ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-5–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

அவதாரிகை –
கீழில் திரு மொழியில் –
அவன் நிலா முற்றத்திலே இருந்து -புழுதி அளைவது –
அம்புலியை அழைப்பதான படியை -யசோதை பிராட்டி தான் அனுபவித்து –
அவை தன்னை சந்தரனைப் பார்த்து சொல்லி -இவனோடு விளையாட வேண்டி இருந்தாய் ஆகில் விரைந்து வா
என்று பல ஹேதுக்களாலும் அவனை அழைத்த பிரகாரத்தை -தாமும் பேசி -பிற் காலமாய் இருக்கச் செய்தே –
தத் காலம் போலே அவனுடைய அந்த சேஷ்டிதத்தை அனுபவித்தாராய் நின்றார் –

இனி மேல் அவனுடைய பருவத்துக்கு ஈடாக அவன் செங்கீரை ஆடுகிறது -காண வேணும் என்று ஆசைப் பட்டு –
அவனைப் பல படியாக புகழ்ந்து -எனக்கு ஒரு கால் செங்கீரை ஆட வேணும் -என்று பல காலும் அபேஷித்து-
அந்த சேஷ்டித ரசத்தை அவள் அனுபவித்த படியை -தாமும் தத் காலம் போலே அனுபவித்து –
அவள் பேசினாப் போலே பேசி இனியர் ஆகிறார் –

அவனை ஸ்தோத்தர பூர்வகமாக செங்கீரை ஆட வேணும் என்று பல காலம் அபேஷிக்கிறதும் –
அந்த சேஷ்டித அனுபவம் பண்ணுகிறதுமே அவளோடு இவருக்கு சாம்யம் –

மயர்வற மதிநலம் பெற்றவர் ஆகையாலே -அவன் படிகள் அடங்கலும் பிரகாசிக்கையாலே –
தர்ம ஐக்யத்தாலே -அவதாந்தர சேஷ்டிதங்களையும் இவ் அவதாரம் தன்னில்
உத்தர கால சேஷ்டித விசேஷங்களையும் –
பரத்வாதிகளில் உண்டான படிகளையும் –
உகந்து அருளின நிலங்களில் நிலையால் தோற்றுகிற குண விசேஷங்களை எல்லாம் –
தம்முடைய பிரேம அதிசயத்தாலே -இவ் வஸ்துவுக்கு விசேஷமாக்கி கொண்டு புகழ்ந்து –
அந்த சேஷ்டித ரசத்தை அனுபவிக்கிறது இவருக்கு விசேஷம் –

உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா
ஊழி தோறு ஊழி பல ஆலின் இலை அதன் மேல்
பைய வுயோகு துயில் கொண்ட பரம் பரனே
பங்கயம் நீள் அயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி
செல்வு  பொலி மகரக் காது திகழ்ந்து இகல
ஐய எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே –1-5-1-

பைய வுயோகு துயில் கொண்ட–அவ் ஆல் இலை அசையாதபடி -மெள்ள யோக நித்ரை பண்ணி அருளின
செய்யவள் -செந்தாமரையில் பிறந்த பிராட்டிக்கு வாசஸ்தானமான
செல்வு பொலி -ஐஸ்வர்ய ஸம்ருத்திக்கு உறுப்பான
செங்கீரை -தாய்மார் முதலானோர் -பிள்ளைகளை தாங்களே அசைத்து ஆடுவிப்பதொரு நர்த்தன விசேஷம்

உய்ய இத்யாதி -கரண களேபர விதுரராய்-போக மோஷ சூன்யராய் கிடக்கிற ஆத்மாக்கள் –
உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாக லோகத்தை சிருஷ்டித்து -பின்பு அவாந்தர பிரளயம் வர –
அதில் அழியாதபடி உள்ளே வைத்து -நோக்கின அழகிய திரு வயிற்றை உடையவனே

ஊழி தோறு இத்யாதி -பிரவாஹா ரூபேண வருகிற பல கல்பங்கள் தோறும் -ஜகத்தை அடங்க விழுங்கின
திரு வயிற்றோடே ஒரு பவனான ஆலின் இலை மேலே -அது அசையாத படி மெள்ள –
யோக நித்ரை பண்ணின பராத்பரன் ஆனவனே

பங்கயம் இத்யாதி -அந்த சர்வ ஸ்மாத் பர ஸூசகமாய் -விகசாதிகளாலே தாமரையை ஒரு போலியாக சொல்லலாம் படியாய் –
அவ்வளவு  இன்றிக்கே நீண்டு இருக்கிற திருக் கண்களை உடையவனாய் –
அதுக்கு பரபாகமாய் அஞ்சனம் போலே இருக்கிற திரு மேனியை உடையவனே –

செய்யவள் இத்யாதி -பெரிய பிராட்டியாருக்கு வாசஸ்தானமான உன்னுடைய திரு மார்பானது –
இந்த நர்த்தத்தாலே அசையாதே ரஷையை உடையதாக வேணும் என்று நினைத்து கொண்டு –
ஐச்வர்யத்துக்கு ஸம்ருத்திக்கு ஸூசகமான திரு மகர குழைகளோடு கூடின திருக் காதுகள் ஆனவை –
உஜ்ஜ்வலமாய் கொண்டு விளங்க –

ஐய இத்யாதி -ஐயனே என் பொருட்டாக ஒருகால் செங்கீரை ஆடி அருள வேணும் –
ஆயர்கள் இத்யாதி -ஆயர்களுக்கு என்னுடையவன் என்னும்படி -பவ்யனாய் –
அத்தாலே உத்தோன்முகமான ரிஷபம் போலே செருக்கி இருக்கிறவனே -ஆடி அருள வேணும் -ஆடி அருள வேணும் –

—————————————————————-

கோளரி அரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம்
குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்
மீள அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி
மேலை அமரர் பதி மிக்கு வெகுண்டு வர
காள நல் மேகமவை கல்லோடு கார் பொழிய
கருதி வரை குடையாக காலிகள் காப்பவனே
ஆள எனக்கு ஒருகால்  ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே –1-5-2-

மெய்மை கொள-சத்தியவாதி என்று நினைக்கும் படியாகவும் –
ஆள -இப்படி ரஷித்த ஆண் பிள்ளை தனம் உடையவனே –
தேவர்கள் கொடுத்த வரத்துக்கு விரோதம் அற-அவனை நிரசிகைக்காக மிடுக்கை
உடைத்தான நரசிம்ஹ வேஷத்தை பரிகரித்து கொண்டு –
பாபிஷ்டனான ஹிரண்யாசுரனுடைய-வர பல புஜ பலங்களால் உண்டான செருக்காலே –
மிடியற வளர்ந்த சரீரம் ஆனது ரத்தம் குழம்பிக் கிளரும்படியாகவும் –
சர்வத்ஸ்ர அஸ்தி -என்று சொன்ன வார்த்தையை பொய் என்று –
இங்கு இல்லை என்று தான் -அளந்திட்ட தூணை தட்டின அவன் –
மனசு புரிந்து – ஸ்வ புத்ரனானவனை -சத்தியவாதி -என்று கொள்ளும்படியாகவும் -திரு உள்ளம் பற்றி –
ஆயுதம் எடுக்க ஒண்ணாதது கொண்டு -முழு கூர்மையான திரு உகிர்களாலே –
ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிக் குடைந்தவனே  –
மீள என்ற இது -இல்லை -என்ற மனசு புரிந்தபடி –
மெய்ம்மை கொள என்ற இது -மெய்ம்மையை உடையவனாக நினைக்க என்றபடி –

மேலை இத்யாதி -ஐஸ்வர்யத்தாலும் -ஆயுஸ்ஸாலும் இவ் அருகில் உள்ளாரில் காட்டிலும் –
மேலாய் இருக்கிற தேவர்களுக்கு எல்லாம் அதிபதியான இந்த்ரன் –
எனக்கு இட்ட சோற்றை உண்டவனார் -என்று பசியாலே மிகவும் கோபித்து வர –
கடலை வற்றும் படி பருகையாலே கறுத்து-
ஸ்வாமி சொன்ன கார்யம் செய்கையாகிற நன்மையை உடைய மேகங்கள் ஆனவை -பெரும் காற்றோடு கல் வர்ஷமாக வர்ஷிக்க –
அன்றிக்கே –
கார் -என்ற பாடமான போது-கல்லோடு கூட வர்ஷத்தை சொரிய என்று பொருளாக கடவது –

கருதி -இத்யாதி -இம்மலையே உங்களுக்கு ரஷகம் -இச் சோற்றை இதுக்கு இடும் கோள் என்று
அடியில் அருளி செய்ததை நினைத்து அம் மலை தன்னையே குடையாக கொண்டு பசுக்களை ரஷித்தவனே –
இடையரும் இடைச்சிகளையும் ரஷித்த -என்னாதே-காலிகள் காப்பவனே -என்றது –
ரஷ்ய வர்க்கத்தில் பிரதானம் இவை என்று தோற்றுகைகாக-பண்ணின உபகாரம் அறிவதும் இவை இறே-

ஆள -இப்படி ரஷித்த ஆண்மையை உடையவனே என்னுதல்-
என்னுடைய அபேஷிதம் செய்து -என்னை ஆளும்படியாக என்னுதல் –
எனக்காக ஒருகால் செங்கீரை ஆடி அருள வேணும் –

——————————-

நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே
நாபி உள் கமலம் நான்முகனுக்கு
ஒருகால் தம்மனை ஆனவனே
தரணி தலம் முழுதும் தாரைகையின் உலகும் தடவி
அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே
வேழமும் யேழ் விடையும் விரவிய
வேலை அதனுள் வென்று வருமவனே
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே -1-5-3-

எங்களுக்கு நிர்வாகன் ஆனவனே-நாலு வகைப் பட்ட வேதங்களுக்கும் பிரதான பிரதிபாத்யன் ஆனவனே –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்யே-என்றான் இறே-
திரு நாபியிலே உத்பன்னமாய் -விலஷனமாய்-இருந்துள்ள தாமரையை பிறப்பிடமாக உடைய
சதுர் முகனுக்கு ஒரு காலத்திலேயே தாய் போலே பரிவன் ஆனவனே -தம்மனை -தாய் –

மது கைடபர்கள் கையிலே வேதத்தை பறி கொடுத்து –
வேதாமே பரமஞ்ச சஷூர் வேதாமே பரமம் தனம் -என்று அவன் கண் இழந்தேன் தனம் இழந்தேன் –
என்று கிலேசப்பட -அவற்றை மீட்டு கொடுத்து ரஷித்த படியாலே -ஒருகால் தம்மனை யானவனே -என்கிறது –
பூதலம் அடங்கலும் நஷத்திர லோகமும் நிலா தென்றல் போலே திரு வடிகளால் ஸ்பர்சித்து-
அதுக்கு புறம்புள்ள தேசம் எங்கும் ஒக்க பரி பூரணனாம் படி வளர்ந்தவனே –
இத்தால் ஆஸ்ரிதனான இந்த்ரன் உடைய அபேஷித சம்விதானம் தலைக் கட்டுகைகாக செய்த வியாபாரம் சொல்லிற்று –

குவலயா பீடமும் -சப்த ரிஷபங்களும் நலிவதாக உன்னோடு வந்து கலசின அளவிலே அவற்றை ஜெயித்து வருபவனே –
வேழத்தையும் ரிஷபத்தையும் ஜெயித்தது -பின்ன காலத்திலேயே யாய் இருக்க செய்தேயும் –
ஏக காலத்திலேயே போலே அருளி செய்தது -விரோதி நிரசனத்தில் த்வ்ரையாலே
இத்தால் ஸ்ரீ மதுரையில் பெண்களுக்கும் நப்பின்னை பிராட்டிக்கும் ப்ரியகரமாம்படியாக
செய்த வியாபாரங்கள் சொல்லப்பட்டன –
அம்மா -சுவாமி

———————————-

வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள
வஞ்ச முலை பேயின் நெஞ்சம் நெஞ்சமது உண்டவனே
கானக வல் விளவின் காய் யுதிரக் கருதி
கன்றது கொண்டு எறியும் கரு நிற என்  கன்றே –
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகம்
என்பவர் தாம் மடிய செரு வதிரச் செல்லும்
ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே! ஆடுக ஆடுகவே – 1-5 4-

பூபார நிரசன அர்த்தமாக அர்த்தித்து அவதரிப்பித்த தேவர்கள் -பருவம் நிரம்புவதற்கு
முன்னே தொடங்கி-ஆசூர பிரகர்திகளை நிரசிக்கிறபடியை கண்டு ப்ரீதராம் படியாக –
ஆசூர விஷ்டமாய் கொண்டு -கண் வளருகிற இடத்திலே -நலிய வந்த பிரபலமான
சகடத்தை -முலை வரவு தாழ்த்து சீறி நிமிர்த்த திருவடிகளால் -கட்டழிந்து சிதறி உருளப் பண்ணி –
பெற்ற தாய் போல் வஞ்சித்து வந்த பேய்ச்சி உடைய முலையில் -அந்த கொடிதான நஞ்சை -பிராண சஹிதமாக உண்டவனே –
நஞ்சமுது  உண்டவனே -என்ற பாடம் ஆன போது -நஞ்சை அமுதமாக உண்டவன் என்று -பொருளாக கடவது –
ஸ்தந்யம் தத் விஷ சம்மிச்ரம் ரச்யமாசீ ஜகத்குரோ -என்னக் கடவது இறே –

காட்டில் கன்றுகள் மேய்க்க போன இடத்தில் -விளாவான வடிவை கொண்டும் -கன்றான வடிவைக் கொண்டும் –
சில அசுரர்கள் தன்னை நலிவதாக வந்து நிற்க -அவற்றிலே ஒன்றை இட்டு ஒன்றை எறிந்து-
இரண்டையும் முடிந்தபடியை -சொல்லுகிறது –
காட்டிலே நிற்கிற வலிய விளாவினுடைய காய்களானவை உதிரும்படியாக  கருதி -கன்றான அத்தை கொண்டு எறிந்து –
கருத்த நிறத்தை உடைய -என்னுடைய கன்றாய் நின்றவனே –
இத்தால் விரோதி நிரசனம் பண்ணுகையாலே புகர் பெற்ற படியும் –
எல்லாத் தசையிலும் -ஆஸ்ரிதருக்கு பவ்யனாய் இருக்கும் படியும் சொல்லுகிறது –
என் கன்றே -என்றது -உகப்பின் கார்யமான அக்றிணை சொல்லு –
தேனுகனான அசுரனும் -முராசுனனும்-திண்ணினதான திறல  உடையவனாய் -அதி க்ரூரனாய் இருக்கிற -நரகாசுரனும் -என்று
சொல்லப் படுகிறவர்கள்-தாங்களடைய  நசித்து போம்படியாக யுத்தத்திலே முடிகி சென்ற
ஆனையானவனே -ஆனை போல் என்னாதே ஆனை -என்றது முற்று உவமை-

———————————————————-

மத்தளவும் தயிரும் வார் குழல் நல மடவார்
வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு
ஒத்த இணை மருதம்ம முன்னிய வந்தவரை
யூறு கரத்தினோடு  முந்திய  வெம் திறலோய்
முத்து இன் இள முறுவல் முற்ற வருவதன் முன்
முன்னம் முகத்து அணியார் மொய் குழல்கள் அலைய
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே -1 -5 5-

யூறு கரத்தினோடு-துடைகளாலும் கைகளாலும்-மத்தாலே அளாவிக் கடைகைக்கு யோக்யமான தயிரும் –
முன்பு கடைந்த வெண்ணெய் உருக்கின நெய்யும் –
திரு முத்துக்கள் தோன்றும்படி இனிதான மந்த ஸ்மிதமானது பூரணமாக வருவதற்கு
முன்னே -முன் முகத்திலே அழகு மிக்க செறிந்து உள்ள திரு குழல்கள் ஆனவை –
வந்து உன் பவள வாய் மொய்ப்ப -என்கிறபடியாக திரு பவளத்தை மறைக்கும் படியாக தாழ்ந்து அலையும் படியாக-

—————————————————–

மொய் செறிவுகாயா மலர் நிறவா! கரு முகில் போல் உருவா!
கானகம் மா மடுவில் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா!
துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே!
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய்
ஆய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – 1-5 -6-

ஆயம் அறிந்து -மல்ல யுத்தம்  செய்யும் வகை அறிந்து
அந்தரம் இன்றி -உனக்கு ஒரு அபாயமும் இல்லாதபடி
ஆடிய -இன்னும் வருவார் உண்டோ -என்று கம்பீரமாய் சஞ்சரித்த
நெய்ப்பாலும் நைல்யத்தாலும் காயம் பூ போல் இருக்கிற நிறத்தை உடையவனே –
இருட்சியாலும் குளிர்ச்சியாலும் காள மேகம் போலே வடிவை உடையவனே
காட்டிடத்திலே பெரிய மடுவினுள்ளே கிடந்த காளியனை அலைத்து கிளப்பி –
குரோதத்தாலே விஸ்தாரமான அவன் சிரச்சிலே ச லஷணம் ஆகையாலே –
அழகியதாய் இருந்துள்ள நர்த்தநத்தை நெருங்க செய்த அழகை உடைய -என் பிள்ளை யானவனே –
பெரிய உயர்த்தியை உடைத்தாய் -மத முதிதமான குவலயா பீடத்தினுடைய கொம்புகளை -அநாயாசேன பிடுங்கினவனே-

——————————-

துப்புடை யாயர்கள் தம் சொல் வழுவா தொருகால்
தூய கரும் குழல் நல்  தோகை மயிலனைய
நப்பினை தன் திறமா நல் விடை யேழ் அவிய
நல்ல திறல் உடைய நாதனும் அவனே
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத்
தனி யொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே -1 5-7 –

துப்பு -மிடுக்கு -இத்தால் ஏறு தழுவ வல்ல சாமர்த்தியத்தை சொல்லுதல் –
அன்றிக்கே –
ரிஷபங்களின் வன்மையும் இவன் மென்மையும் பாராதே -இவற்றை தழுவ வேணும் என்ற நெஞ்சு உரமாதல் –
இப்படி இருந்துள்ள இடையர்கள் தங்களுடைய வசனத்தை தப்பாதே ஒரு கால விசேஷத்திலே –
அழகியதாய் கறுத்து இருந்துள்ள குழலை உடையவளாய் -அத்தாலே நன்றாக தோகை மயில் போல் இருக்கிற
சாயலை உடைய நப்பின்னை பிராட்டி ஹேதுவாக –
இவளோடு சேரலாம் ஆகில் யார் சொல்லிற்று செய்தாலும் நல்லது -என்று இறே

ஆயர்கள் தம் சொல்  வழுவாமல் ஒழிந்தது -கொடிதான ரிஷபங்கள் ஏழும் விளக்குப் பிணம் போலே அவியும் படி யாக –
நன்றாக மிடுக்கை உடையவனாய் -அத்தாலே இடையரும் -எங்கள் குல நாதன் -என்று கொண்டாடும்படி –
அவர்களுக்கு நாதனும் ஆனவனே -நல் விடை -என்றது -நல்ல பாம்பு என்னுமா போலே அதனுடைய க்ரௌர்யத்தை பற்ற  –

பிரவசம் அநந்தரம் மாதாவானாவள் காண்பதற்கு முன்னே கை தப்பிப் போன
வைதிக புத்ரர்களை -தன்னுடை சோதி -என்கிறபடியே தனக்கு அசாதாரணமாய் நிரவதிக
தேஜோ ரூபமான பரம பதத்தில் செல்லும்படியாக -தனியே அத்விதீயமான தேரை நடத்தி –
அத்தை பிரகிருதி மண்டலத்தில் அளவிலே நிறுத்தி -தானே அருகு சென்று புக்கு -அங்கு நின்றும் கொடு போந்து –
மாதாவானவள் -என் பிள்ளைகள் -என்று உச்சி மோந்து எடுக்கும்படி அவளோடு கூட்டினவனாய் –
ஆஸ்ரிதர் கார்யம் செய்து அவ்வழியாலும் எனக்கு உபகாரன் ஆனவனே

——————————————–

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றி வரப் பெற்ற வெனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய்  வெள்ளறையாய் மதிள் சூழ்
சோலை மலைக்கு அரசே கண்ண புரத்தமுதே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே -1 5-8 –

மன்னு -பிரளயத்திலும் அழியாத
தமில் -தம் இல் -தங்கள் அகங்களிலே
கற்றவர் -நாலு சொல் தொடுக்க கற்றவர்கள்
தெற்றி வர -பிள்ளை கவிகள் தொடுத்து வர
உன்னையும் -மனோஹாரியான உன்னையும்
சௌந்தர்யாதிகளாலே திருஷ்டி சித்த அபஹாரியான உன்னையும் மருங்கிலே எடுத்து கொண்டு –
தங்கள் கிருஹங்களிலே சேர்ந்து -இது என்ன அருமை தான் -இவன் மருங்கிலே இருக்க
இவர்கள் தங்கள் க்ரஹங்கள் அறிந்து -போனபடி என் என்ற கருத்து –

ஈதர்சனான உன்னொடு -தங்கள் நினைவுக்கு தக்கபடி பரிமாறி -மீளவும் கொண்டு வாரா நிற்கும்
பாலைகள் ஆனவர்களும் -இச் சேஷ்டிதத்தை கண்டு உகக்கும் படியாக –
இத்தால் தனி இடத்திலே யவ்வன அவஸ்தனாய் தங்களோடே பரிமாறும் அவன் –
மாதர் சன்னதியில் இப்படி சைசா அவஸ்தனாய் செய்கிற சேஷ்டிதம் கண்டால் அவர்கள் உகப்பார்கள் என்று கருத்து –

ஆரேனுமாக இச் சேஷ்டிதங்களை காண்பவர்கள் கண்கள் இள நீர் குழம்பு இட்டாப் போலே குளிரும்படியாக –
நாலு சப்தம் தொடுக்க கற்றவர்கள் உன்னிடைய பால சேஷ்டித ரசத்தை கண்டு -பிள்ளைக்
கவிகள் தொடுத்து வர -உன்னைப் பிள்ளையாக பெற்ற எனக்கு பிரசாதத்தை பண்ணி –
இது மேலே அன்வயிக்க கடவது –

அவ்வளவு இன்றிக்கே
திரு வெள்ளறையிலும் நித்ய வாசம் பண்ணுகிறவனே-
அரணாக போரும்படியான மதிளாலே சூழப் பட்ட திருமலைக்கு ராஜாவாக கொண்டு ஈரரசு தவிர்த்து நின்றவனே –
சர்வஜன போக்யமாம்படி திருக் கண்ண புரத்திலே நிற்கிற அமிர்தமே –
என்னுடைய அவத்யத்தை போக்குமவனே -அதாவது -எனக்கு பவ்யனாக நான் சொன்னபடி செய்கையாலே
நீ அநியாம்யனான போது நான் படும் கிலேசத்தை போக்குமவனே -என்கை

இப்படி இருக்கிற நீ செங்கீரை ஆடி அருள வேணும் –
சமஸ்த லோகங்களுக்கும் ஸ்வாமி யானவனே -ஆடி அருள வேணும் என்கை –
மன்னு குறும் குடியாய் -என்று தொடங்கி-என் அவலம் களைவாய் -என்று சம்போதித்து-
உன்னையும் ஒக்கலையில் -என்று தொடங்கி -பெற்ற எனக்கு அருளி -ஆடுக செங்கீரை -என்று அந்வயம்-

—————————————————

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு செண்பகமும்
பங்கய நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளி முளைப்  போல் சில பல் லிலக
நீல நிறத் தழகார் ஐம் படையின் நடுவே
நின் கனி வாயமுதமும் இற்று முறிந்து விழ
ஏலு மறைப் பொருளே ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே -1-5-9-

பாலொடு கூட நெய்யும் தயிருமாகிய கவ்யங்களை பலகாலும் அமுது செய்கையாலும் –
திருமேனியிலே அழகிய சாந்தும் செண்பகம் முதலானவற்றை பலகாலும் சாத்துகையாலும் –
திருமேனி அசைகையாலே அவையும் ஹர்ஷத்தாலே –
கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ- என்னும்படியான திருப் பவளம் விகசிக்கையாலே-
பங்கஜமும் நல்ல கற்பூரமும் ஆகிற அவையும் தன்னிலே கலந்து -கந்தித்துவர –
தர்சநீயமாய் -பரிமளிதமான பவளம் போல் அழகியதாய் -சிவந்து இருக்கிற திரு அவதரத்தினுள்ளே –
இளையதான வெள்ளி அரும்பு போலே சில முத்துகள் விளங்க –
நீலமான திருமேனி நிறத்துக்கு -பரபாகத்தாலே அழகு மிக்கு இருக்கிற ஸ்ரீ பஞ்ச ஆயுதத்தின்
நடுவே -உன்னுடைய பக்வ பலம் போலே இருக்கிற திருப் பவளத்தில் ஊருகிற அமிர்த ஜலம் ஆனது இற்று இற்று விழ –
தகுதியான வேதார்த்தமானவனே-வேதைஸ் சர்வை ரஹமேவ வேத்யே -என்கிறபடியே
வேதத்துக்கு அநு ரூபமான அர்த்தம் அவன் இறே-

———————————————————

செங்கமலக் கழலில் சிற்று இதழ் போல் விரலில்
சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அறையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின்
பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – 1-5 10- –

சிவந்த கமலம் போலே இருக்கிற திருவடிகளில் -அதில் உள் இதழ் போல் இருக்கிற
சிறுகி இருக்கிற திரு விரல்களிலே -சகஜம் என்னும்படி சேர்ந்து  விளங்கா  நின்ற –
திரு ஆழி மோதிரங்களும் -திருவரையில் கிண் கிணியும் –
அன்றிக்கே –
கிண் கினி என்கிற இத்தை கீழோடு சேர்த்து பாதச் சதங்கையாக சொல்லவுமாம்-
சேவடிக் கிண் கினி என்னக் கடவது இறே

திருவரையில் சர்வ காலமும் சாத்தி இருக்கிரும் பொன்னரை நாணும் உடையார்
கன மணி யோடு ஒண் மாதளம்பூ -என்கிறபடியே
தாளை உடைத்தாய் – நன்றான மாதளம் பூவோடே நடு நடுவே கலந்து கோத்த பொன் மணிக் கோவையும் –
திருக்கையில் திரு விரலில் சாத்தின மோதிரங்களும்
மணிக் கட்டில் சாத்தின சிறுப் பவள வடமும் –
திரு மார்பில் சாத்தின மங்கள அவஹமான ஸ்ரீ பஞ்சாயுதமும் –
அதுக்கு பரபாகமாக கொண்டு இரண்டு அருகும் விளங்கா நின்றுள்ள திருத் தோள் வளைகளும்
திருக் காது பணிகளும் -திரு மகரக் குழைகளும்-திருச் செவி மடல் மேல் சாத்தின வாளிகளும் –
திருக் குழலில் சாத்தி திரு நெற்றிக்கு அலங்காரமாக -நாலும் = தொங்குகின்ற -சுட்டியும் –
இரண்டு அருகும் அசைந்து ஆடுகையாலே எல்லாம் சேர ஒளி விட என்னுதல்
திரு மேனிக்கு தகுதியாக பிரகாசிக்க என்னுதல் –
எங்களுடைய குலத்துக்கு ராஜாவானவனே

———————————————————

அவதாரிகை –
நிகமத்தில் -இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

அன்னமும் மீன் உருவுமாய் ஆளரியும் குறளும்
அமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் யசோதை உகந்த பரிசு
ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில்
எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே -1 5-11 –

உகந்த பரிசு -உகந்து சொன்ன பிரகாரத்தை –
வேத பிரதமான ஹம்சமும் -பிரளய ஆபத்சகமான மத்ஸ்யமும்-
ஹிரண்ய நிரசன அர்த்தமான நரசிம்ஹமும் –
இந்திர அபேஷித சம்விதானம் பண்ணும் வாமனனும்
மந்திர ஆதாரமான கூர்மமும் ஆனவனே –
இத்தால் -ஆஸ்ரித சம்ரஷித அர்த்தமாக -அசாதாரண திவ்ய விக்ரகத்தை
அழிய மாறிக் கொண்டு -அவ்வவ தச குண அநு குணமாக -ரஷிக்கும் அவன் என்கை-

ஆயர்கள் நாயகனே -அவை எல்லாம் போல் அன்றிக்கே -பூ பார நிர்ஹரணார்த்தமாக-
அவதரித்து இடையருக்கு தலைவன் ஆனவனே –
எண் அவலம் களைவாய் -எல்லாத் தசையிலும் -உனக்கு என் வருகிறதோ –
என்று வயிறு எரியா நிற்கும் என்னுடைய கிலேசத்தை உன்னை நோக்கித் தருகையாலே போக்கினவனே-
அன்னம் போல் நடை அழகையும் பவ்யதையும் உடைய வளான யசோதை பிராட்டி
உகந்து சொன்ன பிரகாரத்தை -ப்ராஹ்மண உத்தமராய் வைத்து கோப ஜென்மத்தை
ஆஸ்தானம் பண்ணி -அவள் தத் காலத்திலேயே அனுபவித்தால் போலே
பிற் காலத்திலும் அனுபவிக்கையாலே -அவளில் காட்டிலும் ஸம்ருத்தமான புகழை உடையராய் –
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாகரான ஸ்ரீ ஆழ்வார் அருளி செய்த -திராவிட ரூபமாய் –
இனியதான இசையோடு கூடி இருந்துள்ள -தொடைகளான இப்பத்தையும் -அப்யசிக்க வல்லவர்கள் –
இந்தலோகத்தில் இருக்க செய்தே எட்டு திக்கிலும் அடங்காத பெரிய புகழை உடையராய் –
அவர்களுக்கு நிலம் அல்லாத பகவத் அனுபவ பரம சுகத்தை ப்ராபிக்க பெறுவார்கள் –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: