமவன்
வெல்ல வைக்க ஸ்ரீ கீதையை வெளியிட்டு அருளினவன் )
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

மலை இத்யாதி –
மலை போல் ஒருவரால் -சலிப்பிக்க ஒண்ணாதபடி
திண்ணியதான தோள்களை உடைய ராஜாக்களும் –
இத்தால் அதி பலாக்ரமம் ஆகையாலே ஒன்றுக்கும் அஞ்சாதவர்கள் என்கை-

மா ரதரும் –
பீஷ்ம த்ரோணாதிகளுமான மகா ரதரும் –
பீஷ்மர் த்ரோணாசார்யர் கர்ணன் என்கிற இவர்கள் ஒரோருவரே அதி சூரர் ஆகையாலே –
ஓர் எதிரிகளுக்கும் அஞ்சாதவர்கள் இறே-

மற்றும் பலர் –
தனித் தனியே எண்ணி முடியாமையாலே மற்றும் இவர்களோடு ஒக்க
விகல்பிக்கலாம்படி இருப்பர் அநேகர் என்கிறார் –
பதினோர் அஷோகினியானால் அதில் எத்தனை சூரர் உண்டாய் இருக்கும் –
ஆகையால் சமுச்சயித்து சொல்லும் இத்தனை –

குலைய –
கிருஷ்ணன் சாரத்தியம் பண்ணுவதாக ஏறினான் -என்று கேட்ட போதே –
நாம் இனி ஜீவிக்கை என்று ஒரு பொருள்  உண்டோ -என்று
பீதராய் நடுங்கும் படியாக –

கீழே –
அவர் இவர் என்றால் போலே விசேஷம் தோற்ற சொல்லி –
குலைய -என்கையாலே –
இந் நடுக்கத்தில் வந்தால் -ஒருவருக்கும் ஒரு விசேஷமும் இல்லை என்கை-

நூற்றுவரும் பட்டு அழிய –
கீழே -மன்னவரும் என்று -ராஜாக்களைச் சொல்லி இருக்கச் செய்தே –
இவர்களை பிரித்து எடுக்கையாலே –
கோபலீவர்த்த ந்யாயத்தாலே –
அங்கு இவர்களை ஒழிந்தவர்களைச் சொல்லிற்றாகக் கடவது –

பாண்டவர்களோடு யுத்தம் பண்ணி -ஜெயித்து பூமிப் பரப்பு அடங்கலும் –
தாங்களே ஆளுவதாக கோலி இருந்த -துர்யோநாதிகள் நூற்றுவரும் பட்டு அழிய –

மயை வைதே நிஹதா பூர்வமேவ -என்கிறபடியே
கிருஷ்ணன் அழியச் செய்வதாக சங்கல்பித்த போதே
நின்று நின்று வேரற்ற மரம் போலே பட்டு பின்னை உரு அழிந்து போம்படியாக

பார்த்தன் சிலை வளைய –
அர்ஜுனன் கையில் காண்டீபம் வளைய –
அதாவது –
அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகளை மதியாதே அர்ஜுனன்
எதிர்த்து நின்று
வில் வலித்து
யுத்தம் பண்ண வல்லன் ஆய்த்து
இவனுடைய சகாய பலத்தால் என்கை –

திண் தேர் மேல் முன் நின்ற –
மகா ரதரான பீஷ்மாதிகள் விட்ட ஆக்நேய அஸ்த்ராதிகளாலே
தக்தமாய் விழாமல் -தன் திருவடிகளின் சம்பந்த்தாலே திண்மையை உடைத்தாய் நின்ற –
தேரின் மேலே –
உரஸா தாரயாமாச பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -( த்ரோண பர்வம் பாரதம் )-என்கிறபடியே
அர்ஜுனனால் பொறுக்க ஒண்ணாத அஸ்த்ர சஸ்த்ரங்கள் வந்தாலும்
தன் மேலே ஏற்றுக் கொள்ளும்படியாக சாரதியாய் முன்னின்ற –

செம் கண் அலை வலை –
தான் சாரத்தியம் பண்ணின சாமர்த்யத்தாலே –
பிரதி பஷத்தை வென்று –
அந்த விஜயத்தை அர்ஜுனன் மேல் ஏறிட்டு –
அவன் பக்கல் வாத்சல்யம் தோற்ற கடாஷித்து நின்று –
அவன் விஜயம் தோற்ற பலவற்றையும் சொல்லி புகழுமவன்-

அவாக்ய அநாதர என்று இருக்க கடவ –
அவன் அதடைய அழிந்து கல கல என ஏத்தா நிற்கும் ஆய்த்து –
புகழ்ந்தாய் சினப் போர் சுவேதனை சேனாபதியாய் மனப் போர் முடிக்கும் வகை (நான்முகன் )-என்கிறபடியே –

அதவா –
பார்த்தன் சிலை வளைய திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலைவலை என்கையாலே –
அஸ்தான சிநேக காருண்ய தர்ம அதர்ம அதியாகுலனாய் –
நகான்ஷே விஜயம் க்ருஷ்ண-இத்யாதிப்படியே –
விஜயமும் வேண்டா ராஜ்யாதிகளும் வேண்டா என்று உபேஷித்து-

ரதோபஸ்த உபாவிசத் -என்றும் –
விஸ்ர்ஜ்ய  சசாஞ்சாபம் சோகசம் விக்ன மானச -என்கிறபடியே
சோகத்தாலே வெருவின மனசை உடையனாய் வில்லையும் பொகட்டு
யுத்தாந் நிவர்த்தனாய் தேர் தட்டிலே இருந்த அர்ஜுனன் தெளிந்து –

கரிஷ்யே வசனந் தவ-என்று
எழுந்து இருந்து வில் எடுத்து யுத்தம் பண்ணும்படியாக

பிரகிருதி ஆத்ம விபாகம் தொடக்கி
பரம ரகஸ்யமான பரபக்தி பர்யந்தமாக
உபதேசித்த அலை வலை தனத்தை சொல்லவுமாம்-

(நின்மலமாக வைத்தவர்
ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும் –ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -189-)

அலை வலை என்பது
அர்த்த கௌரவமும்  அதிகாரி கௌரவமும் பாராதே –
தன் நெஞ்சினில் பிரதி பன்னமானவற்றை சொல்லுமவன் இறே-
அது இங்கும் உண்டு ஆகையாலே இவனையும் அலைவலை என்னலாம் இறே –
இப்படி தான் அருளி செய்தது சரணாகதை யானவள் குழல் முடிப்பிக்கை ஆக  இறே-

வந்து இத்யாதி –
இப்படி பலர் குலையவும்
பட்டு அழியவும் –
சிலை வளையவும் –
தேர் முன்னிற்று சாரத்தியம் பண்ணின ஆஸ்ரித விரோதி நிரசனம் –
ஆஸ்ரித பார தந்த்ர்யம் –
முதலான ஸ்வபாவங்களை உடையவன்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான் –

————————————

காயு நீர் புக்குக்  கடம்பு ஏறிக் காளியன்
தீய பணத்தில் சிலம்பு ஆர்க்க பாய்ந்தாடி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 3- –

பதவுரை

காயும்–(காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற
நீர்–மடுவின் ஜலத்திலே
புக்கு–புகுந்து (கலக்கி)
(அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து)
கடம்பு ஏறி–(அம் மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி
காளியன்–அந்தக் காளியனுடைய
தீய பணத்தில்–கொடிய படத்திலே
சிலம்பு ஆர்க்க–(தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி
பாய்ந்து–குதித்து
ஆடி-கூத்தாடி
(இச் செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ)
வேயின் குழல் ஊதி–மூங்கினாலானாகிய குழலை ஊதி
(இப்படி)
வித்தகன் ஆய் நின்ற–விஸ்மயநீயனா யிருந்த
ஆயன்–கண்ண பிரான்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

காயு நீர் இத்யாதி –
காயு நீர் புக்கு –
அருகு அணைந்த வ்ருஷங்கள் பஷிகள் உள்பட
பட்டு விழும்படி காளியன் விஷ அக்நியாலே தப்தமாய் நின்று கொதிக்கிற மடுவின் ஜலத்திலே மதியாது

சென்று புக்கு –
கடு விடமுடைய  காளியன் தடத்தை கலக்கி (திருமங்கை )-என்கிறபடியே
அந்த தடாகத்தை கலக்கி –
காளியன் க்ருத்யனாய் தலை எடுத்து இருக்கும்படி பண்ணி –

கடம்பேறி –
அந்த விஷ அக்நியாலே அருகே பட்டு நிற்கிற தொரு கடம்பை –
தன் கடாஷத்தாலே –
பச்சிலை பூம் கடம்பாக்கி –
அதின் மேலே ஏறி –

காளியன் இத்யாதி –
காளியனுடைய -விஷ ஆஸ்ரயமாகையாலே க்ரூரமான பணத்தில் திருவடிகளை
திருச் சிலம்பு த்வநிக்கும்படி சென்று குதித்து –
அவன் பணங்கள் நெரிந்து –
வாய்களாலே ரத்தம் சொரியும்படி –
இளைத்து சரணம் புகுரும்  அளவும் அதன் மேலே ஏறி நின்று –
நர்த்தம் செய்து –

வேய் இத்யாதி –
இந்த வ்ருத்தாந்தத்தை கண்டும் கேட்டும் -என்னாகப் புகுகிறதோ -என்று தரைப்பட்டு கிடந்தது
ஈடுபடுகிற இவ் அனுகூல ஜனங்கள் தலை எடுத்து ப்ரீதராய் வாழும்படி
திருக் கையில் வேயின் குழலை ஊதி-
இவ் அதி மாநுஷ சேஷ்டிதத்தாலே விச்மயநீயனாய் நின்ற –

ஆயன் –
எல்லாம் செய்தாலும் ஜாத் உசிதமான இடைத் தனத்தில் குலையாதவன் -குறையாதவன் –
வந்து அப் பூச்சி காட்டுகின்றான் –

—————————————————-

இருட்டில் பிறந்து போய் ஏழை வல் லாயர்
மருட்டித் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப்
புரட்டி அந் நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட
அரட்டன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 4-

பதவுரை

இருட்டில்–இருள் நிறைந்த நடு நிசியில்
பிறந்த–(மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி
போய்–(அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப்) போய்
ஏழை–அவிவேகிகளான
வல்–(கிருஷ்ண ஆஸ்ரயத்தால் -தன்னைப் பற்றி யிருக்கும்) மன வலிமையை யுடைய
ஆயர்–இடையர்களின்
(கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக்
கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற)
மருட்டை–மருள் வார்த்தைகளை
தவிர்ப்பித்து–போக்கினவனாயும்
வல் கஞ்சன்–கொடிய கம்ஸன்
மாள–மாண்டு போம்படி
புரட்டி–(அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும்
அந் நாள்–(நாங்கள் யமுனையில் நீராடிய) அக் காலத்திலே
எங்கள்–எங்களுடைய
பூம் பட்டு–அழகிய பட்டுப் புடவைகளை
கொண்ட–வாரிக் கொண்டு போன
அரட்டன்–தீம்பனாயுமுள்ள கண்ணன்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

இருட்டில் பிறந்து –
மத்ய ராத்ரே கிலாதாரே ஜாயமானே ஜனார்தனே (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்கிறபடியே
கம்சன் முதலான துஷ்ப்ரக்ருதிகள் கண் படாதபடி –
அருகு நின்றாரை தெரியாத இருளிலே வந்து அவதரித்து –
எப்போது பிறப்பது -என்று ஹிம்சிக்கைக்காக உருவின வாளை வைத்து உறையில் இருக்கிறவன் –
கண்ணால் கண்டால் விடான் இறே-
(பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பாரே )

ஜானாது மா அவதானந்தே கம்சோயம் திதி ஜன்மஜ -என்றாள் இறே தேவகி பிராட்டி –

போய் –
வீங்கு இருள் வாய் அன்று அன்னை புலம்ப போய் -என்கிறபடியே
அந்த செறிந்த இருளிலே பெற்ற தாயானவள் விரஹா ஆதரதையாலே காலைக் கட்டிக் கொண்டு
கிடந்து கதரா நிற்க
திரு ஆய்ப்பாடியிலே போய் –

ஏழை வல்லாயர் மருட்டை தவிர்ப்பித்து –
தன் பக்கல் சபலராய் -க்ருஷ்ணாஸ்ரைய கிருஷ்ணா பலா கிருஷ்ண நாதாஸ் ச (துரோண பர்வம் )-என்கிறபடியே
தன்னைப் பற்றி இருக்கும் பலத்தை உடையரான கோபரானவர்கள்-
செருக்காலே தாங்கள் கம்சனை அழிக்க வல்லாரைப் போலே சொல்லும் பிராமக உக்திகளை-
நீங்கள் எல்லாரும் வேணுமோ -நானே செய்கிறேன் -என்றால் போலே சொல்லும் தன்னுடைய
உக்தி விசேஷங்களாலே தவிரும்படி பண்ணி –

வன் கஞ்சன் மாளப் புரட்டி –
நான் செய்கிறேன் என்றது – உக்தி மாதரம் போகாமே -கம்ச ப்ரேரிதனாய்-
தன்னை அழைத்து கொண்டு போக வந்த அக்ரூரர் உடனே -ஸ்ரீ மதுரையில் எழுந்து அருளி –
உத்சவத்துக்கு என்று அழைத்து விட்டு -வழியிலே நலியும்படியாக –
தன் குவலயாபீடத்தையும் -மல்லரையும் -நிறுத்தி –

துங்க மஞ்ச வ்யவஸ்த்தித-என்கிறபடியே –
தான் உயர்ந்த நிலத்திலே ஏறிப் பார்த்து கொண்டு இருந்த
வன்னெஞ்சனான கம்சன் முடியும்படியாக –
அவன் வழியில் நிறுத்தின விரோதிகளை நிரஸித்து கொண்டு –
சென்று –
அவன் இருக்கிற மஞ்சஸ்  ஸ்தலத்திலே  எழப் பாய்ந்து –

கேசேஷ்வாக்ருஷ்ய விகளத் கிரீட  மவ நீதலே-ச கம்சம் பாத யாமாச தச்ய உபரி  பபாதச -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-)-என்கிறபடியே
அபிஷேகத்தை தட்டிப் பொகட்டு-மயிரை பிடித்து இழுத்து -கீழே பூமியிலே விழத் தள்ளி -அவன் மேலே குதித்து –
கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த-(3-10) -என்கிறபடியே
மயிரை தூக்கிப் பிடித்து -நிலத்திலே இட்டுப் புரட்டி –

அந் நாள் இத்யாதி –
பனி நீராட்டின அந் நாளிலே எங்களுடைய அழகிய பட்டுகளை வாரிக் கொண்ட தீம்பானவன் –

அரட்டு -தீம்பு –மிடுக்காகவுமாம்-

வந்து அப் பூச்சி காட்டுகின்றான் –

——————————————————-

சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்க துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான்  2-1 5- –

பதவுரை

சே பூண்ட–எருதுகள் கட்டுதற்கு உரிய
காடு–சகடம்
(அஸுரா வேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை)
சிதறி–உருக்குலையும்படி உதைத்து
நெய்க்கு–நெய்க்கு ஆசைப்பட்டு
திருடி–களவு செய்து
ஆப்பூண்டு–(உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு
(அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க)
நந்தன் மனைவி–நந்தகோபன் தேவியான அவ் யசோதை
கடை தாம்பால்–(தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க)
துள்ளித் துடிக்க –துடிக்க துடிக்க
சோப்பூண்டு–அள்ளி மிகவும் துடிக்கும் படி அடி யுண்டு
(அதனோடு நில்லாமல்)
அன்று–அக் காலத்தில்
ஆப்பூண்டாள்–(எங்கும் சலிக்க முடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன்
அப் பூச்சி காட்டுகின்றான்

சேப்பூண்டு இத்யாதி –
வன் பாரச் சகடம்-(3-1) என்கிறபடியே -எருதுகள் பூண்டு வலிக்கப் பட்ட
அதி பாரமான சகடம் அசூரா வேகத்தாலே நலிவதாக ஊர்ந்து மேலிட்டு வர –
முலை வரவு தாழ்த்து சீறி நிமிர்த்த திருவடிகளாலே –
அத்தை உருக் குலையும்படி உதைத்து –

திருடி இத்யாதி –
நெய்க்கு ஆசைப் பட்டு களவு கண்டு –
த்ரவ்யம் உடையவர்கள் கையில் அகப் பட்டுக் கொண்டு –
(கட்டுண்டு -கையும் மெய்யுமாகக் கொண்டு )

நந்தன் மனைவி இத்யாதி –
என் பிள்ளையை களவேற்றாதே-
உண்டாகில் கொண்டியோடே கண்டு பிடித்து கட்டிக் கொண்டு வாருங்கோள்-என்று
முன்பே சொல்லி வைக்கையாலே –
தாயாரான தன் முன்பே அவர்கள் கட்டோடு கொண்டு வர –

நந்தன் மனைவி –
பிள்ளை பெற்று வளர்த்தபடி அழகிதாய் இருந்தது என்று தன்னைத்  தானே மோதிக் கொண்டு –
அவர்கள் முன்னே தான் அலற்றி எல்லாம் தோற்றும்படி-
கடை கயிற்றாலே அடிக்கையாலே –
துள்ளித் துடிக்க துடிக்க அடி உண்டு –

அன்று இத்யாதி –
அடித்த அளவும் அன்றிக்கே –
ஓர் இடத்தில் போகாதபடி அவனை பிடித்துக் கட்டி –
அப்போது கட்டுண்டு இருந்தவன்
இன்று அப் பூச்சி காட்டுகின்றான் –

சோப்பூண்டு  ஆப்பூண்டு  என்கிற இவை
நீட்டி சொல்லிக் கிடக்கிறது-

————————————–

சர்வ ரஷகனானவன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் -என்கிறார்

செப்பிள மென் முலைத் தேவகி நங்கைக்குச்
சொப்படத் தோன்றி தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே வந்து அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-6 – –

பதவுரை

செப்பு–ஸ்வர்ண கலசங்கள் போன்ற
இள மெல் முலை–இளமையையும் மென்மையையுமுடைய முலைகளை யுடைய
தேவகி நங்கைக்கு–தேவகிப் பிராட்டிக்கு (மகனாக)
சொப்பட தோன்றி–நன்றாகப் பிறந்து
தொறுப்பாடியோம்–ஆய்ப்பாடியிலுள்ள வர்களாகிய நாங்கள்-(தொறு – பசு )
வைத்த–சேமித்து வைத்த
துப்பமும்–நெய்யையும்
பாலும்–பாலையும்
தயிரும்–தயிரையும்
விழுங்கிய–உட் கொண்ட
அப்பன்–ஸ்வாமி (உபகாரகன்)
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.

செப்பு இத்யாதி –
செப்பு போலே இருக்கிற சந்நிவேசத்தை உடையதாய் –
இளகிப் பதித்து – மிருதுவாய்   இருக்கிற முலைகளை உடையவளாய் –
ஆத்ம குண பூரணையான தேவகி பிராட்டிக்கு –

இப்போது இவளுடைய முலைகளை வர்ணிக்கிறது -கிருஷ்ணன் பிடித்து அமுது செய்கைக்கு
யோக்யமான முலைகள் என்று தோற்றுகைக்காக-
கம்ச பீதியாலே அவனை ஸ்தலாந்தரத்திலே போக விட்ட இத்தனை இறே உள்ளது –

நங்கை -என்கிறது –
மேல் விளைவது அறிய வல்ல அறிவும் –
பிள்ளையை அவஸ்த அனுகுணமாக நோக்க வல்ல ப்ரேமமும் –
பர சமர்த்தி பரத்தையும் –
முதலான குணங்களை உடையவள் ஆகையாலே –

சொப்படத் தோன்றி –
நன்றாகத் தோன்றி -அதாவது –
சர்வேஸ்வரனை பிள்ளையாக பெற வேணும் -என்று நோன்பு நோற்றுதற்க்கு ஈடாக –
ஜாதோசி தேவ தேவேச சங்க சக்ர கதா தர -என்கிறபடியே சர்வேஸ்வரத்வ சிஹ்னங்களான
திவ்ய ஆயதங்களோடு வந்து பிறந்து –
சபலம் தேவி சஞ்சாதம் ஜாதோஹம் யத் தவோ தராத் -என்று
அவளுடைய அபேஷித சம்விதானம் பண்ணுகை –

பிறந்து -என்னாதே –
தோன்றி -என்றது –
தேவகீ பூர்வ சந்த்யாயா மாவிர்ப்பூதம் -என்கிறபடியே –
(அச்யுத பானு -கிழக்குத் திக்குக்கும் ஸூ ர்யனுக்கும் உள்ள சம்பந்தம் போல் )
கர்ப வாச தோஷம் அற ஆவிர்ப்பித்தமையை பற்ற –
நைஷ கர்ப்பத் வமாபேதே நயோந்யா மவசத் ப்ரபு-(சபா பர்வம் )என்னக் கடவது இறே –

தொறுப்பாடியோம் –
தொறு -பசு
தொறுவர் -ஆயர் –
தொறுப்பாடியோம் என்றது -ஆய்ப்பாடியில் உள்ளேனமான நாங்கள் -என்றபடி –

வைத்த –
சேமித்து வைத்த –

துப்பம் இத்யாதி –
துப்பம்-நெய்-நெய்யையும் பாலையும் தயிரையும் அமுது செய்த –
எல்லாவற்றையும் சேர விழுங்கின என்கையாலே –
துப்பமும் பாலும் என்கிற இடத்தில் –
துஞ்சின நெய்யும் காய்ந்த பாலும் விவஷிதம் –

அன்றிக்கே –
விழுங்கிய -என்ற இது –
அமுது  செய்கிறதற்கு பர்யாயமான சொல்லாய் –
த்ரவ்ய அனுகுணமாக கொள்ளவுமாம்  –

அப்பன்-
உபகாரகன் –
இவ்வோ த்ரவ்யங்களை விரும்பி அமுது செய்த உபகாரம் தன்னை சொல்லுகிறது –
வந்து அப்பூச்சி காட்டுகின்றான் –

——————————————

தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
சித்தம் அனையாள் அசோதை இளம் சிங்கம்
கொத்தார் கரும் குழல் கோபாலர் கோளரி
அத்தன் வந்து என்னை அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 7- –

பதவுரை

(இந்தப் பிள்ளையை யசோதை)
தத்து கொண்டாள் கொல் ஓ–தத்த-ஸ்வீ க்ருத – புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ!
(அல்லது)
தானே பெற்றாள் கொலோ–ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ!
சித்தம் அனையாள்–(கண்ணனுடைய) மனக் கருத்தை ஒத்து நடப்பவளாகிய
அசோதை–யசோதையினுடைய
இளஞ்சிங்கம்–சிங்கக்குட்டி போன்றவனும்
நந்தகோபன் குமாரன் யசோதை இளம் சிங்கம் -திருப்பாவை
கொத்து ஆர் கருங்குழல்–பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும்
கோபாலர் கோன் அரி–இடையர்கட்கு (அடங்காத) மிடுக்கைக் கொண்ட சிங்கம் போன்றவனுமாகிய
மீண்டும் சிங்கம் இங்கு
அத்தன்–ஸ்வாமியான இவன்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

தத்துக் கொண்டாள் கொலோ இத்யாதி –
தத்த புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ-அன்றியே தானே மெய் நொந்து பெற்றாளோ-
அதாவது
அசோதை இளம் சிங்கம் -என்ன -இவள் தத்த ஸ்வீகாரம் செய்யக் கண்டிலோம் –
இவள் பெறுகிற போது இவளை பார்த்துப் பேணிக் கொண்டு இருந்த நாம் எல்லாம் இவள் பெறக் கண்டிலோம் –
அயர்ந்து உறங்கி விட்டோம் –
இவள் தான் -நான் பெற்றேன் -என்று சொல்லக் கேட்டோம் இத்தனை -இறே –

ததர்ச ச ப்ரபுத்தாச யசோதா ஜாதமாத்மஜம்-என்கிறபடியே
அவளும் அப்போது பெற்று மோகித்து கிடந்து
உணர்ந்து பின்பு இறே இவனைக் கண்டது –

இப்படி தான் சொல்லுகிறது
அதி லோகமான இவனுடைய ரூப குண சேஷ்டிதங்களைக் கண்டால் –
இவள் பிள்ளை -என்று -சொல்லப் போகாதபடி இருக்கையாலே –

அவள் தானும் –
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை என் மகனே என்பர் நின்றார் -என்று
இவனுடைய அதி மானுஷ  சேஷ்டிதங்களைக் கண்டால் -நீ என்னுடைய பிள்ளையாக கூடாது –
நடு நின்றவர்கள் உன்னை என்னுடைய பிள்ளை என்றே சொல்லா நின்றார்கள் -என்னும்படியாய் இறே இருப்பது –

சித்தம் இத்யாதி –
தீம்பு கண்டாலும் நியமியாதே -தன் நெஞ்சுக்கு ஒத்து நடக்கும்
யசோதை உடைய பிள்ளையாய் -பால சிம்ஹம் போலே அவளுக்கு அடங்காதே திரிகிறவன் –
நியமித்தாள்  ஆகிலும் -அங்கனும் தீமைகள் செய்வர் கொலோ நம்பீ ஆயர் மட மக்களை -என்று
இவன் தீம்பிலே கை வளரும்படியாக வாய்த்து நியமிப்பது –

அஞ்ச உரப்பாள் யசோதை ஆணாட விட்டு இட்டு இருக்கும் -(நாச்சியார் )-என்னக் கடவது இறே –
கர்வத்தாலும்
அநபிபவ நீயதையாலும் -இளம் சிங்கம் என்கிறது –

கொத்தார் இத்யாதி –
உகந்தார் உகந்தபடி சூட்டின பூம் கொத்துகளால் நிறைந்து இருப்பதாய் –
நீல மேக நிபம் அஞ்சன புஞ்ச ஸ்யாம குந்தளம் ( வரதராஜ ஸ்தவம் )-என்கிறபடியே
இருண்டு இருப்பதான திருக் குழலை உடையனாய் –
கோபாலர் கீழ் அடங்காமல் மிடுக்கை உடைத்தான சிம்ஹம் போலே செருக்கி மேணாணிதித்து இருக்குமவன்

அசோதை இளம் சிங்கம் –கோபால கோளரி –
தாய்க்கு அடங்காதவன் ஊருக்கும் அடங்கான் இறே –
கோள் -மிடுக்கு –

அத்தன் -ஸ்வாமி
கீழ் சொன்ன ஸ்வாபாவங்களுக்கு தோற்றுச் சொல்லுகிற வார்த்தை-

வந்து அப் பூச்சி காட்டுகின்றான் –

————————————–

(ராமன் -கமல பத்ராஜன் -கண் அழகு உடையவன் -கண்ணன் என்னலாமே )

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –

பதவுரை

கொங்கை–(முதுகில்) முலை யெழும்பினாற் போன்ற
வல்–பலிஷ்டமான
கூனி–கூனை யுடையளான மந்தரையினுடைய
சொல்–சொல்லை
கொண்டு–அங்கீகரித்து
எங்கும்–எல்லாவிடங்களிலுமுள்ள
குவலயம் துங்கம்–இப் பூமியில் (இருப்பவற்றுள்) சிறந்தனவான
கரியும்–யானைகளையும்
பரியும்–(அங்ஙனொத்த) குதிரைகளையும்
இராச்சியமும்–ராஜ்யத்தையும்
பரதற்கு–பரதாழ்வானுக்கு
அருளி–கொடுத்து விடல்
வல் கான் அடை–கொடிய காட்டை அடைந்த
அம் கண்ணன்–அழகிய கண்ணை யுடையனான இவன்
அப் பூச்சி காட்டுகின்றான்

கொங்கை இத்யாதி –
முதுகிலே முலை புறப்பட்டால் போலே -திரண்டு கிளர்ந்து வலிய கூனை
உடையளான மந்தரை உடைய வசனத்தை கொண்டு –

காட்டுக்கு போயிற்று பித்ரு வசனம் கொண்டாய் இருக்க –
குப்ஜை உடைய வசனம் கொண்டு என்பான் என்னில் –
ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே –
வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-

இவளுடைய வசனத்தாலே -கலக்கிய மா மனத்தனளாய் இறே கைகேசி வரம் வேண்டிற்று –
அதடியாக இறே சக்ரவர்த்தி போக சொல்லி வேண்டிற்றும் –
ஆகையால் எல்லாவற்றுக்கும் மூலம் இதுவாகையாலே இவளுடைய சொல் கொண்டு போனார் என்கிறது –

குவலய துங்க கரியும் –
பூமியில் யானைகள் எல்லாவற்றிலும் -விஞ்சின சத்ருஜ்ஜயன் முதலான யானைகளும் –
பரியும் -அப்படியே லோக விலஷனமான குதிரைகளும் –
இராச்சியமும் -அகண்டகமான ராஜ்யமும்
எங்கும் -இஷ்வாகூணா மியம் பூமி  ஸ்சைல வன காநனா-என்கிறபடியே
எழுந்து அருளுகிற காடு தானும் –
பரதற்கு அருளி –
கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –

வன் கானடை –
ஒருவரால் ப்ரேவேசிக்க அரிதான -வலிய காட்டை அடைந்த

அம் கண்ணன்-
அழகிய சுலபனானவன் -கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில்
முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு
காடேறப் போன படியை நினைத்து –
அழகிய சுலபன் -என்கிறது –

அன்றிக்கே –
ராம கமல பத்ராஷா-என்கிறபடி
அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –
அப்போது
ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே –
அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –

(அழகிய எளியவன் -கண்ணை உடையவன் என்று இரண்டு நிர்வாகங்கள்
அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
ராஜ்ய நாசம் இருள் வளர வளர ராமசந்திரன் ஒளி விஞ்சி இருந்ததே )

——————————————–

பதக முதலை வாய்ப்  பட்ட களிறு
கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த
அதகன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-9 – –

பதவுரை

பதகம்–பாதிக்குந் தன்மையை யுடைய
முதலை–முதலையின்
வாய்–வாயிலே
பட்ட–அகப்பட்ட
களிறு–ஸ்ரீகஜேந்த்ராழ்வான்
கதறி–(தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு
கை கூப்பி–கையைக் குவித்துக் கொண்டு
என் கண்ணா கண்ணா என்ன–என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க
(முக் கரண வியாபாரங்கள் )
அங்கு–அப்போதே
உதவ–(அந்த யானைக்கு) உதவும்படி
புள் ஊர்ந்து–பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று
உறு துயர்–(அந்த யானையின்) மிக்க வருத்தத்தை
தீர்த்த–போக்கின
அதகன்–(ஆஸ்ரித ரக்ஷணத்தில்) மிடுக்கை யுடையவன்
வந்து – அப் பூச்சி காட்டுகின்றான்-.

பதக முதலை -பதகம் -கொடுமை -கொடியவாய்  விலங்கு–(பெரிய திருமொழி -5-8-)-என்னக் கடவது இறே–
அதன் விடத்தினுக்கு அனுங்கி அழுங்கிய யானை (திருப்பள்ளி எழுச்சி )-என்னும்படி
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை நோவு படுத்தின கொடுமையை சொல்கிறது –

அன்றிக்கே
பாதகம் -என்கிறதை பதகம் -என்று குறைத்து கிடக்கிறதாய்-
பாதகத்தை உடைத்தான முதலை என்னவுமாம் –
அதாவது
சாபோபஹதமாய் வந்து கிடந்தது இறே-
இம் முகத்தாலே  தன்னுடைய சாப மோஷம் என்று அறிகையாலே தன் கார்ய சித்தி அளவும்
இவன் காலைப் பிடித்த பிடி நழுவ விடாது என்றபடி –

வாய்ப் பட்ட களிறு –
அதன் வாயிலே அகப்பட்ட யானையானது –
தன்னிலம் அல்லாமையாலே -ஒரு நீர் புழுவின் கையிலே அகப்பட்டது ஆய்த்து-
வெளி நிலம் ஆகில் இதின் அருகே வர மாட்டாது இறே அது –

கதறி இத்யாதி –
அதன் வாயிலே அகப்பட்ட இடத்தில் –
நம்முடைய பலத்தாலே தள்ளி கரை ஏறுகிறோம் -என்று –
கஜ ஆகர்ஷதே தீரே க்ரஹா ஆகர்ஷதே ஜலே-(விஷ்ணு தர்மம் ) -என்கிறபடியே –
ஆயிர தேவ சம்வத்சரம் அது நீருக்கு இழுக்க –
தான் கரைக்கு இழுக்க சென்ற இடத்தில் –
அதுக்கு தன்னிலமாகையாலும் –
அபிமத சித்தியாலும் –
முழு வலி முதலை (பெரிய திருமொழி -திருவரங்க பதிகம் )-என்னும்படி பலம் அதிசயித்து –
தனக்கு தன்னிலம் அல்லாமையாலும் –
அபிமத அலாபத்தாலும் –
பலம் ஷீணமாய் -துதிக்கை முழுத்தும் படியாகையாலே –
இனி நம்மால் செய்யல் ஆவது ஒன்றும் இல்லை -என்று –

பரமா பதமா பன்னோ மனசா சிந்தயத்தரிம் -என்கிறபடியே –
அத் தசையில் சர்வேஸ்வரனே தனக்கு ரஷகனாக நினைத்து –
தன் கையை எடுத்து அஞ்சலி பண்ணி –
தன் ஆர்த்தி எல்லாம் தோற்றும்படி
கூப்பிட்டு கொண்டு -எனக்கு நிர்வாகனானவனே என்று பல காலும் சொல்ல –
(முக்கரண பிரபத்தி நடந்ததே )

நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று கூப்பிட்டவனாக அருளிச் செய்தார் திருமங்கை ஆழ்வார் –
இவர் -என் கண்ணா கண்ணா என்று கூப்பிடவனாக அருளிச் செய்தார் –
மூலேதி முக்த பதம் ஆலபதி த்வி எந்தரே-என்று கொண்டு -ஆதி மூலமே -என்று கூப்பிட்டானாக பௌராணிகர் சொன்னார்கள் இறே –
இவை தன்னில் சேரும்படி என் என்னில் –

மூலம்-என்கிற இடத்தில்
அசாதாரண விக்ரக விசிஷ்டனான ஆகாரத்தை நினைத்து கூப்பிட்டான் ஆகையாலே
அதுக்கு பர்யாய சப்தங்களை இட்டு ஆழ்வார்கள் அருளி செய்தார்கள் –
ஆகையால் எல்லாம் சேரக் குறை இல்லை –

உதவ இத்யாதி –
இந்த ஆர்த்த த்வனி திருச் செவிப்பட்ட போதே திருப் படுக்கையிலும் நின்றும் பதறி எழுந்து இருந்து –
அதந்த்ரித்த சமூபதி ப்ரஹித ஹஸ்தம்–(ரங்கராஜ ஸ்தவம் )-இத்யாதிப்படியே
சேனை முதலியார் திருக் கை கொடுக்கவும் -பற்றாமல் –
திருவடி நிலை கோத்து எழுந்து அருளுகையும் இன்றிக்கே
வெறும் தரையிலே பத்து எட்டு அடி இட்ட பதற்றத்தை கண்டு –

இதுக்கடி என் -என்று பயப்பட்டு திவ்ய அந்தபுரம் கை நெரிக்க –
பெரிய திருவடியை பண் செய்து ஏறப் பெறாமல் -வெறும் புறத்தில் மேற் கொண்டு –
அந்த ஆர்த்திக்கு உதவ வேணும் -என்னும்
அதைப் பற்ற அவனை பிரேரித்து விரைய நடத்திக் கொண்டு சென்று –
அந்த பொய்கையிலே முதலையின் கையில் அகப்பட்டு –
ஸ்ரீ கஜேந்த்திரன் பட்ட அதி மாத்ர துக்கத்தைப் போக்கின –

ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு துக்கமாவது –
நாஹம் களேபரஸ் யாஸ்ய த்ராணார்த்தம் மது சூதனா -கரஸ்த்த கமலான்யேவ பாதயோர் அர்ப்பிதம் ஹரே -என்கிறபடியே
கையிலே பூ செவ்வி அழியாமல் திருவடிகளில் சாத்தப் பெறுகிறோம் இல்லோம் என்னுமது –

அதகன் -மிடுக்கன்

இப்படி ஆஸ்ரித ரஷணம் பண்ணின சக்தி விசேஷத்தை சொல்லுகிறது –

வந்து அப் பூச்சி காட்டுகின்றான் –

——————————————

வல் ஆள் இலங்கை மலங்க சரம் துரந்த
வில் ஆளானை விட்டு சித்தன் விரித்த
சொல் ஆர்ந்த அப் பூச்சி பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே -2- 1-10 – –

பதவுரை

வல்லாள்–பலசாலிகளான வீரர்களை யுடைய
இலங்கை–லங்கையானது
மலங்க–பாழாம்படி
சரம் துரந்த–அம்பைச் செலுத்திய
வில் ஆளனை–வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்த–பரக்க கூறிய
சொல் ஆர்ந்த–சொல் நிரம்பிய
அப் பூச்சி பாடல் இவை பத்தும்–அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்க வல்லவர்
போய்–(அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய்
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்திலே
மன்னி இருப்பர்–நித்ய வாஸம் பண்ணப் பெறுவர்.

வல் ஆள் இலங்கை –
வலிய ஆள்களை உடைத்தாகையாலே -ஒருவரால் அடக்க ஒண்ணாத
பரிகார கட்டு உடைத்தான இலங்கை யானது –
ராவணன் மதிக்கும்படியான ஆண் பிள்ளைகள் வர்த்திக்கிற ஊர் இறே

மலங்க –
செருப்பும் தேவாரமும் ஒக்க கட்டி போக்கிடம் தேடி மலங்கும்படியாக –
(தேவாரமும்-ராக்ஷஸர்கள் ஆதரிக்கும் தெய்வங்கள் )

சரம் துரந்த வில் ஆளானை –
திருச் சரங்களை மென் மேலும் நடத்தின வில்லை உடையவனை –
இத்தால் ஈஸ்வரத்வப் பிடாரால் அன்றிக்கே அவதாரத்துக்கு அனுகுணமாக நின்ற அம்பாலே
அவ்வூரை அடர்த்த ஆண் பிள்ளை தனைத்தை சொல்கிறது –

இத் திருமொழி கிருஷ்ண அவதார விஷயமாக இருக்க –
நிகமத்தில் இப்படி அருளிச் செய்தது –
அவ் வதாரத்துக்கும் இவ் வவதாரத்துக்கும் உண்டான ஐக்யத்தை பற்ற இறே –
வன் கானடை அம் கண்ணன் (8-பாசுரத்தில் )-என்று இந்த ஐக்கியம் கீழே சொல்லப்பட்டது இறே –

விட்டு சித்தன் விரித்த –
பெரியாழ்வார் விஸ்தரேண அருளிச் செய்தவையான –

சொல் ஆர்ந்த இத்யாதி –
சொல் நிரப்பத்தை உடைத்ததாய் அப் பூச்சி விஷயமான
பாட்டுகளாய் இருக்கிற இப் பத்தையும் -ஏதேனும் ஒருபடி  வல்லவர்கள் –

சொல் ஆர்ந்த என்ற இது –
அதிகரிப்பார்க்கு இதன் அர்த்தத்தில் போக வேண்டா –
சப்த ரசம் தானே அமையும் என்னும்படி இருக்கும் என்னவுமாம் –

வல்லார் என்றது
சாபிப்ரயமாக வல்லார் என்னவுமாம் –

போய் இத்யாதி –
இதனுடைய வ்யவசாயமே ஹேதுவாக –
அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் –
ஸ்ரீ வைகுண்டத்திலே அவனை அனுபவித்து –
மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு –
யாவத் காலமும் இருக்கப் பெறுவர்-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: