ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-3–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

அவதாரிகை –
கீழில் திரு மொழியிலே திருவடிகள் தொடங்கி-திரு முடி அளவு உண்டான திவ்ய அவயவங்களை
யசோதை பிராட்டி அனுபவித்த பிரகாரத்தை -தத் காலம் போலே மிகவும் விரும்பி அனுபவித்தாராய் நின்றார் –
இனி மேல் வளர் பிள்ளையை தொட்டிலே வளர்த்தி  தாலாட்டின பிரகாரத்தை –
தற் காலம் போலே விரும்பி அனுபவித்து பேசுகிறார் –

சர்வஸ் பரத் பரனாய்-அவாப்த சமஸ்த காமனாய் -சர்வ பிரகார நிர பேஷனாய் -நாராயண
சப்த வாச்யனான சர்வேஸ்வரன் –
யாதொரு இடத்திலே யாதொரு திரு மேனியோடு அவதரித்தாலும் –
அவனுடைய ஸ்திதி கமன சயநாதிகளை கண்டால் மிகவும் விரும்பி
தங்களால் ஆன அளவும் கிஞ்சித் கரித்தன்றி நிற்க ஒண்ணாது இறே-ப்ரஹ்மே சநாதிகளுக்கும்-
இத்தை -யசோதை பிராட்டி மனோ ரதித்து கண்டாளாக சொல்லி தாலாட்டின பிரகாரத்தை -தாம் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே -தத் காலம் போலே -ப்ரத்யஷமாக கொண்டு –
மிகவும் உகந்து -அவனுடைய மேன்மையையும் -நீர்மையையும் -அருளிச் செய்து தாலாட்டுகிறார் –

——————————————

அவதாரிகை -முதல் பாட்டு –
அண்டாதிபதியான ப்ரஹ்மா-இவனுடைய பருவத்துக்கு அனுகுணமாக பண்ணின
கிஞ்சித் காரத்தை சொல்லுகிறது –

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடு தந்தான்
மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ -1-3 1-

மாணிக்கம்  கட்டி -இரண்டு அருகும் மாணிக்கத்தை கட்டியும் –
ஆணிப் பொன் -மாற்று உயர்ந்த பொன்
விடு தந்தான் -அனுப்பினான்

இரண்டு அருகும் மாணிக்கத்தையும்-நடுவே வயிரத்தையும்-பகைத் தொடையாக கொண்டு –
ஒழுங்கு படக் கட்டி –
இதுக்கே மேல் மாற்று இல்லை -என்னும்படியான பொன்னாலே -சமைத்தது
ஆகையாலே -அழகியதாய் -பருவத்துக்கு தகுதியாம்படி -சிறியதாய் இருந்துள்ள தொட்டிலை –
ஆதரித்து உனக்கு ப்ரஹ்மா வர விட்டான் –
உன்னுடைய பெறுகைக்கு இரப்பிலே தழும்பு ஏறின பிரமச்சாரியாய் சென்று இரந்த
வாமன ரூபி யானவனே -தாலேலோ –
இரப்பு பெற்ற ஹர்ஷத்தாலே வளர்ந்து லோகத்தை அளந்த த்ரிவிக்ரமன் ஆனவனே தாலேலோ

————————————————–

அவதாரிகை -இரண்டாம் பாட்டு –
பிரம்மாவுக்கு அநந்தரம்-பரி கணிதனாய் -ஈஸ்வர அபிமானியான ருத்ரன்
கிஞ்சித்கரித்த படியைச் சொல்லுகிறது –

உடையார் கன மணியோடு ஒண் மாதளம் பூ
இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடும்
விடை ஏறு காபாலி ஈசன் விடு தந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ -1-3 2-

பத உரை –
உடையார் -திரு அரைக்கு பொருந்தின
கன மணியோடு -பொன் மணியோடு
இடை -நடு நடுவே
விரவி கோத்த -கலந்து கோக்கப்பட்ட
எழில் தெழ்கினோடும்-அழகிய தான இடை சரிகை யோடு கூட
ஒண் மாதளம் பூ -அழகிய மாதளம் பூ கோவையான அரை வடத்தை –
விடை ஏறு -ரிஷப வாகனனாய்
காபாலி -கபால  தாரியாய்
ஈசன் -ஸ்வ வியூகத்துக்கு  நியாமகனான ருத்ரன்
விடு தந்தான் -கொடுத்து அனுப்பினான்
உடையாய் -எல்லாவற்றையும் உடையவனே
அழேல் அழேல் -அழாதே கொள் அழாதே கொள்-

இடை சரிகை -இடையிலே சொருகிற கத்தி
திரு வரைக்கு சேர்ந்து இருப்பதான பொன் மணியோடு -நடு நடுவே கலசி கோத்த
அழகிய இடை சரிகையோடும் கூடி இருந்துள்ள அழகிய மாதளம் பூ கோவையான அரை வடத்தை –
ரிஷப வாகனனாய் -கபால நிரூபகனாய் -ஸ்வ கோஷ்டிக்கு நியந்தாவாய் -இருக்கிற ருத்ரன் வர விட்டான் –
ஒருவர் என்னது என்று வர விடாத போதும் -அவர்களோடு அவர்கள் உடைமையோடு
வாசி அற எல்லா வற்றையும் உடையவனே -அழாதே கொள் அழாதே கொள் –
திரு உலகு அளந்த வ்ருத்தாந்தத்தாலே -உன்னுடைய சர்வ ஸ்வாமித்வத்தை அடிப்படுத்தி வைத்தவனே
தாலாட்டு -நா அசைத்தல் –

—————————————————-

அவதாரிகை -மூன்றாம் பாட்டு -பிரம ருத்ரர்களை எண்ணினால் பின்பு தன்னை
எண்ணும்படியான முதன்மையை உடைய இந்திரன் கிஞ்சி கரித்த படியை சொல்லுகிறது –

என் தம்பிரானார் எழில் திரு மார்வற்கு
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடை கிண் கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரை கண்ணனே தாலேலோ -1-3 3- –

என் தம்பிரானாய்-எனக்கு ஸ்வாமி யாய்
சந்தம் அழகிய -அழகிய சந்தம் -அழகிய நிறத்தை உடைய
எழில் உடை கிண் கிணி -அழகை உடையதான கிண் கிணியை
தந்து -கொணர்ந்து சமர்ப்பித்து
உவனாய் நின்றான் -அதூர விப்ர க்ருஷ்டன் -சமீபத்திலும் தூரத்திலும் இன்றி மத்யச்தனாய் இருக்குமவன்

என் தம்பிரானார் என்கிற இது -திரு மார்பின் அழகுக்கு தோற்று சொன்ன வார்த்தை
சிகப்பாலும் விகாசாதிகளாலும் நிறம் அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளை உடையவனுக்கு –
த்ரைலோக்ய நிர்வாகனான முதன்மை உடைய இந்திரன் தானும் –
அழகை உடைத்தான கிண் கிணியை கொடு வந்து சமர்ப்பித்து –
ஸ்வ நைசயம் தோற்ற அதூர விப்ர க்ருஷ்டனாய் நின்றான் -தாலேலோ –
கிஞ்சித்  கரித்தவர்களை குளிர கடாஷிக்கும் தாமரை போன்ற திருக் கண்களை உடையவனே -தாலேலோ –

————————————————

அவதாரிகை -நாலாம் பாட்டு –
இந்திரனுக்கு கீழாய் -தனி தனி பிரதானரான
தேவர்கள் சமுதாயேன பண்ணின கிஞ்சித் காரத்தை சொல்லுகிறது –

சங்கின் வலம் புரியும் சேவடி கிண் கிணியும்
அங்கை சரி வளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கட் கரு முகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ -1-3-4-

சங்குகளில் சிறந்த வலம் புரி சங்கமும் –
செவ்விய திருவடிகளில் சாத்தத் தகுந்த சதங்கையும் –
அழகிய திருக் கைக்கு அலங்காரமான -முன் கை வளைகளும்-திரு தோள் வளைகளும் –
திரு மார்பில் சாத்த தக்க பொன் நாணும் –
அரை நாணும் –
ஆகிய இவற்றை –
சிங்கக் கன்று போன்ற பிள்ளாய் தாலேலோ –

சங்குகளில் வைத்து கொண்ட -உத்க்ர்ஷ்டமாய் -மங்கள ஆவஹமான வலம் புரியும் –
சிவந்த திருவடிகளில் சாத்த தக்க சதங்கையும் -சேவடி கிண் கிணி என்கையாலே –
கிண் கிணி என்று பாத சதங்கையை சொல்லுகிறது –
அழகிய திருக் கைக்கு ஆபரணமான முன் கை சரிகளும் -திருத் தோள் வளைகளும் –
திரு மார்புக்கு அலங்காரமாக சாத்த தக்க நாணும் -அரை வடமும் -அன்றிக்கே –
அரைத் தொடரோட்டை சேர்த்தியாலே-நாண் என்றது -அரை நாண் ஆகவுமாம்-
அழகியதான இடம்  உடைத்தான  ஸ்வர்காதி லோகங்களில் தேவர்கள் வர விட்டார்கள் –
செம் கண் இத்யாதி -ஓர் ஆபரணமும் வேண்டாதபடி தாமரை பூத்த காள மேகம் போலே
சிவந்த திருக் கண்களோடு சேர்ந்த ஸ்யாமளமான வடிவை உடையவனே -தாலேலோ –
தேவகி வயிற்றில் பிறப்பாலே -சிம்க கன்று போல் இருக்கிற செருக்கை உடையவனே -தாலேலோ –

——————————————-

அவதாரிகை -ஐந்தாம் பாட்டு –
உத்தர திக் பாலனாய் -உதாரனான வைச்ஸ்ரவணன் கிஞ்சித் கரித்த படியை சொல்லுகிறது –

எழிலார் திரு மார்வுக்கு ஏற்கும் இவை என்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்ரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூ மணி வண்ணனே தாலேலோ -1-3-5-

அழகு விஞ்சி இருந்துள்ள
பிராட்டி உறையும் திரு மார்பில் சாத்துகைக்கு
இவை பொருந்தி இருக்கும்
என்று எண்ணி
அழகியதான பஞ்சாயுதமாகிற ஆபரணத்தையும்
ஆரமும் -முத்து வடத்தையும் –
எடுத்து கொண்டு
குற்றம் அற்ற தானத்தை உடையனான வைஸ்ரவணன்
இவற்றை திரு உள்ளம் பற்ற வேண்டும் -என்று அஞ்சலி பண்ணிக் கொண்டு
உவனாய் -அதூர விப்ர க்ருஷ்டனாய்
நின்றான் தாலேலோ –
பரிசுத்தமான நீல மணி போன்ற வர்ணத்தை உடைய கண்ணனே -தாலேலோ –

வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி அழகு மிக்கு இருந்துள்ள
திரு மார்புக்கு சேரும் இவை என்று அழகியதாய் இருந்துள்ள  ஸ்ரீ பஞ்சாயுத மாகிற ஆபரணமும் –
கோல மா மணி ஆரமும் கொண்டு –
கொடுத்து கொள்ளுதல்-கொடுக்க முசித்தல் -செய்கையாகிற குற்றம் இல்லாத
கொடையை உடையவனான வைஸ்ரவணன் -அரவை அரா என்னுமா போலே –
வைஸ்ரவணன் -என்கிற இத்தை வயிச்சிரவணன் என்கிறது –
இத்தை அங்கீகரிக்க  வேணும் என்று அஞ்சலி பண்ணிக் கொண்டு –
அதூர விப்ர க்ருஷ்டனாய் நின்றான் -தாலேலோ –
ஓர் ஆபரணமும் வேண்டாதபடி பழிப்பு அற்ற நீல ரத்னம் போலே இருக்கிற வடிவை உடையவனே -தாலேலோ –

—————————————————

அவதாரிகை-ஆறாம் பாட்டு –
பச்சிம திக்பாலனாய் -சமுத்ராதிபதியான வருணன்
கிஞ்சித் கரித்த படியை சொல்கிறது –

ஓதக் கடலுள் ஒளி முத்தின் ஆரமும்
சாதிப் பவளமும் சந்தமும் சரி வளையும்
மா தக்க என்று வருணன் விடு தந்தான்
சோதிச் சுடர் முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே  தாலேலோ -1 3-6 –

ஓதம் -அலை எறியா நின்ற
மா தக்க என்று -விலையில் சிறந்ததாய் தகுதியாய் இருந்துள்ளவை -என்று
திரை கிளப்பத்தை யுடைத்தான கடலிலே உண்டாய் -ஒளியோடு கூடின முத்துக்களால் சேர்க்க பட்ட ஆரமும் –
அதுக்கு பரபாகமாம் படி -ஆக்கன் அன்றிக்கே சஜாதீயமான பவளப் படியும் –
திருக் கைக்கு தகுதியாம்படி அழகியதாய் இருந்துள்ள சரிகளும் வளைகளும் –
ஆதி ராஜ்ய சூசகமாய் -மிக்க தேஜஸ் உடைத்தான திரு அபிஷேகத்தை உடையவனே -தாலேலோ
ஆபரணங்கள் மிகையாம்படி அழகிய திரு தோள்கள் உடையவனே தாலேலோ –

————————————————–

அவதாரிகை -ஏழாம் பாட்டு –
திவ்ய மகிஷிகளில் பிரதாநையான பெரிய பிராட்டியார் வர விட்ட உபஹாரத்தை சொல்லுகிறது –

கானார் நறும் துழாய் கை செய்த கண்ணியும்
வானார் செழும் சோலை கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர் மேல் திரு மங்கை போத்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ குடைந்தை கிடந்தானே தாலேலோ -1-3-7-

கை செய்த கண்ணியும்-கைத் தொழில் தோன்ற பண்ணின மாலையையும் –
வானார் -ஆகாசம் முழுதும் நிறையும் படி
செழுமை தங்கிய சோலை செய்து நிற்கிற
கற்பகப் பூவாலே செய்த
திரு நெற்றி மாலையையும் –
கோனே -சர்வ சேஷியானவனே

கானார் இத்யாதி -தன் நிலத்தில் வளருகையாலே தழைத்து பரிமள உத்தரமாய்
இருந்துள்ள திருத் துழாயாலே கைத் தொழில் தோன்ற பண்ணின திரு மாலையும் –
ஆகாசப் பரப்பு அடங்கலும் நிறையும் படி அழகியதாய் சோலை செய்து நிற்கிற
கற்பக பூவாலே செய்த திரு நெற்றி மாலையும் –
தேன் மாறாத செந்தாமரை மலரின்  மேல் நித்ய வாசம் செய்யா நிற்பாளாய்-
யுவதிச்ச குமாரிணீ-என்னும் பருவத்தை உடையளான பெரிய பிராட்டியார் வர விட்டாள்-
கோனே -எல்லாரும் கிஞ்சித் கரிக்க வேண்டும் படி சர்வ சேஷியாய் உள்ளவனே -தாலேலோ –
அந்த மேன்மைக்கு எதிர் தட்டான நீர்மை தோன்ற திருக்  குடைந்தையில் கண் வளர்ந்தவனே -தாலேலோ-

———————————————–

அவதாரிகை -எட்டாம் பாட்டு –
பெரிய பிராட்டியாருக்கு அநந்தரம் பரி கணிதையான
ஸ்ரீ பூமி பிராட்டி வர விட்ட உபஹார விசேஷத்தை சொல்லுகிறது –

கச்சோடு பொற் சரிகைக் காம்பு கநக வளை
உச்சி மணிச் சுட்டி ஒண் டாண் நிரைப் பொற் பூ
அச்சுதனுக்கு என்று அவநியாள் போத்தந்தாள்
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ -1-3 8-

கச்சோடு -திரு அரை பரியட்டத்தின் மேல் கட்டுமதான கச்சோடு கூட
பொன் சுரிகை -ஸ்பர்ஹநீயமான உடைவாளையும்
காம்பு -சிறுக் காம்பன் சேலையையும் -சிறிய கீற்றுகளை உடைய வஸ்த்ரம் -திருவரைக்கு அனுகுணமாக –
கநகம்-பொன்னால் செய்யப்பட திருவரையில் சாத்தின பரியட்டத்தின் மேலே கட்டுமதான கச்சோடே-அதிலே
சொருக தக்க அழகிய சுரிகை ஆகிற ஆயுதமும் -திருவரைக்கு அனுகுணமாக சாத்தும் –
திருக் காம்பன் சேலையும் -திரு தோள்களுக்கு அலங்காரமான பொன் வளையும் –
திருமுடியிலே சாத்துகைக்கு ரத்ன அலங்க்ருதமான சுட்டியும் -ஒள்ளிய தாளை உடைத்தாய் –
திரு முடியிலே ஒழுங்கு பட சாத்துகைக்கு ஈடான பொற் பூவும் –
அச்சுதன் இத்யாதி -ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாதவனுக்கு என்று ஸ்ரீ பூமி பிராட்டி வர விட்டாள்
நச்சு முலை இத்யாதி -பூபார நிரசனம் பண்ணுகைக்கு அடி இட்டு -பூதனையை
முடிகைக்காக அவளுடைய நஞ்சு  ஏற்றின முலையை உண்டவனே -தாலேலோ –
நாராயணா இத்யாதி -உபய விபூதியில் உள்ளாறும் கிஞ்சித் கரிக்க வேண்டும்படி
உபய விபூதி நாதத்வ சூசகமான நாராயண சப்த வாச்யன் ஆனவனே அழாதே கொள் தாலேலோ –

—————————————-

அவதாரிகை -ஒன்பதாம் பாட்டு –
அவதார காலத்தில் ஒக்கப் பிறந்து -இத்தலையை
பேணிப் போந்த பாந்தவ விசேஷத்தாலே கீழ் சொன்னவர்கள் எல்லாரிலும் –
வ்யாவர்த்தையான -துர்க்கை-தன்னுடைய சினேகா அனுகுணமாக பண்ணின
கிஞ்சித்காரத்தை சொல்லுகிறது –

மெய் திமிரும் நானப் பொடியோடு  மஞ்சளும்
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகிக் கொண்டு  உவளாய் நின்றாள்
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ -1 3-9 –

வெய்ய கலைப்பாகிக் கொண்டு -வெவ்விய ஆண் மானை வாகனமாக உடைய துர்க்கை ஆனவள்
உவளாய் நின்றாள்  -அதூர விப்ர க்ரஷ்டை யாய்  நின்றாள்
திருமேனியில் அர்திக்கைக்கு ஈடான -சந்தன கஸ்தூரி கர்பூராதி சுகந்த தரவ்ய
சமுதாய சூர்ணத்தோடே நிறம் பெற சாத்த தக்க மஞ்சள் பொடியும் -சிவந்து புடை பரந்து நீண்ட
திருக் கண்களுக்கு சாத்துகைக்கு தகுதியான அஞ்சனமும் -திரு நெற்றியிலே அழகு பெற
சாத்துகைக்கு சிந்துரமும் –
வேவிதான கலையை வாகனமாக உடைய துர்க்கையானவள் கொண்டு வந்து
அதூர விப்ர க்ருஷ்டை யாய் நின்றாள் –
சர்வ ஸ்வாமி யானவனே அழாதே கொள் அழாதே கொள் –
அந்த சர்வ ஸ்வாமித்வத்தை நிரவகிகைக்கு ஈடாக -கோவில் திரு அரவு அணையிலே
பள்ளி கொண்டு அருளினவனே-தாலேலோ –
அன்றிக்கே –
வெய்ய கலைப்பாகி என்கிறது -வெம்மை விருப்பத்துக்கு வாசகம் ஆகையாலே
ஸ்ப்ருஹநீயமான கலைகளை நாவிலே நின்று நடத்துகிற சரஸ்வதியை சொல்லுகிறதாய் –
அடியிலே எல்லாருக்கும் பிரதானமாக சொல்லப் பட்ட பிரம்மாவுக்கு பிரதான மகிஷி யானவள் பண்ணின
கிஞ்சித் காரத்தை சொல்லுகிறது என்று -வாக்ய அர்த்தமாக்கி -மேலடைய-அதுக்கு சேர நிர்வஹிக்கவுமாம்-

————————————————-

அவதாரிகை -நிகமத்தில் –
இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செம் சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே-1 3-10 –

தாயாய் வந்த பேய் -என்கிறபடியே -பேயான தன வடிவை மறைத்து
தாய் வடிவை கொண்டு வஞ்சித்து -வந்த பூதனை உடைய முலையை –
அவள் தாயாய் வந்தாப் போலே -தானும் பிள்ளையாய் கொண்டு -தாய் முலை உண்ணுமாப் போலே –
உண்ணா நிற்க செய்தே -அவள் முடியும்படியாக உண்ட –
அஞ்சன வண்ணனை -விரோதி போக பெற்றோம் என்னும் ஹர்ஷத்தாலே திரு மேனியில் பிறந்த புகரை சொல்லுகிறது –
ஆய்ச்சி இத்யாதி -மாதாவான யசோதை பிராட்டி தாலாட்டின படிகளை –
செம் சொல் இத்யாதி -யதா பூத வாதி ஆகையாலே -செவ்விய சொல்லை உடைத்தான
வேதத்தை தங்களுக்கு நிரூபகமாக உடையவர்கள் சேர்ந்து வர்த்திக்கிற
ஸ்ரீ வில்லி புத்தூரில் -ப்ராஹ்மண உத்தமரான ஸ்ரீ பெரிய ஆழ்வார் அருளி செய்த சப்தத்தை –
எஞ்சாமை இத்யாதி -சங்கோசம் அற அதிகரிக்க வல்லவர்களுக்கு ஒரு துக்கம் இல்லை –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: