Archive for June, 2012

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2-4–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

June 20, 2012

வெண்ணெய் அளைந்த  — ப்ரேவேசம்
மாதாவான யசோதை பிராட்டி -அவனுடைய அவதாரத்தின் மெய்ப்பாட்டால் -வந்த பால்ய அனுகுணமாக –
அவனை அனுசரித்துக் கொண்டு -காது பெருக்கி -திரியும் கடிப்பும் –முதலானவை இட்டு –
காது குத்தி -பெருக்கி தலைக் கட்டின அநந்தரம்-

பிள்ளைகளை காது பெருக்கினால் –
அந்த செடி நீங்க குளிப்பாட்டும் கிரமத்திலே-(அங்கச் செடி -பாட பேதம் )
(அந்தச் செடி என்றது -காதுப் புண் சவறு பாய்ந்து -அத்தால் வந்த அழுக்கு -என்றபடி -)
இவனை மஞ்சனமாட்ட வேணும் என்று உத்யோகித்து –
அதுக்கு வேண்டும் உபகரணங்களையும்–(எண்ணெய் புளிப்பழம் போல்வன ) சம்பாதித்து வைத்து –
நீராட வா -என்று அழைத்து -அவன் இசையாத அளவிலும்
விடாதே நிர்பந்தித்து -அவசியம் இன்று திரு மஞ்சனம் செய்ய வேண்டின ஹேதுவையும் அவனுக்கு அறிவித்து –

(ஓடாதே வாராய் –நீ பிறந்த திருவோணம் இன்று -இவற்றைக் கடாக்ஷித்து அருளிச் செய்கிறார்
ஆவணி விஜய முஹூர்த்தம் சரவண நக்ஷத்ரம் ஸ்ரீ வாமன திரு அவதாரம் )

திருமஞ்சனம் செய்தால் பின்பு திரு மேனிக்கு அலங்காராமாக சாத்துகைக்கு
உருப்பானவை பாகத் தான் தேடி வைத்த –
அங்க ராகாதிகளையும் காட்ட இசைந்து வருகைக்கு உடலாக அவனுக்கு
அபிமதமான அபூப பலாதிகளையும் முன்னிட்டு –
அவன் பக்கல் தனக்கு உண்டான ஸ்நேஹாதிகளையும் சொல்லி –

புழுதி அளைந்த பொன் மேனி காண நான் மிகவும் விரும்பி இருப்பேன் -ஆனாலும் கண்டவர்கள் –
ஒருத்தி பிள்ளை வளர்த்தபடி என் -என்று பழிப்பார்கள் –
அவ்வளவுமேயும் அன்றி -நீ புழுதியும் உடம்புமாய் இருக்கிறபடியை காணில்
உனக்கு அபிமதையான நப்பின்னை பிராட்டி சிரிக்கும் -என்றால் போலே சிலவற்றையும் சொல்லி –
அவனை வருந்தி உடன்படுத்தி மஞ்சனமாட்டிய பிரகாரத்தையும் –

தாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு
பாவன பிரகர்ஷத்தாலே -தத் அவஸ்தாபன்னராய் கொண்டு
அவள் அப்போது பேசின பாசுரங்களை எல்லாம் -தத் காலம் போலே அவனைக் குறித்து பேசி –
அவனை மஞ்சனம் ஆட்டுகையாகிற ரசத்தை தாமும் அனுபவித்து
ஹ்ருஷ்டராகிறார் இத் திருமொழியில்-

————————————————————

வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 4-1 – –

பதவுரை

வெண்ணெய் அளைந்த–வெண்ணெ யளைந்ததனாலான
குணுங்கும்–மொச்சை நாற்றத்தையும்
விளையாடு புழுதியும்–விளையாடுவதினாற் படிந்த புழுதியையும்
கொண்டு–(உடம்பிற்) கொண்டிருந்து, (அதனால்)
இவ் விரா–இன்றை இரவில்
தேய்த்து கிடக்க–(உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட)
உன்னை–உன்னை
திண்ணென–நிச்சயமாக
நான் ஒட்டேன்–நான் ஸம்மதிக்க மாட்டேன்,
எண்ணெய்–(தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும
புளி பழம்–புளிப் பழத்தையும்
கொண்டு–ஸித்தமாக வைத்துக் கொண்டு
இங்கு–இங்கே
எத்தனை போதும்–எவ்வளவு காலமாக (வெகு காலமாக)
இருந்தேன்–(உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன்,
நண்ணல் அரிய பிரானே–(ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே’
நாரணா–நாராயணனே’
நீராட–நீராடுவதற்கு
வாராய்–வர வேணும்.

வெண்ணெய் அளைந்த குணுங்கும் –
வெண்ணெய் அமுது செய்யும் போது அதில் உண்டான அபிநிவேச அதிசயத்தாலே –
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -என்று
கை நிறையும் அத்தனையும் வயிறு நிறையும் என்னும்  மௌவ்க்யத்தாலே –
வெண்ணெய் தாழிக்கு உள்ளே திருக் கைகள் உள்ளளவும்  நீட்டி அள்ளியும்-
முழுதும் வெண்ணெய் அளைந்து -என்கிறபடியே
வெண்ணெயை முழுக்க இருந்து அளைந்து – அமுது செய்கையாலே
திருமேனி எங்கும் வெண்ணெய் முடையாய் இறே இருப்பது –

விளையாடு புழுதியும் –
அதுக்கு மேலே -விளையாடப் புக்கால் புழுதியிலே போய் இருந்து அளைந்து விளையாடுகையாலே –
அந்த வெண்ணெய் பசையோடே திருமேனி எங்கும் புழுதியும் பற்றி இறே கிடப்பது கொண்டு –
இப்படி வெண்ணெயால் வந்த குணுங்கு நாற்றத்தையும் –
விளையாடின போதைப் புழுதியும் கொண்டு –

திண்ணென-
திண்ணியதாக-நிச்சயமாக என்றபடி –

இவ்விரா இத்யாதி –
இந்த ராத்ரியிலே உன்னைக் கண்டூதியாலே -( அரிப்பாலே )
உடம்பை படுக்கையில் தேய்த்துக் கொண்டு கிடக்க நான் சம்மதியேன்

திண்ணென ஒட்டேன்-
நிச்சயமாக உன்னை இப்படி கிடக்க ஒட்டேன் –
நான் நீராட்டியே விடுவேன் -என்ன

எனக்கு குளிக்கைக்கு வேண்டும் அவை கொண்டு வந்தாயோ -என்ன –

எண்ணைய்-இத்யாதி –
உன் திருமேனிக்கு முந்துற சாத்துகைக்கு எண்ணைய் காப்பும் –
பின்பு அது கழற்றுகைக்கு புளிக் காப்பும் கொண்டு
அநேகம் போது இல்லையோ நான் இருக்கிறது –

நண்ணல் அரிய பிரானே –
ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத
உபகாரன் ஆனவனே –

நாரணா –
மேன்மைக்கும் நீர்மைக்கும் பிரகாசமான திரு நாமம் இறே இது –
நீர்மையிலே இறே இவளுக்கு இப்போது நோக்கு

நீராட வாராய் –
ஒட்டேன் என்று பிரேமத்தால் சொன்னாலும் –
உபகரணங்களை முன்னிட்டாலும்
பிரயோஜனம் இல்லையே –
நீ வந்தால் இறே பிரயோஜனம் உள்ளது –
ஆன பின்பு நீராட வர வேணும் என்று அபேஷிக்கிறாள்-

—————————————————–

(ஊராகத் தொட்ட அவதாரம் இது
உலகத்தைத் தொட்ட அவதாரம் அது
திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே )

கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 – –

பதவுரை

நின்ற–நிலையாய் நின்ற
மராமரம்–(ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே’
கன்றுகள்–பசுவின் கன்றுகள்
ஓட–வெருண்டோடும்படி
செவியில்–(அக் கன்றுகளின்) காதில்
கட்டெறும்பு பிடித்து இட்டால்–கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால்
(அதனால் அக் கன்றுகள் வெருண்டு)
தென்றி–சிதறிப் போய்
கெடும் ஆகில்–(கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால்,
(பின்பு நீ,)
வெண்ணெய்–வெண்ணையை
திரட்டி–திரட்டி
விழுங்குமா– விழுங்கும்படியை
காண்பன்–பார்ப்பேன்,
(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி)
இன்று–இந்த நாள்
நீ பிறந்த–நீ அவதரித்த
திரு ஓணம்–ஸ்ரவண நஷத்ரமாகும் – (ஆகையால்)
நீ–நீ
நீர் ஆடவேண்டும் –எம்பிரான்’ ஓடாதே வாராய் –

கன்றுகள் சிதறி ஓடிப் போனால் -பசு கறவாது ஆகையாலே -பால் கிடைக்காமல் போகவே –
உனக்கு ஜீவனமான வெண்ணெய் குறைந்து விடும் -என்று கருத்து –

கன்று இத்யாதி –
இவள் அழைக்கச் செய்தேயும் வாராதே -லீலாபரனாய் நின்று –
கன்றுகள் வெருண்டு ஓடுகிறது காண்கைக்காக-அவற்றின் செவியிலே கட்டெறும்புகளைப் பிடித்திட –
அத்தைக் கண்டு சொல்கிறாள்-

கன்றுகள் வெருண்டு  ஒடும்படியாக அவற்றின் செவியிலே முறியக் கடிக்கும் கட்டெரும்புகளை பிடித்து இட்டால் –
தென்றி இத்யாதி –
வெருண்டு ஓன்று போன வழி ஓன்று போகாதே சிதறி -காண ஒண்ணாதபடி ஓடிப் போய் விடுமாகில் –

வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் –
வெண்ணெயில் உண்டான விருப்பத்தால் -அத்தை திரட்டி  இருந்து –
நீ விழுங்கும் படியை காணக் கடவன் –

கன்று உண்டால் அன்றோ பசு கறக்கலாவது
பசு கறந்தால் அன்றோ பால் உண்டாவது
பால் உண்டாய் வெண்ணெய் உண்டாக வேணும்
ஆகையால் உன்னுடைய ஜீவனம் கிடாய் குறையப் புகுகிறது -என்கை-

நின்ற மரா மரம் சாய்த்தாய் –
ஓர் ஆஸ்ரிதனுடைய -சுக்ரீவனின் -ரிஷ்யமுக பர்வதத்தில் விருத்தாந்தம்
அதி சங்கையை போக்குகைக்காக –
நினைத்தபடி இலக்கு குறிக்க  ஒண்ணாதபடி  நெருங்கி நின்ற மராமரங்களை மறுபாடு உருவ எய்து சாய்த்தவனே –

நீ பிறந்த திருவோணம் இன்று –
நீ அவதரித்த திருவோணம் நஷத்ரம் காண் இன்று –

இது தான் வைஷ்ணவ நஷத்ரம் ஆகையாலும் –
அவதாராந்தரங்களிலே இந்த நஷத்ரம் அந்வயம் உண்டாக கூடுகையாகையாலும்
தர்மி ஐக்யத்தை பற்றி சொல்கிறது –

நீ நீராட வேண்டும் –
பிறந்த நாளைக்கும் குளியாது இருப்பார் உண்டோ –
சர்வதா நீ இன்று திரு மஞ்சனம் செய்ய வேணும் என்ன –

மாட்டேன் -என்று ஓடப் புக்க வாறே
எம்பிரானே ஓடாதே வாராய் –
என்னுடைய நாயகனே -ஒடலாகாது காண் -வாராய் -என்கிறாள் –

—————————————–

(ஸூத்ர தாரி
அர்ச்சிராதி போவதை நாடகமாக நடத்திக் காட்டுகிறானே வைகுண்ட ஏகாதசி அன்று
மூன்றாம் சுற்றில் வைகுண்ட வாசலில் எதிரில்
அது விராஜா நதி
சந்த்ர புஷ்கரணி
ஆயிரம் கால் மண்டபம் -ஸஹஸ்ர தூண்
மணல் வெளி நடை காட்டி அருளி
திரு மா மணி மண்டபம் நடுவில் -தனியாக ஆனந்தமாக எழுந்து அருளி
ஆழ்வார்கள் அனைவரும் பின்னால் சேவித்துக் கொண்டு இருப்பார்கள் –
தான் ஜீவாத்மா போல் நாடகம்
அதே போல் நீராட்டமும்
அழுக்கு போக்க காட்டி அருளுகிறார் –
ப்ரக்ருதி அழுக்கு -எண்ணெய்
தேக அழுக்கு -புளிப்பழம் )

பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரோடு நெல்லிக் கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய் -2 4-3 – –

பதவுரை

பேய்ச்சி–பூதனையினுடைய
முலை–முலையை
(அவளுடைய உயிரோடும்)
உண்ண–(நீ) உண்டு விட
கண்டு–(அதைப்) பார்த்தும்
(நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க, அங்ஙனம் செய்யாமல்)
பின்னையும் என் நெஞ்சம் நில்லாது–பின்பும் என் மனங்கேளாமல்
ஆய்ச்சியர் எல்லாரும்–இடைச்சிகள் எல்லாரும்
கூடி–ஒன்று கூடி
அழைக்கவும்–கூப்பாடு போட்டுக் கதறவும்
நான்–(உன் மேல் அன்பு கொண்ட) நான்
முலை தந்தேன்–முலை (உண்ணக்) கொடுத்தேன்
நெல்லியொடு–நெல்லியை யிட்டு
காய்ச்சின–காய்ச்சின
நீர்–வெந்நீரை
கடாரத்தில்–சருவத்தில்
பூரித்து வைத்தேன்–நிறைத்து வைத்திருக்கிறேன்
வாய்த்த–பொருந்திய
புகழ்–யசஸ்ஸையும்
மணி–நீல மணி போன்ற
வண்ணா–நிறத்தையுமுடைய கண்ணனே!
மஞ்சனம் ஆட–நீராட
நீ வாராய் –

பேய்ச்சி இத்யாதி –
வஞ்சனையால் வந்த பேய்ச்சி -1-4-11–என்கிறபடியே –
தன் வடிவை மறைத்து –
என் வடிவைக் கொண்டு வந்த பேய்ச்சி உடைய முலையை –
அவள் முடியும்படி உண்டமை கண்டு இருக்கச் செய்தே

பின்னையும் நில்லாது என் நெஞ்சம் –
இத்தைக் கண்டால் அஞ்சி ஓட வேண்டி இருக்க –
பின்னையும்
என் நெஞ்சானது -உன் பக்கல் சிநேகம் அடியாக தரிக்க மாட்டாதே –

ஆய்ச்சி எல்லாரும் கூடி அழைக்கவும் –
பேய்ச்சி பட்டுக் கிடக்கிற படியும் –
நீ அவள் மேல் இருந்து முலை உண்கிறபடியையும் கண்டு –
இடைச்சிகள் எல்லாரும் பீதைகளாய் கூப்பிடச் செய்தேயும் –
நான் அஞ்சாமல் வந்து உன்னை எடுத்து –
முலையைத் தந்தேன் –
இப்படி அன்றோ எனக்கு உன் பக்கல் உண்டான சிநேகம் –
ஆன பின்பு நான் சொன்னது செய்ய வேணும் காண் -என்கை –

ஆதாய கிருஷ்ணம் ஸந்த்ரஸ்தா யசோதாபித் விஜோத்தமா
கோ புச்ச பிராமணே நாத பால தோஷம பாகரோத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –

காய்ச்சின நீர் இத்யாதி –
உன்னுடைய திருமேனிக்கு அனுகுணமாக நெல்லியோடே காய்ச்சின
திரு மஞ்சநத்தை கடாரத்திலே பூரித்து வைத்தேன் –

வாய்த்த இத்யாதி –
பேய்ச்சி உடைய வஞ்சனையில் அகப்படாதே -அவளை நிரசித்து –
உன்னை நோக்கித் தருகையாலே -நன்றான புகழை உடையவனாய் –
அனுபவிப்பார்க்கு ஆகர்ஷகம் ஆகும்படி
நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனே –

மஞ்சனம் ஆட நீ வாராய் –
மாணிக்கத்துக்கு மாசு ஏறினால் போல் -உன் திருமேனியில் வந்தேறியான
புழுதி முதலானவை போம் படி திருமஞ்சனம் செய்ய வர வேணும் –

——————————————-

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 – –

பதவுரை

கஞ்சன்–கம்ஸனுடைய
புணர்ப்பினில்–கபடமான ஆலோசனையினாலே
வந்த–(நலிவதாக) வந்த
கடிய–(அஸுரா வேசத்தாலே) க்ரூரமான
சகடம்–சகடத்தை
உதைத்து–(திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு,
வஞ்சகம்–வஞ்சனை யுள்ள
பேய் மகள்–பூதனை யானவள்
துஞ்ச–முடியும்படி
முலை–(அவளுடைய) முலையிலே
வாய் வைத்த–வாயை வைத்த
பிரானே–உபகாரகனே!
(உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)
மஞ்சளும்–மஞ்சளையும்
செங்கழுநீரின் வாசிகையும்–(நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும்
நாறு சாந்தும்–பரிமளிதமான சந்தநத்தையும்
அஞ்சனமும்–(கண்களிலிடும்) மையையும்
கொண்டு வைத்தேன் —
அழகனே! நீராட வாராய் –

கஞ்சன் இத்யாதி –
கம்ச ப்ரேரிதனாய் வந்த அதி க்ரூரரான சகடாசுரனை -முலை வரவு தாழ்த்தி
சீறி நிமிர்த்த திருவடிகளாலே கலக்கு அழியும்படியாக உதைத்து

வஞ்சகம் இத்யாதி –
தாய் வடிவு கொண்டு வந்த வஞ்சகியான பேய்ச்சி முடியும்படியாக
அவள் முலையிலே-உன் திருப் பவளத்தை வைத்து -உண்ட உபகாரகன் ஆனவனே
சகடாசுரன் கையிலும் பூதனை கையிலும் அகப்படாமல்
உன்னை நோக்கி தந்த உபகாரகன் ஆனவன் அன்றோ என்கை –

மஞ்சளும் இத்யாதி –
உன் திருமேனிக்கு நிறம் பெற சாத்துகைக்கு ஈடான மஞ்சளும் –
உன் திருமுடிக்கு அலங்காரமாக சாத்த தக்க செங்கழுநீர் வாசிகையும் –
உன் திருமேனிக்கு அனுகுணமாம்படி ஆறிக் குளிர்ந்து மணத்து இருக்கிற சாந்தும் –
உன்னுடைய திருக் கண்களுக்கு சாத்துகைக்கு ஈடான அஞ்சனமும் கொண்டு வந்து வைத்தேன் –

அழகனே நீராட வாராய் –
இவை எல்லாம் மிகையாகும்படி  அழகை உடையவனே –
உன் அழகு தோன்றும்படி திரு மஞ்சனம் செய்ய வர வேணும் –

(சர்வ ஸ்வ தானம் செய்து -அடங்காதவர்களையும் சேர்த்துக் கொள்ளப் பார்க்கிறான்
திருக்கார்த்திகை -செங்கழுநீரின் திரு வாசிகையில் எழுந்து அருளி
சக்கரத்தாழ்வார் சந்நிதி எழுந்து அருளி சொக்கப்பானை –
அன்று தான் அத்யயன உத்சவம் விண்ணப்பம்
அலங்கார அர்த்தம் -நெற்றியில் அடி அகன்று நுனி கூர்மையாக தெலுங்கு தேசம் கல்யாண வழக்கம் –
பார்ஸிங்கம் என்பர் இத்தையே )

————————————————-

அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உருதியேல் நம்பீ
செப்பிள மென் முலையாளர்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் நீ இங்கே வாராய் -2 4-5 – –

பதவுரை

நம்பி–(பால சாபலத்தால்) பூர்ணனே!
செப்பு–பொற் கலசம் போன்ற
இள மெல் முலையார்கள்–இளமையான மெல்லிய முலையை யுடைய மாதர்கள்
சிறுபுறம் பேசி–(உன் மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி
சிரிப்பர்–பரிஹஸிப்பார்கள். (அன்றியும்),
பாலில்–பாலிலே
அக்காரம்–வெல்லக் கட்டியை
கலந்து–சேர்த்துப் (பிசைந்து)
அப்பம்–அப்பத்தையும்
கலந்த–(அப்படியே) சேர்ந்த
சிற்றுண்டி–சிற்றுண்டியையும்
சொப்பட–நன்றாக
நான் சுட்டு வைத்தேன்
(நீ அவற்றை)
தின்னல் உறுதி ஏல்–தின்ன விரும்பினாயாகில்
சொப்பட–நன்றாக
நீர் ஆட வேண்டும்
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்சலி
இங்கே வாராய் –

அப்பம் இத்யாதி –
அப்பத்தையும் அத்தோடு சேர்ந்த சிற்றுண்டி ஆகிற அபூப விசேஷத்தையும் –
அக்காரம் பாலில் கலந்து -பாலிலே கருப்பு கட்டியை இட்டு பிசைந்து

சொப்பட இத்யாதி -நன்றாக தின்னல் உருதியேல் நம்பீ –
பிள்ளைத் தனத்தில் பூர்த்தியை  உடையவனே -அமுது செய்ய வேணும் என்று –
அதிலே உற்று இருந்தாயாகில் -நீராட வேண்டும் என்று மேலே அந்வயம்-

செப்பு போலே இருக்கிற சந்நிவேசத்தை உடைத்தாய் –
இளையதாய் -ம்ருதுவாய் -இருக்கிற முலையை உடையவர்கள் –
சிறு புறம் பேசிச் சிரிப்பர் -நீ நீராடாமல்  இருக்கிற வடிவை கண்டால் -தோற்றின புன்மைகளை
காணாத இடங்களில் சொல்லி சிரியா நிற்பர்கள்

சிறுமை -புன்மை
புறம் பேசுகையாவது -காணாத இடத்தே சொல்லுகை

சொப்பட நீராட வேண்டும் –
அதுக்கு இடம் அறும்படியாகவும் நன்றாக நீராட வேணும் -என்ன –
அவ்வளவிலும் அவன் வாராமையாலே –

சோத்தம்பிரான் இங்கே வாராய் –
பிரானே உன்னைத் தொழுகிறேன்
இங்கே வாராய் என்று அழைக்கிறாள்

——————————————-

எண்ணைய்க் குடத்தை  உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே
வண்ணம் அழகிய பிரானே மஞ்சனமாட நீ வாராய் – 2-4 6- –

பதவுரை

எண்ணெய் குடத்தை–எண்ணெய் நிறைந்த குடத்தை
உருட்டி–உருட்டி விட்டு
இள பிள்ளை–(உறங்குகிற) சிறு குழந்தைகளை
கிள்ளி–கையால் வெடுககெனக் கிள்ளி
எழுப்பி–(தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து
கண்ணை–கண் இமையை
புரட்டி விழித்து–தலை கீழாக மாற்றி (அப் பூச்சி காட்டி) விழித்து
கழை கண்டு–பொறுக்க முடியாத தீம்புகளை
செய்யும்–செய்து வருகிற
பிரானே–ஸ்வதந்த்ரனே!
கனிகள்–(நில்ல) பழங்களை
உண்ண–(நீ) உண்ணும்படி
தருவன்–(உனக்குக்) கொடுப்பேன்
ஒலி–கோஷியா நின்ற
கடல்–கடலினுடைய
ஓதம்–அலைகளை யுடைய
நீர் போலே–ஜலம் போலே
வண்ணம் அழகிய–திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற
நம்பீ–உத்தம புருஷனே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –

எண்ணை இத்யாதி –
அகத்தில் உள்ளார் எல்லாரும் அந்ய பரராம்படியாக எண்ணைய்க் குடத்தை  உருட்டி-
அத்தை இறைப்பார் வழிப்பராய் கொண்டு வ்யாகுலா படா நிற்கச் செய்தே-

இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி –
அத்தை விட்டு இங்கே ஓடி வர வேண்டும் படி -கிடந்தது உறங்குகிற
சிறு பிள்ளையை தேள் எறிந்தால் போல் வீரிட்டு கூப்பிடும்படியாக கிள்ளி எழுப்பி –

கண்ணைப் புரட்டி விழித்து-
அருகு நின்றவர்கள் முகத்திலே -அப் பூச்சி -என்று கண்ணின் இமையை
அகவாய் புறவாயாக புரட்டி விழித்து –

கழகண்டு செய்யும் பிரானே –
இப்படி துஸ் சஹமான தீம்புகளை செய்யும் ஸ்வ தந்த்ரன் ஆனவனே –
ஒருத்தர் கையிலும் அடங்காதானாய் இரா நின்றாயே ஆனாலும் நான்
இப்போது சொல்லிற்று செய்ய வேணும் காண் என்ற கருத்து –

உண்ணக் கனிகள் தருவன்-
நீ விரும்பி அமுது செய்யும்படி நாவல் பழம் முதலான பழங்களை தருவன் –

ஒலி கடல் இத்யாதி –
கோஷிக்கிற கடலின்  திரைக் கிளப்பத்தை உடையான ஜலம் போலே
திருமேனியின் நிறம் அழகிய நம்பீ

மஞ்சன் ஆட நீவாராய் –
உன் திரு மேனியில் அழகு தோன்றும்படி
திருமஞ்சனம் ஆட நீ வர வேணும் –

—————————————–

கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் எம்பிரானே
சிறந்த நல் தாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய் – 2-4 7- –

பதவுரை

எம்பிரானே-!
கறந்த–(அந்தந்த காலங்களில்) கறந்த
நல் பாலும்–நல்ல பாலையும்
தயிரும்–தயிரையும்
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்–(தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும்,
பிறந்ததுவே முதல் ஆக–(நீ) பிறந்தவன்று தொடங்கி
பெற்று அறியேன்-கண்டறியேன்
சிறந்த நல் தாய்–‘(எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்
(பிள்ளை மேல் குற்றம் உண்டானாலும் மறைக்கக் கடவ நல் -சிறந்த தாயார் )
அலர் தூற்றும்–பழி சொல்லுகின்றாளே
என்பதனால்–என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால்
பிறர் முன்னே–அயலா ரெதிரில்
மறந்தும்–ப்ராமாதிகமாகவும்
உரை ஆட மாட்டேன்–(உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன்
மஞ்சனம் ஆட நீ வாராய்-

கறந்த இத்யாதி –
பிராப்த காலங்களிலே கறந்த நல்ல பாலும் –
பாலுக்கு நல்லது ஆவது நாழியும் உழக்கு நெய் போருகை
தயிரும் -அந்த  பாலிலே உறைந்த தயிரும்

கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் –
அப்படி இருந்துள்ள தயிரை கடைந்து –
தாழி யிலே சேர்த்து உறி மேல் வைத்த வெண்ணெயும்

பிறந்த இத்யாதி –
நீ பிறந்த அன்று தொடங்கி-என் நாயகனே -இவை நான் பெற்று அறியேன் –

சிறந்த இத்யாதி –
குற்றம் உண்டானாலும் மறைக்க கடவ மிகவும் ஸ்நேகினியான
தாயானவள் தான் பழி தூற்றா நின்றாள் என்று -லோகம் சொல்லும் அத்தை பற்ற –
அந்யருடைய முன்பு அபூர்த்தி பூர்வகமாகவும் வாய் விட மாட்டேன்

மஞ்சனம் ஆட நீ வாராய் –
இப்படி உன்னுடைய ஸ்நேகிநியான எனக்கு பிரியமாக
நீ மஞ்சனம் ஆட வர வேணும் –

—————————————

கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –

பதவுரை

கன்றினை–கன்றினுடைய
வால்–வாலிலே
ஓலை கட்டி–ஓலையைக் கட்டி
(கன்றை)–(அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு) கன்றை
(எறி குணிலாகக் கொண்டு, அஸுராவேசமுள்ள விளா மரத்தின்)
கனிகள்–பழங்கள்
உதிர–(கீழே) உதிர்ந்து விழும்படி
எறிந்து–வீசி
பின்–பின்பு
ஓடி தொடர்ந்து–ஓடிப் போய்
ஓர் பாம்பை–(காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை
பிடித்துக் கொண்டு–பிடித்துக் கொண்டு
ஆட்டினாய் போலும்–ஆட்டினவனோ தான் (நீ);
நம்பி–ஒன்றிலும் குறைவில்லாதவனே!
(நான்)
நின் திறத்தேன் அல்லேன் –உன் விஷய மொன்றையு மறியாத வளாயிரா நின்றேன்
(அது கிடக்கட்டும்;)
நீ பிறந்த–நீ அவதரித்த
நல் திரு நாள்–திரு நிஷத்திரமாகும் (இந் நாள்);
(ஆகையால்)
நீ நின்று நீர் ஆட வேண்டும்
நாரணா ஓடாதே வாராய்

கன்றினை இத்யாதி –
கன்றுகள் மேய்க்க போன இடத்தே -வெருண்டு துள்ளி ஓடும் அது காண்கைக்காக
ஒரு கன்றை வாலிலே ஓலையைக் கட்டி -உன்னை நலிகைக்காக கன்றுகளின் நடுவே கலசி வந்த
நின்றதோர் ஆசுரமான கன்றை குணிலாகக் கொண்டு ஆசூரமான விளா வினுடைய
பழங்கள் உதிர எறிந்து –

பின் இத்யாதி –
அதுக்கு பின்பாக ஓடிச் சென்று -ஒரு பாம்பை பிடித்து கொண்டு ஆட்டினாயோ  தான் –
நீ இப்போது செய்கிற தீம்பால் அவையும் செய்தாயாக நான் கேட்டதும் கூடும் இறே
(போம் பழி எல்லாம் அமணன் தலை மேல் போமே
கூனே சிதைத்த உண்டை வில் கோவிந்தா
சமந்தக மணி வ்ருத்தாந்தமும் அனுசந்தேயம் )
துடர்ந்து -என்று கதி வாசியாய் சென்று என்றபடி

நின் இத்யாதி –
உன் படிகள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை –
அது கிடக்கிடு

நீ பிறந்த திரு நல் நாள் –
நீ அவதரித்த விலஷனமான திரு நட்ஷத்ரம் இன்று காண்

நன்று நீராட வேண்டும் –
நன்றாக நீ  திரு மஞ்சனம் செய்ய வேணும் –
ஒரு நாளும் நீராடாதாரும் பிறந்த நாளில் நீராடாதார் இல்லை இறே

நாரணா நீராட வாராய் –
சர்வ ஆத்மாக்களோடும் ஒழிக்க ஒழியாத சம்பந்தத்தை உடையவனே
என்னுடைய சொல்லை மறுத்து ஒடலாகாது காண் -வாராய் –

————————————-

பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9 – –

பதவுரை

பூணி–பசுக்கள் கட்டிய
தொழுவினில்–கொட்டகையிலே
புக்கு–நுழைந்து
புழுதி அளைந்த–புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த
பொன் மேனி–(உனது) அழகிய உடம்பை
காண–பார்ப்பதற்கு
பெரிதும்–மிகவும்
உகப்பன்–(நான்) விரும்புவேன்
ஆகிலும்–ஆனாலும்
கண்டார்–(உன்னைப்) பார்ப்பவர்கள்
பழிப்பர்–‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள்
(அன்றியும்)
எத்தனையும் நாண் இலாதாய்–சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே!
நப்பின்னை–நப்பின்னையானவள்
காணில்–நீ இப்படியிருப்பதைக் கண்டால்
சிரிக்கும்–சிரிப்பாள்
என் மாணிக்கமே! (என்) மணியே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –

பூண் இத்யாதி –
பசுக்களை அடைத்து திறந்து விடும் தொழுவிலே புக்கு –
ஜாதி உசிதமாக தொழுக்களிலே புகுந்து -விளையாடா நிற்கும் இறே –

புழுதி அளைந்த பொன் மேனி –
பால்ய அனுகுணமாக புழுதியை இருந்து அளைகையாலே
அது திருமேனி எங்கும் வியாப்தம் ஆனாலும் பொன்னுக்கு புழுதி ஏறினால் போல்
இருக்கும் படியைப் பற்ற சொல்லுகிறது

காணப் பெரிதும் உகப்பன் –
நீராடிக் காண்பதிலும் முக்த பாவம் தோற்றுகையாலே
இப்படி இருக்கிற உன் திருமேனியை காண்கைக்கு மிகவும் விரும்பி இருப்பன் –

ஆகிலும் கண்டார் பழிப்பர் –
நான் உகந்து இருந்தாலும் உன்னைக் கண்டவர்கள் –
ஒருத்தி பிள்ளை வளர்த்த படி என் -என்று ஏசுவார்கள் –

நாண் இத்தனையும் இலாதாய்
ஏக தேசமும் லஜ்ஜை இல்லாதவனே

நற்பின்னை காணில் சிரிக்கும் –
நீ புழுதியும் உடம்புமாய் இருக்கிற படியை
நற்பின்னை காணும் ஆகில் மைத்துனன் ஆனமையால் சிரிக்கும் –
நாட்டார் பழிக்கு அஞ்சுகிற  மாத்ரமோ -நற்பின்னை சிரிப்புக்கு  லஜ்ஜிக்க வேண்டாவோ
நீ செய்யாது ஒழிகிறது நிர் லஜ்ஜன் ஆகையாலே இறே என்று கருத்து –

மாணிக்கமே  என் மணியே –
வடி வழகுக்கு  ஒன்றே உபமானம் ஆவது ஓன்று இலாமையாலே
அங்கும் இங்கும் கதிர் பொருக்குகிறாள்
மாணிக்கம்  போலேயும் -மரகதம் போலேயும் இருக்கிற வடிவு அழகை உடையவனே -என்கை

மஞ்சனம் ஆட நீ வாராய் –
இப்படி இருக்கிற உன் திருமேனியில் வந்தேறியான
அழுக்கு கழிந்து விளங்கும் படி
திரு மஞ்சனம் ஆட வர வேணும் –

———————————-

அவதாரிகை –
நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை
பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10- –

பதவுரை

கார்–காளமேகத்திற் காட்டிலும்
மலி–சிறந்த
மேனி நிறத்து–திரு மேனி நிறத்தை யுடைய
கண்ண பிரானை–கண்ண பிரானை
உகந்து–விரும்பி
வார் மலி–கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற
கொங்கை–ஸ்தனங்களையுடைய
அசோதை–யசோதைப் பிராட்டி
மஞ்சனம் ஆட்டிய–நீராட்டின
ஆற்றை–ப்ரகாரத்தை,-
பார்–பூமியிலே
மலி–சிறந்த
தொல்–பழமையான
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சீர் மலி–அழகு நிறைந்த
செந்தமிழ்–செந்தமிழாலாகிய
பாடல்–(இப்) பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்கள்
யாதும்–சிறிதும்
தீவினை இலர்–பாவமில்லாதவராவர்.

கார்மலி மேனி நிறத்து –
நீர் கொண்டு எழுந்த காள மேகத்தில் காட்டில் மிகுத்து இருந்துள்ள திருமேனி நிறத்தை உடைய –

கண்ண பிரானை உகந்து –
ஆஸ்ரிதனுக்கு சுலபனாய் –
உபகாரனும் ஆனவனை ஆதரித்து கொண்டு

வார்மலி இத்யாதி –
கச்சில் அடங்காமல் -விம்மும்படியான முலையை உடைய
யசோதை பிராட்டி மஞ்சனம் ஆட்டிய பிரகாரத்தை

பார்மலி இத்யாதி –
பூமியில் அடங்காத ஏற்றத்தை உடைத்தாய் -பழையதாய் இருந்துள்ள
திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளி செய்த

சீர்மலி செம்தமிழ் வல்லார் –
சீர் மலிகையாவது -சப்த லஷணங்களில் குறைவற்று இருக்கையாலே –
அழகு மிக்கு இருக்கை

அன்றிக்கே –
பகவத் குணங்களால் நிறைந்து இருக்கிற என்னுதல்

செம் தமிழ்
ஆர்ஜவ யுக்தமான தமிழ் –
அதாவது –
சப்தத்தின் உடைய பிரசன்னதையாலே
உள்ளில் கிடக்கிற அர்த்தம் தானே பிரகாசிக்கும் படியாக இருக்கை –

பாடல் –
பாட்டுக்கள் வல்லார்
இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் –

தீவினை யாதும் இலரே
தீவினை ஒன்றும் இல்லாதவர் ஆவர் –
அவர்களுக்கு ஒரு துஷ் கர்மங்களும் இல்லை என்கை-

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம் -50-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

June 16, 2012

(நம் தேர் மா மலைக்கே வேகமாக ஒட்டு
மண் முதல் -தாழ்வரையில் ஆழ்வார் இருக்க
கிளைவித் தலைமக்கள்
காவிய நாயகன் நம்மாழ்வார்
மநோ ரதம் வேகமாக செல்ல
பரமத பங்கம் -திவ்ய தேச கைங்கர்யம் -பாகவத உபதேசம் பண்ணப் பிரிய
ஆழ்வார் வியசனம் அதிகரிக்க
பழிச் சொல் வரும் முன் வேகமாகச் செல்லு
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -தாளிணைக் கீழே தானே வாழ்ச்சி
கங்குலும் பகலும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே என்று அங்கேயே இருந்து
அசையாமல் அருளிச் செய்கிறார் அன்றோ –
குளிர் அருவி வேங்கடம் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -முத்து ஒழுகு வரிசை போல் அருவி பாயும் வேங்கடம்
குறிஞ்சி –
பிரிந்தவர் கூடும் இடம் மலையும் மலை சார்ந்த இடம்
குளிர் அருவிக்கு த்ருஷ்டாந்தம்- தேன் நவின்ற -விண் முதல் நாயகன் – ஸ்ரீ வைகுண்டநாதனின் நீண்ட கிரீடத்தில் சாத்தின முத்து வாசிகை -போல் அருவி
கீழ் பட்ட இடம் தானே ஆழ்வார்
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் செல்ல அங்கே உபதேசம் -இதன் விவரணம் அது
அங்கு செல்வதே கர்தவ்யம் -மலையே புகுவது பொருளே –
பாகவத உத்தமர்கள் பாசுரம் இது )

அவதாரிகை –
இதுக்கு முன்பு இங்கன் இருப்பதொரு ராத்ரி வ்யசனம் அனுபவித்து அறியோம் என்னும்படி-
அவசாதம் மிக்கவாறே –
போத யந்த பரஸ்பரம் -பண்ணி  இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக தலை மகன் வருகிறான் –
வினை முற்றி மீண்ட தலைமகன் –
(ராவண வதம் செய்து முடித்து சீக்கிரம் மீண்ட பெருமாள் போல் )
பதினாலாம் ஆண்டு போன வழியை ஸ்ரீ பரதாழ்வான் ப்ரக்ருதியை அறிகையாலே –
பெருமாள் ஒரு பகலே மீண்டால் போல்
த்வரித்து வருகிறானாய் இருக்கிறது –
தலைமகன் சாரதியைப் பார்த்துச் சொல்லுகிறான் –
(தீர்ப்பாரை –தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை போல் இங்கும் )

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ  கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

பாசுரம் -50-ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை –
தலைவன் மீண்டு வருகையைத் தேர் பாகனிடம் கூறல் –
கிளரொளி இளைமை -2-10-

பதவுரை

வலவ–பாகனே!
ஒண் நுதல்–அழகிய நெற்றியையுடையவளான நாயகியின்
மாமை ஒளி–மேனி நல் நிறத்தின் விளக்கம்
பயவாமை–பசப்பு அடையாதபடி (அதற்கு முன்னமே!)
நம் தேர்–நமது தேர்
விரைந்து நண்ணுதல் வேண்டும்–துரிதமாகச் சென்று சேர வேண்டும்;
(எவ்விடத்திற்கு? என்றால்)
தேன் நவின்ற–வண்டுகள் பாடப் பெற்ற
விண் முதல் நாயகன் நீள் முடி–பரமபதநாதனான பெருமானது நீண்ட திருமடியில் தரித்த
வெள் முத்தம் வாசிகைத்து ஆய்–வெண்ணிறமான முத்துமாலையின் தன்மையதாய்
மண் முதல் சேர்வுற்ற–(முடிதொடங்கி) அடிவாரத்து நிலத்திலே சேரும்படியான
அருவி–நீர்ப்பெருக்கை
செய்யா நிற்கும்–செய்து நிற்கிற
மா மலைக்கு–பெரிய திருமலைக்கு
இன்று கடாக–இப்பொழுது (தேரை)நடத்துவாயாக

வியாக்யானம் –
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை –
ஒள்ளிய நுதலை உடைய இவளுடைய மாமை –
ஒளி உண்டு -நிறத்தில் புகர்-
அது பயப்பதற்க்கு முன்பே -அது விவர்ணம் ஆவதற்கு முன்பே –

(பிரிவாற்றாமையால் துடித்து இருக்க
ஓள் நுதல் உண்டோ என்னில்
தலைமகன் இருக்கும் பொழுது கண்ட இருப்புக்குச் சொல்லலாமே )

ஒண்ணுதல் மாமை –
பத்து மாசம் பெருமாளும் பிராட்டியும் பிரிந்தவோபாதி  இறே இவர்கள் பிரிவும் –
பிரிந்த போன நாளைக்கு பாதேயம் இருக்கிறபடி –
சந்த்ர காந்தாந நாம் ஸூப்ரூம-என்றார் இறே பெருமாள் –
இவ்வழகு இழந்தால் ஆறி இருக்க ஒண்ணாது என்கையும்-(பலிதம்)

விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் –
த்வரித்துக் கொண்டு நம்முடைய தேரானது கிட்ட வேண்டும் –
அவள் தன் வை வர்ண்யத்தாலே நமக்கு பழி இடுவதற்கு முன்பே -நீ த்வரையாலே
அப் பழியைத் துடைத்து தர வேணும் –
(பகவத் த்வராயா நம போல் ஆக வேண்டுமே )

வலவ –
இங்கும் சாரதி கையது போலே காணும் கார்யம்
(அங்கும் பார்த்த சாரதி கையதுவே தானே )

கடா நின்று நண்ணுதல் வேண்டும் –
நடத்தா நின்று கொண்டு நம் தேர் கிட்ட வேணும் –

தேன்  நவின்ற இத்யாதி –
நடத்துகிற உனக்கும் அங்கே போகப் புக்கால்
பிரயோஜனம் உண்டாம்படி காண்-தேசம் இருப்பது -என்கிறான்

தேன் நவின்ற மா மலைக்கே -என்னுதல்-
தேனுண்டு —
வண்டுகள் மது பான மத்தமாய்க் கொண்டு பாடுகிற அவற்றின் உடைய
பாட்டேயாய் இருக்கிற-திருமலை என்னுதல்-

அன்றிக்கே –
தேன் நவின்ற விண் முதல் நாயகன்-என்னுதல்-
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-என்கிறபடியே தேனாக சொல்லப்பட்ட –
விண் முதல் நாயகன் -என்னுதல் –
(நித்ய விபூதி தொடக்கமான அனைத்துக்கும் நாயகன் )

நீண் முடி இத்யாதி –
பிரிந்த நாளில் ஸ்ரமம் எல்லாம் ஆறும்படியாய் காண் தேசம் இருப்பது –
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய நீண் முடி உண்டு –
திரு அபிஷேகம் –
அதில் வெண் முத்து வாசிகை உண்டு-
வெளுத்த முத்து ஒழுங்கு –
அத்தன்மையதாய்-
அதின் படியை உடைத்தாய் –

திருமலை வ்ருத்தாந்தத்துக்கு ஸ்ரீ வைகுண்ட படியை திருஷ்டாந்தமாக சொல்லாம் படி யாய் ஆயிற்று –
இவருக்கு கண்ணால் காண்கிற இடத்திலும் அவ்விடம் விசதமாய் இருக்கிறபடி –
பர்வதத்துக்கு அக்நி  மத்தையை சாதியா நின்றால்-
மகாஸநதிகள் வ்யாப்தி க்ரகன பூமியாய்-
(பக்ஷம் பர்வதம் – சாத்யம் அக்னி -ஹேது புகை
மடப்பள்ளி த்ருஷ்டாந்தம்) இருக்குமா போலே –
இங்குற்ற சீலம் தரை காண ஒண்ணாதோ பாதி யாய் இருக்கையாலே
இவ்விடம் நிலம் அன்று இறே –

சத்கார்ய வாதம் ஆகையாலே -இச் சீலம் அங்கேயும் உண்டு என்று பிரமாணங்கள் சொல்ல-
விச்வசிக்கும் இத்தனை இறே –
கண்ணால் கண்டு அனுபவிகலாவது இங்கே இறே –

மண் முதல் சேர்வுற்று –
பூமி அளவு வந்து கிட்டி-அருவி செய்யா நிற்கும்

மா மலைக்கே –
வழியில் ஸ்ரமம் அடங்கலும் தீருகிறது இறே அங்கே புக்கவாறே –
குளிர் அருவி வேம்கடம் -இறே –

விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர் வுற்ற அருவிகள் ப்ரவஹியா நின்றுள்ள
மாமலைக்கே விரைந்து நம் தேர் நண்ணுதல் வேண்டும் –

ஸ்வாபதேசம்-
இத்தால் ஆழ்வாருடைய ஆற்றாமையை கண்ட பாகவதர்கள் இவரை
ஆஸ்வசிப்பிக்கைக்காக வருகிறபடியை சொல்லுகிறது –
திரு மலையிலே -நிற்கிறவன் சீலத்திலே அகப்பட்டு –
திரு அருவிகளின் நடுவே
இருப்பதைக் கண்டு
பெருமாளை கை பிடித்த பின் -பிராட்டி மிதிலையை நினையாதால் போலே –
திரு நகரியையும் மறந்து
ஆழ்வார் எழுந்து அருளி இருந்த இருப்பை அனுபவிக்க வேணும் என்று
அனுகூலர் அடைய த்வரித்துக் கொண்டு வருகிற படியைச் சொல்லுகிறது –

(ஆழ்வார் தீர்த்தம் இன்றும் ஆழ்வார் நித்ய வாசம் சாதித்து அருளுகிறார் அன்றோ )

தாத்பர்யம்

இருளின் நீட்சியால் தளர்ந்த ஆழ்வாரை
ஆஸ்வசிப்பிக்கைக்காக பாகவதர்கள் விரைந்து மநோ ரதம் செலுத்திய படியை
நாயகியைப் பிரிந்து சத்ரு நிரசனம் பண்ணி திரும்பிய
நாயகன் சாரதி இடம் விரைந்து செல்ல
ஓ சாரதியே நான் நாயகியைப் பிரிந்து பல ஆண்டுகள்
(சீதாப் பிராட்டியைப் பிரிந்து பத்து மாதங்கள் –
பரதாழ்வானைப் பிரிந்து பதினான்கு ஆண்டுகள் –
தேவகிப் பிராட்டியைப் பிரிந்து பத்து ஆண்டுகள் பிரிவு உண்டே )
நெற்றி அழகி கொண்ட நாயகி பிரிவால் மேனி பசலை – விவரணம் அடைந்து உள்ளதே
உன்னாலே தான் இது என்று அனைவரும் பழி சொல்லுவார் -லோக அபவாதம் வாராத படி
ஆதி ராஜ்ய ஸூசகமாக திரு அபிஷேகத்தில் இழைத்த முத்து மாலை போல்
தெளிந்த மலை அருவிகள் பாயும் திரு வேங்கடத்தில் –
அவள் இருக்கும் திவ்ய தேசம் குறித்து தேரை விரைந்து நடத்த வேண்டும் என்று கூறும் பாசுரம் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி 2-3 -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

June 15, 2012

(பன்னிரு திரு நாமப் பதிகம் இது
இதே போல் கேசவன் தமர் –2-7-திருவாய் மொழியும்
கலியனும் )

அவதாரிகை –
கீழில் திருமொழியில் –
இவனுடைய பால்ய அனுகுணமாக முலை உண்கையை மறந்து கிடந்து
உறங்குகிறவனை எழுப்பி -முலை உண்ண வேண்டும்  என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் விடாதே -பஹுமுகமாக நிர்பந்தித்து –
யசோதை பிராட்டி முலை ஊட்டின பிரகாரத்தை –
அவளுடைய ப்ராப்தியையும் ( மாத்ரு பாவநா ) சிநேகத்தையும் உடையராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து பேசி அனுபவித்து இனியரானார் –

அவள் அவனுக்கு
1-காது குத்தி –
2-காது பெருக்கி –
3-காது பணிகளும் இட்டு அனுபவிக்க ஆசைப்பட்டு –
காது குத்துகையாகிற உத்சவத்துக்கு -ஊரில் பெண்களை எல்லாம் அழைத்து விட்டு –
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான பதார்த்தங்களும் சம்பாதித்து வைத்து –
அவனை-காது குத்த -என்று அழைக்க

அவன் -நோம் -என்று அஞ்சி -மாட்டேன் -என்னச் செய்தேயும் –
(இது நோவு அறிகிற பருவம்
கீழே முலை உண்ணாமல் உறங்கினான் )
அவன் அஞ்சாதபடியான வசனங்களை சொல்லியும் –
அவனுக்கு அபிமதமான பதார்த்தங்களை காட்டியும் உடன் படுத்தி கொண்டு –
காது பெருக்கின பிரகாரத்தை –
தாமும் அவளைப் போலே அனுபவிக்க ஆசைப்பட்டு –
தத் அவஸ்த ஆபந்னராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து
அப் பாசுரங்களை பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் இத் திருமொழியில் –

——————————–

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும்  இல்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – 2-3 1- –

பதவுரை

பாடு உடைய–பெருமையை உடைய-ஸூவ ஜன ரக்ஷண பரிவை உடைய –
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோவென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.

போய் இத்யாதி –
பாடுடைய நின் தந்தையும் -போய் -தாழ்த்தான் -புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் –
இடமுடைய நெஞ்சை உடையனான -உன்னுடைய பிதாவும் -பசுக் கடையிலே சென்று வருகிறேன் –
வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று போய் வரவு தாழ்த்தான் –

அன்றிக்கே –
போய் -என்ற இது –
மிகுதிக்கு வாசகமாய் -(போய்ப்பாடு-மிகுதியான பாடு -ரக்ஷணம் )
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணத்தில் மிகவும் அளவு உடையனாய் –
கூர்  வேல் கொடும் தொழிலன் -என்கிறபடியே நீ பிறந்த அன்றே தொடங்கி-
வேலைப் புகர் எழ கடைந்து பிடித்து -தொட்டில் கீழே ஒரு எறும்பு ஊரிலும் –
சிம்ஹத்தின் மேலே சீறுமா போலே சீறி -உன்னை நோக்கிக் கொண்டு திரியும்
பிதாவானவனும் கார்யார்தமாக போன இடத்தே விளம்பித்தான் என்னவுமாம் –

பொரு திறல் கஞ்சன் கடியன் –
பொருகையில்  மிடுக்கை உடையனான கம்சன் -உன்னளவில் மிகவும்
க்ரூரன்-உன்னை நலிகைக்கு இடம் பார்த்து திரிகிறவன் ஆகையால் –
ஆரை வரவிடும் -எது செய்விக்கும் -என்று தெரியாது –

காப்பாரும் இல்லை –
அதுக்கு மேலே விரகு அறிந்து -ரஷிக்க வல்லாரும் இங்கு இல்லை –
ரஷகரான அவர் வந்திலர் –
நானோ அபலை -வேறோர் பரிவர் காண வில்லை -யார்தான் ரஷிப்பார்

கடல் வண்ணா உன்னை –
தன்னேராயிரம் பிள்ளைகள்-என்கிறபடியே -இவ்வூரிலே திரிகிற அநேகம்
பிள்ளைகளுக்கு உள்ளே நானும் ஒருவனாய் திரியா நின்றால்
என்னை  அவர்கள் அறிய புகா நின்றார்களோ என்றால்-
என்னை அவர்கள் அறியப் புகா நின்றார்களோ என்று – நீ நினைக்க வேண்டா –
கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற உன் வடிவழகே உன்னை காட்டிக் கொடாதோ –
இப்படி இருக்கிற உன்னை உணர்ந்து ரஷிப்பாரும் இல்லை -என்னுதல்-

ஒரு விரோதிகளே இல்லை ஆயினும் -அஸ்த்தானே பய சங்கை  பண்ணி
மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான அழகு உடைய உன்னை –
விரோதி பூயிஷ்டமான இவ்விடத்தில் பரிவராய் ரஷிப்பார் யாருமில்லை என்னுதல் –

தனியே போய் எங்கும் திரிதி –
பிள்ளைகள் தன்னோடு திரிகிறாய் என்னவும் ஒண்ணாதபடி –
அவர்களையும் விட்டு தனியே போய் எங்கும் சஞ்சரியா நின்றாய்
அவர்கள் தன்னோடு கூடப் போனால் தான் பிரயோஜனம் என்-

பேய்ப் பால் முலை உண்ட பித்தனே –
பேயானவள் தாய் வடிவை கொண்டு வர -அவளைத் தாயாகவே நினைத்து –
அவள் முலைப்பாலை இருந்துண்ட  பிராந்தன் நீ அல்லையோ –
ஆகையால் -மாயா ரூபிகளான அசுரர்கள் ஒக்க வடிவுடைய
பிள்ளைகளோடு ஒத்த வடிவைக் கொடு வந்து கலசி நின்றாலும் -அவர்களை பிள்ளைகளோ பாதி
தோழன் மாறாக நினைப்பான் ஒருவன் இறே நீ என்கை

கேசவ நம்பீ –
இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

நானே அன்று காண்-
உன்னைக் காது குத்துவதாக ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்கள்-
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான அடைக்காய் முதலானவையும் நான் திருத்தி வைத்தேன் –
ஆன பின்பு நீ காது குத்தும்படி வர வேணும் -என்கிறாள் –

——————————————

வண்ணப் பவள மருங்கினில் சாத்தி மலர் பாத கிண் கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே -திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகு உடைய கனகக் கடிப்பும் இவையா -2 3-2 – –

பதவுரை

நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியை யிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகை யுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.

வண்ணம் இத்யாதி –
ஆகரத்தில் பிறக்கையாலே நிறம் உடைத்தாய் இருந்துள்ள -பவளத்தினுடைய வடத்தை –
அது தனக்கும் அழகு கொடுக்க வற்றான திரு வரையில் சாத்தி –

மலர் இத்யாதி –
தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளில் சதங்கைகளானவை த்வநிக்க-

திரு வரையும் பவள வடமுமான சேர்த்தி அழகு தோற்றும்படியாகவும் –
திருவடிகளில் சாத்தின சதங்கை த்வநிக்கும் படியாகவும்
வர வேண்டும் என்று கருத்து –

நண்ணி இத்யாதி –
அஹங்காராதிகளாலே உன்னை அகன்று திரிகை அன்றிக்கே –
தத் ராஹித்யத்தாலே உன்னைக் கிட்டி –
ஸ்வ சேஷத்வ அனுரூபமாக தொழுகையே யாத்ரையாக இருக்கும் அவர்களுடைய நெஞ்சை –
நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் (பெரிய திருவந்தாதி )-என்கிறபடியே
இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாகக் கை கொண்டு
ஷண காலமும் விட்டுப் பிரியாதே வர்த்திக்கும் –
நாராயணனே நான் அழைக்கிற இவ் விடத்தே வராய் –

எண்ணற்கு அரிய பிரானே –
உன் பக்கல் சிநேகம் இல்லாதவர்க்கு -நினைக்கைகும்  கூட அரியனாய்
இருக்கும் உபகாரனானவனே-

1-ஆஸ்ரிதருக்கு சுலபனாய் இருக்கையும் –
2-அநாஸ்ரிதர்க்கு துர்லபனாய் இருக்கையும் –
3-மங்களா சாசன பரராய் இருப்பார்க்கு தம் பேறாய் இறே இருப்பது –

நீ என்னை அழைக்கிறது -திரியை என் காது எரிய இடுக்கைக்கு அன்றோ என்ன –

திரியை எரியாமே காதுக்கு இடுவன் –
திரியை உன் காதுகளுக்கு எரிச்சல் வாராதபடி
அனுகூலமாக இடுவன் –

கண்ணுக்கு இத்யாதி –
திரி ஏற்றி காது பெருக்கினால் -உனக்கு இடுதலாக சமைத்த –
கண்ணுக்கு மிகவும் அழகை உடைத்தாய் இருக்கிற -பொற் கடிப்புகளான இவையும்
இருக்கிறபடி பாராய் –
அழகும் என்ற இடத்தில் -ச சப்தம் அவ்யயம் –

நன்றும் அழகும் உடைய என்றும் –
கனகப் கடிப்பு என்றும் -சொன்ன இவை இரண்டாலும் –
பணித் திருத்தமும்
உபாதான வைலக்ஷண்யமும் சொல்லுகிறது –

———————————————————–

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ்வாயர்  குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையின்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் 2- 3-3 –

பதவுரை

உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒண் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக் குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
(பாஷ்ய அபூவம் -கூட அபூவம்-அப்பம் -மாஷா அபூவம் அப்பம் வடை)
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ஸ்ரீ யபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸிலே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்து கொண்டு
இங்கே வாராய்:-.

வையம் இத்யாதி –
பொற் கடிப்பு அளவே அல்ல -காது பெருக்கினால் இடும்படியாக பூமி எல்லாம்
பெறும்  பெரு விலையனான-நீண்ட கடலிலே வர்த்திக்கும் பெரிய மகரம் போலே இருக்கிற காதுப்
பணி கொண்டு வைத்தேன்  -என்ன –

நீ இது சொல்லுகிறது -இப்போது என் காதுக்கு திரி இடுகைகாக
அன்றோ -திரி இட்ட போதே காது தினவு தின்று வரும் -எனக்கு வேண்டா என்ன –

வெய்யவே காதில் திரியை இடுவன் –
தினவு-கண்டூதி சமிக்கும்படி –
வெச்சாப்போடே-அல்பமான உஷ்ணத்தை யோடு -காதுகளில் திரியை இடுவன் என்ற
இடத்திலும் -அவன் இசையாமையாலே -இசைகைக்காக –

நீ வேண்டியது எல்லாம் தருவன் –
நீ விரும்பி இருக்கும் அபூப  பலாதிகள் எல்லாம் தருவேன் என்ன-
அவ் வளவிலும் அவன் வாராமையாலே –

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –
இருந்ததே குடியாக குடி (இருந்ததே ஹேதுவாக )உஜ்ஜீவிக்கும்படி இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து –
அது தானே உனக்கு மிகவும் தேஜஸ்சாம்படி இருப்பானாய்-
வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே –
ஒரு பருவத்தின் இடைப் பெண்களை உன்னுடைய ஸுந்த்ர்யாதிகளாலே மதி மயங்கும்படி பண்ணி –
அவர்களுடைய நெஞ்சுக்கு சர்வ காலமும் -விஷயமாம்படி இருப்பானாய் –

மாதவனே
உன்னுடைய நெஞ்சத்து இறை (அபஹரித்து )கொள்ளும் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே –

இங்கு வாராய் என்று
ஸ்துதி பூர்வகமாக அழைக்கிறாள் –

——————————————————–

வண நன்றுடைய வைரக் கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2 3-4 – –

பதவுரை

இக் கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.

வணம் இத்யாதி –
இப்படி ஸ்துத்திக் கொண்டு அழைத்த இடத்திலும் வாராமையாலே -இது தன்னை
சொன்னாகிலும் வருமோ என்று –
இந்த இடை பிள்ளைகள் ஆனவர்கள் -நல்ல நிறத்தை உடைத்தான வயிரக் கடிப்பிட்டு –
ஒழுகு நீண்ட காதானது தோள் அழவும் தாழும் படி பெருக்கி –
தாய்மார் முதலானோர் சொல்லிற்று செய்து மிகவும் குணம் உடையராய் இருக்கிற படி பாராய் –
நீயும் இப்படி இருக்க வேண்டாவோ

கோவிந்தா -நீ சொல்லுக் கேளாய் –
ஸுலப்யதுக்கு  கோவிந்தன் என்று பேர் இட்டு கொண்டு இருக்கிற நீ –
என் சொல்லு  கைக் கொள்ளுகிறாய் இல்லை என்ன –

உன் சொல்லு கேட்டு நான் கடிப்பு இடுவித்துக் கொண்டால் எனக்கு என்ன தருவாய் என்ன –

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் -மிகவும்
அழகியதாய் இருக்கிற இந்த கடிப்பை இட்டால்-

இனிய பலாப் பழம் தந்து –
உனக்கு இனிதான பலாப் பழம் தந்து –

சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் –
நான்-சுணங்கை உடைத்தாய் –
நன்றாய் அழகியதான -முலையை நீ அமுது செய்யும்படி தருவன் நான் என்ன –
சுணங்கு -முலை போல் தோன்றும் நிறம்
நன்றாகை-மிருதுவாக இருக்கை
(சன்னிவேச வை லக்ஷண்யம் )

சோத்தம்பிரான் இங்கே வாராய் –
இப்படி சொன்ன அளவிலும் வாராமையாலே
பிரானே உன்னைக் கும்பிடுகிறேன் -இங்கே வாராய் என்று இரந்து அழைக்கிறாள்

சோத்தம் -என்கிற இது –
அஞ்சலி பண்ணும் அவர்கள் அதுக்கு அனுகூலமாக தாழ்ச்சி தோற்ற
சொல்லுவதொரு சப்த விசேஷம் –

————————————————

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரோடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடிவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன  அப்பம் தருவன் பிரானே திரி இட ஓட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் -2 3-5 –

பதவுரை

பிரான்–தலைவனே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்ஜலி
என்று–என்று சொல்லி
இரந்தாலும்–(வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்–(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ–பூர்ணனே!-க்ருத்ரிம செயல்களால் பூர்ணன் –
நீ–நீ
சுரி குழலாரொடு–சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்–(ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து–கை கோத்து
குரவை பிணைந்து–குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;–(பின்) இங்கே வந்தால்
(நீ அப்படி செய்ததை)
குணம் கொண்டிடுவனோ–(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே–உபகாரகனே!
திரி இட ஒட்டில்–திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்–மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்–பெரிய பெரிய அப்பங்களை
தருவன்–கொடுப்பேன்;
வேய் தட தோளார்–மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு–விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே–கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).

சோத்தம் இத்யாதி –
சோத்தம்பிரான் இங்கே வாராய் -என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –
பிரானே உன்னைத் தொழுகிறேன் என்று -இரந்தாலும் –
என் சொல்லைக் கை கொண்டு -நீ வருகிறாய் இல்லை என்றவாறே –

நீ அழைக்க நான் வந்த இடத்தில் குணம் கொள்ளாமல் –
நேற்று என்னை அடித்தவள் அன்றோ நீ -என்ன –

அதுவோ –
சுரி குழலாரோடு நீ போய்  கோத்து குரவை பிணைந்து இங்கே வந்தால் -குணம் கொண்டாடுவனோ நம்பீ –
ஆளற்ற இடத்தில் நீ போய் -சுருண்ட குழலை உடையராய் இருக்கும் பெண்களோடு கை கோத்து –
குரவை பிணைந்து ஆடி இங்கே வந்தால் பொடியாதே குணவான் என்று உன்னைக் கொள்வனோ நம்பீ
என்று இவள் சொன்னவாறே-

நிருத்தரனாய் நிறக –

அவ்வளவிலே கையில் திரியை எடுத்து -இத்தை இடும்படி வாராய் -என்ன –

அவன் -இது இட ஒட்டேன் -என்ன

பிரானே திரி இட ஓட்டில் பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் –
எனக்கு எல்லாப் படியாலும் உபகாரன் ஆனவனே –
திரி இத்தனையும் இட ஒட்டுதியாகில் -நீ சிறிது சிறிது என்று பொகடப் பொகட நீ விரும்பும்படி
பெரியனவான அப்பங்களை தருவேன் என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –

வேய் இத்யாதி –
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் மூங்கில் போலேயாய் –
பெருத்து இருந்துள்ள தோளை உடையரான பெண்கள் விரும்பும்படியாய் –
இருண்டு நீண்ட திருக் குழலை உடையனான

விஷ்ணுவே -நீ இங்கே வாராய் என்று –
அவன் வைலக்ஷண்யத்தை சொல்லி –
புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

—————————————————-

விஷ்ணுவை மது சூதனன் என்கிறாள் இதில் –

விண்ணெல்லாம்  கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று அறிந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல்வண்ணா காவலனே முலை உணாயே – 2-3 6- –

பதவுரை

விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்–அழுதாய்;
(நீ அப்படி அழுகையில்)
நான்–(தாயாகிய) நான்
விரும்பி–ஆதரங்கொண்டு
உன் வாயில்–உன் வாயிலே
அதனை–(நீ மண் உண்ட) அதை
நோக்கி–பார்க்கும் போது
(அவ் வாயில்)
மண் எல்லாம் கண்டு–லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி–என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று–‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன்;
(உன்னுடைய காதிலே)
புண் ஏதும் இல்லை–புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்–(கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
(அதை மாத்திரம்)
இறை போது–க்ஷண காலம்
பொறுத்து இரு–பொறுத்துக் கொண்டிரு;
நம்பி–பூர்ணனே!
கண்ணா–கண்ணனே!
கார் முகிலே–காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா–கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே–ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.

விண் இத்யாதி –
மண் தின்றாய் -என்று அடித்தவாறே –
ஆ -என்ன –
ஆகாசப் பரப்பு அடங்கலும்
கேட்க்கும்படி அழுத உன்னுடைய வாயில் –
மண் உண்ட சுவடு உண்டாகில் பார்ப்போம் -என்று
விரும்பி அத்தை நான்  பார்த்த அளவில் –

முன்பு போலே வாய் வழியே பூமி எல்லாம் உள்ளே இருக்கிறபடியை கண்டு –
நம்முடைய பிள்ளை என்று இவனை நலிந்தோமே -என்று
என் மனசிலே பயப்பட்டு –
இவன் நம்முடைய பிள்ளை அல்லன் –
சர்வேஸ்வரன் என்று அறிந்தேன் – என்றவாறே –

அஹம் வோ பாந்தவ ஜாத-என்னும் அவனாகையாலே –
இவள் அந்யனாக்கி வார்த்தை சொன்னது சகியாமையாலே அத்தை மறப்பித்து –
தன் பிள்ளை -என்று
இவள் அணைத்துக் கொள்ளும்படி வந்து கிட்டி நிற்க –

அவ்வளவிலே இவள் –
காதுக்கு கடிப்பு இடுவதாக உத்யோகிக்க –
என்னுடைய காது புண் -எனக்கு அது வேண்டா -என்று அவன் சொல்ல –

புண் ஏதும் இத்யாதி –
புண் ஒன்றும் இல்லை -உன்னுடைய காது தண்டு புரளும் –
சற்றுப் போது பொறுத்து இரு நம்பீ என்ன –

அவன் பொறுத்த படியால் ப்ரீதையாய்
கண்ணா –
எனக்கு சுலபன் ஆனவனே

என் கார் முகிலே –
ஜல ஸ்தல விபாகம் பாராமல் -உபகரிக்கும் காள மேகம் போலே
எனக்கு உன்னை உபகரித்தவனே

கடல் வண்ணா –
எனக்கு அனுபாவ்யமான கடல் போன்ற நிறத்தை உடையவனே

காவலனே –
எனக்கு ரஷகன் ஆனவனே –
என்று ஸ்தோத்ரம் பண்ணி
முலை உண்ண  வேணும் என்று அபேஷிக்கிறாள்

———————————————-

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கன்  மாரி காத்துப்  பசு நிரை மேய்ததாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – 2-3 7- –

பதவுரை

முலை–‘முலையையும்
ஏதும்–(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்–(நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி–என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை–(நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு–பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
கல் மாரி–கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து–(இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை–பசுக்களின் திரளை
மேய்த்தாய்–மேய்த்தவனே!
ஒன்று சிலை–ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்–(பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா–த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி–திரு வாய்ப்பாடிக்கு
பிரானே–உபகாரகனே!
தலை நிலா போதே–தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது–உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்–விட்டு வைத்தேன்;
(அப்படி விட்டு வைத்தது)
குற்றமே அன்றே–என்னுடைய அபராதமன்றோ?

முலை இத்யாதி –
இப்படி ஸ்தோத்ரம் பண்ணி முலை உண்ண சொன்னவாறே –
முலை உண்பானாக தொடங்கின அளவிலே –
கடிப்பை எடுத்து காதிலே இட –
அத்தாலே சீறி –
முலை ஏதும் வேண்டேன்  என்று ஓடி –
நீ தருகிற முலையும்-மற்றும் உண்டான அபூபாதிகளும் -வேண்டேன் என்று –
எனக்கு பிடி படாது கை கழிய ஓடி –
நான் பின் தொடர்ந்த அளவில் எனக்கு தரிப்பாக –

நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு –
உன் காதில் இட்ட கடிப்புகளை க்ரோதம் தோற்ற பிடுங்கி –
என் முன்னே எறிந்து பொகட்டு-

அவ்வளவிலே இந்திரன் பசிக் கோபத்தாலே வர்ஷிப்பிக்க –
அதில் ரஷ்ய வர்க்கம் நோவு படாதபடி -மலையை எடுத்து -முன்பு ரஷகம் என்று சொன்ன
கோவர்த்தன கிரி தன்னையே குடையாக எடுத்து –

மகிழ்ந்து –
மலையை சுமந்து கொடு நிற்கிற அளவில் -சற்றும் இளைப்பு இன்றிக்கே –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம்  பண்ணப் பெற்றோம் -என்று உகந்து –

கன் மாரி காத்து –
அந்த கல் வர்ஷத்தில் ஒரு பசு மேலே  ஆதல் -ஒரு இடையன் மேலே ஆதல் –
ஒரு துளி விழாதபடி ரஷித்து-

பசு நிரை மேய்ததாய் –
இன வாநிரை பாடி அங்கே ஒடுங்க-( திருவாய் -7-4-) -என்கிறபடியே –
மலை பசு மேய்க்கிற இடம் தன்னில்
சென்று ஏங்கும் ஒக்க கவிகையாலே -பசுக்களை இடையர் மேய்க்கும்படி பண்ணினவனே-

சிலை ஓன்று இறுத்தாய் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு சுல்கமாக விட்டதாய் -ஒருவரால் பேர்க்க எடுக்க
ஒண்ணாதபடி -அத்வீதியமாய் இருந்துள்ள -ரவ்த்ரமான வில்லை இறுத்தவனே
(வில் விழா –அந்த வில் -ஓன்று -அத்விதீயம் இல்லையே ஆகையால் இங்கு இந்த வியாக்யானம் )

திரிவிக்ரமா –
இந்திரன் இழந்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுக்கைக்காக -எல்லை நடப்பாரைப் போலே
திருவடிகளால் -சர்வ லோகத்தையும் அளந்தவனே –

திரு ஆயர்பாடிப் பிரானே –
திரு ஆய்ப்பாடியில் உள்ள ஜனங்களுக்கு சர்வ பிரகாரத்தாலும்
உபகாரன் ஆனவனே –
(குடை பிடித்த ஒன்றை கீழே சொல்லி –
இங்கு மற்ற ஸர்வ பிரகார ரக்ஷணம் )

இப்படி எல்லாருக்கும் உபகாரன் ஆன-நீ –
என்னுடைய அபேஷிதமும் செய்ய வேணும்  காண் என்று –
முன்பு பறித்து எறிந்த கடிப்புகளை இடுவதாக உத்யோகிக்க –
அவன் அதுக்கு இசையாது ஒழிய –

தலை நிலா இத்யாதி –
தலை செவ்வே நில்லாத இளம் பருவத்திலே உன்னுடைய காதுகளைப்
பெருக்காதே -விட்டு இட்டு வைத்த என்னுடைய குற்றம் அன்றோ –
உன்னை வெறுக்கிறது என் என்று தன் செய்தி தாழ்வை சொல்லி நோவு படுகிறாள் –

——————————————–

என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –

பதவுரை-

(நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது)
என் குற்றமே என்று–‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்–நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
(ஏனெனில்;)
நான் மண் உண்டேன் ஆக–நான் மண் ணுண்டதாகச் சொல்லி
என்னை–(மண் திண்ணாத) என்னை
பிடித்தும்–பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று–அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி–(என் வாயைப்) பார்த்து
அடித்தும்–(என்னை) அடித்தும்
அனைவர்க்கும்–எல்லார்க்கும்
காட்டிற்றிலையே–காட்டின தில்லையோ?
(என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை)
வல் புற்று அரவின்–வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை–விரோதியான கருடனை
கொடி–கொடியாக வுடைய
வாமந நம்பி–வாமந மூ­ர்த்தியே!
(இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்)
உன் காதுகள் தூரும்–உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
(உன்னை யடுத்தவர்கள்)
உற்றன–அடைந்தனவான
துன்பு எல்லாம்–துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்–போக்குமவனே!
பிரானே–உபகாரகனே!
திரி இட்டு–(உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்–(உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன்
(என்கிறாள். )

செல்லுகேன் -என்ற பாடம் ஆன போது –
உன் காதில் திரியை இட்டு விட்டு மெய்யே
கடக்கப் போய் விடுகிறேன் -என்று பொருளாகக் கடவது

என் குற்றம் இத்யாதி –
நீ உன் குற்றம் சொல்லி வெறுக்கிறது -நான் உன் சொல்லிற்று செய்திலன் என்று –
என் குற்றத்தை நினைத்தன்றோ -என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் -என்ன –
உன் குற்றம் இல்லையோ -என்ன –

உன்னை நான் என் செய்தேன் -என்ன –

என்னை நான் மண் உண்டேனாக –
மண் உண்ணாத என்னை
நான் மண் உண்டேனாக நினைத்து –

அன்புற்று நோக்கி –
ஸ்நேஹிதிகளைப் போலே -என்னுடைய வாயிலும் கையிலும் மண் சுவடு உண்டோ என்று பார்த்து –

அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இலையோ –
சுவடு கண்டாரைப் போலே என்னை பிடித்தும் –
அவ்வளவும் அன்றிக்கே –
அடித்தும் –
பாரிகோள் இவன் மண் தின்னும்படி -என்று எல்லோர்க்கும்
காட்டிற்று இலையோ -என்ன

கஸ்மா ன்ம்ருத மதாந் தாத்மன் பவான் பஷிதவான் ரஹ
வதந்தி தாவ காஹ்யேத குமாராஸ்தே அக்ரஜோப்யயம் நாஹம் பஷித வா நம்ப
ஸர்வேம் இத்யாபி ஸம் ஸிந யதி ஸத்ய கிரஸ் தர்ஹி சமஷம் பஸ்யமே முகம் -என்றது அனுசந்தேயம்

வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பீ-
வலிய புற்றிலே  பாதக பீதியாலே கிடக்கும் பாம்புக்கு -பகையான கருடனை த்வஜமாக உடையவனை –
கொடும் கோளால் நிலம் கொண்ட வாமனான முதலியானவனே-

இத்தால்
திரு வனந்த ஆழ்வானை படுக்கையாக கொண்டு –
பெரிய திருவடியை த்வஜமாக கொண்டு இருப்பான் ஒருவன் என்கையாலே –
லோகத்திலே ஒன்றுக்கு ஓன்று சேராதாய் உள்ளவற்றை சேர்த்து நடத்த வல்லனுமாய்-
(வெல்லும் வ்ருத்த விபூதி நாயகன் அன்றோ இவன் )
க்ரூரமாக செய்தவற்றை ந்யாயமாக்கவும் வல்லவன் அன்றோ -என்கை

உன் காதுகள் தூரும்-
இப்படி நீ ஓன்று சொல்ல –
நான் ஓன்று சொல்லிப் போது போக்கி இருந்தால்
உன்னுடைய காதுகள் தூரும் காண் –

துன்புற்றவன எல்லாம் தீர்ப்பாய் பிரானே –
ஆஸ்ரிதரனாவர்கள் துக்கப்படும் அவை எல்லாம்
போக்கும் உபகாரகன்  ஆனவனே -என்ன –

நீ என்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டா –
இனி முன் போல் பிடிக்குதல் அடிக்குதல்  செய்யேன் -என்று மெய்யாக ஒரு வார்த்தை சொல்லு –
நான் திரி இடுகைக்கு இசையும்படி என்ன –

திரி இட்டுச் சொல்லுகேன் மெய்யே –
திரியை இட்டு விட்டவாறே பின்னை மெய்யே சொல்லக் கடவேன் -என்கிறாள் –

————————————————–

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக்  கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –

பதவுரை

சொல்லுவார் சொல்லை–சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி–(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை–வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்–களவு கண்டு உண்டாய்
என்று–என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து–(என்) கையைப் பிடித்து
காண்–(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு–விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை–(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே–நீ கட்ட வில்லையா?
(என்று கண்ணன் யசோதை மேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):
சிரிதரா–ஸ்ரீதரனே!
செய்தன–(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி–சொல்லிக் கொண்டு
சிரித்து–புன் சிரிப்புச் செய்து
அங்கு–அங்கே (தூரத்தில்)
இருக்கில்–(பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது–உன் காதுகள்
தூரும்–தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே–(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை–(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்–இட்டுக் கொள்வாயாக.

மெய் இத்யாதி –
திரி இட்டு சொல்லுகேன்  மெய் -என்றவாறே –

உன் வார்த்தை விச்வசிக்க போகாது –
சொன்னார் சொன்ன வார்த்தை கேட்டு -என்னை சிஷிப்பாள் ஒருத்தி
அன்றோ -என்ன –

நான் அப்படி செய்தது உண்டோ -என்ன –

மெய்யென்று சொல்லுவார் சொல்லை  கருதி –
இவன் வெண்ணெய் களவு கண்டான் -என்று சொல்லுவார் சொல்லும் வார்த்தையை மெய்யென்று புத்தி பண்ணி –
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று -வெண்ணெயை களவிலே ஜீவித்தாய் என்று-தொடுப்பு -களவு

கையை பிடித்து இத்யாதி –
என் கையை பிடித்துக் கொண்டு -பாரமான கரை உரலோடே-எல்லாரும்
காணும் படி என்னை கட்டிற்று இலையோ என்று சொல்லி மந்த ஸ்மிதம் செய்து இருக்க –
கரை உரலாவது -விளிம்பு சுற்றணையான  உரல்

செய்தன இத்யாதி-
இப்படி நான் செய்த குற்றங்களை சொல்லி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு
என் பக்கல் வாராதே போது போக்கி -நீ அங்கே இருக்கில்

ஸ்ரீதரனே-உன் காது தூரும் காண் –
அவர்களுக்கு ஆகவாகிலும் வா என்ன –

அவ்வளவிலும் அவன் வாராமையாலே –

கையில் திரியை இத்யாதி –
நீ விரும்ப தக்க அழகை உடையார் -உன் பக்கல் ப்ராவண்யத்தால் –
உன்னை விட்டு போக மாட்டாமல் சந்நிஹிதைகளாய் நிற்கிற இப் பெண்கள் ஆனவர்கள்-
கூழைக் காது சுணைக் காது – என்றால் போலே சொல்லி சிரியாதபடி
உன் காது பெருக்கும்படி என் கையில் திரியை இடு கிடாய் என்கிறாள்

——————————————————-

காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில்  தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே -2-3 -10- –

பதவுரை

காதுகள்–(என்னுடைய) காதுகள்
வீங்கி–வீங்கிப் போய்
எரியில்–எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்–(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்–(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)–நேரிட்டதான
இழுக்கு–சேதம்
என்–ஏதேனுமுண்டோ?
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்த போது)
தாரியாது ஆகில்–‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று–(குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்–(முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
அன்பினால் அப்படி விட்டிருந்தது)
குற்றமே அன்றே–(என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை–அழகிய ரிஷபத்தின் வடிவு கொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று–அழித்து
இள கன்று–சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட–(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்–ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே–எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்–இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்–எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி–காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்–திரியா நிற்பதையும்
காண்டி–நீ காணா நின்றாயன்றோ’

காரிகையார் இத்யாதி –
கையிலே திரியை இடு கிடாய் -என்றவாறே –

சிரிக்கிற காரிகையார்க்கும் -திரி இட வந்து நிற்கும் உனக்கும் -ஏதேனும் சேதம் உண்டோ –
என்னுடைய காதுகள்;வீங்கி எரியுமாகில் -என்று அவன் சொல்லி -கைக்கு எட்டாதபடி நிற்க –

தாரியாதாகில் இத்யாதி –
இளம் பருவத்திலே காதை பெருக்கலாய் இருக்க –
திரி முதலானவற்றை இடுகிறது பொறாதாகில்-
உன் தலையிலே நோக்காடு உண்டாம் என்று -அப்போது செய்யாமல்
விட்டு வைத்த என்னுடைய குற்றமே அன்றோ -என்ன –
தன்னை வெறுத்து -பின்னையும் விடாதே

(லோகத்தில் இளம் பிள்ளைகளுக்கு
காது குத்தினால் சிலருக்கு நோம்
சிலருக்கு குத்தா விடில் நோம் -அரும்பதம் )

சேரி இத்யாதி –
இவ்வூரில் உன் திறத்தின் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காணா
நின்றாய் இறே என்றவாறே –
அவன் அனுமதி தோற்ற நிற்க –

ஏர் விடை இத்யாதி –
வம்பு அவிழ் கானத்து மால் விடை -என்கிறபடியே -காட்டுக்குள்ளே உன்னை நலிவதாக எதிர்ந்து வந்த –
அரிஷ்ட நேமியாகிற ரிஷபத்தை நிரசித்து –
கன்றுகள் மேய்கிற இடத்தில் – இளம் கன்றான வடிவை கொண்டு வந்து -ஓர் அசுரன் நிற்க -அந்த கன்றை எடுத்து
விளவாய் நின்ற அசுரன் மேலே எறிந்து -இரண்டு தலையும் -முடித்து –
அவற்றின் கையிலே அகப்படாதே –
உன்னை நோக்கித் தந்தவனாய்-உன்னைக் கண்டவர்களுடைய சர்வ இந்திரியங்களையும் உன் வசமாக்கிக்
கொள்ளுகையாலே ஹிருஷீகேசன் என்னும் திரு நாமத்தை உடையவனாய் –
எனக்கு திருஷ்டி பூதனானவனே என்று உகந்து சொல்லுகிறாள் –
(கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் அவனே
இவருக்கு எல்லா அவஸ்தையிலும் கண்ணாவான் அவனே காணும் )

—————————————

கண்ணைக் குளிரக் கலந்து எங்கு நோக்கிக் கடி கமழ் பூம் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா இங்கே வாராய் -2 3-11 – –

பதவுரை

குளிர–மனங்குளிரும்படி
கண்ணை-(உன்) கண்ணை
(இடைப் பெண்களுடைய கண்களோடு)
கலந்து–சேர்த்து,
எங்கும்–(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி–பார்த்து,
கடி கமழ்–வாஸனை வீசுகின்ற
பூ–புஷ்பங்களணிந்த
குழலார்கள்–கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்–மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து–எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்–ரஸிக்கின்ற
பெருமானே–பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே–எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண– தின்பதற்கு
கனிகள்–(நாவல் முதலிய) பழங்களை
தருவன்–கொடுப்பேன்
கடிப்பு–காதணியை
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
காதுக்கு–(உன்னுடைய) காதிலே
இடுவன்–இடுவேன்
சகடம்–(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட–கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா–பத்மநாபனே’
இங்கே வாராய் –

கண்ணை இத்யாதி –
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் அவன் ஆகையாலே –
கண்ணைக் குளிரக் கலந்து –
உன்னுடைய கண்ணை அவர்களுடைய கண்களோடு குளிரக் கலந்து –
இத்தால் -கண் கலவியை சொன்னபடி –

எங்கும் நோக்கி –
அவர்கள் வடிவை சமுதாயேன பார்த்து

கடி கமழ் பூம் குழலார்கள் –
பரிமள பிரசுரமான பூக்களாலே அலங்ருதமாய் இருந்துள்ள குழலை உடையவர்களுடைய –

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பிரானே –
நெஞ்சுக்கு உள்ளே சர்வ காலமும் இருந்து -ரசிக்கும் பெரியோனே –

அன்றிக்கே –
கண்ணை -என்கிற இடத்தில் –
ஐகாரத்தை அவ்யயமாக்கி –
கடி கமழ் பூம் குழலானவர்கள் தங்கள் கண் குளிரும்படியாக
உன்னுடைய அவயவ சோபையை கலக்கக் கொண்டு
எங்கும் ஒக்க பார்த்து –
உன்னுடைய கலவியின் பிரகாரங்களை எண்ண-
அவர்களுடைய அபிமத அனுரூபமான எண்ணம் கடவாமல் -அதுக்குள்ளே என்றும் ஒக்க இருந்து –
அவர்களுக்கு நிரதிசய போக்கினாய் நிற்கும் பெருமையை உடையவனே -என்னவுமாம் –

எங்கள் அமுதே –
எங்களுடைய நிரதிசய போக்யனுமாய் -சத்தா தாரகனுமாய் இருக்கிறவனே –
உனக்கு அபிமதைகளான அவர்களுக்கும் –
பரிவரான  எங்களுக்கும் உகப்பாம்படி –
உன் காது பெருக்குகைக்கு வா -என்ன-

நான் வருகிறேன் -நீ எனக்கு என்னம் தருவாய் என்ன –

உண்ணக்  கனிகள் தருவன் –
நீ விரும்பி அமுது செய்யும் படி உனக்கு பழங்கள் தருவேன் -என்ன

ஆனாலும் கடிப்பு இடப் புகுந்தால் காது நோவுமே என்ன –

கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன் –
சற்றும் நோவு வாராதபடி உன் காதுகளுக்கு கடிப்பு
இடுவேன் என்றவாறே

உடன் பட்டமை தோற்றா நிற்க –

பண்ணை இத்யாதி –
கண் வளர்ந்து அருளுகிற தனி இடத்திலே -காவல் வைத்த
சகடம் அசூர விசிஷ்டமாய் உன்னை நலிய வர -அத்தை கோப்பு குலைய உதைத்துப்
பொகட்டு ஜகத்துக்கு வேர்ப் பற்றான உன்னை நோக்கித் தந்தவன் அல்லையோ –

இங்கனே வாராய்
என்று புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

———————————————————–

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் -2 3-12 – –

பதவுரை
(கண்ணன் யசோதையைப் பார்த்து)
வா என்று சொல்லி-‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து–என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்–காதிலே
நோவ–நோம்படி
கடிப்பை–காதணியை
இங்கு–இப்போது
வலியவே–பலாத்காரமாக
தரிக்கில்–இட்டால்
உனக்கு–உனக்கு
இழுக்கு உற்ற(து) என்–சேதமுண்டானதென்ன?
காதுகள்–(என்) காதுகள்
நொந்திடும்–நோவெடுக்கும்
கில்லேன்–(அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன்
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-)
நம்பீ–பூர்ணனே’
நாவல் பழம்–(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்–கொண்டு வைத்திருக்கிறேன்
இவை–இவற்றை
காணாய்–பார்ப்பாயாக
முன்–முன்பு
வஞ்சம் மகள்–வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ–மாளும்படி
பால்–(அவளது) முலைப் பாலை
உண்டு,–பாநம் பண்ணி,
சகடு–சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்திட்ட–(கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய் –

வா இத்யாதி –
பத்ம நாபா இங்கே வாராய் என்றவாறே –

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து –
என்னை வா என்று சொல்லி அழைத்து –
நான் வரக் கொள்ள –
என் கையை உறைக்கப் பிடித்துக் கொண்டு –

வலியவே காதில் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் –
பலாத்காரேன என் காதில் – கடிப்பை நோம்படி திரிகி இடுவுதியாகில்
உனக்கு இங்கு சேதம் ஆவது உண்டோ –
என் காதுகள் நோம் காண்-வர மாட்டேன் என்ன –

நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ –
இவன் வருகைக்காக -நீ உகக்கும் நாவற் பழம் கொண்டு வைத்தேன் –
இவற்றை பாராய் நம்பீ -என்று காட்ட –
அத்தைக் கண்டவாறே -வருவாரைப் போலே நிற்க –

முன் இத்யாதி –
முன்பு தன் வடிவை மறைத்து -தாய் வடிவு கொண்டு -வஞ்சகையாய் வந்த பேய்ச்சியை
சாம் படியாக முலைப் பாலை உண்டு –
நலிவதாக மேலிட்டு வந்த சகடத்தை முறிய உதைத்து பொகட்டு –
அவ் விரோதிகள் கையில் அகப்படாமல் -உன்னை நோக்கித் தந்தவனாய் –

அந்த சக்திமானாய் இருக்கச் செய்தே –
அசக்தரைப் போலே என் கையிலே பிடி உண்டு –
நான் கட்டின கயற்றின் தழும்பு உன் வயற்றிலே கிடைக்கையாலே தாமோதரன் என்று பேராம்படி
என் கையாலே கட்டுண்டு நின்ற நீர்மையை உடையவன் அன்றோ –

இங்கே வாராய் என்று
உகந்து அழைக்கிறாள் –

——————————————

அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம்

அவதாரிகை –
நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டிச்
சீரால் அசோதை  திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –

பதவுரை

அசோதை–யசேதையானவள்
வார்–(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது–காதுகளை
தாழ–தொங்கும்படி
பெருக்கி–வளர்த்து
அமைத்து–ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி–மகர குண்டங்களை இட விரும்பி
திருமாலை–ஸ்ரீய பதியான கண்ணனை
சீரால் சொன்ன–சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்–சொற்கள்
சிந்தையுள்–(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று–நிலையாகப் பொருந்தி
திகழ–விளங்க,
(அச் சொற்களை),
பார் ஆர் தொல் புகழான்–பூமியில் நிரம்பிய பழமையான-அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம் – யசஸ்ஸை யுடையவரும்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன–த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத–(ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி–அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்–பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு–எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவர்-அந்தரங்க கிங்கராவார் –

வார் இத்யாதி –
ஸ்வபாவமே ஒழுகு நீண்ட காது வேண்டும் அளவும்  தாழப் பெருக்கி –
மட்டிலே அமைத்து -மகரக் குழை சாத்த வேண்டும் என்று ஆசைப் பட்டு-

சீரால் இத்யாதி –
சீர்மை குன்றாதபடி யசோதை பிராட்டி –
ஸ்ரீ யபதியானவனைக் குறித்து சொன்ன சொலவுகளானவை

சிந்தையுள் நின்று திகழ –
தம்முடைய திரு உள்ளத்தின் உள்ளே சர்வ காலமும் நின்று விளங்க –

பார் இத்யாதி –
பூமியில் உள்ளாருடைய ஹ்ருதயங்கள் நிறையும்படி –
பழையதான புகழை உடையராய் –
திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார்

பன்னிரு நாமம் இத்யாதி –
வைஷ்ணவ சிஹ்னமான திரு த்வாதச நாமங்களோடே அருளிச் செய்ததாய் –
அத ஏவ
அனுபவிதாக்களுக்கு ஒரு காலும் திருப்தி பிறவாதே –
மேன் மேலும் அபேஷிக்கும்படி-நிரதிசய போக்யமாய் இருக்கிற –
அந்தாதியான இவை பன்னிரண்டு பாட்டையும் –
சாபிப்ராயமாக வல்லவர்கள்

அச்சுதனுக்கு அடியாரே –
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாத ஸ்வபாவன் ஆனவனுக்கு
அநவரத கிஞ்சித்கார பரராகப் பெறுவர்-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய ஆழ்வார் திரு மொழி -2-2– ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

June 12, 2012

அவதாரிகை –
ஆழ்வார்கள் எல்லாரும் ஸ்ரீ கிருஷ்ண அவதார ப்ரவணராய் இருந்தார்களே ஆகிலும் –
அவர்கள் எல்லாரையும் போல் அன்றிக்கே –
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அதி ப்ரவணராய் –
அவ் வதார ரச அனுபவத்துக்காக கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-என்கிறபடியே
அவ் வதார ரசம் உள்ளது எல்லாம் அனுபவிக்கிறவர் ஆகையாலே –

முதல் திருமொழியிலே
அவன் அவதரித்த சமயத்தில் -அங்குள்ளார் செய்த உபலாவன விசேஷங்களையும் –

அநந்தரம்-1-2
யசோதை பிராட்டி அவனுடைய பாதாதி கேசாந்தமான அவயவங்களில் உண்டான அழகை
ப்ரத்யேகம் பிரத்யேகமாக  தான் அனுபவித்து –
அனுபுபூஷுக்களையும் தான் அழைத்துக் காட்டின படியையும் –

அநந்தரம் -1-3-
அவள் அவனைத் தொட்டிலிலே ஏற்றித் தாலாட்டின படியையும் –

பிற்காலமாய் இருக்க தத் காலம் போலே பாவனா பிரகர்ஷத்தாலே யசோதாதிகளுடைய
ப்ராப்தியையும் சிநேகத்தையும் உடையராய் கொண்டு –
தாம் அனுபவித்து –

அநந்தரம் –
அவன் அம்புலியை  அழைக்கை-1-4-
செங்கீரை ஆடுகை -1-5-
சப்பாணி கொட்டுகை -1-6-
தளர் நடை நடைக்கை -1-7-
அச்சோ என்றும் -1-8-
புறம் புல்குவான் என்றும் -1-9-
யசோதை பிராட்டி அபேஷிக்க
முன்னும் பின்னும் வந்து அணைக்கை ஆகிற பால சேஷ்டிதங்களை-
தத் பாவ யுக்தராய் கொண்டு அடைவே அனுபவித்துக் கொண்டு வந்து –

கீழ்த் திரு மொழியிலே -2-1-
அவன் திரு ஆய்ப்பாடியில் உள்ளோரோடு அப் பூச்சி காட்டி விளையாடின சேஷ்டிதத்தையும் –
தத் காலத்திலேயே அவள் அனுபவித்து  பேசினால் போலே தாமும் அனுபவித்து பேசி ஹ்ர்ஷ்டரானார் –

இனி -2-2-
அவன் லீலா வ்யாபாரச்ராந்தனாய் –
முலை உண்கையும் மறந்து –
நெடும் போதாக கிடந்து உறங்குகையாலே –

உண்ணாப் பிள்ளையை தாய் அறியும் -என்கிறபடியே
யசோதை பிராட்டி அத்தை அறிந்து –
அம்மம்  உண்ணத் துயில் எழாயே-என்று அவனை எழுப்பி –
நெடும் போதாக முலை உண்ணாமையை அவனுக்கு அறிவித்து –
நெறித்து பாய்கிற தன் முலைகளை உண்ண வேண்டும் என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் -விடாதே நிர்பந்தித்து  முலை ஊட்டின பிரகாரத்தை

தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு –
தத் பாவ யுக்தராய் கொண்டு –
அவனை அம்மம் உண்ண எழுப்புகை முதலான ரசத்தை அனுபவித்து
பேசி ஹ்ர்ஷ்டராகிறார் இத் திரு மொழியில் –

—————————————-

அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே -2 2-1 –

பதவுரை

அரவு அணையாய்–சேஷசாயி யானவனே!
ஆயர் ஏறே–இடையர்களுக்குத் தலைவனே!
நீ இரவும் உண்ணாத–நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல்
உறங்கிப் போனாய்–உறங்கிப் போய் விட
இன்றும்–இப் போதும்
உச்சி கொண்டது–(பொழுது விடிந்து) உச்சிப் போதாய் விட்டது;
ஆல்–ஆதலால்
அம்மம் உண்ண–முலை யுண்பதற்கு
துயில் எழாய்–(தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்;
வரவும் காணேன்–(நீயே எழுந்திருந்து அம்மமுண்ண வேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்!
(உனக்குப் பசியில்லை யென்போமென்றா)
வயிறு அசைத்தாய்–வயிறுந்தளர்ந்து நின்றாய்;
வன முலைகள்–(எனது) அழகிய முலைகள் (உன் மேல் அன்பினால் நெறித்து)
சோர்ந்து பாய–பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
திரு உடைய–அழகை உடைய
வாய் மடுத்து–(உன்) வாயை வைத்து
திளைத்து–செருக்கி
உதைத்து–கால்களாலே உதைத்துக் கொண்டு
பருகிடாய்-முலை யுண்பாய்.
ஓ யே –அசைச் சொற்கள்

அரவு ஆணை இத்யாதி –
மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமானவற்றை பிரகிருதியாக உடைய
திரு அனந்தாழ்வானைப் படுக்கையாய் உடையனாய் இருந்து வைத்து –
நாக பர்யங்கம் உத்சர்ஜ்ய ஹ்யாகத -என்கிறபடியே
அப் படுக்கையை விட்டு -போந்து -அவதீரணனாய்-
ஆயருக்கு பிரதானன் ஆனவனே –

அப் படுக்கை வாய்ப்பாலே  பள்ளி கொண்டு போந்த வாசனையோ –
ஆயர்  ஏறான இடத்திலும் படுக்கை விட்டு எழுந்து இராதே பள்ளி கொள்ளுகிறது –
அவன் தான் இதர சஜாதீயனாய் அவதரித்தால்-
சென்றால் குடையாம் (முதல் திருவந்தாதி )-என்கிறபடி -சந்தானுவர்த்தயாய்
அடிமை செய்யக் கடவ -திரு வனந்தாழ்வானும் அவனுடைய அவஸ்த அனுகுணமாக
பள்ளி கொள்வதொரு திருப் படுக்கையான வடிவைக் கொள்ளக் கூடும் இறே –
ஆகையால்-அங்கு உள்ள சுகம் எல்லாம் இங்கும் உண்டாய் இருக்கும் இறே கண் வளர்ந்து அருளுகிறவனுக்கு-

அம்மம் உண்ணத் துயில் எழாயே –
முலை உண்ண- என்னாதே- அம்மம் உண்ண -என்றது
சைசவ அனுகுணமாக-(அவன்) -அவள் சொல்லும் பாசுரம் அது ஆகையாலே
துயில் -நித்தரை
எழுகையாவது-அது குலைந்து எழுந்து இருக்கை-
எழாய்-என்கிற இது எழுந்து இருக்க வேணும் என்கிற பிரார்த்தனை

இரவும் இத்யாதி –
நீ ராத்திரி உண்ணாதே உறங்கி -அ
வ்வளவும் இன்றிக்கே இன்றும் போது உச்சிப் பட்டது –
ராத்திரி அலைத்தலாலே கிடந்தது உறங்கினால் -விடிந்தால் தான் ஆகிலும் உண்ண வேண்டாவோ –
விடிந்த அளவேயோ போது
உச்சிப் பட்டது காண்

ஆலும் ஓவு மாகிற அவ்யயம் இரண்டும்
விஷாத அதிசய ஸூசகம்

வர இத்யாதி –
நீ எழுந்து இருந்து அம்மம் உண்ண வேண்டும் என்று வரவும் கண்டிலேன் –
அபேஷை இல்லை என்ன ஒண்ணாதபடி
வயிறு தளர்ந்து இரா நின்றாய்

வன முலைகள் சோர்ந்து பாய –
வனப்பு -அழகும் பெருமையும்
முலைகள் ஆனவை உன் பக்கல் சிநேகத்தால் நெறிந்து-பால் உள் அடங்காமல் வடிந்து பரக்க-
உனக்கு பசி உண்டாய் இருக்க -இப் பால் இப்படி வடிந்து போக -உண்ணாது ஒழிவதே -என்று கருத்து –

திரு உடைய வாய் மடுத்து –
அழகிய திருப் பவளத்தை மடுத்து -திரு-அழகு –
இவ் வன முலையிலே உன்னுடைய திரு உடைய வாயை அபிநிவேசம் தோற்ற மடுத்து –

திளைத்து இத்யாதி –
முலை உண்ணுகிற ஹர்ஷம் தோற்ற கர்வித்து கால்களாலே
என் உடம்பிலே உதைத்து கொண்டு -இருந்து உண்டிடாய் –

பருகுதல்-பானம் பண்ணுதல் –

————————————-

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை  உணாயே- 2-2 2- –

பதவுரை

எம் பிரான்–எமது உபகாரகனே!
வைத்த நெய்யும்–உருக்கி வைத்த நெய்யும்
காய்ந்த பாலும்–(ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும்
வடி தயிரும்–(உள்ள நீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
நறு வெண்ணெயும்–மணம் மிக்க வெண்ணெயும்
இத்தனையும்–(ஆகிய) இவை யெல்லாவற்றையும்
நீ பிறந்த பின்னை–நீ பிறந்த பிறகு
பெற்று அறியேன்–கண்டதில்லை;
எத்தனையும்–(நீ) வேண்டினபடி யெல்லாம்
செய்யப் பெற்றாய்–நீ செய்யலாம்;
ஏதும் செய்யேன்–(அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்ய மாட்டேன்;
கதம் படாதே–நீ கோபியாதே கொள்;
முத்து அனைய முறுவல் செய்து–முத்தைப் போல் வெண்ணிறமாக மந்த ஸ்மிதம் பண்ணி
மூக்கு உறிஞ்சி–மூக்கை உறிஞ்சிக் கொண்டு
முலை உணாய்–முலை உண்பாயாக.

வைத்த இத்யாதி –
பழுதற உருக்கி வைத்த நெய்யும் –
செறிவுறக் காய்ந்த பாலும் –
நீர் உள்ள்து வடித்து கட்டியாய் இருக்கிற தயிரும் –
செவ்வையிலே கடைந்து எடுத்த நறுவிய வெண்ணையும்

எம்பிரான் நீ பிறந்த பின்னை -இத்தனையும் பெற்று அறியேன் –
என்னுடைய நாயகனே நீ பிறந்த பின்பு –
இவை ஒன்றும் பெற்று அறியேன் –

அன்றிக்கே –
இத்தனையும் என்றது –
ஏக தேசமும் என்றபடியாய்-
இவற்றில் அல்பமும் பெற்று அறியேன் என்னுதல்-

இப்படி என்னை களவேற்றுவதே-என்னைப் பிடித்தல் அடித்தல் செய்ய வன்றோ
நீ இவ்வார்த்தை சொல்லிற்று என்று குபிதனாக –
எத்தனையும் செய்யப் பெற்றாய் –
உனக்கு வேண்டினது எல்லாம் செய்யக் கடவை

ஏதும் செய்யேன் கதம் படாதே –
நான் உன்னைப் பிடித்தல் அடித்தல் ஒன்றும் செய்யக் கடவேன் அல்லேன் –
நீ கோபிக்க வேண்டா –
கதம்-கோபம்

முத்தனைய -இத்யாதி –
முத்துப் போலே ஒளி விடா நிற்கும் முறுவலை செய்து –
அதாவது –
கோபத்தை தவிர்ந்து
ஸ்மிதம் பண்ணி கொண்டு -என்கை

மூக்கு உறிஞ்சி முலை உணாயே –
முலைக் கீழை -முழுசி -முட்டி -மூக்காலே உரோசி இருந்து
முலையை அமுது செய்யாய் –

—————————————-

தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்க கில்லார்
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன் திறத்தர் அல்லர் உன்னை நான் ஓன்று உரப்ப மாட்டேன்
நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே -2 -2-3 – –

பதவுரை

தம் தம் மக்கள்–தங்கள் தங்கள் பிள்ளைகள்
அழுது–அழுது கொண்டு
சென்றால்–(தம் தம் வீட்டுக்குப்) போனால்
தாய்மார் ஆவார்–(அக் குழந்தைகளின்) தாய்மார்கள்
தரிக்க கில்லார்–பொறுக்க மாட்டாதவர்களாய்
வந்து–(தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து
நன் மேல் பூசல் செய்ய–உன் மேல் பிணங்க
வாழ வல்ல–(அதைக் கண்டு) மகிழ வல்ல
வாசு தேவா–கண்ண பிரானே!
உந்தையார்–உன் தகப்பனார்.
உன் திறத்தர் அல்லர்–உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்;
நான்–(அபலையான) நானும்
உன்னை–(தீம்பில் ..) உன்னை
ஒன்று உரப்ப மாட்டேன்–சிறிதும அதட்ட வல்லமை யற்றிரா நின்றேன்;
(இவையெல்லாங் கிடக்க)
நந்த கோபன்–நந்த கோபருடைய
அணி சிறுவா–அழகிய சிறு பிள்ளாய்!
நான் சுரந்த முலை–எனது பால் சுரந்திருக்கிற முலையை
உணாய்–உண்பாயாக

தம் தம் இத்யாதி –
ஊரில் பிள்ளைகளோடே விளையாடப் புக்கால் எல்லாரையும் போல் அன்றிக்கே –
நீ அவர்களை அடித்து குத்தி விளையாடா நின்றாய் –
இப்படி செய்யலாமோ -தம் தம் பிள்ளைகள் அழுது சென்றால் –
அவர்கள் தாய்மாரானவர்கள் பொறுக்க மாட்டார்கள் –

வந்து நின் மேல் பூசல் செய்ய –
அவர்கள் தாங்கள்-தங்கள் பிள்ளைகளையும் பிடித்து கொடு வந்து உன் மேலே
சிலுகு -சண்டை -இட்டு பிணங்க

வாழ வல்ல –
அதிலே ஒரு சுற்றும் இளைப்பு இன்றிக்கே -பிரியப்பட்டு –
இதுவே போகமாக இருக்க வல்ல –

வாசு தேவா –
வாசு தேவன் புத்திரன் ஆனவனே –
பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ

உந்தையார் இத்யாதி –
உன்னுடைய தமப்பன் ஆனவர் உன்னிடை யாட்டம் இட்டு எண்ணார்-
உன்னை சிஷித்து வளர்க்கார் என்றபடி –
(இடையாட்டம் வியாபாரம் -சேஷ்டிதம் )

உன்னை இத்யாதி –
தீம்பனான உன்னை -அபலையான நான் -ஒரு வழியாலும் தீர
நியமிக்க மாட்டேன் –
(அஹம் த்வாம் -நான் உன்னை )

நந்த கோபன் அணி சிறுவா –
ஸ்ரீ நந்த கோபர்க்கு வாய்த்த பிள்ளாய் –
அணி -அழகு –
இவன் தீம்பிலே உளைந்து சொல்லுகிற வார்த்தை

நான் சுரந்த முலை உணாயே –
அவை எல்லாம் கிடக்க –
இப்போது நான் சுரந்த முலையை அமுது செய்யாய் –

—————————————

கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
பஞ்சி  அன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே ஆயர் கூட்டத்து அளவு அன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை உணாயே -2-2-4-

பதவுரை

அமரர் கோவே–தேவர்களுக்குத் தலைவனே! (நீ)
கஞ்சன் தன்னால்–கம்ஸனாலே
புணர்க்கப்பட்ட–(உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப் பட்ட
கள்ளச் சகடு–க்ருத்ரிம சகடமானது
கலக்கு அழிய–கட்டு (க்குலைந்து உருமாறி)-சந்தி பந்துகள் குலைந்து – அழிந்து போம்படி
பஞ்சி அன்ன மெல் அடியால்–பஞ்சைப் போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால்
பாய்ந்த போது–உதைத்த போது
நொந்திடும் என்று–(உன் திருவடிகளுக்கு) நோவுண்டாகுமே யென்று
அஞ்சினேன் காண்–பயப்பட்டேன் காண்;
(என்னுடைய அச்சம்)
ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல்–இடையர் திரளினுடைய (அச்சத்தின்) அளவல்ல காண்;
கஞ்சனை–(உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த) கம்ஸனை
உன் வஞ்சனையால்–உன்னுடைய வஞ்சனையினாலே
வலைப் படுத்தாய்–(உன் கையிற்) சிக்கும்படி செய்து கொன்றவனே!
முலை உணாய்.

பஞ்சி என்கிற இது
பஞ்சு என்பதற்கு போலி –

கஞ்சன் இத்யாதி –
உன் மேலே கறுவதலை உடையனான கம்சனாலே உன்னை நலிகைக்காக –
கற்ப்பிக்கப் பட்ட க்ர்த்ரிமமான சகடமானது -அசூரா விஷ்டமாய் வருகையாலே -கள்ளச் சகடு -என்கிறது –

கலக்கழிய –
தளர்ந்தும் முறிந்தும் (திருவாய் )உடல் வேறாக பிளந்து வீய -என்கிறபடியே கட்டுக் குலைந்து
உரு மாய்ந்து போம்படியாக

பஞ்சி இத்யாதி –
பஞ்சு போன்ற மிருதுவான திருவடிகளாலே உதைத்த போது -திருவடிகள் நோம் -என்று
பயப்பட்டேன் காண் –

அமரர் கோவே –
தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே –
உன்னைக் கொண்டு தங்கள் விரோதியைப் போக்கி –
வாழ இருக்கிற அவர்கள் பாக்யத்தால் இறே –
உனக்கு ஒரு நோவு வராமல் இருந்தது -என்கை –

ஆயர் கூட்டத்து அளவன்றாலோ –
ஆயருடைய திரள் அஞ்சின அளவல்ல காண் -நான் அஞ்சின படி –

ஆல் ஒ என்றவை
விஷாத ஸூசகமான அவ்யயங்கள்
(அசைச் சொற்கள் )

கஞ்சனை இத்யாதி –
உன் திறத்திலே வஞ்சனைகளை செய்த கம்சனை –
நீ அவன் திறத்தில் செய்த வஞ்சனையாலே தப்பாதபடி அகப் படுத்தி முடித்தவனே

முலை உணாயே –
இப்போது முலையை அமுது செய்ய வேணும் –

—————————————————-

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2-2-5 – –

பதவுரை

வாசுதேவா–கண்ண பிரானே!
தீய புந்தி–துஷ்ட புத்தியை யுடைய
கஞ்சன்–கம்ஸனானவன்
உன் மேல்–உன் பக்கலிலே
சினம் உடையவன்–கோபங்கொண்டவனா யிரா நின்றான்;
சோர்வு பார்த்து–(நீ) தனியாயிருக்கும் ஸமயம் பார்த்து
மாயம் தன்னால்–வஞ்சனையால்
வலைப் படுக்கில்–(உன்னை) அகப் படுத்திக் கொண்டால்
வாழ கில்லேன்–(நான்) பிழைத்திருக்க சக்தை யல்லேன்;
தாயர்–தாய்மார்களுடைய
வாய் சொல்–வாயினாற் சொல்லுவது
கருமம் கண்டாய்–அவச்ய கர்த்தவ்ய கார்யமாகும்;
சாற்றி சொன்னேன்–வற்புறுத்திச் சொல்லுகிறேன்;
போக வேண்டா–(நீ ஓரிடத்திற்கும்) போக வேண்டா;
ஆயர் பாடிக்கு–திருவாய்ப் பாடிக்கு
அணி விளக்கே–மங்கள தீபமானவனே!
அமர்ந்து வந்து–பொருந்தி வந்து
என் முலை உணாய்

தீய புந்திக் கஞ்சன் –
துர் புத்தியான கம்சன் –
பிள்ளைக் கொல்லி இறே-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோதின பாபிஷ்டன் இறே –

உன் மேல் சினமுடையன் –
தேவகி உடைய அஷ்டம கர்ப்பம் உனக்கு  சத்ரு -என்று
அசரீரி வாக்யத்தாலே கேட்டு இருக்கையாலும் –
பின்பு துர்க்கை சொல்லிப் போந்த வார்த்தையாலும் –
நமக்கு சத்ரு வானவன் கை தப்பிப் போய் நம்மால் கிட்ட ஒண்ணாத ஸ்தலத்திலே புகுந்தான் –
இவனை ஒரு வழியாலே ஹிம்சித்தாய் விடும்படி என் -என்று இருக்கையாலும் –
உன்னுடைய மேலே மிகவும் குரோதம் உடையவன் –

சோர்வு பார்த்து –
அவிழ்ச்சி பார்த்து -அதாவது
நீ அசஹாயனாய் திரியும் அவசரம் பார்த்து -என்கை-

மாயம் தன்னால் வலைப் படுக்கில் –
உன்னை நலிகைக்காக மாயா ரூபிகளான ஆசூர பிரகிருதிகளை
திர்யக்காகவும் ஸ்தாவரமாகவும் உள்ள வடிவுகளை கொண்டு நீ வியாபாரிக்கும்
ஸ்தலங்களில் நிற்கும் படி பண்ணியும் –
நீ அறியாமல் வஞ்சனத்தால் நழுவாதபடி பிடித்து கொள்ளில் –

வாழ கில்லேன் –
நான் பின்னை ஜீவித்து இருக்க ஷமை அல்லேன் -முடிந்தே விடுவேன் –

வாசு தேவா –
உன்னாலே இறே சாதுவான அவரும் சிறைப்பட வேண்டிற்று

தாயர் இத்யாதி –
தாய்மார் சொல்லு கார்யம் காண்-அதாவது
உத்தேச்யதையாலும்
பரிவாலும்
தாய்மார் வாக்கால் சொல்லுவது
பிள்ளைகளுக்கு அவசிய கரணீயம் காண் -என்கை-

சாற்றிச் சொன்னேன் போக வேண்டா –
இது தன்னை குன்னாம் குருச்சியாக  -ரகஸ்யமாக -அன்றிக்கே
எல்லாரும் அறியும் படி பிரசித்தமாக சொன்னேன் –
லீலா அர்த்தமாகவும் நீ தனித்து ஓர் இடத்தில் போக வேண்டா

ஆயர் பாடிக்கு அணி விளக்கே –
திரு வாய்ப்பாடிக்கு ஒரு மங்கள தீபம் ஆனவனே –
அணி-அழகு

இத்தால்-
எனக்கே அன்று -உனக்கு ஒரு தீங்கு வரில் -இவ்வூராக இருள் மூடி விடும் கிடாய் -என்கை

அமர்ந்து இத்யாதி –
ஆன பின்பு பரபரப்பை விட்டு பிரதிஷ்டனாய் வந்து
உனக்கு என்று சுரந்து இருக்கிற முலையை அமுது செய்ய வேணும் –

————————————

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே -2 2-6 – –

பதவுரை

மின் அனைய–மின்னலை யொத்த
நுண்–ஸூக்ஷ்மமான
இடையார்–இடையை யுடைய பெண்களின்
விரி குழல் மேல்–விரிந்த (பரந்த) கூந்தலின் மேல்
நுழைந்த–(தேனை உண்ணப்) புகுந்த
வண்டு–வண்டுகள்
(தேனை யுண்டு களித்து)
இன் இசைக்கும்–இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலே
இனிது–போக்யமாக
அமர்ந்தாய்–எழுந்தருளி யிருப்பவனே!
உன்னை கண்டார்–உன்னைப் பார்த்தவர்
இவனை பெற்ற வயிறு உடையாள்–இவனைப் (பிள்ளையாகப்) பெற்ற வயிற்றை யுடையவள்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ–என்ன தபஸ்ஸு பண்ணினாளோ!
என்னும்–என்று கொண்டாடிச் சொல்லுகிற
வார்த்தை–வார்த்தையை
எய்துவித்த–(எனக்கு) உண்டாக்கின
இருடீகேசா–ஹ்ருஷீகேசனே!
முலை உணாய்.

மின் இத்யாதி –
மின்னோடு  ஒத்த நுண்ணிய இடையை உடையவர்கள் என்னுதல்-
மின்னை ஒரு வகைக்கு ஒப்பாக உடைத்தாய் -அவ்வளவு இன்றிக்கே
ஸூஷ்மமான இடையை உடையவர்கள் என்னுதல் –

விரி குழல் நுழைந்த வண்டு –
விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –

இன்னிசைக்கும் இத்யாதி –
மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே –
ஸ்ரீ பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-
தாழ்ந்தார்க்கு  முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே
திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே-
பரம சாம்யாபந்நருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே ஸ்ரீ பரம பதத்தில் –
இங்கு இரண்டுமே சித்திக்குமே –
(ரெங்க ராஜ ஸ்தவம் அஹ்ருத ஸஹஜ தாஸ்யம் பரிகொடாதவர்கள் -அஹங்காரம் இல்லாதவர் )

உன்னைக் கண்டார் இத்யாதி –
நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால்
வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் –
நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும்  உண்டு இறே –
அவ்வளவு அன்றிக்கே –
லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் –
இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை –
எனக்கு உண்டாக்கித் தந்த

இருடீகேசா –
கண்டவர்களுடைய சர்வேந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாத படி உன் வசம்
ஆக்கிக் கொள்ளும் வைலஷண்யத்தை உடையவனே –
(யாத்ர நாந் யத்ர பஸ்யதி பூமா )
முலை உணாயே-

———————————-

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 -7- –

பதவுரை

கண்டவர்கள்–(உன்னைப்) பார்த்தவர்களான
பெண்டிர் வாழ்வார்–(தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள்
நின் ஒப்பாரை–உன்னைப் போன்ற குழந்தைகளை
பெறுதும்–பெறுவோம் (பெற வேணும்)
என்னும்–என்கிற
ஆசையாலே–ஆசையினாலே
போக்கு ஒழிந்தார்–(உன்னை விட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்;
வண்டு உலாம்–வண்டுகள் ஸஞ்சரிக்கிற
பூ–புஷ்பங்களை யணிந்த
குழலினார்–கூந்தலை யுடையவர்கள்
கண் இணையால்–(தமது) இரண்டு கண்களினாலும்
கலக்க நோக்கி–(உனது) திருமேனி முழுவதும் பார்த்து
உன்–உன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
உண்ண வேண்டி–பாநம் பண்ண ஆசை கொண்டவர்களாய்
கொண்டு போவான்–(உன்னை) எடுத்துக் கொண்டு போவதற்கு
வந்து நின்றார்–வந்து நிற்கிறார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ முலை உணாய்.

பெண்டிர் இத்யாதி –
ஸ்வ பர்த்தாக்களுக்கு பார்யைகளாய் வர்த்திப்பராய்
உன்னைக் கண்டவர்கள் –
உன்னைப் போலே இருக்கும் பிள்ளைகளை பெற வேணும் என்னும் ஆசையாலே
கால் வாங்கி
போக மாட்டாதபடியாய் விட்டார்கள் –

வண்டுலாம் பூம் குழலினார் கண் இணையால் கலக்கி நோக்கி-
பெருக் காற்றிலே இழிய மாட்டாமையால்
கரையிலே நின்று சஞ்சரிப்பாரைப் போலே மதுவின் சமர்த்தியாலே உள்ளே அவஹாகிக்க மாட்டா
வண்டுகள் ஆனவை மேலே நின்று சஞ்சரிக்கும் படி -பூவாலே அலங்க்ர்தமான குழலை உடையவர்கள் –
தன்னுடைய கண்களால் உன்னுடைய சமுதாய சோப தர்சனம் செய்து –

கலக்க நோக்குகையாவது –
ஓர் அவயவத்தில் உற்று நிற்கை  அன்றிக்கே
திருமேனியை எங்கும் ஒக்க பார்க்கை –

கீழ் -பெண்டிர் வாழ்வார் -என்று
பக்வைகளாய் பர்த்ரு பரதந்த்ரைதகளாய்-
புத்திர சாபேஷைகளானவர்களை சொல்லிற்று –

இங்கு வண்டுலாம் பூம் குழலினார் என்று –
ப்ராப்த யவ்வனைகளாய்-
போக சாபேஷைகளானவர்களை சொல்லுகிறது –

உன் இத்யாதி –
உன் வாக் அமிர்தம் புசிக்க வேண்டி –
உன்னை எடுத்து கொண்டு போவதாக வந்து நின்றார்கள்-

கோவிந்தா –
சர்வ ஸுலபனாணவனே –
உன் ஸுவ்லப்யத்துக்கு இது சேராது -நீ முலை உணாயே –

————————————————–

இருமலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரி செய்தாய் உன்
திரு மலிந்து திகழ் மார்பு தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே -2 2-8 – –

பதவுரை

இரு மலை போல்–இரண்டு மலை போலே (வந்து)
எதிர்ந்த–எதிர்த்து நின்ற
மல்லர் இருவர்–(சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய
அங்கம்–உடம்பை
எரி செய்தாய்–(பயத்தாலே) எரியும்படி செய்தவனே!
வந்து–(நீ) வந்து
என் அல்குல் ஏறி–என் மடி மீது ஏறிக் கொண்டு
உன்–உன்னுடைய
திரு மலிந்து திகழும் மார்வு–அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது
தேக்க–(முலைப் பாலால்) நிறையும்படி
ஒரு முலையை–ஒரு முலையை
வாய் மடுத்து–வாயிலே வைத்துக் கொண்டு
ஒரு முலையை–மற்றொரு முலையை
நெருடிக் கொண்டு–(கையினாலே) நெருடிக் கொண்டிருந்து
(மிகுதியாயிருப்பது பற்றிப் பால் வாயிலடங்காமையினால்)
ஏங்கி ஏங்கி–இளைத்திளைத்து
(இப்படி)
இரு முலையும்–இரண்டு முலையையும்
முறை முறை ஆய்
மாறி மாறி
இருந்து–பொருந்தி யிருந்து
உணாய்–உண்பாயாக.

இரு மலை இத்யாதி –
வடிவின் பெருமையாலும் -திண்மையாலும் இரண்டு மலை போலே வந்து
அறப் பொருவதாக எதிர்த்த சாணூர முஷ்டிகர் ஆகிற இரண்டு மல்லருடைய சரீரம் ஆனது
பய அக்னியால் தக்தமாம்  விழும் படி  பண்ணினவனே-

உன் இத்யாதி –
உன்னுடைய அழகு மிக்கு விளங்கா நின்று உள்ள மார்பானது
மலிதல் -மிகுதி —
திகழ்ச்சி -விளக்கம்
அன்றிக்கே-
திரு என்று பிராட்டியை சொல்லுகிறதாய் –
அவள் எழுந்து அருளி இருக்கையாலே
மிகவும் விளங்கா நின்று உள்ள உன்னுடைய மார்வு என்னவுமாம் –

தேக்க -தேங்க –
முலைப் பாலாலே நிறையும் படியாக –
வந்து என் அல்குல் ஏறி -என் மடியிலே வந்து ஏறி –

ஒரு முலை இத்யாதி –
ஒரு முலையைத் திருப் பவளத்திலே வைத்து -ஒரு முலையைத் திருக் கையால் பற்றி –
நெருடிக் கொண்டு -இரண்டு முலையும் மாறி மாறி –
பால் பாவின மிகுதி -திருப் பவளத்தில் அடங்காமையால் நடு நடுவே இளைத்து இளைத்து -அமர இருந்து –
அமுது செய்ய வேணும் –

———————————–

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
செங்கமல முகம் வெயர்ப்ப தீமை செய்தீம் முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக வளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே -2 2-9 – –

பதவுரை

அம்ம–தலைவனே!
(அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னை யடைந்த)
அங்கு–அக் காலத்திலே
விம்ம–(அவர்கள் வயிறு) நிரம்பும்படி
அமரர்க்கு–(அந்த) தேவர்களுக்கு
அமுது அளித்த–(க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த
அமரர் கோவே–தேவாதி ராஜனே!
அம் கமலம் போது அகத்தில்–அழகிய தாமரைப் பூவினுள்ளே
அணி கொள் முத்தம் சிந்தினால் போல்–அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி
செம் கமலம் முகம்–செந்தாமரை மலர் போன்ற (உனது) முகமானது
வியர்ப்ப–வியர்த்துப் போக
இ முற்றத்தூடே–இந்த முற்றத்திலேயே
தீமை செய்து–தீம்பைச் செய்து கொண்டு
அங்கம் எல்லாம் புழுதி ஆக–உடம்பெல்லாம் புழுதி படியும்படி
அளைய வேண்டா–புழுதி யளையாதே;
முலை உணாய்–முலை யுண்ண வாராய்.

நிறத்தாலும் -மணத்தாலும் -செவ்வியாலும் -விகாசத்தாலும் அழகியதாய் இருக்கும் –
தாமரைப் பூவின் இடத்தில் –
போது -புஷ்பம் –
அகம் -இடம்

அணி இத்யாதி –
நீர்மையாலும் -ஒளியாலும் -அழகாய் உடைத்தான முத்துக்கள் ஆனவை
சிதறினால் போலே

செங்கமலம்  இத்யாதி –
சிவந்து மலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திரு முகமானது
குறு வெயர்ப்பு அரும்பும்படியாக –

(அங்கமலம் உபமானத்துக்கு
செங்கமலம் திரு முகத்துக்கு
மீண்டும் மீண்டும் சொல்வது ஆதார அதிசயத்தால் )

தீமை இத்யாதி –
இம் முற்றத்துள்ளே  நின்று தீம்புகளை செய்து -உடம்பு எல்லாம் புழுதியாக இருந்து –
புழுதி அலைய வேண்டா –

அம்ம -ஸ்வாமி என்னுதல்-
இவன் சேஷ்டித தர்சனத்தால் வந்த ஆசார்ய உக்தி ஆதல் –

விம்ம இத்யாதி –
விம்ம-நிரந்தரமாக –
துர்வாச சாபோபஹதராய் அசுரர்கள் கையில் ஈடுபட்டு சாவாமைக்கு மருந்து பெறுகைக்கு
உன்னை வந்து ஆஸ்ரயித்த தேவர்களுக்கு -அத்தசையில் வயிறு நிரம்ப அம்ர்தத்தை இடுகையாலே
அவர்களுக்கு நிர்வாஹனானவனே-

முலை உணாயே –
அப்போது அவர்கள் அபேஷைக்கு அது செய்தால் போலே –
இப்போது என்னுடைய
அபேஷைக்காக நீ முலை உண்ண வேணும் என்கை-

————————————————-

(ஓங்கி உலகளந்த உத்தமன் -மூன்றாம் பாசுரம்
ஊழி முதல்வன் -நான்காம் பாசுரம்
இங்கே ஒரே பாசுரத்தில்
இரண்டும் பரத்வ எளிய பரமாகவே அனுபவம் )

ஓட ஓட கிண் கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயை பற்ப நாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்து இட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை யாடி
ஓடி ஓடி போய் விடாதே உத்தமா நீ முலை உணாதே -2 2-10 – –

பதவுரை

ஓடஓட–(குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால்
ஒலிக்கும்–சப்திக்கின்ற
கிண் கிணிகள்–பாதச் சதங்கைகளினுடைய
ஓசைப் பாணியாலே–ஓசையாகிற சப்தத்தால்
பாடிப் பாடி–இடை விடாது பாடிக் கொண்டு
அதனுக்கு ஏற்ற கூத்தை–அப் பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை
அசைந்து அசைந்திட்டு–வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து
ஆடி ஆடி–ஆடிக் கொண்டு
வருகின்றாயை–வருகின்ற உன்னை
பற்பநாபன் என்று இருந்தேன்–(வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணி யிருந்தேன்;
நீ–நீ
ஆடி–ஆடிக் கொண்டே
ஓடி ஓடி போய் விடாதே–(என் கைக்கு எட்டாதபடி) ஓடிப் போய் விடாதே
முலை உணாய்.

ஓட ஓட இத்யாதி –
நடக்கும் போது மெத்தென நடக்கை அன்றிக்கே –
பால்யத்துக்கு ஈடான செருக்காலே பதறி ஓட ஓட –
பாத சதங்கைகளான கிண் கிணிகள் த்வனிக்கும் த்வநியாகிற சப்தத்தாலே
பாடிப்பாடி –
அதனுக்கு ஏற்ற கூத்தை -அசைந்து அசைந்து இட்டு –
ஆடி ஆடி –
அந்த பாட்டுக்கு தகுதியான ந்ர்த்தத்தை
திரு மேனி இடம் வலம் கொண்டு -அசைந்து அசைந்திட்டு நடக்கிற நடையாலே-ஆடி ஆடி –
கூத்தன் கோவலன் -(திருவாய் -10-1-)-இறே-

நடக்கிற நடை எல்லாம் வல்லார் ஆடினால் போலே இறே இருப்பது –
ஆகையால் விரைந்து நடந்து வரும் போது –
திருவடிகளில் சதங்கைகளின் உடைய ஓசைகள் தானே பாட்டாய்-
நடக்கிற நடை எல்லாம் ஆட்டமாய்  இருக்கும் ஆய்த்து –

அன்றிகே –
கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசை தாளமாய் –
வாயாலே பாடிப் பாடி –
அதனுக்கு ஏற்ற
கூத்தை அசைந்து அசைந்திட்டு
ஆடி ஆடி என்று பொருளாகவுமாம்

வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் –
இப்படி என்னை நோக்கி வாரா நின்றுள்ள உன்னை –
கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -என்கிறபடியே வேறு ஒரு ஆபரணம் வேண்டாதே –
திரு நாபி கமலம் தானே ஒரு ஆபரணம் ஆம்படி இருப்பான் ஒருவன் அன்றோ –
இவனுக்கு வேறு ஒரு ஆட்டும் பாட்டும் வேணுமோ –

சதங்கை ஓசையும் நடை அழகும் தானே
பாட்டும் ஆட்டுமாய் இருந்தபடி என்-என்று
ஆச்சர்யப்பட்டு இருந்தேன் -என்னுதல்

அழிந்து கிடந்ததை உண்டாக்கும் அவனன்றோ –
நம்முடைய சத்தையை தருகைக்காக வருகிறான் என்று
இருந்தேன் -என்னுதல்-

ஓடி ஓடி இத்யாதி –
இவள் சொன்னதின் கருத்து அறியாதே -இவள் நம்முடைய நீர்மையை சொல்லாமல் –
ஸுவ்ந்தர்ய பிரகாசமான மேன்மையை சொல்லுவதே -என்று –
மீண்டு ஓடிப் போக தொடங்குகையாலே-

இப்படி ஆடி ஆடி கொண்டு என் கைக்கு எட்டாதபடி -ஓடி ஓடி போய் விடாதே –
நீ புருஷோத்தமன் ஆகையாலே –
ஆஸ்ரித பரதந்த்ரனான பின்பு -என் வசத்திலே வந்து –
என் முலையை உண்ண வேணும் -என்கிறாள் –

(ஆஸ்ரிதற்கு அடங்கினால் தானே நீ உத்தமன் புருஷோத்தமன்-என்றவாறு )

———————————————–

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்றசிந்தை பெறுவார் தாமே -2 2-11 – –

பதவுரை

வார் அணிந்த–கச்சை அணிந்து கொண்டிருக்கிற
கொங்கை–ஸ்தநங்களையுடைய
ஆய்ச்சி–யசோதை
மாதவா–மாதவனே!
உண்–முலையை (உண்பாயாக)
என்ற–என்று (வேண்டிச்) சொன்ன
மாற்றம்–வார்த்தையைக் குறித்தனவான
நீர் அணிந்த குவளை–நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின்
வாசம்–நல்ல வாசனை
நிகழ் நாறும்–ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரி லவதரித்தவரும்
பார் அணிந்த–பூமி முழுவதும் அழகாகப் பரவிய
தொல் புகழான்–பழமையான கீர்த்தியை யுடையவருமான
பட்டர் பிரான்–பெரியாழ்வார் அருளிச் செய்த
பாடல்–பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்
சீர் அணிந்த–குணங்களாலழகிய
செம் கண் மால் மேல்–சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலிடத்தில்
சென்ற–பதிந்த
சிந்தை–மநஸ்ஸை
பெறுவர்–அடைவார்கள்

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி –
ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை பரிசாரகரானவர்கள்  கட்டி
இலச்சினை இட்டுக் கொண்டு திரியுமா போலே –
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு போக்யமான முலைகள்
பிறர்கண் படாதபடி கச்சாலே சேமித்துக் கொண்டு திரிகையாலே –
வாராலே அலங்க்ர்தமான முலையை உடையவளான ஆய்ச்சி என்று
ஸ்லாகித்துக் கொண்டு அருளிச் செய்கிறார் –

மாதவா உண் என்ற மாற்றம் –
ஸ்ரீ யபதி யாகையாலே -அவாப்த சமஸ்த காமனான அவனை –
அவதாரத்தின் மெய்ப்பாட்டுக்கு ஈடாக முலை உண் என்ற சப்தத்தை –

நீர் இத்யாதி –
நீருக்கு அலங்காரமாக அலர்ந்த செங்கழு நீருடைய பரிமளமானது ஒருபடிபட
பிரகாசியா  நிற்கிற  ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹராய் –

பார் இத்யாதி –
பூமியில் ராஜாக்களுக்கு பிரதானனான பாண்டியனும் –
ஞாதாக்களில் பிரதானரான செல்வ நம்பி தொடக்கமானவர்கள்
அன்றிக்கே
பூமி எங்கும் கொண்டாடும்படி வ்யாப்தமாய் –
வந்தேறி அன்றிக்கே –
ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான புகழை உடையராய் ப்ராஹ்மன உத்தமரான
ஸ்ரீ பெரியாழ்வார் அருளி செய்த பாடலை அப்யசிக்க வல்லவர்கள் –

சீர் இத்யாதி –
ஆத்ம குணங்களாலே அலங்க்ர்தனாய்-
அவயவ சோபைக்கு பிரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையனாய் –
இவை இரண்டையும் ஆஸ்ரிதர் அனுபவிக்கும்படி அவர்கள் பக்கல் வ்யாமோகத்தை உடையவனாய் –
இருக்குமவன் விஷயத்தில் –

அன்றிக்கே –
சீர் இத்யாதிக்கு –
ஆஸ்ரித பாரதந்த்ரம் ஆகிற குணத்தாலே அலங்க்ர்தனாய் –
இந் நீர்மைக்கும் மேன்மைக்கும் ப்ரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையவனாய் –
சர்வ ஸ்மாத் பரனாய் -இருக்குமவன்
விஷயத்திலே என்று பொருளாகவுமாம்

சென்ற இத்யாதி –
பாடல் வல்லார் தாம் செங்கண் மால் பக்கலிலே
ஒருபடி படச் சென்ற மனசை உடையவர் ஆவர் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-1–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

June 10, 2012

அவதாரிகை –
கீழ் இரண்டு திரு மொழியிலும் –
அச்சோ என்றும் –
புறம் புல்குவான் -என்றும் -அவன்
சைசவ அனுகுணமாக ஓடி வந்து -மேல் விழுந்து
முன்னும் பின்னும் அணைக்கும் ரசத்தை –

தான் அனுபவிக்க ஆசைப் பட்டு –
அவனைக் குறித்து பிரார்த்தித்து –
அவன் அப்படி செய்ய –
யசோதை பிராட்டி அனுபவித்தால் போலே –
இந்த சேஷ்டிதங்களினுடைய ரசத்தை அனுபவிக்க ஆசைப் பட்டு –
தாமும் அப்படியே பிரார்த்தித்து –
தத் காலம் போலே அனுபவித்து –
இனியரானார் –

சிறு பிள்ளைகள் அப்பூச்சி காட்டி விளையாடும் அத்தையும் –
அவதாரத்தின் மெய்ப்பாடு தோற்ற அவன் ஆஸ்ரிதத்தை
தத் காலத்தில் உள்ளார் அனுபவித்து ஹ்ர்ஷ்டராய் பேசினால் போலே –
பிற் காலமாய் இருக்கச் செய்தேயும் – தத் காலம் போலே -தாமும் அனுபவித்து பேசி –
ஹ்ருஷ்டராகிறார் இத் திருமொழியில்-

———————————————-

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி
பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2-1 1- –

பதவுரை

மெச்ச–(அனைவரும்) கொண்டாடும்படி
ஊது–ஊதுகின்ற
சங்கம்–ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை
மிடத்தான்–இடக் கையில் ஏந்தியுள்ளவனும்
நல்வேய்–நல்ல வேய்ங்குழலை
ஊதி–ஊதுபவனும்
பொய் சூதில்–க்ருத்ரிமமான சூதிலே
தோற்ற–(தம்முடைய சொத்துக்களை யெல்லாம்) இழந்தவர்களாய்
பொறை உடை–பொறுமை சாலிகளான
மன்னர்க்கு–பாண்டவர்கட்கு
ஆய்–(தான் எல்லா வகைத்) துணையுமாயிருந்து
(துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்)
பத்து ஊர்–பத்து ஊரையும்
பெறாது–அடைய முடியாமல்
அன்று–அக் காலத்திலே
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்த–அணி வகுத்துச் செய்து
அத் தூதன்–அந்தப் பாண்டவ தூதனான கண்ணன்
அப் பூச்சி காட்டுகின்றான்–அப்படிப் பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி காட்டுகின்றான்;
அம்மனே–அம்மா!
அப் பூச்சி காட்டுகின்றான்-.
(தலை கேசம் வைத்து மறைத்து -கண்ணை புரட்டி -சங்கு சக்கரம் காட்டி -அப்பூச்சி காட்டுதல் (

மெச்சூது சங்கம் இடத்தான் –
ஆஸ்ரித பரதந்த்ரனான பாண்டவ பஷ பாதி -என்று
எல்லாரும் மெச்சும் படியாக ஊதிகிற பாஞ்ச ஜன்யத்தை  இடக் கையிலே உடையவன் –

மெச்ச -என்கிற இது –
மெச் என்று கடைக் குறைத்தலாய் கிடக்கிறது –
மெச்ச ஊதுகிற என்கிறபடி –
மெச்சுதல்-கொண்டாட்டம் –

ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனி தான் பிரதிகூலர் மண் உண்ணும் படியாகவும் –
அனுகூலர் வாழும்படியாகவும் இறே இருப்பது –
யஸ்ய நாதேன தைத்யானம் பல ஹாநி ரஜாயாத -தேவானாம் வவ்ர்தே தேஜ -ப்ரஸாத சைவ யோகிநாம் -என்கிறபடியே –

நல்வே யூதி –
இதுவே அவதாரத்துக்கு அனு குணமான நிரூபகம் –
அனுகூலர் வாழும்படி நல்ல குழலை ஊதுமவன் –

குழலுக்கு நன்மையாவது –
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து –
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் -இத்யாதிப் படியே –
தன்னுடைய த்வநியாலே -சேதன அசேதன விபாகமற ஈடுபடுத்த வற்றாகை –
ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் திருக் குழலும் இவ் வதாரத்தில் கை தொடானாய் இறே இருப்பது –

பசு மேய்த்து திரியும் காலத்திலும் -ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கம் -என்றும் –
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் -(6-4-)-என்றும்
சொல்லக் கடவது இறே –

பொய் சூதில் தோற்ற –
க்ரித்ரிமமான சூதிலே பராஜிதராய் -சர்வஸ்வத்தையும் இழந்த –
செவ்வையில் இவர்களை ஜெயிக்க போகாது இறே –
க்ரித்ரிமத்தாலே இறே இவர்களை ஜெயித்தது –

பொறை உடை மன்னர்க்காய் –
அவர்கள் செய்தது க்ரித்ரிமம் என்று அறிந்து இருக்க செய்தேயும் –
க்ரோத விக்ரிதி இன்றிக்கே -ஷமையை உடையராய் இருந்த ராஜாக்களுக்காய் –
துரியோதநாதிகள் இவர்கள் சர்வஸ்வத்தையும் அபஹரிக்கும் இத்தனை அல்லது
இவர்கள் ஷமையை அபஹரிக்க மாட்டார்கள் இறே –
ஆகையாலே பொறை உடை மன்னர் என்று -பொறையை இவர்களுக்கு நிரூபகமாக சொல்லுகிறது –

மன்னர்க்காய் –
யஸ்ய மந்த்ரீஸ் ச கோப்தாஸ் ச ஸூஹ்ருதைர்ஸ் ஏவ ஜனார்த்தன -என்கிறபடியே
அவர்களுக்கு சர்வ விதமான துணையும் தானேயாய் கொண்டு -பர தந்த்ரனாய் –
லிபஜித்து கொடுத்து -கூடிக் கலந்து இருக்கில் -தீர்க்க ஜீவிகள் ஆகலாம் -என்ன –
அவர்கள் -நாங்கள் அது செய்யோம் என்ன –

ஆகிலும் சிறிது குறைவாகிலும் கொடும் கோள்-அவர்களை நான் பொருத்துகிறேன் -என்ன –
அவர்கள் அதுக்கும் இசையாமையாலே –
ஆனால் அவர்கள் ஐவர்க்கும் தலைக்கு இரண்டு ஊராக பத்தூர் தன்னை கொடும் கோள் -என்ன
இவை ஒன்றும் நாங்கள் செய்வது இல்லை –

வீர  போக்யை  அன்றோ வஸூந்தரை
யுத்தத்தை பண்ணி  ஜெயித்தவர்கள் ஜீவிக்கும் இத்தனை -என்ன –

ஆனால் அது தன்னை செய்யும் கோள் -என்று போந்து
இத் தலையையும் யுத்தத்தில் பொருத்தி –
அன்று பாரத யுத்தத்தில் கையும் அணியும் வகுத்து –
சாரதியாய் நின்று நடத்தின ஆஸ்ரித பஷ பாதியான அந்த தூதனானவன் –

அப் பூச்சி –
பயங்கரமாய் உள்ளது –
அதாவது –
லோகத்தில் பாலரானவர்கள் எதிர் தலைக்கு பயங்கரமாக காட்டுவன சில சேஷ்டிதங்கள்

இவ்விடத்தில் விசேஷம் உண்டு –
அது ஏது என்னில் –
நீர்மையை கண்டு -நம்மிலே ஒருவன் -என்று இருக்கும் அவர்கள் பயப்படும்படி
ஈஸ்வரத்வ சிஹ்னங்களைக் காட்டுகை –

இவ் விடத்தை  ஸ்ரீ உய்ந்த பிள்ளை-ஸ்ரீ திரு வரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீ எம்பெருமானார்
காலத்தில் எழுந்து அருளி இருந்தார் ஒரு அரையர் – பாடா நிற்க –
திரு வோலக்கத்திலே
அத் தூதன் என்று -பெருமாளை காட்டுவது –
அப் பூச்சி என்று கண்ணை இறுத்து கொண்டு வருவதாக அபிநயிக்க –

ஸ்ரீ உடையவர் பின்னே சேவித்து எழுந்து அருளி இருந்த ஸ்ரீ எம்பார் –
திருக் கைகளை திருத் தோள்களோடு சேர்ந்து காட்ட –
அவரும் அப்படியே அபிநயித்து கொண்டு வர –
இதுக்கடி என் என்று விசாரித்து புரிந்து பார்த்து அருளி –
ஸ்ரீ கோவிந்த பெருமாள் இருந்தீரோ -என்று அருளிச் செய்தார்-என்று பிரசித்தம் இறே –

(சங்கம் இடத்தான்–அப்பூச்சி காட்டுகின்றான்-இருப்பதால் )

அப் பூச்சி என்கிறது -இரண்டு திருக் கையில் ஆழ்வார்களையும்
அம்மனே என்கிறது -கண்டு பயப்பட்டு சொல்லுகிற வார்த்தை –

—————————————————-

மாயன் அன்று ஓதிய வாக்கு -ஸ்ரீ கீதாச்சார்யன் -உபநிஷத் பசுவைக் கறந்து அருளிச் செய்த
ஸ்ரீ கீதாம்ருதம் -அலைவலை-பஹு ஜல்பிகம் -சொல்லலாமோ –

மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன்
சிலை வளைய திண் தேர் மேல் முன்னிற்ற செங்கண்
அலைவலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 2- –

பதவுரை

மலை புரை–மலையை ஒத்த
தோள்–தோள்களை யுடைய
மன்னவர்–அரசர்களான
மாரதரும்–மஹா ரதரும்-பீஷ்மாதிகள்- (ஆத்மாநம் -அஸ்வங்களை ரக்ஷித்து போர் செய்வார் )
மற்றும் பலரும்–மற்றும் பலவகை அரசர்களும்
குலைய–அழியவும்
நூற்றுவரும்–(துர்யோதநாதிகள்) நூறு பேரும்
பட்டு–மரணமடைந்து
அழிய–வேர் அற்ற மரம் போல் -உருவமழிந்து போகவும்
பார்த்தன்–அர்ஜுனனுடைய
சிலை–(காண்டீவமென்னும்) வில்
வளைய–வளையவும்
(நூற்றுவரை வெல்வதை விட ஐவரை வேள்வித்ததே பெரிய விஷயம் )
திண் தேர் மேல்–(அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின் மேல்
(பார்த்த சாரதி இருப்பதாலேயே வந்த திண்மை உண்டே )
முன் நின்ற–(ஸாரதியாய்) முன் புறத்தில் நின்ற
செம் கண்–(வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை யுடையனாய்
அல வலை–(அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன்
(பிதற்றுவது போல் -ஜயத்தையே சொல்லி புகழுமவன்
வெல்ல வைக்க ஸ்ரீ கீதையை வெளியிட்டு அருளினவன் )
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

மலை இத்யாதி –
மலை போல் ஒருவரால் -சலிப்பிக்க ஒண்ணாதபடி
திண்ணியதான தோள்களை உடைய ராஜாக்களும் –
இத்தால் அதி பலாக்ரமம் ஆகையாலே ஒன்றுக்கும் அஞ்சாதவர்கள் என்கை-

மா ரதரும் –
பீஷ்ம த்ரோணாதிகளுமான மகா ரதரும் –
பீஷ்மர் த்ரோணாசார்யர் கர்ணன் என்கிற இவர்கள் ஒரோருவரே அதி சூரர் ஆகையாலே –
ஓர் எதிரிகளுக்கும் அஞ்சாதவர்கள் இறே-

மற்றும் பலர் –
தனித் தனியே எண்ணி முடியாமையாலே மற்றும் இவர்களோடு ஒக்க
விகல்பிக்கலாம்படி இருப்பர் அநேகர் என்கிறார் –
பதினோர் அஷோகினியானால் அதில் எத்தனை சூரர் உண்டாய் இருக்கும் –
ஆகையால் சமுச்சயித்து சொல்லும் இத்தனை –

குலைய –
கிருஷ்ணன் சாரத்தியம் பண்ணுவதாக ஏறினான் -என்று கேட்ட போதே –
நாம் இனி ஜீவிக்கை என்று ஒரு பொருள்  உண்டோ -என்று
பீதராய் நடுங்கும் படியாக –

கீழே –
அவர் இவர் என்றால் போலே விசேஷம் தோற்ற சொல்லி –
குலைய -என்கையாலே –
இந் நடுக்கத்தில் வந்தால் -ஒருவருக்கும் ஒரு விசேஷமும் இல்லை என்கை-

நூற்றுவரும் பட்டு அழிய –
கீழே -மன்னவரும் என்று -ராஜாக்களைச் சொல்லி இருக்கச் செய்தே –
இவர்களை பிரித்து எடுக்கையாலே –
கோபலீவர்த்த ந்யாயத்தாலே –
அங்கு இவர்களை ஒழிந்தவர்களைச் சொல்லிற்றாகக் கடவது –

பாண்டவர்களோடு யுத்தம் பண்ணி -ஜெயித்து பூமிப் பரப்பு அடங்கலும் –
தாங்களே ஆளுவதாக கோலி இருந்த -துர்யோநாதிகள் நூற்றுவரும் பட்டு அழிய –

மயை வைதே நிஹதா பூர்வமேவ -என்கிறபடியே
கிருஷ்ணன் அழியச் செய்வதாக சங்கல்பித்த போதே
நின்று நின்று வேரற்ற மரம் போலே பட்டு பின்னை உரு அழிந்து போம்படியாக

பார்த்தன் சிலை வளைய –
அர்ஜுனன் கையில் காண்டீபம் வளைய –
அதாவது –
அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகளை மதியாதே அர்ஜுனன்
எதிர்த்து நின்று
வில் வலித்து
யுத்தம் பண்ண வல்லன் ஆய்த்து
இவனுடைய சகாய பலத்தால் என்கை –

திண் தேர் மேல் முன் நின்ற –
மகா ரதரான பீஷ்மாதிகள் விட்ட ஆக்நேய அஸ்த்ராதிகளாலே
தக்தமாய் விழாமல் -தன் திருவடிகளின் சம்பந்த்தாலே திண்மையை உடைத்தாய் நின்ற –
தேரின் மேலே –
உரஸா தாரயாமாச பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -( த்ரோண பர்வம் பாரதம் )-என்கிறபடியே
அர்ஜுனனால் பொறுக்க ஒண்ணாத அஸ்த்ர சஸ்த்ரங்கள் வந்தாலும்
தன் மேலே ஏற்றுக் கொள்ளும்படியாக சாரதியாய் முன்னின்ற –

செம் கண் அலை வலை –
தான் சாரத்தியம் பண்ணின சாமர்த்யத்தாலே –
பிரதி பஷத்தை வென்று –
அந்த விஜயத்தை அர்ஜுனன் மேல் ஏறிட்டு –
அவன் பக்கல் வாத்சல்யம் தோற்ற கடாஷித்து நின்று –
அவன் விஜயம் தோற்ற பலவற்றையும் சொல்லி புகழுமவன்-

அவாக்ய அநாதர என்று இருக்க கடவ –
அவன் அதடைய அழிந்து கல கல என ஏத்தா நிற்கும் ஆய்த்து –
புகழ்ந்தாய் சினப் போர் சுவேதனை சேனாபதியாய் மனப் போர் முடிக்கும் வகை (நான்முகன் )-என்கிறபடியே –

அதவா –
பார்த்தன் சிலை வளைய திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலைவலை என்கையாலே –
அஸ்தான சிநேக காருண்ய தர்ம அதர்ம அதியாகுலனாய் –
நகான்ஷே விஜயம் க்ருஷ்ண-இத்யாதிப்படியே –
விஜயமும் வேண்டா ராஜ்யாதிகளும் வேண்டா என்று உபேஷித்து-

ரதோபஸ்த உபாவிசத் -என்றும் –
விஸ்ர்ஜ்ய  சசாஞ்சாபம் சோகசம் விக்ன மானச -என்கிறபடியே
சோகத்தாலே வெருவின மனசை உடையனாய் வில்லையும் பொகட்டு
யுத்தாந் நிவர்த்தனாய் தேர் தட்டிலே இருந்த அர்ஜுனன் தெளிந்து –

கரிஷ்யே வசனந் தவ-என்று
எழுந்து இருந்து வில் எடுத்து யுத்தம் பண்ணும்படியாக

பிரகிருதி ஆத்ம விபாகம் தொடக்கி
பரம ரகஸ்யமான பரபக்தி பர்யந்தமாக
உபதேசித்த அலை வலை தனத்தை சொல்லவுமாம்-

(நின்மலமாக வைத்தவர்
ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும் –ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -189-)

அலை வலை என்பது
அர்த்த கௌரவமும்  அதிகாரி கௌரவமும் பாராதே –
தன் நெஞ்சினில் பிரதி பன்னமானவற்றை சொல்லுமவன் இறே-
அது இங்கும் உண்டு ஆகையாலே இவனையும் அலைவலை என்னலாம் இறே –
இப்படி தான் அருளி செய்தது சரணாகதை யானவள் குழல் முடிப்பிக்கை ஆக  இறே-

வந்து இத்யாதி –
இப்படி பலர் குலையவும்
பட்டு அழியவும் –
சிலை வளையவும் –
தேர் முன்னிற்று சாரத்தியம் பண்ணின ஆஸ்ரித விரோதி நிரசனம் –
ஆஸ்ரித பார தந்த்ர்யம் –
முதலான ஸ்வபாவங்களை உடையவன்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான் –

————————————

காயு நீர் புக்குக்  கடம்பு ஏறிக் காளியன்
தீய பணத்தில் சிலம்பு ஆர்க்க பாய்ந்தாடி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 3- –

பதவுரை

காயும்–(காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற
நீர்–மடுவின் ஜலத்திலே
புக்கு–புகுந்து (கலக்கி)
(அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து)
கடம்பு ஏறி–(அம் மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி
காளியன்–அந்தக் காளியனுடைய
தீய பணத்தில்–கொடிய படத்திலே
சிலம்பு ஆர்க்க–(தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி
பாய்ந்து–குதித்து
ஆடி-கூத்தாடி
(இச் செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ)
வேயின் குழல் ஊதி–மூங்கினாலானாகிய குழலை ஊதி
(இப்படி)
வித்தகன் ஆய் நின்ற–விஸ்மயநீயனா யிருந்த
ஆயன்–கண்ண பிரான்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

காயு நீர் இத்யாதி –
காயு நீர் புக்கு –
அருகு அணைந்த வ்ருஷங்கள் பஷிகள் உள்பட
பட்டு விழும்படி காளியன் விஷ அக்நியாலே தப்தமாய் நின்று கொதிக்கிற மடுவின் ஜலத்திலே மதியாது

சென்று புக்கு –
கடு விடமுடைய  காளியன் தடத்தை கலக்கி (திருமங்கை )-என்கிறபடியே
அந்த தடாகத்தை கலக்கி –
காளியன் க்ருத்யனாய் தலை எடுத்து இருக்கும்படி பண்ணி –

கடம்பேறி –
அந்த விஷ அக்நியாலே அருகே பட்டு நிற்கிற தொரு கடம்பை –
தன் கடாஷத்தாலே –
பச்சிலை பூம் கடம்பாக்கி –
அதின் மேலே ஏறி –

காளியன் இத்யாதி –
காளியனுடைய -விஷ ஆஸ்ரயமாகையாலே க்ரூரமான பணத்தில் திருவடிகளை
திருச் சிலம்பு த்வநிக்கும்படி சென்று குதித்து –
அவன் பணங்கள் நெரிந்து –
வாய்களாலே ரத்தம் சொரியும்படி –
இளைத்து சரணம் புகுரும்  அளவும் அதன் மேலே ஏறி நின்று –
நர்த்தம் செய்து –

வேய் இத்யாதி –
இந்த வ்ருத்தாந்தத்தை கண்டும் கேட்டும் -என்னாகப் புகுகிறதோ -என்று தரைப்பட்டு கிடந்தது
ஈடுபடுகிற இவ் அனுகூல ஜனங்கள் தலை எடுத்து ப்ரீதராய் வாழும்படி
திருக் கையில் வேயின் குழலை ஊதி-
இவ் அதி மாநுஷ சேஷ்டிதத்தாலே விச்மயநீயனாய் நின்ற –

ஆயன் –
எல்லாம் செய்தாலும் ஜாத் உசிதமான இடைத் தனத்தில் குலையாதவன் -குறையாதவன் –
வந்து அப் பூச்சி காட்டுகின்றான் –

—————————————————-

இருட்டில் பிறந்து போய் ஏழை வல் லாயர்
மருட்டித் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப்
புரட்டி அந் நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட
அரட்டன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 4-

பதவுரை

இருட்டில்–இருள் நிறைந்த நடு நிசியில்
பிறந்த–(மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி
போய்–(அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப்) போய்
ஏழை–அவிவேகிகளான
வல்–(கிருஷ்ண ஆஸ்ரயத்தால் -தன்னைப் பற்றி யிருக்கும்) மன வலிமையை யுடைய
ஆயர்–இடையர்களின்
(கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக்
கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற)
மருட்டை–மருள் வார்த்தைகளை
தவிர்ப்பித்து–போக்கினவனாயும்
வல் கஞ்சன்–கொடிய கம்ஸன்
மாள–மாண்டு போம்படி
புரட்டி–(அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும்
அந் நாள்–(நாங்கள் யமுனையில் நீராடிய) அக் காலத்திலே
எங்கள்–எங்களுடைய
பூம் பட்டு–அழகிய பட்டுப் புடவைகளை
கொண்ட–வாரிக் கொண்டு போன
அரட்டன்–தீம்பனாயுமுள்ள கண்ணன்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

இருட்டில் பிறந்து –
மத்ய ராத்ரே கிலாதாரே ஜாயமானே ஜனார்தனே (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்கிறபடியே
கம்சன் முதலான துஷ்ப்ரக்ருதிகள் கண் படாதபடி –
அருகு நின்றாரை தெரியாத இருளிலே வந்து அவதரித்து –
எப்போது பிறப்பது -என்று ஹிம்சிக்கைக்காக உருவின வாளை வைத்து உறையில் இருக்கிறவன் –
கண்ணால் கண்டால் விடான் இறே-
(பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பாரே )

ஜானாது மா அவதானந்தே கம்சோயம் திதி ஜன்மஜ -என்றாள் இறே தேவகி பிராட்டி –

போய் –
வீங்கு இருள் வாய் அன்று அன்னை புலம்ப போய் -என்கிறபடியே
அந்த செறிந்த இருளிலே பெற்ற தாயானவள் விரஹா ஆதரதையாலே காலைக் கட்டிக் கொண்டு
கிடந்து கதரா நிற்க
திரு ஆய்ப்பாடியிலே போய் –

ஏழை வல்லாயர் மருட்டை தவிர்ப்பித்து –
தன் பக்கல் சபலராய் -க்ருஷ்ணாஸ்ரைய கிருஷ்ணா பலா கிருஷ்ண நாதாஸ் ச (துரோண பர்வம் )-என்கிறபடியே
தன்னைப் பற்றி இருக்கும் பலத்தை உடையரான கோபரானவர்கள்-
செருக்காலே தாங்கள் கம்சனை அழிக்க வல்லாரைப் போலே சொல்லும் பிராமக உக்திகளை-
நீங்கள் எல்லாரும் வேணுமோ -நானே செய்கிறேன் -என்றால் போலே சொல்லும் தன்னுடைய
உக்தி விசேஷங்களாலே தவிரும்படி பண்ணி –

வன் கஞ்சன் மாளப் புரட்டி –
நான் செய்கிறேன் என்றது – உக்தி மாதரம் போகாமே -கம்ச ப்ரேரிதனாய்-
தன்னை அழைத்து கொண்டு போக வந்த அக்ரூரர் உடனே -ஸ்ரீ மதுரையில் எழுந்து அருளி –
உத்சவத்துக்கு என்று அழைத்து விட்டு -வழியிலே நலியும்படியாக –
தன் குவலயாபீடத்தையும் -மல்லரையும் -நிறுத்தி –

துங்க மஞ்ச வ்யவஸ்த்தித-என்கிறபடியே –
தான் உயர்ந்த நிலத்திலே ஏறிப் பார்த்து கொண்டு இருந்த
வன்னெஞ்சனான கம்சன் முடியும்படியாக –
அவன் வழியில் நிறுத்தின விரோதிகளை நிரஸித்து கொண்டு –
சென்று –
அவன் இருக்கிற மஞ்சஸ்  ஸ்தலத்திலே  எழப் பாய்ந்து –

கேசேஷ்வாக்ருஷ்ய விகளத் கிரீட  மவ நீதலே-ச கம்சம் பாத யாமாச தச்ய உபரி  பபாதச -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-)-என்கிறபடியே
அபிஷேகத்தை தட்டிப் பொகட்டு-மயிரை பிடித்து இழுத்து -கீழே பூமியிலே விழத் தள்ளி -அவன் மேலே குதித்து –
கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த-(3-10) -என்கிறபடியே
மயிரை தூக்கிப் பிடித்து -நிலத்திலே இட்டுப் புரட்டி –

அந் நாள் இத்யாதி –
பனி நீராட்டின அந் நாளிலே எங்களுடைய அழகிய பட்டுகளை வாரிக் கொண்ட தீம்பானவன் –

அரட்டு -தீம்பு –மிடுக்காகவுமாம்-

வந்து அப் பூச்சி காட்டுகின்றான் –

——————————————————-

சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்க துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான்  2-1 5- –

பதவுரை

சே பூண்ட–எருதுகள் கட்டுதற்கு உரிய
காடு–சகடம்
(அஸுரா வேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை)
சிதறி–உருக்குலையும்படி உதைத்து
நெய்க்கு–நெய்க்கு ஆசைப்பட்டு
திருடி–களவு செய்து
ஆப்பூண்டு–(உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு
(அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க)
நந்தன் மனைவி–நந்தகோபன் தேவியான அவ் யசோதை
கடை தாம்பால்–(தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க)
துள்ளித் துடிக்க –துடிக்க துடிக்க
சோப்பூண்டு–அள்ளி மிகவும் துடிக்கும் படி அடி யுண்டு
(அதனோடு நில்லாமல்)
அன்று–அக் காலத்தில்
ஆப்பூண்டாள்–(எங்கும் சலிக்க முடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன்
அப் பூச்சி காட்டுகின்றான்

சேப்பூண்டு இத்யாதி –
வன் பாரச் சகடம்-(3-1) என்கிறபடியே -எருதுகள் பூண்டு வலிக்கப் பட்ட
அதி பாரமான சகடம் அசூரா வேகத்தாலே நலிவதாக ஊர்ந்து மேலிட்டு வர –
முலை வரவு தாழ்த்து சீறி நிமிர்த்த திருவடிகளாலே –
அத்தை உருக் குலையும்படி உதைத்து –

திருடி இத்யாதி –
நெய்க்கு ஆசைப் பட்டு களவு கண்டு –
த்ரவ்யம் உடையவர்கள் கையில் அகப் பட்டுக் கொண்டு –
(கட்டுண்டு -கையும் மெய்யுமாகக் கொண்டு )

நந்தன் மனைவி இத்யாதி –
என் பிள்ளையை களவேற்றாதே-
உண்டாகில் கொண்டியோடே கண்டு பிடித்து கட்டிக் கொண்டு வாருங்கோள்-என்று
முன்பே சொல்லி வைக்கையாலே –
தாயாரான தன் முன்பே அவர்கள் கட்டோடு கொண்டு வர –

நந்தன் மனைவி –
பிள்ளை பெற்று வளர்த்தபடி அழகிதாய் இருந்தது என்று தன்னைத்  தானே மோதிக் கொண்டு –
அவர்கள் முன்னே தான் அலற்றி எல்லாம் தோற்றும்படி-
கடை கயிற்றாலே அடிக்கையாலே –
துள்ளித் துடிக்க துடிக்க அடி உண்டு –

அன்று இத்யாதி –
அடித்த அளவும் அன்றிக்கே –
ஓர் இடத்தில் போகாதபடி அவனை பிடித்துக் கட்டி –
அப்போது கட்டுண்டு இருந்தவன்
இன்று அப் பூச்சி காட்டுகின்றான் –

சோப்பூண்டு  ஆப்பூண்டு  என்கிற இவை
நீட்டி சொல்லிக் கிடக்கிறது-

————————————–

சர்வ ரஷகனானவன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் -என்கிறார்

செப்பிள மென் முலைத் தேவகி நங்கைக்குச்
சொப்படத் தோன்றி தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே வந்து அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-6 – –

பதவுரை

செப்பு–ஸ்வர்ண கலசங்கள் போன்ற
இள மெல் முலை–இளமையையும் மென்மையையுமுடைய முலைகளை யுடைய
தேவகி நங்கைக்கு–தேவகிப் பிராட்டிக்கு (மகனாக)
சொப்பட தோன்றி–நன்றாகப் பிறந்து
தொறுப்பாடியோம்–ஆய்ப்பாடியிலுள்ள வர்களாகிய நாங்கள்-(தொறு – பசு )
வைத்த–சேமித்து வைத்த
துப்பமும்–நெய்யையும்
பாலும்–பாலையும்
தயிரும்–தயிரையும்
விழுங்கிய–உட் கொண்ட
அப்பன்–ஸ்வாமி (உபகாரகன்)
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.

செப்பு இத்யாதி –
செப்பு போலே இருக்கிற சந்நிவேசத்தை உடையதாய் –
இளகிப் பதித்து – மிருதுவாய்   இருக்கிற முலைகளை உடையவளாய் –
ஆத்ம குண பூரணையான தேவகி பிராட்டிக்கு –

இப்போது இவளுடைய முலைகளை வர்ணிக்கிறது -கிருஷ்ணன் பிடித்து அமுது செய்கைக்கு
யோக்யமான முலைகள் என்று தோற்றுகைக்காக-
கம்ச பீதியாலே அவனை ஸ்தலாந்தரத்திலே போக விட்ட இத்தனை இறே உள்ளது –

நங்கை -என்கிறது –
மேல் விளைவது அறிய வல்ல அறிவும் –
பிள்ளையை அவஸ்த அனுகுணமாக நோக்க வல்ல ப்ரேமமும் –
பர சமர்த்தி பரத்தையும் –
முதலான குணங்களை உடையவள் ஆகையாலே –

சொப்படத் தோன்றி –
நன்றாகத் தோன்றி -அதாவது –
சர்வேஸ்வரனை பிள்ளையாக பெற வேணும் -என்று நோன்பு நோற்றுதற்க்கு ஈடாக –
ஜாதோசி தேவ தேவேச சங்க சக்ர கதா தர -என்கிறபடியே சர்வேஸ்வரத்வ சிஹ்னங்களான
திவ்ய ஆயதங்களோடு வந்து பிறந்து –
சபலம் தேவி சஞ்சாதம் ஜாதோஹம் யத் தவோ தராத் -என்று
அவளுடைய அபேஷித சம்விதானம் பண்ணுகை –

பிறந்து -என்னாதே –
தோன்றி -என்றது –
தேவகீ பூர்வ சந்த்யாயா மாவிர்ப்பூதம் -என்கிறபடியே –
(அச்யுத பானு -கிழக்குத் திக்குக்கும் ஸூ ர்யனுக்கும் உள்ள சம்பந்தம் போல் )
கர்ப வாச தோஷம் அற ஆவிர்ப்பித்தமையை பற்ற –
நைஷ கர்ப்பத் வமாபேதே நயோந்யா மவசத் ப்ரபு-(சபா பர்வம் )என்னக் கடவது இறே –

தொறுப்பாடியோம் –
தொறு -பசு
தொறுவர் -ஆயர் –
தொறுப்பாடியோம் என்றது -ஆய்ப்பாடியில் உள்ளேனமான நாங்கள் -என்றபடி –

வைத்த –
சேமித்து வைத்த –

துப்பம் இத்யாதி –
துப்பம்-நெய்-நெய்யையும் பாலையும் தயிரையும் அமுது செய்த –
எல்லாவற்றையும் சேர விழுங்கின என்கையாலே –
துப்பமும் பாலும் என்கிற இடத்தில் –
துஞ்சின நெய்யும் காய்ந்த பாலும் விவஷிதம் –

அன்றிக்கே –
விழுங்கிய -என்ற இது –
அமுது  செய்கிறதற்கு பர்யாயமான சொல்லாய் –
த்ரவ்ய அனுகுணமாக கொள்ளவுமாம்  –

அப்பன்-
உபகாரகன் –
இவ்வோ த்ரவ்யங்களை விரும்பி அமுது செய்த உபகாரம் தன்னை சொல்லுகிறது –
வந்து அப்பூச்சி காட்டுகின்றான் –

——————————————

தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
சித்தம் அனையாள் அசோதை இளம் சிங்கம்
கொத்தார் கரும் குழல் கோபாலர் கோளரி
அத்தன் வந்து என்னை அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 7- –

பதவுரை

(இந்தப் பிள்ளையை யசோதை)
தத்து கொண்டாள் கொல் ஓ–தத்த-ஸ்வீ க்ருத – புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ!
(அல்லது)
தானே பெற்றாள் கொலோ–ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ!
சித்தம் அனையாள்–(கண்ணனுடைய) மனக் கருத்தை ஒத்து நடப்பவளாகிய
அசோதை–யசோதையினுடைய
இளஞ்சிங்கம்–சிங்கக்குட்டி போன்றவனும்
நந்தகோபன் குமாரன் யசோதை இளம் சிங்கம் -திருப்பாவை
கொத்து ஆர் கருங்குழல்–பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும்
கோபாலர் கோன் அரி–இடையர்கட்கு (அடங்காத) மிடுக்கைக் கொண்ட சிங்கம் போன்றவனுமாகிய
மீண்டும் சிங்கம் இங்கு
அத்தன்–ஸ்வாமியான இவன்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

தத்துக் கொண்டாள் கொலோ இத்யாதி –
தத்த புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ-அன்றியே தானே மெய் நொந்து பெற்றாளோ-
அதாவது
அசோதை இளம் சிங்கம் -என்ன -இவள் தத்த ஸ்வீகாரம் செய்யக் கண்டிலோம் –
இவள் பெறுகிற போது இவளை பார்த்துப் பேணிக் கொண்டு இருந்த நாம் எல்லாம் இவள் பெறக் கண்டிலோம் –
அயர்ந்து உறங்கி விட்டோம் –
இவள் தான் -நான் பெற்றேன் -என்று சொல்லக் கேட்டோம் இத்தனை -இறே –

ததர்ச ச ப்ரபுத்தாச யசோதா ஜாதமாத்மஜம்-என்கிறபடியே
அவளும் அப்போது பெற்று மோகித்து கிடந்து
உணர்ந்து பின்பு இறே இவனைக் கண்டது –

இப்படி தான் சொல்லுகிறது
அதி லோகமான இவனுடைய ரூப குண சேஷ்டிதங்களைக் கண்டால் –
இவள் பிள்ளை -என்று -சொல்லப் போகாதபடி இருக்கையாலே –

அவள் தானும் –
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை என் மகனே என்பர் நின்றார் -என்று
இவனுடைய அதி மானுஷ  சேஷ்டிதங்களைக் கண்டால் -நீ என்னுடைய பிள்ளையாக கூடாது –
நடு நின்றவர்கள் உன்னை என்னுடைய பிள்ளை என்றே சொல்லா நின்றார்கள் -என்னும்படியாய் இறே இருப்பது –

சித்தம் இத்யாதி –
தீம்பு கண்டாலும் நியமியாதே -தன் நெஞ்சுக்கு ஒத்து நடக்கும்
யசோதை உடைய பிள்ளையாய் -பால சிம்ஹம் போலே அவளுக்கு அடங்காதே திரிகிறவன் –
நியமித்தாள்  ஆகிலும் -அங்கனும் தீமைகள் செய்வர் கொலோ நம்பீ ஆயர் மட மக்களை -என்று
இவன் தீம்பிலே கை வளரும்படியாக வாய்த்து நியமிப்பது –

அஞ்ச உரப்பாள் யசோதை ஆணாட விட்டு இட்டு இருக்கும் -(நாச்சியார் )-என்னக் கடவது இறே –
கர்வத்தாலும்
அநபிபவ நீயதையாலும் -இளம் சிங்கம் என்கிறது –

கொத்தார் இத்யாதி –
உகந்தார் உகந்தபடி சூட்டின பூம் கொத்துகளால் நிறைந்து இருப்பதாய் –
நீல மேக நிபம் அஞ்சன புஞ்ச ஸ்யாம குந்தளம் ( வரதராஜ ஸ்தவம் )-என்கிறபடியே
இருண்டு இருப்பதான திருக் குழலை உடையனாய் –
கோபாலர் கீழ் அடங்காமல் மிடுக்கை உடைத்தான சிம்ஹம் போலே செருக்கி மேணாணிதித்து இருக்குமவன்

அசோதை இளம் சிங்கம் –கோபால கோளரி –
தாய்க்கு அடங்காதவன் ஊருக்கும் அடங்கான் இறே –
கோள் -மிடுக்கு –

அத்தன் -ஸ்வாமி
கீழ் சொன்ன ஸ்வாபாவங்களுக்கு தோற்றுச் சொல்லுகிற வார்த்தை-

வந்து அப் பூச்சி காட்டுகின்றான் –

————————————–

(ராமன் -கமல பத்ராஜன் -கண் அழகு உடையவன் -கண்ணன் என்னலாமே )

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –

பதவுரை

கொங்கை–(முதுகில்) முலை யெழும்பினாற் போன்ற
வல்–பலிஷ்டமான
கூனி–கூனை யுடையளான மந்தரையினுடைய
சொல்–சொல்லை
கொண்டு–அங்கீகரித்து
எங்கும்–எல்லாவிடங்களிலுமுள்ள
குவலயம் துங்கம்–இப் பூமியில் (இருப்பவற்றுள்) சிறந்தனவான
கரியும்–யானைகளையும்
பரியும்–(அங்ஙனொத்த) குதிரைகளையும்
இராச்சியமும்–ராஜ்யத்தையும்
பரதற்கு–பரதாழ்வானுக்கு
அருளி–கொடுத்து விடல்
வல் கான் அடை–கொடிய காட்டை அடைந்த
அம் கண்ணன்–அழகிய கண்ணை யுடையனான இவன்
அப் பூச்சி காட்டுகின்றான்

கொங்கை இத்யாதி –
முதுகிலே முலை புறப்பட்டால் போலே -திரண்டு கிளர்ந்து வலிய கூனை
உடையளான மந்தரை உடைய வசனத்தை கொண்டு –

காட்டுக்கு போயிற்று பித்ரு வசனம் கொண்டாய் இருக்க –
குப்ஜை உடைய வசனம் கொண்டு என்பான் என்னில் –
ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே –
வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-

இவளுடைய வசனத்தாலே -கலக்கிய மா மனத்தனளாய் இறே கைகேசி வரம் வேண்டிற்று –
அதடியாக இறே சக்ரவர்த்தி போக சொல்லி வேண்டிற்றும் –
ஆகையால் எல்லாவற்றுக்கும் மூலம் இதுவாகையாலே இவளுடைய சொல் கொண்டு போனார் என்கிறது –

குவலய துங்க கரியும் –
பூமியில் யானைகள் எல்லாவற்றிலும் -விஞ்சின சத்ருஜ்ஜயன் முதலான யானைகளும் –
பரியும் -அப்படியே லோக விலஷனமான குதிரைகளும் –
இராச்சியமும் -அகண்டகமான ராஜ்யமும்
எங்கும் -இஷ்வாகூணா மியம் பூமி  ஸ்சைல வன காநனா-என்கிறபடியே
எழுந்து அருளுகிற காடு தானும் –
பரதற்கு அருளி –
கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –

வன் கானடை –
ஒருவரால் ப்ரேவேசிக்க அரிதான -வலிய காட்டை அடைந்த

அம் கண்ணன்-
அழகிய சுலபனானவன் -கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில்
முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு
காடேறப் போன படியை நினைத்து –
அழகிய சுலபன் -என்கிறது –

அன்றிக்கே –
ராம கமல பத்ராஷா-என்கிறபடி
அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –
அப்போது
ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே –
அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –

(அழகிய எளியவன் -கண்ணை உடையவன் என்று இரண்டு நிர்வாகங்கள்
அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
ராஜ்ய நாசம் இருள் வளர வளர ராமசந்திரன் ஒளி விஞ்சி இருந்ததே )

——————————————–

பதக முதலை வாய்ப்  பட்ட களிறு
கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த
அதகன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-9 – –

பதவுரை

பதகம்–பாதிக்குந் தன்மையை யுடைய
முதலை–முதலையின்
வாய்–வாயிலே
பட்ட–அகப்பட்ட
களிறு–ஸ்ரீகஜேந்த்ராழ்வான்
கதறி–(தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு
கை கூப்பி–கையைக் குவித்துக் கொண்டு
என் கண்ணா கண்ணா என்ன–என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க
(முக் கரண வியாபாரங்கள் )
அங்கு–அப்போதே
உதவ–(அந்த யானைக்கு) உதவும்படி
புள் ஊர்ந்து–பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று
உறு துயர்–(அந்த யானையின்) மிக்க வருத்தத்தை
தீர்த்த–போக்கின
அதகன்–(ஆஸ்ரித ரக்ஷணத்தில்) மிடுக்கை யுடையவன்
வந்து – அப் பூச்சி காட்டுகின்றான்-.

பதக முதலை -பதகம் -கொடுமை -கொடியவாய்  விலங்கு–(பெரிய திருமொழி -5-8-)-என்னக் கடவது இறே–
அதன் விடத்தினுக்கு அனுங்கி அழுங்கிய யானை (திருப்பள்ளி எழுச்சி )-என்னும்படி
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை நோவு படுத்தின கொடுமையை சொல்கிறது –

அன்றிக்கே
பாதகம் -என்கிறதை பதகம் -என்று குறைத்து கிடக்கிறதாய்-
பாதகத்தை உடைத்தான முதலை என்னவுமாம் –
அதாவது
சாபோபஹதமாய் வந்து கிடந்தது இறே-
இம் முகத்தாலே  தன்னுடைய சாப மோஷம் என்று அறிகையாலே தன் கார்ய சித்தி அளவும்
இவன் காலைப் பிடித்த பிடி நழுவ விடாது என்றபடி –

வாய்ப் பட்ட களிறு –
அதன் வாயிலே அகப்பட்ட யானையானது –
தன்னிலம் அல்லாமையாலே -ஒரு நீர் புழுவின் கையிலே அகப்பட்டது ஆய்த்து-
வெளி நிலம் ஆகில் இதின் அருகே வர மாட்டாது இறே அது –

கதறி இத்யாதி –
அதன் வாயிலே அகப்பட்ட இடத்தில் –
நம்முடைய பலத்தாலே தள்ளி கரை ஏறுகிறோம் -என்று –
கஜ ஆகர்ஷதே தீரே க்ரஹா ஆகர்ஷதே ஜலே-(விஷ்ணு தர்மம் ) -என்கிறபடியே –
ஆயிர தேவ சம்வத்சரம் அது நீருக்கு இழுக்க –
தான் கரைக்கு இழுக்க சென்ற இடத்தில் –
அதுக்கு தன்னிலமாகையாலும் –
அபிமத சித்தியாலும் –
முழு வலி முதலை (பெரிய திருமொழி -திருவரங்க பதிகம் )-என்னும்படி பலம் அதிசயித்து –
தனக்கு தன்னிலம் அல்லாமையாலும் –
அபிமத அலாபத்தாலும் –
பலம் ஷீணமாய் -துதிக்கை முழுத்தும் படியாகையாலே –
இனி நம்மால் செய்யல் ஆவது ஒன்றும் இல்லை -என்று –

பரமா பதமா பன்னோ மனசா சிந்தயத்தரிம் -என்கிறபடியே –
அத் தசையில் சர்வேஸ்வரனே தனக்கு ரஷகனாக நினைத்து –
தன் கையை எடுத்து அஞ்சலி பண்ணி –
தன் ஆர்த்தி எல்லாம் தோற்றும்படி
கூப்பிட்டு கொண்டு -எனக்கு நிர்வாகனானவனே என்று பல காலும் சொல்ல –
(முக்கரண பிரபத்தி நடந்ததே )

நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று கூப்பிட்டவனாக அருளிச் செய்தார் திருமங்கை ஆழ்வார் –
இவர் -என் கண்ணா கண்ணா என்று கூப்பிடவனாக அருளிச் செய்தார் –
மூலேதி முக்த பதம் ஆலபதி த்வி எந்தரே-என்று கொண்டு -ஆதி மூலமே -என்று கூப்பிட்டானாக பௌராணிகர் சொன்னார்கள் இறே –
இவை தன்னில் சேரும்படி என் என்னில் –

மூலம்-என்கிற இடத்தில்
அசாதாரண விக்ரக விசிஷ்டனான ஆகாரத்தை நினைத்து கூப்பிட்டான் ஆகையாலே
அதுக்கு பர்யாய சப்தங்களை இட்டு ஆழ்வார்கள் அருளி செய்தார்கள் –
ஆகையால் எல்லாம் சேரக் குறை இல்லை –

உதவ இத்யாதி –
இந்த ஆர்த்த த்வனி திருச் செவிப்பட்ட போதே திருப் படுக்கையிலும் நின்றும் பதறி எழுந்து இருந்து –
அதந்த்ரித்த சமூபதி ப்ரஹித ஹஸ்தம்–(ரங்கராஜ ஸ்தவம் )-இத்யாதிப்படியே
சேனை முதலியார் திருக் கை கொடுக்கவும் -பற்றாமல் –
திருவடி நிலை கோத்து எழுந்து அருளுகையும் இன்றிக்கே
வெறும் தரையிலே பத்து எட்டு அடி இட்ட பதற்றத்தை கண்டு –

இதுக்கடி என் -என்று பயப்பட்டு திவ்ய அந்தபுரம் கை நெரிக்க –
பெரிய திருவடியை பண் செய்து ஏறப் பெறாமல் -வெறும் புறத்தில் மேற் கொண்டு –
அந்த ஆர்த்திக்கு உதவ வேணும் -என்னும்
அதைப் பற்ற அவனை பிரேரித்து விரைய நடத்திக் கொண்டு சென்று –
அந்த பொய்கையிலே முதலையின் கையில் அகப்பட்டு –
ஸ்ரீ கஜேந்த்திரன் பட்ட அதி மாத்ர துக்கத்தைப் போக்கின –

ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு துக்கமாவது –
நாஹம் களேபரஸ் யாஸ்ய த்ராணார்த்தம் மது சூதனா -கரஸ்த்த கமலான்யேவ பாதயோர் அர்ப்பிதம் ஹரே -என்கிறபடியே
கையிலே பூ செவ்வி அழியாமல் திருவடிகளில் சாத்தப் பெறுகிறோம் இல்லோம் என்னுமது –

அதகன் -மிடுக்கன்

இப்படி ஆஸ்ரித ரஷணம் பண்ணின சக்தி விசேஷத்தை சொல்லுகிறது –

வந்து அப் பூச்சி காட்டுகின்றான் –

——————————————

வல் ஆள் இலங்கை மலங்க சரம் துரந்த
வில் ஆளானை விட்டு சித்தன் விரித்த
சொல் ஆர்ந்த அப் பூச்சி பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே -2- 1-10 – –

பதவுரை

வல்லாள்–பலசாலிகளான வீரர்களை யுடைய
இலங்கை–லங்கையானது
மலங்க–பாழாம்படி
சரம் துரந்த–அம்பைச் செலுத்திய
வில் ஆளனை–வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்த–பரக்க கூறிய
சொல் ஆர்ந்த–சொல் நிரம்பிய
அப் பூச்சி பாடல் இவை பத்தும்–அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்க வல்லவர்
போய்–(அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய்
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்திலே
மன்னி இருப்பர்–நித்ய வாஸம் பண்ணப் பெறுவர்.

வல் ஆள் இலங்கை –
வலிய ஆள்களை உடைத்தாகையாலே -ஒருவரால் அடக்க ஒண்ணாத
பரிகார கட்டு உடைத்தான இலங்கை யானது –
ராவணன் மதிக்கும்படியான ஆண் பிள்ளைகள் வர்த்திக்கிற ஊர் இறே

மலங்க –
செருப்பும் தேவாரமும் ஒக்க கட்டி போக்கிடம் தேடி மலங்கும்படியாக –
(தேவாரமும்-ராக்ஷஸர்கள் ஆதரிக்கும் தெய்வங்கள் )

சரம் துரந்த வில் ஆளானை –
திருச் சரங்களை மென் மேலும் நடத்தின வில்லை உடையவனை –
இத்தால் ஈஸ்வரத்வப் பிடாரால் அன்றிக்கே அவதாரத்துக்கு அனுகுணமாக நின்ற அம்பாலே
அவ்வூரை அடர்த்த ஆண் பிள்ளை தனைத்தை சொல்கிறது –

இத் திருமொழி கிருஷ்ண அவதார விஷயமாக இருக்க –
நிகமத்தில் இப்படி அருளிச் செய்தது –
அவ் வதாரத்துக்கும் இவ் வவதாரத்துக்கும் உண்டான ஐக்யத்தை பற்ற இறே –
வன் கானடை அம் கண்ணன் (8-பாசுரத்தில் )-என்று இந்த ஐக்கியம் கீழே சொல்லப்பட்டது இறே –

விட்டு சித்தன் விரித்த –
பெரியாழ்வார் விஸ்தரேண அருளிச் செய்தவையான –

சொல் ஆர்ந்த இத்யாதி –
சொல் நிரப்பத்தை உடைத்ததாய் அப் பூச்சி விஷயமான
பாட்டுகளாய் இருக்கிற இப் பத்தையும் -ஏதேனும் ஒருபடி  வல்லவர்கள் –

சொல் ஆர்ந்த என்ற இது –
அதிகரிப்பார்க்கு இதன் அர்த்தத்தில் போக வேண்டா –
சப்த ரசம் தானே அமையும் என்னும்படி இருக்கும் என்னவுமாம் –

வல்லார் என்றது
சாபிப்ரயமாக வல்லார் என்னவுமாம் –

போய் இத்யாதி –
இதனுடைய வ்யவசாயமே ஹேதுவாக –
அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் –
ஸ்ரீ வைகுண்டத்திலே அவனை அனுபவித்து –
மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு –
யாவத் காலமும் இருக்கப் பெறுவர்-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-9–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

June 7, 2012

அவதாரிகை –
கீழில் திருமொழியில் -யசோதை பிராட்டி -இவனுடைய சைசவ அனுகுணமாக –
முன்னே ஓடி வந்து மேல் விழுந்து -அணைத்து கொள்ளும் ரசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு –
அச்சோ என்கிற தன்னுடைய யுக்தியாலும் –
அதுக்கு அனுகுணமான தன்னுடைய ஹஸ்த முத்ரையாலும்
வந்து அணைத்து கொள்ள வேணும் என்று அவனை அபேஷித்து-
அந்த ரசத்தை அனுபவித்தபடியை –
தம்முடைய பிரேம அனுகுணமாக தாமும் அப்படியே அபேஷித்து அனுபவித்தாராய் நின்றார் –

அவ்வளவு அன்றிக்கே –
அவன் தன் உகப்பாலே ஓடி வந்து முதுகிலே அணைத்து கொள்ளும் –
சேஷ்டித ரசத்தையும் -அனுபவிக்க ஆசைப்பட்டு –
புறம் புல்குவான் -என்று –
அது தன்னை அவனைக் குறித்து அபேஷித்து -அவனும் அப்படி செய்ய –

அவள் அனுபவித்த  பிரகாரத்தை –
அவ்வளவும் அல்லாத பிரேமத்தை உடைய தாம் அந்த சேஷ்டிதத்தை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே –
அவனுடைய மேன்மையையும் நீர்மையையும் சொல்லிப் புகழ்ந்து கொண்டு –
புறம் புல்குவான் புறம் புல்குவான் -என்று பல காலும் அபேஷித்து –
தத் காலம் போலே தர்சித்து ப்ரீதராய் அனுபவிக்கிறார் இத் திருமொழியில்-

(வேண்டிக்கொள்வது விட தானாக கட்டிக் கொள்பவன் –
அவன் தன்மையையே சொல்லுவதே -இதன் தன் ஏற்றம் )

——————–

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையின் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச்  சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் -1-9-1-

பதவுரை

என் குட்டன்–என் பிள்ளை
வட்டு நிடுவே–(இரண்டு நீல ரத்ந) வட்டுகளின் நிடுவே
வளர்கின்ற–வளர்த்துக் கொண்டிருப்பதான
மாணிக்கம் மொட்டு–இந்திர நீலமயமான அரும்பினுடைய
நுனையில்-நுனியில்
முளைக்கின்ற–உண்டாகின்ற
முத்தே போல்–முத்தைப் போல
சொட்டு சொட்டு என்ன–சொட்டுச் சொட்டென்ற ஓசை யுண்டாகும்படி
(அம் மாணிக்க மொட்டு)
துளிர்க்க துளிர்க்க–பல தரம் துளியா நிற்க
வந்து–ஓடி வந்து
என்னை-என்னுடைய
புறம்–முதுகை
புல்குவான்–கட்டிக் கொள்வான்;
கோவிந்தன் என்னை புறம் புல்குவான்

இரண்டு நீல ரத்ன வட்டின் நடுவே வளரா நிற்ப்பதொரு நீல ரத்னத்தால் உண்டான
மொட்டினுடைய அக்ரத்திலே அரும்பியா நிற்கிற முத்துக்கள் போலே –

நீல ரத்ன மொட்டு என்றது –
நிறத்தையும் ஆகாரத்தையும் பற்ற –

சொட்டு இத்யாதி –
உள்ளினின்றும் புறப்படுகிற ஜல பிந்துக்கள் இற்று முறிந்து சொட்டு சொட்டு
என்னப் பலகாலும் துளியா நிற்க –
சொட்டு சொட்டு என்கிற இது அநுகாரம் –

என் குட்டன் இத்யாதி –
என் பிள்ளை வந்து என்னைப் புறம் புல்குவான்

கோவிந்தன் –
சுலபனானவன் -என்னைப் புறம் புல்குவான் –

புறம் என்று முதுகு –
புல்குதலாவது -தழுவுகை –

புல்குவான்
என்று அபேஷிக்கை-

அன்றிக்கே –
புல்குவான் என்றது
புல்குகிறவன் என்றபடி –
அப்போது
இத்தலை அபேஷிக்கை அன்றிக்கே –
அவன் தானே வந்து புல்குகிறபடியை சொல்லுகிறதாம் –
இது ஆழிப் பிரான் புறம் புல்கிய –
என்கிற நிகமத்துக்கு மிகவும்  சேரும் –

(உய்ய உலகு தொடக்கி அபேக்ஷிதங்கள் தான் -பிரார்த்தனை -ஸ்வரூப கீர்த்தனை
இங்கு புறம் புல்குபவர் இயல்பு சொல்வது நிகமத்துக்கு மிகவும்  சேரும் –
அவனாக -நிர்ஹேதுகமாக வந்து புறம் புழங்குவது அதிக சுவை
தொடர் சங்கிலி -அவன் தானே
பிரார்த்திக்க -தளர் நடை நடவானோ பிரார்த்தனை பத்திலும் உண்டே ‘
இதில் கடைசிப்பாட்டில் மாறி -புறம் புல்குவான் இல்லாமல் புறம் புல்கிய இருப்பதால் -இதுவே கொள்ள வேண்டும் –
முந்திய யோஜனை பிரகரணத்துக்கு சேரும் )

—————————-

கிண் கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினில்
கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர்  கட்டித்
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1 9-2-

பதவுரை

என் கண்ணன்–என் கண்ணபிரான்
கிண்கிணி–அரைச் சதங்கையை
கட்டி–கட்டிக் கொண்டும்
கிறி–சிறுப் பவள வடத்தை
கையினிலே–கையிலே
கட்டி–கட்டிக் கொண்டும்
கங்கணம்–தோள் வளையை
இட்டு–(தோள்களில்) சாத்திக் கொண்டும்
கழுத்தில்–திருக் கழுத்திலே
தொடர்–சங்கிலியை
கட்டி–அணிந்து கொண்டும்
தம் கணத்தாலே–(இன்னுமணிந்து கொண்டுள்ள) திருவாபரணங்களின் திரளோடுங்கூட
சதிர் ஆ நடந்து வந்து–அழகாக நடந்து வந்து
என்னை புறம் புல்குவான்-;–எம்பிரான் என்னை புறம் புல்குவான் –

கிண் கிணி இத்யாதி –
திரு வரையிலே கிண் கிணியை கட்டி –
திரு முன் கையிலே கிறியைக் கட்டி –
கிறி -சிறுப் பவள வடம் –

கங்கணம் இத்யாதி –
திருத் தோள் வளை இட்டு திருக் கழுத்திலே சங்கிலியாகிற ஆபரணத்தை சாத்தி –

தன் கணத்தாலே –
திரு ஆபரணம் தன்னுடைய திரளோடே-திரு ஆபரண பிரகரணம் ஆகையாலே –
அனுக்தமான திரு ஆபரணங்களையும் கூட்டி -கணம் -என்கிறது –

அன்றிக்கே –
தன் கண்ணாலே என்னைக் கடாஷித்து கொண்டு என்னுதல்-
அத்து -சாரியை

சதிரா நடந்து வந்து –
நான் அறியாதபடி நடந்து வந்து –
அன்றிக்கே –
அழகியதாக நடந்து வந்து என்னுதல் –
(இவன் புறம் புல்க வந்ததைக் கண்டவர்கள் இவன் அழகைச் சொல்லக் கேட்டு சொன்னாள் என்னுதல் )

என் கண்ணன் –
எனக்கு ஸூலபனானவன் -என்னைப் புறம் புல்குவான்

எம்பிரான் –
எனக்கு ஸ்வாமி யானவன் என்னைப் புறம் புல்குவான்-

—————————————–

கத்தக் கதித்து கிடந்த பெரும் செல்வம்
ஒத்து பொதிந்து கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
கொத்து தலைவன் குடி கெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்கள் ஏறு என்னைப் புறம் புல்குவான் -1 9-3 –

பதவுரை

கத்தக் கதித்து கிடந்த–மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த
பெருஞ்செல்வம்–மிகுந்த ஐச்வர்யத்தை
ஒத்து–(தன் பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து
பொதிந்து கொண்டு–மனம் பொருந்தி யிருக்க-
உடலால் ஒத்து- மனசால் ஏற்றுக் கொண்டு -என்றபடி
உண்ணாது–அநுபவியாமல்
மண்–பூமியை
ஆள்வான்–(தான் அத்விதீயனாய்) ஆள வேணுமென்று நினைத்தவனான
கொத்து தலைவன்–(தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய) திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன்
குடி கெட–(தன்) குடும்பத்தோடு பாழாம்படி
தோன்றிய–திருவவதரித்த
அத்தன்–ஸ்வாமி
வந்து என்னை புறம் புல்குவான்-;
ஆயர்கள் ஏறு–இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான்
என் புறம் புல்குவான்-.

அஹம் மமதைகளால்-உனக்கு எனக்கு என்று பிணக்கும் படி-கொழுத்துக் கிடந்த
மகத் ஐஸ்வர்யத்தை –
கதிப்பு -கொழுப்பு –

அன்றிக்கே –
தக்கத் தடித்து -பக்கப் பருத்து -என்னுமா போலே –
கத்தக் கதித்து என்று ஒரு முழு  சொல்லாய் –
மிகவும் கொழுத்து கிடந்த மகத் ஐஸ்வர்யத்தை -என்னவுமாம் –

ஒத்து இத்யாதி –
பந்துக்களான பாண்டவர்களோடு கூடி நெஞ்சு பொருந்திக் கொண்டு ஜீவியாதே –

மண் ஆள்வான் –
பூமிப் பரப்பு அடங்கலும் தானே ஆள்வானாக பாரித்து இருந்த –

கொத்துத்  தலைவன் –
துச்சாச நாதிகளான ப்ராதக்களும் பந்துக்களுமான திரளுக்கு –
நிர்வாகனாக கொண்டு –
பிரதானனாய் இருந்துள்ள துரியோதனுடைய –

குடிகெட-
குலமாக நசிக்கும்படி –

தோன்றிய இத்யாதி –
பார்த்தம் ரதிநம் ஆத்மாநஞ்ச சாரதிம் சர்வ லோக சாஷிகம் சகாரா -என்கிறபடியே
பார்த்தனுக்கு சாரதியாய் கொண்டு –
பிரகாசனான ஸ்வாமி யானவன்

வந்து என்னை புறம் புல்குவான் –

ஆயர்கள் இத்யாதி –
கோபர்களுக்கு எல்லாம் தலைவன் ஆனவன் –
என்னை புறம் புல்குவான் –

——————————————

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயருக்காகி தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர்
ஊர்ந்தவன் என்னை புறம் புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9 4- –

பதவுரை

நாந்தகம்–நந்தகம் என்னும் வாளை
ஏந்திய–கையிலணிந்துள்ள
நம்பி–பெரியோனே!
ஆஸ்ரித விளம்ப அஸஹிஷ்ணுத்வத்தாலே
சரண்–(நீ எனக்கு) ரக்ஷகன்
என்று–என்று சொல்லி
தாழ்ந்த–(தன்னை) வணங்கிய
தனஞ்சயற்கு ஆகி–அர்ஜுநனுக்குப் பக்ஷபாதி யாயிருந்து
தரணியில்-இப் பூமியிலே
வேந்தர்கள்–(எதிரிகளான) ராஜாக்கள்
உட்க–அஞ்சிக் கலங்கும்படி
விசயன்-அந்த அர்ஜுநனது
மணி திண் தேர்–அழகிய வலிய தேரை
ஊர்ந்தவன்–(ஸாரதியாயிருந்து) செலுத்தின இவன்
என்னை புறம்புல்குவான்-;
உம்பர்–நித்ய ஸூரிகளுக்கு
கோன்–நிர்வாஹகனான இவன்
என்னை புறம் புல்குவான்-.

நாந்தகம் இத்யாதி –
நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை-
ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் –
திருக் கையில் தரித்து கொண்டு -ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற
நீ ரஷகனாக வேணும் என்று –

தாழ்ந்த இத்யாதி –
பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்

தரணியில் இத்யாதி –
பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும்
தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு –
நாம்  இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ –
என்று நெஞ்சு உளுக்கும்படியாக

விசயன் இத்யாதி –
அர்ஜுனனுடைய அழகியதாய் –
திண்ணியதான தேரை
சாரதியாய் நின்று நடத்தினவன் –
என்னைப் புறம் புல்குவான் –

உம்பர் இத்யாதி –
இப்படி  துர் வர்க்கத்தை நிரசிக்கையாலே -பூ பாரத்தை போக்குகைக்காக
அவதரித்து அருள வேணும் என்று -அபேஷித்த தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே –
என்னைப் புறம் புல்குவான் –

———————————————

வெண்கல பத்திரம் கட்டி விளையாடிக்
கண் பல செய்த கரும் தழைக் காவின் கீழ்
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமணன் என்னைப் புறம் புல்குவான் – 1-9-5- –

பதவுரை

பண்டு–முன்னொரு காலத்திலே
வெண்கலம் பத்திரம்–வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை
கட்டி–(அரையிற்) கட்டிக் கொண்டு
விளையாடி–விளையாடி
பல கண் செய்த–பல பீலிக் கண்களைக் கொண்டு செய்யப்பட்ட
கரு தழை–பெரிய குடையாகிற
காவின் கீழ்–சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று)
பல பண் பாடி–(அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப் பாடிக் கொண்டு
பல்லாண்டு இசைப்ப–மங்களாசாஸநம் செய்ய
பல மண் கொண்டான்–பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன்
புறம் புல்குவான்-;
வாமனன் என்னை புறம் புல்குவான்-.

வெண்கலம் இத்யாதி –
வெண்கலத்தாலே பண்ணின பத்திரத்தை ( இலையை )-ஜாத் உசிதமாக –
திருவரையில் கட்டிக் கொண்டு விளையாடி –

கண் பல இத்யாதி –
பல பீலிக் கண்களையும் இட்டு கட்டின -பெரிய குடையாகிற சோலை நிழலின் கீழே –
கண் -பீலிக் கண் -மயில் கண்
பெய்தால்-அத்தை இட்டு சமைத்தலை சொல்லுகிறது
கருமை-பெருமை
தழை-குடை
அத்தைக் கா என்கிறது –
பீலியினுடைய தழைவால் வந்த குளிர்த்தியைப் பற்ற –

அன்றிக்கே –
கண் பல பெய்து -என்ற பாடமான போது-
கரும் தழை கண் பல பெய்து -என்று அன்வயித்து –
பல பீலிக் கண்களையும் திரு முடியில் அலங்காரமாக சாத்தி என்று -பொருளாகக் கடவது –

கரும் தழை -பீலிப் பிச்சம்
கண் என்றது அதனுடைய கண்
தலையிலே பீலித் தழை கட்டுகை ஜாத் உசித வர்த்தி இறே

காவின் கீழ் –
இப்படிகொத்த அலங்காரத்தோடே-சோலை நிழலிலே விளையாடி என்கை-

பண் இத்யாதி –
சங்கைஸ் ஸூராணாம்-என்றும்
திசை வாழி எழ -என்றும் சொல்லுகிறபடியே –
திக்குகள் தோறும் அனுகூலரானவர்கள் பண்கள் பலவற்றாலும் பாடி மங்களா சாசனம் பண்ண –
இசைப்ப என்ற -சொல்ல என்றபடி –

பண்டு இத்யாதி –
மகா பலி பக்கலிலே அர்த்தியாய் சென்று நீரேற்ற அக் காலத்திலே –
பூமி தொடக்கமான சகல லோகங்களையும் திருவடிகளாலே அளந்து கொண்டவன் –
புறம் புல்குவான் –
வாமனன் –
அளப்பதற்கு முன்பே இரக்கைக்கு வாமனன் ஆனவன் என்னைப் புறம் புல்குவான் –

——————————————-

சத்திரம் ஏந்தி தனியொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனைக்
கத்திரிவர்  காண காணி முற்றும் கொண்ட
பத்திர ஆகாரன் புறம் புல்குவான் பார் அளந்தான் என் புறம் புல்குவான் -1-9-6 –

பதவுரை

உத்தர வேதியில் நின்ற–உத்தர வேதியிலிருந்த
ஒருவனை–(ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே
சத்திரம்–குடையை
ஏந்தி–(கையில்) பிடித்துக் கொண்டு
தனி–ஒப்பற்ற
ஒரு மாணி ஆய்–ஒரு ப்ரஹ்மசாரி வாமனனாய் (போய்)
தனி ஒரு -அஸாஹயா -அத்விதீயம்
கத்திரியர்–(அவனுக்குக் கீழ்ப் பட்ட) க்ஷத்ரியர்கள்
காண–பார்த்துக் கொண்டிருக்கையில்
காணி முற்றும்–உலகம் முழுவதையும்
கொண்ட–(நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட
பத்திரம்–விலக்ஷணமான-மங்களகரமான –
ஆகாரன்–வடிவை யுடையனான இவன்
புறம் புல்குவான்-;
பார்–பூமியை
அளந்தான்–(திரிவிக்கிரமனாய்) அளந்த இவன்
என் புறம் புல்குவான்-.

சத்திரம் இத்யாதி –
சத்ரத்தையும் கையில் தரித்து கொண்டு –
அசஹாயனாய் –
க்ர்ஷ்ணாஜினமும் யக்ஜோபவீதமும் மூஞ்சியும் ஆன விநீத வேஷத்தாலும்
வடிவு அழகாலும் –
அத்வீதியமான வாமனனாய் கொண்டு
யக்ஜவாடத்திலே சென்று –

உத்தரம் இத்யாதி –
அத்வீதியமான ஒவ்தார்ய குணத்தை உடையவனாய் –
உத்தர வேதியிலே நின்ற மகா பலியை –

கத்திரிவர்  இத்யாதி –
ராஜாக்கள் எல்லாரும் காண தனக்கு ஸ்வம்மான பூமியை
அவன் தன்னதாக கொண்டு இருக்கையாலே –
தான் அர்த்தியாய் உதகம் ஏற்று -பரிகிரகித்த –

பத்திர ஆகாரன் –
பத்ரமான ஆகாரத்தை உடையவன் –
விலஷணமான வடிவை உடையவன் –
மங்களகரமான ஆகாரம் -வடிவை உடையவன் –
புலன் கொள் மாணாய்-( திருவாய் -4-5-)-என்றார் இறே –
(மண் கொண்டது பின் புலன்களைக் கொண்டது முன்னே )

பார் அளந்தான் இத்யாதி –
முன்பு இரந்த பூமியை திருவடிகளால் அளந்து கொண்டவன்
என் புறம் புல்குவான் –

———————————————–

பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்த திரு வயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆழியான் என்னைப் புறம் புல்குவான் -1-9 7- –

பதவுரை

பொத்த உரலை–(அடியில்) ஓட்டையாய் விட்டதொரு உரலை (கொண்டு வந்து)
கவிழ்த்து–தலை கவிழ்த்துப் போட்டு
அதன் மேல் ஏறி–அவ் வுரவின் மேலேறி
தடாவினில்–மிடாக்களிலே உள்ள
தித்தித்த பாலும்–மதுரமான பாலையும்-திரட்டுப் பாலையும் –
வெண்ணெயும்–வெண்ணெயையும்
திரு வயிறு ஆர்–வயிறு நிரம்ப
மெத்த விழுங்கிய–மிகுதியாக விழுங்கின
அத்தன்-தலைவன்
வந்து என்னை புறம் புல்குவான்-;
ஆழியான்–(இப்படிக் களவு கண்டு உண்கையில்) ஆழ்ந்து தேறியவன்
என்னை புறம் புல்குவான்-.

பொத்த இத்யாதி –
பால் வெண்ணெய் முதலான -த்ரவ்யங்களை களவிலே ஸ்வீ கரித்து திரிய புக்கவாறே –
அவற்றை இவனுக்கு எட்டாதபடி வைக்கக் கடவோம் -என்று
உறி மேல் உயர சேமித்து வைக்க –

அடிப் பொத்து உபயோக யோக்கியம் இன்றிக்கே எல்லாரும் உபேஷித்து கிடந்த ஒரு உரலை
உருட்டிக் கொண்டு போய் –
உறிக் கீழே கவிழ விட்டு –
அதன் மேல் ஏறி நின்று –

நல்ல உரலானால்- நடுவே தேடி வருபவர்கள் உண்டாய் இருக்குமே –
என்று ஆய்த்து-
பொத்த உரலைத் தேடி இட்டுக் கொண்டது –

தித்தித்த இத்யாதி –
காய்ச்சி திரட்டி தடாவினில் வைத்த ரஸ்யமான பாலையும் –
கடைந்து தடாவினில் சேர்த்து வைத்த வெண்ணெயும் –

தடாவினில் என்கிற இது
கீழும் ,மேலும் அந்வயித்து கிடக்கிறது –

விழுங்கிய என்கையாலே
பாலும் திரட்டு பால் என்றே கொள்ள வேணும் –

(பால் உண்ணோம் -நெய் உண்ணோம் –
ஸ்த்ரீகள் பார்த்தே வழக்கம் இல்லையே கண்ணன் பிறந்த பின்பு –
பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் -பாசுரம் உண்டே )

மெத்த இத்யாதி –
இவற்றை அமுது செய்கிற இடத்தில் -அபிநிவேச அதிசயத்தாலே –
மிகவும் திரு வயிறு நிறைய அமுது செய்த –

அத்தன் –
ஸ்வாமி யானவன் –
கீழ் சொன்ன விருத்தாந்த விசேஷத்தை பற்ற உகந்து சொல்லுகிற வார்த்தை –
வந்து என்னைப் புறம் புல்குவான் –

ஆழியான் –
க்ரித்ரிமத்தில் மிகவும் அவஹாகனம் உடையவன் என்னுதல்-
திரு ஆழியை திருக் கையிலே உடையவன் என்னுதல் –
திரு ஆழியை உடையவன் என்ற போது-சர்வாதிகனானவன் கிடீர்
ஷூத்ரரைப் போலே இப்படி செய்தவன் என்ற கருத்து –
என்னைப் புறம் புல்குவான் –

—————————————————–

மூத்தவை காண முது மணல் குன்று ஏறி
கூத்து வந்து ஆடி குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1 9-8 – –

பதவுரை

மூத்தவை–வயசு சென்ற இடைச் சனங்கள்- வ்ருத்த ஜன ஸபை -ஆச்சார்யம் வயசு ஞானம் இவற்றால் மூத்தவை
காண–காணும் படியாக
முது மணல் குன்று ஏறி–நெடு நாளாய் குவிந்து மேடாயிருந்த மணற்குன்றின் மேலேறி யிருந்து
வாய்த்த–தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும்படி கிட்டின
மறையோர்–ப்ரஹ்ம ரிஷிகள்
வணங்க–தன்னைக் கண்டு வணங்கவும்
இமையவர்–தேவர்கள்
ஏத்த–ஸ்தோத்ரஞ்செய்யவும்
குழலால் இசைபாடி–வேய்ங்குழலினால் ராகம் பாடிக் கொண்டும்
உவந்து–ஸந்தோஷித்து
கூத்து ஆடி–கூத்தாடியும் நின்று
வந்து என்னை புறம் புல்குவான்-;
எம்பிரான் என்னை புறம் புல்குமான்-.

மூத்தவை காண –
வயசாலும் ஜாதி உசிதமான அறிவாலும் சீலத்தாலும் வடிவாலும் மூத்த கோப ஜனந்களானவை-
தன்னுடைய சேஷ்டித ரசத்தை காணும்படியாக –

அன்றிக்கே –
மூத்த என்கிற இத்தை மூத்து என்று கடை குறைத்தலாய் -அவை என்று சபையாய்-
வருத்த ஜன சபை என்னுமாம் –

முது மணல் இத்யாதி –
எல்லாருக்கும் தெரியும்படியான மணல் குன்றின் மேல் ஏறி
முதுமையால்-கிளர்த்தியை சொல்லுகிறது

கூத்து இத்யாதி –
நிலவறையில் கிடக்கிற பெண்களும் விட்டு வந்து காண்கைக்கு உறுப்பு
ஆகையாலே -ப்ரீதனாய் கொண்டு கூத்தாடி –

குழலால் இசை பாடி –
திருப் பவளத்தில் வைத்து ஊதுகிற குழல் வழியே இசைகளைப் பாடி –
குழலின் த்வனி  வாய்ப்பு இறே மூத்தவை அறிவது –

தான் நினைத்த பெண்களுடைய பெயரை சொல்லி அழைக்கையும்-
வெறுத்தவர்களை கால் கட்டி பொறை கொள்ளுகையும் –
முதலான சப்த விசேஷங்கள் –
இவனோடு பழகி போரும் பெண்களுக்கு இறே தெரிவது –

குழலால் இசை பாடி -கூத்து வந்தாடி -என்று அந்வயித்து கொள்வது –

குழலோசையாலே அபிமதரைத் திரட்டி –
அவர்களைக் காணப் பெற்றோமே – என்று உகந்து -கொண்டு ஆய்த்து –
கூத்தாடுவது –

மரக்கால் கூத்து -குடக் கூத்து -என்று விசேஷியாமையாலே-
இவற்றில் ஏதேனும் ஒரு கூத்தாகக் கடவது –

வாய்த்த இத்யாதி –
ஸ்வ சேஷ்டிதம் காண ஆசைப் பட்டு தன்னை அடி ஒத்தி திரியும் –
விலஷணரான ரிஷிகள் ஆனவர்கள் -இந்த சேஷ்டிதத்தில் தோற்று வணங்க –
தேவர்கள் ஆனவர்கள் இத்தை கண்டு வித்தராய் நின்று ஸ்துதிக்க –

அன்றிக்கே –
வாய்த்த என்ற வல் ஒற்றை  மெல் ஒற்றாக்கி -வாய்ந்த என்றாய் –
மறையோர் என்கிறது –நிலவறையிலே மறைந்து நின்றவர்கள் என்றபடியாய்-
முன்பு நிலவறையிலே மறைந்து கிடந்தது -குழலோசை வழியே கிட்டின பெண்கள் –
திருவடிகளின் மார்த்வத்தை நினைத்து -இந்த கூத்தை அமைக்கைக்காக வணங்க –
அநிமிஷராய் கூத்தை பார்த்து கொண்டு இருந்த -முன்பு சொன்ன வ்ருத்த ஜனங்கள்
வித்தராய் ஸ்துதிக்கும் படியாக என்னவுமாம் –

வந்து இத்யாதி –
இப்படி கூத்தாடின செவ்வியோடே வந்து என்னை புறம் புல்குவான் –

எம்பிரான் –
எங்களுக்கு மகா உபகாரகன் ஆனவன் என்னை புறம் புல்குவான்-

—————————————————-

கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் – 1-9-9 –

பதவுரை

இந்திரன் காவினில்–இந்த்ரனுடைய உத்யாநவநத்திலிருந்த
கற்பகம் காவு–கற்பகச் சோலையை
கருதிய–(தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று) விரும்பிய
காதலிக்கு–தனக்கு ப்ரியையான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
இப்பொழுது–இப்பொழுதே
ஈவன்–கொணர்ந்து தருவேன்
என்று–என்று சொல்லி
நிலா திகழ்–நிலா விளங்குகின்ற
முற்றத்துள்–அவள் வீட்டு முற்றத்தில்
நிற்பன செய்து–இருப்பனவாகச் செய்து
உய்த்தவன் என்னை–தழைக்கும்படி செய்தவன்
என்னை புறம் புல்குவான்-;
உம்பர் கோன்–(அன்று தன் பராக்ரமத்தை காட்டிய) தேவாதி தேவன்
என்னை புறம் புல்குவான்-.

கற்பகம் இத்யாதி –
தேவ லோகத்தில் இந்திரனுடைய காவினில் நிற்கிற கற்பகக் காவை –
சசி பண்ணின அவமதியடியாக -பிடிங்கிக்  கொண்டு போய் பூ லோகத்தில் என்னுடைய
நிலா முற்றத்தில் நாட்டுத் தர வேணும் -என்று ஆசைப் பட்ட அபிமதையான
சத்ய பாமை பிராட்டிக்கு -நாளை என்னுதல் -பின்னை என்னுதல்-செய்யாதே –
இப்போதே தரக் கடவன் என்று பிடுங்கிக் கொண்டு போரா நிற்க்கச் செய்தே –

முற்பட ஆதரித்த இந்திரன் –
தன் புழைக் கடையிலே ஒரு பூண்டைப் பிடுங்கிக் கொண்டு போரப் பொறாமையாலே-
குபிதனாய் வஜ்ரத்தை வாங்கி துடர்ந்து
யுத்தம்  செய்வானாக வந்து –
வந்த கார்யம் பலியாமையாலே –
ஸ்தோத்ரம் செய்ய –

இப்போது தானே கொடு போக வேணும் –
பின்பு அங்கு வந்து நிற்கக் கடவது -என்று சங்கல்பம் செய்து கொண்டு போந்து –

வண் துவரை நட்டானை -(நறையூரில் கண்டேனே ) -என்கிறபடியே
ஸ்ரீ மத் த்வாரகையிலே நிலா முற்றத்திலே நட்டவன் –

உய்த்தவன் என்கையாலே –
இங்கே கொடு வந்து நட்ட பின்பு –
அங்குத்தையிலும்  காட்டிலும்
தழையும் பூவும் கொழுந்துமாய் கொண்டு சம்ருத்தமான படி சொல்லுகிறது –

என்னை  இத்யாதி –
இப்படி அபிமத விஷய பர தந்த்ரனானவன்
என்னைப் புறம் புல்குவான்

உம்பர் கோன் –
பிராட்டி உகப்பு செய்கையாலே இஸ் ஸ்வாபத்துக்கு தோற்று எழுதிக் கொடுக்கும் –
நித்ய ஸூரிகளுக்கு எல்லாம் நிர்வாகன் ஆனவன் –
என்னைப் புறம் புல்குவான் –

——————————————————–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த்தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களை பெற்று மகிழ்வரே -1 9-10 – –

பதவுரை

வேய்–மூங்கில் போன்ற
தடந்–பெரிய
தோளி–தோள்களை யுடையனான
ஆய்ச்சி–யசோதை யானவன்
ஆழிப் பிரான்–சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன்
அன்று–அக் காலத்திலே
புறம் புல்கிய–புறம் புல்குவதைக் கூறிய
சொல்–சொல்லை
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
மகிழ்ந்து–(தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து
ஈந்த–(உலகத்தார்க்கு) உபகரித்த
தமிழ் இவை ஈர் ஐந்தும்–தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்-ஓத வல்லவர்கள்
வாய்த்த–(மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி
நல் மக்களை–நல்ல புத்திரர்களை( ஸத் சிஷ்யர்களையும் )
பெற்று–அடைந்து
மகிழ்வர்–ஆநந்திப்பர்கள்.

வேய் தடம் தோளி ஆய்ச்சி –
பசுமைக்கும் -சுற்று உடைமைக்கும் -செவ்வைக்கும்
வேய் போலேயாய் பெருத்து இருந்துள்ள தோள்களை உடையளான யசோதை பிராட்டி –

அன்று இத்யாதி –
அக் காலத்தில் கையிலே திரு ஆழியை உடைய சர்வேஸ்வரன்
அவதாரத்தின் மெய்ப்பாட்டால் வந்த சைசவ அனுகுணமாக தன்னைப் புறம் புல்கின
பிரகாரங்களை சொன்ன சொல்லை –

விட்டு சித்தன் இத்யாதி –
ஸ்ரீ பெரியாழ்வார் தத் காலம் போலே அனுபவித்து ப்ரீதராய் –
அது தன்னை எல்லாரும் அறியும்படி உபகரித்ததாய் –
சர்வாதிகாரமான திராவிடமாய் -இருக்கிற
இவை பத்துப் பாட்டையும் சாபிப்ராயமாக  வல்லவர்கள்

வாய்த்த இத்யாதி –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஈடாக வாய்த்த
விலஷணரான சிஷ்ய புத்ரர்களை -லபித்து –
அத்தாலே -வந்த ஆனந்தத்தை உடையராவர் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம் -49-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

June 5, 2012

(மண்ணுக்கு பிருத்வி போன்ற சிறந்த நெற்றி யுடைய
தலை மகள் தோழியைக் கூறுவதாகவும்
தோழி தலை மகளைக் கூறுவதாகவும் கொள்ளலாம்
ஒண் நுதலே -உடையவளே –
இந்த இரவு போல் -விரிந்து கொண்டே போகும் இருள் -முன்பு கேட்டதும் கண்டதும் அறிந்ததும் இல்லையே
ஒன நுதலாள் -என்று கொண்டு
பூமி கரையாமல் இருந்தது போல் பிருத்விக்கு நிகரான தோழி என்றும்
பின்னை கொல் இத்யாதியால் தலை மகள்
ப்ரீதி அபிமானம் ரக்ஷணம் -இவற்றை அவளைப்போலவே இவளுக்கும் உண்டே
பாய் இருள் -பாய்ந்த இருள் -பாய்கின்ற இருள் – பாயும் இருள் –
கடாயா -தாண்டுதல் -அளந்த -நடத்தின- – ரஷித்த

ஊரெல்லாம் துஞ்சி-5-4- -ஆவி காப்பார் இனி யார் -இரவு வியசனம் இதுக்கு
மடலூர்த ஒருமிக்க இரவு வந்ததால் -ஓர் நீள் இரவு போல் இங்கு பாய் இருள் –
சங்கீதம் கூட்டி அங்கு இதே
இருளுக்கு ஆற்றாமைக்கு சொல்லிக் கொள்ளும் துறை )

அவதாரிகை –
சர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாஷம் பண்ணிற்று  இலனோ -என்று
(நம் மேலொருங்கே பிறழ வைத்தார் என்றும் என்னைக் கொண்டு தன்னைத் தான் பாடி )
ஆறி இருந்தார் முன்பு –
காதாசித்கமாய் அனுபவ விச்சேதத்தை பண்ணுமதான சம்சாரத்திலே நம்மை வைப்பதே-என்னும்
ஆற்றாமை ஒரு பிராட்டி திசையை விளைத்தது –
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலை மகள் தான் ராத்திரி வ்யசனத்தாலே
நோவு படுகிறபடியை தானே சொல்லுகிறாள் ஆதல் –
அன்றிக்கே
தோழி வார்த்தை ஆதல் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய  மண்ணேர் அன்ன  ஒண்ணுதலே -49 –

பாசுரம் -49-பண்டும் பல பல வீங்கு இருள் காண்டும் –
தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –
ஊரெல்லாம் துஞ்சி -5-4-

பதவுரை

காள வண்ணம்–கறுத்த திருநிறத்தையும்
வண்டு உண் துழாய்–வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய
பெருமான்–ஸர்வேச்வரனும்
மதுசூதனன் தாமோதரன்–மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால்
தாமோதரன் -ஸர்வேஸ்வரன் -ஆமோ தரம் அறிய என்பதால்
உண்டும்–(பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும்
உமிழ்ந்தும்–(பிரளயம் நீங்கின வளவிலே) வெளிப்படுத்தியும்
கடாய–பாதுகாக்கப் பெற்ற-நடத்தின-அளந்த – ரஷித்த
மண்–பூமியினுடைய
ஏர்–அழகை
அன்ன–ஒத்த
ஒள் நுதலே–ஒளிபொருந்திய நெற்றியை யுடையவளே!
பண்டும்–முன்பும்
பலபல–மிகப்பலவான
வீங்கு இருள்–பெரிய இருட்பொழுதுகளை
காண்டும்–பார்த்திருக்கிறோம்;
இ பாய் இருள்போல்–இந்தப் பரந்த இருட்பொழுது போல
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம்–யாம் (வேறொரு பொருளைக்) கண்டறியவதும் கேட்டறிவதும் இல்லோம்.

வியாக்யானம் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்-
இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள்  ஒருத்தி காணும் இவள் தான் –
ஸ்ரீ மார்கண்டேய பகவான் அநேகம் பிரளயங்களை நீஞ்சி கரை கண்டால் போல் –
இதுக்கு முன்பு அநேக ராத்திரி -வியசனங்களும் அனுபவித்து –
அவற்றுக்கு ஒரு அவசானமும் (முடிவும் )கண்டு போந்தோம் இறே-

வீங்கிருள் காண்டும் –
முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டு போந்தோம் –

இப்பாயிருள் இத்யாதி –
அவ்வளர்த்தியோடே இப்படி பரந்த  இருள் போலே இருப்பதொன்று

கண்டு அறியோம் –
இவ்விருளை தப்பி ஒதுங்க ஒரு நிழல் இல்லாதபடி பிரளயம் வந்தால் போல் –
கண்ட இடம் எங்கும் தானே போந்தது –
இவ்விருள் போலே இருப்பது ஒன்றும் நாம் இதுக்கு முன்பு கண்டு அறியோம் –

நம்மோடு சஹோதரிகளாய் ராத்திரி வியசனதுக்கு உடல் கொடுத்து போந்த –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போலே இருப்பார் தான் இப்படி இருப்பது ஓன்று அனுபவித்து
போந்ததாக கேட்டு அறிவதும் இல்லை –

முன்பு சம்சாரயாய் நின்ற நிலையில் கண்டு அனுபவித்ததும் அநேகம் போந்தது –
இவ்விசேஷ கடாஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே

(மூன்று வித ராத்திரி
சம்சாரி யாய் இருந்த நிலையில்
மதிநலம் அருளினை பின்பு
விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்பு
கண்டதும் இல்லை
கேட்டதும் இல்லை
அறிவதும் இல்லை
பகவத் அனுபவ அலாப-இருள் அன்ன மேனியைக் கொண்டு பண்ணினான் )

காள வண்ணன் –
இவ்விருள் பாதகமாம்படி பண்ணிற்று ஓர் இருளை இட்டு காணும் –
இருளன்ன மா மேனியைக் காட்டி யாயிற்று
போக யோக்யமான காலத்தில் -அவ்விருளோடு போலியான வடிவைக் கொண்டு –
வந்து அணையாமை ஆயிற்று இது பாதகமாம் ஆகைக்கு  அடி –

வண்டுந்துழாய் –
ஒப்பனையால் வந்த அழகைச் சொல்லுகிறது –

மது சூதனன் –
இவற்றால் வந்த போக்யதையை அனுபவிப்பார்க்கு வரும் விரோதியை
அம்மதுவை போக்கினால் போல் போக்குமவன் –

தாமோதரன் –
உகப்பார்க்கு கட்டி வைக்கலாம்படி பவ்யனாய் இருக்கும் அவன் –

உண்டும் இத்யாதி –
உண்பது
உமிழ்வதாய் கொண்டு நடத்துகிற –
அவனுக்கு ரஷ்யமாம் இடத்து
பூமியோடு நேர் ஒத்த –

இது தலைமகள் வார்த்தை ஆன போது –
பூமி பிரளயத்தில் கரைந்து போகாதே கிடந்தவோபாதி –
இந்த ராத்திரி வியசனத்தை தப்பி என் சத்தை கிடந்தது உன் சந்நிதி ஆகை இறே –

தோழி வார்த்தை யான போது-
தன் உடைமையை அழியக் கொடுப்பான் ஒருவன் அன்று காண்  அவன் –
தான் படாதது பட்டு நோக்கும் அவன் காண்
பிரளயத்தில் பூமியை அழிய விட்டு இராதோபாதி உன்னை ராத்திரி வியசனத்திலே
விட்டு இரான் காண்-

ஒண் நுதலே –
அவன் உடைமை என்கைக்கு ஒரு திருஷ்டாந்தம் சொன்னோம் இத்தனை அன்றோ –
உனக்கு ஒப்போ அம் மண் –
அவனுக்காகர்ஷமான வடிவு அழகு உள்ளது உனக்கு அன்றோ –

தாத்பர்யம்

சர்வேஸ்வரன் தன் இடத்தில் விசேஷ கடாக்ஷம் அருளின வற்றை அனுசந்தித்த பின்பும்
சம்சாரத்தில் இருப்பு அத்யந்த அஸஹ்யமாய்
பிரிய விரஹ சின்னையானவள்
பிராட்டி நிலையை அடைந்து தோழியிடம்
நாயகன் பிரிந்த பின்பு
பாய் இருளாய்
அநேகம் வடிவு கொண்டு அநேக ராத்திரி முன்பு பார்ததது போல் இல்லாமல்
இங்கே இவ்விபூதி அடங்கிலும் பரவி
இது போல் முன்பு பார்த்தும் கேட்டும் அறிந்தும் இல்லையாய்
இப்படி அதி மாத்ர சங்கட சமயத்திலும்
மது பானம் பண்ணித் திரியும் வண்டுகள் மொய்த்த திருத்துழாய் சூடிய பரம போக்யனாய்
விரோதி நிரசன சீலனாய்
ஆஸ்ரித ஸுலப்ய சீலனாய்
அத்யந்த ஸூலபனாய்
சர்வேஸ்வரன் பிரளயம் முதலிய ஆபத்துகளிலும்
அளந்த -மஹாபலி அபிமானத்தில் இருந்து ரக்ஷித்து அருளியும்
உண்டும் உமிழ்ந்தும் அளந்தும் கடாவி ரக்ஷித்து அருளியவன் வாராமல் இருக்க
தோழி உன்னுடைய சந்நிதான பலத்தால் ஜீவித்து இருந்தேன்
அழகிய நுதலை உடைய தோழீ உன்னைக் காணாமல் இருந்தால்
ஜீவித்ததே இருக்க மாட்டேனே -என்கிறாள்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-8–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

June 4, 2012

அவதாரிகை

அவன் தளர் நடை யாகிற பால சேஷடிதத்தின் உடைய ரசத்தை –
பெற்ற தாயான யசோதை பிராட்டி தத் காலத்தில்
அவனைக் குறித்து அபேஷித்து அனுபவித்தால் போலே –
பிற்காலமாய் இருக்கச் செய்தேயும் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
தத் காலத்திலே போலே பிரகாசித்து –
தாமும் அந்த ரசத்தை அனுபவித்தாராய் நின்றார் கீழ் –

இனி மேல் அவனுடைய சைசவ அநு குணமாக –
ஓடி வந்து தன்னை அணைத்து கொள்ளும்படியை –
யசோதை பிராட்டி அனுபவிக்க ஆசைப் பட்டு அது தன்னை அவனைக் குறித்து அபேஷித்து –
அவன் வந்து தன்னை அணைக்கை யாகிற ரசத்தை –
அவள் அனுபவித்த பிரகாரத்தை –
அப்படியே தாமும் அனுபவித்து ஹ்ருஷ்டராகிறார் –

அச்சோ என்று
அவன் வந்து அணைத்து கொள்கையை அபேஷிக்கையும் –
அந்த சேஷ்டித ரசத்தை அனுபவிக்கையுமே
அவளோடு இவருக்கு சாம்யம் –

மயர்வற மதி நலம் பெற்று –
பரத்வாதிகளை எல்லாம் தெளியக் கண்டவர் ஆகையாலே –
அவதாராந்தர சேஷ்டிதங்களையும்-
இவ் அவதாரம் தன்னில் உத்தர காலத்தில் உள்ள சேஷ்டிதங்களையும் –
தர்ம ஐக்யத்தாலே  -வஸ்து விசேஷணம் ஆக்கிக் கொண்டு –
அவனைப் புகழ்ந்து –
அந்த பால சேஷ்டித ரசத்தை அனுபவித்தது இவருக்கு விசேஷம்-

———–

பொன் இயல் கிண் கிணி சுட்டி புறம் கட்டி
தன் இயல் வோசை சலன் சலன் என்று இட
மின் இயல் மேகம் விரைந்து எதிர் வந்தாற் போல்
என் இடைக்கு ஓட்டரா வச்சோ வச்சோ எம்பெருமான் வாரா வச்சோ வச்சோ – 1-8 -1-

பதவுரை

பொன் இயல்–பொன்னாற் செய்த
கிண்கிணி–அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும்
சுட்டி–சுட்டியையும்
புறம்–(அதற்கு உரிய) இடங்களிலே
கட்டி–அணிந்து
தன்–சதங்கைக்கு
இயல்–பொருந்திய
இசை–சப்தமானது-(ஸ்வா பாவிக த்வனி )
சலன் சலன் என்றிட–சலன் சலனென்று ஒலிக்க
மின் இயல்–மின்னலோடு பொருந்திய
மேகம்–மேகமானது
விரைந்து–வேகமாக ஓடி வந்து
எதிர் வந்தால் போல்–எதிரே வந்தாற் போலே
என் இடைக்கு ஒட்டரா–என் இடையிலிருக்க (விரும்பி) ஓடி வந்து
அச்சோ அச்சோ–(என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும்
எம்பெருமான்–எங்களுடைய தலைவனே!
வாரா–வந்து
அச்சோ அச்சோ

அச்சோ அச்சோ என்று
இரட்டித்து சொன்னமையால் அதில் உள்ள ஆதாரத்தின் மிகுதி தோற்றுகிறது

பொன் இயல் கிண் கிணி –
பொன்னால் இயலப்பட்ட கிண் கிணி –
அழகுக்கு உடலாக மேலே பொன் தோய்த்து சமைத்த கிண் கிணி என்றபடி –
பொன்னே உபாதாநமாக சமைத்தது என்னில் -த்வனிக்க கூடாது இறே-
(வெங்கலம் த்வனிக்கும் -மேலே பொன் பூச்சு )

அன்றிக்கே –
பொன் வடத்திலே கோவைப்பட்ட கிண் கிணி என்னுமாம் –

மேலே சலன் சலன் என்றிட -என்கையாலே –
கிண் கிணி என்ற இது 
திரு அரையில் சாத்தும் கிண் கிணியையும் சேவடிக் கிண் கிணியையும் சொல்லுகிறது –

சுட்டி -லலாட பூஷணம் –

இவற்றை புறம் கட்டி என்றது –
புறம் என்று இடமாய்
அவற்றுக்கு அடைத்த ஸ்தலங்களிலே கட்டி என்றபடி –

கண் கால் புறம் அகம் -என்கையாலே –
புறம் என்ற  சப்தம் இடத்துக்கு வாசகம் இறே –

தன் இயல் இத்யாதி –
திரு வரையில் கிண் கிணியுனுடையவும்-திருவடிகளில் சதங்கை களினுடையவும் –
தனக்கு இயல்வான த்வனி சலன் சலன் என்று துவனிக்க –
சலன் சலன் என்கிற இது அநு கார சப்தம்

மின் இயல் இத்யாதி –
மின்னை இயல்வாக உடைத்தான மேகமானது கால் படைத்து
கடு நடை இட்டுக் கொண்டு எதிரே வருமா போலே –

கீழ் கிண் கிணி சுட்டி என்ற இவை –
செம் கமல கழல் -( 1-5-10-)-என்கிற பாட்டில் சொன்ன
சர்வ ஆபரண்ங்களுக்கும் உப லஷணமாய்-
திருமேனிக்கு பரபாகமான அவ் ஆபரண தேஜஸ்சோடே கூடி
நடந்து வர வேணும் என்னும் அபேஷயை பற்ற
இந்த திருஷ்டாந்தம் அருளி செய்தது –

என் இடைக்கு இத்யாதி –
என்னுடைய ஒக்கலையில் இருப்புக்கு ஆசைப்பட்டு ஓடி வந்து –
என்னை அணைத்து கொள்ள வேணும் –

இருகால் சொல்லுகிறது
அதின் ஆதர அதிசயத்தாலே –

எம்பெருமான் இத்யாதி –
முன் சொன்ன இடத்தில்
அல்பம் விளம்பிக்கையாலே –
என்னுடைய நாதனே வாரா அச்சோ அச்சோ என்கிறது –

அச்சோ என்கிறது
அணைத்து கொள் என்றபடி –

——————————————————

செம்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்பச்
சங்கு  வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங் கைகளால் வந்து அச்சோ அச்சோ ஆரத் தழுவு வாய் வந்து அச்சோ அச்சோ -1 8-2 –

பதவுரை

செங்கமலம்–செந்தாமரைப் பூவில்
தேன் உண்ணும்–தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
வண்டே போல்–வண்டுகளைப் போல
பங்கிகள் வந்து–(உனது) கூந்தல் மயிர்கள் வந்து
உன் பவளம் வாய்–பவளம்போற் செந்நிறமான உனது வாயில்
மொய்ப்ப–மொய்த்துக் கொள்ளும்படி
வந்து–ஓடி வந்து
சங்கு–ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்
வில்–ஸ்ரீசார்ங்கத்தையும்
வாள்–ஸ்ரீநந்தகத்தையும்
தண்டு–ஸ்ரீகௌமோதகியையும்
சக்கரம்–ஸ்ரீஸூதர்சநாழ்வானையும்
ஏந்திய–(பூவேந்தினாற்போல) தரித்துக் கொண்டுள்ள
அம் கைகளாலே–அழகிய கைகளாலே
அச்சோ அச்சோ
வந்து–ஓடி வந்து
ஆர தழுவா–திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி
அச்சோ அச்சோ

பங்கிகள் -சுருண்ட கேசங்கள்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் -ஸ்ரீ சாரங்க தனுசையும் –
ஸ்ரீ நந்தகம் என்னும் வாளையும் -ஸ்ரீ காளமோதகீ கதையையும் –
ஸ்ரீ சுதர்சன ஆழ்வாரையும் –

செம்கமல இத்யாதி –
செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –

பங்கிகள் இத்யாதி –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –

சங்கு இத்யாதி –
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கும்
அழகுக்கும் 
உடலாய் –
உனக்கு பரிகையே யாத்ரையாய் இருக்கும் ஸ்ரீ பஞ்சாயுதங்களை
பூ ஏந்தினால் போலே தரித்து கொண்டு இருக்கும் அவையாய் –

அவை தானும் மிகையாம் படி
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகை உடைய
திருக் கைகளால் வந்து அணைத்துக் கொள்ள வேணும் –

ஆர இத்யாதி –
அபர்யாப்தமாக-பர்யாபதமாக அன்றிக்கே பரி பூர்ணமாக அணைத்துக் கொள்ள வேணும் –
இவருக்கும் இவனோட்டை ஸ்பர்சம்  தான்
யுவதிகளை அபிமத புருஷர்கள் ஸ்தன பரி ரம்பணம் செய்தால்
அவர்கள் அந்த போக அதிசயத்தாலே சொல்லும் பாசுரம் போலே இருக்கிறது காணும் –

—————————————-

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ – 1-8 3- –

பதவுரை

பஞ்சவர்–பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்–(துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
(அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்)
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்து–அணி வகுத்துச் செய்து
நஞ்சு–விஷத்தை
உமிழ்–கக்குகின்ற
நாகம்–(கானிய) ஸர்ப்பம்
கிடந்த–இருந்த
நல் பொய்கை–கொடிய மடுவிலே
புக்கு–புகுந்து
அஞ்சு–(ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி
பணத்தின் மேல்–(அப் பாம்பின்) படத்திலே
பாய்ந்திட்டு–குதித்து
(நட மாடி அக் காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க)
அருள் செய்த–(அப் பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட
அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;
ஆயர்–இடையர்களுக்கு
பெருமானே–தலைவனானவனே!
அச்சோ அச்சோ-.

கை செய்து -உதவி செய்து

பஞ்சவர் இத்யாதி –
துர்யோநாதிகளாலே நெருக்குண்டு –
ராஜ்யாதிகளை இழந்து –
உன்னை ஒழிய வேறு துணை இன்றிக்கே -நின்ற பாண்டவர்கள் ஐவர்க்கும் –
பரதந்த்ரனாய் கொண்டு தூத க்ர்த்யத்திலே அதிகரித்து –
துர்யோநாதிகள் பக்கலிலே சென்று –
அவர்களையும் இவர்களையும் சேர்க்க பார்த்த இடத்தில் -அவர்கள் இசையாமையாலே –
ஆனால் யுத்தத்தை பண்ணி ஜெயித்தவர்கள்  ஒருவர் ராஜ்யத்தை ஆளும் கோள்-என்று சொல்லிப் போந்து –
பின்பு பாண்டவர்களுக்காய் நின்று -பாரத யுத்தத்தில் கையும் அணியும் வகுத்து –
யுத்தத்தை நடத்தி –

நஞ்சு இத்யாதி –
விஷத்தை உமிழா நின்ற காளியனாகிற சர்ப்பம் கிடந்த கொடிய பொய்கையிலே –
அத்தை மதியாமல் சென்று புக்கு –

நல் பொய்கை என்றது –
விபரீத லஷணையாய்-காளிய விஷ தூஷிதம் ஆகையாலே க்ரூரமான பொய்கை என்றபடி –

அஞ்ச இத்யாதி –
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட -என்கிறபடியே இந்த வ்ருத்தாந்தத்தை கேட்ட
அனுகூல ஜனங்கள் எல்லாரும் -என்னாகப் புகுகிறதோ -என்று பயப்படும்படியாக –

ஐந்தலைய பைந் நாகத் தலைப் பாய்ந்தவனே -என்கிறபடியே –
அந்த காளியனுடைய பணங்களின் மேலே சென்று குதித்து
நர்த்தம்  செய்து
அவனை இளைப்பித்து –
க்ருபா மாத்ரா மனோ வர்த்தி ப்ரசீதமே -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-_-என்று
தன்னுடைய பிராண ரஷனத்துக்காக
அவன் சரணம் புகுந்த பின்பு –
அவன் பக்கலிலே அருளைப் பண்ணின –

அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு என்றது –
காளியன் தான் அஞ்சும்படியாக
அவன் பணத்தின் மேல் பாய்ந்து என்னவுமாம் –

அஞ்சன வண்ணனே –
சரணாகத ரஷணம் பண்ணுகையாலே –
அஞ்சனம் போலே குளிர்ந்து –
புகர் பெற்ற திரு மேனியை உடையவனே
அச்சோ அச்சோ

ஆயர் பெருமானே –
அமரர் பெருமானான மேன்மைக்கு எதிர் தட்டாக
ஆயர் பெருமானான நீர்மையை உடையவனே
அச்சோ அச்சோ –

———————————————

நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறிய அவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனினை  உள்ளே ஒடுங்க அன்று
ஏற உருவினாய் அச்சோ அச்சோ எம்பெருமான் வாரா அச்சோ அச்சோ -1 8-4 – –

பதவுரை

நாறிய–‘நல்ல வாசனை வீசுகின்ற
சாந்தம்–சந்தனத்தை
நமக்கு–எங்களுக்கு
இறை–கொஞ்சம்
நல்கு என்ன–கொடு என்று (நீ) கூனியைக் கேட்க
அவளும்–அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்)
தேறி–மனம் தெளிந்து
திரு உடம்பில்–(உனது) திரு மேனியிலே
பூச–சாத்த
ஊறிய–வெகு நாளா யிருக்கிற
கூனினை–(அவளுடைய) கூனை
உள்ளே–(அவள்) சரீரத்திற்குள்ளே
ஒடுங்க–அடங்கும்படி
அன்று–அக் காலத்திலே
ஏற–நிமிர்த்து
உருவினாய்–உருவினவனே!
அச்சோ அச்சோ-;
எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.

நாறிய இத்யாதி –
கம்சனுடைய வண்ணான்-ஈரம் கொல்லியை கொன்று –
பரிவட்டங்கள் சாத்தி –
ஸ்ரீ மதுரையில் போய் புகுந்த அளவில் –
கம்சனுக்கு சாந்திட்டு போரும் கூனி சாந்து கொண்டு போகா நிற்க செய்தே வழியிலே கண்டு –
அண்ணர்க்கும்  நமக்கும் பூசலாம்படி சாந்திட வல்லையோ-என்ன –
(ஸ்ரீ பாகவத ஸ்லோகங்கள் பிரமாணங்கள் அரும்பதத்தில் காட்டி அருளுகிறார் )

அபேஷித்தது மறுக்க மாட்டாமையாலும் –
வெண்ணெய் நாற்றத்திலே பழகின இவர்கள் சாந்தின் வாசி அறிவார்களோ -என்னும் அத்தாலும் –
மட்டமான சாந்துக்களைக் காட்ட –

ஸூகந்தமேதத் -இத்யாதி படியே
அவற்றுக்கு எல்லாம் ஒரு குறை சொல்லிக் கழித்து –
(ஸூ கந்தி -இயற்கை கந்தம் -ஸூ கந்தம்-கந்தமூட்டி )
ஆவயோர்க தாத்ர சத்ர்சம் தீயதா மதுலேபனம் -என்று
அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் அனுரூபமான பரிமளத்தை உடைய சாந்திலே
அல்பம் தர – என்று அபேஷிக்க-

சாந்தை -தரம் இட்டு கழித்த படியையும் –
அபேஷித்த சீர்மையையும் –
வடிவு அழகையும் கண்டு –
ஹ்ருஷ்டையாய்-கம்சனுக்கு கொடு போகிற இத்தை இவர்களுக்கு கொடுத்தால் அவன்
தண்டிக்கில் செய்வது என் -என்று அஞ்சாதே நெஞ்சம் தேறி –

அவளும் உத்தமமான சாந்தை எடுத்து
திரு மேனியிலே சாத்த –

ஊறிய  இத்யாதி –
அநந்ய பிரயோஜனமாக அவள் கிஞ்சித் கரிக்கையால் உண்டான ப்ரீதியாலே –
(மடி தடவாத சோறு -விதுரன் -சுண்ணாம்பு கலவாத சந்தனம் கூனி குப்ஜா – சுருள் நாறாத பூ மாலாகாரர் )
இவள் முதுகில் கூனை நிமிர்த்து விடக் கடவோம் -என்று திரு உள்ளம் பற்றி
அவள் முதுகில் – வேர் விழுந்ததோ என்னும்படி உறைத்து புறப்பட்டு நிற்கிற கூனை
அவள் சரீரத்தின் உள்ளே அடங்கும்படியாக
அக்காலத்திலே நிமிர்த்து திருக் கைகளாலே உருவினவனே –
அச்சோ அச்சோ

எங்கள் குலத்துக்கு ஸ்வாமி யானவனே வாரா அச்சோ அச்சோ-
வாரா -வந்து-

—————————————-

கழல் மன்னர் சூழ கதிர் போல் விளங்கி
எழல உற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலை பெரிதுடை துச்சோதனனை
அழல விழித்தானே  அச்சோ அச்சோ ஆழி அம் கையனே அச்சோ அச்சோ -1-8-5-

பதவுரை

கழல்–வீரக் கழலை யணிந்த
மன்னர்–ராஜாக்கள்
சூழ–தன்னைச் சுற்றி யிருக்க (அவர்கள் நடுவில்)
கதிர் போல்–ஸூரியன் போல
விளங்கி–ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை
ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளை யிட்டிருந்த தானே தனக்கும் தெரியாமல்)
எழல் உற்று–(முதலில்) எழுந்திருந்து
மீண்டு–மறுபடியும்
இருந்து–(தானெழுந்தது தெரியாதபடி) உட்கார்ந்து கொண்டு
உன்னை–உன்னை
நோக்கும்–(பொய்யாஸநமிடுதல் முதலியவற்றால் கொல்வதாகப்) பார்த்த
பெரிது சுழலை உடை–மிகவும் (வஞ்சனையான) ஆலோசனையை யுடைய
துச்சோதனனை–துர்யோதநினை (திருவுள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி)
(துஸ் ஸாஸ தனன் -நல்லது சொல்ல முடியாதவன் -யவ்வ்கிகம் ரூடி பொருள் இரண்டும் உண்டே )
அழல விழித்தானே–உஷ்ணமாகப் பார்த்தவனே!
அச்சோ அச்சோ-;
ஆழி–திருவாழி யாழ்வானை
அம் கையனே–அழகிய கையிலேந்தியவனே!
அச்சோ அச்சோ-.

பாண்டவர்களுக்காக  ஸ்ரீ தூது எழுந்து அருளி இருக்கிற விசேஷத்தை கேட்டு –
வீரக் கழல் இட்டு சமர்த்தராய் இருக்கும் ராஜாக்கள் பலரும் -சூழ சேவித்து இருக்க –
தான் சிஹ்மாசனஸ்த்தனாய் கொண்டு –
அபிஷேகாத் யாபரண தேஜஸ்சாலும் பிரதாபத்தாலும் ஆதித்யனைப் போலே விளங்கி –
கிருஷ்ணன் வந்தால் ஒருவரும் எழுந்து இருத்தல் -குசல பிரஸ்னம் பண்ணுதல் -செய்யாதே
கொள்ளுங்கோள் -என்று நியமித்து –
பொய்யாசனம் இட்டு வைத்து இருக்கும் அளவில் –

எழுந்து அருளிச் சென்று புகுந்த போது –
இருந்த ராஜாக்கள் எல்லாரும் -அவசா பிரதிபேதிரே- (தங்கள் வசத்தில் இல்லாமல் )என்கிறபடியே –
எழுந்து இருப்பார் -அநு வர்த்திப்பாராக –
தானும் துடை நடுங்கி எழுந்து இருக்க உத்யோகித்து –
மீண்டும் –
கறுவுதலாலே தெரியாத படி இருந்து –

உன்னை இத்யாதி –
பொய்யாசனம் முதலாக முன்பு பண்ணி வைத்த சூழ்ச்சிகளாலே நலிவதாக கோலி-
உன்னைப் பார்த்த துரியோதனனை –
உன் அக வாயில் சீற்றம் எல்லாம் பார்க்கிற பார்வையிலே தோற்றும்படி
அத் உஷ்ணமாக பார்த்தவனே
அச்சோ அச்சோ

திரு ஆழியை திருக் கையில் உடையவனே
அச்சோ அச்சோ –

————————————————

(அந்தத்தில் முடியும் வகை அடியேற்குத் தெரியுமோ ஆதி மூர்த்தி –
தெரியும் ஓ ஆதி மூர்த்தி –
நீயே திரு உள்ளம் கொண்டு யுத்தத்துக்கு பாரிக்கிறாய் -சாகா தேவன் –
பூமா தேவி பொறை தீர்க்கவே )

போர் ஒக்கப்  பண்ணி இப் பூமி பொறை தீர்ப்பான்
தேர் ஒக்க ஊர்ந்தாய் செழும் தார் விசயற்க்காய்
கார் ஒக்கும் மேனி கரும் பெரும் கண்ணனே
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ ஆயர்கள் போர் ஏறே அச்சோ அச்சோ – 1-8-6-

பதவுரை

இ பூமி–இந்தப் பூமியினுடைய
பொறை–பாரத்தை
தீர்ப்பான்–தீர்ப்பதற்காக
போர்–யுத்தத்தை
ஒக்க–(துர்யோதநாதிகளோடு) ஸமமாக
பண்ணி–செய்து
செழு–செழுமை தாங்கிய
தார்–மாலையை யுடைய
விசயற்கு ஆய்–அர்ஜுநனுக்காக
தேர்–(அவனுடைய) தேரை
ஒக்க–(எதிரிகள் தேர் பல வற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி
ஊர்ந்தாய்–பாகனாய்ச் செலுத்தினவனே!
கார் ஒக்கும்–மேகத்தோடு ஒத்த
மேனி–திருமேனியில்
கரும் பெருங் கண்ணனே–கரிய வாகிப் புடை பரந்து கண்களை யுடையவனே!-(காரணாந்தரங்தா விஸ்தாரம் )
வந்து–ஓடி வந்து
ஆர–நின்றாக
தழுவா–தழுவிக் கொண்டு
அச்சோ அச்சோ-;
ஆயர்கள்–இடையர்களுக்கு (அடங்கி நிற்கின்ற)
போர் ஏறே–போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே!
அச்சோ அச்சோ-.

போர் இத்யாதி –
பதினொரு அஷோகினி பரிக்ரமும் –
நூறு ராஜாக்களும் –
பீஷ்மத் துரோணாதிகளுமான அத் திரளோடு -சமமாக –
ஏழு அஷோகினி பரிகரத்தையும்
பாண்டவர்கள் ஐவரையும் கொண்டு யுத்தம் பண்ணி -என்னுதல் –

பாண்டவர்களுக்கு ஒரு கோல் குத்து நிலமும் கொடோம் -என்று
வெட்டிதாக வார்த்தை சொன்ன பின்பு –
துர்யோநாதிகளை யுத்தத்திலே பொருந்தும்படி யாகப் பண்ணி என்னுதல் –

இப் பூமி பொறை தீர்ப்பான் –
இது தான் செய்தது –
அதார்மிகராய் -ஆசூர ப்ரகர்திகளாய் இருப்பார் எல்லாரையும் யுத்த பூமியிலே கொன்று –
இந்த பூமியினுடைய பாரத்தை போக்குகைக்காக ஆய்த்து-

மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரை பிறந்தான் -என்கையாலே –
அவதார பிரயோஜனமும் இறே

தேர் இத்யாதி –
யுத்தத்துக்கும் விஜயத்துக்கும் தகுதியாக சூடும் தும்பை -வாகை -முதலான
அழகிய மாலையை உடைய அர்ஜுனனுக்கு –

யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச-இத்யாதிப் படியே –
சர்வமுமாய் நின்று –
பிரதி பஷ பூதர் ஆனவர்கள் உடைய அநேகம் தேருக்கு
சமமாக அவனுடைய தேரை நடத்தினவனே-

ஆயுதம் எடுக்க ஒண்ணாது -என்கையாலே
சாரத்யத்திலே அதிகரித்து –
தேர் காலாலே
பிரதிபஷ சேனையை துகளாக்கினான்  ஆய்த்து –

கொல்லா மாக்கோல்–(திருவாய் -3-2-)இத்யாதிபடியே
சாரத்தியம் பண்ணின சாமர்த்த்யத்தால் இறே
பூ பார நிரசனம் பண்ணிற்று –

கார் ஒக்கும் இத்யாதி –
வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற திருமேனியை உடையவனாய் –
கரிய வாகிப்  புடை  பரந்து இருக்கிற திருக் கண்களை உடையவனாய் இருக்கிறவனே –

இத்தால் –
பூ பாரத்தை போக்குகையாலும் –
ஆஸ்ரிதனான அர்ஜுனனை விஜயீ ஆக்குகையாலும் உண்டான ஹர்ஷம்
வடிவிலும் கண்ணிலும் தோற்றும்படி நின்ற நிலையை சொல்லுகிறது –

ஆர இத்யாதி –
என்னுடைய அபி நிவேசம் தீரும்படி வந்து –
பூரணமாக அணைத்து அருள வேணும் –

ஆயர்கள் இத்யாதி –
கோபர்க்கு பவ்யனாய் –
அத்தாலே –
யுத்தோன்முகமான ரிஷபம் போலே
செருக்கி இருக்கிறவனே அச்சோ அச்சோ

———————————————–

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது அன்று என்று தானம் விளக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ -1-8-7-

பதவுரை

மிக்க பெரும் புகழ்–(ஔதார்யத்தால்) மிகுந்த கீர்த்தியை யுடைய
மா வலி–மஹா பலி (செய்த)
வேள்வியில்–யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொடுக்க முயன்ற வளவிலே)
இது-‘நீ கொடுக்கிற விது
தக்கது அன்று–தகுதியானதன்று’
என்று–என்று முறையிட்டு
தானம்–பூமி தானத்தை (அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்)
விலக்கிய–தடுத்த
சுக்கிரன்–( பூச்சி வடிவு கொண்ட )சுக்கிராச்சாரியனுடைய
கண்ணை–ஒரு கண்ணை
துரும்பால்–(உன் கையிலணிந்திருந்த) தர்ப்ப பவித்ரத்தின் நுனியால்
கிளறிய–கலக்கின
சக்கரம் கையனே–சக்ராயுதமேந்திய கையை யுடையவனே!
அச்சோ அச்சோ-;
சங்கம்-பாஞ்ச ஜன்யத்தை
இடத்தானே–இடக்கையிலேந்தினவனே!
அச்சோ அச்சோ-.

மிக்க புகழ் இத்யாதி –
ஒவ்தார்யத்தாலே மிகவும் பெரிய புகழை உடையனான மகாபலி
யக்ஜவாடத்திலே இந்திரனுக்காக வாமன வேஷத்தைக் கொண்டு –
சென்று –

கொள்வன் நான்  மாவலி மூவடி -தா -(திருவாய் -3-8-)-என்ன –
புலன் கொள் மாணாய்-என்கிறபடியே
சர்வேந்த்ரிய அபஹார ஷமமான இவனுடைய வடிவு அழகாலும்
அனந்விதமாக சொன்ன -முக்தோக்தியாலும்
மகாபலி அபஹ்ருத சித்தனாய்
இவன் அபேஷித்து கொடுப்பதாக  உத்யோக்கிற அளவில் –

குருவான சுக்ரன் –
இவன் வடிவும் வரத்தும் -சொன்ன வார்த்தையும் -அதி மானுஷமாய் இருக்கையாலே நிரூபித்து –
இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் –
உன் சர்வ ஸ்வத்தையும் அபஹரிக்க வந்தான் –
ஆன பின்பு நீ தானம் பண்ணுகிற இது  தகுதி அன்று -என்று
தானத்தை நிரோதிக்க-

அவன் அது கேளாதே
உதகம் பண்ணப் புகுந்த அளவில் –
உதக பாத்திர த்வாரத்திலே சுக்ரன் ப்ரேவேசித்து உதகம் விழாதபடி தகைய –
அந்த த்வார சோதனம் பண்ணுவாரைப் போலே –
திருக் கையில் திருப் பவித்ரத்தின் உடைய அக்ரத்தாலே
அவன் கண்ணைக் கலக்கின திரு ஆழியைக் கையில் உடையவனே –

துரும்பால் கிளறிய சக்கரக் கையன் -என்கையாலே
அந்த பவித்ராக்ரமாய் புகுந்து அவன் கண்ணை கலக்கிற்று –
கருதும் இடம் பொரும் திரு ஆழி -என்று தோற்றுகிறது-

சங்கம் இடத்தானே –
ஒரு காலும் திரு ஆழிக்கும் ஸ்ரீ பாஞ்ச சந்யத்துக்கும் பிரிவு இல்லை இறே –
ஆகையால் அவன் வலம் கையிலே தோன்றும் போது-
இவன் இடம் கையிலே தோன்றும் படியாய் இறே இருப்பது –

அச்சோ அச்சோ –
இப்படி இருந்துள்ள கையும் ஆழ்வார்களுமான சேர்த்தி யோடு வந்து
அணைத்து கொள்ள வேணும் என்கை –

———————————————

(மஹா பலி நமுசி -இன்றும் திருக்கோவிலூரில் சேவிக்கலாம் )

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே அச்சோ அச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8- –

பதவுரை

(வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரி விக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது
அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடிவந்து)
இது–(யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி யளக்கிற) இது
என் மாயம்–என்ன மாயச் செய்கை!;
என் அப்பன்–என் தகப்பன்
அறிந்திலன்–(நீ செய்யும் இந்த மாயத்தை) அறிய வில்லை
முன்னைய வண்ணமே கொண்டு–நீ யாசிக்க வந்த போதிருந்த வடிவத்தையே கொண்டு
அளவாய்–அளப்பாயாக
என்ன–என்று சொல்ல
மன்னு–(இப்படி) பிடிவாதமாய் நின்ற
நமுசியை–(அந்த) நமுசி யென்பவனை
வானில்–ஆகாசத்திலே
சுழற்றிய–சுழலச் செய்த
மின்னு முடியனே–விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ-;
வேங்கடம்–திருமலையிலே
வாணனே–வாழுமவனே!
அச்சோ அச்சோ-.

என் இத்யாதி –
திருக் கையில் உதகம் விழுந்த அநந்தரம்-திருவடிகளை வளர்த்து அளக்கப் புக்கவாறே –
இத்தைக் கண்ட மகாபலி புத்ரனான -நமுசி ஓடி வந்து –
இது என் -என்று வளருகிற திருவடிகளை தகைய –

நீ தகைகிறது என் -நான் உதகம் ஏற்றது அளந்து கொள்ள வேண்டாவோ -என்ன –
நீ க்ரித்ரிமம் என்பான் என் -என்னுடைய பிரமச்சரிய வேஷத்தையும் -அர்த்திவத்தையும் -கண்டு
உன்னுடைய பிதா -உதக தானம் பண்ணிப் போந்தது பொய்யோ -என்ன –

என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன் -என்ன –
நான் செய்தது வஞ்சனம் என்று நீ சொல்கிறது என் கொண்டு -என்ன –

வஞ்சனம் அன்றாகில் நீ முற்பட்ட வடிவை கொண்டு அளவாய் -என்ன –
முன்னைய வண்ணம் கூடுமோ -விகாரியான சரீரம் அன்றோ -என்ற அளவிலும் –
தான் பிடித்த நிலை விடாதே நின்ற நமுசியை ஆகாயத்திலே சுழற்றி எறிந்து விட்ட
உஜ்ஜ்வலமான திரு அபிஷேகத்தை உடையவனே –

திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய
அந்ய சேஷத்வ
ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து
சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –

வேம்கடம் இத்யாதி –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திரு வேம்கட மா மலை -(திருவாய் -3-3-)-என்னும்படி –
அந்த வாமன அவதார சேஷ்டிதம் அடைய தோன்ற
திருமலைக்கு நிர்வாகனாய் நிற்கிறவனே-அச்சோ அச்சோ –

—————————————————

கண்ட கடலும் மழையும் உலகு ஏழும்
முண்டத்துக்கு ஆற்றா முகில் வண்ணாவோ என்று
இண்டைச் சடை முடி ஈசன் இரக் கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ மார்வின் மறுவனே அச்சோ அச்சோ – 1-8-9-

(முண்டத்துக்கு ஆற்றா-உண்டத்துக்கு ஆற்றா-பாட பேதம்
இவற்றை உண்டாலும் -இங்கு திரிந்தாலும் போதாமல் )

பதவுரை

கண்ட–கண்ணாற்கண்ட
கடலும்–ஸமுத்ரங்களும்
மலையும்–மலைகளும்
உலகு ஏழும்–கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்)
முண்டத்துக்கு–(என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு
ஆற்றா–போதாவாம்;
முகில் வண்ணா–மேக வண்ணனே!
ஓஒ!–ஓஒ! (ஹாஹா!)
என்று–என்று கூப்பிட்டு
இண்டை-நெருங்கின
சடை முடி–ஜடா பந்தத்தை யுடைய
ஈசன்–சிவன்
இரக்கொள்ள–பிச்சை யெடுக்க
மண்டை–(அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை
நிறைத்தானே–(மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே!
அச்சோ அச்சோ-;
மார்வில்–திரு மார்பிலே
மறுவனே–ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ-.

கண்ட இத்யாதி –
கண்ணால் கண்ட மலைகளும் கடல்களும் சப்த லோகங்களும் –
எல்லாவற்றையும் இட்டு நிறைக்கப் பார்க்கிலும் -என் கையில் கபாலத்துக்கு போராதாய் இரா நின்றன –
முண்டம் -கபாலம்
இத்தால் கண்ட இடம் எங்கும் பிஷை புகுந்து திரிந்தும் நிறைய காணாமையாலே
இதனுடைய துஷ் பூரதையை  சொன்னபடி

அன்றிக்கே –
கண்ட கடலும் மலையும் உலகு ஏழும் தட்டித் திரிந்து பிஷை புகுந்த இடத்திலும்
என் கையில் கபாலத்துக்கு போருகிறது இல்லை என்னவுமாம்-

முகில் வண்ணா –
ஜல ஸ்தல விபாகம் பாராமல் உபகரிக்கும் -மேகம் போன்ற ஒவ்தார்ய ஸ்வாபம் உடையவனே –
இத்தால் நீ நிறைக்கில் ஒழிய நிறைக்க வல்லார் இல்லை என்கை-
ஒ என்று தன் ஆர்த்தி தோன்ற கூப்பிட்டு

இண்டை இத்யாதி –
நெருங்க பின்னின ஜடா பந்தத்தை உடையவனாய் –
ஈஸ்வர அபிமானியான ருத்ரன் -இத்தால்
இவனுடைய ஈஸ்வரத்வம் -தப பலமாய் வந்தது என்னும் இடமும் –
இவனுடைய துர்மானமும் சொல்லுகிறது –
இரக்கொள்ள-தத்ர நாராயண ஸ்ரீமான் மயா பிஷாம் பிரயாசித-என்கிறபடியே
வந்து பிஷை இரக்க-இரக்கொள்ள என்று -ஒரு முழு சொல்லாய் -இரக்க -என்றபடி –

மண்டை நிறைத்தானே –
விஷ்ணு பிரசாதாத் ஸூஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா-
ஸ்புடிதம் பஹு தாயாதம் ஸ்வப்ன லப்தம் தனம் யதா -என்கிறபடியே
பஹுதாவாக ஸ்புடிதமாய்-போன வழி தெரியாதே போம்படி –
ஊறு செங்குருதியால் நிறைத்த (திருச்சந்த விருத்தம்) -என்கிறபடி
திரு மார்வில் செங்குருதியாலே அந்த கபாலத்தை நிறைத்தவனே –
மார்வில் மறுவனே-சர்வேஸ்வர சிஹ்னமான ஸ்ரீ வஸ்தத்தை திருமார்பில் உடையவனே -அச்சோ அச்சோ –

அதவா –
உண்டத்துக்கு -என்று பாடமான போது-
கண்ட -இத்யாதிக்கு –
கண்ட கடலிலும் மலையிலும்
உலகு ஏழிலும் சாபோபஹதனாய் திரிந்து பிஷை புகுந்து –
முடைத் தலை யூன்-(ராமானுஜ நூற்று)-என்கிறபடியே
துர்கந்தியான கபாலத்தில் -அத்தை உளைந்து உளைந்து ஜீவித்து திரிந்து -அதுக்கு ஆற்றாதே –
நெருங்கி பின்னின ஜடையை உடைய -ஈஸ்வர அபிமானியான ருத்ரன் –

அந்த ஆற்றாமையை பரிகரிக்கைக்காக –
முகில் வண்ணாவோ -என்று
உன்னுடைய ஒவ்தார்ய குணத்தைச் சொல்லி –
ஆர்த்தியோடே கூப்பிட்டு -இத்தை போக்க வேணும் -என்று அர்த்தித அளவில் –
நம்மை ஒழிய இவனுக்கு கதி இல்லை -என்று –
அரக்கு பிச்சை பெய் கோபால கோளரி -(திருவாய்-2-2-2-)- என்கிறபடியே
அவன் கையில் கபாலத்தை நிறைத்தவனே என்னுமாம்-

————————————-

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திடப்
பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே அச்சோ அச்சோ அருமறை தந்தானே அச்சோ அச்சோ -1 8-10 – –

பதவுரை

மன்னிய–நித்ய ஸித்தமான
நால் மறை–சதுர் வேதங்களும்
முற்றும்–முழுவதும்
மறைந்திட–மறைந்து விட (அதனால்)
துன்னிய–நெருங்கிய
பேர் இருள்–பெரிய அஜ்ஞாநாந்தகாரம்
சூழ்ந்து–பரவி
உலகை–லோகங்களை
மூட–மறைத்துக் கொள்ள
பின்–பின்பு
உலகினில்–இந்த லோகங்களில்
பேர் இருள்–(அந்த) மிகுந்த அஜ்ஞாகாந்தகாரமானது
நீங்க–நீங்கும்படி
என்று–அக் காலத்தில்
அன்னம் அது ஆனானே–ஹம்ஸமாய் அவதரித்தவனே!
அரு மறை தந்தானே–(அந்த ரூபத்தோடு) அருமையான வேதங்களை உபகரித்தவனே!
அச்சோ அச்சோ-.

துன்னிய இத்யாதி –
தேஜஸ்சினுடைய அசந்நிதானத்தில் திமிரம் வியாப்தம் ஆம் போலே –
கர்ம ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளுக்கும் கண் காட்டியான வேதம் போகையாலே நெருங்கின
(கர்ம ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளுக்கும்-இவை இரண்டும் அதிருஷ்டம் –
ப்ரத்யக்ஷத்தாலோ அனுமானத்தாலோ காண முடியாதே )
அஞ்ஞான ரூப மகாந்தகாரமானது வ்யாப்தமாய் கொண்டு லோகத்தை எங்கும் மறைக்கும்படியாக –

மன்னிய இத்யாதி –
நித்தியமாய் ரிக்யாதி பேதத்தாலே நாலு வகைப்பட்ட வேதம் எல்லாம் -திரோஹிதமாய் விட

பின் இத்யாதி –
பின்பு இந்த லோகத்தில் உண்டான மகாந்தகாரமானது நீங்கும்படியாக –

அன்று இத்யாதி –
அக் காலத்தில் வேதத்தை வெளிப்படுதுக்கைகாக
சார அசார விவேக சக்திகமான ஹம்சமாய் வந்து தோன்றினவனே

அரு மறை இத்யாதி –
உன்னைப் பெறிலும் பெறுதற்கு  அரிதான வேதத்தை உபகரித்தவனே
அச்சோ அச்சோ –

——————————————————-

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாட புதுவை  கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வாரே -1-8-11 – –

பதவுரை

நச்சுவார் முன்–(தன்னை) விரும்பிப் பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே
நிற்கும்–வந்து நிற்குந் தன்மையுள்ள
நாராயணன் தன்னை–நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
ஆய்ச்சி–இடைக் குலத்தவளான யசோதை
(அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி)
அச்சோ வருக என்று உரைத்தன–‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை
மச்சு அணி–பல நிலைகளால் அழகிய
மாடம்–மாளிகைகளை யுடைய
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வார்
சொல்–சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும்
பாடுவார்–பாடுபவர்கள்
நிச்சலும்–எப்போதும்
நீள் விசும்பு–பரமாகாசமாகிற பரம பதத்திற்கு
ஆள்வர்–நிர்வாஹகராவர்.

நச்சுவார் இத்யாதி –
ஜன்ம விருத்தாதிகளால் உண்டான தர தம விபாகம் பாராதே –
தன்னை ஆசைப்பட்டவர்கள் எல்லார்க்கும் -அவர்கள் ஆசைப் பட்ட வடிவை கொண்டு –
முன்னே வந்து நிற்கும் நாராயணன் தன்னை –

அச்சோ இத்யாதி –
அவதாரத்தின் மெய்ப் பாட்டால் வந்த சைசவ அனுகுணமாக
அவள் தன்னை அணைத்து கொள்ளுகையில்  அபேஷை தோற்ற –
அச்சோ அச்சோ என்றும் –
வருக என்றும் –
தாயான யசோதை பிராட்டி சொன்ன பாசுரங்களை

மச்சணி இத்யாதி –
மச்சு ஒரு வித கட்டடம் –
பல நிலமான மாடங்களை உடைய
ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாகராய் –
ப்ராமண உத்தமரான ஸ்ரீ பெரிய ஆழ்வார் அருளி செய்த இத்தை –

நிச்சலும் பாடுவார் –
ப்ரீதி உக்தராய் கொண்டு -போக ரூபமாக சொல்லும் அவர்கள் –
கால தத்வம் உள்ளது அனையும் பரம ஆகாச சப்த வாச்யமான பரமபதத்தை ஸ்வாதீனமாக
நடத்தப் பெறுவார் –
அதாவது –
அங்குள்ள சகல போகத்துக்கும் தாங்களே நிர்வாகராவர் என்ற படி –

பொன்னுலகு ஆளீரோ -இத்யாதி
விண்ணவர் நாடு தானே
ஆகையால் அன்றோ மதுரகவி சொல் நம்புவார் பதி வைகுந்தம் ஆகுமே என்றார்
சகல சாம்ராஜ்ய கைங்கர்ய பட்டாபிஷேகம் பெறுவார் என்றபடி

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-7– வியாக்யானம் -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

June 1, 2012

அவதாரிகை-
கீழில் திருமொழி யிலே
சப்பாணி கொட்டுகை யாகிற அவனுடைய பால சேஷ்டிதத்தை –
தத் காலத்திலேயே யசோதை பிராட்டி அனுபவித்தாப்  போலே –
பிற் பாடராய் இருக்கிற தாமும் –
அதிலே ஆதார அதிசயத்தாலே –
அவளுடைய பாவ யுக்தராய் கொண்டு -பேசி அனுபவித்தாராய் நின்றார் –

அவன் தளர் நடை  நடக்கை ஆகிற சேஷ்டிதத்தை
தத் காலம் போலே -அனுபவித்து இனியர் ஆகிறார் இதில் –

—————-

துடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப
படு மும் மதப் புனல் சோர வாரணம் பைய நின்ற்றூர்வது போலே
உடன் கூடி கிண் கிணி ஆரவாரிப்ப வுடை  மணி பறை கறங்க
தடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ -1 7-1 –

பதவுரை

சங்கிலி கை தொடர்–இரும்புச் சங்கிலியின் தொடர்பு
சலார் பிலார் என்ன–’சலார் பிலார்’ என்று சப்திக்கவும்
தூங்கு–தொங்குகின்றனவும்
பொன்–பொன் கயிற்றிற் கட்டி யிருப்பனவுமான-
மணி–மணிகள்
ஒலிப்ப–ஒலிக்கவும்
படு–உண்டான
மும்மதம் புனல்–மூன்று வகையான மத நீர்
சோர–பெருகவும்
நின்று–இருந்து கொண்டு
வாரணம்–யானை
பைய–மெல்ல
ஊர்வது போல்–நடந்து போவது போல
கிண் கிணி–காற் சதங்கைகள்
உடன் கூடி–தம்மிலே தாம் கூட்டி
ஆரவாரிப்ப–சப்திக்கவும்
உடை–திரு வரையில் கட்டிய
மணி–சிறு மணிகள்
பறை கறங்க–பறை போல் சப்திக்கவும்
சார்ங்கம்–சார்ங்கமென்னும் வில்லை
பாணி–கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
தட தாள் இணை கொண்டு–(தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால்
தளர் நடை–இள நடையை
நடவானோ–நடக்க மாட்டானோ?
[நடக்க வேணும். ]

தளர் நடை ஆவது –
திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவம் அன்றிக்கே –
நடை கற்கும் பருவம் ஆகையாலே
தவறி தவறி நடக்கும் நடை–மதாதி அதிசயத்தாலே –

கம்பத்தை முறித்து -காலில் துடரை இழுத்து கொண்டு -நடக்கையாலே –
காலில் கிடந்த சங்கிலித் துடரானது -சலார் பிலார் என்று சப்திக்க –
துடர் என்று விலங்கு-
ஆனை விலங்கு சங்கிலியாய் இறே இருப்பது -சலார் பிலார் என்கிறது சப்த அநு காரம் –

தூங்கு இத்யாதி –
முதுகில் கட்டின பொன் கயிற்றால் தூங்குகிற மணியானது த்வநிக்க-

பொன் மணி -என்கிற இடத்தில் –
பொன் என்கிற இத்தால் -பொற் கயிற்றை சொல்லுகிறது –

படு இத்யாதி –
உண்டாக்கப் பட்ட மூன்று வகையான மத ஜலம் அருவி குதித்தால் போலே வடிய –

மும் மதப் புனலாவது –
மதத்தாலே கபால த்வ்யமும் மேட்ர ஸ்தானமுமாகிற த்ரயத்தில் நின்று வடிகிற ஜலம்-

வாரணம் இத்யாதி –
ஆனையானது அந்த மத பாரவச்யத்தாலே -அ வசமாய் கொண்டு –
மெள்ள நடக்குமா போலே –

உடன் இத்யாதி –
சேவடிக் கிண் கிணி-என்றபடி –
திருவடிகளில் சாத்தின சதங்கைகள் யானவை –
தன்னிலே கூடி சப்திக்க –

அன்றிக்கே –
திருவரையில் சாத்தின சதங்கை வடமானது –
நழுவி விழுந்து –
திருவடிகளோடு சேர்ந்து –
இழுப்புண்டு வருகையாலே அதிலுண்டான சதங்கைகள் தன்னிலே கூடி சப்திக்க என்னவுமாம் –

உடை இத்யாதி –
திருவரையில் கட்டின மணியானது பறை போல் சப்திக்க –

தடம் தாள் இத்யாதி –
பருவத்துக்கு ஈடாய் -விகாச யுக்தமாய் -பரஸ்பர சதர்சமாய் -இருக்கிற திருவடிகளைக் கொண்டு –

சாரங்க பாணி –
ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையிலே உடையவன் –
இது ஈஸ்வர சிஹ்னங்களுக்கு எல்லாம் உப லஷணம்-
அவதரிக்கிற போதே ஈஸ்வர சிஹ்னங்கள் தோன்றும் படியாக இறே அவதரித்தது –

தளர் நடை ஆவது –
திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவம் அன்றிக்கே –
நடை கற்கும் பருவம் ஆகையாலே
தவறி தவறி நடக்கும் நடை–

———————————

(கீழே சாரங்க பாணி -ராமனோ இவன்
இதில் வாசுதேவன் -வாசு தேவ புத்ரனோ -நந்தகோபன் குமாரன் அன்றோ )

செக்கர் இடை நுனிக்  கொம்பில் தோன்றும் சிறு பறை முளைப் போல்
நக்க செந்துவர் வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடம் உடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர் நடை நடவானோ – 1-7 2-

பதவுரை

செக்கரிடை–செவ் வானத்திலே
நுனி கொம்பில்-கொம்பின் நுனியிலே
தோன்றும்–காணப்படுகிற
சிறு பிறை முளை போல–சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப் போல,
நக்க–சிரித்த
செம் அவர் வாய்–மிகவுஞ் சிவந்த வாயாகிய
தி்ண்ணை மீது–மேட்டிடத்தில்
நளிர் வெண் பல் முளை–குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள்
இலக–விளங்க
அஃகுவடம்–சங்கு மணி வடத்தை
உடுத்து–(திரு வரையில்) தரித்த
ஆமைத் தாலி–ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
பூண்ட–கழுத்திலணி்ந்து கொண்டவனும்
அனந்த சயனன்–திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும்
தக்க மா மணி வண்ணன்–தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
வாசுதேவன்–வஸுதேவ புத்திரனுமான இவன்
தளர் நடை நடவானோ .

செக்கர் வானத்து இடையிலே சாகாந்தரத்திலே தோன்றும்படி
உன்நேயமான பால சந்தார்ங்குரம்  போலே –
ஸ்மிதம் செய்கையாலே -மிக சிவந்து இருந்துள்ள திரு அதரமாகிற
உயர்ந்த நிலத்தின் மேலே
குளிர்ந்து வெளுத்து இருக்கிற திரு முத்தின் அங்குரத்தினுடைய தேஜசானது பிரகாசிக்க –
(மாய மோஹ புன்னகை -மந்தஸ்மிதம் )

அக்கு வடம் உடுத்து –
சங்கு மணி வடத்தை திருவரையிலே தரித்து

ஆமைத் தாலி பூண்ட –
கூர்ம ஆகாரமான ஆபரணத்தை திருக் கழுத்திலே சாத்திக் கொண்டவனாய்

அனந்த சயனன் –
அவதாரத்தின் உடைய மூலத்தை நினைத்து சொல்கிறது –
நாக பர்யங்க முத்சர்ஜ்ய ஹ்யாகத -என்னக் கடவது இறே

தகுதியான நீல ரத்னம் போன்ற திரு நிறத்தை உடையவன் -ஸ்ரீ வாசு தேவர் திருமகன் –
தளர் நடை நடவானோ –

—————————————

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசு இலையும் பீதகச் சிற்றாடையோடும்
மின்னில் பொலிந்ததோர் கார் முகில் போல கழுத்தினில் காறையோடும்
தன்னில் பொலிந்த இடுடீகேசன் தளர் நடை நடவானோ – 1-7 3-

பதவுரை

மின் கொடியும்–கொடி மின்னலும்
ஓர் வெண் திங்களும்–அதனோடு சேர்ந்திருப்பதும் களங்க மில்லாததுமான (முழுவதும்) வெண்மையா யுள்ள ஒரு சந்த்ரனும்
சூழ்-(அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும்
பரிவேடமும் ஆய்–பரி வேஷத்தையும் போல
பின்னல்–(திரு வரையில் சாத்தின) பொற் பின்னலும்
துலங்கும் அரசிலையும்–விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திரு வாபரணமும்
பீதகம் சிறு ஆடையோடும்–(இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும்,
மி்ன்னில்–மின்னலினால்
பொலிந்தது–விளங்குவதாகிய
ஓர்–ஒப்பற்ற
கார் முகில் போல–காள மேகம் போல
கழுத்தினில் காறையோடும்–கழுத்திலணிந்த காறை யென்னும் ஆபரணத்தோடும் (கூடிய)
தன்னில் பொலிந்த–(இவ் வாபரணங்கள் திருமேனிச் சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற
இருடீகேசன்–‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திரு நாமமுடைய இவன்
(கண்டவர் தம் மனம் வழங்கும் -பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபஹாரீம் )
தளர் நடை நடவானோ-.

மின் கொடியும்
அத்தோடு சேர்ந்ததோர் அகளங்க சந்திர மண்டலமும்
அத்தை சூழ்ந்த பரி வேஷமும் போலே –

திரு வரையில் சாத்தின பொன் பின்னாலும் –
அதிலே கோவைபட்டு பிரகாசிக்கிற வெள்ளி அரசிலைப் பணியும் –
இவற்றுக்கு மேலே சாத்தின பொன்னின் சிற்றாடையும் ஆகிற இவற்றோடும் –

மின்னாலே விளங்கப் பட்டதொரு -காள மேகம் போலே –
திருக் கழுத்தில் -சாத்தின காறையோடும் –
(மின்னில் ஏழாம் வேற்றுமை மின்னலால் மூன்றாம் வேற்றுமை பொருளில் )

இவ் ஒப்பனைகள் மிகை யாம்படி
தன் அழகாலே சமர்தனாய் இருப்பவனாய்-

அவ் வழகாலே கண்டவர்கள் உடைய இந்திரியங்களை
தன் வசமாக கொள்ளுமவன் தளர் நடை நடவானோ –

——————————————

கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி கண கண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்க்குத் தன் திருவாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலை கண் மீதே தளர் நடை நடவானோ -1 7-4 –

பதவுரை

கன்னல் குடம்–கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால்–பொள்ளல் வி்ட்டால் (அப் பொள்ளல் வழியாகச் சாறு பொசிவதை)
ஒத்து–போன்று
ஊறி–(வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கண கண–கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
உவந்து–ஸந்தோஷித்து
முன் வந்து நின்று–என் முன்னே வந்து நின்று
முத்தம் தரும்–(எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மை யுள்ளவனும்
என் முகில் வண்ணன்–-எனக்கு பவ்யனாய் -எனது முகில் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
திரு–பெரிய பிராட்டியார்
மார்வன்–மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன்
தன்னை பெற்றேற்கு–தன்னைப் பெற்ற எனக்கு
தன்–தன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
தந்து–கொடுத்து
என்னை–(தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய) என்னை
தளிர்ப்பிக்கின்றான்–தழைக்கச் செய்கிறான்,
(இவன்)–
தன் எற்றும்–தன்னோடு எதிர்க்கிற
மாற்றலர்–சத்ருக்களுடைய
தலைகள் மீதே–தலைகளின் மேலே (அடியிட்டு)
தளர்நடை நடவானோ.

கன்னல் இத்யாதி –
கரும்பு சாறு குடம் இந்த பதங்கள் சேர்ந்து -கருப்பம் சாற்று குடம் -என்று கிடக்கிறது –
இல்லி ( சிறிது அளவு ) திறந்தால் பொசிந்து புறப்படுமா போலே –
திருப் பவளத்தில் ஜலம் ஆனது ஊறி வடிய –
கண கண என சிரித்து
ப்ரீதனாய்க் கொண்டு –
கண கண என்றது -விட்டு சிரிக்கிற போதை சப்த அநு காரம் –

முன் இத்யாதி –
முன்னே வந்து நின்று -தன்னுடைய அதர ஆச்வாதத்தை தாரா நிற்கும் –
முத்தம் -அதரம்

என் இத்யாதி –
எனக்கு பவ்யனாய் -காள மேகம் போன்ற வடிவை உடையனாய் –
அந்த பவ்யதைக்கு ஊற்று வாயான ஸ்ரீ லஷ்மி சம்பந்தத்தை உடையவன் –

தன்னை இத்யாதி –
தன்னை பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை உடைய எனக்கு தன்னுடைய
வாகம்ர்தத்தை தந்து -என்னைத் தழைப்பியா நின்றான் –

இங்கே –
வாய் அமுதம் தந்து தளர்ப்பிக்கின்றான் -என்று வர்தமானமாக சொல்லுகையாலே –
முன்பு –
முத்தம் தரும் என்றது –
எப்போதும் தன் விஷயத்தில் அவன் செய்து போரும் ஸ்வபாவ கதனம் பண்ணின படி –

தன் எற்றி-இத்யாதி –
தன்னோடு எதிர்ந்த சத்ருக்கள் ஆனவர்களுடைய தலைகள் மேலே தளர் நடை நடவானோ

————————————

முன்னலோர் வெள்ளிப் பெரு மலை குட்டன் மோடு மோடு விரைந்தோடே
பின்னை தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடி இடுவது போல்
பன்னி உலகம் பரவி யோவாப் புகழ் பல தேவன் என்னும்
தன்னம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ -1 7-5 –

பதவுரை

முன்–முன்னே
நல்–அழகிய
ஓர்–ஒப்பற்ற
வெள்ளி பெருமலை–பெரிய வெள்ளி மலை பெற்ற
குட்டன்–குட்டி
மொடு மொடு–திடு திடென்று
விரைந்து–வேகங்கொண்டு
ஓட–ஓடிக் கொண்டிருக்க,
பின்னை–(அந்தப் பிள்ளையின்) பின்னே
(தன் செருக்காலே அப் பிள்ளையைப் பிடிப்பதற்காக)
தொடர்ந்தது-தொடர்ந்ததுமாகிய
ஓர்-ஒப்பற்ற
கரு மலை–கரு நிறமான மலை பெற்ற
குட்டன்–குட்டி
பெயர்ந்து–தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்–அடி யிட்டுப் போவது போல, –
உலகம்–லோகமெல்லாங்கூடி
பன்னி–(தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி-ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா–முடிவு காண முடியாத
புகழ்–கீர்த்தியை யுடைய
பலதேவன் என்னும்–பலராமன் என்கிற
தன் நம்பி ஓட–தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக் கொண்டிருக்க
பின் கூட செல்வான்-(அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர் நடை நடவானோ -.

உலகம் எனபது -உயர்ந்தோர் மாட்டே -தொல்காப்பிய சூத்தரம் –
உலகம் பன்னி பரவி -உயர்ந்தவர்கள் ஆராய்ந்து துதித்து –

முன்னே விலஷணமாய்-அத்வீதியமாய் -பெரிதாய் இருந்துள்ள -வெள்ளி மலை ஈன்ற
குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோடே

பின்னை இத்யாதி –
அந்தக் குட்டியின் பின்னே -தன் செருக்காலே அத்தை பிடிக்கைக்காக தொடர்ந்து –
அஞ்சன கிரி ஈன்றதொரு குட்டி தன் சைசவ அநு குணமாக காலுக்கு கால் பேர்ந்து அடி இட்டு
செல்லுமா போலே –
(கோவர்த்தனம் -த்ரோணாசலம் ஈன்றது அன்றோ )

பன்னி இத்யாதி –
லோகம் எல்லாம் கூடி -தங்கள் ஞான சக்திகள் உள்ள அளவெல்லாம் கொண்டு
ஆராய்ந்து ஸ்துத்திதாலும் முடி காண ஒண்ணாத புகழை உடையவனாய் –
பல தேவன் என்னும் பெயரை உடையனான தன்னுடைய தமையனாவன் செருக்கி முன்னே ஓட –

அவன் பின்னே அவனை கூட வேணும் என்று தன் சைசவ அநு குணமாக
த்வரித்து நடக்குமவன் தளர் நடை நடவானோ –

(யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் )

—————————————–

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த
இரு காலும் கொண்டு அங்கு  அங்கு எழுதினால் போல் இலச்சினை பட நடந்து
பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கருகார் கடல் வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ -1 7-6 –

பதவுரை

கரு கார் கடல் வண்ணன்–மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை–காம தேவனுக்குப் பிதாவுமான இப் பிள்ளை,-(காமனைப் பயந்த காளை )
ஒரு காலில்-ஒரு பாதத்திலே
சங்கு–சங்கமும்
ஒரு காலில்–மற்றொரு பாதத்தில்
சக்கரம்–சக்கரமும்
உள் அடி–பாதங்களின் உட் புறத்திலே
பொறித்து-ரேகையின் வடிவத்தோடு கூடி
அமைந்த–பொருந்தி யிருக்கப் பெற்ற
இரு காலும் கொண்டு–இரண்டு திருவடிகளினாலும்
அங்கு அங்கு–அடி வைத்த அவ்வவ் விடங்களிலே
எழுதினால் போல்–சித்திரித்தது போல
இலச்சினை பட–அடையாளமுண்டாம்படி
நடந்து-அடி வைத்து
(தனது வடிவழகைக் கண்டு)
(கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் -அங்கும் ரேகை என்பாரும் உண்டே )
பெருகா நின்ற–பொங்குகிற
இன்பம் வெள்ளத்தின் மேல்–ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே
பி்ன்னையும்–பின்னும்
பெய்து பெய்து–(ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு
தளர் நடை நடவானோ -.

ஒரு கால் இத்யாதி –
ஒரு திருவடிகளிலே  ஸ்ரீ பாஞ்ச சந்யமும் –
ஒரு திருவடிகளிலே திரு ஆழி ஆழ்வானுமாக
உள்ளடிகளிலே ரேகா ரூபேண பொறித்து சமைந்த இரண்டு திருவடிகளையும் கொண்டு –

அங்கு அங்கு இத்யாதி –
அடி இட்ட அவ்வவ ஸ்தலங்களிலே தூலிகை கொண்டு
எழுதினால் போல் அடையாளம் படும்படி நடந்து –

பெருகா இத்யாதி –
இந்த நடை அழகையும் வடிவு அழகையும் கண்டு மேன்மேல் என்று
பெருகா நின்ற -ஆனந்த சாகரத்துக்கு மேலே –
பின்னையும் உத்தரோத்தரம் –
ஆனந்தத்தை உண்டாக்கி –

(பொறி பட நடந்த ஆனந்த சாகரம் -முதல் நிலை
தவழ்ந்து தவழ்ந்து தளிர் நடை அதுக்கும் மேல் பெருகும் இன்ப வெள்ளம்
மதுரையார் மன்னன் -அடி நிலை தொடுத்து அதிர நடந்தான் அன்றோ
நம்பெருமாள் நின்ற நிலை -இன்றும் -கிஞ்சித் தாண்டவ நிலை உண்டே –
பிருந்தாவன பண்டிதன் -கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் )

கரு கார் இத்யாதி –
இருண்டு குளிர்ந்து இருக்கிற கடல் போன்ற நிறத்தை உடையவன் –
கருமை -இருட்சி
கார் -குளிர்த்தி

அன்றிக்கே
கருமை -பெருமையாய்
கார் -இருட்சியாகவுமாம்

அன்றிக்கே
கார் என்று மேகமுமாய் –
காள மேகம் போலேயும் கடல் போலேயும் இருக்கிற திரு நிறத்தை உடையவன் என்னவுமாம் –

காமர் தாதை இத்யாதி –
அழகால் நாட்டை வெருட்டி திரிகிற காமனுக்கு -உத்பாதகன் ஆனவன் –
காமனைப் பயந்த காளை-இறே
பிரசவாந்தஞ்ச யவ்வனம் -என்னும் படி அன்றிக்கே
காமனைப் பயந்த பின்பு
கீழ் நோக்கி பிராயம் புகும் ஆய்த்து-

காமர் தாதை இன்ப வெள்ளத்தின் மேல் -பின்னையும் பெய்து பெய்து –
தளர் நடை நடவானோ -என்று அந்வயம்-

———————————–

படர் பங்கய மலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல்
இடம் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி இற்று இற்று வீழ நின்று
கடும் சேக் கழுத்தின் மணிக் குரல் போலுடை மணி கண கண என
தடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ – 1 7-7-

பதவுரை

படர்–படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள
பங்கயம் மலர்–தாமரைப் பூ
வாய் நெகிழ–(மொட்டா யிராமல்) வாய் திறந்து மலர
(அதில் நின்றும் பெருகுகி்ன்ற)
பனி படு–குளிர்ச்சி பொருந்திய
சிறு துளி போல–(தேனினுடைய) சிறுத்த துளியைப் போலே
இடம் கொண்ட–பெருமை கொண்டுள்ள
செவ்வாய்–தனது சிவந்த வாயினின்றும்
ஊறி ஊறி–(ஜலமானது) இடைவிடாமற் சுரந்து
இற்று இற்று வீழநின்று–(நடுவே) முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று -,
கடும் சே–கொடிய ரிஷபத்தின்
கழுத்தில்–கழுத்திலே கட்டப்பட்டுள்ள
மணி–மணியினுடைய
குரல் போல்–ஒலி போலே
உடை மணி–(தனது) திருவரையிற் கட்டிய மணி
கண கண என–கண கண வென்றொலிக்க

படர் இத்யாதி –
பெருத்து இருந்துள்ள தாமரை பூவானது -முகுளிதமாய்  இருக்கை அன்றிக்கே –
வாய் நெகிழ்ந்த அளவிலே
குளிர்த்தியை  உடைத்தான அக வாயில் மதுவானது
சிறுக துளித்து -விழுமா போலே –

இடம் கொண்ட இத்யாதி –
இடம் உடைத்தாய் -சிவந்து இருந்துள்ள -திருப் பவளத்தில்
ஜலமானது -நிரந்தரமாக ஊறி முறிந்து விழும்படி நின்று –

கடும் சேக் கழுத்தின் -இத்யாதி –
கடிதான சேவின் கழுத்தில் -கட்டின மணி உடைய
த்வனி போலே -திருவரையில் கட்டின மணியானது -கண கண என்று சப்திக்கும்படி –

தடம் தாள் இத்யாதி –
ச விகாசமாய் பரஸ்பர சதர்சமான திருவடிகளைக் கொண்டு
சாரங்க பாணியானவன் தளர் நடை நடவானோ

———————————

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —

பதவுரை

கரு–கரு நிறமான
சிறு–சிறிய
பாறை–மலையினுடைய
பக்கம் மீது–பக்கத்திலே
(மேடு பள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற)
அருவிகள்–நீரருவிகள்
பகர்ந்து அனைய–ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற
(திரு வரையிற் சாத்திய)
அக்கு வடம்–சங்கு மணி வடமானது
ஏறி இழிந்து தாழ–உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
அணி–அழகிய
அல்குல்–நிதம்பம்
புடை–பக்கங்களிலே
பெயர–அசையவும்
உலகினில்–உலகத்திலுள்ள
மக்கள்–மனிதர்
பெய்து அறியா–பெற்றறியாத
மணி குழவி உருவி்ன்–அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும்
(தக்க இத்யாதி இரண்டாம் பாட்டிற் போலப் பொருள் காண்க.
தகுந்த நீல மணி )

பக்கம் இத்யாதி –
கருத்த நிறத்தை உடைத்தாய் -சிறுத்து இருந்துள்ள மலையினுடைய
பார்ஸ்வத்திலே நிம்நோன் நதமான அருவிகள் ஒளி விடுமா போலே –
பகர் -ஒளி

அக்கு இத்யாதி –
திருவரையில் சாத்தின வளை மணி வடமானது –
உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
நாலும் படி -தொங்கும் படியாக

அணி இத்யாதி
ஆபரணங்களால் பூஷிதமான -அழகிய நிதம்ப பிரதேசம் பார்ஸ்வத்தில் அசைய

மக்கள் இத்யாதி –
லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –

தக்க இத்யாதி –
தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான
ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –

———————————————

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்தது ஒரு வேழத்தின் கரும் கன்று போல்
தெள் புழுதி யாடி திருவிக்ரமன் சிறு புகர் விட வியர்த்து
ஒண் போது அலர் கமல சிறுக் கால் உறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ -1 7-9 –

பதவுரை

திரிவிக்கிரமன்–(தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி–வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு–மேலே பொகட்டுக் கொண்டு
அளைந்தது–அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல்–ஒரு கரிய குட்டி யானை போல,
தெள் புழுதி–தெளிவான (வெளுத்த) புழுதியிலே
ஆடி–விளையாடி
சிறு புகர் பட–சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய்,
வியர்த்து–வேர்த்துப் போய்,
போது–உரிய காலத்திலே
அலர்–மலர்ந்த
ஒள்–அழகிய
கமலம்–தாமரைப் பூவை ஒத்த
சிறு கால்–சிறிய பாதங்கள்
உறைத்து–(ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்)
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
தண் போது கொண்ட–குளிர்ந்த புஷ்பங்களுடைய
தவிசின் மீது–மெத்தையின் மேலே
தளர் நடை நடவானோ-.

வெண் புழுதி இத்யாதி –
வெளுத்த புழுதியை மேலே ஏறிட்டு கொண்டு
அளைந்த
ஒரு கரிய
ஆனைக் கன்று போலே

தெள் இத்யாதி –
தெள்ளிய புழுதியை திருமேனியிலே ஏறிட்டு கொண்டு

திருவிக்ரமன் –
ஆஸ்ரிதனான இந்த்ரன் அபேஷிதம் செய்கைக்காக –
திருவடிகளின் மார்த்த்வம் பாராதே
லோகத்தை அளந்தவன்

சிறு புகர் பட வியர்த்து –
ஏறிட்டு கொண்ட புழுதி ஸ்வேத பிந்துக்களாலே
நனைந்த இடங்களிலே திருமேனி சிறிது புகர்த்து தோன்றும்படி வியர்த்து

ஒண் போது இத்யாதி –
அழகியதாய் –
தனைக் கடைத்த காலத்திலே அலர்ந்த
தாமரைப் பூ போலே
இருக்கிற சிறியதான திருவடிகள் மிதித்த இடத்திலே –
ஓன்று உறுத்தி நோவாதபடி யாக

தண் இத்யாதி –
குளிர்ந்த பூக்களை உடைத்தான மெத்தை மேலே
தளர் நடை நடவானோ –

தவிசு -மெத்தை –

—————————————

திரை நீர் சந்திர மண்டலம் போல் செம் கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-

பதவுரை

செம் கண் மால்–சிவந்த கண்களையும் கரு நிறத்தை யுமுடைய
கேசவன்–ப்ரசஸ்த கேசவன் -கேசவனென்னுந் திருநாமமுடைய இவன்,
திரை நீர்–அலைகின்ற நீரை யுடைய ஸமுத்திரத்தின் நடுவில்
(அசைந்து தோன்றுகிற)
சந்திரன் மண்டலம் போல்–ப்ரதி பிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல
தன் –தன்னுடைய
திரு நீர்–அழகிய ஒளியை யுடைய
முகத்து–திரு முகத்திலே
துலங்கு–விளங்குகின்ற
சுட்டி–சுட்டியானது
எங்கும்–எல்லா விடத்திலும்
திழ்ந்து–ப்ரகாசித்துக் கொண்டு
புடை பெயர்–இடமாகவும் வலமாகவும் அசையவும்
பெரு நீர்–சிறந்த தீர்த்தமாகிய
திரை எழு கங்கையிலும்–அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும்
பெரியது-அதிகமான
ஓர்–ஒப்பற்ற
தீர்த்த பலம்–தீர்த்த -நீராடிய -பலத்தை
தரும்–கொடுக்கின்ற
நீர்–ஜலத்தை உடைத்தான
சிறு சண்ணம்–சிறிய சண்ணமானது
துள்ளம் சோர–துளி துளியாகச் சொட்டவும்
தளர் நடை நடவானோ-.

சண்ணம் -குஹ்ய அவயவம்

திரை நீர் இத்யாதி –
திரைக் கிளப்பத்தை உடைத்தான சமுத்திர மத்யத்திலே சலித்து தோற்றுகிற
சந்திர மண்டலம் போலே  –

செம் கண் மால் இத்யாதி –
சிவந்த திருக் கண்களையும்
அதுக்கு பரபாகமான கருத்த நிறத்தையும் உடையவனாய் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவன்
மால்-கரியவன் –

தன் இத்யாதி –
தன்னுடைய அழகியதாய் -நீர்மையை உடைத்தான திரு முக மண்டலத்தில் –
விளங்குகிற திரு சுட்டியானது -எங்கும் ஒக்க பிரகாசித்து –
இடம் வலம் கொண்டு அசைய –

பெரு நீர் இத்யாதி –
தீர்த்தங்களில் பிரசித்தமாய் -ப்ரவாஹா ஜலம் மாறாமல் –
அலை எரிகிற கங்கையிலும் காட்டிலும் –
(கங்கா காயத்ரி கோவிந்தா கீதா -நான்கும் புனிதம் )
பெரியதாய் அத்வீதியமான தீர்த்த பலத்தை
தரும் ஜலத்தை உடைத்தான சிறுச் சண்ணம் ஆனது துளிக்க துளிக்க
தளர் நடை நடவானோ –

(சுத்த சத்வ மயம் அன்றோ )

————————————-

அவதாரிகை
நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தொடர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே – 1-7 11- –

பதவுரை

ஆயர் குலத்தினில் வந்து–இடையர் குலத்திலே வந்து
தோன்றிய-அவதரித்த
அஞ்சனம் வண்ணன்–மை போன்ற கரு நிற முடையனான கண்ணன்
தன்னை–தன்னை (க்கண்டு)
தாயர்–தாய்மார்கள்
மகிழ–மனமுகக்கவும்
ஒன்னார்–சத்ருக்கள்
தளர–வருத்தமடையவும்
தளர் நடை நடந்தனை–தளர் நடை நடந்ததை
வேயர்–வேயர் குடியிலிருப்பவ ரெல்லாராலும்
புகழ்–புகழப் பெற்ற
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சீரால்–சிறப்பாக
விரித்தன–விவரித்துச் சொன்ன பாசுரங்களை
உரைக்க வல்லார்–சொல்ல வல்லவர்கள்
மாயன்–ஆச்சர்யமான குணங்கள யுடையவனும்
மணி–நீல மணி போன்ற
வண்ணன்–நிறமுடையனுமான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணியும்–வணங்க வல்ல
மக்களை–பிள்ளைகளை
பெறுவார்கள்–அடைவார்கள்.

ஆயர் இத்யாதி –
கோப குலத்தில் வந்து ஆவிர்பவித்த –
ராஜ குலத்தில் ஆவிர்பவித்த வித்தமை -அடி அறிவார் அறியும் இத்தனை இறே-
இது இறே எல்லாரும் அறிந்தது –

அஞ்சன வண்ணன் தன்னை –
கண்டவர் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருக்கிற
திரு நிறத்தை உடையவனை –

தாயர் இத்யாதி –
பெற்ற தாயான யசோதையும் –
அவளோ பாதி ஸ்நேஹிகள் ஆனவர்களும்
ப்ரீதராம் படியாகவும் –
தொட்டில் பருவத்திலே பூதன சகடாதிகள் நிரஸ்தர் ஆனமை அறிந்த –
கம்சாதிகளான சத்ருக்கள்
தலை எடுத்து நடக்க வல்லன் ஆனமை கண்டு –
என் செய்ய புகுகிறோம் என்று பீதராய் அவசன்னராம்படி யாகவும்
தளர் நடை நடந்த பிரகாரத்தை –

வேயர் இத்யாதி –
வேயர் தங்கள் குலத்து உதித்தவர் ஆகையாலே –
அக் குடியில் உள்ள எல்லோரும் தம்முடைய வைபவத்தை சொல்லி
புகழும் படியான ஸ்ரீ பெரியாழ்வார் –

சீரால் இத்யாதி –
சீர்மையோடே விஸ்தரித்து சொன்ன –
இவற்றை ஏதேனும் ஒரு படி சொல்ல வல்லவர்கள் –

மாயன் இத்யாதி –
ஆச்சர்யமான குணங்களை உடையவனாய் –
நீல ரத்னம் போன்ற வடிவை உடையவன் ஆனவனுடைய திருவடிகளிலே
ஸ்வ சேஷத்வ அநு ரூபமான வ்ருத்தி விசேஷத்தை பண்ணும் –
சத் புத்ரர்களைப் பெறுவர்-

மக்கள் -என்று
அவி விசேஷமாக சொல்லுகையாலே –
வித்தையாலும் -(சிஷ்யர் களாகவும் )
ஜன்மத்தாலும் வரும் –
உபய வித புத்ரர்களையும் சொல்லுகிறது –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.