ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-2– ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் – –

(சம தம -வளர -இந்திரியங்களை திவ்ய மங்கள விக்ரகத்தில் மேய விட்டு -பாதாதி கேசாந்தமாக அனுபவம் –
அமலனாதி பிரான் -திருவடி -தொடங்கி -அனுபவம்
பகவத் த்யான சோபானம் -படிக்கட்டு-இதே போல் –
ஸூத்வ ஸத்வம் -தியானிக்க ஸத்வ குணம் வளர்ந்து ரஜஸ் தமஸ் குறைந்து –
பிரக்ருதியால் உருவாக்கப்பட்ட உடல் முழுவதுமே முக்குண மயமாகவே இருக்கும் –
தண்ணீர் விட்டு வெந்நீரை ஆற்றுவது போல் -தியானிக்க தியானிக்க -ஸத்வம் சேரச் சேர -ஸத்வம் வளரும் –
ஆச்சர்யமான -21 பாசுரங்களால் விசத தமமாக யசோதா பிராட்டி ஆய்ச்சிமார்களுக்குக் காட்டும் பாவத்தாலே அனுபவிக்கிறார் –
பர உபகாரம் -காட்டிக் கொடுத்து -தத்காலம் அவள் -இக் காலத்தாருக்குமாக இவர் -)

கீழில் திரு மொழியில் –
திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று துடங்கி
திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்று தலைக் கட்டுகையாலே
திரு வவதரித்து அருளின பிரகாரத்தை தக்க தத்கால உலோபளாலநங்களோடே
அனுபவித்து ஹர்ஷ்டராய் அருளி செய்தார் –

இனி மேல் இப்படி திருவவதரித்து அருளினவனுடைய  திவ்ய விக்ரக்ஹ வை லஷண்யத்தை
தத் தத் காலத்தில் யசோதை பிராட்டி அனுபவித்தாப்  போலே –
தத் பாவ யுக்தராய் கொண்டு –
திருவடிகளில் நின்றும் -திருமுடி அளவாக –
அனுபவித்த பிரகாரத்தை –
அப்போது அவள் பேசின பாசுரத்தாலே ஆதாரம் தோற்ற அருளி செய்கிறார் –

(பவள வாயீர் வந்து காணீரே-1-2-1-
சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தை-1-2-21-)

————-

(அடியேன் -திருவடியே உபாயம் உபேயமாக -ஆறும் பேறும் -நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
திருக்கமல பாதம் -பொன் தாமரை -பாவானத்வம் போக்யத்வம்
துயர் அறு சுடர் அடி -துயரை அறுத்து தனது துயரை அறுத்துக் கொள்ளும் –
அவனுக்கும் நமக்கும் இவையே உத்தேச்யம் –
கர அரவிந்தம் -பதாரவிந்தம் )

சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்கு  போத்தந்த
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

பத உரை
சீதக் கடலுள்  அமுதன்ன = குளிர்ந்த கடலில் உள்ள அமுதாக பிறந்த பிராட்டியோடு ஒத்த
உப்புச்சாறு -புற அமுதம்
ஆராவமுதன் தானே கைக் கொண்டு உகந்த உள் அமுதம் இவளே
தேவகி = தேவகி பிராட்டி
கோதை =பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட
குழலாள் = கேச பாசத்தை உடைய
அசோதைக்கு =யசோதை பிராட்டிக்கு
போத்தந்த = போக விட்ட
பேதை குழவி =பேதைமை உடைய சிசுவானது
பிடித்து = திருக் கைகளால் பிடித்து
சுவைத்து = ஆச்வாதித்து
உண்ணும் = திருப் பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள
பாதக் கமலங்கள் = திரு வடித் தாமரைகளை
வந்து காணீர் = வந்து காணும் கோள்
பவள வாயீர் = பவளம் போல் சிவந்த அதரத்தை உடைய பெண்டிர்காள்
வந்து காணீர் -கடுக வந்து பாரும் கோள்
காணீரே என்றதை இரட்டித்து சொன்னதால் ஆதரத்தின் மிகுதி தோற்றுகிறது-

வியாக்யானம்
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
அகாதமாகையாலே குளிர்த்தி மாறாத சமுத்ரத்திலே -தேவ போக்யமாக பிறந்த
அமிர்தம் புறவமுதாம் படி –
அமுதத்தில் வரும் பெண்ணமுது என்கிறபடியே உள்ளமுதாக பிறந்த
பிராட்டியோடே ஒத்த தேவகி பிராட்டி –
அதாவது –
அவள் பரோபகார சீலை யானாற் போலே இவளும் பரோபாகார சீலை -என்றபடி –

கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த –
பூமாலையால் அலங்க்ரிதமான குழலை  உடைய யசோதை பிராட்டிக்கு –
போகவிட்ட -வரவிட்ட என்றபடி
போத்தந்த என்று ஒரு முழு சொல்லு –

பேதை குழவி -பேதை பருவத்துக்கு தக்க அறிவில்லாமை–குழவி -பருவம்

பிடித்து சுவைத்து உண்ணும் –
திருக் கையாலே பிடித்து திருப் பவளத்தில் வைத்து ஆஸ்வசித்து புஜிக்கும்-
தேனே மலரும் திருப் பாதம் -என்று சொல்லக் கேட்டு இருக்கையாலே
திருவடிகள் தன்னின் போக்யதை தன்னை பரீஷிக்கைக்காக -பருவத்துக்கு
அநு குணமான வியாபாரம் செய்வாரைப் போலே செய்தான் -ஆதல் –

முக்தச்சி -என்றும் —
வட தள மதி சைய ரெங்க தாமன் சயித இவார்ண வதர்ணகபதாப்ஜம்
அதி முக முதரே ஜகந்தி மாதும் நிததித வைஷ்ணவ போகய லிப்சயாவ -என்றும் –
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்றும் –
வையம் ஏழும் கண்டாள்-என்னும்படி திரு வயிற்றில் கிடக்கிற லோகங்களுக்கு –
சிறை  சோறாக்கினான் ஆதல் –

பாதக் கமலங்கள் காணீர் –
இப்படி இருந்துள்ள திருவடித் தாமரைகளை வந்து காணும் கோள்-
கமலம் -என்கையாலே –
திருவடிகளில் உண்டான நிறத்தையும் -சைத்ய -மார்தவ -ஸௌரப்யாதிகளையும் -சொல்லுகிறது –

பவள வாயீர் வந்து காணீரே –
பவளம் போல் சிவந்த அதரத்தை உடையீர் வந்து காணும் கோள் என்று –
யசோதை பிராட்டி -தான் அனுபவித்த அம்சத்தை –
சஜாதீயைகளாய்-அநு புபூஷூக்களாய் இருப்பாரையும் ஸ்லாகித்து கொண்டு
அழைத்து காட்டின பாசுரத்தாலே அருளிச் செய்தார் ஆய்த்து-

—————————————–

அவதாரிகை-
இரண்டாம் பாட்டு –
திருவடிகளின் அகவாயை அநு பவித்தாராய் நின்றார் கீழ் –
இப்பாட்டில் திருவடிகளின் திரு உகிருடன் திரு விரல்களை அனுபவிக்கிறார் –

முத்தும் மணியும்  வயிரமும் நன் பொன்னும்
தத்தித் பதித்து தலை பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள்
ஒத்து இட்டு இருந்தவா காணீரே ஒண் நுதலீர் வந்து காணீரே -1-2-2-

பத உரை
முத்தும் மணியும் =முத்துக்களையும் ரத்னங்களையும்
வயிரமும் = வயிரத்தையும்
நன் பொன்னும் =நல்ல பொன்னையும்
தத்திப் பதித்து = மாறி மாறி பதித்து
தலை பெய்தாற் போல் =சேர்த்தாப் போல்
எங்கும் = எங்கும்
மணி வண்ணன் = மணி போன்ற வர்ணத்தை உடைய கண்ணனுடைய
பாதங்கள் =திருவடிகளில் உள்ள
பத்து விரலும் =விரல்கள் பத்தும்
ஒத்திட்டு = தன்னிலே சேர்ந்து
இருந்த ஆ = இருந்த படியை
காணீர் = காணும் கோள்
ஒண் நுதலீர் =அழகிய நெற்றியை உடைய பெண்டிர்காள்
வந்து காணீர் = வந்து பாரும் கோள்
ஏ -அசை

முத்து இத்யாதி –
திருவடிகளுக்கு செம்பஞ்சு சாத்துகிற போது ஒன்பது விரலுக்கும் நவ ரத்ன
வர்ணத்தையும் -மற்றொரு விரலுக்கு ஸ்வர்ண வர்ணத்தையும் –
பரபாகம் தோற்ற மாறி மாறி சாத்துகையாலே –
நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனுடைய -திருவடிகளில் பத்து விரலும் –
முத்து மாணிக்கம் வயிரம் முதலான நவ ரத்னங்களையும் நல்ல பொன்னையும் –
மாறி மாறி பதித்து சேர்த்தாப் போலேயாய் -திரு விரல்களினுடைய  லஷணத்தில்
ஒன்றும் குறை இன்றிக்கே எனக்கும் தன்னிலே சேர்ந்த படியை காணும் கோள்-
ஒள்ளிய நுதலை உடைய நீங்கள் வந்து காணும் கோள் -என்கை-
முத்தும் மணியும் வயிரமும் -என்ற இது -அல்லாத ரத்னங்களுக்கும் உப லஷணம்
நுதல் =நெற்றி –

————————————————–

அவதாரிகை
மூன்றாம் பாட்டு -திருவடிகளை அனுபவித்த அநந்தரம்-திருக் கணைக் காலின் அழகை அனுபவிக்கிறார் –

பணைத் தோள் இள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்த இப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3-

பத உரை –
பணை = மூங்கில் போன்ற
தோள் = தோள்களை உடையளாய்
இள ஆய்ச்சி = இளைமை பருவத்தை உடையளான ஆய்ச்சியின்
பால் பாய்ந்த கொங்கை =பால் சொரிகிற முலையை
அணைத்து = திருக் கைகளால் அணைத்து
ஆர = திரு வயிறு பூரணனாம் படி
உண்டு = அமுது செய்து
கிடந்த = களித்து கிடந்த
இப்பிள்ளை = இந்த கிருஷ்ணனுடைய
இணை = சேர்த்தி அழகையுடைய
காலில் = திருவடிகளில்
வெள்ளி தளை நின்று = வெள்ளி தண்டை நின்று
இலங்கும் = விளங்கா நிற்கிற
கணை கால் இருந்த ஆ = கணைக் கால் இருந்த படியை
காணீர் = பாரும் கோள்
காரிகையீர் வந்து காணீர் = அழகிய பெண்களே வந்து காணும் கோள்
ஏ-அசை-

வியாக்யானம் –
பணைத் தோள் இள வாய்ச்சி –
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்விக்கும் -வேய் போல் இருந்துள்ள
தோளை உடையளாய்  -பருவத்தால் இளையளுமான ஆய்ச்சி உடைய –
இப்போது இவளை வர்ணிக்கிறது -அழகுக்கும் பருவத்துக்கும் ஈடாக -போக பரவசையாய்
இருக்கை அன்றிக்கே -பிள்ளையை சிநேகித்து நோக்கிக் கொண்டு -போருமவள் என்னும் இடம் தோற்றுகைக்காக-

பால் பாய்ந்த கொங்கை –
சிநேகத்தால் நெறித்து பால் சொரிகிற முலையை

அணைத்து ஆர உண்டு கிடந்த இப்பிள்ளை –
திருக்கைகளால் அணைத்து –
வயிறார உண்டு –
அத்தாலே ஹர்ஷனாய் கிடந்த -இப்பிள்ளை  உடைய –

இணைகால் இத்யாதி –
அந்யோந்யம் சேர்த்தி அழகை உடைய திருவடிகளில் –
வெள்ளித் தண்டை நின்று விளங்கா நிற்கிற கணைக் காலின்
அழகு இருந்த படியை -அனுபவ யோக்யரானவர்கள் வந்து காணும் கோள் –

காரிகையீர் வந்து காணீரே –
அழகு உடையவர்கள் ஆகையாலே அழகின் வாசி அறியும் நீங்கள் வந்து காணும் கோள் –

———————————————

அவதாரிகை -நாலாம் பாட்டு –
திருக் கணைக் காலின் அழகை அனுபவித்த அநந்தரம் -திரு முழம் தாளின் அழகை
அனுபவிக்கிறார் –

உழந்தாள்  நறு நெய் ஒரோ தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழம் தாம்பால் ஒச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழம் தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே- 1-2-4-

பத உரை –
உழந்தாள் = ஸ்ரமப் பட்டு தடாவில் சேர்த்தவளுடைய
நறும் நெய் = மணம் மிக நெய்யை
ஒரோ தடா = ஒவ்வொரு தடாவாக
உண்ண = அமுது செய்த அளவில்
இழந்தாள் = பிள்ளையை இழந்தாளாக நினைத்த தாய்
எரிவினால் = வயிற்று எரிச்சலாலே
ஈர்த்து = கையை பிடித்து இழுத்து
எழில் மத்தின் =அழகிய மத்திலே
பழம் தாம்பால் = சுற்றி கடைந்து பழகின தாம்பாலே
ஒச்ச = அடிப்பதாக ஓங்க
பயத்தால் = அச்சத்தாலே
தவழ்ந்தான் = அத்தை தப்பி போவதாக தவழ்ந்தவனுடைய
முழம் தாள் = முழம் கால்கள்
இருந்த ஆ = இருந்த படியை
காணீர் = காணும் கோள்
முகிழ் முலையீர் = முகிழ்ந்த முலையை உடைய பெண்களே
வந்து காணீர் –

வியாக்யானம்
உழந்தாள் –ஆயாசித்தவள்-கறந்து காய்த்து தோய்த்து கடைந்து வெண்ணெய் ஆக்கி
உருக்கி தடாக்களில் சேர்த்து வைத்த வருத்தத்தை எல்லாம் சொல்லுகிறது

நறுநெய் ஓரா தடா உண்ண
நறுவிதான நெய்யை ஒவ்வொரு தடாவாக ஒன்றும் சேஷியாதபடி உண்ண –

இழந்தாள் எரிவினால் ஈர்த்து -உண்ட நெய் பிள்ளைக்கு சாத்மியாது-என்று
பிள்ளையை இழந்தாளாக நினைத்து -பயப்படுகையால் வந்த வயிற்று எரிச்சலாலே கையை பிடித்து இழுத்து

எழில் மத்தின் பழம் தாம்பால் ஒச்ச -அழகிய மத்திலே சுற்றி கடைந்து பழகின தாம்பாலே அடிப்பதாக ஓங்க

பயத்தால் தவழ்ந்தான் -பயத்தாலே அத்தை தப்புவதாக தவழ்ந்தவனுடைய

முழம் தாள் இருந்தவா காணீரே -முழம் தாளின் அழகு இருந்தபடியை காணுங்கோள்

முகிழ் முலையீர் வந்து காணீரே -முகிழ்த்த முலையை உடையீர் வந்து காணுங்கோள்

—————————————————–

அவதாரிகை -ஐந்தாம் பாட்டு –
முழம் தாளின் அழகை அனுபவித்த அநந்தரம் -திருத் துடையின் அழகை அனுபவிக்கிறார் –

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை  வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-

பத உரை –
முன் = முற்காலத்திலே
மறம் கொள் = த்வேஷம் கொண்ட
இரணியன் = ஹிரணியன் உடைய
மார்வை = மார்வை
கீண்டான் = பிளந்தவனாய்
பிறங்கிய =கொடுமையால் வந்த பிரகாசத்தை உடைய
பேய்ச்சி = பூதனையின்
முலை = முலையை
சுவைத்து = பசி அறும்படி ஆச்வாசித்து
உண்டிட்டு = புசித்து
உறங்குவான் போல் =ஒன்றும் அறியாதவன் படி உறங்குமவன் போல்
கிடந்த இப்பிள்ளை =கிடந்த இப்பிள்ளையின்
குறங்குகளை = திருத் தொடைகளை
வந்து காணீர் = வந்து காணுங்கோள்
குவி முலையீர் = குவியா நின்ற முலைகளை உடைய பெண் காள்
வந்து காணீர்
ஏ -அசை

வியாக்யானம் –
க்ரௌர்யத்தால் வந்த பிரகாசத்தை உடைத்தான பூதனை உடைய முலையை
பசையற சுவைத்து புசித்து -செய்த பராக்கிரமம் ஒன்றும் தெரியாதபடி -உறங்குபவன் போல் கிடந்த
இப்பிள்ளை -பிரகலாத விஷயமான சீற்றத்தை உடையனான ஹிரண்யனுடைய மார்வை
முற்காலத்திலே பிளந்து -பொகட்டவனுடைய-அச் சுவடு தோற்றும்படி இருக்கிற திருத் துடைகளை வந்து காணுங்கோள் –

—————————————————

அவதாரிகை -ஆறாம் பாட்டு –
திருத் துடையின் அழகை அனுபவித்த அநந்தரம்
திருக் கடி பிரதேசத்தின் அழகை அனுபவிக்கிறார் –

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-

பதவுரை

மத்தம்–மதத்தையுடைய
களிறு–யானைகளை நிர்வஹிக்குமவரான
வசுதேவர் தம்முடை–ஸ்ரீவஸுதேவருடைய
சித்தம் பிரியாத–மனத்தை விட்டுப் பிரியாத
தேவகி தன்–தேவகியினுடைய
வயிற்றில்–வயிற்றிலே
அத்தத்தின் பத்தாம் நாள்–ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே
தோன்றிய–திருவவதரித்த
அச்சுதன்–கண்ண பிரானுடைய
முத்தம் இருந்த ஆ–சண்ணமிருந்த படியை
காணீர்!!
முகிழ் நகையீர்–புன் சிரிப்பை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் –
மதித்த ஆனைகளின் உடைய ஸ்ரீ வசூதேவர்
தம்முடைய ஹிருதயத்துக்கு தகுதியாக பரிமாறுகிற தேவகியுடைய திரு வயிற்றிலே –

மங்களா சாசன பரர் ஆகையாலே -விரோதிகள் அறிந்து அபசரிக்கைக்கு அவகாசம்
இல்லாதபடி திருவவதரித்த நாளை மறைத்து அருளி செய்கிறார் –

அச்யுத பாநு நா தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் -என்கிறபடியே –
தேவகி திரு வயிறு கிழக்கு ஸந்த்யை -இவன் அச்யுத பாநு
(கிழக்குக்கும் ஸூர்யனுக்கும் உள்ள சம்பந்தம் போல் இவனுக்கும் இவள் கர்ப்பத்துக்கும் தொடர்பு )
கர்ப வாச தோஷம் அற ஆவிர்பவித்து –
(சேதனனைப் போலே கர்ம நிபந்தம் இன்றிக்கே
இச்சா க்ருஹீத -அனுக்ரஹத்தாலே ஆவிர்பவித்தான் -என்கிறது )

ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ
விடாதவனுடைய முத்தம் இருந்தபடியை காணுங்கோள் –
முத்தம் -சண்ணம்
முகிழ் நகை -மந்தஸ்மிதம்-

—————————————————–

ஏழாம் பாட்டு –
திருக் கடி பிரதேசத்தின் அழகை அனுபவித்த அநந்தரம் –
திரு மருங்கின் அழகை அனுபவிக்கிறார் –

இருங்கை மத களிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப் பறித்து கொண்டு ஓடும் பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே -1-2-7-

பதவுரை

இரு கை மத களிறு–பெரிய துதிக்கையை யுடைய மத்த கஜமான குவலயாபீடத்தை
ஈர்க்கின்றவனை–தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை (அம்பத்தன் -பாகனின் பெயர் )
பருங்கி–கொன்று
பறித்துக்கொண்டு–(யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு
ஓடு–(கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின
பரமன் தன்–பரமபுருஷனான கண்ணனுடைய
நெருங்கு–செறியக் கோத்த
பவளமும்–பவள வடமும்
நேர் நாணும்–அழகிய அரை நாணும்
முத்தும்–முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த)
மருங்கும் இருந்த ஆ–திருவரையும் இருந்தபடியை
காணீர்!
வாள் நுதலீர்–ஒளி பொருந்திய நெற்றியை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

இருங்கை =பெரிய துதிக்கை உடைய
பருங்கி =கொன்று
குவலயாபீடத்தை தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனைக் கொன்று –
அதன் கொம்புகளை பறித்து கொண்டு -கம்சன் இருந்த உயர்ந்த நிலத்திலே
ஓடிச் சென்று குதித்த பரமன் –

அன்றிக்கே
ஊரில் இடைப் பிள்ளைகள் விளையாடுகிறவர்களில்-லிலோ உபகரணங்களிலே
ஆனையாக பண்ணி -பெரிய கையை உடைய மத்த கஜம் என்று இழுத்து கொண்டு
திரிகிறவனை-அடர்த்து பறித்து கொண்டு ஓடா நிற்கும் பரமன் -என்னுதல்-

செறிய கோத்த பவள வடமும் –
நேரியதான பொன் நாணும் –
முத்து வடமும் –
இவற்றோடு சேர்ந்த திரு மருங்கும் இருந்தபடியை காணுங்கோள் –

————————————————–

அவதாரிகை -எட்டாம் பட்டு –
திரு மருங்கின் அழகை அனுபவித்த அநந்தரம் –
திரு உந்தியின் அழகை அனுபவிக்கிறார் –
(அயனைப் படைத்ததோர் எழில் உந்தி
கொப்பூழில் எழு பூ அழகர்
இளமை மாறாத எழில் )

வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-

பதவுரை

வந்த–(தன்னோடு விளையாட) வந்த
மதலை குழாத்தை–சிறு பிள்ளைகளின் கூட்டத்தில்
வலி செய்து–தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு
தந்தம் களிறு போல்–குவிந்த கொம்பு முளைத்த யானைக் குட்டி போல்
தானே–தானே முக்கியனாய் நின்று
விளையாடும்–விளையாடுமவனாய்
நந்தன்–நந்தகோபர்க்கு
மதலைக்கு–(விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய
நன்றும் அழகிய–மிகவுமழகிதான
உந்தி இருந்த ஆ–நாபி இருக்கிறபடியை
காணீர்!
ஒளி–ஒளியால் விஞ்சின
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!!

ஒளி இழையீர் =காந்தி மிக்க ஆபரணங்களை உடைய பெண்காள்
தன்னோடு விளையாட வந்த -தன்னோராயிரம் பிள்ளைகளான மதலை குழாத்தை –
தானும் மதலையாய் இருக்க செய்தே -அத்தனை பேரும் ஒருதலை –
தான் ஒரு தலையாக நின்று -பலாத்கரித்து -கொம்பு முகிழ்த்த  இள யானை  போலே
தானே பிரதானனாய்  விளையாடும் -இப்படி திரியா நிற்க  செய்தே –
ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில்
ச விநயமாக வர்த்திக்கும் பிள்ளைத் தனத்தை உடையவனுக்கு –
(யசோதை இளம் சிங்கம் நந்தகோபன் குமரன் )

மிகவும் அழகிய திரு உந்தியைக் காணீரே
ஸுந்தர்ய ஆறு -அழகு சுழல் -தானே திரு உந்தி –
மேல் தடம் தோள்-அகல்பம் -இங்கு ஸ்தானம் ஆல்பம்
ஒளி படைத்த ஆபரணம் பூண்ட நீங்கள் காணீர் என்கிறாள்
(சூடகமே –பராவரர் சூடும் ஆத்ம பூஷணம் -தாஸ்யம் -பாரதந்தர்யம் -சம தமங்கள் )

———————————————

ஒன்பதாம் பாட்டு –
திரு உந்தியின் அழகை அனுபவித்த அநந்தரம் –
திரு உதரத்தின் அழகை அனுபவிக்கிறார் –

அதிரும் கடல் நிற வண்ணனை ஆச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து
பதரப் படாமே பழம் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-

பதவுரை

அதிரும்–கோஷிக்கின்ற
கடல் நிறம்–கடலினது நிறம் போன்ற
வண்ணனை–நிறத்தை யுடைய கண்ணனுக்கு
(அடங்காப் பிள்ளைக்கு த்ருஷ்டாந்தம் )
ஆய்ச்சி–யசோதை யானவள்
மதுரம் முலை ஊட்டி–இனிய முலைப் பாலை ஊட்டி,
வஞ்சித்து வைத்து–(மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறிய வொண்ணாதபடி) ஏமாத்தி
பதறப் படாமே–தன் எண்ணம் தப்பாதபடி
பழ தாம்பால்–பழகின கயிற்றாலே
ஆர்த்த–கட்டி வைத்த
உதரம் இருந்த ஆ–வயிறு இருந்தபடியை
காணீர்!
ஒளி வளையீர்–ஒளி மிக்க வளையை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

(உரவிடை ஆப்புண்டு
இடைக் குறையாக உதர இடை -என்றும் –
நெஞ்சுடன் -அவளுடன் சேர்த்துக் காட்டினாள்
வரத வலி த்ரயம் சலேன
தாமோதரனை அறிய ஆமோ தரம்
பிரேமத்தால்-தழும்பு மாறாமல் )

பதரப் படாமே பழம் தாம்பால் ஆர்த்த உதரம் = தன் நினைவு தப்பாதபடி
பழகின கயிற்றால் கட்டின திரு வயிறு
அதிரும் கடல் என்று விசேஷிகையாலே-இவனுடைய அடங்காமை தோற்றுகிறது-

கன்றுகளையும் பசுக்களையும் கட்டி பழகி ஒளிஞ்சானமுட்டாய் கிடந்ததொரு –
ஒன்றுக்கும் உதவாத ஒரு கயிறு –
தாம்பாலே கட்டின கயிற்றில் -தழும்பு கணலாம்படி இருக்கிற வயிற்றின் அழகு
இருக்கிறபடியை காணுங்கோள் —

———————————————————

திரு உதரத்தின் அழகை அனுபவித்த அநந்தரம்
திரு மார்பின் அழகை அனுபவிக்கிறார் –

பெரு மா உரலில் பிணிப்பு உண்டு இருந்து அங்கு
இரு மா மருதம் இறுத்த இப்பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்வு இருந்தவா காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-10-

பதவுரை

பெரு மா உரலில்–மிகப்பெரிய உரலோடு
பிணிப்புண்டு–கட்டுண்டிருந்து இருந்து
அங்கு–அந்த நிலைமையிலே
இரு மா மருதம்–இரண்டு பெரிய மருத மரங்களை
இறுத்த–முறித்தருளின
இ பிள்ளை–இக் கண்ண பிரானுடைய,
குரு மா–மிகவும் சிறந்த
மணி பூண்–கௌஸ்துபாபரணமானது
குலாவித் திகழும்–அசைந்து விளங்கா நின்றுள்ள
திருமார்வு இருந்த ஆ காணீர்!
சே இழையீர்–செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள்
வந்து காணீர்!

மிகவும் பெரிய உரலோடு கட்ட
அத்தையும் சேர்த்து இழுத்துக் கொண்டு
புணரா நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ

தன்னை நலிவதாக சேர்ந்து இருக்கும் இரண்டு பெரிய மருதுகளையும் தவழ்ந்து முறித்தது
முறித்த ஓசையிலே
புரிந்து பார்த்து சிரித்த படி கண்டு -இப்பிள்ளை என்றது

குரு மா மணிப் பூண் = கௌஸ்துப ஆபரணம் -ஸ்ரேஷ்டமாய் ஸ்லாக்கியமான ஆபரணம் –

(கௌஸ்துபம் -நீல நாயகம் -ஜீவாத்மாவுக்கு பிரதிநிதி
அஸ்திர பூஷண அதிகாரம் –
பரத அக்ரூர மாருத -பிரக்ருதிகளை ஆலிங்கனம்
திகழ்கின்ற திரு மங்கை திரு மார்பு -அலர்மேல் மங்கை உறை மார்பன்
துளஸீ பிராட்டி கௌஸ்துபம் -பரமன் பறை சாற்றும்
கூர்ம வியாக்ர ஐம்படைத்தாலி -எளிமை பறை சாற்றும் )

———————————————-

பதினோராம் பாட்டு –
திரு மார்வின் அழகை அனுபவித்த அநந்தரம்
திரு தோளின் அழகை அனுபவிக்கிறார்
(ஸூந்தர தோளுடையான் -ஸூந்தர-பாஹு ஸ்தவம் -விகாசத்துக்கு ஹேது –
பாரிஜாத மரக்கிளை -பூ கொத்து போல் திவ்ய ஆயுதங்கள் )

நாள்களோர்  நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடிப் போய்
வாள் கொள் வளை எயிற்று ஆர் உயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-

பதவுரை

நாள்கள்–(கண்ணன் பிறந்த பின்பு சென்ற) நாட்கள்
ஓர் நாலு ஐந்து திங்கள் அளவிலே–ஒரு நாலைந்து மாதத் தளவிலே
தாளை நிமிர்ந்து–காலைத் தூக்கி
சகடத்தை–சகடாஸுரனை
சாடிப்போய்–உதைத்துவிட்டு,
வாள் கொள்–ஒளிகொண்டதாய்
வளை–வளைந்திராநின்றுள்ள
எயிறு–கோரப் பற்களை யுடைய பூதனையினது
ஆர் உயிர்–அரிய உயிரை
வவ்வினான்–முடித்த கண்ணனுடைய
தோள்கள் இருந்த ஆ காணீர்!
சுரி குழலீர்–சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

திரு அவதாரத்துக்கு பின்
மாசம் நாலு என்றும் -ஐஞ்சு என்றும் -ஒன்பது என்றும் -இருபது என்றும் –
தெரியாதபடி -இப்படி மயக்கி அருளி செய்தது -மங்களா சாசன பரர் ஆகையாலே —
திருஷ்டி தோஷ பரிஹார்த்தமாக –

தனித்து கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் -அசூராவேசத்தாலே நலிவதாக வந்து கிட்டுகிற
சகடத்தை முலை வரவு தாழ்த்தி சீறி நிமிர்த்து -திருவடிகளாலே கட்டு அழிய உதைத்து –
இவன் அன்யார்த்தமாக திருவடிகளை நிமிர்த்தாலும் பிரதி கூலித்து வந்து கிட்டுகையாலே –
சகடம் பக்நமாக தட்டில்லை இறே-

சாடிப்போய்-என்றது –
சாடி விட்டு என்றபடி –

ஒளியை உடைத்தாய்-வளைந்து இருக்கிற எயிருகளை உடையவளான பூதனை உடைய
முடித்தற்கு அரிய  உயிரை-அபஹரித்தவனுடைய –
பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே -பெரிய திருமொழி -என்னக் கடவது இறே —

பேய் முலை நஞ்சு உண்டு கள்ளச்சகடம் -ஆண்டாள்
குரோதம் யோசித்த -சகடம் -பேய் முலை வாசக்குழலி இழந்தது -நம்மாழ்வார்

வளை எயிற்று ஆர் உயிர் -முற்று உவமை -எயிறு உடையவளது உயிர்

சகடாசுர நிரசனத்துக்கு முன்னே பூத நாதி நிரசனமாய் இருக்க -மாறி அருளி செய்தது –
க்ரம விவஷயா வன்று –
ஹர்ஷ அதிசயத்தாலே இன்னபடி சொல்ல வேணும் என்று அறியாமை –

அவளை முலைப் பாலோடே உயிரை வற்ற வாங்குகிற போது-நெறித்த  தோள்களினுடைய
அழகு இருக்கிறபடியை காணுங்கோள்-
சுருண்ட குழலை உடையரான நீங்கள் வந்து காணுங்கோள் –

—————————————————–

பன்னிரண்டாம் பாட்டு –
திரு தோளின் அழகை அனுபவித்த அநந்தரம்-
திருக் கைத் தலத்தின் அழகை அனுபவிக்கிறார் –

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-

பதவுரை

மை–மையணிந்த
தட–பெரிய
கண்ணி–கண்களையுடைய
அசோதை–யசோதைப் பிராட்டியாலே
வளர்க்கின்ற–வளர்க்கப்படுகின்றவனாய்
தலை செய்–உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த)
நீலம் நிறம்–கரு நெய்தல் பூவினது போன்ற நிறத்தை யுடையவான
சிறு பிள்ளை-(இந்த) பால க்ருஷ்ணனுடைய
நெய்–கூர்மை பொருந்திய
தலை–நுதியை யுடைய
நேமியும்–திருவாழியும்
சங்கும்–திருச்சங்கும்
நிலாவிய–அமைந்திரா நின்றுள்ள
கைத்தலங்கள்–உள்ளங்கைகளை
வந்து காணீர்!
கனம்–பொன்னால் செய்த
குழையீர்–காதணிகளை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல் –
அஞ்சன அலங்க்ர்தமாய் விஸ்தாரமாய் இருந்துள்ள கண்ணை உடையவள் -என்னுதல் –
இப்படி இருந்துள்ள கண் அழகை உடைய யசோதை பிராட்டி -வைத்த கண் வாங்காமல்  நோக்கி
வளர்க்கிற வளர்ப்பார் பலர் உண்டாய் இருக்கச் செய்தேயும் –
அவர்கள் கையில் காட்டிக் கொடாதே -தானே இறே வளர்ப்பார்கள் –

பூ சாரம் உள்ள ஷேத்ரத்தில் -அப்போது அலர்ந்த குவளை பூவின் நிறம் போல் இருக்கிற
நிறத்தை உடையவனான சிறு பிள்ளை யினுடைய-
அவள் சீராட்டி வளர்த்த முசு முசுப்பு-( ஸ்ரத்தை ) எல்லாம்
திரு நிறத்திலே தோன்றும்படி இருக்கும் ஆயிற்று –

கூரிய நுதியை உடைத்தான திரு ஆழி என்னுதல் –
ஆயுத சாமான்யத்தாலே நெய் இருக்கும் திரு ஆழி என்னுதல் –
கை எல்லாம் நெய் வாயொரு பிள்ளை பரம் அன்று -பெரிய திருமொழி -10-7-3-என்கிற –
திருக் கையின் ஸ்பர்சத்தாலே நெய் சுவடு மாறாத திரு ஆழி என்னுதல்–
இப்படி இருக்கிற திரு ஆழியும் –

கருதும் இடம் பொருது வந்து கையில் நிற்கவும் வேண்டாதே -கை விடாதே இருந்து –
தன்னோசையாலே எதிரிகளை அழிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச சந்யமும் –

நிரந்தரமாக வர்த்தியா நின்றுள்ள கையும் -ஆழ்வார்களுமான  சேர்த்தியை ஒரோ தசைகளிலே
இவன் தான் இவளுக்கும் காட்டக் கூடும் இறே
(உம்மை தொகை -தேவகிப் பிராட்டிக்கு திரு அவதரித்த அன்றே காட்டி அருளினான் அன்றோ )

கனம் என்று பொன்னாகவுமாம்-

——————————————————

பதிமூன்றாம் பாட்டு –
திருக் கைத் தலத்தின் அழகை அனுபவித்த அநந்தரம்-
திருக் கழுத்தின் அழகை அனுபவிக்கிறார் –

வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-

பதவுரை

வண்டு அமர்–வண்டுகள் படிந்திருக்கிற
பூ குழல்–பூ அணிந்த குழலை யுடையளான
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
மகனாக கொண்டு–(தன்) புத்ரனாக ஸ்வீகரித்து
(உண்மையால் தனது பிள்ளையாகவே வளர்த்தாள்
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ என்று சொல்லும் படி -)
வளர்க்கின்ற–வளர்க்கப் பெற்றவனாய்
கோ வலர்–ஸ்ரீநந்த கோபருடைய
குட்டற்கு–பிள்ளையான கண்ண பிரானுடைய,
அண்டமும்–அண்டங்களையும்
நாடும்–(அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும்
அடங்க–முழுதும்
விழுங்கிய–(ப்ரளய காலத்தில்) கபளீகரித்த
கண்டம் இருந்த ஆ–கழுத்திருந்தபடியை
(கனக வலைய முத்ராம் -பெரும்தெவித்தாயார் -வளையல்கள் அழுந்திய –
விஸ்வரூப சேவை -தேசிகன் -வரதராஜ பஞ்சாத் )

பிள்ளைகள் அனுங்காமைக்காக ( பயப்படாமல் இருக்க ) தாய்மார் தங்களை அலங்கரித்து கொண்டு இருப்பார்கள் ஆய்த்து-
அப்படியே இவளும் கால புஷ்பங்களை பல காலும் முடிக்கையாலே மது பானம் பண்ணும் வண்டுகளுக்கு
வஸ்தவ்ய பூமி இவள் குழல் இறே –
ஆகையால் -வண்டுகள் படிந்து கிடக்கிற பூவோடு கூடின குழலை உடையளான யசோதை பிராட்டி –
தன் மகனாய் ஸ்நேஹித்து கொண்டு வளர்க்கிற
ஸ்ரீ நந்தகோபர் மகனுக்கு –
இவர் அடி அறிந்தவர் ஆகையாலே -மகனாக கொண்டு -என்கிறார் –
அவள் -தன் மகன் -என்று இறே நினைத்து இருப்பது –

அண்டத்தையும் அண்டாந்த  வர்த்திகளான சேதன அசேதனங்களையும் திரு வயிற்றிலே
ஒரு புடையிலே அடங்கும் படி விழுங்கின -என்னுதல் –
பிரி கதிர் படாமல் அனைத்தையும் சேர விழுங்கி -என்னுதல் –

இப்படி இருந்துள்ள திருக் கழுத்தின் அழகு இருந்தபடியை காணுங்கோள்-

காரிகையார் -அழகு உடைய ஸ்திரீகள் –
(அபி ரூபைகளான நீங்கள் வந்து இவன் அழகை பாருங்கோள் )

—————————————————
பதினாலாம் பாட்டு –
திருக் கழுத்தின் அழகை அனுபவித்த அநந்தரம் –
திருப் பவளத்தின் அழகை அனுபவிக்கிறார் –

என் தொண்டை வாய் சிங்கம் வா என்று எடுத்துக் கொண்டு
அந் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இச்
செந் தொண்டை வாய் வந்து காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-14-

பதவுரை

ஆய்ச்சியர்–இடைப் பெண்கள்
தொண்டை–‘‘கொவ்வைக் கனி போன்ற
வாய்–அதரத்தை யுடைய-(கோவை வாயாள் பொருட்டு போல் )
எம் சிங்கம்–எமது சிங்கக் குருவே!
வா என்று–(எம் பக்கல்) வா’’ என்று
எடுத்துக் கொண்டு–(இடுப்பில்) எடுத்துக் கொண்டு
அம் தொண்டை–அழகிய கொவ்வை போன்ற
வாய்–(கண்ணனுடைய) அதரத்தில்
அமுது–(ஊறுகிற) அம்ருதத்தை
ஆதரித்து–விரும்பி,
தம்–தங்களுடைய
தொண்டை வாயால்–கோவை வாயை
தருக்கி–(கண்ணன் வாயோடே நெருக்கி)
பருகும்–பானம் பண்ணப் பெற்ற
இ செம் தொண்டை வாய்–இந்தச் சிவந்த கோவை வாயை
வந்து காணீர்!
சேயிழையீர்! வந்து காணீர்!!

தொண்டை வாய் = கொவ்வை கனி போன்ற அதரத்தை உடைய
சிம்ஹ கன்று போலே செருக்கை உடையவனாய் இருக்கிற இவன் என்னுடையவன்
என்று அபிமானித்து வா என்று அழைத்து எடுத்து கொண்டு இடைப் பெண்கள் எல்லாரும் –
தங்கள் கோவை வாயாலே நெருக்கி பானம் பண்ணுகிற
செருக்கி பருகும் என்றுமாம் –
இவர்கள் அருக பருக பின்னையும் சிவப்பு மாறாதே இருக்கிற திரு பவளம் –
சிவந்த ஆபரணம் பூண்ட நீங்கள் வந்து பாருங்கோள் –

————————————

பதினைந்தாம் பாட்டு -திரு பவளத்தின் அழகை அனுபவித்த அநந்தரம்
திரு முக மண்டலத்தின் சமுதாய சோபையை அனுபவிக்கிறார் –

நோக்கி யசோதை நுனிக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே -1-2-15-

பதவுரை

அசோதை–யசோதைப் பிராட்டி
நோக்கி–(கண்ண பிரான் திருமேனியின் மென்மைக்குத் தக்க படி) பார்த்து ஆராய்ந்து
நுணுக்கிய–அரைத்த
மஞ்சளால்–மஞ்சட்காப்பாலே,
நாக்குவழித்து – ;
நீராட்டும்–ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற
இ நம்பிக்கு–இக் கண்ண பிரானுடைய
வாக்கும்–திரு வாக்கும்
நயனமும்–திருக் கண்களும்
வாயும்–அதர ஸ்புரணமும்
முறுவலும்–புன் சிரிப்பும்
மூக்கும் இருந்த ஆ–மூக்குமிருந்தபடியை
காணீர்!
மொய் குழலீர்–செறிந்த குழலை யுடைய பெண்காள்! வந்து
காணீர்!

நோக்கி =திரு மேனியின் மென்மைக்கு தகுதியாம் படி பார்த்து
பார்த்து ஆராய்ந்து அரைத்த மஞ்சட்காப்பாலே,-நாக்கு வழித்து -திருமஞ்சனம் -விதேயதா பூர்ணனான இவனுக்கு
வாயும் -திரு அதரமும் –
அல்லது -வாய்ந்து  இருக்கிற –
மாதா முதலானாரை நாம க்ரஹணம் பண்ணுகிற வாக்கும் –
என்னைப் பாரீர் என்னைப் பாரீர் என்ன -அவர்களைக் கடாஷிக்கிற திரு நயனங்களும் –
மந்த ஸ்மிதம் செய்ய உபக்ரமிக்கிற திரு அதர ஸ்புரணமும்
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் -என்ற நித்ய சந்தேக ஜனகமான
திரு மூக்கும் ஆகிற -இச் சேர்த்தி அழகு இருந்தபடி-

———————————————————

பதினாறாம் பாட்டு –
சமுதாய சபையின் நடுவே அனுபவித்த திருக் கண்களின் அழகு
பின்னாட்ட -அத்தை அனுபவிக்கிறார் –
அது தன்னில் எல்லாவற்றுக்கும் பின்பு அனுபவதித்தது திரு மூக்கின் அழகு இறே –
திரு மூக்குக்கும் திருக் கண்களுக்கும் ஒரு சேர்த்தி உண்டே –
(தாமரைக்கண்கள் -அதன் கொடி தானே மூக்கு -வள்ளியோ கொழுந்தோ -என்னும்படி சேர்த்தி உண்டே )
அத்தாலும் –
பாதாதி கேசம் அனுபவித்து வருகிற அடைவுக்கு சேர்ந்தது ஆகையாலும்
திருக் கண்களிலே சுழியாறு பட்டு அனுபவிக்கிறார் –

விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

பதவுரை

விண் கொள்–ஸ்வர்க்காதி லோகங்களை இருப்பிடமாகக் கொண்ட
அமரர்கள்–தேவதைகளுடைய
வேதனை தீர–துன்பங்கள் தீரும்படி
முன்–முன்னே
மண் கொள்–பூமியை இருப்பிடமாகக் கொண்ட
வசுதேவர் தம்–வஸுதேவர்க்கு
மகனாய் வந்து–பிள்ளையாய் வந்து பிறந்து
திண்கொள்–வலிமை கொண்ட
அசுரர்–அஸுரர்கள்
தேய–க்ஷயிக்கும்படி
வளர்கின்றான்–வளரா நின்ற கண்ணனுடைய
கண்கள் இருந்த ஆ காணீர்!
கனம் வளையீர்–கநக கங்கணத்தை யுடைய பெண்காள்
வந்து காணீர்!!

மண் கொள் வசுதேவன் தம்-பூமியை இருப்பிடமாக உடைய வசுதேவருக்கு

அவதார பிரயோஜனம் சாது பரித்ராணாதிகள் ஆகையாலே
ஸ்வர்காதி லோகங்களை இருப்பிடமாக உடைய இந்திராதி தேவர்களுக்கு
ஆசூர பிரக்ருதிகளால் வரும் துக்கம் போம்படியாக
முன்னே பூமியை இருப்பிடமாக உடைய ஸ்ரீ வசுதேவருக்கு புத்ரனாய் வந்து அவதரித்து –
தன்னைப் பற்ற சிறைப் பட்டு இருக்கிற
ஸ்ரீ வசுதேவர் துக்கத்தை தீர்த்து –
பின்னம் தேவர்கள் துக்கம் தீர்க்கைக்கு முன்னம் இங்கே அவதரித்தானாய் ஆய்த்து-
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -என்னக் கடவது இறே-

காய பலமும் மனோ பலமும் உடையரான அசுரர் ஆனவர்கள் ஷயித்து செல்லும்படியாக
தான் வளரா நிற்கிறவனுடைய இவன் கால் நெடுக நெடுக அசுர வர்க்கம் ஷீணமாய் விட்டது இறே —
இப்படி அனுகூல ரஷணமும் பிரதி கூல நிரசனமும் பண்ணும் இடத்தில் –
இவர்கள் தழைக்கவும் –
அவர்கள் ஷயிக்கவும் –
கடாஷிக்கும் திருக் கண்களின் அழகு இருக்கிறபடியை காணுங்கோள்-
கன வளையீர்-பொன் வளையை உடைய-

————————————————-

பதினேழாம் பாட்டு –
திருக் கண்களின் அழகை அனுபவித்த அநந்தரம்-
திருப் புருவத்தின் அழகை அனுபவிக்கிறார் –

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி  வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

பதவுரை

பருவம்–வயது
நிரம்பாமே-முதிருவதற்கு முன்னமே
பார்எல்லாம்–பூமியிலுள்ளார் எல்லாரும்
உய்ய–உஜ்ஜீவிக்கும்படியாக
(பார் எல்லாம் உய்ய -பருவம் நிரம்பாத கண்ணன் -திரு மேனி -அழகை காட்டி அருளினாலும் –
பார் எல்லாம் உஜ்ஜீவனத்துக்கு -ஸ்வ விரோதி நிரசனமே பிரதானம் -)
திருவின் வடிவு ஒக்கும்–பிராட்டியின் வடிவு போன்ற வடிவை யுடையளான
(சீதக்கடலுள் அமுதம் அன்ன -கீழே -இங்கு சாப்தமாக-கண்ணனையே கொடுத்த உபகாரத்தால் சாம்யம் – )
தேவகி–தேவகிப் பிராட்டியாலே
பெற்ற–பெறப் பட்டவனாய்
உருவு கரிய–உருவால் கறுத்ததாய்
ஒளி–உஜ்ஜவலமான
மணி–மணி போன்ற
வண்ணன்–வடிவை யுடையனான கண்ண பிரானுடைய
புருவம் இருந்த ஆ காணீர்
பூண் முலையீர்–ஆபரணம் பூண்ட முலையை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

சக்கரவர்த்தி திருமகனைப் போலே -பருவம் நிரம்பின பின்பு -விரோதிகளை நிரசித்து –
லோகத்தை உஜ்ஜீவிப்பிக்கை அன்றிக்கே –
பருவம் நிரம்புவதுக்கு  முன்னே –
திண் கொள் அசுரரை தேய -வளருகையாலே -லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும் படியாக –
பூதன சகட யமளார்ஜுனாதிகளை தொட்டில் பருவம் பிடித்து இறே நிரசித்து சென்றது –

லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற –
திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே –
கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி -என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

(ஸாப்தமாக -இங்கு -அனுமானம் -அர்த்தம் கொண்டு கீழே
அனுமானம் -அர்த்தம் –
ப்ரத்யக்ஷம் -ஸ்பஷ்டம் என்றவாறு
ஹேது கர்ப்ப விசேஷணம்
தேவகிக்கு விசேஷணம் -உள் அமுது -திரு
அடைமொழி -என்றும் எடுத்துக்காட்டு
காரணத்தை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிற அடைமொழி
லோகம் உய்யப் பெற்றது -காரணம் -உலகம் உஜ்ஜீவனம் ஹேது இரண்டு இடத்திலும் பொருந்தும் –
ஏக தேச த்ருஷ்டாந்தம் -முகம் சந்திரனைப்போல் )

ரூபத்தால் கரியதாய் –
உஜ்ஜ்வலமாய் இருந்துள்ள
மணி போன்ற வடிவை உடையவன் –
மதனன் கருப்பு சிலை போல் இருக்கிற திரு புருவங்களின் அழகை காணுங்கோள்-

—————————————

பதினெட்டாம் பாட்டு –
திரு மகர குழையின் அழகை அனுபவிக்கிறார் –
(காது ஆபரணத்தைச் சொன்னது காதையும் அனுபவித்த படி
கர்ண பூஷணமா -தலைக்குழலுக்கு ஆபரணமா -தோளுக்கு ஆபாரணமா –
இவை எல்லாம் இல்லை -எனது மனத்தில் உள்ள உனக்கு ஆபரணம்
மகர குழை நெடும் காதர் -தென் திருப்பேரை திவ்ய தேசம் –
எம்பார் எம்பெருமானார் -காது அணிகள் பிரசித்தம் -நமது குறைகளைக் கேள்விப்பவர்கள் )

மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணன் எழில் கொள்மகர குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -1-2-18-

பதவுரை

மண்ணும்–பூமியையும்
மலையும்–மலைகளையும்
கடலும்–கடல்களையும்
உலகு எழும்–ஸப்த லோகங்களையும்
உண்ணுந்திறந்து–திரு வயிற்றிலே வைக்கிறவளவில்
மகிழ்ந்து–உகந்து
உண்ணும்–திரு வயிற்றிலே வைத்த
பிள்ளைக்கு–(இக்) கண்ண பிரானுடையதான
எழில் வண்ணம் கொள்–அழகிய நிறங்கொண்ட
மகரம் குழை இவை–இம் மகர குண்டலங்களின்
திண்ணம் இருந்த–திண்மை இருந்த படியை
காணீர்! சேயிழையீர்! வந்து காணீர்!!

சர்வ ஆதாரமான பூமியும் –
பூமிக்கு ஆதாரமான பர்வதங்களும் –
பூமிக்கு ரஷகமான சமுத்ரங்களும் –
மற்றும் உண்டான சர்வ லோகங்களும் -பிரளயம் கொள்ளாதபடி -திரு வயிற்றில் வைக்கிற அளவில் –
இவற்றை ரஷிக்க பெற்றோமே -என்னும் உகப்பிலே –
இதுவே தாரகமாக திரு வயிற்றில் வைத்த பாலனுக்கு –

திருமேனிக்கு பரபாகமான திரு நிறத்தையும் –
ஸ்வ சம்ஸ்தான வைசித்ரியால் வந்த அழகையும்
உடைய திரு மகர குழைகளான-இவற்றினுடைய –
கண்டவர்கள் கண்ணையும் நெஞ்சையும் கவரும்படியான திண்மை இருந்தபடியை காணுங்கோள்-
(அழகிய ஆபரணங்களாலே அலங்க்ருதையான நீங்கள் பாருங்கோள் )

———————————————-

பத்தொன்பதாம் பாட்டு -திரு நெற்றியின் அழகை அனுபவிக்கிறார் –

முற்றிலும் தூதையும் முன்கை மேல் பூவையும்
சிற்றில் இழைத்து திரி தரு வோர்களைப்
பற்றிப் பறித்துக் கொண்டாடும் பரமன் தன
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே -1-2-19-

பதவுரை

சிற்றில்–சிறு வீடுகளை (மணலினால்)
இழைத்து–செய்து கொண்டு
திரி தருவோர்களை–விளையாடித் திரியும் சிறு பெண்களை
பற்றி–(வலியக்) கையைப் பிடித்துக்
கொண்டு (அவர்களுடைய)
முற்றிலும்–(மணல் கொழிக்கிற)சிறு சுளகுகளையும்
தூதையும்–(மணற்சோறாக்குகிற)சிறு பானைகளையும்
முன் கை மேல்–முன் கை மேல் (வைத்து கொண்டு பேசுகிற)
பூவையும்–நாகண வாய்ப் புள்ளையும்
பறித்துக் கொண்டு–அபஹரித்துக் கொண்டு
ஓடும்–ஓடுகின்ற
பரமன் தன்–(தீம்பில்) சிறந்தவனான
கண்ண பிரானுடைய
நெற்றி இருந்த ஆ காணீர்!
நேர்–நேர்த்தியை யுடைய
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!

கொட்டகம் இரு விளையாடும் பெண்கள்
(சல்லடை-வேண்டாதது நிற்கும் –
முறம் – வேண்டியது உள்ளே நிற்கும் –
நாம் முறம் போலவே இருக்க வேண்டும் -)
முற்றிலும் -மணல் கொழிக்கிற  சிறு சுளகுகளையும்-சிறு முறம்
தூதையும் -மணல் சொறாக்குகிற-சிறிய பானைகளையும்
முன் கை மேல் -முன் கை மேல் நின்று விளையாடுகிற-பூவையும் -நாகணை வாய்ப் புள்ளையும்
பறித்து –
பரமன் தன் -தீம்பில் தலைவனானவனுடைய
அந்த ஆயாசத்தாலே குறு வேர்ப்பு  அரும்பின திரு நெற்றியின் அழகை காணுங்கோள் –

(சங்கல்பத்தாலே ஸ்ருஷ்ட்டி இத்யாதி செய்பவனுக்கு இத்தால் வியர்வை –
ஸ்ரமம் இதுவே -போராடி பிடுங்க வேண்டுமே )

நுண்ணியதான ஆபரணங்களை உடைய நீங்கள்-
ஆபரணங்களுக்கு நுட்பமாவது –
ஸௌஷ்யமாதல் -(தொழிலின் ஸூஷ்மம் )
ஸௌகுமார்ய அநு குணமான லாகவம் ஆதல் –

——————————————–

இருபதாம் பாட்டு –
திரு நெற்றியின் அழகை அனுபவித்த அநந்தரம் –
திரு குழலை அனுபவிக்கிறார்-
(கொள்கின்ற கோள் இருளை -இல் பொருள் உவமை -பட்டை தீட்டி -சாரமாக்கி -மை தீட்டி –
அன்று மாயன் குழல் -எடுத்து கழிக்க இவ்வாறு செய்ய வேண்டுமே )

அழகிய பைம் பொன்னின் கோலம் கை கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
மலம் கன்று இனங்கள் மறித்து திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-

பதவுரை

அழகிய–அழகியதும்
பைம் பொன்னின்–பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான
கோல்–மாடு மேய்க்குங் கோலை
அம் கை–அழகிய கையிலே
கொண்டு–பிடித்துக் கொண்டு
கழல்கள்–(கால்களிலுள்ள) வீரக் கழல்களும்
சதங்கை–சதங்கைகளும்
கலந்து–தன்னிலே சேர்ந்து
எங்கும் ஆர்ப்ப–போமிடமெல்லா மொலிக்க
மழ–இளமை பொருந்திய
கன்று இனங்கள்–கன்றுகளின் திரள்களை
மறித்து–(கை கழியப் போகாமல் மடக்கி)
திரிவான்–திரியுமவனான கண்ண பிரானுடைய
குழல்கள்–திருக் குழல்களானவை
இருந்த ஆ காணீர்!
குவி முலையீர்! வந்து காணீர்!!

கண்டவர்கள் கண்ணுக்கு அழகியதாய் -பசும் பொன்னால் சமைந்து இருப்பதான கோலை
கன்றுகளை மறிக்கைக்கு உபகரணமாக வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படி
அழகியதான கையிலே பிடித்துக் கொண்டு –

கன்றுகளை மறிக்கைகாக அதிர ஒடுகையாலே திருவடிகளில் சாத்தி இருக்கிற
வீரக் கழல்களும்
சதங்கைகளும் தன்னிலே கலந்து
எங்கும் ஒக்க த்வநிக்கை

இளம் கன்றுகளினுடைய திரள்களை கை கழிய போகாமல் மடங்குவித்து
சஞ்சரியா நின்று உள்ளவனுடைய –
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி -என்கிறபடியே
அதிர ஒடுகையாலே
அசைந்து நீங்கிச் செல்லும் திருக் குழலின் அழகு இருககிறபடியை காணுங்கோள்-

(சேனா தூளிசமான திருக்குழல்கள் வயசான பின்பு –
புழுதி அளைந்த பொன் மேனி காண உகப்பாளே )

————————————————–

நிகமத்தில்
இத் திருவாய் மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு  ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-

பதவுரை

சுருப்பு ஆர்–வண்டுகள் படிந்து நிறைந்த-(சுரும்பு ஆர் -சுருப்பு ஆர்)
குழலி–கூந்தலை யுடையளான
அசோதை–யசோதைப் பிராட்டியால்
முன்–க்ருஷ்ணாவதார ஸமயத்திலே
சொன்ன–சொல்லப்பட்ட
திருப்பாத கேசத்தை–பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை
தென் புதுவை பட்டன்–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார்
விருப்பால்–மிக்க ஆதரத்தோடு ( யசோதா பிராட்டி விட மிக்க )
உரைத்த–அருளிச்செய்த
இருபதோடுஒன்றும்–இவ்விருபத்தொரு பாட்டுக்களையும்
உரைப்பார் தாம்–ஓதுமவர்கள்
போய்–(இம் மண்டலத்தைக் கடந்து) போய்
வைகுந்தத்து–ஸ்ரீவைகுண்டத்திலே
ஒன்றுவர்–பொருந்தப் பெறுவார்கள்

சுரும்பு ஆர் -வண்டுகள் படிந்து கிடக்கும் படியான -சுரும்பார் என்கிற இது சுருப்பார் என்று கிடக்கிறது
மெல் ஒற்று வல் ஓற்றாக
முன் -மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால் -அவதார சமயத்தில் அனுபவித்து பிறர்க்கும் அழைத்துக் காட்டிச் சொன்ன
போய் -பிரகிருதி மண்டலத்தை கடந்து போய்
ஒன்றுவர் -பொருந்தி இருப்பார்கள் –

கோதை குழலாள் யசோதை –
பணைத் தோள் இள ஆய்ச்சி –
மைத் தடம் கண்ணி யசோதை -இத்யாதிகளால் யசோதை பிராட்டியை வர்ணித்து சொன்னவையும் –

உழம் தாள் நறு நெய்-
அதிரும் கடல் நிற வண்ணன் –
நோக்கி யசோதை -இத்யாதிகளால் அவனுடைய சேஷ்டிதங்களாக சொன்னவையும் –

மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான் –
இரு மா மருதம் இறுத்த இப் பிள்ளை –
சகடத்தை சாடிப் போய் வாள் கொள் வளை எயிற்றால்  ஆர் உயிர் வவ்வினான் –
இத்யாதிகளாலே இவனுக்கு நிரூபகமாக அருளி செய்த அவதாராந்தர சேஷ்டிதங்களும்

இவ் வவாதாரம் தன்னில் உத்தர கால சேஷ்டிதங்கள் எல்லாம் அவதார காலத்துக்கு பிறபாடராய் இருக்க செய்தேயும்
மயர்வற மதி நலம் அருள பெறுகையாலே-
சர்வ காலத்தில் உள்ளதும் பிரகாசிக்கும்படியான தசை பிறந்த இவர்
இவ்விஷயத்தில் ஆதார அதிசயத்தாலே அருளிச் செய்தாராம் இத்தனை

யசோதை பிராட்டி உடைய சிநேகத்தை  உடையராய் கொண்டு அனுபவித்ததும் –
இவள் பாதாதி கேசம் அனுபவித்து பிறர்க்கு காட்டின கட்டளையிலே பேசினதுமான இதுவே –
அவளோடு இவருக்கு சாம்யம் ஆகையாலே –
அசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன் விருப்பால் உரைத்த -என்று அருளிச் செய்தார் ஆய்த்து-

இந்த ந்யாயத்தாலே மேலில் திரு மொழிகளிலும் இப்படி வந்தவற்றிற்கு வகை இட்டு கண்டு கொள்வது –
(போகத்தில் வழுவாத விட்டு சித்தன் அன்றோ இவர் )

இருபதோடு ஒன்றும் உரைப்பார் –
இருபத்தொரு பாட்டையும் சாபிப்ரயமாக சொல்லுவார் என்னுதல் –
பாவ பந்தம் இல்லையே ஆகிலும் -சப்த மாத்ரத்தை சொல்லுவார் -என்னுதல் –

போய் இத்யாதி –
இவ் விஷயத்தை பரி பூர்ண அனுபவம் பண்ணலாம் படியான
ஸ்ரீ வைகுண்டத்திலே போய் -சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்கிறபடியே –
அவனை அனுபவித்து மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு
ஒரு காலமும் பிரிவின்றி இருக்க பெறுவர்-

(அவனை அனுபவித்து
மங்களா சாசனம் பண்ணி
இருக்கும் படி உபகரித்து அருளினார் இவர் என்றபடி
வை குண்டம் -குறைவு அற்ற -ஞானம் பக்தி ப்ரேமம் பூர்ணம் -ஒன்றி இருக்கப் பெறுவோம் – )

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: