ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்- சூர்ணிகை -91/92/93/94-

சூரணை-91-

இப்படி பாகவத சாமான்ய ப்ரயுக்த வைபவம் மாதரம் அன்றிக்கே ,
ஜனக தசரத -சூரணை -82 -இத்யாதி வாக்கியம் தொடக்கமாக மூன்று
வாக்யத்தாலே -கீழ் சொன்ன வைபவ விசேஷதய உதகமான பிரமாணம்
ஏது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் மேல் –

தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே
க்வசித் க்வசித் என்று
இவர் ஆவிர்பாவம்
கலியும் கெடும் போலே ஸூசிதம்-

தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே–
அதாவது
தஷிண திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மண –குருகா மஹாத்ம்யம் –என்று –
வண் தமிழ் மா முனி –என்கிற படியே -திராவிட சாஸ்திர பிரவர்தகரான அகஸ்தியன் இருக்கிற திக்கு
சர்வருக்கும் புகல் இடம் என்றே மக ரிஷிகளால் –
இப்போது இது சொல்லிற்று –
வைதிகரான ருஷிகள்-திராவிட பிரபந்த வக்தாவான இவரை இப்படி
பஹுமதி பண்ணி சொல்லக் கூடுமோ என்று சங்கிப்பார்க்கு
ஒரு திராவிட ஜ்ஞானாலே தஷிண திக்குக்கு நன்மை சொன்னவர்கள் திராவிட பிரபந்த முகேன –
லோஹ உஜ்ஜீவகரரான இவரையும் இப்படி
பஹுமானம் பண்ணிச் சொல்லக் குறை இல்லை என்று தோற்றுகைக்காக –

க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம் —அதாவது –
க்ருதா திஷு நரா ராஜன் கலா விச்சந்தி சம்பவம் –
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயணா பராயணா
க்வசித் க்வசின் மஹா ராஜ த்ராவிடேஷு ச பூரிச
தாமரபரணி நதி யத்ர கிருதமாலா பயஸ்விநீ
காவேரீச மஹாபாகா ப்ரதீசீச மஹாநதி
யேபிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேச்வர-
தேஷாம் நாராயண பக்திர் பூயஸீ நிருபத்ரவா –ஸ்ரீ பாகவதம் -11-5-38 /39–என்று
ஜ்ஞாதாக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களைத் தத்தம் நதீ விசேஷங்களாலே பிரகாசிப்பித்தது
அந்த நதி விசேஷ ஜலத்தை பானம் பண்ணுகிறவர்களுக்கு பகவத் பக்தி அதிசயிக்கும் படியையும் சொல்லுகிற அளவில் –
பிரதமத்தில் -தாமர பரணி நதீ எத்ர – என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தை சொல்லுகையாலே –
இவ் ஆழ்வார் உடைய ஆவிர்பாவமானது –

கலியும் கெடும் கண்டு கொண்மின் -திருவாய் -5-2-1-இவர் தாம் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
திரு மங்கை ஆழ்வார் உடையவர் போல்வார் அவதரித்து -கலி யுக ஸ்வாபம் கழியும் என்றும் –
மேல் வரும் அம்சத்தை தர்சித்து அருளி செய்தாற் போலே –
திரிகால ஜ்ஞரான ஸ்ரீ ஸூகாதிகளால் ஸூசிக்கப் பட்டது என்கை-

க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகை: கலுஷீக்ருதே விஷ்ணோர் அம்சாம்ச சம்பூதே
வேத வேதார்த்த தத்வ வித் ஸ்தோத்ரம் வேத மயம் கர்த்தும் த்ராவிட்யாபிச பாஷயா
ஜனிஷ்யதி சதாம் ஸ்ரேஷ்டா லோகானாம் ஹிதகாம்யயா –குருகா மஹாத்ம்யம் -இத்யாதி
வசனங்களும் இவர் ஆவிர்பாவ ஸூசகங்கள் ஆகையால் இவ் இடத்தில் விவஷிதங்கள் –

கேவல ஜன்ம வாசக சப்தங்கள் ஒன்றை சொல்லாதே அவதார சப்த பரியாயமான ஆவிர்பாவ சப்தம் சொல்லிற்று
இவர் பிறப்பும் ஈஸ்வரன் பிறப்போபாதி பரார்த்தம் என்று தோற்றுகைக்காக –
இத்தால் இவர் ஒரு அவதார விசேஷம் என்றது ஆயிற்று –

———————————————

சூரணை -92-

இப்படி அவதரித்த இவர் தாம் யார் என்னும் ஆ காங்க்ஷையிலே
பேர் அளவு உடையாரும் – இவரை இன்னார் என்று அளவிடாமை –
அதிசங்கை பண்ணும் படியை அருளிச் செய்கிறார் மேல் –

அத்ரி ஜமதக்னி பங்கிதிரத
வஸு நந்த ஸூனுவானுடைய
யுக வர்ண க்ரம அவதாரமோ ?
வ்யாசாதிவத் ஆவேசமோ ?
மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ ?
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ ?
என்று சங்கிப்பார்கள் –

(அத்ரி ஸூனு -தத்தாத்திரேயன் -அந்தணர் -கிருதயுகம் /ஜமதக்கினி ஸூ னு -பரசு ராமன் -த்ரேதா யுகம் – /
பங்கிதிரத ஸூ னு -சக்கரவர்த்தி திருமகன் -த்ரேதா யுகம் -க்ஷத்ரியர் -பங்க்தி -தச/
வஸூ நந்த ஸூ னு -துவாபர யுகம்-வைசிய குலம் /மூத்தவர் -நித்ய ஸூரிகள் /
கரை கண்டோர் -முக்தர் / சீரியர் -ஸ்வேதத் தீவு வாசிகள் )

அதாவது
கிருத யுகத்தில் அத்ரியும் ஜமதக்னியும் ஆகிய ப்ராஹ்மண உத்தமர்களுக்கு
பிள்ளையாய்க் கொண்டு -தத்தாரேயனும் பரசு ராமனுமாய் –
த்ரேதா யுகத்தில் ஷத்ரியனானான தசரத சக்கரவர்த்திக்குப் பிள்ளையாய் –
த்வாபர யுகத்தில் யயாதி சாபத்தாலே அபிஷேக பிராப்தி அற்ற யது குலோத்பவர் ஆகையாலே
ஷத்ரியரில் தண்ணியராய் -வைஸ்ய பிராயராய் இருக்கிற வஸு தேவருக்கும் –
கிருஷி கோரஷ வாணிஜ்யம் வைஸ்யம் கர்ம ஸ்வ பாவஜம்–ஸ்ரீ கீதை -18-44- –
( பயிர் செய்தல் -பசுக்களைக் காத்தல் -வாணிகம் இவை வைச்யனுக்கு இயல்பான தொழில்கள் ) என்கிற படி –
கோ ரஷணாதி தர்மத்தை உடைய சாஷாத் வைச்யரான ஸ்ரீ நந்தகோபர்க்கும் புத்ரனாய்-
இப்படி கிருதாதி யுக தர்மத்தில் ப்ராஹ்மணாதி வர்ண க்ரமேண அவதரித்து வந்த
சர்வேஸ்வரன் சதுர்தமான கலி யுகத்தில் சதுர்த்த வர்ணத்திலே வந்து அவதரித்த படியோ என்கை –

பூர்வ யுக த்ரயத்திலும் -அடைவே வர்ண த்ரயத்திலும் -அவதரித்து வருகையாலும்
க லவ் புன :பாபரதா பிபூதே ச உத்ப பூவ ஆஸ்ரித வத்சலத்வாத் பக்தாத்மனா
சர்வ ஜனான் ஸூகோப்தும் விச்வாதி கோ விச்வ மயோஹி விஷ்ணு -என்று
கலி யுகத்தில் சர்வேஸ்வரன் பக்த ரூபேண அவதரித்தான் என்று ருஷிகள் சொல்லுகையாலும்
இவர் வைபவம் கண்டவர்களுக்கு இப்படி சங்கிக்க யோக்யதை உண்டு இறே–

வ்யாசாதி வத் ஆவேசமோ -அதாவது –
கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் ப்ரபும்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-4-5- -என்றும் ,
சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மஹாமுனி–பாரதம் – –என்றும் சொல்லுகிற படி
வேதங்களை வ்யசிக்கை முதலான கார்யங்களை நிர்வகிக்கைக்காக வ்யாசாதிகள் பக்கல் ஆவேசித்தால் போலே –
இவரைக் கொண்டு திராவிட வேதத்தை பிரவர்த்திப்பைக்காக –
இவர் பக்கல் ஆவேசித்தானானோ என்கை-
இவரைக் கொண்டு லோகத்தை திருத்துகைக்காக இவர் பக்கலிலே –ஆவேசித்து நிற்கவும் கூடும் ஆகையாலே
இப்படியும் சங்கிக்கலாம் இறே-

மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ-அதாவது –
விண்ணாட்டவர் மூதுவர்–திருவிருத்தம் -2- -என்று பரம பதத்துக்கு நிலத் தாளிகளான
நித்ய ஸூரிகளிலே இவ் விபூதியை திருத்துகைக்காக ஈஸ்வர ந்யோகத்தாலே
அவதரித்தார் ஒருவரோ ?-
அன்றிக்கே –
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்–திருவாய் -8-3-10- -என்று சம்சாரத்தை கடந்து அக்கரைப் பட்டு இருக்கும்
முக்தரில் சம்சாரிகளைத் திருத்துகைக்காக பகவத் நிதேசத்தால் ,அவதரித்தார் ஒருவரோ ?
அன்றிக்கே –
முக்தானாம் லஷணம் ஹ்யதேத் ஸ்வேத த்வீபநி வாசினாம் –பாரதம் -சாந்தி பர்வம் – என்கிற படியே-
முக்த ப்ராயராய் -பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே
தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திருவிருத்தம் –79-என்கிற ஸ்வேத தீப வாசிகளிலே
இவ் அருகு உள்ளாரை திருத்துகைக்காக ஈஸ்வர இச்சையாலே அவதரித்தார் ஒருவரோ என்கை ..

இவருடைய வைபவம் பார்த்தால் ,எல்லார் படியும் சொல்லலாம் படி இருக்கையாலே –
இப்படியும் தனித் தனியே சங்கிப்பார்க்கு சங்கிக்கலாம் இறே —
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் —என்கிற படியே
பிராட்டிமாரோடு சேர்த்து பார்க்கும் போதும் -தனித் தனியே சங்கிக்கலாம்
படி இறே இருப்பது — மற்று உள்ள ததீயர் உடன் பின்னை சொல்ல வேண்டா இறே-

முன்னம் நோற்ற அநந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ –
(முன்னம் நோற்ற புண்ணியங்கள் பலித்தவரோ -என்றும் –
அநந்தன் மேல் புண்ணியம் பலித்தவரோ -என்றும் தனித்தனியே கூட்டிப் பொருள் )
அதாவது –
கீழ் சொன்னவர்கள் ஒருவரும் அன்றிக்கே சம்சாரிகள் தன்னிலே –
முன்னம் நோற்ற விதி கொலோ —திருவாய் -6-5-7-என்கிறபடியே ஜன்மாந்திர சகஸ்ர சஞ்சிதமான
தன்னுடைய ஸூஹ்ருத பலமாக கொண்டு இப்படி திருந்தினார் ஒருவரோ ?
அன்றிக்கே –
அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -திருச்சந்த -45-என்று நிர்ஹேதுக கடாஷ விசேஷத்தாலே –
நித்ய சம்சாரியை நித்ய ஸூரி கல்பம் ஆக்க வல்ல அநந்த சாயியான சநாதன புண்யம் –
முழு நோக்காகாப் பலித்து இப்படி திருந்தினார் ஒருவரோ சங்கிப்பார்கள் –
அதாவது –
இப்படி கீழ் சொன்ன வகைகளால் இவரை இன்னார் என்று
நிச்சயிக்க மாட்டாமல் பேரளவு உடையாரும் சங்கியா நிற்ப்பார்கள் என்ற படி –

—————————————————

சூரணை -93-

இப்படி இவரை ஞானிகள் ஆனவர்கள் சங்கிக்கைக்கு ஹேது என்னும் ஆ காங்ஷையிலே
இதுக்கு மூலம் இவருடைய பிரபாவம் என்கிறார் மேல் –

இதுக்கு மூலம்
1-யான் நீ என்று மறுதலித்து
2-வானத்து மண் மிசை மாறும் நிகரும் இன்றி
3-நிலையிடம் தெரியாதே
4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக
5-இனத்தலைவன் அம்தாமத்து அன்பு செய்ய
6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாகவே
7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து
8-நாட்டியல் ஒழிந்து
9-சடரை ஒட்டி
10-மதாவலிப்தர்க்கு அங்குசம் இட்டு
11-நடாவிய கூற்றமாய்
12-தீயன மருங்கு வாராமல்
13-கலியுகம் நீங்கி கிருதயுகம் பற்றி
14-பட்டு எழு போது அறியாது இருந்த
பிரபாவம்
இதுக்கு மூலம் –

அதாவது
இவரை கண்ட ஞானாதிகர் -இவர் இன்னார் -என்று நிர்ணயிக்க மாட்டாமை –
இங்கன் சங்கிகைக்கு ஹேது –
1-யான் நீ என்று மறுதலைத்து-மாறுபட்டு இருந்த பிரபாவம் –
அதாவது –
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவின்றி யான் பெரியன்
நீ பெரிய என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு -பெரிய திருவந்தாதி -75–என்று தொடங்கி
உபய விபூதியும் உன் சங்கல்ப்பத்தில் கிடக்கின்றன –
ஏவம் பூதனான நீ என்னுடைய ஸ்ரோத்ர இந்திரயத்வாரா புகுந்து விச்சேதம் இன்றி
என் ஹிருதயத்தில் உளையாகா நின்றாய் –இப்படியான பின்பு
விபூதியை உடைய நீயோ விபூதிமானை உடைய நானோ -பெரியார் என்று அறிவார் ஆர் ?
அப்ரதிஹத சக்தியான நீ தான் இத்தை நிரூபித்து அறிந்து காண் என்று
உபய விபூதி யுக்தனோடே மறுதலைக்கிற வைபவத்தை உடையராய் –

2-வானத்து மண் மிசை மாறும் நிகருமின்றி இருந்த பிரபாவம் –
( வானத்து நிகரும் இன்றி -மண்மிசை மாறும் இன்றி -என்று தனித்தனியே கொண்டு பொருள் )
அதாவது –
தண் தாமரை சுமக்கும் பாதப்பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு
இனி யாவர் நிகர் அகல் வானத்தே–திருவாய்-4-5 8– -என்றும்
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடைய மால் வண்ணனை மலைக்கு நா வுடையேற்கு மாறுளதோ
விம் மண்ணின் மிசையே –திருவாய் -6-4-9–என்றும்
அவனுடைய விபூதி யோகத்துக்கும் ஸுகுமார்யத்துக்கும் தகுதி யாம்படி யாகவும் –
சர்வேஸ்வரனாய் அவாப்த சமஸ்த காமனாய் ஒன்றுக்கும் விக்ருதம் ஆகாதவன்
தம்முடைய உக்தி ஸ்ரவண ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தெகிடாகும் படியாகவும்
திரு வாய் மொழி பாடுகிற நாவீறு உடைமையாலே –
உபய விபூதியிலும் உபமான ரஹிதராய்-

3-நிலை இடம் தெரியாதே இருந்த பிரபாவம்
அதாவது –
கலவியும் பிரிவும் கலசி நடக்கையாலே -கல்வியால் வந்த ரசமேயாக செல்லும் அங்குள்ளார் படியும் அன்றிக்கே –
பகவத் குணைக தாரகதையால் அன்ன பானாதிகளால் தரிக்கும் இங்குள்ளார் படியும் அன்றிக்கே –
இப்படி உபய விபூதியிலும் அடங்காமல் –
வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம்-திருவிருத்தம் -75-
என்று வாசஸ்தலம் தெரியாத படியாய் –

4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக இருந்த பிரபாவம் –
அதாவது –
தெய்வத்தினம் ஓர் அனை யீர்களாய்-திருவிருத்தம்-23-என்று ஒருவர் இருவர் அன்றிக்கே –நித்ய ஸூரிகள் எல்லாரும் கூடினாலும்
தமக்கு ஒருவகைக்கு ஒப்பாம் படியாய் —

5-இனத் தலைவன் அம் தாமத்து அன்பு செய்ய இருந்த பிரபாவம் –
அதாவது –
வானோர் இனத் தலைவன் கண்ணன் -பெரிய திருவந்தாதி -25-என்று
அந்த நித்ய ஸூரி சங்க நிர்வாஹனான சர்வேஸ்வரன் ,
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு –திருவாய் -2-5-1–என்று
அழகிய தாமமான பரம பதத்திலே பண்ணும் வியோமோஹத்தை அடைய தம் பக்கலில் பெரு மடை கொள்ளப் பண்ண –

6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாக இருந்த பிரபாவம் –
அதாவது –
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள – திருவாய் -8-9-6- என்று
மேன்மேலும் அவன் விஷயீகாரங்களை பெற்றமைக்கு -ஸூவ்யக்த லாஞ்சனமான
ராகம் வாய் கரையில்- (உதட்டிலே செந்நிறம் -) தோன்றுகை முதலான கலவிக் குறிகள் உண்டாய் செல்ல –

7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து இருந்த பிரபாவம் –
அதாவது –
உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே திருவாய் -6-5-4–என்றும்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -திருவாய் -6-5-2-என்றும்
அவன் சௌந்தர்ய சீலாதிகளை அனுசந்தித்து -உத்தரோதரம்
விளைகிற பாஹ்யாப்யந்தர ஹர்ஷத்தாலே -சிதிலராவது –
ஸ்தப்தோஸ்யுத தமா தேசம ப்ராஷ்ய -சாந்தோக்யம் –
(திமிர் கொண்டவனைப் போலே இருக்கின்றாய் அந்தப் பரம் பொருளைக் கேட்டு அறிந்தாயோ )என்கிறபடியே
சர்வ நியாமக ,பர ப்ரஹ்ம சாஷாத் காரம் பிறந்தாரைப் போலே ஸ்திமித ராவதாய்–

8-நாட்டியல் ஒழிந்து இருந்த பிரபாவம் –
அதாவது –
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே -திருவாய் -10-6-2–என்று
உண்டியே உடையே உகந்து ஓடி -என்றும்
யானே என் தனதே –திருவாய் -2-9-9–என்று
அஹங்கார மமகார வச்யராய் இருக்கிற லௌகீகரோடு சம்பந்தம் அற்று –

9-சடரை ஒட்டி இருந்த பிரபாவம் –
அதாவது –
சடகோபர் ஆகையாலே –ஆர்ஷம் ப்ரஹ்ம தர்ம உபதேசம்ச வேத சாஸ்த்ர விரோதினா -மனு தர்ம சாஸ்திரம் -12–106-
( வேத சாஸ்திரத்துக்கு மாறுபாடு அல்லாத )என்கிற படி
பிராமண அனுகூல்ய தர்கங்களாலே மத்யஸ்தமாக அர்த்தத்தை சாதிக்கை அன்றிக்கே ,
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற சடரை ஸ்ருத்யந்த தாத்பர்யமான ஸ்வோக்தி விசேஷங்களாலே
ஸ்வ சந்நிதானத்தில் நில்லாதபடி துறத்தி –

10-மதா வலிப்தர்க்கு அங்குசம் இட்டு இருந்த பிரபாவம் –
அதாவது –
பராங்குசர் ஆகையாலே -வித்யாமதோ தன மதஸ் த்ருதீயோ அபிஜனோ மத ஏதே மதாவலிப்தானாம்-
( வித்யா மதம் செல்வா மதம் குடிப்பிறப்பு மதம் ) என்று மத ஹஸ்தி போலே அபிஜன வித்யாதி
மத த்ரயா வலிப்தராய் திரியும் அவர்களுக்கு நிர் மதராய் தலை வணக்கும் படி
உபதேச ரூப அங்குசம் இட்டு –

11-நடாவிய கூற்றமாய் இருந்த பிரபாவம் –
அதாவது –
பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம்–திருவிருத்தம் -6- -என்று
வேத வேத்யத்வ த்யோதகமாம்படி வேத மய கருட வாஹனான சர்வேஸ்வரன் விஷயத்தில்-
நின் கண் வேட்கை எழுவிப்பன்–திருவிருத்தம்–96-என்று
எல்லார்க்கும் பக்தியை உண்டாக்கி நடத்தா நின்று கொண்டு தம்
தர்சனத்தில் அகப் பட்டவர்களின் சம்சாரத்துக்கு ம்ருத்துவாய் —

12-தீயன மருங்கு வாராமல் இருந்த பிரபாவம் –
அதாவது –
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்–திருவாய் -5-2-6-என்று
சரீரத்தை முடித்து பிராணனை அபகரிக்க கடவதான வியாதி சாத்ரவ ஸூதாதி( நோய் பகை பசி ) தோஷங்களும்
சாம்சாரிக சகல துக்க ஹேதுவான பாபங்களும் –
வன் துயரை — மருங்கும் –கண்டிலமால்-பெரிய திருவந்தாதி –54-என்ற படி அருகில் வாராத படியாய்-

13-கலியுகம் நீங்கி கிருத யுகம் பற்றி இருந்த பிரபாவம் –
அதாவது –
திரியும் கலியுகம் நீங்கி –திருவாய் -5-2-3-என்றும் –
பவிஷ்ய த்யத ரோத்தரம்-பாரதம் (பொருள்களின் தன்மை தலைகீழாக மாறாடிப் போகின்றன )-என்கிற படி
பதார்த்த ஸ்வ பாவங்கள் மாறாடும் படி பண்ணுவதாய் –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ சரஷ்டாரம் ஈஸ்வரம் நார்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ
பஹதா ஜனா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-1-50–
( கலியுகத்தில் மைத்ரேயரே சர்வேஸ்வரனை பாபங்களால் கெடுக்கப்பட்ட மக்கள் வணங்க மாட்டார்கள் ) என்கிற படி
பகவத் ருசி விரோதியான கலி யுகம் போய் -பெரிய கிருத யுகம் பற்றி–திருவாய் -52-3- – என்கிற படியே
கேவல வைஷ்ணவ தர்மமே நடக்குமதாய் யுகாந்தர வ்யதானம் அன்றிக்கே ஒரு போகியாக கிருத யுகம் பிரவேசிக்கும் படியாக –

14-பட்டு எழு போது அறியாது இருந்த பிரபாவம்-( பட்ட போது-எழு போது -என்று பிரித்து பொருள் )
அதாவது –
பட்ட போது எழு போது அறியாள் விரை மட்டலர் தண் துழாய் என்னும் –திருவாய் –2-4-9-என்று
பகவத் விஷயத்திலே போக்யதா அனுசந்தானத்தாலே –
நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யச்தமிதே ரவவ் -அயோத்யா -105-24–என்று ஆதித்ய உதயத்திலே வந்தவாறே –
த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று உகப்பர்கள்-
அவன் அஸ்தமித்தவாறே அபிமத விஷயங்களோடு ரமிக்கைக்கு காலம் வந்தது என்று உகப்பர்கள் என்றும் –
பிராதர் மூத்ர புரீஷாப்யாம் மத்யாஹ்னே ஷூத் பிபாச்ய சாயம் காமேன பாத்யந்தே ஜந்தவோ நிசி
நித்ரயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-62-( மக்கள் காலையில் மூத்திரம் மலம் இவற்றாலும் – நடுப்பகலில் பசி தாகத்தாலும் –
மாலையில் காமத்தாலும் இரவில் தூக்கத்தாலும் துன்புறுத்தப் படுகின்றார்கள் )என்றும் –சொல்லுகிற படி
நாட்டாருக்கு புறம்பே கால ஷேபத்துக்கு உடலாய் செல்லுகிற திவாராத்ரா விபாகமும் அறியாதே அகால்ய கால்யமான தேசத்தில் போலே
பகவத் அனுபவ ஏக கரராய் இருந்த பிரபாவம் –
இதுக்கு மூலம்–இப்படி இருந்த பிரபாவம்-என்று வாக்ய சம்பந்தம் –

இத்தால் கீழ் சொன்ன சங்கைக்கு காரணம் இன்னது என்று
எல்லாரும் அறியும் படி அருளிச் செய்தார் ஆய்த்து —

———————————————————-

சூரணை -94-

இவருக்கு இந்த பிரபாவத்துக்கு அடி ஏது என்னும் ஆ காங்ஷையிலே
இதுக்கு ஹேது -பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்கிறார் மேல் –
இப்படி கடாஷித்தது தான் இந்த லோகத்தை இவரைக் கொண்டு திருத்துகைக்காக என்னும் அத்தையும் –
இவர் தம்முடைய பூர்வ அவஸ்தையும் –
இவரை கடாஷித்த பிரகாரத்தையும் –
விசதமமாக சொல்லலுகிறது இச் சூரணையிலே –

இதுக்கு ஹேது —
ஊழி தோறும் சோம்பாது
ஒன்றி பொருள் என்று அளி மகிழ்ந்து
முற்றுமாய் நின்று
நூலுரைத்து
யோகு புணர்ந்து
கண் காண வந்து
ஆள் பார்க்கிறவன்
உலகினத்தின் இயல்வை
நல் வீடு செய்ய
இணக்குப் பார்வை தேடி
கழலலர் ஞானமுருவின
முழுதும் ஒட்டின பெரும் கண்
எங்கும் இலக்கு அற்று
அன்போடு நோக்கான திசையிலே
ஆக்கையில் புக்கு உழன்று
மாறிப் படிந்து துளங்குகிறவர்
மேலே பட பக்க நோக்கற
பண்ணின விசேஷ கடாஷம்-

(1-ஆள் பார்க்கிறவன் –2-நல் வீடு செய்ய –தேடி -3-முழுதும் ஒட்டின பெரும் கண் –இலக்கு அற்று —
4-அன்போடு நோக்கான திசையில் –5-துளங்குகிறவர் மேல் பட –6-பக்கம் நோக்கற பண்ணின விசேஷ கடாஷம்- -என்றவாறு )

அதாவது
இதுக்கு ஹேது –
அதாவது –
இவருடைய இந்த பிரபாவதுக்கு ஹேது –
ஊழி தோறும் சோம்பாது ஒன்றி பொருள் என்று அளி மகிழ்ந்து –
அதாவது –
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து -திருவாய் -10-7-9-என்றும்
சோம்பாது இப் பல் உயிர் எல்லாம் படர்வித்த வித்தா -பெரிய திருவந்தாதி -18- -என்றும்
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –திருவாய் -3-9-10-என்றும் –
பொருள் என்று இவுலகம் படைத்தான் –திருவாய் -2-10-11-என்றும்
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து திருவாய் -3-4-8-என்றும்
சொல்லுகிற படி –
பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பி கை வாங்காதே பின்னையும்
கிருஷி தன்னை பண்ணும் கர்ஷகனைப் போலே கல்பம் தோறும் சிருஷ்டிக்கச் செய்தே –
சபலமாகாது இருக்க முசியாதே -மிகவும் ஒருப்பட்டு என்றேனும் ஒரு நாள் –
பிரயோஜனப் படும் என்று க்ருஷியை உகந்து -ஜகத் சிருஷ்டியைப் பண்ணி —

முற்றுமாய் நின்று –
அதாவது –
நில நீர் எரி கால் விண் உயிர் என்று இவைதான் முதலா முற்றுமாய் நின்ற எந்தை திருவாய் -7-6-2-என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அனுப்ராவிசத்-தைத்ரியம் –இத்யாதி படியே ஸ்ருஷ்டமான ஜகத்திலே
இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாகத்வங்களுக்கும்
பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளுக்குமாக அனு பிரவேசித்து –
இவற்றைச் சொல்லும் வாசக சப்தம் தன் அளவிலே பர்யவசிக்கும் படி பிரகாரியாய் நின்று —

நூல் உரைத்து –
அதாவது –
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -பெரிய திருமொழி -11-4-8-என்கிற படி
கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாதபடி திர்யக் ரூபேண தன்னை தாழ விட்டு நின்று –
ஜ்ஞாதவ்ய தர்ம பிரகாசமான சாஸ்த்ரத்தை உபதேசித்து-

யோகு புணர்ந்து –
அதாவது –
குறைவில் தடம் கடல் கோள் அரவேறி தன் கோல செம் தாமரைக் கண் –
உறைபவன் போல் ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன்–திருவாய் -3-10-2-என்கிற படியே
திரு பாற் கடலில் திரு அனந்த் தாழ்வான் மேல் ஏறிப் படுக்கை வாய்ப்பாலே
கண் வளர்ந்து அருளுகிறார் போலே ஜகத் ரஷண உபாய சிந்தை பண்ணி கண் வளர்ந்து —

கண் காண வந்து –
அதாவது –
சிந்தித்த உபாய அனுகுணமாக
துயரில் மலியும் மனிசர் பிறவியில் -தோன்றி கண் காண வந்து–திருவாய் -3-10-6 -என்கிற படியே
சஷுசா பச்யதி கச்ச னைனம் -கட உபநிஷத் -என்றும்
நமாம்ச சஷூர் அபிவீஷதே தம்-என்றும்
கட் கண்ணால் காணா அவ் உரு–பெரிய திருவந்தாதி –28 -என்றும் சொல்லப் படுகிற தான்
துக்கதோரான மனுஷ்யருடைய பிறவியிலே ஆவிர்பவித்து அருளி ,
அவர்கள் மாம்ச சஷுவுக்கு விஷயமாம் படி வந்து-

ஆள் பார்க்கிறவன் –
அதாவது –
இப்படி அவதாராதிகளாலே -ஆள் பார்த்து உழி தருவாய் -நான்முகன் -60–என்கிற படி ,
எனக்கு அடிமை ஆவார் உண்டோ -என்று இதுவே
வேளாண்மையாக தேடித் திரிகிறவன்-

உலகினது இயல்வை நல் வீடு செய்ய –
அதாவது
ஒ ஒ உலகினது இயல்வே—திருவாசிரியம் -6-என்று
தத்வ வித்துகளை கண்டால் சகிக்க மாட்டாமல் விஷணராம் படி –
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுவாரை போலே –பெரிய திருமொழி -11-6-6-
உத்பாதகனாய் சர்வ பிரகார ரஷகனாய் போருகிற பர தேவதையான தன்னை விட்டு
கிடந்த இடம் தெரியாத படி அபிரசித்தமான சூத்திர தேவதைகளை –
ஆட்டை அறுத்தல் – பிரஜையை அறுத்தல்- அத்யந்த நிஷிதமான மதுராதிகளை நிவேதித்தல்- ஆகிய
பரஹிம்சாதி சாதனா முகத்தாலே பஜித்து-
தத்பலமாக துக்க மிஸ்ரமான சுகத்தை தருமவையாய்
அநாதியாய் துஸ்தரமாய் இருக்கிற பிரகிருதி சம்பந்த நிபந்தனங்களான ஜென்மங்களில் நின்றும்
ஒருகாலும் நீங்காமைக்கு உறுப்பாய் –
பல வகைப் பட்டு தப்ப அரிதாய் இருந்துள்ள சப்தாதி விஷயங்களிலே துக்கப் பட்டு
அழுந்துகிற லோக ஸ்வபாவத்தை
யாதேனும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல் வீடு செய்யும் திருவிருத்தம் -95– என்று
அநாதி வாசனையாலே பிரகிருதி பிராக்ருதங்களில் ஏதேனும் ஒன்றை அவலம்பித்து
தன்னை விட்டு அகலுகையே ஸ்வபாவமான சம்சாரி சேதனன் விரதத்தை
நன்றாக விடுவிக்கும் என்கிறபடியே ஸ வாசனமாக போக்குகைக்காக —

இணக்கு பார்வை தேடி-
அதாவது –
மிருக பஷிகளை பிடிப்பார் சஜாதீய புத்தியாலே தன்னோடு
இணக்க வற்றான மிருக பஷிகளை பார்வையாக வைத்து பிடிப்பாரைப் போலே
பார்வை வைத்து இணக்குவதாக அதுக்கு ஆவார் ஆர் என்று தேடி –

கழலலர் ஞானம் உருவின முழுதும் ஒட்டின பெரும் கண்-
அதாவது –
கழல் தலம் ஒன்றே நில முழுதாயிற்று ஒரு கழல் போய் நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா அழறலர் தாமரைக் கண்ணன் –திருவிருத்தம் -58- என்று
தொடங்கி ஒரு திரு அடி தலமே பூமி அடைத்தானாயிற்று
ஒரு திரு அடி பூமியிலே இடம் இல்லாமையாலே போய் சர்வருக்கும் சர்வ காலத்திலும் இந்த சம்பந்தத்தை நினைத்து
தனி நிழலில் ஒதுங்கலாம் படி நிழலை கொடுக்கைக்காக ஊர்த்த்வ லோகங்களில் எல்லாம் நிறைந்தது –
பரப்பை உடைத்தான அவ் அண்டத்தை அடைய புக்குழருகையாலே விகசிதமாய்
இருந்துள்ள ஞானம் ஆகிய பிரகாச ரூபமான தீபத்தை உடையனாம் என்கிற படியே
கழல் தலமும் உழறலர் ஞானமும் -மாறுபாடு உருவின பரப்பு எங்கும் ஓட்டிப் பார்த்த அழறலர்
தாமரை போன்ற செவ்வியை உடைய –
பெரும் கண் மலர்–திருவிருத்தம் -45- -என்ற பெரிய திரு கண்களானவை –

எங்கும் இலக்கு அற்று –
அதாவது –
ஓர் இடத்திலும் அதுக்கு ஆவாரைக் காணாமல் ஒரு விஷயத்தை அப்படிக்கு ஆக்குவதாக பார்க்கிற அளவிலே –

அன்போடு நோக்கான திசையிலே ஆக்கையில் புக்கு உழன்று- மாறி படிந்து துளங்குகிறவர் மேல் பட –
அதாவது
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் -பெருமாள் திருமொழி -1-10-என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விஷயமாக எப்போதும் ஸ ஸ்நேகமாக பார்த்துக் கொண்டு கிடக்கையாலே –
தனக்கு பள்ள மடையான தஷிண திக்கிலே –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு -திருவிருத்தம் -95-என்றும்
ஆக்கையின் வழி உழல்வேன் -திருவாய் –3-2-1-என்றும்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –திருவாய் -3-2-2-என்றும்
பல் பிறவியில் படிகின்ற யான்—திருவாய் -5-1-9-என்றும்
பிறவிக் கடலில் நின்று நான் துளங்க -திருவிருத்தம் -45-என்றும் சொல்லுகிற படி
ஜாதி நியமம் ஆதல் வர்ண நியமம் ஆதல் அன்றிக்கே கர்ம அனுகுணமாக ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து
அந்த சரீரத்தின் வழி போய் ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி அவ் அனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே
அதில் அவஹாகித்து தரை காண ஒண்ணாத சம்சார சாகர மத்யஸ்தராய் கொண்டு நடுங்குகிற இவர் மேல் பட –

பக்க நோக்கற பண்ணின விசேஷ கடாஷம்-
அதாவது
இப்படி இவர் மேல் பட்ட இத்தை
நம் மேல் ஒருங்க பிறழ் வைத்தார் -திருவிருத்தம் -45-என்கிற படியே ஒரு மடைப் படுத்தி
பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணனே திருவாய் -2-6-2- என்று
நாச்சிமார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும் புரிந்து பார்க்க அறியான் என்னும் படி —
நா ஸௌ புருஷகாரேண ந சாப்யன்யேன ஹேதுநா
கேவலம் ஸ்வ இச்சையாவாஹம் ப்ரேஷே கிஞ்சித் கதாசன–பாஞ்சராத்ரம்
(என் இச்சையால் ஒருவனை ஒரு கால் கடாஷிக்கிறேன் -வேறே சாதனத்தாலும் புருஷகாரத்தாலும் இல்லை ) -என்றும்
நிர்ஹேதுக கடாஷேண மதீயேன மகா மதே
ஆச்சார்யா விஷயீகாராத் பிராப்னுவந்தி பராம் கதிம்–பாஞ்சராத்ரம்
(எனது நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே ஆச்சார்யர் அங்கீகாரத்தாலே உயர்ந்த பேற்றினை அடைகிறார்கள் )-என்றும் சொல்லுகிற படி –
ஸ்வ இச்சையால் நிர்ஹேதுகமாக பண்ண பட்ட விசேஷ கடாஷம் —

இதுக்கு ஹேது–இப்படி பட்ட விசேஷ கடாஷம்-என்று வாக்ய அந்வயம் –

ஆக கீழ் உக்தமான இவருடைய பிரபாவத்துக்கு ஹேது ஸ்பஷ்டமாக பிரதி பாதகமாயிற்று ..
இத்தாலே சங்கா வாக்கியத்தில் சொன்ன சங்கைகள் எல்லாம் கிடக்க ,
அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவர் இவர் என்று நிர்ணயமாய் விட்டது .

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: