ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-4–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

(மதி -ஞானம்
ஞானவான்-இவர்களைக் கூப்பிட்ட வாறு –
-ஆச்சார்யர் மூலமே ஞானம் பெற வேணுமே –
தாய் சந்த்ரனைக் காட்ட குழந்தை பார்க்குமா போல் -)

அவதாரிகை –
கீழில் திரு மொழியில் -யசோதை பிராட்டி அவனுடைய சைசவ அனுகுணமாக –
அழுகையை மாற்றி -கண் வளர பண்ணுகைகாக சீராட்டிக் கொண்டு தாலாட்டின -பிரகாரத்தை –
தத் பாவ யுக்தராய் கொண்டு -தாமும் அப்படி அருளி செய்தார் –

இனிமேல்
தொட்டில் பருவம் போய் -தவழ்ந்து விளையாடத் தக்க பருவமான பின்பு அவன் –
நீணிலா முற்றத்தே போந்து –
தவழ்ந்து புழுதி அளைவது –
சந்த்ரனை அழைப்பதான -பிரகாரத்தை -அவள் அனுபவித்து –
அவனுக்கு உகப்பாக சந்த்ரனை வரச் சொல்லி தான் பல காலும் அழைத்த பிரகாரத்தை
தாமும் அனுபவ பூர்வகமாக பேசி இனியர் ஆகிறார் –

பரம பதத்தில் -அவாக்யன் அநாதர-(சர்வம் இதம் அப்யாப்த்யா -சாந்தோக்யம் )-என்கிறபடியே
பெரு மதிப்பனாய்
ஒரு வார்த்தை சொல்லக் கடவன் அன்றிக்கே -தன்னோடு ஒக்க முகம் பார்த்து
வார்த்தை சொல்லுகைக்கு ஒரு தத்வாந்தரம் இல்லாமையாலே -அநாதாரித்து இருக்கும் அவன் –
லீலா விபூதியில் -சம்சாரி சம் ரஷண அர்த்தமாக -தன் இச்சையாலே –
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து -அவதாரத்தின் மெய்ப்பாடு தோற்ற –
சைசவவாத்ய அவஸ்தைகளை அடைந்து –
தத்தத் அவஸ்த அனு குணமாக செய்த சேஷ்டிதாதிகளை அனுசந்தித்தால் –
மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-அவன் மேன்மையையும் -நீர்மையையும் -தெளிய கண்டவர்கள்-
அதிலே வித்தராய் -அனுபவிக்க சொல்ல வேண்டா விறே-

மற்று உள்ள ஆழ்வார்களையும் போல அன்றிக்கே -இவ் அவதார விசேஷத்தில் –
அதி பிரேம அதிசயத்தாலே -கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி –
இவ் அவதார ரசம் எல்லாம் அனுபவிப்பதாக இழிந்த இவர் –
அவனுடைய பால சேஷ்டிதங்களில் ஒன்றும் நழுவ விடார் இறே-

ஆகையாலே –
அவன் புழுதி அளைவது –
சந்தரனை அழைப்பது -ஆகிய
சேஷ்டிதங்களை-தத் காலத்தில்  யசோதை பிராட்டி அனுபவித்தாப் போலே
தாமும் அனுபவித்து பேசுகிறார் –

———————————————-

தன் முகத்து சுட்டித் தூங்கத்  தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முக கிண் கிணி யார்ப்பப் புழுதி அளைகின்றான்
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி
நின் முகம் கண் உளவாகில் இனி இங்கே நோக்கிப்  போ -1-4-1-

பதவுரை

இள–இளமை தங்கிய
மா மதி–அழகிய சந்திரனே!
தன் முகத்து–தன் முகத்தில் (விளங்குகிற)
சுட்டி–சுட்டியானது
தூங்க தூங்க–பல காலும் தாழ்ந்து அசையவும்
பொன் முகம்–அழகிய முகத்தை யுடைய
கிண் கிணி–சதங்கைகளானவை
ஆர்ப்ப–கிண் கிண் என்றொலிக்கவும்
தவழ்ந்து போய்–(முற்றத்தில்) தவழ்ந்து போய்
புழுதி–தெருப் புழுதி மண்ணை
அளைகின்றான்–அளையா நிற்பவனும்
என் மகன்–எனக்குப் பிள்ளையுமான
கோவிந்தன்–கண்ண பிரானுடைய
கூத்தினை–சேஷ்டைகளை
நின் முகம்–உன் முகத்தில்
கண் உள ஆகில்–கண் உண்டேயானால்
நீ இங்கே நோக்கி போ–நீ இங்கே பார்த்துப் போ.

தூங்க தூங்க -பல காலும் அசையும் படியாகவும் –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்  படியான தன் திரு முகத்திலே
அழகுக்கு உடலாக -நாலும் படி =தொங்கும் படி -கட்டின சுட்டி யானது –
தவழுகைகாக-திருமுடியை நாற்றுகையாலே பல காலும் அசையும் படியாகவும் –
திருவரையில் சாத்திக் கிடக்கிற அழகிய முகத்தை உடைத்தான கிண் கிணி யானது-த்வநிக்கும் படியாகவும் –
தவழ்ந்து போய் -புழுதி அழையா நின்றான் –

பொன் முக கிண் கிணி என்றது –
சேவடிக் கிணி கிணி யாகிற பாத சதங்கை யாகவுமாம் –
அது இறே தவழும் போது மிகவும் சப்திப்பது –

என் மகன் இத்யாதி –
என்னுடைய பிள்ளையான கோவிந்தனுடைய-மநோ ஹாரி சேஷ்டிதத்தை –

இள மா மதி –
இத்தை கொண்டு கால் தாழ்ந்து நிற்க வேண்டி இருக்க –
அது செய்யாதே போகிற
அதி முக்தனான சந்த்ரனே

இள மா மதி என்றது –
இளைமையால் மிக்க மதி என்ற படி –

நின் முகம் இத்யாதி –
உன்னுடைய முகத்தில் கண் உண்டாமாகில் –
கண் படைத்த பிரயோஜனம் பெறும் படி நீ இங்கே பார்த்து போ

——————————————

என் சிறுக் குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி அழைகின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடலாட யுறுதியேல்
மஞ்சின் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா -1-4-2-

பதவுரை

மா மதீ !
எனக்கு–(தாயாகிய) எனக்கு
ஓர் இன் அமுது–விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய்
எம்பிரான்–எனக்கு உபகாரகனான
என் சிறுக் குட்டன்–என் மகனான கண்ணன்
தன் சிறு கைகளால்–தன்னுடைய சிறிய கைகளால்
காட்டிக் காட்டி–பலகாலும் (உன்னையே) காட்டி
அழைக்கின்றான்–அழையா நின்றான்;
அஞ்சனம் வண்ணனோடு–மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு
ஆடல் ஆட–விளையாட
உறுதியேல்–கருதினாயாகில்
மஞ்சில்–மேகத்திலே
மறையாது–சொருகி மறையாமல்
மகிழ்ந்து ஓடி வா–உகந்து ஓடி வா.(நீல தோயதா மத்யஸ்தா)

ஓர் -அத்வீதியமாய்
மா -வடிவாலும் குளிர்த்தியாலும் உயர்ந்த –
என்னுடைய சிறுப் பிள்ளை –
பருவத்தாலும் சேஷ்டிதத்தாலும் அத்வீதியமாய் இனிதான அமிர்தம் போலே
எனக்கு ரசாவஹன் ஆனவன்

(எனக்கு அமுது
எனக்கு ஓர் அமுது
எனக்கு இன்னமுது )

எம்பிரான் –
எனக்கு புத்ரனாய் வந்து அவதரித்தும் —
தன் சேஷ்டிதங்கள் எல்லாம் அனுபவித்தும் –
இப்படியே
எல்லா படியாலும் எனக்கு உபகாரன் ஆனவன் –

தன் இத்யாதி –
தனக்கு தகுதியான  திருக் கைகளால் பலகாலும் உன்னை அழையா நின்றான் –

அஞ்சனம் இத்யாதி –
கண்டவர்கள் கண் குளிரும்படி அஞ்சனம் போல் இருக்கிற திரு நிறத்தை
உடையவனான இவனோடு விளையாடலாட  வேண்டுதியேல்

மஞ்சில் இத்யாதி –
மேகத்திலே சொருகி மறையாதே –
வடிவாலும் குளிர்த்தியாலும் – ஸ்லாக்யனான சந்த்ரனே –
நம்மை அழைக்க பெற்றோமே என்று உகந்து
ஆதரம் தோற்ற கடு நடை இட்டு வா-

————————————-

(சந்த்ர வம்சம் -கண்ணன் -ஆனாலும் முகம் நேர் ஒவ்வாய்
திருமுக மண்டலத்துக்கு பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்; )

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி  பரந்து எங்கும்-
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கடம் வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -1 4-3 –

பதவுரை

அம்புலி–சந்த்ரனே! (உன்னுடைய)
ஒளி–ஒளி பொருந்திய
வட்டம்–மண்டலமானது (எப்போதும்)
சுற்றும் சூழ்ந்து–நாற்புறமும் சுழன்று
எங்கும்–எல்லாத் திசைகளிலும்
சோதி பரந்து–ஒளி நிரம்பி யிருக்குமாறு
எத்தனை செய்யிலும்–இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
என் மகன்–என் மகனான கண்ண பிரானுடைய
முகம்–திருமுக மண்டலத்துக்கு
நேர் ஒவ்வாய்–பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்;
வித்தகன்–ஆச்சர்யப் படத் தக்கவனாய்
வேங்கடம்–திருவேங்கடமலையிலே
வாணன்–நின்றாக வாழுமவனான இக் கண்ண பிரான்
உன்னை விளிக்கின்ற–உன்னை அழைக்கிற
கை தலம்–திருக் கைத் தலத்தில்
நோவாமே–நோவு மிகாத படி
கடிது ஓடி வா–சீக்கிரமாய் ஓடிவா.

சுற்றும் இத்யாதி –
ஒளியை உடைத்தான மண்டலமானது அஷயமாய்க் கொண்டு -சுற்றும் சுழன்று –
அகளங்கமாயக்  கொண்டு -எங்கும் தேஜஸ்சாலே  வ்யாப்தமாய் எல்லாம் செய்தாலும் –
(இல் பொருள் உவமை -பூரணமான சந்திரன் -அழுக்கும் இல்லாமல் -)

என் மகன் இத்யாதி –
என் மகனுடைய ஸூ வ்ருதமாய்
ஜ்யோதிர் மகமான முகத்துக்கு 
ஸ்வயா-சர்வதா- சத்ருசம் ஆக மாட்டாய் –

வித்தகன் இத்யாதி –
அழகாலும் குண சேஷ்டிதங்களாலும் -விஸ்மயநீயனாய் –
துர்மாநிகளான- உன் போல்வாரை அநாதரித்து-
கானமும் வானரமும் ஆனவற்றை ஆதரித்து கொண்டு
திருமலையில் வர்த்திக்கிறவன்-(ஸ்ரீ வைகுண்ட விரக்தாய )
உன்னை ஆதரித்து அழைக்கிற திருக் கைத் தலம் நோவாதபடியாக
அம்புலீ -விரைந்து ஓடி வா –

வாணன்- வாழ் நன்

———————————————

சக்கரக் கையன் தடம் கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அறுதியேல்  சந்திரா சலம் செய்யாதே
மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் -1 4-4 –

பதவுரை

சந்திரா—சந்திரனே!
சக்கரம்–திருவாழி ஆழ்வானை
கையன்–திருக்கையிலணிந்த கண்ணபிரான்
ஒக்கலை மேல்–(என்) இடுப்பின்மேல்
இருந்து–இருந்து கொண்டு
தட கண்ணால்–விசாலமான கண்களாலே (கர்ணாந்தரமான -திருக்காதுகள் வரை )
மலர் விழித்து–மலரப் பார்த்து
உன்னையே–உன்னையே
சுட்டி காட்டும்–குறித்துக் காட்டுகின்றான்;
தக்கது–(உனக்குத்) தகுதியானதை
அறிதியேல்–அறிவாயாகில் (அன்றியும்)
மக்கள் பெறாத–பிள்ளை பெறாத
மலடன் அல்லையேல்–மலடன் அல்லையாகில்
சலம் செய்யாதே–கபடம் பண்ணாமல்
வா கண்டாய்–வந்து நில்கிடாய்.

தடம் -கர்ணாந்த விஸ்ராந்தமான
சலம் செய்யாதே -வெறுப்பு செய்யாதே -சலம் -கபடம் –

சக்கரக் கையன் –
கருதும் இடம் பொரும் திரு வாழியைக் கையில் உடையவன் –
இத்தால் -நீ வாராது ஒழிந்தால் -உன்னை சிஷிக்கைக்கு ஈடான பரிகாரம் உடையவன் -என்கை-

தடம் கண் இத்யாதி –
இடம் உடைத்தான திருக் கண்களாலே உன்னளவில் ப்ரீதி தோற்ற மலரப் பார்த்து –
ஒக்கலை மேல் இருந்து -என்னுடைய மருங்கிலே இருந்து –

உன்னை இத்யாதி –
வேறு ஒன்றில் கண் வையாதே -உன்னையே குறித்து காட்டா நிற்கும் காண் –

தக்கது அறுதி யேல் –
உனக்குத் தகுதியானது அறிதி யாகில் –

சந்திரா சலம் செய்யாதே –
எல்லாருக்கும் ஆஹ்லாத கரனாய் இருக்கும் நீ- இவனுக்கு வெறுப்பு செய்யாதே

மக்கள் இத்யாதி –
பிள்ளைகள் பெறாத வந்த்யன்  அல்லவாகில் வந்து கொடு -நில் கிடாய் –

——————————-

அழகிய வாயில் அமுதம் ஊறல் தெளிவு உறா
மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்
புழையில வாகாதே நின் செவி புகர் மா மதீ  -1 4-5 –

பதவுரை

புகர்–தேஜஸ்வியாய்
மா–பெருமை பொருந்தி யிரா நின்ற
மதீ–சந்திரனே!
அழகிய வாயில்–அழகிய திருப் பவளத்திலே
ஊறல்-ஊறுகின்ற ஜலமாகிய
அமுதம்–அம்ருதத்தோடே கூடி
தெளிவுறா–உருத் தெரியாததாய்
மழலை முற்றாத–மழலைத் தனத்துக்குள்ள முற்றுதலுமில்லா திருக்கிற
இளஞ் சொல்லால்–இளம் பேச்சாலே
உன்னை கூவுகின்றான்;
குழகன்–எல்லோரோடும் கலந்திருப்பவனாய்
சிரீதரன்–ச்ரிய: பதியான இக் கண்ண பிரான்
கூவக் கூவ-(இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம்
நீ போதியேல்–நீ போவாயே யானால்
நின் செவி–உன் காதுளானவை
புழை இல–துளை யில்லாதவையாக
ஆகாதே–ஆகாதோ?
(ஆகவே ஆகும்)

புகர் மா மதீ-தேஜஸையும் -பெரும் தன்மையும் உடைய -சந்த்ரனே
குழகன் -எல்லோரோடும் கலந்து இருப்பவனும்
சிரீதரன் -பிராட்டியைத்  திரு மார்விலே தரியா நின்றவனுமான இவன்
புழை இல -துளை இல்லாதவையாக
ஆகாதே -ஆகாதோ -ஆகவே ஆகும் என்று கருத்து –

அழகிய இத்யாதி –
அழகிய திருப் பவளத்திலே ஊறா நின்ற ஜலம் ஆகிற
அமிர்த்ததோடு கூடி உருத் தெரியாததாய் மழலைத் தனத்துக்கு உள்ள
முற்றுதல் தானும் இன்றிக்கே இருக்கிற இளம் சொல்லால் உன்னை அழையா நின்றான் –

குழகன் –
கொடுத்தார் கொடுத்தார் முலைகள் எல்லாம் உண்டு -எடுத்தார் எடுத்தாரோடு எல்லாம்
பொருந்தி இருக்கும் கலப்பு உடையவன்

சிரீதரன் –
கீழ் சொன்ன நீர்மைக்கு எதிர் தட்டான மேன்மையை உடையவன் –
ஸ்ரீ தரத்வம் -சர்வாதிகத்வ ஸூசகம் இறே

கூவக் கூவ நீ போதி யேல்-
ஒரு கால் போல பல காலும் அழையா நிற்க -கேளாதாரைப் போலே நீ போகுதியாகில் –

புழை இத்யாதி –
உன்னுடைய  செவி துளை இலவாகாதோ –
புழை -சூஷிரம் -உன்னுடைய ஸ்ரவண இந்திரியத்துக்கு பிரயோஜனம் இல்லை ஆகாதோ என்கை –

புகர் மா மதீ –
உன்னுடைய தேஜஸ்சுக்கும் பெருமைக்கும் போருமோ இது –

———————————

தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக் கையன்
கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப் பால் அறா கண்டாய் உறங்கா விடில்
விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா -1 4-6 –

பதவுரை

விண் தனில்–ஆகாசத்திலே
மன்னிய–பொருந்திய
மா மதீ!–பெருமை தங்கிய சந்திரனே!
தண்டொடு–‘கௌமோதகி’ என்னும் கதையையும்
சக்கரம்–திருவாழி யாழ்வானையும்
சார்ங்கம்–ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும்
ஏந்தும்–ஏந்தி யிரா நின்றுள்ள
தட–விசாலமான
கையன்–கைகளை யுடைய இக் கண்ண பிரான்
கண் துயில் கொள்ள கருதி–திருக் கண் வளர்ந்தருள நினைத்து
கொட்டாவி கொள்கின்றான்–கொட்டாவி விடாநின்றான்.
உறங்காவிடில்–(இப்போது இவன்) உறங்காதொழிந்தால்
உண்ட–அமுது செய்யப் பட்டிருக்கிற
முலைப்பால்–ஸ்தந்யமானது
அறா–ஜரிக்கமாட்டாது; ஆகையால்
விரைந்து ஓடிவா

அறா கண்டாய்-ஜரிக்க மாட்டது கிடாய் –
கௌமோதகி என்னும் கதையோடு -திரு ஆழியும் -ஸ்ரீ சார்ங்கமும்-
மற்ற இரண்டுக்கும் உப லஷணம்

ஏந்தும் தடக் கையன் –
இவற்றை பூ  ஏந்தினாப் போலே -சர்வ காலமும் தரித்து கொண்டு இருக்கும் –
இடம் உடைத்தான திருக் கைகளை உடையவன் –
இவை தான் ஆபரண கோடியிலும்-ஆயுத கோடியிலும் – ஆகி இறே இருப்பது –
இத்தால் இவ் அழகை அனுபவித்து வாழலாய் இருக்க –
இவற்றின் வீர்யத்துக்கு  இலக்காய் முடிந்து போகாதே கொள் என்கை –

கண் துயில் இத்யாதி –
கண் வளர்ந்து அருளுவதாக நினைத்து அதுக்கு ஸூசகமாக கொட்டாவி கொள்ளா நின்றான் –

உண்ட இத்யாதி –
கண் வளர்ந்து அருளாது ஒழியில்-அமுது செய்த முலைப் பால் ஜரியாது கிடாய் –
ஆன பின்பு விண்டனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா –
உச்சஸ் ஸ்தலத்திலே வர்த்தியா நிற்ப்பானாய்-வடிவில் பெருமை உடையனாய் இருக்கிற
சந்த்ரனே -உன்னுடைய உயர்த்திக்கும் பக்வதைக்கும் ஈடாக -சத்வானாய் கொண்டு ஓடி வா –

————————————-

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள்-
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்து கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா -1-4 7- –

பதவுரை

மா மதீ!
பாலகன் என்று–‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று
பரிபவம் செய்யேல்–திரஸ்கரியாதே;
பண்டு ஒருநாள்–முன்பொரு காலத்திலே
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
வளர்ந்த–கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற
சிறுக்கனவன்–அந்த சிறுப்பிள்ளை யானவன்
இவன்–இவனாகிறான் காண்;
வெகுளும் ஏல்–(இவன்) சீறினானாகில்
மேல் எழப் பாய்ந்து–(உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து
பிடித்துக் கொள்ளும்–(உன்னைப்) பிடித்துக் கொள்வான்;
மாலை–இம் மஹா புருஷனை
மதியாதே–அவ மதியாமல்
மகிழ்ந்து ஓடி வா–.

வெகுளுமேல் -சீறினான் ஆகில் -வெகுட்சி -கோபம்
மாலை -இப்படி பெரியவனான விஷயத்தில்
மதியாதே -சிறியன் என்று அலஷியதை நினையாமல்
மகிழ்ந்து -இவன் நம்மை அழைக்கப் பெற்றோமே -என்னும் உகப்பை உடையனாய் கொண்டு

இவன் சிறுப் பிள்ளை அன்றோ என்று பருவத்தை பார்த்து
குறைய நினைக்கை யாகிற பரிபவத்தை பண்ணாதே கொள்

பண்டொரு இத்யாதி –
முன்பொரு காலத்திலே-ஜகத்தை அடைய -திரு வயிற்றிலே வைத்து –
ஒரு பவனான (முகிழ் விடும் துளிர் ) ஆலம் தளிரிலே -கண் வளர்ந்த
சிறுப் பிள்ளையானவன் -இவன் காண் –
அந்த அகடிதகடநா சாமர்த்தியம் எல்லாம் உடையவன் என்கை –

மேல் எழ இத்யாதி –
இவன் சீறுமாகில் மேலே எழக் குதித்து
உன்னைப் பிடித்து கொள்ளும் –

மாலை இத்யாதி –
ஆன பின்பு -இப்படி பெரியனான அவனை
(மால் -வியாமோஹம் -பெருமை -கறுமை )
சிறியன் என்று பரிச் சேதியாதே-
பெருமையை உடைய சந்த்ரனே –
உன் பெருமைக்கு ஈடாக –
இவன் நம்மை ஆதரித்து அழைக்கப் பெற்றோமே -என்னும் உகப்பு தோற்ற ஓடி வா –

——————————-

சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள்
சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –1 4-8 –

பதவுரை

நிறை மதி–பூர்ண சந்திரனே!
என் இள சிங்கத்தை–எனக்குச் சிங்கக் குருகு போன்ற கண்ண பிரானை
சிறியன் என்று–(உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து
இகழேல்–அவமதியாதே;
சிறுமையில்–(இவனுடைய) பால்யத்தில் நிடந்த
வார்த்தையை–செய்கையை
மாவலி இடை சென்று கேள்–மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்;
(இப்படி யுள்ளவன் விஷயத்தில்)
சிறுமை பிழை கொள்ளில்–சிறுமை நினைத்தலிது மஹா அபாரதம் என்று நினைத்தாயாகில்
(அப்போது) நீயும்;
உன் தேவைக்கு–(அஜன் விஷயத்தில்) நீ பண்ணக் கூடிய அடிமைக்கு
உரியை–தகுந்தவனாவாய் ;
(அதெல்லாமப்படி நிற்க;)
நெடு மால்–ஸர்வ ஸ்மாத் பரனான இவன்
விரைந்து உன்னை கூவுகின்றான்
(‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. )

சிறுமை -இப்படி உள்ளவன் விஷயத்தில் -சிறுமை நினைத்த இது
பிழை கொள்ளில் -அபராதம் என்று நினைத்தாய் ஆனால் –
உன் தேவைக்கு -அவன் விஷயத்தில் தாஸ்யத்துக்கு
உரியை காண் -தகுந்தவன் ஆவாய்
நெடுமால் -சர்வாதிகனான இவன் –

சிறியன் இத்யாதி –
பால ஸிம்ஹம் போலே செருக்கையும் வீர்யத்தையும் உடையனாய் இருக்கிற
என்னுடைய பிள்ளையை பருவத்தைப் பார்த்து –
சிறு பிள்ளை என்று அநாதரியாதே கிடாய் –

சிறுமை இத்யாதி –
இவனுடைய பால்யத்தினுடைய விசேஷத்தை –
வாமனனாய் சென்று –
தன்னை வசீகரித்து –
மூவடி -என்று இரந்து-
இரண்டு அடியாலே ஜகத்தை அடைய வளந்து –
ஓரடிக்கு தன்னை சிறையிலே வைக்கப் பட்ட மஹா பலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் –

சிறுமை இத்யாதி –
இப்படி இருக்கிறவன் விஷயத்தில் சிறுமையை நினைத்த இது –
நமக்கு அபராதம் என்று புத்தி பண்ணுவுதியாகில்-
அப்போது நீயும் அவன் திறத்தில் -அடிமைக்கு ப்ராப்தன் காண் –

நிறை இத்யாதி –
பரி பூர்ணனான சந்த்ரனே -சர்வாதிகனான அவன் –
பெரிய த்வரையோடே உன்னை அழையா நின்றான் –
ஆன பின்பு பூர்த்திக்கு ஈடாக ஓடி வா என்று கருத்து –

———————————-

தாழியில் வெண்ணெய் தடம் கை ஆர விழுங்கிய
பேழை வயிறு எம்பிரான் கண்டாய் உன்னை கூவுகின்றான்
ஆழி கொண்டு உன்னை எறியும் ஐஉற வில்லை காண்
வாழ வுறுதி யேல்  மா மதீ மகிந்து ஓடி வா -1 4-9 –

பதவுரை

மா மதீ!;
தாழியில்–தாழியிலே (சேமித்திருக்கிற)
வெண்ணெய்–வெண்ணெயை
தட–பெரிதான
கை ஆர–கை நிறைய (அள்ளி)
விழுங்கிய–அமுது செய்த
பேழை வயிறு–பெரு வயிற்றை யுடையவனான
எம்பிரான்–என் கண்ணபிரான்
உன்னை கூவுகின்றான்;
(இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாரா திருந்தால் உன் தலையை அறுக்கைக்காக)
ஆழி கொண்டு–திருவாழியாலே
உன்னை எறியும்–உன்னை வெட்டி விடுவேன்;
ஐயுறவு இல்லை–ஸம்சயமே யில்லை;
(இதில் நின்றுந் தப்பி)
வாழ உறுதியேல்–வாழக் கருதினாயாகில்
மகிழ்ந்து ஓடிவா

தடம் -விஸ்தாரமான
கையார் -கை நிறையும்  படி
பேழை-விசாலமாய் பருத்த
ஐ உற -இதில் ஒரு சம்சயம் –

தாழி இத்யாதி –
தாழியிலே  சேர்ந்து இருக்கிற வெண்ணெயை அபி நிவேச அதிசயத்தாலே
பருவத்துக்கு தக்க கை அன்றோ என்னும்படி வெண்ணெயை கண்டவாறே விஸ்த்ருதமான கை
நிறையும் படி அள்ளி அமுது செய்த –

பேழை இத்யாதி –
உள்ளுப் புக்க த்ரவ்ய கௌரவத்தாலே விசைத்து பெருத்து இருக்கிற
திரு வயிற்றை உடையனாய் –
எங்கள் குலத்துக்கு உபகாரகனாய் இருக்கிறவன் காண்
உன்னை அழையா நிற்கிறான் –

இத்தால் தன் பருவத்துக்கு ஈடாக வெண்ணெயை விழுங்கி விரும்பினாப் போலே இருப்பது
ஓன்று காண்
உன்னை அழைக்கிறதும் என்கை –

ஆழி இத்யாதி –
அவ் வெண்ணெய் தாழியை எட்டாதபடி வைக்கில் –
கல்லைக் கொண்டு எறிந்து உடைக்குமாப் போலே –
நீயும் வாராது இருக்கில் –
தலையை அறுக்கைக்காக திரு ஆழியைக் கொண்டு உன்னை எறியும் –
இதில் ஒரு சம்சயம் இல்லை காண் –

வாழ இத்யாதி –
அப்படி அவன் குரோதத்துக்கு விஷயமாய் முடிந்து போகாதே
ஜீவிக்க வேண்டி இருந்தாய் ஆகில் –
பெருமை உடைய சந்த்ரனே –
உன் பெருமைக்கு ஈடாம்படி ப்ரீதனாய் ஓடி வா

————————————————————

அவதாரிகை -நிகமத்தில் –
இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார் –

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -1-4 10-

பதவுரை

மை–மை யணிந்த
தட–விசாலமாயிரா நின்ற
கண்ணி–கண்களை யுடையளான
அசோதை–யசோதை யானளவள்
தன் மகனுக்கு–தன் மகனான கண்ணனுக்கு
ஒத்தன சொல்லி–நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி
உரைத்த–(சந்திரனை நோக்கிச்)சொன்ன
இவை மாற்றம்–இப் பாசுரத்தை
ஒளி–ஒளி பொருந்திய
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய்
வித்தகன்–(மங்களாசாஸந) ஸமர்த்தரான
விட்டு சித்தன்–பெரியாழ்வாராலே
விரித்த–விரித்து அருளிச் செய்யப்பட்ட
தமிழ்–த்ராவிட பாஷா ரூபமான
இவை–இப் பாசுரங்கள் பத்தையும்
எத்தனையும்–ஏதேனுமொரு படியாக
சொல்ல வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை–துன்பமொன்று மில்லை.

ஒத்தன -நினைவுக்கும் சொல்லுக்கும் சேர்ந்தவையான
எத்தனையும் -ஏதேனும் ஒரு படியாக

மைத் தடம் கண்ணி யசோதை-
கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை –
அஞ்சனத்தாலே அலங்க்ருதமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-

அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து –
இவன் பக்கல் ஸ்நேகத்தாலே
விகசிதமான கண்ணை உடையவள் என்னுதல் –

(மையார் கண்ணி -யமுனா நதி கறுமை -கிருஷ்ண துளஸீ கறுமை –
இவற்றுக்கும் அந்யோன்யம் இவனுக்கும் உண்டே )

தன் இத்யாதி –
தன்னுடைய புத்ரனான இவனுக்கு -நினைவுக்கும் சொல்லுக்கும் சேர்ந்தவையாய்
இருக்கிற இவற்றை சொல்லி –

(கண் துயில் –இத்யாதி
மேல் எழ
ஆழி கொண்டு எறியும் நினைவுக்கு
இளம் மொழிகளால் கூவுகின்றான் -சொல் )

மென்மையும் வன்மையும் தோன்றும்படியாக சந்த்ரனை குறித்து சொன்ன பாசுரத்தை –

ஒளி இத்யாதி –
நிலமிதி தானே ஜ்ஞானப் பிரேமங்களை விளைக்கும் தேஜஸ்சை உடைத்தான-ஸ்ரீ வில்லி புத்தூரில் –
மங்களா சாசன சமர்தரான ஸ்ரீ பெரிய ஆழ்வார் விஸ்தரித்து அருளிச் செய்ததாய் –
திராவிட ரூபமாய் இருக்கிற இவை பத்துப் பாட்டையும் -ஏதேனும் ஒரு படி
சொல்ல வல்லவர்களுக்கு துக்கம் என்பது ஒன்றும் இல்லை –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: