ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-9–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

அவதாரிகை –
கீழில் திருமொழியில் -யசோதை பிராட்டி -இவனுடைய சைசவ அனுகுணமாக –
முன்னே ஓடி வந்து மேல் விழுந்து -அணைத்து கொள்ளும் ரசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு –
அச்சோ என்கிற தன்னுடைய யுக்தியாலும் –
அதுக்கு அனுகுணமான தன்னுடைய ஹஸ்த முத்ரையாலும்
வந்து அணைத்து கொள்ள வேணும் என்று அவனை அபேஷித்து-
அந்த ரசத்தை அனுபவித்தபடியை –
தம்முடைய பிரேம அனுகுணமாக தாமும் அப்படியே அபேஷித்து அனுபவித்தாராய் நின்றார் –

அவ்வளவு அன்றிக்கே –
அவன் தன் உகப்பாலே ஓடி வந்து முதுகிலே அணைத்து கொள்ளும் –
சேஷ்டித ரசத்தையும் -அனுபவிக்க ஆசைப்பட்டு –
புறம் புல்குவான் -என்று –
அது தன்னை அவனைக் குறித்து அபேஷித்து -அவனும் அப்படி செய்ய –

அவள் அனுபவித்த  பிரகாரத்தை –
அவ்வளவும் அல்லாத பிரேமத்தை உடைய தாம் அந்த சேஷ்டிதத்தை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே –
அவனுடைய மேன்மையையும் நீர்மையையும் சொல்லிப் புகழ்ந்து கொண்டு –
புறம் புல்குவான் புறம் புல்குவான் -என்று பல காலும் அபேஷித்து –
தத் காலம் போலே தர்சித்து ப்ரீதராய் அனுபவிக்கிறார் இத் திருமொழியில்-

(வேண்டிக்கொள்வது விட தானாக கட்டிக் கொள்பவன் –
அவன் தன்மையையே சொல்லுவதே -இதன் தன் ஏற்றம் )

——————–

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையின் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச்  சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் -1-9-1-

பதவுரை

என் குட்டன்–என் பிள்ளை
வட்டு நிடுவே–(இரண்டு நீல ரத்ந) வட்டுகளின் நிடுவே
வளர்கின்ற–வளர்த்துக் கொண்டிருப்பதான
மாணிக்கம் மொட்டு–இந்திர நீலமயமான அரும்பினுடைய
நுனையில்-நுனியில்
முளைக்கின்ற–உண்டாகின்ற
முத்தே போல்–முத்தைப் போல
சொட்டு சொட்டு என்ன–சொட்டுச் சொட்டென்ற ஓசை யுண்டாகும்படி
(அம் மாணிக்க மொட்டு)
துளிர்க்க துளிர்க்க–பல தரம் துளியா நிற்க
வந்து–ஓடி வந்து
என்னை-என்னுடைய
புறம்–முதுகை
புல்குவான்–கட்டிக் கொள்வான்;
கோவிந்தன் என்னை புறம் புல்குவான்

இரண்டு நீல ரத்ன வட்டின் நடுவே வளரா நிற்ப்பதொரு நீல ரத்னத்தால் உண்டான
மொட்டினுடைய அக்ரத்திலே அரும்பியா நிற்கிற முத்துக்கள் போலே –

நீல ரத்ன மொட்டு என்றது –
நிறத்தையும் ஆகாரத்தையும் பற்ற –

சொட்டு இத்யாதி –
உள்ளினின்றும் புறப்படுகிற ஜல பிந்துக்கள் இற்று முறிந்து சொட்டு சொட்டு
என்னப் பலகாலும் துளியா நிற்க –
சொட்டு சொட்டு என்கிற இது அநுகாரம் –

என் குட்டன் இத்யாதி –
என் பிள்ளை வந்து என்னைப் புறம் புல்குவான்

கோவிந்தன் –
சுலபனானவன் -என்னைப் புறம் புல்குவான் –

புறம் என்று முதுகு –
புல்குதலாவது -தழுவுகை –

புல்குவான்
என்று அபேஷிக்கை-

அன்றிக்கே –
புல்குவான் என்றது
புல்குகிறவன் என்றபடி –
அப்போது
இத்தலை அபேஷிக்கை அன்றிக்கே –
அவன் தானே வந்து புல்குகிறபடியை சொல்லுகிறதாம் –
இது ஆழிப் பிரான் புறம் புல்கிய –
என்கிற நிகமத்துக்கு மிகவும்  சேரும் –

(உய்ய உலகு தொடக்கி அபேக்ஷிதங்கள் தான் -பிரார்த்தனை -ஸ்வரூப கீர்த்தனை
இங்கு புறம் புல்குபவர் இயல்பு சொல்வது நிகமத்துக்கு மிகவும்  சேரும் –
அவனாக -நிர்ஹேதுகமாக வந்து புறம் புழங்குவது அதிக சுவை
தொடர் சங்கிலி -அவன் தானே
பிரார்த்திக்க -தளர் நடை நடவானோ பிரார்த்தனை பத்திலும் உண்டே ‘
இதில் கடைசிப்பாட்டில் மாறி -புறம் புல்குவான் இல்லாமல் புறம் புல்கிய இருப்பதால் -இதுவே கொள்ள வேண்டும் –
முந்திய யோஜனை பிரகரணத்துக்கு சேரும் )

—————————-

கிண் கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினில்
கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர்  கட்டித்
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1 9-2-

பதவுரை

என் கண்ணன்–என் கண்ணபிரான்
கிண்கிணி–அரைச் சதங்கையை
கட்டி–கட்டிக் கொண்டும்
கிறி–சிறுப் பவள வடத்தை
கையினிலே–கையிலே
கட்டி–கட்டிக் கொண்டும்
கங்கணம்–தோள் வளையை
இட்டு–(தோள்களில்) சாத்திக் கொண்டும்
கழுத்தில்–திருக் கழுத்திலே
தொடர்–சங்கிலியை
கட்டி–அணிந்து கொண்டும்
தம் கணத்தாலே–(இன்னுமணிந்து கொண்டுள்ள) திருவாபரணங்களின் திரளோடுங்கூட
சதிர் ஆ நடந்து வந்து–அழகாக நடந்து வந்து
என்னை புறம் புல்குவான்-;–எம்பிரான் என்னை புறம் புல்குவான் –

கிண் கிணி இத்யாதி –
திரு வரையிலே கிண் கிணியை கட்டி –
திரு முன் கையிலே கிறியைக் கட்டி –
கிறி -சிறுப் பவள வடம் –

கங்கணம் இத்யாதி –
திருத் தோள் வளை இட்டு திருக் கழுத்திலே சங்கிலியாகிற ஆபரணத்தை சாத்தி –

தன் கணத்தாலே –
திரு ஆபரணம் தன்னுடைய திரளோடே-திரு ஆபரண பிரகரணம் ஆகையாலே –
அனுக்தமான திரு ஆபரணங்களையும் கூட்டி -கணம் -என்கிறது –

அன்றிக்கே –
தன் கண்ணாலே என்னைக் கடாஷித்து கொண்டு என்னுதல்-
அத்து -சாரியை

சதிரா நடந்து வந்து –
நான் அறியாதபடி நடந்து வந்து –
அன்றிக்கே –
அழகியதாக நடந்து வந்து என்னுதல் –
(இவன் புறம் புல்க வந்ததைக் கண்டவர்கள் இவன் அழகைச் சொல்லக் கேட்டு சொன்னாள் என்னுதல் )

என் கண்ணன் –
எனக்கு ஸூலபனானவன் -என்னைப் புறம் புல்குவான்

எம்பிரான் –
எனக்கு ஸ்வாமி யானவன் என்னைப் புறம் புல்குவான்-

—————————————–

கத்தக் கதித்து கிடந்த பெரும் செல்வம்
ஒத்து பொதிந்து கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
கொத்து தலைவன் குடி கெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்கள் ஏறு என்னைப் புறம் புல்குவான் -1 9-3 –

பதவுரை

கத்தக் கதித்து கிடந்த–மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த
பெருஞ்செல்வம்–மிகுந்த ஐச்வர்யத்தை
ஒத்து–(தன் பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து
பொதிந்து கொண்டு–மனம் பொருந்தி யிருக்க-
உடலால் ஒத்து- மனசால் ஏற்றுக் கொண்டு -என்றபடி
உண்ணாது–அநுபவியாமல்
மண்–பூமியை
ஆள்வான்–(தான் அத்விதீயனாய்) ஆள வேணுமென்று நினைத்தவனான
கொத்து தலைவன்–(தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய) திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன்
குடி கெட–(தன்) குடும்பத்தோடு பாழாம்படி
தோன்றிய–திருவவதரித்த
அத்தன்–ஸ்வாமி
வந்து என்னை புறம் புல்குவான்-;
ஆயர்கள் ஏறு–இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான்
என் புறம் புல்குவான்-.

அஹம் மமதைகளால்-உனக்கு எனக்கு என்று பிணக்கும் படி-கொழுத்துக் கிடந்த
மகத் ஐஸ்வர்யத்தை –
கதிப்பு -கொழுப்பு –

அன்றிக்கே –
தக்கத் தடித்து -பக்கப் பருத்து -என்னுமா போலே –
கத்தக் கதித்து என்று ஒரு முழு  சொல்லாய் –
மிகவும் கொழுத்து கிடந்த மகத் ஐஸ்வர்யத்தை -என்னவுமாம் –

ஒத்து இத்யாதி –
பந்துக்களான பாண்டவர்களோடு கூடி நெஞ்சு பொருந்திக் கொண்டு ஜீவியாதே –

மண் ஆள்வான் –
பூமிப் பரப்பு அடங்கலும் தானே ஆள்வானாக பாரித்து இருந்த –

கொத்துத்  தலைவன் –
துச்சாச நாதிகளான ப்ராதக்களும் பந்துக்களுமான திரளுக்கு –
நிர்வாகனாக கொண்டு –
பிரதானனாய் இருந்துள்ள துரியோதனுடைய –

குடிகெட-
குலமாக நசிக்கும்படி –

தோன்றிய இத்யாதி –
பார்த்தம் ரதிநம் ஆத்மாநஞ்ச சாரதிம் சர்வ லோக சாஷிகம் சகாரா -என்கிறபடியே
பார்த்தனுக்கு சாரதியாய் கொண்டு –
பிரகாசனான ஸ்வாமி யானவன்

வந்து என்னை புறம் புல்குவான் –

ஆயர்கள் இத்யாதி –
கோபர்களுக்கு எல்லாம் தலைவன் ஆனவன் –
என்னை புறம் புல்குவான் –

——————————————

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயருக்காகி தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர்
ஊர்ந்தவன் என்னை புறம் புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9 4- –

பதவுரை

நாந்தகம்–நந்தகம் என்னும் வாளை
ஏந்திய–கையிலணிந்துள்ள
நம்பி–பெரியோனே!
ஆஸ்ரித விளம்ப அஸஹிஷ்ணுத்வத்தாலே
சரண்–(நீ எனக்கு) ரக்ஷகன்
என்று–என்று சொல்லி
தாழ்ந்த–(தன்னை) வணங்கிய
தனஞ்சயற்கு ஆகி–அர்ஜுநனுக்குப் பக்ஷபாதி யாயிருந்து
தரணியில்-இப் பூமியிலே
வேந்தர்கள்–(எதிரிகளான) ராஜாக்கள்
உட்க–அஞ்சிக் கலங்கும்படி
விசயன்-அந்த அர்ஜுநனது
மணி திண் தேர்–அழகிய வலிய தேரை
ஊர்ந்தவன்–(ஸாரதியாயிருந்து) செலுத்தின இவன்
என்னை புறம்புல்குவான்-;
உம்பர்–நித்ய ஸூரிகளுக்கு
கோன்–நிர்வாஹகனான இவன்
என்னை புறம் புல்குவான்-.

நாந்தகம் இத்யாதி –
நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை-
ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் –
திருக் கையில் தரித்து கொண்டு -ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற
நீ ரஷகனாக வேணும் என்று –

தாழ்ந்த இத்யாதி –
பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்

தரணியில் இத்யாதி –
பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும்
தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு –
நாம்  இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ –
என்று நெஞ்சு உளுக்கும்படியாக

விசயன் இத்யாதி –
அர்ஜுனனுடைய அழகியதாய் –
திண்ணியதான தேரை
சாரதியாய் நின்று நடத்தினவன் –
என்னைப் புறம் புல்குவான் –

உம்பர் இத்யாதி –
இப்படி  துர் வர்க்கத்தை நிரசிக்கையாலே -பூ பாரத்தை போக்குகைக்காக
அவதரித்து அருள வேணும் என்று -அபேஷித்த தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே –
என்னைப் புறம் புல்குவான் –

———————————————

வெண்கல பத்திரம் கட்டி விளையாடிக்
கண் பல செய்த கரும் தழைக் காவின் கீழ்
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமணன் என்னைப் புறம் புல்குவான் – 1-9-5- –

பதவுரை

பண்டு–முன்னொரு காலத்திலே
வெண்கலம் பத்திரம்–வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை
கட்டி–(அரையிற்) கட்டிக் கொண்டு
விளையாடி–விளையாடி
பல கண் செய்த–பல பீலிக் கண்களைக் கொண்டு செய்யப்பட்ட
கரு தழை–பெரிய குடையாகிற
காவின் கீழ்–சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று)
பல பண் பாடி–(அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப் பாடிக் கொண்டு
பல்லாண்டு இசைப்ப–மங்களாசாஸநம் செய்ய
பல மண் கொண்டான்–பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன்
புறம் புல்குவான்-;
வாமனன் என்னை புறம் புல்குவான்-.

வெண்கலம் இத்யாதி –
வெண்கலத்தாலே பண்ணின பத்திரத்தை ( இலையை )-ஜாத் உசிதமாக –
திருவரையில் கட்டிக் கொண்டு விளையாடி –

கண் பல இத்யாதி –
பல பீலிக் கண்களையும் இட்டு கட்டின -பெரிய குடையாகிற சோலை நிழலின் கீழே –
கண் -பீலிக் கண் -மயில் கண்
பெய்தால்-அத்தை இட்டு சமைத்தலை சொல்லுகிறது
கருமை-பெருமை
தழை-குடை
அத்தைக் கா என்கிறது –
பீலியினுடைய தழைவால் வந்த குளிர்த்தியைப் பற்ற –

அன்றிக்கே –
கண் பல பெய்து -என்ற பாடமான போது-
கரும் தழை கண் பல பெய்து -என்று அன்வயித்து –
பல பீலிக் கண்களையும் திரு முடியில் அலங்காரமாக சாத்தி என்று -பொருளாகக் கடவது –

கரும் தழை -பீலிப் பிச்சம்
கண் என்றது அதனுடைய கண்
தலையிலே பீலித் தழை கட்டுகை ஜாத் உசித வர்த்தி இறே

காவின் கீழ் –
இப்படிகொத்த அலங்காரத்தோடே-சோலை நிழலிலே விளையாடி என்கை-

பண் இத்யாதி –
சங்கைஸ் ஸூராணாம்-என்றும்
திசை வாழி எழ -என்றும் சொல்லுகிறபடியே –
திக்குகள் தோறும் அனுகூலரானவர்கள் பண்கள் பலவற்றாலும் பாடி மங்களா சாசனம் பண்ண –
இசைப்ப என்ற -சொல்ல என்றபடி –

பண்டு இத்யாதி –
மகா பலி பக்கலிலே அர்த்தியாய் சென்று நீரேற்ற அக் காலத்திலே –
பூமி தொடக்கமான சகல லோகங்களையும் திருவடிகளாலே அளந்து கொண்டவன் –
புறம் புல்குவான் –
வாமனன் –
அளப்பதற்கு முன்பே இரக்கைக்கு வாமனன் ஆனவன் என்னைப் புறம் புல்குவான் –

——————————————-

சத்திரம் ஏந்தி தனியொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனைக்
கத்திரிவர்  காண காணி முற்றும் கொண்ட
பத்திர ஆகாரன் புறம் புல்குவான் பார் அளந்தான் என் புறம் புல்குவான் -1-9-6 –

பதவுரை

உத்தர வேதியில் நின்ற–உத்தர வேதியிலிருந்த
ஒருவனை–(ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே
சத்திரம்–குடையை
ஏந்தி–(கையில்) பிடித்துக் கொண்டு
தனி–ஒப்பற்ற
ஒரு மாணி ஆய்–ஒரு ப்ரஹ்மசாரி வாமனனாய் (போய்)
தனி ஒரு -அஸாஹயா -அத்விதீயம்
கத்திரியர்–(அவனுக்குக் கீழ்ப் பட்ட) க்ஷத்ரியர்கள்
காண–பார்த்துக் கொண்டிருக்கையில்
காணி முற்றும்–உலகம் முழுவதையும்
கொண்ட–(நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட
பத்திரம்–விலக்ஷணமான-மங்களகரமான –
ஆகாரன்–வடிவை யுடையனான இவன்
புறம் புல்குவான்-;
பார்–பூமியை
அளந்தான்–(திரிவிக்கிரமனாய்) அளந்த இவன்
என் புறம் புல்குவான்-.

சத்திரம் இத்யாதி –
சத்ரத்தையும் கையில் தரித்து கொண்டு –
அசஹாயனாய் –
க்ர்ஷ்ணாஜினமும் யக்ஜோபவீதமும் மூஞ்சியும் ஆன விநீத வேஷத்தாலும்
வடிவு அழகாலும் –
அத்வீதியமான வாமனனாய் கொண்டு
யக்ஜவாடத்திலே சென்று –

உத்தரம் இத்யாதி –
அத்வீதியமான ஒவ்தார்ய குணத்தை உடையவனாய் –
உத்தர வேதியிலே நின்ற மகா பலியை –

கத்திரிவர்  இத்யாதி –
ராஜாக்கள் எல்லாரும் காண தனக்கு ஸ்வம்மான பூமியை
அவன் தன்னதாக கொண்டு இருக்கையாலே –
தான் அர்த்தியாய் உதகம் ஏற்று -பரிகிரகித்த –

பத்திர ஆகாரன் –
பத்ரமான ஆகாரத்தை உடையவன் –
விலஷணமான வடிவை உடையவன் –
மங்களகரமான ஆகாரம் -வடிவை உடையவன் –
புலன் கொள் மாணாய்-( திருவாய் -4-5-)-என்றார் இறே –
(மண் கொண்டது பின் புலன்களைக் கொண்டது முன்னே )

பார் அளந்தான் இத்யாதி –
முன்பு இரந்த பூமியை திருவடிகளால் அளந்து கொண்டவன்
என் புறம் புல்குவான் –

———————————————–

பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்த திரு வயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆழியான் என்னைப் புறம் புல்குவான் -1-9 7- –

பதவுரை

பொத்த உரலை–(அடியில்) ஓட்டையாய் விட்டதொரு உரலை (கொண்டு வந்து)
கவிழ்த்து–தலை கவிழ்த்துப் போட்டு
அதன் மேல் ஏறி–அவ் வுரவின் மேலேறி
தடாவினில்–மிடாக்களிலே உள்ள
தித்தித்த பாலும்–மதுரமான பாலையும்-திரட்டுப் பாலையும் –
வெண்ணெயும்–வெண்ணெயையும்
திரு வயிறு ஆர்–வயிறு நிரம்ப
மெத்த விழுங்கிய–மிகுதியாக விழுங்கின
அத்தன்-தலைவன்
வந்து என்னை புறம் புல்குவான்-;
ஆழியான்–(இப்படிக் களவு கண்டு உண்கையில்) ஆழ்ந்து தேறியவன்
என்னை புறம் புல்குவான்-.

பொத்த இத்யாதி –
பால் வெண்ணெய் முதலான -த்ரவ்யங்களை களவிலே ஸ்வீ கரித்து திரிய புக்கவாறே –
அவற்றை இவனுக்கு எட்டாதபடி வைக்கக் கடவோம் -என்று
உறி மேல் உயர சேமித்து வைக்க –

அடிப் பொத்து உபயோக யோக்கியம் இன்றிக்கே எல்லாரும் உபேஷித்து கிடந்த ஒரு உரலை
உருட்டிக் கொண்டு போய் –
உறிக் கீழே கவிழ விட்டு –
அதன் மேல் ஏறி நின்று –

நல்ல உரலானால்- நடுவே தேடி வருபவர்கள் உண்டாய் இருக்குமே –
என்று ஆய்த்து-
பொத்த உரலைத் தேடி இட்டுக் கொண்டது –

தித்தித்த இத்யாதி –
காய்ச்சி திரட்டி தடாவினில் வைத்த ரஸ்யமான பாலையும் –
கடைந்து தடாவினில் சேர்த்து வைத்த வெண்ணெயும் –

தடாவினில் என்கிற இது
கீழும் ,மேலும் அந்வயித்து கிடக்கிறது –

விழுங்கிய என்கையாலே
பாலும் திரட்டு பால் என்றே கொள்ள வேணும் –

(பால் உண்ணோம் -நெய் உண்ணோம் –
ஸ்த்ரீகள் பார்த்தே வழக்கம் இல்லையே கண்ணன் பிறந்த பின்பு –
பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் -பாசுரம் உண்டே )

மெத்த இத்யாதி –
இவற்றை அமுது செய்கிற இடத்தில் -அபிநிவேச அதிசயத்தாலே –
மிகவும் திரு வயிறு நிறைய அமுது செய்த –

அத்தன் –
ஸ்வாமி யானவன் –
கீழ் சொன்ன விருத்தாந்த விசேஷத்தை பற்ற உகந்து சொல்லுகிற வார்த்தை –
வந்து என்னைப் புறம் புல்குவான் –

ஆழியான் –
க்ரித்ரிமத்தில் மிகவும் அவஹாகனம் உடையவன் என்னுதல்-
திரு ஆழியை திருக் கையிலே உடையவன் என்னுதல் –
திரு ஆழியை உடையவன் என்ற போது-சர்வாதிகனானவன் கிடீர்
ஷூத்ரரைப் போலே இப்படி செய்தவன் என்ற கருத்து –
என்னைப் புறம் புல்குவான் –

—————————————————–

மூத்தவை காண முது மணல் குன்று ஏறி
கூத்து வந்து ஆடி குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1 9-8 – –

பதவுரை

மூத்தவை–வயசு சென்ற இடைச் சனங்கள்- வ்ருத்த ஜன ஸபை -ஆச்சார்யம் வயசு ஞானம் இவற்றால் மூத்தவை
காண–காணும் படியாக
முது மணல் குன்று ஏறி–நெடு நாளாய் குவிந்து மேடாயிருந்த மணற்குன்றின் மேலேறி யிருந்து
வாய்த்த–தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும்படி கிட்டின
மறையோர்–ப்ரஹ்ம ரிஷிகள்
வணங்க–தன்னைக் கண்டு வணங்கவும்
இமையவர்–தேவர்கள்
ஏத்த–ஸ்தோத்ரஞ்செய்யவும்
குழலால் இசைபாடி–வேய்ங்குழலினால் ராகம் பாடிக் கொண்டும்
உவந்து–ஸந்தோஷித்து
கூத்து ஆடி–கூத்தாடியும் நின்று
வந்து என்னை புறம் புல்குவான்-;
எம்பிரான் என்னை புறம் புல்குமான்-.

மூத்தவை காண –
வயசாலும் ஜாதி உசிதமான அறிவாலும் சீலத்தாலும் வடிவாலும் மூத்த கோப ஜனந்களானவை-
தன்னுடைய சேஷ்டித ரசத்தை காணும்படியாக –

அன்றிக்கே –
மூத்த என்கிற இத்தை மூத்து என்று கடை குறைத்தலாய் -அவை என்று சபையாய்-
வருத்த ஜன சபை என்னுமாம் –

முது மணல் இத்யாதி –
எல்லாருக்கும் தெரியும்படியான மணல் குன்றின் மேல் ஏறி
முதுமையால்-கிளர்த்தியை சொல்லுகிறது

கூத்து இத்யாதி –
நிலவறையில் கிடக்கிற பெண்களும் விட்டு வந்து காண்கைக்கு உறுப்பு
ஆகையாலே -ப்ரீதனாய் கொண்டு கூத்தாடி –

குழலால் இசை பாடி –
திருப் பவளத்தில் வைத்து ஊதுகிற குழல் வழியே இசைகளைப் பாடி –
குழலின் த்வனி  வாய்ப்பு இறே மூத்தவை அறிவது –

தான் நினைத்த பெண்களுடைய பெயரை சொல்லி அழைக்கையும்-
வெறுத்தவர்களை கால் கட்டி பொறை கொள்ளுகையும் –
முதலான சப்த விசேஷங்கள் –
இவனோடு பழகி போரும் பெண்களுக்கு இறே தெரிவது –

குழலால் இசை பாடி -கூத்து வந்தாடி -என்று அந்வயித்து கொள்வது –

குழலோசையாலே அபிமதரைத் திரட்டி –
அவர்களைக் காணப் பெற்றோமே – என்று உகந்து -கொண்டு ஆய்த்து –
கூத்தாடுவது –

மரக்கால் கூத்து -குடக் கூத்து -என்று விசேஷியாமையாலே-
இவற்றில் ஏதேனும் ஒரு கூத்தாகக் கடவது –

வாய்த்த இத்யாதி –
ஸ்வ சேஷ்டிதம் காண ஆசைப் பட்டு தன்னை அடி ஒத்தி திரியும் –
விலஷணரான ரிஷிகள் ஆனவர்கள் -இந்த சேஷ்டிதத்தில் தோற்று வணங்க –
தேவர்கள் ஆனவர்கள் இத்தை கண்டு வித்தராய் நின்று ஸ்துதிக்க –

அன்றிக்கே –
வாய்த்த என்ற வல் ஒற்றை  மெல் ஒற்றாக்கி -வாய்ந்த என்றாய் –
மறையோர் என்கிறது –நிலவறையிலே மறைந்து நின்றவர்கள் என்றபடியாய்-
முன்பு நிலவறையிலே மறைந்து கிடந்தது -குழலோசை வழியே கிட்டின பெண்கள் –
திருவடிகளின் மார்த்வத்தை நினைத்து -இந்த கூத்தை அமைக்கைக்காக வணங்க –
அநிமிஷராய் கூத்தை பார்த்து கொண்டு இருந்த -முன்பு சொன்ன வ்ருத்த ஜனங்கள்
வித்தராய் ஸ்துதிக்கும் படியாக என்னவுமாம் –

வந்து இத்யாதி –
இப்படி கூத்தாடின செவ்வியோடே வந்து என்னை புறம் புல்குவான் –

எம்பிரான் –
எங்களுக்கு மகா உபகாரகன் ஆனவன் என்னை புறம் புல்குவான்-

—————————————————-

கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் – 1-9-9 –

பதவுரை

இந்திரன் காவினில்–இந்த்ரனுடைய உத்யாநவநத்திலிருந்த
கற்பகம் காவு–கற்பகச் சோலையை
கருதிய–(தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று) விரும்பிய
காதலிக்கு–தனக்கு ப்ரியையான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
இப்பொழுது–இப்பொழுதே
ஈவன்–கொணர்ந்து தருவேன்
என்று–என்று சொல்லி
நிலா திகழ்–நிலா விளங்குகின்ற
முற்றத்துள்–அவள் வீட்டு முற்றத்தில்
நிற்பன செய்து–இருப்பனவாகச் செய்து
உய்த்தவன் என்னை–தழைக்கும்படி செய்தவன்
என்னை புறம் புல்குவான்-;
உம்பர் கோன்–(அன்று தன் பராக்ரமத்தை காட்டிய) தேவாதி தேவன்
என்னை புறம் புல்குவான்-.

கற்பகம் இத்யாதி –
தேவ லோகத்தில் இந்திரனுடைய காவினில் நிற்கிற கற்பகக் காவை –
சசி பண்ணின அவமதியடியாக -பிடிங்கிக்  கொண்டு போய் பூ லோகத்தில் என்னுடைய
நிலா முற்றத்தில் நாட்டுத் தர வேணும் -என்று ஆசைப் பட்ட அபிமதையான
சத்ய பாமை பிராட்டிக்கு -நாளை என்னுதல் -பின்னை என்னுதல்-செய்யாதே –
இப்போதே தரக் கடவன் என்று பிடுங்கிக் கொண்டு போரா நிற்க்கச் செய்தே –

முற்பட ஆதரித்த இந்திரன் –
தன் புழைக் கடையிலே ஒரு பூண்டைப் பிடுங்கிக் கொண்டு போரப் பொறாமையாலே-
குபிதனாய் வஜ்ரத்தை வாங்கி துடர்ந்து
யுத்தம்  செய்வானாக வந்து –
வந்த கார்யம் பலியாமையாலே –
ஸ்தோத்ரம் செய்ய –

இப்போது தானே கொடு போக வேணும் –
பின்பு அங்கு வந்து நிற்கக் கடவது -என்று சங்கல்பம் செய்து கொண்டு போந்து –

வண் துவரை நட்டானை -(நறையூரில் கண்டேனே ) -என்கிறபடியே
ஸ்ரீ மத் த்வாரகையிலே நிலா முற்றத்திலே நட்டவன் –

உய்த்தவன் என்கையாலே –
இங்கே கொடு வந்து நட்ட பின்பு –
அங்குத்தையிலும்  காட்டிலும்
தழையும் பூவும் கொழுந்துமாய் கொண்டு சம்ருத்தமான படி சொல்லுகிறது –

என்னை  இத்யாதி –
இப்படி அபிமத விஷய பர தந்த்ரனானவன்
என்னைப் புறம் புல்குவான்

உம்பர் கோன் –
பிராட்டி உகப்பு செய்கையாலே இஸ் ஸ்வாபத்துக்கு தோற்று எழுதிக் கொடுக்கும் –
நித்ய ஸூரிகளுக்கு எல்லாம் நிர்வாகன் ஆனவன் –
என்னைப் புறம் புல்குவான் –

——————————————————–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த்தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களை பெற்று மகிழ்வரே -1 9-10 – –

பதவுரை

வேய்–மூங்கில் போன்ற
தடந்–பெரிய
தோளி–தோள்களை யுடையனான
ஆய்ச்சி–யசோதை யானவன்
ஆழிப் பிரான்–சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன்
அன்று–அக் காலத்திலே
புறம் புல்கிய–புறம் புல்குவதைக் கூறிய
சொல்–சொல்லை
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
மகிழ்ந்து–(தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து
ஈந்த–(உலகத்தார்க்கு) உபகரித்த
தமிழ் இவை ஈர் ஐந்தும்–தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்-ஓத வல்லவர்கள்
வாய்த்த–(மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி
நல் மக்களை–நல்ல புத்திரர்களை( ஸத் சிஷ்யர்களையும் )
பெற்று–அடைந்து
மகிழ்வர்–ஆநந்திப்பர்கள்.

வேய் தடம் தோளி ஆய்ச்சி –
பசுமைக்கும் -சுற்று உடைமைக்கும் -செவ்வைக்கும்
வேய் போலேயாய் பெருத்து இருந்துள்ள தோள்களை உடையளான யசோதை பிராட்டி –

அன்று இத்யாதி –
அக் காலத்தில் கையிலே திரு ஆழியை உடைய சர்வேஸ்வரன்
அவதாரத்தின் மெய்ப்பாட்டால் வந்த சைசவ அனுகுணமாக தன்னைப் புறம் புல்கின
பிரகாரங்களை சொன்ன சொல்லை –

விட்டு சித்தன் இத்யாதி –
ஸ்ரீ பெரியாழ்வார் தத் காலம் போலே அனுபவித்து ப்ரீதராய் –
அது தன்னை எல்லாரும் அறியும்படி உபகரித்ததாய் –
சர்வாதிகாரமான திராவிடமாய் -இருக்கிற
இவை பத்துப் பாட்டையும் சாபிப்ராயமாக  வல்லவர்கள்

வாய்த்த இத்யாதி –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஈடாக வாய்த்த
விலஷணரான சிஷ்ய புத்ரர்களை -லபித்து –
அத்தாலே -வந்த ஆனந்தத்தை உடையராவர் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: