முமுஷுபடி-திருமந்திர பிரகரணம் -சூரணை 105-115..–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

சூரணை -105
ஆய -என்கிற இத்தால் –
சென்றால் குடையாம் -என்கிறபடியே எல்லா அடிமைகளும்
செய்ய வேண்டும் என்று அபேஷிக்கிறது

ஆக நாராயண — பதத்தாலே -கைங்கர்ய பிரதிசம்பந்தியான ஈஸ்வரன் படியை அருளிச் செய்தார் ஆயிற்று –
இனி இதில் விபக்தி அம்சத்தாலே கைங்கர்யத்தை பிரார்திக்கிற படியை அருளிச் செய்கிறார் –
அதாவது
ஆய -என்கிற இந்த சதுர்தியாலே -சென்றால் குடையாம் –முதல் திரு அந்தாதி –53-என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே
திருவனந்தாழ்வானை  போலே சர்வ வித கைங்கர்யங்களையும் செய்ய வேணும் என்று அபேஷிக்கிறது -என்கை-

————————————————————–

சூரணை -106
நமஸ்ஸாலே  தன்னோடு உறவு இல்லை என்று வைத்து கைங்கர்யத்தை பிரார்த்திக்க கூடுமோ என்னில்-

நமஸ்ஸாலே தனக்கு என்று ஒன்றை விரும்புகைக்கு ப்ராப்தி இல்லாத அத்யந்த பாரதந்த்ர்யம் சொல்லி இருக்க –
இக் கைங்கர்யத்தை தான் விரும்பி அபேஷிக்கை சம்பவியாது என்று
இருக்குமவர்கள் பண்ணும் ப்ரசனத்தை அனுவதிக்கிறார் –

————————————————–

சூரணை -107
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -என்கிறபடியே கைங்கர்ய பிரார்த்தனை
வந்தேறி அன்று -ஸ்வரூப பிரயுக்தம் –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே –பெருமாள் திருமொழி –4-9-என்று
அத்யந்த பாரதந்த்ர்யத்தோடே கைங்கர்ய பிரார்த்தனையும் சொல்லுகிற படியே கைங்கர்ய பிரார்த்தனை –
ஸ்வ போக்த்வத்வ ரூப அஹங்கார பிரயுக்தமாய் கொண்டு வந்தேறியானது அன்று –
சேஷிக்கு அதிசயத்தை விளைத்து அல்லது தான் தரியாத
படியான தன் ஸ்வரூபத்தை பற்றி வந்தது -என்கை-

—————————————————-

சூரணை -108
ஆகையால் வழு  இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிற பிரார்த்தனையை காட்டுகிறது –

உக்தத்தை ஹேதுவாய் கொண்டு சதுர்த்தியின் கைங்கர்ய பிரார்த்தனா பிரகாசத்வத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
கைங்கர்ய பிரார்த்தனை வந்தேறி அன்றிகே ஸ்வரூப பிரயுக்த3-3-1-என்கிற பிரார்த்தனையை
இச் சதுர்த்தி பிரகாசிப்பிகிறது -என்கை-

—————————————————

சூரணை-109
கண்ணார கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்-என்கிற படி
காண்பதற்கு முன்பு  உறக்கம் இல்லை –
கண்டால் -சதா பஸ்யந்தி -ஆகையால் உறக்கம் இல்லை –

இனி இந்த கைங்கர்ய ப்ரார்தனை இடை விடாமல் நடக்கைக்கு உறுப்பான ப்ராப்ய ருசியை உடையார்
படியை அருளிச் செய்கிறார் –
அதாவது –
இமையோர்கள்  குழாம் தொழுவதும்  சூழ்வதும் செய் தொல்லை மாலை கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல் –திரு விருத்தம் –97-என்று
நித்ய சூரிகளுடைய திரளானது அநந்தரம் பண்ணுகிற சர்வேஸ்வரனை கண்கள் நிறையும் படி
கண்டு ஒழிய கழியாதபடியான காதலிலே நிலை நின்ற காதலிலே நிலை நின்றவர்களுக்கும்
கண்கள் உறங்குதல் உண்டோ -என்னுமா போலே
விஷயத்தை காண்பதற்கு முன் -ஞான சங்கோச ரூபமான உறக்கம் இல்லை –
கண்ட காலத்தில் -சதா பஸ்யந்தி -என்கிறபடியே
சதானுபவம் பண்ணுகையாலே உறக்கம் இல்லை -என்கை-

————————————————

சூரணை -110
பழுதே பல காலும் போயின -என்று இழந்த நாளுக்கு கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகு இல்லை –

இன்னும் ஒரு ஹேதுவினாலே இவனுக்கு உறக்கம் இல்லாமையை அருளிச் செய்கிறார் –
அதாவது
செங்கண் அடலோத வண்ணர் அடி அரவணை மேல் கண்டு தொழுதேன்
பல காலும் பழுதே போயின என்று அஞ்சி அழுதேன் –முதல் திரு அந்தாதி -16-என்று
விஷயத்தைக் கண்டு அனுபவித்தவாறே –
இப்படி அனுபவிக்கைக்கு உடலான அநேக காலம் எல்லாம் வியர்த்தமே போய் விட்டதே என்று –
இழந்த நாளை நினைத்து க்லேசித்து கூப்பிடுகிறவனுக்கு மேல் உள்ள நாளில் உறக்கம் வர வழி இல்லை -என்கை-

———————————————————–

சூரணை -111
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் -என்னா நின்றார்கள் இறே-

இன்னம் இவ் விஷயத்தில் அறிவு பிறந்தார்க்கு மறக்கப் போகாது என்னுமத்தை இசைவிக்கிறார் –
அதாவது
என்னைப் பெறுகைக்காக திருப்பதிகளிலே நிற்பது -இருப்பது -கிடப்பதாக நிற்க-
அக் காலத்தில் நான் ஞான லாபமான ஜென்மத்தை உடையனாக பெற்றிலேன் –
அந்த ஜன்மம் உண்டான பின்பு -அவனை ஒரு காலும் மறந்திலேன் -என்று சொல்லா நின்றார்கள் இறே –

ஆக
ப்ராப்ய வை லஷண்ய ஞானம் பிறந்தார் படி இது ஆகையாலே –
இந்த கைங்கர்ய ப்ரார்தனை இடைவிடாமல் நடக்கும் என்று கருத்து –

—————————————————–

சூரணை -112
இவ் அடிமை தான் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி என்கிறபடியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் அனுவர்த்திக்கும் –

இனி இந்த கைங்கர்யத்துக்கு தேச காலாதி நியமம் இல்லாமையை அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ் ஆத்மாவினுடைய ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமான இந்த கைங்கர்யம் தான் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி –திரு வாய் மொழி –3-3-1-என்று
ஒழிவில்லாத காலம் எல்லாம் சர்வ தேசத்திலும் உடனாய்
சர்வ அவஸ்தையிலும் பிரியாது நின்று -என்கிற படியே
சர்வ தேசத்திலும்
சர்வ காலத்திலும்
சர்வ அவஸ்தையிலும்
நடந்து செல்லும் என்கை –

——————————————————–

சூரணை -113
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே திருமந்தரம் –

பார்யைக்கு மங்கள ஸூத்திர தாரணம் பர்த்தாவுக்கு அனந்யார்ஹை என்று காட்டுமா போலே –
திரு மந்திர தாரணம் சேதனர்க்கு பகவத அனந்யர்ஹத்வ பிரகாசகம்  என்னும் இடம் தோற்ற –
இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச் செய்கிறார் –
அதாவது –
பதினாறு இழையாய் இரண்டு சரடாய் இருக்கும் லௌகிகமான மங்கள சூத்ரம் போல் அன்றிக்கே –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே –
எட்டு  திரு அஷரமாய்-
மூன்று பதமாய் இருக்கிறது திரு மந்த்ரம் -என்கை –

——————————————————–

சூரணை -114
இத்தால் ஈஸ்வரன் ஆத்மாக்களுக்கு பதியாய் நின்று ரஷிக்கும் என்கிறது –

இப்படி நிரூபித்து சொன்ன இத்தால் எவ்வர்த்தம் சொல்லுகிறது என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
இத்தை மங்கள ஸூத்ரமாக சொன்ன இத்தால்-
ஈஸ்வரன் இத்தோடு அந்வயமுடைய ஆத்மாக்களுக்கு
பதியாய் நின்று ரஷிக்கும் என்று சொல்கிறது -என்கை-

——————————————————–

சூரணை -115
ஆக திரு மந்தரத்தால் –
எம்பிரானுக்கே உரியேனான நான்
எனக்கு உரியன் அன்றிக்கே ஒழிய வேணும்
சர்வ சேஷியான நாராயணனுக்கே
எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும் –
என்றது ஆயிற்று –

இனி இம் மந்தரத்தால் பிரதிபாதித்த அர்த்தத்தை ஸங்க்ரஹித்துச் சொல்லி
இத்தை நிகமித்து அருளுகிறார் –
ஆக என்று
கீழ் பரக்க அருளிச் செய்த எல்லாவற்றையும் தொகுத்து அருளிச் செய்கிறார் என்னும் இடம் தோற்ற

எம்பிரானுக்கே உரியேனான நான் -இதில்
எம்பெருமானுக்கு -என்று சதுர்த்யந்தமான பிரதம அஷரத்தில் அர்த்தத்தையும் –
அவதாரணத்தாலே-மத்யம அஷரத்தில் அர்த்தத்தையும்
உரியேனான நான் -த்ருதீய அஷரத்தில் அர்த்தத்தையும் -சொல்லுகையாலே –
பிரதம பதத்தை ஸங்க்ரஹித்த படி

எனக்கு உரியேன் அன்றிக்கே ஒழிய வேணும் -இதில்
எனக்கு உரியன் -என்று ஷஷ்டைந்தரமான மகார அர்த்தத்தையும் –
அன்றிக்கே ஒழிய -என்கையாலே நகார அர்த்தத்தையும்
வேணும் -என்கையாலே -இவ் அர்த்தம் சேதனனுக்கு பிரார்தநீயம் என்னும் அத்தையும் பிரதி பாதிக்கையாலே
மத்யம பதார்த்தைதை ஸங்க்ரஹித்த படி –

சர்வ சேஷியான  நாராயணனுக்கே எல்லா அடிமைகளும் செய்ய பெறுவேனாக வேணும் -இதில்
சர்வ சேஷியான நாராயணனுக்கே -என்று கைங்கர்ய பிரதி பந்த சம்பந்தியையும் –
கைங்கர்ய பிரார்த்தனா பிரகாசிகையான சதுர்தியையும் –
எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும் -என்று
கைங்கர்ய பிரார்த்தானா பிரகாரத்தையும் –
த்ருதீய பதார்த்தை ஸங்க்ரஹித்தபடி

என்றதாயிற்று -என்றது
என்று சொல்லிற்று ஆயிற்று -என்கை –

விஸ்தரேண அருளிச் செய்தததை மீளவும் இப்படி ஸங்க்ரஹித்து அருளிச் செய்தது
திரு மந்திர அர்த்தத்தை எல்லோரும் அனுசந்திதிக்கைக்காக –

ஆகையால் எல்லார்க்கும் இவ் அர்த்தம் எப்போதும் அனுசந்தேயம் .

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: