ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-6–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

அவதாரிகை –
செங்கீரை ஆடுகையாகிற அவனுடைய  பால்ய சேஷ்டிதத்தை தத் காலத்திலேயே –
யசோதை பிராட்டி பிரார்த்தித்து அனுபவித்தால் போலே –
மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-அந்த சிநேகத்தை உடையராய் கொண்டு –
தானும் அனுபவித்தாராய் நின்றார் –

இனி -சப்பாணி கொட்டுகையாகிற பால சேஷ்டிதத்தை செய்து அருள வேணும் என்று
அவனைப் பிரார்த்தித்து -அந்த சேஷ்டித ரசத்தை அவள் அனுபவித்தால் போலே –
ஒரு சேஷ்டிதத்தை அனுபவித்த அளவிலே பர்யாப்தி பிறவாத அபிநிவேச அதிசயத்தாலே –
அந்த சேஷ்டித ரசத்தையும் அனுபவிக்க ஆசைப் பட்டு -அவள் பேசினால் போலே பேசி -தாமும் அனுபவிக்கிறார் –

——————————–

மாணிக்க கிண் கிணி யார்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னால் செய்த ஆய்ப் பொன்னுடை மணி
பேணிப் பவளவாய் முத்து இலங்கப் பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி –1 6-1 –

ஆணி -மாற்று உயர்ந்த
உடை மணி -அரைவடத்தை உடைத்தான
மருங்கின்  மேல் -இடுப்பிலே
சப்பாணி கொட்டுதலாவது -திருக் கைத் தலங்களை தட்டிக் கொண்டு செய்யும் ஒரு வித நர்த்தனம் –
மாற்று எழும்பின பொன்னாலே சமைக்கப் பட்டதாய் -பழிப்பு அற்று –
அழகியதாய் இருந்துள்ள -அரை வடத்தை உடைத்தான மருங்கின் மேல் –
மாணிக்க கிண் கிணியானது த்வனிக்க –
ஆய் பொன்னுடை மணி -என்கிற இடத்தில் -ஆய்தல் தெரிதலாய் பழிப்பு அறுதலை சொல்
நாக மாணிக்கம் ஆகையாலே என்னவுமாம் –
கிண் கிணிக்கு புறம்பே மாணிக்கம் பதித்தாலும் சப்தியாது –

பேணி இத்யாதி –
என்னுடைய நிர்பந்தத்துக்கு  ஆக அன்றிக்கே -விருப்பத்தோடு பவளம் போல் இருக்கிற -திரு அதரமும் –
திரு முத்தும் பரபாகத்தாலே விளங்கும்படி ஸ்மிதம் செய்து  கொண்டு –
அன்றிக்கே –
பேணி என்றது -உன் திருமேனி அலையாதபடி பேணிக் கொண்டு -என்னவுமாம் –
பண்டு இத்யாதி -முன்பு -குடம் கையில் மண் கொண்டு -என்கிறபடியே உன்னுடைமையான பூமியை –
மகா பலி இடம் சென்று உதக பூர்வகமாக பரிகிரகித்த திருக் கைகளாலே –

இத்தால் -தன் மேன்மை பாராதே ஆஸ்ரிதருக்குகாக தன்னை அழிய மாறி கார்யம் செய்யும் கை -என்கை –
கருகின திருக் குழலையும் -பிள்ளைத் தனத்தையும் உடையவனே -சப்பாணி கொட்டி அருள வேணும் –

———————————————–

பொன்னாரை நாணொடு மாணிக்க கிண் கிணி
தன்னரை ஆடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட
என்னரை மேனி இன்று இழுந்து உங்கள் ஆயர் தம்
மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி -1-6 2- –

தனி சுட்டி -அத்வீதியமான சுட்டியானது
உங்கள் ஆயர் தம் மன் அரை மேல் –உங்கள் தமப்பனராய் இடையர்களுக்கு அரசரான ஸ்ரீ நந்த கோபருடைய மடியில் இருந்து –
இத்தால் தன் மடியில் இருந்து சப்பாணி கொட்டுகிறதிலும்-அவர் மடியில் இருந்து சப்பாணி கொட்டக் காண்கை
தனக்கு உகப்பு ஆகையாலே அத்தை செய்ய வேணும் என்று அபேஷித்தாராய் ஆய்த்து-
மாயவனே -ஆச்சர்ய பூதன் ஆனவனே

——————————————-

பன் மணி முத்தின் பவளம் பதித்தன்ன
என் மணி வண்ணன்  இலங்கு பொன் தோட்டின் மேல்
நின் மணி வாய் முத்திலங்க நின் அம்மை தன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி -1 6-3 –

என்னுடையவன் என்று அபிமாநிக்கலாம் படி -எனக்கு பவ்யனாய் – நீல ரத்னம் போன்ற –
வடிவை உடையவனாய் இருக்கிறவனே –
பன் மணி இத்யாதி -மாணிக்கம், மரகதம், புஷ்ய  ராகம், வைரம், நீலம், கோமேதகம்,வைடூர்யம்
என்கிற பல வகைப் பட்ட ரத்னங்களும் -முத்தும் -இனிய பவளமும் -பகை தொடையாக அழுத்தி -வாசா மனோகரமான
அழகை உடைத்தாய் கொண்டு விளங்கா நின்ற பொன் தோட்டின் அழகுக்கு மேலே
நின்  இத்யாதி -உன்னுடைய அழகியதான திருப் பவளத்திலே திரு முத்துக்கள் பிரகாசிக்க –
நின்னம்மை இத்யாதி -உன்னைப் பிள்ளையாக பெற்ற பாக்யத்தை உடையளான அவளுடைய
மடி மேலே இருந்து சப்பாணி கொட்டாய் –
அம்மணி என்று அரைக்கு பெயர் –

இத்தால் ஸ்ரீ நந்தகோபர் தம்முடைய மடியில் இருந்து சப்பாணி கொட்டுகிறதிலும் –
தாயார் மடியில் இருந்து சப்பாணி கொட்டக் காண்கை -தமக்கு உகப்பு ஆகையாலே –
அத்தை செய்ய வேணும் என்று அபேஷித்தாராய் ஆய்த்து –

ஆழி அம் கையனே -திரு ஆழியை அழகிய திருக் கையிலே உடையவனே என்னுதல்-
ஆழி என்று -திருவாழி மோதிரம் ஆதல் –

——————————————

தூ நிலா முற்றத்தே போந்து விளையாட
வான் நிலாம் அம்புலீ சந்திரா வா என்று
நீ நிலா நின் புகழா நின்ற ஆயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி குடைந்தை கிடந்தானே சப்பாணி -1 6-4 –

தூ நிலா -அழகிய நிலவை உடைய
கோ -தலைவனான நந்த கோபர்
நிலாவ -ஹர்ஷிக்கும் படி
நீ நிலா -நீ நின்று
உன் சேஷ்டிதங்களிலே வித்தராய் கொண்டு -உன்னை புகழா நிற்கிற -சர்வ கோப நிர்வாகரான -உங்கள் ஐயன் –
உன்னுடைய சேஷ்டிதத்தை கண்ட -ஹர்ஷத்தாலே -உஜ்ஜ்வலமாம் படியாக சப்பாணி கொட்ட வேணும் –
ஆஸ்ரித பராதீனனாய் கொண்டு திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறவனே

——————————————–

புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டி யமுக்கி யகம் புக்கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பத்ம நாபா கொட்டாய் சப்பாணி -1 6-5 –

மத்யம அங்கத்திலே சேற்றையும் புழுதியையும் கொண்டு வந்து -சொட்டு சொட்டு என்ன –
துளிக்க துளிக்க புழுதியிலே இருந்து விளையாடுகையாலே –
திருவரையிலே நனைந்த இடம் சேறும் -நனையாத இடம் புழுதியுமாய்  இருக்கும் இறே-
இப்படி இருக்கிற ஆகாரத்தோடு வந்து மேலே அணைக்கையாலே-அந்த சேற்றையும் புழுதியையும் கொண்டு
வந்து மேலே இட்டு உறைக்கப் பூசி –

அகம் புக்கு இத்யாதி -ஓடிப் போய் உள்ளே புக்கு -வைத்த நான் அறியாதபடி –
சட்டிகளிலே தோய்த்து வைத்த -தயிரையும் -தடாக்களிலே சேர்த்து வைத்த வெண்ணெயையும் அமுது செய்யா நிற்கும் –

பட்டி இத்யாதி -பட்டி தின்று திரியும் கன்று போலே களவே யாத்ரையாக திரியுமவனே -சப்பாணி கொட்டு –
சகல ஜகத் காரணமான தாமரையை திரு நாபியிலே உடையவனே –

—————————————————-

தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது
போர் உய்த்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்து மன்னர் பட பஞ்சவர்க்கு அன்று
தேர் உய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி -1-6 6-

தந்தை -சர்வ லோக பிதாவான உன்னுடைய
தாரித்து -தரித்து என்கிற இத்தை நீட்டிக் கிடக்கிறது -தரித்து -பொறுப்பு உண்டாய் என்னுதல் –
புத்தி பண்ணி என்னுதல் -நூற்றுவர் -இதற்க்கு மேலே அந்வயம்-

தந்தை சொல் கொள்ளாது -சர்வேஷா மேவ லோகாநாம் பிதாமாதாச மாதவ -என்கிறபடியே
சர்வ லோகத்துக்கும்  பிதாவாகையாலே -தங்களுக்கும் பிதாவான நீ -இரண்டு தலையையும் சேர்க்கைக்கு –
தூதாக எழுந்து அருளி -பாண்டவர்களும் நீங்களும் பரஸ்பரம்  விரோதித்து இருக்க வேண்டா –
ப்ராப்தி எல்லோருக்கும்  ஒக்கும் -ஆன பின்பு ராஜ்யத்தை சமபாகம் பண்ணி -புசித்து சேர்ந்து இரும் கோள்-
அது செய்ய மாட்டி கோள் ஆகில் -தலைக்கு இரண்டு ஊராக -அவர்களுக்கு பத்தூர் தன்னை கொடும் கோள் –
அதுவும் செய்யி கோள் ஆகில் -அவர்கள் தங்கள் குடி இருக்கைக்கு ஒரூர் தன்னை ஆகிலும் கொடும் கோள் –
என்று இப்படி அருளிச் செய்த வசனத்தில் -ஒன்றையும் கைக் கொள்ளாதே-

போர் உய்த்து இத்யாதி -பின்பு ரோஷத்தாலே -வீர போகய வசுந்தரா அன்றோ -யுத்தத்தை பண்ணி –
ஜெயித்தவர்களில் ஒருவர் ராஜ்யத்தை ஆளும் கோள் -என்றபடியாலே யுத்தத்தை நடத்துவதாக –
கர்வததோத்தராய் வந்து -யுத்த பூமியை புகுந்தவர்களாய்-பாண்டவர்களை அழியச் செய்து –
பூமிப் பரப்பு அடங்கலும் தாங்களே ஆளுவதாக பாரித்த ராஜாக்களான நூற்றுவரும் –
ஒருவர் சேஷியாதபடி  பட்டுப் போம் படியாக –

பஞ்சவர்க்கு இத்யாதி -உன்னை அல்லது வேறு துணை இல்லாத பாண்டவர்கள் ஐவர்க்கும் –
தங்கள் வெறுமை தோன்ற நின்ற அன்று -ஆயுதம் எடுக்க ஒண்ணாது -என்கையாலே –
சாரத்யத்திலே அதிக்ரத்யனாய் -பிரதிபஷம் இத்தனையும் தேர் காலிலே நெரிந்து போம்படியாக
தேரை நடத்தின கைகளால் சப்பாணி கொட்ட வேணும் –
தேவகி வயற்றில் பிறப்பாலே -ஸிம்ஹ கன்று போலே செருக்கி இருக்கிறவனே -சப்பாணி –

———————————————

பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கை மேல் ஏறி திரை மீத
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க
சரம் தொட்ட கைகளால் கொட்டாய் சப்பாணி -சாரங்க வில் கையனே சப்பாணி -1-6 7- –

படு -ஆழ்ந்து இரா நின்ற
அப்ரமேயோ மகோததி -என்கிறபடி ஒருவராலும் எல்லை காண ஒண்ணாதபடி -விஸ்தீர்ணமாய்
நின்ற ஆழ்ந்த கடலானது –
படு -என்று ஆழம் –
அன்றிகே –
ரத்நாதிகள் படுகிற கடல் என்றுமாம் –

தன்னை இத்யாதி –
அஞ்சலிம் ப்ரான்முக கர்த்வா பிரதிசிச்யே மகோததே-என்கிறபடியே இலங்கையில் போம் படி வழி தர வேணும் –
என்று தன்னை குறித்து சரணம் புகுந்த கை மேலே துவலை எறிகிற திரைகளானவை மோத –
காந்தி இத்யாதி -முகம் காட்டாதே மறைந்து நின்ற கடலை -பீதியாலே கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி கலங்க –
சாபமா ந யா ஸௌ மித்ரே சராம்சாசீ விஷோபமான் -என்கிறபடியே சீறி –
சரம் தொட்ட கைகளால் சப்பாணி –
கடல் என்கிற சப்தத்தாலே அபிமானியான வருணனை -சொல்லுகிறது –
சாரங்க வில் கையனே -அப்போது கையும் வில்லுமாக நின்ற அழகை உடையவன் -என்னுதல்-
கையிலே வில்லை வாங்கின போதை வீரப் பாட்டை சொல்லுதல் –

————————————————

குரக்கு இனத்தினாலே குரை கடல் தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி அம் கையனே சப்பாணி -1-6-8- –

குரை கடல் -கோஷியா நின்ற கடல் –
குரக்கு இத்யாதி -நீருக்கு அஞ்சி உயர்ந்த நிலங்களிலே வர்த்திக்கும் குரங்குகள் உடைய திரளாலே –
ஆழத்தாலும் பரப்பாலும் -திரைக் கிளப்பத்தை உடைதத்தாய் கொண்டு –
கோஷியா நின்று வரும் சமுத்ரத்தை இரண்டருகும் தேங்கிப் போம்படி நடுவே அணை கட்டி –
நீள் நீர் இத்யாதி -நீள் கடல் சூழ் இலங்கை -என்கிறபடியே –
பரந்த கடலை அழகை உடைத்தான -இலங்கையை -இருப்பிடமாக உடையவர் ஆகையாலே –
இந்த அரண் உண்டாய் இருக்க நமக்கு ஒரு குறையும் இல்லை என்று செருக்கி இருக்கும் ராஷசர் ஆனவர்கள்
முழுக் காயாக அவியும் படி -பிரதிபஷ நிரசன சீலனான அம்புகளாலே நெருங்க பொருத கைகளால் சப்பாணி –
திரு ஆழியை அழகிய திருக் கையிலே உடையவனே சப்பாணி –
விரோதி நிரசனத்துக்கு -அடு கணை தானே அமைந்து இருக்கையாலே திரு ஆழி
அழகுக்கு உடலாம் இத்தனை இறே-

———————————————

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி -1 6-9 –

அளந்து இட்ட -ஹிரண்யன் அளந்து நட்ட
வாள் -கத்தி போல் குரூரமான
தொட்டு -இப்போது ஆகிலும் அனுகூலிக்க கூடுமோ என்று பரீஷித்து –
முன்பே நரஸிம்ஹத்தை வைத்து நட்ட தூண் -என்ன ஒண்ணாதபடி -தானே தனக்கு பொருந்த பார்த்து –
அளந்து நட்ட தூணை அவன் தட்ட -வேறே சிலர் தட்டில் -கையிலே நரசிம்கத்தை அடக்கி கொண்டு வந்து தூணிலே
பாய்ச்சினார்கள் என்ன ஒண்ணாதபடி -அவன் தானே –
எங்கும் உளன் -என்று பிரகலாதன் பண்ணின பிரதிக்ஜை பொறாமல் -பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப –
என்கிறபடியே அவனை சீறி -அந்த சீற்றத்தினுடைய அதிசயத்தாலே –
ஆனால் நீ சொல்லுகிறவன் இங்கு இல்லை – என்று அழன்று அடிக்க –

ஆங்கே -அடித்த இடம் ஒழிய ஸ்தலாந்தரத்திலே தோன்றிலும் -இவன் இங்கு இல்லை -என்று
பிரதிக்ஜை நிலை நின்றது ஆம் என்று -அத் தூணிலே அவன் அடித்த இடம் தன்னிலே –
வளர்ந்திட்டு -பரிய இரணியன் -என்னும்படி பருத்து வளர்ந்த வடிவை உடையனானவன் -கீழ் படும்படியாக தான் வளர்ந்து –

வாள் உகிர் சிங்க உருவாய் -அஸ்த்ர சஸ்த்ரங்களில் ஒன்றாலும் படக் கடவன் அல்லவாகவும்-
தேவாதி சதிர்வித ஜாதியில் உள்ள வற்றில் ஒன்றின் கையில் படக் கடவன் அல்லவாகவும் –
பிரம ருத்ராதிகள் கொடுத்த வரத்துக்கு விரோதம் வாராதபடி ஒளியை உடைத்தான உகிர்களை உடைய நர ஸிம்ஹ ரூபியாய் –

உளம் தொட்டு -எங்கும் உளன் என்று பிரகலாதன் சொன்னபடியே –
தான் -இல்லை -என்று சொன்ன ஸ்தலம் தன்னிலே -உண்டு -என்னும்படியாக தோற்றுகையாலும் –
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலற தெழித்தான்-என்கிறபடியே ஒரொன்றே துச்சகமாம்படி –
பண்ணின பீடா விசேஷங்களாலும்-பீதியிலே நெஞ்சு இளகி அனுகூலிக்க கூடுமோ என்று ஹிருதயத்தை பரிஷை பண்ணி –

ஹிரண்யன் ஒண் மார்வகலம் -ஹிரண்யனுடைய ஒள்ளியதான விச்தீர்ணமான மார்வை –
ஒண்மையாவது-நரஸிம்ஹத்தினுடைய கோப அக்நியாலும் தன்னுடைய உதரத்தில் பய அக்நியாலும் பிறந்த
பரிதாபத்தாலே -அக்னி முகத்தில் பொன் போலே உருகி பதம் செய்து ஒளி விடுகை –

இத்தால் -திரு உகிருக்கு அனாயாசேன கிழிக்கலாம்  படியான படியைச் சொல்லுகிறது –
அகலம் என்கையாலே -வர பல பூஜை பலங்களாலே மிடி யற வளர்ந்த பரப்பாலே –
திரு உகிற்கு எல்லாம் இரை போந்தபடியை சொல்லுகிறது –

பிளந்திட்ட கைகளால் -உடலகம் இருபிளவாக்கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே –
என்கிறபடியே திரு உகிர்களாலே இரண்டு கூறாக பிளந்து பொகட்ட திருக் கைகளால் சப்பாணி –

பேய் முலை இத்யாதி -அவனைப் போலே பிரதிகூல்யம் தோற்ற நிற்க்கையும் அன்றிக்கே –
தாயாய் வந்த பேய் -என்கிறபடியே வஞ்சகையாய் வந்த பூதனை உடைய முலையை
பிராண சகிதமாக உண்டு முடித்தவனே -சப்பாணி –

—————————————————

அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல் தன்னை
மிடைந்திட்டு மந்த்ரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன் கயிறாக
கடைந்திட்ட கைகளால் சப்பாணி  கார்முகில் வண்ணனே சப்பாணி -1 6-10 –

அடைந்திட்டு -சரணம் புகுந்த அளவிலே
துர்வாச சாபோபகதராய்-அத்தாலே நஷ்ட ஐஸ்வர்யராய்-அசூராக்ராந்தராய் –
அமரத்வ சாபேஷரான தேவர்கள் –
சரணம் த்வம் அநு ப்ராப்தா ச்ச்மச்தா தேவதா கணா-என்கிறபடியே -ரஷித்து அருள வேணும் என்று -சரணம் புகுர –
அடைந்திட்டு என்கிற வினை எச்சம் திரிந்து- அடைந்திட -என்னும் பொருள் பெற்றுக் கிடக்கிறது –

நலம் கழல் வணங்கி -என்கிற இது திரிந்து -வணங்க -என்னும் பொருள் ஆகிறாப் போலே –
ஆழ் கடல் இத்யாதி -அத்யகாதமான ஷீராப்தியை நம்முடைய படுக்கை என்று பாராதே –
மந்தரம் இத்யாதி -மந்தானம் மந்த்ரம் த்ருதவா-என்கிறபடியே -மகாசலமான மந்த்ரத்தை கடைகைக்கு மத்தாக நாட்டி –
வடம் இத்யாதி -போக்த்ரம் கர்த்வா சவா சூகிம் -என்கிறபடியே -வாசுகியாகிற வலிய கயிற்றை-அதிலே கடை கயிறாக சுற்றி –

கடைந்திட்ட இத்யாதி -தேவர்களையும் அசுரர்களையும் முந்துற கடைய விட்டு –
அவர்கள் இளைத்து கை வாங்கின வாறே -அலை கடல் கடைந்த அப்பன் -என்கிறபடி
அமிர்தம் கிளரும் தனையும் நின்று கடைந்து அருளின கைகளால் சப்பாணி –
கார் முகில் இத்யாதி -ஆஸ்ரிதருடைய அபேஷித சம்விதானம் பண்ணின ஹர்ஷத்தாலே –
காள மேகம் போலே குளிர்ந்து -புகர் பெற்ற வடிவை உடையவனாய் நின்றவனே-சப்பாணி –

———————————————-

ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன்
வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே 1-6 10-

சர்வரையும் அடிமை கொள்ளுவதாக வந்து ஆவிர்பவித்த அவதார பிரயோஜனம் –
லீலா விபூதியில் உள்ள சேதனரை திருத்தி அடிமை கொள்ளுகை என்கை-
பிறந்த -என்னாதே தோன்றிய -என்றது –
கர்ப்ப வாச தோஷம் அற வந்து அவதரித்தமை தோற்றுகைக்காக-
ஆயர் தம் கோவினை -ஆவிர்பவித்தது ஸ்ரீ மதுரையிலே ஆகிலும் -அது –
பிரகாசித்ததும் -பிரயோஜனப் பட்டதும் -திரு ஆய்ப்பாடியிலே இறே –

தான் தாழ நின்று -ஏவிற்று  செய்து -தன் நீர்மையாலே எல்லாரையும் வசீகரித்து –
ஆளாக்கி கொண்டு -சர்வ கோப நிர்வாகன் ஆனவனே –
நாள் கமழ் இத்யாதி -சர்வ காலத்திலும் கமழா நின்றுள்ள பூம் பொழில்களை உடைய
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாகரான ஸ்ரீ பெரிய ஆழ்வார்-
வேட்கை இத்யாதி -அவதார சேஷ்டித அனுபவத்தில் ஆசையால் அருளிச் செய்த சப்பாணி விஷயமான பத்துப் பாட்டையும் –
ஆசை பூர்வகமாக சொல்லுமவர்கள் உடைய  அகில பாபங்களும் தன்னடையே போம் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: