ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம் – -சூர்ணிகை –95/96/97/98–

சூரணை -95-

நித்ய சம்சாரியாய் போந்தார் ஒருவருக்கு பகவத் கடாஷ விஷயமான
அளவிலே நிகில பாபங்களும் நீங்கி -இப் பிரபாவம் எல்லா உண்டாகக் கூடுமோ
என்கிற சங்கையிலே -பகவத் கடாஷ வைபவத்தை அருளிச் செய்கிறார் ..

ச்ரமணி விதுர ரிஷி பத்நிகளை
பூதராக்கின
புண்டரீ காஷன் நெடு நோக்கு
சாபம் இழிந்தது
என்னப் பண்ணும் இறே-

சிரமணீ பூதராக்கின புண்டரீகாக்ஷன் நெடு நோக்கு
அதாவது –
ஸ்ரமநீம் தர்ம நிபுணாம் அபிகச்ச—பாலகாண்டம் -1-57-
( தாயினும் உயிருக்கு நல்கும் சவரியைத் தலைப்பட்ட நன்னாள் ஏயதோர் நெறியின்
எய்தி யிரலையின் குன்றமேறி-கம்பர் ) –என்று கபந்தன் சொன்ன அநந்தரம் –
சோப்ய கச்சன் மகா தேஜஸ் சபரீம்-பால -1-57
( மிக்க தேஜஸ் உடைய ஸ்ரீ ராமபிரான் சபரியிடம் சென்றார் )-என்கிற படியே –
ஸ்வயமேவ சென்று விஷயீகரித்த வேடுவச்சி யான ஸ்ரமணியை
சஷுசா தவ ஸூவ்ம்யேன பூதாஸ்மி ரகுநந்தன –
பாத மூலம் கமிஷ்யாமி யானஹம் பர்ய சாரிஷம் –ஆரண்யம் -74-12-
( ஆண்டவன் அன்பின் ஏத்தி அழுது இழி அருவிக் கண்ணாள்
மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம்
பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேளை -கம்பர் ) என்று
தேவரீர் உடைய அழகிய திரு கண் பார்வையாலே என்னுடைய பிராப்தி பிரதி பந்தங்கள் எல்லாம் போய் –
பரிசுத்தன் ஆனேன் என்று சொல்லும்படி யாகவும் –

விதுரரைப் பூதராக்கின புண்டரீ காஷன் நெடு நோக்கு
அதாவது –
வெள்ளமானது பள்ளத்திலே தானே சென்று விழுமா போலே –
அபிஜனாத்ய அஹங்கார யோக்யதையும் இல்லாமையாலே –
நிவாசாய ய யௌ வேசம விதுரஸ்ய மகாத்மான-உத்யோக பர்வம் – -என்று
தானே சென்று க்ரஹத்தில் புக்கு
விதுரான்னானி புபுஜே சுசீனி குண வந்தி ஸ-உத்யோக பர்வம் –
தம்முடைய ஸ்பர்சம் உள்ளவற்றை விரும்பி அமுது செய்யப் பெற்ற விதுரரை –
பீஷ்ம துரோண வதிக்ரம்யா மாஞ்சைவ மது ஸூதன கிமர்தம் புண்டரீகாஷா
புக்தம் வ்ருஷல போஜனம்-உத்யோக பர்வம் – –
என்று எதிரியானவன்- சீறிச் சொல்லச் செய்தேயும் –
புண்டரீகாஷா -என்னும் படி அழகிய திரு கண்களின் கடாஷத்தாலே
சகல சம்சாரிக தோஷங்களும் போய் பரிசுத்தர் ஆம் படியும் —

ரிஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீ காஷன் நெடு நோக்கு
அதாவது
வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது
ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு–நாச்சியார் -12-6- கொள்ளுகிற போதை –
நெடு நோக்காலே
பக்த விலோசனத்தில் ருஷி பத்நிகளில் ஒருத்தியை –
தத்ரை கா வித்ருதா பர்த்தா பகவந்தம் யதாஸ்ருதம்
ஹிருதோபகூஹ்ய விஜஹவ் தேஹம் கர்ம நிபந்தனம் –ஸ்ரீ பாகவதம் -10-23-34–
(ஒருத்தி கணவனால் தடுக்கப் பட்டவளாய் தான் கேட்டு இருந்தபடியே கண்ணபிரானை மனசால் கட்டிக் கொண்டு
கர்மத்தால் உண்டான சரீரத்தை விட்டாள் )
என்று ஸ்வ விஷய பிராவண்யத்தாலே – அப்போதே சம்சாராம் முக்தையாம் படியையும் –
அல்லாதாரை ஷீண பாபராய் முக்த அர்ஹராம் படி பரிசுத்தராகவும் பண்ணின
சர்வேஸ்வரனுடைய கடாஷமானது –

அம்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து–திருப்பாவை –22 -என்று
அழகிய திரு கண்களாலே எங்களைப் பார்த்து அருளினாய் ஆகில் சாபோபகதரைப் போலே அனுபவித்து அல்லாது
நசியாத எங்கள் பாபம் போய் விடும் என்கிற படியே –
அனுபவ விநாஸ்யமான சகல பாபங்களும் நிவ்ருத்தமாம் படி பண்ணும் இறே என்கை–

பகவத் கடாஷம் தான் சகல பாப ஷபண நிபுணமாகையாலே
பட்டவிடம் -அமலங்களாக –திருவாய் -1-9-9 -என்னும் படி நிர் தோஷமாம் இறே —

——————————–

சூரணை-96-

இப்படி இவரை நிர்ஹேதுகமாக விசேஷ கடாஷம் பண்ணிற்று எதுக்காகா ?
விசேஷ கடாஷ வேஷம் தான் ஏது–
இவர் தாம் பின்பு ஆன படி எங்கனே
என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —

கோ வ்ருத்திக்கு நெருஞ்சியை
புல்லாக்கினவன்
ஜகத் ஹிதார்த்தமாக-
எனக்கே நல்ல அருள்கள் -என்னும் படி
சர்வ சௌஹார்த்த பிரசாதத்தை
ஒருமடை செய்து
இவரைத் தன்னாக்க
லோகமாகத் தம்மைப் போல்
ஆக்கும் படி யானார்-

( கோ விருத்திக்கு -பசுக்களை பாதுகாத்து போஷிக்க )

கோ வ்ருத்திக்கு நெருஞ்சியை
புல்லாக்கினவன்
அதாவது
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி-திருவாய் -10-3-10-என்று பரம பதத்தில் காட்டிலும் ,
பசு நிரை மேய்க்கையே விரும்பி இருக்கும் அவனாகையாலே –
பிருந்தாவனம் பகவதா கிருஷ்ணேந அக்லிஷ்ட கர்மணா
சுபேன் மனசா த்யாதம் கவாம் வ்ருத்தி மபீப்சதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-28–என்கிற படியே
கோ ரஷணத்துக்காக நெறிஞ்சிக் காட்டை -உத்பன்ன நவ சஷ்பாட்யா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-37-
என்கிறபடியே தத் போக்யமான புல்லாம்படி பர சம்ருத்தி ஏக பிரயோஜனமான
திரு உள்ளத்தாலே சங்கல்பித்த சர்வ சக்தி யானவன் –

ஜகத் ஹிதார்த்தமாக-
அதாவது –
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாயச ஜகத் ஹிதிதாய க்ருஷ்ணாய
கோவிந்தாய நமோ நம –பாரதம் -என்கிற படியே
கோ ரஷணத்தோபாதி ஜகத் ரஷணத்துக்கும் கடவன் தானே ஆகையாலே –
ஜகத்தினுடைய ஹிதார்தமாக -( ஆடுதுறை – ஜகத் ரக்ஷணப் பெருமாள் )

எனைத்தோர் பிறப்பும் –எனக்கே நல்ல அருள்கள் -என்னும் படி-
அதாவது –
எனைத்தோர் பிறப்பும் எதிர் சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய அம்மான் திரு விக்ரமனை –
விதி சூழ்ந்தது–திருவாய் -2-7-6 -என்று
அநேக ஜென்மங்கள் நான் பிறந்த ஜென்மங்களுக்கு எதிரே பிறந்து வந்து
எனக்கே தன் பிரசாதங்களைப் பண்ணும் படி சர்வேஸ்வரனை கிருபை கால் காட்டிற்று என்றும் –
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்–திருவாய் -8-6-1 -என்றும்
இத் தலையில் குற்றம் ஆதல் –அஜ்ஞஞத்வம் ஆதல்–தன் சார்வஜ்ஞம் ஆதல் -பாராதே –
தன் பேறாக பண்ணுமதான அருள்களை நமக்கே அசாதாரணமாக தந்து
அருளுகிறவன் என்றும் இவர் பேசும் படி –

சர்வ சௌஹார்த்த பிரசாதத்தை
ஒருமடை செய்து
அதாவது
ஸூஹ்ருதம் சர்வ பூதானாம்-ஸ்ரீ கீதை -5-29-என்கிற படியே
சர்வ பூதங்களின் பக்கலிலும் நடக்கிற தன்னுடைய சௌஹார்த்த
பலமான பிரசாதமாகிற கிருபையை இவர் ஒருவர் விஷயமாகவும் ஒரு மடைப் படுத்தி –

இவரைத் தன்னாக்க-
அதாவது –
என்னைத் தன்னாக்கி –திருவாய் –7–9-1-என்கிற படி-
அஞ்ஞான அசக்திகளுக்கு எல்லையாய் இருக்கிற இவரை-
தன்னோடு ஒத்த ஞான சக்திகளை உடையராம் படி பண்ண
இப்படி அவனால் திருந்தின இவர் –

லோகமாகத் தம்மை போல் ஆக்கும் படி யானார்-
அதாவது –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி–திருவாய் -6-7-2- -என்கிற படி
தம்மோடு அன்வயித்த லோகத்தில் உள்ளவர்கள் எல்லாம்
தம்மை போல் பகவத் ஏக பரராக பண்ணும் படி ஆனார் என்கை —

————————————

சூரணை -97-

தன்னாக்குகை யாவது என் என்ன அருளி செய்கிறார்-

அதாவது
மயர்வற
மதி நலம்
அருளுகை-

அது என்றது -தன்னாக்க – என்றதை பராமர்சிக்கிறது ..
மயர்வற மதி நலம் அருளுகை -ஆவது அஞ்ஞானம் ச வாசனமாக போக்கி
பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கை –
( ஸ்வரூப ஐக்கியம் இல்லை -விபு இல்லை -கீழே தனக்கு ஒத்த ஞான சக்திகளைக் கொடுத்தார் –
இங்கு ஞானம் கனிந்த நலம் )

————————————–

சூரணை-98-

அது தன்னை விசதமாக அருளிச் செய்கிறார் மேல்-
(அது -மயர்வற மதி நலம் அருளுகையாவது )

இருள் துயக்கு மயக்கு மறப்பு என்கிற (ஞானத்தை)
அனுதய சம்சய விபர்யய விஸ்ம்ருதிகள் அற்று
மலர்மிசை எழுகிற ஞானத்தை
காதல் அன்பு வேட்கை அவா என்னும்
சங்க காம அனுராக ஸ்நேகாத்ய அவஸ்தா
நாமங்களோடே
பரம பக்தி தசை ஆக்குகை –

அதாவது-
மயர்வற மதி நலம் அருளுகை ஆகிறது தான் –
இருள் தருமா ஞாலம் –
இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ -என்று
இருள் என்கிற சப்தத்தால் சொல்லப் படும் ஞான அனுதயமும் –

துயக்கன் மயக்கன்–இத்யாதி ஸ்தலங்களில்
துயக்கு என்கிற சப்தத்தால் சொல்லப் படும்
ஸ்தானுர்வா புருஷோவா -என்கிற படியே
க்ராக்ய வஸ்துவை இன்னது என்று நிச்சயிக்க மாட்டாத சம்சயமும் –

மயக்கு -என்கிற சப்தத்தால் சொல்லப்படும்
ரஜ்ஜு சுக்த்யாதி விஷய சர்ப்ப ரூப்யாதி புத்தி போலே
அதஸ்மின் தத் புத்தி ஆகிற விபர்யமும் -(கயிறை பாம்பாக / சுக்தி -முத்துச்சிப்பி – ரூப்யம் வெள்ளி )

மறுப்பும் ஞானமும் –திருவாய் -1-10-10-என்றும்
மறப்பற என்னுள் மன்னினான் -திருவாய் -1-10-10–இத்யாதிகளில் போலே
மறப்பு -என்று சொல்லப் படும் பூர்வ அனுபூத விஷயமாய்
அனுபவ சம்ஸ்கார மாத்ரஜமான ஞானத்தின் உடைய அபாவம் ஆகிற விஸ்ம்ருதியும்
ஆக இந்த சதுர் வித -சங்கோச அவஸ்தையும் அற்று –

மலர்மிசை எழுகிற ஞானத்தை
அதாவது –
மனனகமல மற மலர் மிசை எழு தரும் –திருவாய் -1-1-2-என்கிற படியே
(மனன் அகம் மலம் கீழ் சொன்ன நாலும் )
மன பரிசுத்தியாலே விகசிதமாய் கொழுந்து விட்டு –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67–என்கிற படி
பிராப்த விஷயமான தன்னை நோக்கி கிளருகிற ஞானத்தை –

காதல் என்னும் சங்கத்தை -(சினேகா அங்குரம் -தொடக்க நிலை அங்குரார்ப்பணம்– முளை )
அதாவது –
உளப் பெறும் காதல் –திருவிருத்தம் -59-
நேரிய காதல்-திருவாசிரியம் -2-
காணக் கழி காதல் –இரண்டாம் திருவந்தாதி -56-
கழிய மிக்கதோர் காதல் –திருவாய் -5-5-10-
காதல் கடல் புரைய –திருவாய் -5-3-4-
காதல் கடலினும் மிக்க பெரியதால் –திருவாய் -7-3-6-
காதல் உரைக்கில்–நீள் விசும்பும் கழிய பெரிதால்-திருவாய் -7-3-8–
மெய்யமர் காதல் –திருவாய் -6-8-2–என்றும்-
(காதல் என்ற சொல்லால் சொல்லப்படும் -ஒரு பொருளைப் பார்க்கும் இடத்தில் முதல் முதலில்
மனதில் தோன்றும் ஸ்நேஹத்தின் முளையாய் இருக்கும் சங்கமும் )

அன்பு என்னும் காமம் –
அதாவது –
அன்பு சூட்டிய –திருவிருத்தம் -2-
அன்பில் இன்பு –திருவாசிரியம்-2-
அன்பே பெருகும் மிக –பெரிய திருவந்தாதி -8–என்றும்
ஆரா அன்பு –திருவாய் மொழி -என்றும்
அன்பு என்று சொல்லப்படும் -சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62–என்றபடி
(சங்கத்தின் பின் தோன்றும் பார்க்கப்பட்ட பொருளை அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாதபடி
இருக்கும் முதிர்ந்த நிலையான காமம் )-

வேட்கை என்னும் அநு ராகம்
அதாவது
வேவாரா வேட்கை நோய் –திருவாய் -2-1-10-
பெருகுமால் வேட்கையும் –திருவாய் -9-6-1-
ஆவியின் பரமல்ல வேட்கை–திருவாய் -10 -3 -2— -என்றும்
(வேட்கை என்று சொல்லப்படும் -காமத்தின் காரியமாய் -அனுபவிக்கப்படுகின்ற பொருளின் மேல் ஆசையானது
இடைவீடு இன்றியே இருக்கும் அநு ராகமும் -)

அவா என்னும் ஸ்நேஹம்-
அதாவது –
அவா வொருக்கா வினையோடும் –திருவிருத்தம் -64-
காண்பான் அவாவுவன் –திருவிருத்தம் -84-
சூடுதற்கு அவா –திருவாசிரியம் -2-
அதனில் பெரிய என் அவா-திருவாய் -10-10-10- -என்றும்
இப்படி பல இடங்களிலும் -காதல்-அன்பு- வேட்கை- அவா –என்று சொல்லப் படுகிற விஷய தர்சனத்தில் –
(அப்பொருளை மேலும் மேலும் அனுபவிக்குமது ஒழிய விட்டுப் பிடிக்கப் பற்றாதபடி
அந்த அநுராகத்தின் பின் விளையும் ஸ்நேஹமும் )

அவஸ்தா நாமங்களோடே பரம பக்தி தசை ஆக்குகை –
அதாவது –
பிரதமபாவியாய்–ஸ்நேக அங்குரமான -சங்கமும் –
சங்காத் சஞ்சாயாத காம -என்கிற படியே
தத் அனந்தர ஜாதமாய்-அவ் விஷயத்தை அனுபவித்து அல்லாது
நிற்க ஒண்ணாதபடி இருக்கும் தத் விபாக தசையான காமமும் –
தத் கார்யமாய் -அனுபாவ்ய விஷய ராக அவிச்சேத ரூபமான அனுராகமும் –
தத் அநந்தரம் அவ் விஷயத்தை உத்தரோத்தரம் அனுபவிக்கும் அது ஒழிய
விட்டுப் பிடிக்க பற்றாத படி விளையும் ஸ்நேஹமும் ,
முதலான அவஸ்தைகளுக்கு -அனுரூபமான நாமங்களை உடைத்தாய்க் கொண்டு
பரம பக்தி தசா பர்யந்தம் ஆகும் படி பண்ணுகை என்கை —

காதல் அன்பு வேட்கை அவா -என்னும் இவை-சங்காத் உத்தர உத்தர அவஸ்தைகளுக்கு –வாசகமாய் இருக்க –
முன் பின் கலந்து வந்ததே ஆகிலும் எல்லா அவஸ்தைகளும் இவருக்கு
எப் பொழுதும் பிரகாசித்து இருக்கையாலே –
அப்போதைக்கு அப்போது தம் ஆற்றாமைக்கு ஈடாக பேசுகிறது ஆகையாலே விரோதம் இல்லை —

ஆக இத்தால் சொல்லிற்று ஆய்த்து -மயர்வற மதி நலம் அருளுகை ஆவது –
அஞ்ஞான அபிதையாக சாஸ்திர சித்தமான அனுதயாதி சதுர் வித சங்கோச அவஸ்தையும் அற்று –
விகசிதமாய் கொழுந்து விட்டு -விஷய உன்முகமாக கிளருகிற ஞானத்தை –
ஸ்நேக பிரதம அங்குரமான சங்கம் முதலான உத்தர உத்தர விபாக ரூப அவஸ்தைகளுக்கு
அனுரூபமான காதல் இத்யாதி நாமங்களைப் பஜித்து ,
பிரேம சீமா பூமியான பரம பக்தி தசா பன்னமாகும் படி பண்ணுகை என்றது ஆய்த்து —

ஆக கீழ்-
அத்ரி ஜமதக்னி -சூரணை -92 – இத்யாதி வாக்யத்தில் சொன்ன சங்கைக்கு மூலம்
இவர் பிரபாவம் என்றும்-
அது தனக்கு ஹேது -பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்றும்
கடாஷத்தினுடைய சக்தியும்
இவரை இப்படி கடாஷித்தது லோக ஹித அர்த்தமாக என்றும் –
கடாஷிக்கை யாவது மயர்வற மதி நலம் அருளுகை என்றும் –
அது தன்னின் பிரகாரமும் சொல்லப் பட்டது .

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: