ஆச்சார்ய ஹிருதயம்- – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம் — சூர்ணிகை -113/114/115/116/117/118/119/120..

சூரணை-113-

எல்லாம் செய்தாலும் ஏவம் பூத கிருபை தான் அநாதி காலம் இவாத்மா விஷயமாக பெருகாமல் ,
இன்று பெருகும் அளவில் ,இதுக்கு ஓர் அடி வேண்டுகையாலே
இதுக்கு உடலாகக் கற்பிக்க லாவதொரு ஸூஹ்ருதம் இல்லையோ என்ன
அருளிச் செய்கிறார்..

வரவாறில்லை
வெறிதே என்று அறுதி இட்ட பின்
வாழ் முதல் என்கிற
ஸூஹ்ருதம் ஓழியக்
கற்பிக்கலாவது இல்லை ..

வரவாறு இல்லை என்று-
அதாவது-
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்—பெரிய திருவந்தாதி -56-என்று
இது வந்த வழி இன்னது என்று இதற்க்கு சொல்ல லாவது ஒரு ஹேதும் இல்லை-
பேறும் மிகவும் இனிதாய் இரா நிற்கும் என்றும் –

வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்கு- திருவாய் -8-7-8-என்று
தாம் செய்ய நினைத்தவர்களுக்கு -நிர் ஹேதுகமாக கிருபை பண்ணுவர் என்றும் –
இப்படி விஷயீகாரம் நிர் ஹேதுகம் என்று தாமே அறுதி இட்ட பின்பு –

வாழ் முதல் என்கிற ஸூஹ்ருதம்-
அதாவது –
தனியேன் வாழ் முதலே–திருவாய் -2-3-5- -என்று
சம்சாரத்தில் ஒரு துணை இன்றிக்கே இருக்கிற என்னுடைய அனுபவத்துக்கு பிரதம ஸூஹ்ருதம் ஆனவனே -என்று
தம்முடைய பேற்றுக்கு மூல ஸூஹ்ருதமாக இவர் அருளிச் செய்த அவன் தன்னை ஒழிய வேறு
கற்பிக்கலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை என்கை-

அன்றிக்கே –
யாத்ருச்சிகளாதிகள் உண்டாகில் தோன்றும்–107–என்று அஜ்ஞாத ஸூஹ்ருதமும் இவருக்கு இல்லை என்றவாறே
இப்படி நேராக கழிக்க வேணுமோ ?-
அநாதி காலம் அங்கீகரியாதவன் இன்று செய்கையாலும்
அல்லாத ஆத்மாக்கள் எல்லாம் கிடக்க , இவரை இப்படி விஷயீகரிக்கையாலும்,
இதற்கு உடலானது ஏதேனும் ஒரு ஸூஹ்ருதம் இவர்க்கு உண்டாகக் கூடும்
என்று கார்யத்தை இட்டு அனுமித்ததாகிலும் , கல்பிக்க லாவது ஓன்று இல்லையோ என்ன-
அப்படி கல்பிக்க லாவது இல்லை என்னும் இடத்தை ,விஸ்த்ரேண பிரதி பாதிக்கிறார் என்று சங்கதி ஆக்கி-

செய்த நன்றி தேடிக் காணாதே -சூரணை -108-தொடங்கி
வெறிதே என்று அறுதி இட்ட பின் 113-என்னும் அளவும் ஏக வாக்யமாய் கொண்டு
இவ் ஆழ்வார் கருத்தைச் சொல்லி கொண்டு செல்கிறதாய் –
1-என் நன்றி செய்தேனா -என்று பகவத் அங்கீகாரத்துக்கு உடலாக தாம் செய்த ஸூஹ்ருதம் உண்டோ
என்றி தேடிக் காணாதே –
அங்கீகாரத்துக்கு உடலானது இல்லை ஆகில் –
2-அத்வேஷ ஆபிமுக்யங்களுக்கு தக்க தான் உண்டோ என்னில் ,
அவையும் அவனாலே வந்தது –
3-சத் கர்மத்தால் வந்தது அல்ல-
எண்ணிலும் வரும் -என்று பரிகணனை தான் உண்டோ என்னில்- அதுக்கு எண்டானும் இல்லை-..
4-வைத்தேன் மதியால்-யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –
என்கிற அனுமதி இச்சைகள் தானும் உண்டோ என்னில்-அவையும் அவன் உண்டாக்கினது —
5-மாதவன் என்றதே கொண்டு –திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன -இத்யாதிகளால் –
ஈஸ்வரன் வலியவே எறிடிகிறவைகள் இவை –வ்யாவ்ருத்தி யுக்தாதிகள் ..
இவன் நடுவே வந்து-அடியான் என்று பிடித்து-பிரமாண சாஷிகள் காட்டி
அவை கார்யகரம் ஆகாத அளவில் வடிவு அழகைக் காட்டி
இப்படி இவ் வஸ்துவை ஸ்வ தீனம் ஆக்கி கொள்ளும் படி இவனை
நிவாகரர் அற்ற கிருபை சூழ்ந்தது –

6-இவ் விஷயீகாரத்துக்கு-வரவாறு ஓன்று இல்லை -வெறிதே அருள் செய்த இத்தனை-என்று
இவர் தானே அறுதி இட்ட பின்பு –
7-தனியேன் வாழ் முதலே –என்று தம் பேற்றுக்கு மூல ஸூஹ்ருதமாக
இவர் அருளிச் செய்த ஈஸ்வரன் தன்னை ஒழிய இவருக்கு வேறு ஒரு
கற்ப்பிக்க லாவதொரு ஸூஹ்ருதம் இல்லை -இங்கனே யோஜிக்கவுமாம் –
இந்த யோஜனை இதின் பட்டோலையான கிரந்தத்தில் இவர் அருளிச் செய்த மரியாதைக்கு சேரும் –

ஆக இதுக்கு கீழ்
இவர் பிரபாவத்தையும் ,
அதுக்கடி பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்னும் அத்தையும்,
அத்தால் இவருக்கு உண்டான பக்தியின் வ்யாவர்த்தியையும் ,
அது தான் கர்ம ஜ்ஞான சாத்யை அல்லாமையையும் ,
இவரை ஈஸ்வர அங்கீகரித்ததற்கு கேவல கிருபை ஒழிய ஹேது அந்தரம் இல்லாமையையும்
சொல்லிற்று ஆய்த்து-

——————————————

சூரணை-114-

இப்படி நிர்ஹேதுக விஷயீகார பாத்ர பூதரான இவருடைய பக்தி
பகவத் கிருபை ஏக லப்தையாய் இருந்தாலும் ,
உபாகசனுக்கு கர்ம ஜ்ஞான ஜனிதையான பக்தியோபாதி
இவருக்கு பிராப்தி சாதனம் இதுவோ என்ன -அருளிச் செய்கிறார் மேல்–

நலம் அருளினன்
என் கொல் என்று
ஆமூல சூடம்
அருளால் மன்னும் இவர்க்கு
அன்புக்கு அடி யானதுவே
அடி சேருகைக்கும் சாதனம்-
(அன்புக்கு அடி என்றது பக்திக்கு அடி என்றவாறு
அன்புக்கு அடி -பக்திக்கு காரணம் ஈஸ்வர கிருபையே -அதுவே அடி -ஈஸ்வர திரு அடி- சேருகைக்கும் அடி-காரணம் )

நலம் அருளினான் என்று
அதாவது
மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்று
தம்முடைய பக்தி உத்பத்தி காரணம் , கேவல பகவத் கிருபை என்று உபக்ரமித்து ,

என் கொல் என்று –
அதாவது –
என் கொல் அம்மான் திரு அருள்கள்-10-7-4–(பன்மை -உபகார பரம்பரைகள் -ஆ மூல -ஆதி அந்தமாக அருள்கள்)
(நன்கு என் உடலம் கை விடான் -என் மகங்காரம் -இத்தை சாத்தியமாக கொண்டு அதனாலே கொண்டான் –
நாங்கள் குன்றம் கை விடான் -இத்தை சாதன புத்தியாக கை விடான் )
என்னும் அளவாக -ஞான தசையோடு -வர்ண தசையோடு–பிராப்தி தசையோடு -வாசி அற-ஆமூலசூடம்-

அருளால் மன்னும் இவர்க்கு
அதாவது
மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-1-5-11-என்று பிடி தோறும் நெய் ஒழிய செல்லாத சுகுமாரரை போலே ,
நின்ற நிலை தோறும் அவன் அருள் கொண்டே தரிக்க வேண்டும் ஸ்வபாவர் ஆன இவர்க்கு –
( இன்ப மாரிக்கு -அடி தோறும் அர்ச்சை -அருள் மாரிக்கு அடி தோறும் அருள் -அர்ச்சாவதாரமே அருளின் சரம தசை )

அன்புக்கு அடி யானதுவே அடி சேருகைக்கும் சாதனம்-
அதாவது
ஆரா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாய்-6-10-2–என்கையாலே ,
நலம் அருளினன் -என்று பக்தி காரணமாக சொன்ன கிருபையே
அடி சேருகை யாகிற பிராப்த்திக்கும் சாதனம் என்ற படி –

—————————————–

சூரணை -115-

இப்படி ப்ராப்தி சாதனம் கிருபையே ஆகில் ,-இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்ற போதே ,
இவர் அபேஷிதம் செய்து விடலாய் இருக்க ,இவரை வைத்து (உறாமை என்றாலும் சம்சாரத்தில் வைத்து )
ஸ்வ சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாலே ,(ஆத்ம ஞானம் வந்த பின்பு -விஸ்லேஷத்தில் தானே பக்தி வளரும் )
ஞான பக்திகளை வளர்த்தது ஏதுக்கு ஆக என்னும் ஆ காங்ஷையாலே அருளி செய்கிறார் மேல் —

புணர் தொறும் என்னக் கலந்து பிரிந்து
ஞான பக்திகளை வளர்த்தது
கனம் குழை இடக்
காது பெருக்குதலும்
மாச உபவாசி போஜன புறப் பூச்சும் போலே
ஆற்ற நல்ல மா போகச் சிரமமாக —

புணர் தொறும் என்னக் கலந்து பிரிந்து
அதாவது –
தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்கு ஆரா சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து
அது கனவென நீங்கி ஆங்கே அகவுயிரகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரமல்ல
வேட்கை அந்தோ –திருவாய் -10-3-2-(காலைப்பூசல் ) இத்யாதியாலே
சம்ஸ்லேஷிக்கும் தொறும் ,சம்ஸ்லேஷத்தக்கு தக்க அளவில்லாத சுக சாகரமானது ,
அபரித்சேத்யமான ஆகாசத்தையும் கடந்து ,அவ் அருகு பட்டு ,விபூதி த்வயத்தையும்
விளாக் குலை கொள்ள வல்ல அறிவையும் முழுத்தும் படி பெருகி ,-இப்படிப் பெருகின இது —
விஸ்லேஷ பிரசங்கத்திலே (பிரியவே இல்லாமல் இருந்தாலும் )-பெருக்காறு வற்றி அடி சுடுமா போலே ,
ஸ்வப்ன கல்பம் என்னலாம் படி ,வற்றிப் போய் -அத் தசையில் பிராண ஸ்தானமான ஹிருதயத்தில் பூர்வ சம்ஸ்லேஷத்தால் உண்டான ,
புடை தொறும் உள்ளே புகுந்து ,ஆஸ்ரயமான ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி ,அபிநிவேசம் பெருகி
வாரா நின்றது என்று ,சொல்லும் படியாக கலப்பது பிரிவதாய்-
கலவியாலே ஜ்ஞானத்தையும்
பிரிவாலே பக்தியையும் வளர்த்தது –( ஒரே பாசுரத்தாலே இரண்டையும் காட்டி அருளுகிறார் )

கனம் குழை இடக் காது பெருக்குதல் போலே-
அதாவது –
கனத்த பணி இடுகைக்கு இடமாம் படி ,நூல் இட்டு திரி இட்டு குதும்பை இட்டு
காது பெருக்குமா போலேயும்

மாச உபவாசி போஜன புறப் பூச்சு போலே
அதாவது
மாசோ உபவாசிகளுக்கு ,பிரதமத்தில் போஜனத்தை இடில் பொறாது என்று,
சோற்றை அறைத்து உடம்பிலே பூசி ,பொரி கஞ்சி கொடுத்து ,
பொரி கூழ் கொடுத்து ,ஒடுக்கத்திலே போஜனத்தை பொறுப்பிக்குமா போலவும்

ஆற்ற நல்ல மா போகச் சிரமமாக –
அதாவது
ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -திருவாய் -4-5-5–என்று
எனக்கு பொறுக்க பொறுக்க தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி ,(மஹா க்ரம மஹதி அநு பூர்வி -படிக்கட்டு )
அவ் வழியாலே என்னை அடிமை கொண்டவன் என்னும் படி ,
பகவத் அனுபவம் கனாக் கண்டு அறியாத இவர்க்கு-
எம்மா வீடு-2-9-1–என்றும்
கட்டு எழில் வானவர் போகம்-6-6-1–என்றும் சொல்லுகிறபடியே
எவ் வகையாலும் , விலஷணமாய் கொண்டு , கட்டடங்க (நிரஸ்தமான-யதா சைத்தனம் உப்புக்கட்டி போலே )நன்றாய் இருப்பதாய்
அபரிசின்ன ஞான சக்திகரான நித்ய சூரிகள் அனுபவிக்கிற ,போகத்தை முதலிலே கொடுக்கில் சாத்மியாது என்று கருதி ,
அது சாத்மிக்கைக்காக சிரமம் செய்வித்த படி என்கை -(.மா போகத்தை சிரமம் செய்து கொடுத்தார் என்றவாறு )

ஆன பின்பு ஞான பக்திகளை வளர்த்தது பிராப்தி சாதனதயா அன்று ( அனுபவத்துக்காக என்றபடி )என்று கருத்து ..
மாசோ உபாசிக்கு புறப் பூச்சு மாத்ரத்தால் ,போஜனம் பொறாமையால் ,புறப் பூச்சு சொன்ன இது
மற்றைய வற்றுக்கும் உப லஷணம்…
மா போகம் -என்றது -மா வீடு -வானவர் போகம்-என்கிறசந்தைகளில் ஆதி அந்தங்களை சேர்த்து சொன்ன படி —

————————————————

சூரணை -116-

ஆனால் ஞான பக்திகளை வளர்த்தது அதுக்காகிறது –முனியே நான் முகனே -அளவும்
மானச அனுபவம் ஒழிய ,ப்ரத்யஷ அனுபவம் இல்லாத இவர்க்கு -இவற்றை வளர்க்கைக்கு உறுப்பாக
வரும் சம்ச்லேஷ விச்லேஷங்கள் ஆகிற இவை எவை என்ன அருளிச் செய்கிறார் மேல் —

இவற்றால் வரும்
சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் ஆகிறன
எளியனாய் நிற்கும்
அரியனாய் எய்தான் என்கிற
தர்சன சமமான
மானச அனுசந்தானமும்
திண் கொள்ளப் பொறாத
மனஸ் சைதில்யமும் —

(சம்ஸ்லேஷமாவது-எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்சன சமமான மானச அனுசந்தானம்-ஞானத்தால்
மானஸ சாஷாத்காரம்-மனசில் நினைவின் நீட்சியால்-
விஸ்லேஷமாவது திண் கொள்ள பொறாத மனஸ் சைதில்யம் -என்றவாறு
பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே -கலங்கி உள்ளத்தில் உள்ள சம்ச்லேஷ -மானஸ சாஷாத்காரமும் கலங்கி -விஸ்லேஷம் –
கண்ணுக்கு தெரிந்து – புத்திக்கு எட்ட வில்லை -மண்டோதரி -த்வம் அப்ரமேய)

அதாவது –
கீழ் சொன்ன இக் கார்யங்கள் அடியாக வரும் சம்ஸ்லேஷமும் , விஸ்லேஷமும் ஆகிறன-
எளியனாய் –
அதாவது –
கருத்துக்கு நன்றும் எளியனாய்-3-6-1- -என்றும் ,
நிற்கும் –
அதாவது –
நிற்கும் முன்னே வந்து –7-3-6–என்று ,
நெஞ்சுக்கு மிகவும் விசததம அனுபவ விஷயமாய் கொண்டு ,
என் முன்னே வந்து நிற்கும் என்றும் ,
அரியனாய்-
அதாவது –
கண்கள் காண்டற்கு அரியனாய்-3-6-1- -என்றும் ,
எய்தான் –
அதாவது –
என் கைக்கும் எய்தான்-7-3-6–என்று
கண்ணுக்கு அவிஷயமாய் கொண்டு ,கையால் அணைக்கைக்கு எட்டு கிறிலன் என்றும் ,
சொல்லுகிற பிரத்யஷ அனுகூல்யமான மானஸ அனுசந்தானமும் ,

திண் கொள்ளப் பொறாத மனஸ் சைதில்யம்
அதாவது
கண் கட்கு திண் கொள்ள ஒரு நாள் அருளாய் நின் திரு உருவே -5-10-7- -என்று
(தாஹார்த்தன் நாக்கு நனைக்க கேட்பது போலே ஒரு நாள் அருளாய்-
நின் திரு உருவே-இது உன்னதோ -அருளால் நோக்கிக் கொண்டு இருக்க -பக்தாநாம் அன்றோ )
அபேஷிதமான பாஹ்ய அனுபவம் பெறாமையாலே- ஆந்த்ர அனுபவமும் ,
அடி மண்டியோடே கலங்கும் படி அந்தக் கரண சைதில்யமும் என்கை –

———————————————-

சூரணை -117-

ஆனால் அபிமத விஷய சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் புண்ய பாப நிபந்தனமாக வன்றோ ,
லோகத்தார்க்கு வருவது ..
லோக வ்யாவ்ருத்தரான இவருக்கு (மாறன் அன்றோ )இவை வருகைக்கு நிதானம் எது
என்னும் அபேஷையிலே அருளி செய்கிறார் ….

புண்ணியம் பாபம் ,
புணர்ச்சி பிரிவை
அவை சரித்தவர்க்கு
ப்ரிய ஹித பரன்
தான் துளக்கற எங்கும்
தழைக்க நடத்தும் ..

( புண்ணியத்தால் புணர்ச்சி–துளக்கற நடத்தும்
பாபத்தாலே பிரிவு -எங்கும் தழைக்க நடத்தும் -லோகம் எல்லாம் வாழ நான் படுகிறேன் என்றபடி
சரித்தவர் -இறைவனால் புண்ணிய பாபங்களை போக்கப் பட்டவர்
ப்ரிய ஹித பரன் தான் –
பிரிய பரன் தான் -சம்ஸ்லேஷம் நடத்திக் காட்டி -என்றும் –
ஹித பரன் தான் என்றும்-விஸ்லேஷம் நடத்திக் காட்டி
ஆழ்வாரது சம்ஸ்லேஷமும் விஸ்லேஷமும் புண்ய பாப பலனால் இல்லை -அவனது க்ருத்யம் என்றவாறு )

அதாவது
புண்ணியம் பாபம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் –6-3-4- என்கிறபடி
நாட்டார்க்கு புண்ணிய பாப பலமாய் கொண்டு வருகிற சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களை
அவை சரித்தவர்க்கு –
அதாவது –
சார்ந்த இரு வல் வினைகளையும் சரித்து -1-5-10–என்று
தில தைலவத் தாரு வஹ்னி வத் -கத்யத்ரயம் -என்கிறபடி
ஆத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற புண்ய பாப ரூபமான பிரபல
கர்மங்களை விரகர் நெடும் சுவர் தள்ளுவாரைப் போலே ,தான் போக்குகையாலே
அவை இரண்டும் அற்று இருக்கும் இவர்க்கு ,-
( கர்மங்கள் இல்லாமலே லீலா விபூதியில் இருப்பது ஈஸ்வர இச்சையால் அன்றோ )

பிரியா பரன் ஹித பரன் தான்
அதாவது
ப்ரிய பரனும் ,ஹித பரனுமான ஈஸ்வரன் தான் ஞான பக்திகளை வளர்க்கையில் நினைவாலே —
( நிரங்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ நியமன சாமர்த்யத்துக்காக ஈஸ்வர சப்தம் இங்கு )

துளக்கமற
அதாவது
துளக்கம் அற்று அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியான்
என் பைம் தாமரை கண்ணன் -2-6-2–என்று
விபூதி ரஷணத்தைப் பற்ற வரும் அந்ய பரதை கலசாத படி அத்தை ( கடாக்ஷத்தை-)ஒருங்க விட்டுக் கொண்டு வந்து ,
இனி போராதபடி என்னுளே புகுந்து அத்தாலே -விகஸித சஹஜ சார்வஜ்ஞனுமாய் –
(இதுக்கு முன்பு ஆழ்வாரை பெறாமல் மழுங்கிய -சகஜம் இல்லாமல் -சர்வஞ்ஞனாய் இல்லாமல் )
அபி ஷிஷ்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம் க்ருதக்ருத்தயஸ் ததா ராமோ
விஜ்வர பிரமுமோத ஹா -கிஷ்கிந்தா –1-85—என்கிற படி –
உள் நடுக்கமும் தீர்ந்து ,எனக்கு நிரதிசய போக்யனுமாய் ,
நாய்ச்சிமாரையும் புரிந்து பாராமல் ,என்னையே பார்த்து கொண்டு
இதனாலே திரு கண்களும் செவ்வி பெற்று ,
(முன்பு வெறும் கண்ணனாக இப்பொழுது தானே பைம் தாமரைக் கண்ணன் )
இப்படி என்னுடன் கலந்து இருந்தான் என்று ,இவர் ப்ரீதராம் படியாகவும் ,

எங்கும் தழைக்க நடத்தும்-
அதாவது –
தழை நல்ல வின்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்க -9-5-10–என்று
விஸ்லேஷ வ்யசனத்தாலே நான் முடியா நின்றேன் ..
இனி என் துக்கம் காணாமையாலே ,லோகம் எல்லாம்
விஸ்தீரணமாய் ,நன்றான சுகத்தை பெற்று -சம்ருத்தமாகக் கடவது என்னும் படி
அதி மாத்ர துக்க நிமக்னராம் படியாகவும் ,நடத்திக் கொண்டு போரும் என்ற படி ..-

——————————————————-

சூரணை –118-

இப்படி ஈஸ்வரன் வளர்த்துக் கொண்டு போருகிற ஞான பிரேமங்களை உடையரான இவருடைய
ஞான தசையிலும் ,பிரேம தசையிலும் ,உண்டான பேச்சுக்கள் இருக்கும் படி எங்கனே என்ன
அருளிச் செய்கிறார் மேல் ..
(பக்தி என்பதை ப்ரேமம் என்று அருளி -பக்தி முற்றிய தசை -ப்ரேமம் என்ற உரு எடுத்து -)

ஜ்ஞானத்தில் தம் பேச்சு
பிரேமத்தில் பெண் பேச்சு-

அதாவது
ஜ்ஞான தசையில் தாமான தன்மையிலே நின்று பேசுவர் ..
பிரேம தசையிலே அவஸ்தாந்திர பன்னராய் பெண் பேச்சாய்ப் பேசுவர் என்கை-
( ஞானத்தில் ஆண் பேச்சு என்னாமல்-தன் பேச்சு என்றது இந்த பிறவியில் கொண்ட ஆண் ரூபம் என்று
மேலே சொல்லப் போகும் கருத்துக்கு ஸூ சகம் -மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லையே )

—————————————————-

சூரணை -119-

இப்படி தெளிவும் கலக்க முமான இத் தசைகளிலே பேச்சில்
பேதம் ஒழிய ஸ்வரூபத்திலும் பேதம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் —

தேறும் கலங்கி என்று
தேறியும் தேறாது
ஸ்வரூபம் குலையாது

(ஞானம் ப்ரேமம் -தெளிவும் கலக்கமும் என்கிற வார்த்தைகளால் )
ஸ்வரூபம் -சேஷத்வ பாரதந்தர்யம்
ஆண் பெண் -ரூபம் தானே)

தேறும்
அதாவது
தேறும் கை கூப்பும் -7-2-5–என்றும்
(உய்ந்த பிள்ளை கெட்டேன்-என்பர் இவள் தேறும் என்பதே –
சரம தசையில் பிறக்கும் தெளிவுக்கு அஞ்ச வேண்டும் என்பர் நஞ்சீயர் )

கலங்கி –
அதாவது –
கலங்கிக் கை தொழும்-2-4-4- -என்றும்

தெளிந்த தசையிலும் ,கலங்கின தசையிலும் ,
சேஷத்வ பிரகாசமான அஞ்சலி மாறாமையாலே ,

தேறியும் தேறாதும் –
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்கள் ஆகிற
அவஸ்தாந்தரங்களை பஜித்தாலும் , ம்ருத்தான ஆகாரத்துக்கு
அழிவில்லாதால் போலே (மண் பிண்டம் குடம் ஓடு பொடி எல்லாமே மண் தானே )
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனள் இத் திருவே -4-4-7- -என்கிறபடியே ,
தெளிந்த தசையோடு கலங்கிய தசையோடு வாசி அற
உபய அவஸ்தையிலும் ,சேஷத்வ ரூபமான ஸ்வரூபம் நிலை குலையாது என்ற படி ..

———————————————

சூரணை -120-

ஆனால் இவர்க்கு அவஸ்தாந்த்ரம் -ஆவது எது என்னும் அபேஷையில்
அருளிச் செய்கிறார் ..

அடியோம்
தொடர்ந்து குற்றேவல்
அடிச்சியோம்
அடிக் கீழ் குற்றேவல்
ஆகை அவஸ்தாந்த்ரம்-

அடியோம்
அதாவது
அடியோம் போற்றி ஓவாதே -9-2-9-என்றும் ,
தொடர்ந்து குற்றேவல்-
அதாவது-
தொடர்ந்து குற்றேவல் செய்து-9-2-3- -என்று
தாமான தன்மையில் சொல்லுமோ பாதி-
அடிச்சியோம்-
அதாவது-
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் –10-3-6–என்றும் ,
அடிக் கீழ் குற்றேவல்-
அதாவது-
திரு அடிக் கீழ் குற்றேவல் முன் செய்த -1-4-2–என்று சொல்லுகையாலே ,
ஸ்வரூபத்திலும் ,ஸ்வரூப அநுரூப வ்ருத்தி பிரார்த்தனையிலும் பேதம் இல்லை ..
பிராட்டியான பாவனையாலே ,தம் பேச்சான இது போய் ,பெண் பேச்சாகை இவர்க்கு அவஸ்தாந்த்ரம் ஆவது என்ற படி ..
அடியோம் தொடர்ந்து குற்றேவல் -என்று தம் பேச்சாலே சொல்லுகிற இது
அடிச்சியோம் அடிக் கீழ் குற்றேவல்-என்று பெண் பேச்சாகை இவருக்கு அவஸ்தாந்த்ரம் ஆவது என்று
வாக்யத்துக்கு சொல் படுத்தும் க்ரமம் –(வாக்ய அந்வயம் என்றவாறு )

(ஸ்வரூபத்திலும் வ்ருத்தி கைங்கர்யத்திலும் பேதம் இல்லையே –
ஆண் தன்மையில் பாடினாலும் நாயகி பாவமாக பாடினாலும்
சேஷத்வத்துக்கும் கைங்கர்யத்துக்கும் இரண்டு அவஸ்தைகளும்
ஆக நான்கு பாசுரங்கள் காட்டி வியாக்யானம் )

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: