ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை–33/34/35/36/37/38/39/40–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

சூரணை-33-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷன ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–

அநந்தரம் பல யம அபாவ பிரசனத்தை அனுவதிக்கிறார் –

இத்தால் கீழ் அதிகாரி நியம அபாவத்துக்கு உடலாக காட்டப் பட்டதர்ம புத்ராதிகள் தொடக்கமான
பிரபத்தாக்கள் ஆனவர்கள் –
ராஜ்ய அர்த்தமாகவும் –
வஸ்த்ர அர்த்தமாகவும் –
பிராண அர்த்தமாகவும்
கைங்கர்ய அர்த்தமாகவும்
ராம பிராப்தி அர்த்தமாகவும்
சமுத்திர தரண அர்த்தமாகவும்
ராம அனுவ்ருத்தி அர்த்தமாகவும்
பிரபத்தி பண்ணுகையாலே பிரபத்திக்கு பல நியமம் இல்லை என்றது ஆய்த்து–

————————————————–

சூரணை -34
விஷய நியமம் ஆவது
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-
பூர்த்தி உள்ளத்தும் அர்ச்சாவதாரத்திலே –

ஆக பிரபத்திக்கு தேச காலாதி நியம அபேஷை இல்லை என்ற பிரதிஞ்ஜையை உபபாதித்தார் கீழ் –
விஷய நியமமே உள்ளது -என்ற பிரதிஞ்ஜையை உபபாதிக்கிறார் மேல் –

குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை -என்றது
பரத்வாதிகள் ஐந்திலும் வைத்து கொண்டு ஸௌலப்யாதி குண பூர்த்தி உள்ள இடமே
விஷயமாகை என்ற படி –அந்த குண பூர்த்தி தான் உள்ளது எங்கே என்ன -பூர்த்தி உள்ளதும்
அர்ச்சாவதாரத்திலே என்கிறார் –
அர்ச்சாவதார விஷயே மயாப் உத்தேச தஸ் ததா உக்தா
குண நசக்யந்தே வக்தும்  வர்ஷ சதைரபி -என்று
ஸ்வ தஸ் சர்வஞ்ஞனான தானே சொல்ல புக்காலும் சொல்லி தலை கட்ட
அரிதாம் படி இறே அர்ச்சாவதார குண பூர்த்தி இருப்பது –

—————————————————-

சூரணை -35
ஆழ்வார்கள் பல இடங்களிலும்
பிரபத்தி பண்ணிற்றும்
அர்ச்சாவதாரத்திலே –

இக் குண பூர்த்தி உள்ள அர்ச்சாவதாரமே ப்ரபத்திக்கு அடைத்த விஷயம்
என்னும் அத்தை -பிரபன்னஜன கூடஸ்தருடைய அனுஷ்டானத்தாலும்
பிரகாசிப்பிக்கிறார் மேல் –

-மயர்வற மதிநலம் அருளி பெறுகையாலே-பரத்வாதிகளை எல்லாம் கரதலாமலகமாக
கண்டு இருக்கிறவர்கள் இறே ஆழ்வார்கள் -இப்படி இருக்கிறவர்கள் பிராப்யத் த்வரா அதிசயத்தாலே
பலகாலும் பிரபத்தி பண்ணுகிற அளவில் பல இடங்களிலும்  அர்ச்சாவதார த்திலே இறே
பிரபத்தி பண்ணிற்று -ஸ்தலாந்தரத்தில் க்வாசித்  கமித்தனை இறே –
எங்கனே என்னில் -ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான நம் ஆழ்வார் –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக  தந்து ஒழிந்தாய்-
கழல்களையே சரணாக கொண்ட –
நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று இப்படி பல இடங்களிலும்
பிரபத்தி பண்ணிற்று அர்ச்சாவதாரத்தில் இறே –
பிறந்தவாறும் -ஒன்றிலும் இறே அவதாரத்தில்சரணம் புக்கது –
திரு மங்கை ஆழ்வாரும் –
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரனியத்துள் எந்தாய் –
விரையார் திருவேம்கடவா நாயேன் வந்து அடைந்தேன் –
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –
ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –
என்று இப்படி அர்ச்சாவதாரத்திலே இறே பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்று –

மற்றை ஆழ்வார்களுக்கும்  இப்படி தத்தத்  பிரபந்தங்களில் கண்டு கொள்வது –
பிரபந்தம் பண்ணிற்றும் என்கிற இந்த ச சப்தத்தாலே -பூர்த்தி உள்ளதும் -என்று
கீழ் சொன்னதை சமுச்சயிக்கிறது –

———————————————-

சூரணை -36
பூர்ணம் -என்கையாலே எல்லா குணங்களும் புஷ்கலங்கள் –

இப்படி இவ் ஆழ்வார்கள் பிரபத்தி பண்ணும் இடங்களில் -பரத்வாதிகள் எல்லாம் இருக்க –
அர்ச்சாவதாரத்திலே பண்ணுகைக்கு அடி -இதின் குண பூர்த்தி இறே -அந்த குண
பூர்த்தி தன்னை ச பிரமாணமாக அருளி செய்கிறார் -மேல் –

பூர்ணம் என்கையாலே -என்றது –
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஷ்யதே சர்வம் பூர்ணம் சஹோம் -என்று
சுருதி சொல்லுகையாலே என்ற படி –
எல்லா குணங்களும் புஷ்கலங்கள் -என்றது –
ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதகங்களான குணங்களோடு -ஆஸ்ரய கார்ய ஆபாதகங்களான
குணங்களோடு வாசியற சகல கல்யாண குணங்களும் -இவ் விஷயத்திலே சம்பூர்ணம் -என்றபடி

———————————————–

சூரணை-37
பிரபத்திக்கு அபேஷிதங்களான ஸுலப்யாதிகள்
இருட்டறையிலே விளக்கு போலே
பிரகாசிப்பது இங்கே –

ஆனால்-வாசு தேவோசி பூர்ண -என்ற பரத்வத்தில் காட்டில் -இங்குத்தைக்கு ஏற்றம்
என் என்ன -அருளி செய்கிறார்-

பிரபத்திக்கு அபேஷிதங்களான -என்றது -உபாயமாக பற்றும் இடத்தில் வேண்டும் அவையான -என்றபடி –
சௌலப்யாதிகளாவன-கண்டு பற்றுகைக்கு உறுப்பான சௌலப்யமும் –
மேன்மை கண்டு அகலாமைக்கு உறுப்பான சௌசீல்யமும்-
கார்யம் செய்யும் என்று விச்வசிக்கை உறுப்பான ஸ்வாமித்வமும்-
குற்றம் கண்டு வெருவாமைக்கு உறுப்பான  -வாத்சல்யமும் —
நிகரில் புகழாய்  -இத்யாதியாலே -இந் நாலு குணத்தையும் இறே ஆழ்வார் அருளி செய்தது –
இருட்டறையில் விளக்கு போலே பிரகாசிப்பது இங்கே -என்றது -பரத்வத்தில் இக்
குணங்கள் எல்லாம் உண்டாய் இருக்க செய்தே -பரம சாம்யாபன்னருக்கு
முகம் கொடுக்கிற இடம் ஆகையாலே பகல் விளக்கு போலே பிரகாசம் அற்று இருக்கும் –
அர்ச்சாவதாரமான இடத்தில் தண்மைக்கு எல்லை நிலமான சம்சாரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கையாலே -அந்தகாரத்திலே தீபம் போலே அத்யுஜ்வலமாய்
தோற்றும் என்றபடி -விஷயம் உள்ள இடத்தே இறே குணங்கள் பிரகாசிப்பது –
அங்கு உள்ளாரும்  சீலாதி குணம் அனுபவம் பண்ணுகைக்கு வருவது இங்கே இறே –
சௌலப்யம் முன்னாக அருளி செய்தது -கண்டு பற்றுகைக்கு உறுப்பான
சௌலப்யமே பிரபத்திக்கு பிரதான அபேஷிதம் என்று தோற்றுகைக்காக —

———————————————

சூரணை -38
பூர்த்தியையும் ஸ்வா தந்தர்ய த்தையும்
குலைத்து கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களை
தான் ஆதரித்து நிற்கிற இடம் –

இக் குணங்கள் பிரகாசிப்பது இங்கே -என்றதை உபபாதிக்கிறார் –

பூர்த்தி யாவது -அவாப்த சமஸ்த காமத்வம் -அத்தை குலைத்து கொள்கையாவது –
இவன் இட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டும் படி சாபேஷனாய் இருக்கை-
ச்வாதந்த்ர்யம் ஆவது -சுவாதீன ஸ்வரூபதிமத்த்வம்-அத்தை குலைத்து கொள்கையாவது –
ஆஸ்ரித ஆதீன ஸ்வரூப ஸ்திதி  யாதிகளை உடையவன் ஆகை   –
ததிச்சயா மகாதேஜோ புங்க்தேவை பக்தவத்சல
ஸ்நானம் பானம் ததா யாத்ரம்  குரு தேவை ஜகத்பதி
ஸ்வதந்த்ரஸ் ச ஜகன்னாத ப்யஸ் வதந்த்ரோ யதா ததா சர்வ சக்திர்
ஜகத் தாதாப்யசக்த இவ சேஷ்டதே-என்ன கடவது இறே –
அர்ச்சக பராதீனா கிலாத்மா ஸ்திதி -என்று அருளி செய்தார் இறே பட்டர்-
தன் இச்சை ஒழிய இவற்றை குலைக்கைக்கு ஹேது இல்லாமையாலே –
குலைத்து கொண்டு -என்கிறார் –
தன்னை அநாதரிக்கிறவர்களை தான் ஆதரித்து நிற்கிற இடம்-என்றது –
தான் இப்படி சுலபனாய் வந்து நின்றாள்-அரியவன் எளியவனாய் -நிற்க பெற்றோமே என்று
விரும்பி மேல் விழுகை அன்றிக்கே -அவ எளிமை தானே ஹேதுவாக உபேஷிக்கிற
சம்சாரிகளை -தான் விட மாட்டாத அளவு அன்றிக்கே -அவர்களை ஒழிய
செல்லாமை தோற்றும் படி நிற்கிற ஸ்தலம் அர்ச்சாவதாரம் என்கை –
பூர்த்தியையும் ச்வாதந்த்ர்யத்தையும் குலைத்து கொண்டு நிற்க்கையாலே –
சௌலப்ய சொவசீல்யங்களும்-தன்னை அநாதரிக்கிறவர்களை தான்
ஆதரித்து நிற்க்கையாலே-ச்வாமித்வ வாத்சல்யங்களும் இங்கே தோற்ற நின்றது இறே -அன்றிக்கே –
பூர்த்தியையும் -என்று தொடங்கி இவ் வாக்கியம் எல்லா வற்றாலும் –
குண சதுஷ்டைத்திலும் பிரதானமான ஸுலப்யத்தையே யோட வைத்தார் ஆகவுமாம்-
அப்போது இவ் விஷயத்தினுடைய சௌலப்ய அதிசயத்தை தர்சிப்பிகிறார்
என்று வாக்ய சங்கதியாக கடவது – கண்ணுக்கு விஷயமாம் படி நித்ய
சந்நிதி பண்ணுகிற அளவு அன்றிக்கே -சர்வ பிரகார பரி பூர்ணனாய் -நிரந்குச ச்வதந்த்ரனாய்
இருக்கிற தன்னை சாபேஷனும் பரதந்த்ரனும் ஆக்கி கொண்டு -தன்னை அநாதரிக்கிற சம்சாரிகளை
தான் ஆதரித்து நிற்க்கைக்கு மேல்பட்ட சௌலப்யம் இல்லை இறே –
ஏவம் பஞ்ச பிரகாரோஹா மாத்மானாம் பததாமத
பூர்வஸ் மாதபி பூர்வ ஸ்மாஜ் ஜ்யாயாம்சை வோத்தரோத்த்ர
சொவ்லாப்யதோ  ஜகத்ச்வாமீ ஸோலபொஹ் யுத்தரோதர -என்று பரத்வாதிகள் ஐந்திலும்
சௌலப்யம் உண்டாய் இருக்க செய்தே -பூர்வ பூர்வத்தில் காட்டில் உத்தர உத்தரத்துக்கு
சௌலப்யம் அதிசயித்து இருக்கும் என்று தானே அருளி செய்கையாலே –
சொவ்லப்யதுக்கு  எல்லை நிலம் அர்ச்சாவதாரம் இறே –

———————————————-

சூரணை-39-

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் –
அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —

பரத்வாதிகளுடைய து-த்வர்லப்யத்தையும் -அர்ச்சாவதார சௌலப்யத்தையும்
திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் மேல் –

த்ருஷ்ணார்த்தனுக்கு தேசாந்தரித்தில் போக வேண்டாதபடி நிற்கிற இடம் தன்னிலே –
உண்டாய் இருக்க செய்தேயும் -கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது
குடிக்க கிடையாத பூகத ஜலம் போலே ஆய்த்து-கண்டு பற்ற வேணும் என்று ஆசைப் பட்டவனுக்கு
ஹிருதயத்திலே இருக்க செய்தேயும் -கட்கிலீ -என்கிறபடியே -கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே –
அஷ்டாங்க யோக ரூபா யத்னத்தாலே காண வேண்டும்படியான அந்தர்யாமித்வம் –
அவனுக்கு -அண்டத்துக்கு புறம்பே பெருகி கிடக்கிற ஆவரண ஜலம் போலே ஆய்த்து -இவனுக்கும் அப்பால் –
முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது -என்கிறபடியே லீலா விபூதிக்கு அப்பால் பட்டு இருக்கிற பரத்வம் –
அப்படி அதிவிப்ரக்ருஷ்டம் அன்றியே – அண்டாந்தர்பூதமாய் இருக்க செய்தேயும் அவனுக்கு துஷ்ப்ராபமான
பால் கடல் போலே ஆய்த்து -இவனுக்கும் பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம்  கேட்டேயும் -என்கிறபடியே
கேட்டு இருக்கும் அத்தனை அல்லது சென்று காண அரிதாம்படி இருக்கிற வ்யூஹம் –
ப்ரத்யா சன்னமாயும் -தாத்காலிகர்க்கு உப ஜீவ்யமாய் பச்சாத் யனானவனுக்கு துர்லபமான பெருக்காறு போலே
ஆய்த்து -மண் மீது உழல்வாய் -என்கிறபடியே பூமியிலே அவதரித்து சஞ்சரித்தும் -தத் காலவர்த்திகளுக்கு ஆஸ்ரயநீயமாய்
பிற் காலத்தில் உளனான இவனுக்கு கிட்டாத படியான விபவம் –
முன்பு சொன்னவை போல் அன்றிக்கே -அவனுக்கு விடாய் கெட  பருகலாம் படி -பெருக்காற்றிலே தேங்கின
மடுக்கள் போலே ஆய்த்து –இவனுக்கும் தேச கால காரண விப்ரக்ருஷ்டமின்றிக்கே –
கோயில்களிலும் கிருஹங்களிலும் -என்றும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம் படி நிற்கிற –
பின்னானார் வணங்கும் ஜோதி -யான அர்ச்சாவதாரம் –
பௌ மதி கேத நேஷ்வபி குடி குஞ்செஜ்ஷூ-என்கிறபடியே -பல இடங்களிலும்
சன்னதி பண்ணி நிற்கும் படியை நினைத்து இறே -மடுக்கள் போலே – என்ற பஹு வசனத்தாலே
அருளி செய்தது -அவதார குணங்கள் எல்லாம் அர்ச்சா ஸ்தலங்களில் பரி பூரணமாய் இருக்கையாலும் –
அவதார விக்ரஹங்களை அர்ச்சா ரூபேண பல இடங்களிலும் பரிக்ரஹித்து கொண்டு இருக்கையாலும்
-அதிலே தேங்கின மடுக்கள் போலே -என்கிறது –

——————————————————-

சூரணை -40
இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை  மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால்  உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —

இப்படி ஆச்ராயண ருசி பிறந்தார்க்கு ஆச்ரயணீயத்வே சுலபமாய் இருக்கும் அளவே அன்றிக்கே –
ருசி ஜநகத்வாதிகளும் -இவ் அர்ச்சாவதாரத்துக்கு உண்டு என்று இதன் வைபவத்தை அருளி செய்கிறார் மேல் –

பிரக்ருதமான சௌலப்யாதி குண யோகத்தை உள் கொண்டு -இது தான் -என்று பராமர்சிக்கிறார் –
சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாமை யாவது -ஹித அனுசானம் பண்ணுகிற சுருதி ஸ்ம்ருதி யாதி
சாஸ்திரங்கள் ஆனவை -அருசி பிறக்கும் படி இதர விஷயங்களை விட்டு இவ் விஷயத்தை பற்றும் படி
பண்ண போகாமை துர் வாசன பலம் உபதேசத்தை நிரர்தகம் ஆக்கி விடும் இறே-
ஜன்மாந்திர  சகஸ்ரேஷூ யா புத்திர் பாவிதா நிருணாம்
தாமேவ பஜதே ஜந்துருபதேசோ நிரர்தக-என்ன கடவது இறே –
விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய் போருகை யாவது –
சிலம்படி உருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனா யறத்தையே மறந்து புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கி -என்றும் –
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலே மிகுத்து கண்டவா திரிந்து -என்றும் –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -என்றும் சொல்லுகிறபடி –
இதர விஷயங்களிலே அத்யபி நிவிஷ்டராய் -யாதேனும் பற்றி நீங்கும் விரதத்தை ஏறிட்டு கொண்டு –
பகவத் விஷயத்தில் முகம் வைக்க இசையாதே வர்திக்கை-இப்படி போரும் சேதனருக்கு –
வைமுக்யத்தை மாற்றி ருசியை விளைக்கை -யாவது –
போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன பல்ஆதரம் பெருக வைத்த அழகன் -என்கிறபடியே
ஸ்வ சௌந்தர்யாதிகளாலே -சித்த அபஹாரம் பண்ணி -தன்னை காண வேண்டோம் என்று
இருக்கும் இருப்பை குலைத்து கண்ட கண் மாற வைக்க மாட்டாதபடி பண்ணுகை-
ருசி பிறந்தால் உபாயம் ஆகையாவது -இப்படி தன லக்ஷண்ய  தர்சனத்தாலே
தன்னை நித்ய அனுபவம்பண்ண பெற வேணும் என்னும் ருசி பிறந்த அநந்தரம்-
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -என்கிறபடி
சம்சார நிவ்ருத்தி பூர்விகையான  ஸ்வ ப்ராப்திக்கு தானே சாதனம் ஆகை-
உபாய பரிகிரகம் பண்ணினால் போக்யமுமாய் இருக்கை ஆவது –
தன்னை உபாயமாக பரிகிரகித்தால் உபேய சித்திக்கு ஒரு தேச விசேஷத்திலே போம் அளவும் பார்த்து இருக்க வேண்டாதே –
அணி அரங்கன் என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாதே -என்றும்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே  திரு மால் இரும் சோலை கோனே -என்றும்
சொல்லுகிறபடியே நிரதிசய போக்யமாய் இருக்கையாலே தானே உபேயமுமாய் இருக்கை–

ஆக-
பிரபதிக்கு குண பூர்த்தி  உள்ள இடமே விஷயமாக வேணும் என்றும் –
அது தான் உள்ளது அர்ச்சாவதாரத்திலே என்றும் –
அத்தை பற்ற ஆழ்வார்கள் எல்லோரும்  பிரபத்தி பண்ணிற்று இவ் விஷயத்தில் என்றும் –
இவ் விஷயத்தில் எல்லா குணங்களும் புஷ்கலங்கள்  என்றும் –
விசேஷித்து ப்ரபத்திக்கு அபேஷித குணங்கள் விசதமாக பிரகாசிப்பது இங்கே என்றும் –
இது தான் தன்னுடைய நைர பேஷ்யாதிகளை அழிய மாறி –
தன்னை அநாதரிப்பாரை ஆதரித்தது கொண்டு நிற்கிற ஸ்தலம் என்றும் –
பரத்வாதிகள் ஒரொரு பிரகாரத்திலே துர்லபம் -இது சர்வ பிரகார சுலபம் என்றும் –
இவ்வளவே அன்றி இவ் விஷயம்
ருசி ஜநகமுமாய்
உபாய
உபேயமுமாய்
இருக்கும் என்றும் சொல்லப் பட்டது –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: