ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-8–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

அவதாரிகை

அவன் தளர் நடை யாகிற பால சேஷடிதத்தின் உடைய ரசத்தை –
பெற்ற தாயான யசோதை பிராட்டி தத் காலத்தில்
அவனைக் குறித்து அபேஷித்து அனுபவித்தால் போலே –
பிற்காலமாய் இருக்கச் செய்தேயும் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
தத் காலத்திலே போலே பிரகாசித்து –
தாமும் அந்த ரசத்தை அனுபவித்தாராய் நின்றார் கீழ் –

இனி மேல் அவனுடைய சைசவ அநு குணமாக –
ஓடி வந்து தன்னை அணைத்து கொள்ளும்படியை –
யசோதை பிராட்டி அனுபவிக்க ஆசைப் பட்டு அது தன்னை அவனைக் குறித்து அபேஷித்து –
அவன் வந்து தன்னை அணைக்கை யாகிற ரசத்தை –
அவள் அனுபவித்த பிரகாரத்தை –
அப்படியே தாமும் அனுபவித்து ஹ்ருஷ்டராகிறார் –

அச்சோ என்று
அவன் வந்து அணைத்து கொள்கையை அபேஷிக்கையும் –
அந்த சேஷ்டித ரசத்தை அனுபவிக்கையுமே
அவளோடு இவருக்கு சாம்யம் –

மயர்வற மதி நலம் பெற்று –
பரத்வாதிகளை எல்லாம் தெளியக் கண்டவர் ஆகையாலே –
அவதாராந்தர சேஷ்டிதங்களையும்-
இவ் அவதாரம் தன்னில் உத்தர காலத்தில் உள்ள சேஷ்டிதங்களையும் –
தர்ம ஐக்யத்தாலே  -வஸ்து விசேஷணம் ஆக்கிக் கொண்டு –
அவனைப் புகழ்ந்து –
அந்த பால சேஷ்டித ரசத்தை அனுபவித்தது இவருக்கு விசேஷம்-

———–

பொன் இயல் கிண் கிணி சுட்டி புறம் கட்டி
தன் இயல் வோசை சலன் சலன் என்று இட
மின் இயல் மேகம் விரைந்து எதிர் வந்தாற் போல்
என் இடைக்கு ஓட்டரா வச்சோ வச்சோ எம்பெருமான் வாரா வச்சோ வச்சோ – 1-8 -1-

பதவுரை

பொன் இயல்–பொன்னாற் செய்த
கிண்கிணி–அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும்
சுட்டி–சுட்டியையும்
புறம்–(அதற்கு உரிய) இடங்களிலே
கட்டி–அணிந்து
தன்–சதங்கைக்கு
இயல்–பொருந்திய
இசை–சப்தமானது-(ஸ்வா பாவிக த்வனி )
சலன் சலன் என்றிட–சலன் சலனென்று ஒலிக்க
மின் இயல்–மின்னலோடு பொருந்திய
மேகம்–மேகமானது
விரைந்து–வேகமாக ஓடி வந்து
எதிர் வந்தால் போல்–எதிரே வந்தாற் போலே
என் இடைக்கு ஒட்டரா–என் இடையிலிருக்க (விரும்பி) ஓடி வந்து
அச்சோ அச்சோ–(என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும்
எம்பெருமான்–எங்களுடைய தலைவனே!
வாரா–வந்து
அச்சோ அச்சோ

அச்சோ அச்சோ என்று
இரட்டித்து சொன்னமையால் அதில் உள்ள ஆதாரத்தின் மிகுதி தோற்றுகிறது

பொன் இயல் கிண் கிணி –
பொன்னால் இயலப்பட்ட கிண் கிணி –
அழகுக்கு உடலாக மேலே பொன் தோய்த்து சமைத்த கிண் கிணி என்றபடி –
பொன்னே உபாதாநமாக சமைத்தது என்னில் -த்வனிக்க கூடாது இறே-
(வெங்கலம் த்வனிக்கும் -மேலே பொன் பூச்சு )

அன்றிக்கே –
பொன் வடத்திலே கோவைப்பட்ட கிண் கிணி என்னுமாம் –

மேலே சலன் சலன் என்றிட -என்கையாலே –
கிண் கிணி என்ற இது 
திரு அரையில் சாத்தும் கிண் கிணியையும் சேவடிக் கிண் கிணியையும் சொல்லுகிறது –

சுட்டி -லலாட பூஷணம் –

இவற்றை புறம் கட்டி என்றது –
புறம் என்று இடமாய்
அவற்றுக்கு அடைத்த ஸ்தலங்களிலே கட்டி என்றபடி –

கண் கால் புறம் அகம் -என்கையாலே –
புறம் என்ற  சப்தம் இடத்துக்கு வாசகம் இறே –

தன் இயல் இத்யாதி –
திரு வரையில் கிண் கிணியுனுடையவும்-திருவடிகளில் சதங்கை களினுடையவும் –
தனக்கு இயல்வான த்வனி சலன் சலன் என்று துவனிக்க –
சலன் சலன் என்கிற இது அநு கார சப்தம்

மின் இயல் இத்யாதி –
மின்னை இயல்வாக உடைத்தான மேகமானது கால் படைத்து
கடு நடை இட்டுக் கொண்டு எதிரே வருமா போலே –

கீழ் கிண் கிணி சுட்டி என்ற இவை –
செம் கமல கழல் -( 1-5-10-)-என்கிற பாட்டில் சொன்ன
சர்வ ஆபரண்ங்களுக்கும் உப லஷணமாய்-
திருமேனிக்கு பரபாகமான அவ் ஆபரண தேஜஸ்சோடே கூடி
நடந்து வர வேணும் என்னும் அபேஷயை பற்ற
இந்த திருஷ்டாந்தம் அருளி செய்தது –

என் இடைக்கு இத்யாதி –
என்னுடைய ஒக்கலையில் இருப்புக்கு ஆசைப்பட்டு ஓடி வந்து –
என்னை அணைத்து கொள்ள வேணும் –

இருகால் சொல்லுகிறது
அதின் ஆதர அதிசயத்தாலே –

எம்பெருமான் இத்யாதி –
முன் சொன்ன இடத்தில்
அல்பம் விளம்பிக்கையாலே –
என்னுடைய நாதனே வாரா அச்சோ அச்சோ என்கிறது –

அச்சோ என்கிறது
அணைத்து கொள் என்றபடி –

——————————————————

செம்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்பச்
சங்கு  வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங் கைகளால் வந்து அச்சோ அச்சோ ஆரத் தழுவு வாய் வந்து அச்சோ அச்சோ -1 8-2 –

பதவுரை

செங்கமலம்–செந்தாமரைப் பூவில்
தேன் உண்ணும்–தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
வண்டே போல்–வண்டுகளைப் போல
பங்கிகள் வந்து–(உனது) கூந்தல் மயிர்கள் வந்து
உன் பவளம் வாய்–பவளம்போற் செந்நிறமான உனது வாயில்
மொய்ப்ப–மொய்த்துக் கொள்ளும்படி
வந்து–ஓடி வந்து
சங்கு–ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்
வில்–ஸ்ரீசார்ங்கத்தையும்
வாள்–ஸ்ரீநந்தகத்தையும்
தண்டு–ஸ்ரீகௌமோதகியையும்
சக்கரம்–ஸ்ரீஸூதர்சநாழ்வானையும்
ஏந்திய–(பூவேந்தினாற்போல) தரித்துக் கொண்டுள்ள
அம் கைகளாலே–அழகிய கைகளாலே
அச்சோ அச்சோ
வந்து–ஓடி வந்து
ஆர தழுவா–திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி
அச்சோ அச்சோ

பங்கிகள் -சுருண்ட கேசங்கள்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் -ஸ்ரீ சாரங்க தனுசையும் –
ஸ்ரீ நந்தகம் என்னும் வாளையும் -ஸ்ரீ காளமோதகீ கதையையும் –
ஸ்ரீ சுதர்சன ஆழ்வாரையும் –

செம்கமல இத்யாதி –
செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –

பங்கிகள் இத்யாதி –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –

சங்கு இத்யாதி –
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கும்
அழகுக்கும் 
உடலாய் –
உனக்கு பரிகையே யாத்ரையாய் இருக்கும் ஸ்ரீ பஞ்சாயுதங்களை
பூ ஏந்தினால் போலே தரித்து கொண்டு இருக்கும் அவையாய் –

அவை தானும் மிகையாம் படி
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகை உடைய
திருக் கைகளால் வந்து அணைத்துக் கொள்ள வேணும் –

ஆர இத்யாதி –
அபர்யாப்தமாக-பர்யாபதமாக அன்றிக்கே பரி பூர்ணமாக அணைத்துக் கொள்ள வேணும் –
இவருக்கும் இவனோட்டை ஸ்பர்சம்  தான்
யுவதிகளை அபிமத புருஷர்கள் ஸ்தன பரி ரம்பணம் செய்தால்
அவர்கள் அந்த போக அதிசயத்தாலே சொல்லும் பாசுரம் போலே இருக்கிறது காணும் –

—————————————-

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ – 1-8 3- –

பதவுரை

பஞ்சவர்–பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்–(துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
(அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்)
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்து–அணி வகுத்துச் செய்து
நஞ்சு–விஷத்தை
உமிழ்–கக்குகின்ற
நாகம்–(கானிய) ஸர்ப்பம்
கிடந்த–இருந்த
நல் பொய்கை–கொடிய மடுவிலே
புக்கு–புகுந்து
அஞ்சு–(ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி
பணத்தின் மேல்–(அப் பாம்பின்) படத்திலே
பாய்ந்திட்டு–குதித்து
(நட மாடி அக் காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க)
அருள் செய்த–(அப் பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட
அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;
ஆயர்–இடையர்களுக்கு
பெருமானே–தலைவனானவனே!
அச்சோ அச்சோ-.

கை செய்து -உதவி செய்து

பஞ்சவர் இத்யாதி –
துர்யோநாதிகளாலே நெருக்குண்டு –
ராஜ்யாதிகளை இழந்து –
உன்னை ஒழிய வேறு துணை இன்றிக்கே -நின்ற பாண்டவர்கள் ஐவர்க்கும் –
பரதந்த்ரனாய் கொண்டு தூத க்ர்த்யத்திலே அதிகரித்து –
துர்யோநாதிகள் பக்கலிலே சென்று –
அவர்களையும் இவர்களையும் சேர்க்க பார்த்த இடத்தில் -அவர்கள் இசையாமையாலே –
ஆனால் யுத்தத்தை பண்ணி ஜெயித்தவர்கள்  ஒருவர் ராஜ்யத்தை ஆளும் கோள்-என்று சொல்லிப் போந்து –
பின்பு பாண்டவர்களுக்காய் நின்று -பாரத யுத்தத்தில் கையும் அணியும் வகுத்து –
யுத்தத்தை நடத்தி –

நஞ்சு இத்யாதி –
விஷத்தை உமிழா நின்ற காளியனாகிற சர்ப்பம் கிடந்த கொடிய பொய்கையிலே –
அத்தை மதியாமல் சென்று புக்கு –

நல் பொய்கை என்றது –
விபரீத லஷணையாய்-காளிய விஷ தூஷிதம் ஆகையாலே க்ரூரமான பொய்கை என்றபடி –

அஞ்ச இத்யாதி –
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட -என்கிறபடியே இந்த வ்ருத்தாந்தத்தை கேட்ட
அனுகூல ஜனங்கள் எல்லாரும் -என்னாகப் புகுகிறதோ -என்று பயப்படும்படியாக –

ஐந்தலைய பைந் நாகத் தலைப் பாய்ந்தவனே -என்கிறபடியே –
அந்த காளியனுடைய பணங்களின் மேலே சென்று குதித்து
நர்த்தம்  செய்து
அவனை இளைப்பித்து –
க்ருபா மாத்ரா மனோ வர்த்தி ப்ரசீதமே -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-_-என்று
தன்னுடைய பிராண ரஷனத்துக்காக
அவன் சரணம் புகுந்த பின்பு –
அவன் பக்கலிலே அருளைப் பண்ணின –

அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு என்றது –
காளியன் தான் அஞ்சும்படியாக
அவன் பணத்தின் மேல் பாய்ந்து என்னவுமாம் –

அஞ்சன வண்ணனே –
சரணாகத ரஷணம் பண்ணுகையாலே –
அஞ்சனம் போலே குளிர்ந்து –
புகர் பெற்ற திரு மேனியை உடையவனே
அச்சோ அச்சோ

ஆயர் பெருமானே –
அமரர் பெருமானான மேன்மைக்கு எதிர் தட்டாக
ஆயர் பெருமானான நீர்மையை உடையவனே
அச்சோ அச்சோ –

———————————————

நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறிய அவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனினை  உள்ளே ஒடுங்க அன்று
ஏற உருவினாய் அச்சோ அச்சோ எம்பெருமான் வாரா அச்சோ அச்சோ -1 8-4 – –

பதவுரை

நாறிய–‘நல்ல வாசனை வீசுகின்ற
சாந்தம்–சந்தனத்தை
நமக்கு–எங்களுக்கு
இறை–கொஞ்சம்
நல்கு என்ன–கொடு என்று (நீ) கூனியைக் கேட்க
அவளும்–அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்)
தேறி–மனம் தெளிந்து
திரு உடம்பில்–(உனது) திரு மேனியிலே
பூச–சாத்த
ஊறிய–வெகு நாளா யிருக்கிற
கூனினை–(அவளுடைய) கூனை
உள்ளே–(அவள்) சரீரத்திற்குள்ளே
ஒடுங்க–அடங்கும்படி
அன்று–அக் காலத்திலே
ஏற–நிமிர்த்து
உருவினாய்–உருவினவனே!
அச்சோ அச்சோ-;
எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.

நாறிய இத்யாதி –
கம்சனுடைய வண்ணான்-ஈரம் கொல்லியை கொன்று –
பரிவட்டங்கள் சாத்தி –
ஸ்ரீ மதுரையில் போய் புகுந்த அளவில் –
கம்சனுக்கு சாந்திட்டு போரும் கூனி சாந்து கொண்டு போகா நிற்க செய்தே வழியிலே கண்டு –
அண்ணர்க்கும்  நமக்கும் பூசலாம்படி சாந்திட வல்லையோ-என்ன –
(ஸ்ரீ பாகவத ஸ்லோகங்கள் பிரமாணங்கள் அரும்பதத்தில் காட்டி அருளுகிறார் )

அபேஷித்தது மறுக்க மாட்டாமையாலும் –
வெண்ணெய் நாற்றத்திலே பழகின இவர்கள் சாந்தின் வாசி அறிவார்களோ -என்னும் அத்தாலும் –
மட்டமான சாந்துக்களைக் காட்ட –

ஸூகந்தமேதத் -இத்யாதி படியே
அவற்றுக்கு எல்லாம் ஒரு குறை சொல்லிக் கழித்து –
(ஸூ கந்தி -இயற்கை கந்தம் -ஸூ கந்தம்-கந்தமூட்டி )
ஆவயோர்க தாத்ர சத்ர்சம் தீயதா மதுலேபனம் -என்று
அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் அனுரூபமான பரிமளத்தை உடைய சாந்திலே
அல்பம் தர – என்று அபேஷிக்க-

சாந்தை -தரம் இட்டு கழித்த படியையும் –
அபேஷித்த சீர்மையையும் –
வடிவு அழகையும் கண்டு –
ஹ்ருஷ்டையாய்-கம்சனுக்கு கொடு போகிற இத்தை இவர்களுக்கு கொடுத்தால் அவன்
தண்டிக்கில் செய்வது என் -என்று அஞ்சாதே நெஞ்சம் தேறி –

அவளும் உத்தமமான சாந்தை எடுத்து
திரு மேனியிலே சாத்த –

ஊறிய  இத்யாதி –
அநந்ய பிரயோஜனமாக அவள் கிஞ்சித் கரிக்கையால் உண்டான ப்ரீதியாலே –
(மடி தடவாத சோறு -விதுரன் -சுண்ணாம்பு கலவாத சந்தனம் கூனி குப்ஜா – சுருள் நாறாத பூ மாலாகாரர் )
இவள் முதுகில் கூனை நிமிர்த்து விடக் கடவோம் -என்று திரு உள்ளம் பற்றி
அவள் முதுகில் – வேர் விழுந்ததோ என்னும்படி உறைத்து புறப்பட்டு நிற்கிற கூனை
அவள் சரீரத்தின் உள்ளே அடங்கும்படியாக
அக்காலத்திலே நிமிர்த்து திருக் கைகளாலே உருவினவனே –
அச்சோ அச்சோ

எங்கள் குலத்துக்கு ஸ்வாமி யானவனே வாரா அச்சோ அச்சோ-
வாரா -வந்து-

—————————————-

கழல் மன்னர் சூழ கதிர் போல் விளங்கி
எழல உற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலை பெரிதுடை துச்சோதனனை
அழல விழித்தானே  அச்சோ அச்சோ ஆழி அம் கையனே அச்சோ அச்சோ -1-8-5-

பதவுரை

கழல்–வீரக் கழலை யணிந்த
மன்னர்–ராஜாக்கள்
சூழ–தன்னைச் சுற்றி யிருக்க (அவர்கள் நடுவில்)
கதிர் போல்–ஸூரியன் போல
விளங்கி–ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை
ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளை யிட்டிருந்த தானே தனக்கும் தெரியாமல்)
எழல் உற்று–(முதலில்) எழுந்திருந்து
மீண்டு–மறுபடியும்
இருந்து–(தானெழுந்தது தெரியாதபடி) உட்கார்ந்து கொண்டு
உன்னை–உன்னை
நோக்கும்–(பொய்யாஸநமிடுதல் முதலியவற்றால் கொல்வதாகப்) பார்த்த
பெரிது சுழலை உடை–மிகவும் (வஞ்சனையான) ஆலோசனையை யுடைய
துச்சோதனனை–துர்யோதநினை (திருவுள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி)
(துஸ் ஸாஸ தனன் -நல்லது சொல்ல முடியாதவன் -யவ்வ்கிகம் ரூடி பொருள் இரண்டும் உண்டே )
அழல விழித்தானே–உஷ்ணமாகப் பார்த்தவனே!
அச்சோ அச்சோ-;
ஆழி–திருவாழி யாழ்வானை
அம் கையனே–அழகிய கையிலேந்தியவனே!
அச்சோ அச்சோ-.

பாண்டவர்களுக்காக  ஸ்ரீ தூது எழுந்து அருளி இருக்கிற விசேஷத்தை கேட்டு –
வீரக் கழல் இட்டு சமர்த்தராய் இருக்கும் ராஜாக்கள் பலரும் -சூழ சேவித்து இருக்க –
தான் சிஹ்மாசனஸ்த்தனாய் கொண்டு –
அபிஷேகாத் யாபரண தேஜஸ்சாலும் பிரதாபத்தாலும் ஆதித்யனைப் போலே விளங்கி –
கிருஷ்ணன் வந்தால் ஒருவரும் எழுந்து இருத்தல் -குசல பிரஸ்னம் பண்ணுதல் -செய்யாதே
கொள்ளுங்கோள் -என்று நியமித்து –
பொய்யாசனம் இட்டு வைத்து இருக்கும் அளவில் –

எழுந்து அருளிச் சென்று புகுந்த போது –
இருந்த ராஜாக்கள் எல்லாரும் -அவசா பிரதிபேதிரே- (தங்கள் வசத்தில் இல்லாமல் )என்கிறபடியே –
எழுந்து இருப்பார் -அநு வர்த்திப்பாராக –
தானும் துடை நடுங்கி எழுந்து இருக்க உத்யோகித்து –
மீண்டும் –
கறுவுதலாலே தெரியாத படி இருந்து –

உன்னை இத்யாதி –
பொய்யாசனம் முதலாக முன்பு பண்ணி வைத்த சூழ்ச்சிகளாலே நலிவதாக கோலி-
உன்னைப் பார்த்த துரியோதனனை –
உன் அக வாயில் சீற்றம் எல்லாம் பார்க்கிற பார்வையிலே தோற்றும்படி
அத் உஷ்ணமாக பார்த்தவனே
அச்சோ அச்சோ

திரு ஆழியை திருக் கையில் உடையவனே
அச்சோ அச்சோ –

————————————————

(அந்தத்தில் முடியும் வகை அடியேற்குத் தெரியுமோ ஆதி மூர்த்தி –
தெரியும் ஓ ஆதி மூர்த்தி –
நீயே திரு உள்ளம் கொண்டு யுத்தத்துக்கு பாரிக்கிறாய் -சாகா தேவன் –
பூமா தேவி பொறை தீர்க்கவே )

போர் ஒக்கப்  பண்ணி இப் பூமி பொறை தீர்ப்பான்
தேர் ஒக்க ஊர்ந்தாய் செழும் தார் விசயற்க்காய்
கார் ஒக்கும் மேனி கரும் பெரும் கண்ணனே
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ ஆயர்கள் போர் ஏறே அச்சோ அச்சோ – 1-8-6-

பதவுரை

இ பூமி–இந்தப் பூமியினுடைய
பொறை–பாரத்தை
தீர்ப்பான்–தீர்ப்பதற்காக
போர்–யுத்தத்தை
ஒக்க–(துர்யோதநாதிகளோடு) ஸமமாக
பண்ணி–செய்து
செழு–செழுமை தாங்கிய
தார்–மாலையை யுடைய
விசயற்கு ஆய்–அர்ஜுநனுக்காக
தேர்–(அவனுடைய) தேரை
ஒக்க–(எதிரிகள் தேர் பல வற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி
ஊர்ந்தாய்–பாகனாய்ச் செலுத்தினவனே!
கார் ஒக்கும்–மேகத்தோடு ஒத்த
மேனி–திருமேனியில்
கரும் பெருங் கண்ணனே–கரிய வாகிப் புடை பரந்து கண்களை யுடையவனே!-(காரணாந்தரங்தா விஸ்தாரம் )
வந்து–ஓடி வந்து
ஆர–நின்றாக
தழுவா–தழுவிக் கொண்டு
அச்சோ அச்சோ-;
ஆயர்கள்–இடையர்களுக்கு (அடங்கி நிற்கின்ற)
போர் ஏறே–போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே!
அச்சோ அச்சோ-.

போர் இத்யாதி –
பதினொரு அஷோகினி பரிக்ரமும் –
நூறு ராஜாக்களும் –
பீஷ்மத் துரோணாதிகளுமான அத் திரளோடு -சமமாக –
ஏழு அஷோகினி பரிகரத்தையும்
பாண்டவர்கள் ஐவரையும் கொண்டு யுத்தம் பண்ணி -என்னுதல் –

பாண்டவர்களுக்கு ஒரு கோல் குத்து நிலமும் கொடோம் -என்று
வெட்டிதாக வார்த்தை சொன்ன பின்பு –
துர்யோநாதிகளை யுத்தத்திலே பொருந்தும்படி யாகப் பண்ணி என்னுதல் –

இப் பூமி பொறை தீர்ப்பான் –
இது தான் செய்தது –
அதார்மிகராய் -ஆசூர ப்ரகர்திகளாய் இருப்பார் எல்லாரையும் யுத்த பூமியிலே கொன்று –
இந்த பூமியினுடைய பாரத்தை போக்குகைக்காக ஆய்த்து-

மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரை பிறந்தான் -என்கையாலே –
அவதார பிரயோஜனமும் இறே

தேர் இத்யாதி –
யுத்தத்துக்கும் விஜயத்துக்கும் தகுதியாக சூடும் தும்பை -வாகை -முதலான
அழகிய மாலையை உடைய அர்ஜுனனுக்கு –

யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச-இத்யாதிப் படியே –
சர்வமுமாய் நின்று –
பிரதி பஷ பூதர் ஆனவர்கள் உடைய அநேகம் தேருக்கு
சமமாக அவனுடைய தேரை நடத்தினவனே-

ஆயுதம் எடுக்க ஒண்ணாது -என்கையாலே
சாரத்யத்திலே அதிகரித்து –
தேர் காலாலே
பிரதிபஷ சேனையை துகளாக்கினான்  ஆய்த்து –

கொல்லா மாக்கோல்–(திருவாய் -3-2-)இத்யாதிபடியே
சாரத்தியம் பண்ணின சாமர்த்த்யத்தால் இறே
பூ பார நிரசனம் பண்ணிற்று –

கார் ஒக்கும் இத்யாதி –
வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற திருமேனியை உடையவனாய் –
கரிய வாகிப்  புடை  பரந்து இருக்கிற திருக் கண்களை உடையவனாய் இருக்கிறவனே –

இத்தால் –
பூ பாரத்தை போக்குகையாலும் –
ஆஸ்ரிதனான அர்ஜுனனை விஜயீ ஆக்குகையாலும் உண்டான ஹர்ஷம்
வடிவிலும் கண்ணிலும் தோற்றும்படி நின்ற நிலையை சொல்லுகிறது –

ஆர இத்யாதி –
என்னுடைய அபி நிவேசம் தீரும்படி வந்து –
பூரணமாக அணைத்து அருள வேணும் –

ஆயர்கள் இத்யாதி –
கோபர்க்கு பவ்யனாய் –
அத்தாலே –
யுத்தோன்முகமான ரிஷபம் போலே
செருக்கி இருக்கிறவனே அச்சோ அச்சோ

———————————————–

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது அன்று என்று தானம் விளக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ -1-8-7-

பதவுரை

மிக்க பெரும் புகழ்–(ஔதார்யத்தால்) மிகுந்த கீர்த்தியை யுடைய
மா வலி–மஹா பலி (செய்த)
வேள்வியில்–யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொடுக்க முயன்ற வளவிலே)
இது-‘நீ கொடுக்கிற விது
தக்கது அன்று–தகுதியானதன்று’
என்று–என்று முறையிட்டு
தானம்–பூமி தானத்தை (அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்)
விலக்கிய–தடுத்த
சுக்கிரன்–( பூச்சி வடிவு கொண்ட )சுக்கிராச்சாரியனுடைய
கண்ணை–ஒரு கண்ணை
துரும்பால்–(உன் கையிலணிந்திருந்த) தர்ப்ப பவித்ரத்தின் நுனியால்
கிளறிய–கலக்கின
சக்கரம் கையனே–சக்ராயுதமேந்திய கையை யுடையவனே!
அச்சோ அச்சோ-;
சங்கம்-பாஞ்ச ஜன்யத்தை
இடத்தானே–இடக்கையிலேந்தினவனே!
அச்சோ அச்சோ-.

மிக்க புகழ் இத்யாதி –
ஒவ்தார்யத்தாலே மிகவும் பெரிய புகழை உடையனான மகாபலி
யக்ஜவாடத்திலே இந்திரனுக்காக வாமன வேஷத்தைக் கொண்டு –
சென்று –

கொள்வன் நான்  மாவலி மூவடி -தா -(திருவாய் -3-8-)-என்ன –
புலன் கொள் மாணாய்-என்கிறபடியே
சர்வேந்த்ரிய அபஹார ஷமமான இவனுடைய வடிவு அழகாலும்
அனந்விதமாக சொன்ன -முக்தோக்தியாலும்
மகாபலி அபஹ்ருத சித்தனாய்
இவன் அபேஷித்து கொடுப்பதாக  உத்யோக்கிற அளவில் –

குருவான சுக்ரன் –
இவன் வடிவும் வரத்தும் -சொன்ன வார்த்தையும் -அதி மானுஷமாய் இருக்கையாலே நிரூபித்து –
இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் –
உன் சர்வ ஸ்வத்தையும் அபஹரிக்க வந்தான் –
ஆன பின்பு நீ தானம் பண்ணுகிற இது  தகுதி அன்று -என்று
தானத்தை நிரோதிக்க-

அவன் அது கேளாதே
உதகம் பண்ணப் புகுந்த அளவில் –
உதக பாத்திர த்வாரத்திலே சுக்ரன் ப்ரேவேசித்து உதகம் விழாதபடி தகைய –
அந்த த்வார சோதனம் பண்ணுவாரைப் போலே –
திருக் கையில் திருப் பவித்ரத்தின் உடைய அக்ரத்தாலே
அவன் கண்ணைக் கலக்கின திரு ஆழியைக் கையில் உடையவனே –

துரும்பால் கிளறிய சக்கரக் கையன் -என்கையாலே
அந்த பவித்ராக்ரமாய் புகுந்து அவன் கண்ணை கலக்கிற்று –
கருதும் இடம் பொரும் திரு ஆழி -என்று தோற்றுகிறது-

சங்கம் இடத்தானே –
ஒரு காலும் திரு ஆழிக்கும் ஸ்ரீ பாஞ்ச சந்யத்துக்கும் பிரிவு இல்லை இறே –
ஆகையால் அவன் வலம் கையிலே தோன்றும் போது-
இவன் இடம் கையிலே தோன்றும் படியாய் இறே இருப்பது –

அச்சோ அச்சோ –
இப்படி இருந்துள்ள கையும் ஆழ்வார்களுமான சேர்த்தி யோடு வந்து
அணைத்து கொள்ள வேணும் என்கை –

———————————————

(மஹா பலி நமுசி -இன்றும் திருக்கோவிலூரில் சேவிக்கலாம் )

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே அச்சோ அச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8- –

பதவுரை

(வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரி விக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது
அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடிவந்து)
இது–(யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி யளக்கிற) இது
என் மாயம்–என்ன மாயச் செய்கை!;
என் அப்பன்–என் தகப்பன்
அறிந்திலன்–(நீ செய்யும் இந்த மாயத்தை) அறிய வில்லை
முன்னைய வண்ணமே கொண்டு–நீ யாசிக்க வந்த போதிருந்த வடிவத்தையே கொண்டு
அளவாய்–அளப்பாயாக
என்ன–என்று சொல்ல
மன்னு–(இப்படி) பிடிவாதமாய் நின்ற
நமுசியை–(அந்த) நமுசி யென்பவனை
வானில்–ஆகாசத்திலே
சுழற்றிய–சுழலச் செய்த
மின்னு முடியனே–விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ-;
வேங்கடம்–திருமலையிலே
வாணனே–வாழுமவனே!
அச்சோ அச்சோ-.

என் இத்யாதி –
திருக் கையில் உதகம் விழுந்த அநந்தரம்-திருவடிகளை வளர்த்து அளக்கப் புக்கவாறே –
இத்தைக் கண்ட மகாபலி புத்ரனான -நமுசி ஓடி வந்து –
இது என் -என்று வளருகிற திருவடிகளை தகைய –

நீ தகைகிறது என் -நான் உதகம் ஏற்றது அளந்து கொள்ள வேண்டாவோ -என்ன –
நீ க்ரித்ரிமம் என்பான் என் -என்னுடைய பிரமச்சரிய வேஷத்தையும் -அர்த்திவத்தையும் -கண்டு
உன்னுடைய பிதா -உதக தானம் பண்ணிப் போந்தது பொய்யோ -என்ன –

என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன் -என்ன –
நான் செய்தது வஞ்சனம் என்று நீ சொல்கிறது என் கொண்டு -என்ன –

வஞ்சனம் அன்றாகில் நீ முற்பட்ட வடிவை கொண்டு அளவாய் -என்ன –
முன்னைய வண்ணம் கூடுமோ -விகாரியான சரீரம் அன்றோ -என்ற அளவிலும் –
தான் பிடித்த நிலை விடாதே நின்ற நமுசியை ஆகாயத்திலே சுழற்றி எறிந்து விட்ட
உஜ்ஜ்வலமான திரு அபிஷேகத்தை உடையவனே –

திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய
அந்ய சேஷத்வ
ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து
சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –

வேம்கடம் இத்யாதி –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திரு வேம்கட மா மலை -(திருவாய் -3-3-)-என்னும்படி –
அந்த வாமன அவதார சேஷ்டிதம் அடைய தோன்ற
திருமலைக்கு நிர்வாகனாய் நிற்கிறவனே-அச்சோ அச்சோ –

—————————————————

கண்ட கடலும் மழையும் உலகு ஏழும்
முண்டத்துக்கு ஆற்றா முகில் வண்ணாவோ என்று
இண்டைச் சடை முடி ஈசன் இரக் கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ மார்வின் மறுவனே அச்சோ அச்சோ – 1-8-9-

(முண்டத்துக்கு ஆற்றா-உண்டத்துக்கு ஆற்றா-பாட பேதம்
இவற்றை உண்டாலும் -இங்கு திரிந்தாலும் போதாமல் )

பதவுரை

கண்ட–கண்ணாற்கண்ட
கடலும்–ஸமுத்ரங்களும்
மலையும்–மலைகளும்
உலகு ஏழும்–கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்)
முண்டத்துக்கு–(என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு
ஆற்றா–போதாவாம்;
முகில் வண்ணா–மேக வண்ணனே!
ஓஒ!–ஓஒ! (ஹாஹா!)
என்று–என்று கூப்பிட்டு
இண்டை-நெருங்கின
சடை முடி–ஜடா பந்தத்தை யுடைய
ஈசன்–சிவன்
இரக்கொள்ள–பிச்சை யெடுக்க
மண்டை–(அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை
நிறைத்தானே–(மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே!
அச்சோ அச்சோ-;
மார்வில்–திரு மார்பிலே
மறுவனே–ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ-.

கண்ட இத்யாதி –
கண்ணால் கண்ட மலைகளும் கடல்களும் சப்த லோகங்களும் –
எல்லாவற்றையும் இட்டு நிறைக்கப் பார்க்கிலும் -என் கையில் கபாலத்துக்கு போராதாய் இரா நின்றன –
முண்டம் -கபாலம்
இத்தால் கண்ட இடம் எங்கும் பிஷை புகுந்து திரிந்தும் நிறைய காணாமையாலே
இதனுடைய துஷ் பூரதையை  சொன்னபடி

அன்றிக்கே –
கண்ட கடலும் மலையும் உலகு ஏழும் தட்டித் திரிந்து பிஷை புகுந்த இடத்திலும்
என் கையில் கபாலத்துக்கு போருகிறது இல்லை என்னவுமாம்-

முகில் வண்ணா –
ஜல ஸ்தல விபாகம் பாராமல் உபகரிக்கும் -மேகம் போன்ற ஒவ்தார்ய ஸ்வாபம் உடையவனே –
இத்தால் நீ நிறைக்கில் ஒழிய நிறைக்க வல்லார் இல்லை என்கை-
ஒ என்று தன் ஆர்த்தி தோன்ற கூப்பிட்டு

இண்டை இத்யாதி –
நெருங்க பின்னின ஜடா பந்தத்தை உடையவனாய் –
ஈஸ்வர அபிமானியான ருத்ரன் -இத்தால்
இவனுடைய ஈஸ்வரத்வம் -தப பலமாய் வந்தது என்னும் இடமும் –
இவனுடைய துர்மானமும் சொல்லுகிறது –
இரக்கொள்ள-தத்ர நாராயண ஸ்ரீமான் மயா பிஷாம் பிரயாசித-என்கிறபடியே
வந்து பிஷை இரக்க-இரக்கொள்ள என்று -ஒரு முழு சொல்லாய் -இரக்க -என்றபடி –

மண்டை நிறைத்தானே –
விஷ்ணு பிரசாதாத் ஸூஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா-
ஸ்புடிதம் பஹு தாயாதம் ஸ்வப்ன லப்தம் தனம் யதா -என்கிறபடியே
பஹுதாவாக ஸ்புடிதமாய்-போன வழி தெரியாதே போம்படி –
ஊறு செங்குருதியால் நிறைத்த (திருச்சந்த விருத்தம்) -என்கிறபடி
திரு மார்வில் செங்குருதியாலே அந்த கபாலத்தை நிறைத்தவனே –
மார்வில் மறுவனே-சர்வேஸ்வர சிஹ்னமான ஸ்ரீ வஸ்தத்தை திருமார்பில் உடையவனே -அச்சோ அச்சோ –

அதவா –
உண்டத்துக்கு -என்று பாடமான போது-
கண்ட -இத்யாதிக்கு –
கண்ட கடலிலும் மலையிலும்
உலகு ஏழிலும் சாபோபஹதனாய் திரிந்து பிஷை புகுந்து –
முடைத் தலை யூன்-(ராமானுஜ நூற்று)-என்கிறபடியே
துர்கந்தியான கபாலத்தில் -அத்தை உளைந்து உளைந்து ஜீவித்து திரிந்து -அதுக்கு ஆற்றாதே –
நெருங்கி பின்னின ஜடையை உடைய -ஈஸ்வர அபிமானியான ருத்ரன் –

அந்த ஆற்றாமையை பரிகரிக்கைக்காக –
முகில் வண்ணாவோ -என்று
உன்னுடைய ஒவ்தார்ய குணத்தைச் சொல்லி –
ஆர்த்தியோடே கூப்பிட்டு -இத்தை போக்க வேணும் -என்று அர்த்தித அளவில் –
நம்மை ஒழிய இவனுக்கு கதி இல்லை -என்று –
அரக்கு பிச்சை பெய் கோபால கோளரி -(திருவாய்-2-2-2-)- என்கிறபடியே
அவன் கையில் கபாலத்தை நிறைத்தவனே என்னுமாம்-

————————————-

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திடப்
பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே அச்சோ அச்சோ அருமறை தந்தானே அச்சோ அச்சோ -1 8-10 – –

பதவுரை

மன்னிய–நித்ய ஸித்தமான
நால் மறை–சதுர் வேதங்களும்
முற்றும்–முழுவதும்
மறைந்திட–மறைந்து விட (அதனால்)
துன்னிய–நெருங்கிய
பேர் இருள்–பெரிய அஜ்ஞாநாந்தகாரம்
சூழ்ந்து–பரவி
உலகை–லோகங்களை
மூட–மறைத்துக் கொள்ள
பின்–பின்பு
உலகினில்–இந்த லோகங்களில்
பேர் இருள்–(அந்த) மிகுந்த அஜ்ஞாகாந்தகாரமானது
நீங்க–நீங்கும்படி
என்று–அக் காலத்தில்
அன்னம் அது ஆனானே–ஹம்ஸமாய் அவதரித்தவனே!
அரு மறை தந்தானே–(அந்த ரூபத்தோடு) அருமையான வேதங்களை உபகரித்தவனே!
அச்சோ அச்சோ-.

துன்னிய இத்யாதி –
தேஜஸ்சினுடைய அசந்நிதானத்தில் திமிரம் வியாப்தம் ஆம் போலே –
கர்ம ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளுக்கும் கண் காட்டியான வேதம் போகையாலே நெருங்கின
(கர்ம ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளுக்கும்-இவை இரண்டும் அதிருஷ்டம் –
ப்ரத்யக்ஷத்தாலோ அனுமானத்தாலோ காண முடியாதே )
அஞ்ஞான ரூப மகாந்தகாரமானது வ்யாப்தமாய் கொண்டு லோகத்தை எங்கும் மறைக்கும்படியாக –

மன்னிய இத்யாதி –
நித்தியமாய் ரிக்யாதி பேதத்தாலே நாலு வகைப்பட்ட வேதம் எல்லாம் -திரோஹிதமாய் விட

பின் இத்யாதி –
பின்பு இந்த லோகத்தில் உண்டான மகாந்தகாரமானது நீங்கும்படியாக –

அன்று இத்யாதி –
அக் காலத்தில் வேதத்தை வெளிப்படுதுக்கைகாக
சார அசார விவேக சக்திகமான ஹம்சமாய் வந்து தோன்றினவனே

அரு மறை இத்யாதி –
உன்னைப் பெறிலும் பெறுதற்கு  அரிதான வேதத்தை உபகரித்தவனே
அச்சோ அச்சோ –

——————————————————-

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாட புதுவை  கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வாரே -1-8-11 – –

பதவுரை

நச்சுவார் முன்–(தன்னை) விரும்பிப் பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே
நிற்கும்–வந்து நிற்குந் தன்மையுள்ள
நாராயணன் தன்னை–நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
ஆய்ச்சி–இடைக் குலத்தவளான யசோதை
(அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி)
அச்சோ வருக என்று உரைத்தன–‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை
மச்சு அணி–பல நிலைகளால் அழகிய
மாடம்–மாளிகைகளை யுடைய
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வார்
சொல்–சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும்
பாடுவார்–பாடுபவர்கள்
நிச்சலும்–எப்போதும்
நீள் விசும்பு–பரமாகாசமாகிற பரம பதத்திற்கு
ஆள்வர்–நிர்வாஹகராவர்.

நச்சுவார் இத்யாதி –
ஜன்ம விருத்தாதிகளால் உண்டான தர தம விபாகம் பாராதே –
தன்னை ஆசைப்பட்டவர்கள் எல்லார்க்கும் -அவர்கள் ஆசைப் பட்ட வடிவை கொண்டு –
முன்னே வந்து நிற்கும் நாராயணன் தன்னை –

அச்சோ இத்யாதி –
அவதாரத்தின் மெய்ப் பாட்டால் வந்த சைசவ அனுகுணமாக
அவள் தன்னை அணைத்து கொள்ளுகையில்  அபேஷை தோற்ற –
அச்சோ அச்சோ என்றும் –
வருக என்றும் –
தாயான யசோதை பிராட்டி சொன்ன பாசுரங்களை

மச்சணி இத்யாதி –
மச்சு ஒரு வித கட்டடம் –
பல நிலமான மாடங்களை உடைய
ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாகராய் –
ப்ராமண உத்தமரான ஸ்ரீ பெரிய ஆழ்வார் அருளி செய்த இத்தை –

நிச்சலும் பாடுவார் –
ப்ரீதி உக்தராய் கொண்டு -போக ரூபமாக சொல்லும் அவர்கள் –
கால தத்வம் உள்ளது அனையும் பரம ஆகாச சப்த வாச்யமான பரமபதத்தை ஸ்வாதீனமாக
நடத்தப் பெறுவார் –
அதாவது –
அங்குள்ள சகல போகத்துக்கும் தாங்களே நிர்வாகராவர் என்ற படி –

பொன்னுலகு ஆளீரோ -இத்யாதி
விண்ணவர் நாடு தானே
ஆகையால் அன்றோ மதுரகவி சொல் நம்புவார் பதி வைகுந்தம் ஆகுமே என்றார்
சகல சாம்ராஜ்ய கைங்கர்ய பட்டாபிஷேகம் பெறுவார் என்றபடி

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: