ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்லோகம்

May 23, 2022

ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்லோகம்

ஸத்ய வ்ரத க்ஷேத்ரவாஸீ ஸத்யஸ் ஸஜ்ஜன போஷக:

ஸர்கஸ்தித்யுபஸம்ஹார காரீஸுகுணவாரிதி:
வரதாபயஹஸ்தாப்ஜ: வனமாலாவிராஜித:
ஸங்க சக்ரலஸத்பாணி: ஸரணாகத ரக்ஷக: – ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்திரம்.

சத்ய விரதம் என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் வரதராஜப் பெருமாளே நமஸ்காரம்.

அப்பாவிகளைக் கரையேற்றும் ஆபத்பாந்தவரே நமஸ்காரம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய

முத்தொழில்களையும் மேற்கொண்டிருப்பவரே,

ஒரு சமுத்திரம் போல சீரிய கல்யாண குணங்களைக் கொண்டு அருள் மழை பொழிபவரே நமஸ்காரம்.

தாமரை போன்ற கரங்களில் அபய-வரத முத்திரைகளைத் தாங்கியிருப்பவரே,

வனமாலையினால் பிரகாசிக்கின்றவரே, நமஸ்காரம்.

சங்கம், சக்கரம் தாங்கியவரே, சரணடைந்தோரைக் காப்பவரே, நானும் சரணடைகிறேன், என்னையும் காத்தருளுங்கள்.

————-
வரதராஜப் பெருமாளைக் குறித்து வரதராஜ பஞ்சாசத் என்ற ஐம்பது ஸ்லோகங்கள் இயற்றினார் வேதாந்த தேசிகன்.
அதன் நான்காவது ஸ்லோகத்தில்,
“கிம் வ்யாஹராமி வரத ஸ்துதயே கதம் வா
கத்யோதவத் ப்ரலகுஸங்குசித ப்ரகாச:
தன்மே ஸமர்ப்பய மதிம் ச ஸரஸ்வதீம் ச
த்வாம் அஞ்ஜஸா ஸ்துதிபதைர்யதஹம் தினோமி”

“வரதா! உன்னைத் துதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டேன்.

ஆனால் என்னால் உன்னை எப்படித் துதிக்க இயலும்?
நீயே உனது கருணையால் எனக்கு அறிவையும் வார்த்தைகளையும் தந்தாயாகில்,
நீ தந்தவற்றைக் கொண்டு உன்னையே துதிசெய்வேன்!” என்கிறார்.

இக்கருத்தையே சுருக்கமாக “ஆறும் அவனே, பேறும் அவனே” என்று சொல்வார்கள்

இதைக் கடோபநிஷத் “ஸா காஷ்டா ஸா பரா கதி:” என்கிறது.
காஷ்டா என்றால் இலக்கு, கதி என்றால் வழி.
இறைவனை அடைய இறைவனே வழி என்று உணர்வது தான் சரணாகதி.
அதை உணர்த்திய வரதராஜப் பெருமாளின் திருவடிகளிலே தாம் சரணாகதி செய்தமையை,
அடைக்கலப்பத்து என்ற பத்துப் பாடல்களாலே தெரிவிக்கிறார்
—————

திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.

வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

இக்கோயிலில் பாஞ்சராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயில் அமைப்பும் உட்சன்னதிகளும்

மலைமீது காட்சி தருவதால மூலவருக்கு மலையாளன் என்ற பெயரும் உண்டு.

மேலும் அவர் வரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான் என்ற பல திருப்பெயர்களைக் கொண்டுள்ளார்.

மேற்கே நோக்கிய நிலையில் நின்ற கோலத்தில் உள்ளார்.

இரண்டாவது மாடியான மேல் மாடி வரதராஜப்பெருமாள் சன்னதியான அத்திகிரி என்றழைக்கப்படுகிறது.

பெருந்தேவித் தாயாருக்கு தனி சன்னதி உள்ளது.

வாரணகிரி என்ற முதல் மாடியில் நரசிம்மன் சன்னதி உள்ளது.

இரண்டாவது திருச்சுற்றில் 24ஆவது படிக்கு எதிராக தங்கத்தினாலும், வெள்ளியாலும் ஆன இரண்டு பல்லிகள் உள்ளன.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றைத் தொட்டு, பெருமாளை வணங்கினால் நோயிலிருந்து விடுபடுவதாக நம்பிக்கை உள்ளது.

இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற

சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத அளவில் 16 கைகளுடன் உள்ளார்.

இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.

முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை,

குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து,

கோயிலின் வசந்த மண்டபத்தில் வைப்பர். அவர் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார்.

இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து

ஒரு மண்டல காலத்துக்கு பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.

கடைசியாக, அவர் 2019ல் எடுக்கப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் தனது அருளை கொடுத்தார்.

மறுபடியும் இவரது சேவை 2059ல் கிடைக்கும்.

பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மர சிலையானது “ஸ்ரீ ஆதி ஹஸ்திகிரி நாதர்” என்று அழைக்கப்பட்டார்.

பிரம்மாவின் கட்டளைப்படி இந்த சிலையை தேவ லோக சிர்பி – விஸ்வகர்மா வடிவமைத்தார்.

——————–

என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-

வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-

ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-

ஆழியான் அத்தியூரான்.

————–

அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-

துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், – மூத்தீ-

மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்

இறையாவான் எங்கள் பிரான்.

அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி (வாரணாசி), காஞ்சி (காஞ்சிபுரம்), அவந்திகா (உஜ்ஜைன்) மற்றும் துவாரவதி (துவாரகா);

இந்த புனித ஷேத்ரங்களை ஒரு ஸ்லோகம் மூலம் கூறலாம்:

“அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா த்வராவதி சைவ ஸப்தைத மோக்ஷ தாயகா::”

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஜல நரஸிம்ஹர்–ஸ்ரீ யாதகிரி லெட்சுமி நரஸிம்ஹர் கோவில்–

May 23, 2022

ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச

யஸ்ப  அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து

பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்

ஸ்தம்பே அவதார தம் அநந்ய  லப்யம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே

” பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே !!

தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே !

நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே !

லட்சுமி நரசிம்மனே ! உனது திருவடியைச் சரணடைகிறேன் .


ஸ்ரீ ஜல நரஸிம்ஹர்-

300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீரில் உள்ள விசித்திர நரசிம்மர் கோவில்

மக்கள் செல்வதற்கு ஏதுவாக ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் பல கோவில்கள் அமைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

அதேபோல் முருகன் உள்ளிட்ட பல கடவுள்களின் கோவில்கள் மலை மேல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.

அனால் இவற்றை எல்லாம் கடந்து ஒரு விசித்திரமான குகை கோவில் .

கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளது ஜர்னி நரசிம்மர் குகை கோவில்.

பல நூறு ஆண்டுகளாக இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் நரசிம்மரை காண்பது அவ்வளவு எளிதல்ல.
ஆங்காங்கே வவ்வால்கள் தொங்கிக்கொண்டிருக்கும் 300 அடி நீளமுள்ள குகையில்,

மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றால்தான் இங்குள்ள நரசிம்மரை தரிசிக்க முடியும்.

இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது.

இந்த தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருப்பதால் இதில் நடந்து சென்றால் தீராத பல நோய்கள் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

குகையின் முடிவில் சிவ லிங்கமும், நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றினார் என்று சிலர் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், பிரகலநாதனுக்காக நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர்

ஜலசூரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ததாகவும். அந்த அரக்கன் ஒரு சிறந்த சிவ பக்தன் என்றும்.
இந்த குகையில்தான் அவன் தவம் செய்து சிவனை வழிபட்டதாகவும், நரசிம்மர் அவனை வதம் செய்த பின்னர்

இந்த குகையில் அவன் ஜலமாக(நீராக) மாறி சிவனின் பாதத்தில் இருந்து ஊற்றெடுத்ததாகவும்,

அந்த அசுரனின் ஆசைக்கு இணைக்க நரசிம்மர் இந்த குகையில் குடிகொண்டார் என்றும் கூறுகின்றனர்.
கடினமான பாதைகளை கடந்து நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செல்லும் பக்தர்களுக்கு

இங்கு நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

———————————

ஸ்ரீ யாதகிரி லெட்சுமி நரஸிம்ஹர் கோவில்

https://yadagiriguttasrilakshminarasimhaswamy.org/index.html

ஸ்ரீ யாதகிரி நரசிம்மர் கோவில் (Yadagirigutta Templeதெலுங்கானாவில் உள்ள விஷ்ணுவின் நான்காம் அவதாரமான நரசிம்மர் கோவில் ஆகும்.

இந்த கோவில் இந்தியாவில் தெலுங்கானா மாநிலதில் புவனா யாததிரி மாவட்டதில் உள்ள யாதகிரிகுட்டா எனும் சிறு நகரதில் உள்ள சிறுகுன்றில் உள்ளது-

இந்த கோவில் ஐதராபாத் இருந்து 52 கி.மீ துரத்தில் உள்ளது.

அதிக அளவு பக்தர்கள் கூட்டம் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வருவது உண்டு.

புராண யாதகிரி நரசிம்மர் கோவில் புதிய யாதகிரி நரசிம்மர் கோவில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

புராண யாதகிரி நரசிம்மர் கோவிலில் இரண்டு அதிசயங்கள் உள்ளன,

ஒன்று ஹனுமானின் கால் அடி தடம்

மற்றொன்று அங்கு உள்ள தெப்பகுளம்.

ஹனுமானின் கால் அடி தடம் ஹனுமான் இங்கிருந்து கிஷரா என்னும் இடத்தில் தாவிய போது வந்த தடம்.

இப்போதும் மாற்றம் அடையாது இருப்பது. அதே மாதிரி இங்கு உள்ள தெப்பத்தில் தண்ணீர் வற்றாமல் இருப்பது.

திரேதா யுகம் நடக்கும் போது யாத ரிஷி என்னும் முனிவர் வாழ்ந்து வந்தார்.

இவர் அனுமானின் அருள் பெற்று நரசிம்மரை நினைத்து தவம் செய்து வந்தார்.

இவரது தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர் இவர் முன் ஐந்து வடிவில் தோன்றினார்.

ஐந்து வடிவானது ஜ்வால நரசிம்மர், யோக நரசிம்மர், நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லெட்சுமி நரசிம்மர் ஆகும்.

இதனால் பிற்காலங்களில் பஞ்ச நரசிம்ம கோவில் என பெயர் பெற்றது.

பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸகந்த புராணத்தில் இந்த கோயிலை பற்றிய தகவல்கள் உள்ளது[-

இன்னொரு புராணக்கதையின்படி நாராயணர் யாத ரிஷியின் தவத்தால் மகிழ்ந்து ஹனுமனை அனுப்பி

முனிவருக்கு புனித இடத்தை காட்டியதாகவும்

அங்கு இறைவன் லட்சுமி நரசிம்மர் வடிவில் முனிவர் முன் தோன்றியதாகவும் உள்ளது.

அந்த இடம் இப்போதுள்ள கோவில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

அங்கு முனிவர் பல காலங்கள் இறைவனை வழி பட்டுள்ளார்.

முனிவரின் முக்திக்கு பிறகு அங்குள்ள மக்கள் இறைவனைப் பற்றி அறிந்து அவரை வழிபட்டனர்.

ஆனால் மக்களின் முறையற்ற வழிபாட்டின் காரணமாக லட்சுமி நரசிம்மர் மலைக்குள் சென்று விட்டார்.

மக்கள் பல நாட்கள் இறைவனை தேடினார்கள். பல ஆண்டுகள் கழித்து ஒரு பக்தையின் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை காட்டினார்.

அங்கு அவர்கள் சென்ற போது இறைவன் அவரின் ஐந்து உயரிய அவதாரங்களால் காட்சியளித்தார்.

அமைப்பும் வழிபாடும்–

இந்த குடவரைக் கோவிலிலுள்ள கருவறை உச்சத்தில் உள்ள விமானம்

விஷ்ணுவின் கையில் உள்ள தங்க சுதர்ஸன சக்கரம் ஆகும் (3 அடி X 3அடி ).

கோவில் அலங்காரங்களும் பொருட்களும் 6 கி.மீ தொலைவில் இருந்தே அறியலாம்.

பல வருடங்களுக்கு முன் சக்கரம் பக்தர்களுக்கு வழிகாட்டிய போல் செயற்பட்டுள்ளது.

இந்த கோவில் பல ரிஷிகளால் வழிபட்டுள்ளதால் ரிஷி ஆராதன ஷேத்திரம் என பெயர் உள்ளது.

இங்குள்ள நரசிம்மர் பக்தர்களுக்கு உள்ள தீராத நோயை தீர்ப்பதால் வைத்திய நரசிம்மர் என அழைக்கப்படுகிறார்.

அதைப்போல் தீய சக்திகளாலும், தீய கிரகங்களாலும் பிடிக்கப் பட்டவர்களை துன்பங்களை அகற்றி, காப்பாற்றி நல்வழி படுத்துபவராகவும் விளங்குகிறார்.

பல சமயங்களில் பக்தர்களின் கனவுகளில் நரசிம்மர் தோன்றி அவர்களுக்கு தேவையான மருத்துவ முலிகைகளை தருவதும்,

பக்தர்களை நோயை தீர்ப்பதும், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லாசியும் வழங்குகிறார்.

ஒரு மண்டல (48 நாள்) விரத முறை மிக விசேஷமானது.

இங்கு ஆராதனைகளும், பூஜைகளும் பாஞ்சராத்திரம் நெறிகளின்படி பின்பற்றப்படுகிறது.

விரிவாக்கப் பணிகள்-

யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோயிலை ஆந்திராவின் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நிகராக மாற்ற தெலங்காணா அரசு திட்டமிட்டது.

இதற்காக ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கியது.

கடந்த 2016ஆம் ஆண்டு இக்கோயிலின் கட்டுமான பணிகள் தொடங்கின.

இதற்கென யாதாத்ரி கோயில் வளர்ச்சி குழுவை முதல்வர் சந்திரசேகர ராவ் அமைத்தார்.

இந்த குழுவினரின் மேற்பார்வையில் கோயிலை பிரம்மாண்டமாக 14 ஏக்கர் பரப்பளவில்

ஆகம விதிப்படியானதாககாக்கத்தியர் கட்டடக்கலையில் கட்டப்பட்டுவருகிறது.

இக்கோயில் மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளடக்கியதாக

விரத பீடம், சுவாமிக்கான பூந்தோட்டம், கல்யாண மண்டபம், சத்திரங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

மேலும் 12 ஆழ்வார்களை குறிக்கும் வகையில் 12 மிகப்பெரிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் முகப்பில் ஒரு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆகம சாஸ்திரங்களின்படி கட்டப்பட்டு வரும் இக்கோயில் சிமெண்ட், மணல்,இரும்பு போன்றவைகளால் கட்டப்படாமல்,

வெறும் கற்களால் மட்டுமே கட்டப்பட்டு வருகிறது.

சுவாமியின் சிலைகள் அனைத்தும் ‘கிருஷ்ண சிலா’ அல்லது புருஷ சிலா என்றழைக்கப்படும் கற்களால் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்திரீ சிலா எனும் கற்கள் மூலம் பெண் கடவுள்களின் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மற்றும் நபுசகா சிலா என்றழைக்கப்படும் கற்கள் மூலம் கோயிலில் தரை மற்றும் சுவர்கள் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், கருப்பு நிற கிரானைட் கற்களும் இக்கோயிலில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

இவை, தெலங்கானா மாநில காக்கதீயர்களின் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கட்டிட கலையை மாதிரியாக கொண்டு

கருப்பு கிரானைட் கற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. கருப்பு கிரானைட் கற்கள் மூலம் சில சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த கோயிலில் உள்ள மூலவர் 12 அடி உயரமும், 30 அடி நீளமும் கொண்ட குகையில் வீற்றிருப்பார்.

இது தற்போது புதிய வடிவமைப்பில், கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது.

இந்த குகைக்கு செல்ல வேண்டுமாயின், பக்தர்கள் படிக்கட்டுகள் மூலம் இறங்கி சுவாமியை தரிசிக்க வேண்டி வரும்.

மேலும், இக்கோயிலில்

நாக வடிவில் உள்ள ஜுவாலா நரசிம்மர்,

யோக முத்திரையில் யோக நரசிம்மர்,

வெள்ளியில் லட்சுமி நரசிம்மர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

கோயிலின் வலது புறம் ஹனுமன் கோயில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த வைணவ திருத்தலத்திற்கு தினமும் தற்போது ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயில் கட்டிட பணிகள் நடைபெற்று வந்தாலும், மூலவரை தரிசிக்காவிடிலும் பாலாலயம் மூலம் சுவாமியை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

இக்கோயிலுக்கு 39 கிலோ தங்கமும், 1,753 டன்வெள்ளியும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

விமான கோபுரம், பலிபீடம், கொடி கம்பம் போன்றவற்றுக்கு தங்க தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் கோயில் கதவுகள், வாசற்படிகள், சுவர்களுக்கு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இரு கற்களுக்கிடையே பழங்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சுண்ணாம்பு கலவை இக்கோயிலில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.300கோடி செலவில் கோயிலின் சுற்றுப்புறத்தில் உள்ள சுமார் 1,900 ஏக்கர் தனியார் இடங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இக்கோயிலுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு குளத்தின் அருகே புதிதாகவீடும் கட்டி தரப்பட்டுள்ளது.

7-ம் நிஜாம்மன்னரான மிர்-ஒஸ்மான் அலிகான் என்பவர், தனது ஆட்சி காலத்தில் ரூ.82,825-ஐ இக்கோயிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.

14 ஏக்கர் பரப்பளவு

இக்கோயில் 14 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது.

மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளடக்கிய இக்கோயில் விரத பீடம், சுவாமிக்கான பூந்தோட்டம், கல்யாண மண்டபம், சத்திரங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும் 12 ஆழ்வார்களை குறிக்கும் வகையில் 12 மிகப்பெரிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் முகப்பில் ஒரு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்குள்ள விஷ்ணு குண்டம் எனும் குளத்தில் குளித்தால் தீய சக்திகள் மறையும் என்பது ஐதீகம்.

மிக அழகாகவும், கம்பீரமாகவும் கட்டப்பட்டு வரும் இக்கோயில் தெலங்கானா மாநிலத்தின் ஒரு அடையாளமாக மாறப்போவது உறுதி.

இக்கோயில் தலைமை ஸ்தபதி சவுந்தர்ராஜன் என்பவர் மூலம் கட்டப்பட்டு வருகிறது.

புராண வரலாறு…..

ரிஷியஸ்ருங்கா- சாந்தா தேவியின் புதல்வராகப் பிறந்தவர் யாத ரிஷி. திரேதாயுகத்தில் வாழ்ந்த இவர்,

அனுமனின் அருளைப் பெற்றவர். நரசிம்மர் மீது தீராத பக்தி கொண்டவர்.

அவரைக் காணும் ஆவலில் கடுமையாகத் தவம் இயற்றி வந்தார்.

அவரது தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர், அனுமன் மூலமாக தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டி,

அங்கே ஐந்து வடிவங்களில் யாத ரிஷிக்கு அருள்காட்சி தந்தருளினார்.

முதலில் ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், உக்கிர நரசிம்மர், கண்ட பேருண்ட நரசிம்மர் என நான்கு வடிவங்களைக் காட்டினார்.

ஆனால் யாத ரிஷியோ, “தாயார் லட்சுமியோடு காட்சியருள வேண்டும்” என வேண்டி நின்றார்.

தொடர்ந்து உடனடியாக லட்சுமியோடு, லட்சுமி நரசிம்மராகத் தோன்றி அருளினார்.

எனவே இத்தலம் பஞ்ச நரசிம்மர் தலமாகப் போற்றப் படுகிறது.

நரசிம்மர் காட்சி தந்த ஆதிக் கோவில், தற்போதைய யாதகிரி மலை அடிவாரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

யாத ரிஷி முக்தியடைந்த பின்பு இப்பகுதி வாழ் மக்கள், அந்த ஆலயத்தில் முறையாக வழிபாடு செய்யவில்லை.

இதனால் அங்கிருந்து அகன்று, தற்போதைய மலை மீதுள்ள குகைக்குள் இறைவன் குடிபுகுந்தார்.

இந்த நிலையில் இறைவனை வழிபட விரும்பும் பக்தர்கள், நரசிம்மரைக் காணாமல் தவித்தனர்.

அப்போது ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய நரசிம்மர், தன் இருப்பிடத்தைக் கூறினார்.

மகிழ்ச்சியடைந்த மக்கள் மலை மீது ஏறி, குகைக்குள் இருந்த நரசிம்மரைக் கண்டு மகிழ்ந்து வழிபடத் தொடங்கினர் என தலவரலாறு கூறப்படுகிறது.

கி.பி.1148-ல் நாராயண சுவாமி கோவில் கல்வெட்டு ஒன்றில்,

திரிபுவன மல்லுடு மன்னர், தான் போரில் வென்றோருக்காக போன்கிரில் கோட்டை கட்டியதாகவும்,

அங்கிருந்து யாதகிரி வந்து நரசிம்மரைப் பலமுறை வழிபட்டுத் தரிசித்துச் சென்றதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இதேபோல, விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவாராயர், யாதகிரி லட்சுமி நரசிம்மரை வழிபட்டு, மகப்பேறு கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆலய அமைப்பு……

யாதகிரி நகரின் எல்லையில் எழிலான சிறிய குன்றில் நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது.

சுற்றுச்சுவர், கோபுரங்கள், கருவறை என அனைத்தும் மன்னர்கால சிறிய வேலைப்பாட்டோடு கருங்கல் திருப்பணியாக மாநில அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது.

இக்கோவில் பழங்கோவிலுக்குரிய அம்சத்தோடு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எனவே, நரசிம்மர் அமர்ந்த குகைக்குள், பஞ்ச நரசிம்மர்கள் காட்சி தருகின்றனர்.

பிரதானமாக லட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபியாக, லட்சுமியோடு அருள்காட்சி வழங்குகிறார்.

மேல் இரு கரங்கள் சக்கரம், சங்கு தாங்கியும், கீழ் இரண்டு கரங்கள் அபய, வரத முத்திரையோடும் காணப்படுகிறது.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து நம்பிக்கையோடு 40 அல்லது 48 நாட்கள் தினமும் ஆலயத்தை வலம் வந்து வணங்க வேண்டும்.

அதன் மூலம் அவர்களின் நோய் பூரண குணம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இதனால் இவரை ‘வைத்திய நரசிம்மர்’ என்றும் அன்போடு அழைக்கின்றனர்.

தீயசக்திகள், கிரக தோஷங்கள் உள்ளவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக இத்தல லட்சுமி நரசிம்மர் விளங்குகிறார்.

அது மட்டுமின்றி வாகனம் வாங்குவோர், புது வீடு வாங்கியவர்கள், முதல் குழந்தை பெற்றவர்கள் வந்து செல்லும் திருக்கோவிலாகவும் இது விளங்குகிறது.

நித்திய கல்யாண நரசிம்மர் என்பதும் இவரின் கூடுதல் சிறப்பு.

குடவரைக் கோவிலான யாதகிரி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில், கருவறை உச்சியில் உள்ள விமானத்தில்,

தங்கத்தால் ஆன சுதர்சன சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது.

3 அடி உயரம், 3 அடி நீளம் கொண்ட இந்த சக்கரம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

இந்த ஆலயத்தில் நாள்தோறும் திருமண வைபவமும் நடைபெறுகிறது.

இக்கோவில் பிரம்மோற்சவம் தெலுங்கு பல்குண மாதத்தில் (பிப்ரவரி- மார்ச்) பதினோரு நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது.

அதே போல நரசிம்மர் ஜெயந்தியும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.

இது தவிர ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள் திருநட்சத்திர விழாக்கள்,

மார்கழி, ராமநவமி, மகா சிவராத்திரி, தேவி நவராத்திரி, அனுமன் ஜெயந்தி விழாக்களும் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன.

தினந்தோறும் திருக்கல்யாணம் நடைபெற்று, நித்திய கல்யாண நரசிம்மராக விளங்கும் இந்த ஆலயம், காலை 4 மணி முதல் மதியம் 3 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாலயம் தெலுங்கானா மாநில அரசால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி வாரி தேவஸ்தானம் இந்த ஆலயத்தை நேரடியாகக் கவனித்து வருகிறது.

அமைவிடம்……

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், ஐதராபாத் – வாரங்கல் வழித் தடத்தில்

6 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரி திருத்தலம் இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்து

60 கி.மீ, வாரங்கல்லில் இருந்து 90 கி.மீ தொலைவில் யாதகிரி உள்ளது.

போன்கிர் என்ற ரயில் நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் இந்த திருத்தலத்தைச் சென்றடையலாம்….

ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ, வாரங்கல்லில் இருந்து 90 கி.மீ தொலைவில் யாதகிரி உள்ளது.

போன்கிர் என்ற ரயில் நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் இந்த திருத்தலத்தைச் சென்றடையலாம்.

ஓம் நரசிம்ஹாய நமஹ…….

—————-

ஸ்ரீ நரசிம்ஹர் அக்ஷர மாலை —

ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜயஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ
அனாத ரக்ஷக நரசிம்ஹ
ஆபத் பாந்தவ நரசிம்ஹ.

இஷ்டார்த்தப்ரத நரசிம்ஹ
ஈஷ்பரேஷ நரசிம்ஹ
உக்ர ஸ்வரூப நரசிம்ஹ
ஊர்த்வாபாஹூ நரசிம்ஹ.

எல்லா ரூப நரசிம்ஹ
ஐஸ்வர்ய ப்ரத நரசிம்ஹ
ஓங்கார ரூப நரசிம்ஹ
ஔஷத நாம நரசிம்ஹ.

அம்பரவாஸ நரசிம்ஹ
காம ஜனக நரசிம்ஹ
கிரீடதாரி நரசிம்ஹ
ககபதி வாஸன நரசிம்ஹ.

கதாதரனே நரசிம்ஹ
கர்ப்ப நிர்ப்பேதந நரசிம்ஹ
கிரிதரவாஸ நரசிம்ஹ
கௌதம பூஜித நரசிம்ஹ.

கடிகாசல ஸ்ரீ நரசிம்ஹ
சதுர்புஜனே நரசிம்ஹ
சதுராயுத்தர நரசிம்ஹ
ஜ்யோதி ஸ்வரூப நரசிம்ஹ.

தந்தே தாயியு நரசிம்ஹ
த்ரிநேத்ரதாரி நரசிம்ஹ
தநுஜா மர்த்தன நரசிம்ஹ
தீனநாத நரசிம்ஹ.

துக்க நிவாரக நரசிம்ஹ
தேவாதி தேவ நரசிம்ஹ
ஜ்ஞானப்ரதனே நரசிம்ஹ
நரகிரி ரூப நரசிம்ஹ.

நர நாராயண நரசிம்ஹ
நித்யானந்த நரசிம்ஹ
நரம்றாகரூப நரசிம்ஹ
நாமகிரீஷ நரசிம்ஹ.

பங்கஜானன நரசிம்ஹ
பாண்டுரங்க நரசிம்ஹ
ப்ரஹ்லாத வரத நரசிம்ஹ
பிநாகதாரி நரசிம்ஹ.

புராண புருஷ நரசிம்ஹ
பவபய ஹரண நரசிம்ஹ
பக்த ஜன ப்ரிய நரசிம்ஹ
பக்தோத்தார நரசிம்ஹ.

பக்தானுக்ரஹ நரசிம்ஹ
பக்த ரக்ஷக நரசிம்ஹ
முநி ஜன ஸேவித நரசிம்ஹ
ம்ருக ரூபதாரி நரசிம்ஹ.

யக்ஞ புருஷ நரசிம்ஹ
ரங்கநாத நரசிம்ஹ
லக்ஷ்மீ ரமணா நரசிம்ஹ
வங்கிபுரிஷ நரசிம்ஹ.

சாந்தமூர்த்தி நரசிம்ஹ
ஷட்வர்கதாரி நரசிம்ஹ
சர்வ மங்கள நரசிம்ஹ
சித்திபுருஷ நரசிம்ஹ.

சங்கடஹர நரசிம்ஹ
சாளிக்ராம நரசிம்ஹ
ஹரிநாராயண நரசிம்ஹ
க்ஷேமகாரி நரசிம்ஹ.

ஜெய ஜெயலக்ஷ்மீ நரசிம்ஹ
ஜெயசுப மங்கள நரசிம்ஹ
ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜயஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ.

——————-

108 லக்ஷ்மி நரசிம்மர் போற்றி –

1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
3. ஓம் யோக நரசிங்கா போற்றி
4. ஓம் ஆழியங்கையா போற்றி
5. ஓம் அக்காரக் கனியே போற்றி

6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி
8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
9. ஓம் சங்கரப்ரியனே போற்றி
10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி

11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி
12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி
13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி

16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
17. ஓம் ஊழி முதல்வா போற்றி
18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
19. ஓம் ராவணாந்தகனே போற்றி
20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

21. ஓம் பெற்ற மாளியே போற்றி
22. ஓம் பேரில் மணாளா போற்றி
23. ஓம் செல்வ நாரணா போற்றி
24. ஓம் திருக்குறளா போற்றி
25. ஓம் இளங்குமார போற்றி

26. ஓம் விளக்கொளியே போற்றி
27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி
29. ஓம் எங்கள் பெருமான் போற்றி
30. ஓம் இமையோர் தலைவா போற்றி

31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி
34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி
35. ஓம் நந்தா விளக்கே போற்றி

36. ஓம் நால் தோளமுதே போற்றி
37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி

41. ஓம் மூவா முதல்வா போற்றி
42. ஓம் தேவாதி தேவா போற்றி
43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி

46. ஓம் வட திருவரங்கா போற்றி
47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

51. ஓம் மாலே போற்றி
52. ஓம் மாயப் பெருமானே போற்றி
53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
54. ஓம் அருள்மாரி புகழே போற்றி
55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி

56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி
57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி
60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி
63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
64. ஓம் அரவிந்த லோசன போற்றி
65. ஓம் மந்திரப் பொருளே போற்றி

66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி
68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
69. ஓம் பின்னை மணாளா போற்றி
70. ஓம் என்னையாளுடையாய் போற்றி

71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
72. ஓம் நாரண நம்பி போற்றி
73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி
74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி

76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி
77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி
78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
83. ஓம் இனியாய் போற்றி
84. ஓம் இனிய பெயரினாய் போற்றி
85. ஓம் புனலரங்கா போற்றி

86. ஓம் அனலுருவே போற்றி
87. ஓம் புண்ணியா போற்றி
88. ஓம் புராணா போற்றி
89. ஓம் கோவிந்தா போற்றி
90. ஓம் கோளரியே போற்றி

91. ஓம் சிந்தாமணி போற்றி
92. ஓம் சிரீதரா போற்றி
93. ஓம் மருந்தே போற்றி
94. ஓம் மாமணி வண்ணா போற்றி
95. ஓம் பொன் மலையாய் போற்றி

96. ஓம் பொன்வடிவே போற்றி
97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி

101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
103. ஓம் வள்ளலே போற்றி
104. ஓம் வரமருள்வாய் போற்றி
105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி

106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
107. ஓம் பத்தராவியே போற்றி
108. ஓம் பக்தோசிதனே போற்றி

———-

ஸ்ரீ ந்ருஸிம்ஹ ருண விமோசன ஸ்தோத்திரம்

தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

 

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

 

ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்

அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் வைபவம்🙏–ஸ்ரீ ஸ்வாமி அநந்தாழ்வான் வைபவம்🙏 — ஸ்ரீ யதுகிரி ஸ்ரீ ராம் ஸ்வாமிகள் —

May 23, 2022

இன்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் அவதார திருநக்ஷத்திரமான சித்திரையில் சித்திரை….. 🙏

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச் செய்த தனியன்கள்….

அவிதித விஷயாந்தரஸ் ஶடாரேர்
உபநிஷதாம் உபகான மாத்ர போக:/
அபி ச குண வசாத் ததேக ஶேஷி
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து//.. 🙏

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு எங்கள் மதுரகவியார்
எம்மை யாள்வார் அவரேயரண்… 🙏

மதுரகவியாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 5வது ஆழ்வார் ஆவர்.
இவர் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.

மாதம் – சித்திரை
நட்சத்திரம் – சித்திரை
திவ்விய ப்ரபந்தம் – கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்கும் பதினோரு பாசுரங்கள்.
மதுரகவி ஆழ்வார்
மதுரகவி ஆழ்வார்
மதுரகவியாழ்வார் திருமாலின் வாகனமான கருடனின் அம்சமாக அவதரித்தார்.

இவரது காலம் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

இவர் வேத சாத்திரங்களை நன்குக் கற்றவர். இவர் வடநாட்டு யாத்திரை மேற்கொண்டு இருந்தார்.

ஒருநாள் இரவு அயோத்தியில் பேரொளியைக் கண்டு வியப்படைந்தார்.அவ்வொளியை மறுநாளும் அவர் கண்டார்.

அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.

பூரி, அஹோபிலம், திருவேங்கடம் ஆகிய தேசங்களை தாண்டியும் அவ்வொளித் தெரிந்தது.

மீண்டும் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.கடைசியாக அந்த ஒளி, திருக்குருகூரில் மறைந்தது.

ஆழ்வாரும் அவ்வூர் மக்களிடம், இவ்வூரில் ஏதேனும் அதிசயம் உள்ளதா என்று வினவ,

அவ்வூர் மக்களும் இங்கு நம்மாழ்வார், ஒரு புளிய மரத்தடியில், யோக நிலையில் இருப்பதாகக் கூறினார்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வர்க்கு உயிர் இருக்கிறதா என்று சோதிக்க அவர் மேல் ஓர் கல்லை எறிந்தார்.

நம்மாழ்வார் முதன்முறையாக கண் திறந்துப் பார்த்தார். மதுரகவிகளும் இவர்க்கு உயிர் இருக்கிறது

என்பதை புரிந்துக் கொண்டு, இவரால் பேச முடியுமா என்று பரிசோதிக்க-

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார்

அதற்கு நம்மாழ்வார், அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார்.

பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட மதுரகவிகள், நம்மாழ்வாரின் மேதா விலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.

இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.

செத்ததின்,
அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால்,

பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.

தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால்,

அதைக்கொண்டே பக்தி வளரும்.
மதுரகவியாழ்வார் தன்னுடையப் பாசுரங்களில் திருமாலைத் தெய்வமாகப் பாடாது,

நம்மாழ்வாரை தெய்வமாகப் பாடினார்.இவரது பாசுரங்கள் ஆச்சார்ய பக்திக்கு எடுத்துக்காட்டாகும்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலைப் படுத்தினார்.

நம்மாழ்வார் திருவைகுண்டத்திற்கு சென்ற பிறகு தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைத்தது.

அவ்விக்ரகத்தை எழுதருளப்பண்ணிகொண்டு மதுரகவியாழ்வார் பல ஊர்களுக்கு சென்று

நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.

“வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார்,

திருவாய்மொழிப்பெருமாள் வந்தார்,

திருநகரிப்பெருமாள் வந்தார்,

திருவழுதிவளநாடர் வந்தார்,

திருக்குருகூர்நகர்நம்பி வந்தார்,

காரிமாறர் வந்தார்,

சடகோபர் வந்தார்,

பராங்குசர் வந்தார்” என்று நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரையுள் சென்றார்.

அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல்,

விருதுகளைப் பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர்.

பலகை அப்பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை விட்டு, இரண்டே வரியுள்ள,

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே! (திருவாய்மொழி 10.5.1)
(கண்ணனின் திருவடிகளில் ஆசை உடையவர்கள், கண்ணின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருங்கள்,

அது கண்ணனையே காட்டும்.இது திண்ணம்) என்ற பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார்.

பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது. நம்மாழ்வாரின் பெருமையை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும்

தாம் செய்த தவற்றின் பரிகாரமாக நம்மாழ்வாரின் பெருமையை தாம் பாடலாக இயற்றினர்.

ஈயடுவதோ கருடற்கெதிரே!!இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ!!
நாயாடுவதோ உறுமும்புலிமுன்!!
நரி கேசரிமுன் நடையாடுவதோ!!
பேயடுவதோ ஊர்வசிக்குமுன்!!*பெருமானடிசேர் வகுளாபரணன்
ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ* !
இவ்வுலகிற்கவியே!!!!
(இவ்வுலகில் உள்ள கவிகளே, பெரிய சிறகுகளை உடைய கருடன் முன் சிறிய ஈ ஆடுவதும்

இரவியின் முன் மின்மினி பூச்சிகள் ஆடுவதும் உறுமுகின்ற புலிமுன் நாய் ஆடுவதும்

சிங்கத்தின் முன் நரி ஆடுவதும் அழகிற்சிறந்த ஊர்வசிமுன் பேயாடுவதும்

வகுளமாலையத் தரிந்த நம்மாழ்வாரின் பாசுரங்கள் முன் தமிழில் உள்ள ஒரு சொல் சமமாகுமா! என்பது பொருள்)

இதில் வியப்பு என்ன வென்றால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் மேற்சொன்ன ஒரேப் பாடலை எழுதினர்

இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி

அவரும் தம் பெரியவரான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்த்தார்.

மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர்

அதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால்
,பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும்

ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும் ஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து

அப் படிக்கட்டில் இருந்து தவறினால், சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம்.

ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால், அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றிவிடும் என்று பொருள்… 🙏

 

அமுதனார் தாம் இயற்றிய ராமாநுச நூற்றந்தாதியில், மதுரகவி ஆழ்வாரைப்பற்றிப் பாடும் போது,

ராமானுசருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும்  உள்ள தொடர்பைக் கொண்டாடுகிறார்.

“எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்

செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -சிந்தையுள்ளே

பெய்தற்கு இசையும் “பெரியவர்” சீரை உயிர்களெல்லாம்

உய்தற்கு உதவும் ராமாநுசன் எம் உறுதுணையே!-என்று பாடுகிறார்.

இதில் மதுரகவி ஆழ்வாரை,“பெரியவர்” என்று கொண்டாடுகிறார்.பெரியவர் என்னும் பதத்தை,

மதுரகவி ஆழ்வார் ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

மதுரகவியாழ்வரை பெரியவர் என்று எதனால்  அமுதனார் சொல்கின்றார் என்பதற்கு ஒரு சுவையான விளக்கம்.

நம்மாழ்வாருக்கும்  பகவானுக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் நடக்கிறது.நம்மாழ்வார்,

“பகவானே உன்னை விட நான் பெரியவன். காரணம், நீ இரண்டு உலகங்களையும் (விண், மண்) உன்னிடம்  வைத்திருக்கிறாய்.

அப்படி வைத்திருக்கும் உன்னையே நான் என்னுள் வைத்திருப்பதால் நானே பெரியவன் என்பதை ஒப்புக்கொள்” என்று பாடிய பாடல் இது.

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்

செவிவழி உள்புகுந்து என்னுள்ளாய்  அவிவின்றி

யான் பெரியன் நீ பெரியை என்பதனை ஆர் அறிவார்

ஊன்பருகு நேமியாய் உள்ளு.”

பெருமானை விட நம்மாழ்வார் பெரியவர் என்றால்,

அவரை தன்  உள்ளத்தில் வைத்திருக்கும் மதுகவியாழ்வார் பெரியவருக்கு பெரியவரல்லவா.

இதைத்தான் ராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகிறார்.

தனக்கு ஸ்வாமியான நம்மாழ்வாரையே உபாயமாகவும், உபேயமாகவும் கொண்டு, அவருக்கு அடிமைப்பட்டிருந்தவர் மதுரகவிகள்.

அப்படித் தான் அனுஷ்டித்துக் காட்டியதைத்தான், தன்னுடைய திவ்யப் பிரபந்தத்தில் (கண்ணிநுண் சிறுத்தாம்பு) அருளிச்செய்தார்.

பாசுரம் 26இல், மதுரகவி ஆழ்வாரின் மகிமைகளையும், அவர் அருளிச்செய்துள்ள

பிரபந்தத்தின் (“கண்ணிநுண் சிறுத்தாம்பு”) பெருமையையும் உரைக்கின்றார் மாமுனிகள்:

உபதேசரத்தினமாலை யில்
ஸ்வாமி மணவாள மாமுனிகள்……

ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரைநாள் பாருலகில்

மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்
உற்றது எமக்கென்று நெஞ்சே ஓர்….

பாசுரம் 26..

வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை *ஆர்த்தபுகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே*
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து….

பிள்ளைலோகம் ஜீயர் இந்தப் பாசுரத்திற்கு வியாக்யானம் அருளிச்செய்கையில்,

கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தத்தை, அஷ்டாக்ஷர மந்திரத்தின் (திருமந்திரம்)

மத்திய பதமாக அமைந்துள்ள “நம:” ஶப்தத்திற்கு ஈடாகக் காட்டியுள்ளார்.

திருமந்திரமானது, இந்த ஜீவாத்மாவிற்குப் பேறானது ஆத்மாவால்” என்று உபதேசிக்கின்றது.

ஆத்மாவை பகவானுக்கு உரியதாகக் கொண்டு, அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதே

அதற்கு (ஆத்மாவிற்கு) உண்டான லக்ஷணமாகும் என்பதே திருமந்திரத்தால் உணரப்படவேண்டிய ஞானமாகும்.

இதில் நம: பதமே முக்கியமானதாகும் – இது ஜீவாத்மாவுக்கு தன்னைக் காத்துக்கொள்ளும் ( ரக்ஷித்துக் கொள்ளும்) சுதந்திரம் (உரிமை) கிடையாது;

நம்மை ரக்ஷிக்கும் பொறுப்பு எம்பெருமான் ஒருவனுக்கே உள்ளது என்று தெளிவிக்கிறது .

ஆனால், இதற்கு சற்றே மாறாக, *இந்த ஆத்மாவானது, எம்பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பதைக் காட்டிலும்

ஆசார்யனுக்கு உரியது என்று கொண்டு, அவருக்கு ஆட்பட்டு, அதோடு, அவரே நமக்கு ரக்ஷகர் ஆவார் என்று

உரைக்கும் பிரபந்தமாகும் மதுரகவிகள் அருளியுள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பு. ஆகையாலேயே,

சாஸ்திரங்களில் ரஸமாக இருக்கும் ஆசார்ய நிஷ்டையை உரைக்கும் இவரது பிரபந்தத்தை,

மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ள நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் நடுநாயகமாகச்
சேர்த்து, மதுரகவி ஆழ்வாருக்கு ஏற்றத்தை அளித்துள்ளார்கள் நம் பூர்வாசார்யர்கள்.

*இவ்வாழ்வார்
திருவவதரித்த* நக்ஷத்திரமான சித்திரையும்
27 நக்ஷத்திரங்களில் மத்யமாக அமைந்தது போல இவர் அருளிச்செய்துள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பு

திவ்யப் பிரபந்தமானது 4000 திவ்விய பிரபந்த ரத்தின ஹாரத்தின் நடு நாயகக் கல்லாக

இவர் அருளிச்செய்துள்ள பிரபந்தமும் அமைந்துள்ளது என்பது இவருடைய பிரபந்தத்திற்கும் உள்ள பெருமை ஆகும்…..
மதுரகவிகளின் வாழி திருநாமம்:

சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே🙏
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே🙏
உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே🙏
ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே🙏
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே🙏
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே🙏
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே🙏
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே🙏🙏🙏🙏

——————-

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸுஸசரணம் வந்தே நந்தார்ய தேசிகம்🙏
ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !🙏

ஸ்வாமி அநந்தாழ்வான் வைபவம்🙏
அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர்
எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு
எச்சான்,
தொண்டனுர் நம்பி,
மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார்.

எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து
அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார்.
அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு
அவரை
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும்
அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்
அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர்.
அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே
எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.🙏🙏🙏

காவிரிக்கரையில் உள்ள ஸ்ரீரங்கம் மடத்தில் ஒரு நாள் ஸ்ரீ ராமானுஜர் தன் சீடர்களுக்குத்
திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.
அதில் ஒரு பாடலில் சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து என்னும் தொடர் இடம் பெற்றிருந்தது.
பூக்கள் உதிர்ந்து கிடக்கும் திருப்பதி மலை என்பது இதன் பொருள்.
இதைச் சொல்லும் போதே ராமானுஜருக்கு கண்ணீர் பெருகியது.
பதறிய சீடர்கள் காரணம் கேட்டபோது திருப்பதியில் பூக்கும் மலர்கள் பெருமானின் திருவடியைச் சேராமல்
கீழே பயனற்று கிடக்கிறதே என விளக்கம் அளித்தார் .
சீடர்களில் ஒருவரான அனந்தன் எழுந்து
“ஆசார்யா!..தாங்கள் உத்தரவிட்டால் இப்ப்போதே திருமலைக்குச் சென்று தொண்டு செய்கிறேன் என்றார்.

நீரோ ஆண் பிள்ளை!!என்று சொல்லி அணைத்தார் ராமானுஜர்.
அதன் பின் அனந்தாண் பிள்ளை என பெயர் பெற்றார்.
திருப்பதி மலையில் பெருமாளுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டார்.
நந்தவனம் அமைத்து துளசி  மல்லிகை என பூச்செடிகளை வளர்த்தார்.
தினமும் மாலை தொடுத்து பெருமாளுக்குச் சாத்துவார்.
கிணறு ஒன்றை வெட்டி அதற்கு ராமானுஜ புஷ்கரணி என்ற பெயரையே சூட்டினார்.. 🙏🙏

கர்நாடக மாநிலத்தில், மைசூர் பகுதியில் காவேரி நதிக்கரையில் உள்ள சிறுபுத்தூர் இவருடைய அவதார ஸ்தலம்.
அனந்தாழ்வானின் திருத்தகப்பனார் கேசவாச்சார்யார். யஜுர் வேதி. பரத்வாஜ கோத்திரர்.
அனந்தாழ்வான் கி.பி. 1053 விஜய நாம ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார்.
சிறு பருவத்தி லிருந்தே இவர் பகவத் சிந்தனையில் முழ்கியவர்.

அனந்தாழ்வான் திருவனந்தாழ்வான் அம்சம் என்றும் குறிப்பிடுவர்.
அனந்தாழ்வானுக்கு மதுரகவி தாசன் என்றும் பெயருண்டு.

திருமலையில் புஷ்ப கைங்கர்யம்:
எம்பெருமானாரின் கட்டளைக்கிணங்க தன் துணைவியருடன் திருமலைக்கு பயணமானார் அனந்தாழ்வான்.
புஷ்ப கைங்கர்யம் செய்வதற்காக எம்பெருமானின் திருக்கோயிலுக்கு அருகாமையில் ஒரு ஏரியையும்.
நந்தவனத்தையும் அமைக்க திட்டமிட்டார். உதவி புரிய அந்நேரம் அங்கு யாரும் இல்லை.
ஆனால் பிறருடைய உதவியைப் பெறுவதும் ஆசார்யனின் கட்டளைக்கு களங்கம் ஏற்படும் என்று எண்ணினார்.
இதையறிந்த அனந்தாழ்வானின் தர்மபத்தினி தானிருக்கிறேன் என்று கூறினார்.
நிறைமாத கர்ப்பினி எனினும் எம்பெருமான் மேல் பக்தியினால் ஆணுக்கு ஈடாக மண் கூடையை சுமந்தாள்.
அனந்தாழ்வானின் ஆனந்தத் திற்கு எல்லையே இல்லை. தான் ஒரு கடப்பாறையை கையில் ஏந்தி நின்றார்.

சகல லோகநாதனை ஸ்மரித்தார். கடப்பாரையால் மண்ணை தோண்டினார். தோண்டிய மண்ணை கூடையில் போட்டார்.
அம்மண் கூடையை அனந்தாழ்வான் தர்ம பத்தினி தலைமேல் வைத்துக் கொண்டு சிறிது தொலைவில் சென்று
கொட்டிவிட்டு மறுபடியும் வந்தார். இதையெல்லாம் கண்டறிந்த திருவேங்கடவன் ஒரு சிறுவன் வடிவத்தில் வந்து,
அவருடைய கையில் இருந்த மண்கூடையை வாங்க முயன்றான்.
அனந்தாழ்வான் உனக்கு வேண்டுமானால் நீயும் இன்னொரு கைங்கர்யத்தைச் செய்துகொள்.
ஆசார்யன் எனக்கு நியமித்த கைங்கர்யத்தில் பங்கு கேட்காதே. இந்த கடப்பாரையினாலே அடிப்பேன் என்றார்.

அச்சிறுவன் அனந்தாழ்வானின் தர்மபத்னியிடம் சென்று அம்மா! நீங்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளீர்கள்.
சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளம்மா. நான் உதவி புரிகிறேன் என்றான்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த தர்மபத்னி மெய்மறந்து தன்னையும் அறியாமலேயே மண் கூடையை கொடுத்து விட்டாள்.
அச்சிறுவன் இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டதைக் கண்ட அனந்தாழ்வான் சினம் கொண்டு அவனை அடிப்பதற்காகத் துரத்தி கொண்டு ஓடினார்.
ஓடுகின்ற சிறுவன் மீது அனந்தாழ்வான் தன் கையில் இருந்த கடப்பாரையை வீசி எறிந்தார்.
அது அச்சிறுவனின் திருமோவாய் மீது பட்டது. இரத்தம் சலசலவென கொட்டியது.

அச்சிறுவன் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டான். மறுநாள் காலை அர்ச்சக ஸ்வாமிகள் கோயிலுக்குள் சென்று
பார்க்கையில் திருவேங்கடவன். திருமோவாயில் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது.
அதை அறிந்த அனந்தாழ்வான் சிறுவனாக வந்தவன் அவனே என்றுணர்ந்தார்.
எம்பெருமானிடம் அவசரபட்டோமே என்று மனம் கலங்கினார். இரத்தப் பெருக்கை நிறுத்த என்ன செய்வதென்று திகைத்த போது.
திருவேங்கடவன் அவருடைய பாதத்தூளியைத் தன்னுடைய மோவாயில் வைத்து அழுத்துமாறு கூறினார்.
அப்படியே அனந்தாழ்வான் செய்ய இரத்தப்பெருக்கு நின்று விட்டன. அனந்தாழ்வான் நிம்மதி அடைந்தார்.
அப்போது எம்பெருமான் அனந்தா நீ வருந்தாதே கடப்பாரையை என் மீது வீசினாயல்லவா.
இரத்தம் வந்த இடத்தில் வடு மோவாயில் நிரந்தரமாக இருந்து விடும்.

இதனால் தான் இன்றும் திருவேங்கடவனுக்கு திருமோவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றப்படுகிறது.
அது பாதரேணு (திருவடிப்பொடி) என்று கூறப்படுகிறது. கோயில் முஹதுவாரத்தின் சுவற்றின் மேல் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளது.
இன்றளவும் திருமலையில் கோபுர நுழைவு வாயிலில் வடக்கே மதில் மேல் கடப்பாரை (யை) காணலாம்*.
பிறகு அனந்தாழ்வான் நந்த வனத்தை அமைத்து முடித்து அதில் பூக்கின்ற புஷ்பங்களை மாலைகளாகத் தொடுத்து
அதை நித்தியமும் திருவேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஸ்ரீமத்ராமானுஜரின் நியமனப்படி
புஷ்ப கைங்கர்யத்தை செய்து கொண்டு வந்தார்.🙏🙏🙏🙏

இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த

மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும் தவனம், மரு, மகிழ,

வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி,

“அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்” என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்!

அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது.

அத்தோட்டம், இப்போது ‘அனந்தாழ்வான்’ தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கிட்டதட்ட 900 ஆண்டுகளுக்கு முன்னர் பெருமாளுக்கு தினமும் மாலை சாத்தும் பாக்கியத்தைப் பெற்றவர்

ஸ்ரீராமாநுஜரின் பிரியத்துக்கு உரிய சீடர் அனந்தாழ்வான்.
திருமலை திருப்பதியில் இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தினந்தோறும் திருமலை நந்தவனத்தில் மலர்களைக் கொய்து, தானே அதை மாலையாகக் கட்டி பெருமாளுக்கு அணிவித்து, மகிழ்ந்து வந்தார்.

ஒருநாள், திருமலையில் தான் அமைத்த நந்தவனத்தில் பெருமாளுக்காக மலர்களைப் பறித்துக்கொண்டிருந்தார் அனந்தாழ்வான்.

அப்போது அந்த வனத்திலிருந்த பாம்பு ஒன்று அவரைத் தீண்டிவிட்டு அங்கிருந்து ஓடியது.

ஆனாலும், அதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமலும் சற்றும் பதற்றம் அடையாமல் பூக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தார்.

அவருடன் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த அவரின் நண்பர்கள் பதறிப்போய்,

”பாம்பின் விஷக்கடிக்கு பச்சிலை மருந்து வைத்துக் கட்டினால்தானே விஷமிறங்கும்.

அதைவிடுத்து நீங்கள் இப்படி செய்யலாமா?” எனக் கேட்டனர்.

அதற்கு, அனந்தாழ்வான் சிறிதும் பதற்றமின்றி, ”கடித்த பாம்பு வலிமையற்றதாக இருந்தால்,

திருக்கோனேரியில் தீர்த்தமாடி, திருவேங்கடமுடையானை தரிசிப்பேன்.

வலிமையுள்ளதாக இருந்தால், விரஜா நதியில் நீராடி, வைகுண்ட வாசனை சேவிப்பேன்” என பதில் சொன்னார்.

அவரின் பதிலைக் கேட்டு, நண்பர்களும் உறவினர்களும் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

அவர் கூறியதுபோலவே, பாம்பின் விஷம் வைராக்கியவாதியான அனந்தாழ்வானை எதுவும் செய்ய வில்லை.

எத்தனை வைராக்கியமான பக்தி!🙏🙏🙏🙏

அனந்தாழ்வான்:🙏
கர்நாடக மாநிலத்தில், மைசூர் பகுதியில் காவேரி நதிக்கரையில் உள்ள சிறுபுத்தூர் இவருடைய அவதார ஸ்தலம்.

அனந்தாழ்வானின் திருத்தகப்பனார் கேசவாச்சார்யார். யஜுர் வேதி. பரத்வாஜ கோத்திரர்.

அனந்தாழ்வான் கி.பி. 1053 விஜய நாம ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார்.

சிறு பருவத்தி லிருந்தே இவர் பகவத் சிந்தனையில் முழ்கியவர்.

அனந்தாழ்வான் திருவனந்தாழ்வான் அம்சம் என்றும் குறிப்பிடுவர். அனந்தாழ்வானுக்கு மதுரகவி தாசன் என்றும் பெயருண்டு.

திருமலையில் புஷ்ப கைங்கர்யம்: எம்பெருமானாரின் கட்டளைக்கிணங்க தன் துணைவியருடன் திருமலைக்கு பயணமானார் அனந்தாழ்வான்.

புஷ்ப கைங்கர்யம் செய்வதற்காக எம்பெருமானின் திருக்கோயிலுக்கு அருகாமையில் ஒரு ஏரியையும். நந்தவனத்தையும் அமைக்க திட்டமிட்டார்.

உதவி புரிய அந்நேரம் அங்கு யாரும் இல்லை.

ஆனால் பிறருடைய உதவியைப் பெறுவதும் ஆசார்யனின் கட்டளைக்கு களங்கம் ஏற்படும் என்று எண்ணினார்.

இதையறிந்த அனந்தாழ்வானின் தர்மபத்தினி தானிருக்கிறேன் என்று கூறினார்.

நிறைமாத கர்ப்பினி எனினும் எம்பெருமான் மேல் பக்தியினால் ஆணுக்கு ஈடாக மண் கூடையை சுமந்தாள்.

அனந்தாழ்வானின் ஆனந்தத் திற்கு எல்லையே இல்லை. தான் ஒரு கடப்பாறையை கையில் ஏந்தி நின்றார்.

சகல லோகநாதனை ஸ்மரித்தார். கடப்பாரையால் மண்ணை தோண்டினார். தோண்டிய மண்ணை கூடையில் போட்டார். அம்மண் கூடையை அனந்தாழ்வான் தர்ம பத்தினி தலைமேல் வைத்துக் கொண்டு சிறிது தொலைவில் சென்று கொட்டிவிட்டு மறுபடியும் வந்தார்.

இதையெல்லாம் கண்டறிந்த திருவேங்கடவன் ஒரு சிறுவன் வடிவத்தில் வந்து, அவருடைய கையில் இருந்த மண்கூடையை வாங்க முயன்றான்.

அனந்தாழ்வான் உனக்கு வேண்டுமானால் நீயும் இன்னொரு கைங்கர்யத்தைச் செய்துகொள்.

ஆசார்யன் எனக்கு நியமித்த கைங்கர்யத்தில் பங்கு கேட்காதே. இந்த கடப்பாரையினாலே அடிப்பேன் என்றார்.

அச்சிறுவன் அனந்தாழ்வானின் தர்மபத்னியிடம் சென்று அம்மா! நீங்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளீர்கள்.

சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளம்மா. நான் உதவி புரிகிறேன் என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தர்மபத்னி மெய்மறந்து தன்னையும் அறியாமலேயே மண் கூடையை கொடுத்து விட்டாள்.

அச்சிறுவன் இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டதைக் கண்ட அனந்தாழ்வான் சினம் கொண்டு அவனை அடிப்பதற்காகத் துரத்தி கொண்டு ஓடினார்.

ஓடுகின்ற சிறுவன் மீது அனந்தாழ்வான் தன் கையில் இருந்த கடப்பாரையை வீசி எறிந்தார்.

அது அச்சிறுவனின் திருமோவாய் மீது பட்டது. இரத்தம் சலசலவென கொட்டியது.

அச்சிறுவன் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டான்.

மறுநாள் காலை அர்ச்சக ஸ்வாமிகள் கோயிலுக்குள் சென்று பார்க்கையில் திருவேங்கடவன். திருமோவாயில் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது.

அதை அறிந்த அனந்தாழ்வான் சிறுவனாக வந்தவன் அவனே என்றுணர்ந்தார்.
எம்பெருமானிடம் அவசரபட்டோமே என்று மனம் கலங்கினார்.

இரத்தப் பெருக்கை நிறுத்த என்ன செய்வதென்று திகைத்த போது. திருவேங்கடவன்

அவருடைய பாதத்தூளியைத் தன்னுடைய மோவாயில் வைத்து அழுத்துமாறு கூறினார்.

அப்படியே அனந்தாழ்வான் செய்ய இரத்தப்பெருக்கு நின்று விட்டன. அனந்தாழ்வான் நிம்மதி அடைந்தார்.

அப்போது எம்பெருமான் அனந்தா நீ வருந்தாதே கடப்பாரையை என் மீது வீசினாயல்லவா.

இரத்தம் வந்த இடத்தில் வடு மோவாயில் நிரந்தரமாக இருந்து விடும்.
இதனால் தான் இன்றும் திருவேங்கடவனுக்கு திருமோவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றப்படுகிறது.

அது பாதரேணு (திருவடிப்பொடி) என்று கூறப்படுகிறது.

கோயில் முஹதுவாரத்தின் சுவற்றின் மேல் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளது.
இன்றளவும் திருமலையில் கோபுர நுழைவு வாயிலில் வடக்கே மதில் மேல் கடப்பாரை (யை) காணலாம்*.

பிறகு அனந்தாழ்வான் நந்த வனத்தை அமைத்து முடித்து அதில் பூக்கின்ற புஷ்பங்களை மாலைகளாகத் தொடுத்து அதை நித்தியமும் திருவேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஸ்ரீமத்ராமானுஜரின் நியமனப்படி புஷ்ப கைங்கர்யத்தை செய்து கொண்டு வந்தார்.🙏🙏🙏🙏

அனந்தாழ்வானின் கூரிய ஞானத்தை விளக்கும் நிகழ்வு……

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி,

‘உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்’ யாரென்று அறிந்து வரச் சொன்னார்.

அனந்தாழ்வான் சீடனிடம், ” உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்,

ஒரு கொக்கைப் போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்” என்று கூறினார்!!!

பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

‘கொக்கைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும், ‘

கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும் சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும்,

‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும், ‘

உன்னைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை,

பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

அனந்தாழ்வானுக்குத்
தனியன் அருளிச் செய்த திருவேங்கடவன்……

ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது, பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில்

அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார்.

அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல்,

தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும்,

அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!! அடியார்கள் நம்ப மறுத்து,

பெருமாளிடம் அவரது ‘ஆச்சார்ய தனியனை’ கூறுமாறு பணித்தனர்.

உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்

ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது,

பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்

ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், “ஏய்ந்தபெருங் கீர்த்தி” என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே. ‘

வேங்கடாசல இதிகாசமாலா’ என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் ‘கோயில் ஒழுகு’க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.

அவர் இயற்றிய ‘ராமானுஜ சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய

நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார்.

அது போலவே, ‘கோதா சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக,

வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை

திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, ‘பெத்த ஜீயங்கார் மடத்தை’ நிறுவினர்.

தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான்,

குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்!

உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார்.

அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர் மூர்த்திகளை விட தொன்மையானது என்று அறியப்படுகிறது. இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, ‘அனந்தாழ்வான்’ என்றே அழைக்கப்படுகிறது.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான் புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில்,

ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.🙏🙏

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாண்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீகஜேந்தர வரதர் ப்ரஹ்ம உத்சவ அனுபவம் 🙏—– ஸ்ரீ யதுகிரி ஸ்ரீ ராம் ஸ்வாமிகள் —

May 23, 2022

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே🙏🙏

அன்னத்தை ஆசார்யனோடு ஸாம்யம் சொல்லும் பூர்வாசார்யர்கள்….

செல்வ நம்பி பெரியாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் போல்வாரை அன்னம் என்று கொள்ளலாம்…
நீரையும் பாலையும் கலந்து வைத்தால் அவற்றை பிரிக்க வல்லது அன்னம் –

அது போலே ஆச்சார்யர்கள் சார அசார விவேக குசலர்கள்
வேத சாஸ்திரங்களை வெளியிட்டது பகவத் அவதாரமான ஹம்சம் –

அது போல் சிஷ்யர்களைக் குறித்து சாஸ்திர உபதேசம் பண்ணுவார்கள்…
ஹம்சம் சேற்றில் பொருந்தாது -அது போலே மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்து அழுந்தார்கள்
அன்னம் மாதர் நடை அழகைக் கண்டு அப்படியே தானும் நடை பயிலும் -அது போலே *

*அன்ன நடைய அணங்கானபிராட்டியின்* புருஷகாரத்வம் ஆகிற நடத்தையை அநுசரிப்பர்கள் ––
அன்னமானது மேலே எழுந்த தாமரை இலையைக் குடையாகவும்

பக்குவமான செந்நெல் பயிர் அசைந்து ஆடுவதை சாமரம் வீசுதலாகவும்
சங்குகளின் முழக்கத்தை விஜய கோஷமாகவும் வண்டுகளின் மிடற்று ஓசையைப் பாட்டாகவும் கொண்டு
மானஸ சரஸ் சிலே உள்ள தாமரையை ஆசனமாகக் கொண்டு வீற்று இருக்குமே

அப்படியே தாமரை இலை போலே சாமளமான பகவானது திரு மேனியை தமக்கு சம்சார தாப ஹரமாகவும்
செந்நெல் பயிர் போலே

*அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்* என்னும்படி

பரிபக்குவ ஞானம் உடையவர்கள் ஸ்தோத்ரம் செய்யவும் ….

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள் என்கையால்

சாஸ்திர முறைப்படி க்ருஹஸ்த ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள் ஆகவுமாம் …
அந்தரம் ஓன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் என்கையாலே சம்சார பற்று அற்ற யுத்திகள் ஆகவுமாம்🙏

*எம்பெருமானின் ஹம்ஸாவதாரம்*–பற்றி ஆழ்வார்கள்

அங்கமாறும் சங்க வண்ண மன்ன மேனி சார்ங்க பாணி
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய்!!🙏

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
*பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க* அன்று அன்னமது ஆனானே அரு மறை தந்தானே!

அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை!!

அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை!

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன்!!!!

🙏
முன் இவ்வேழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே!!

🙏
ஒருநாள் அன்னமாய் அன்று அருமறை பயந்தான்!!

🙏
புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்து என்னை யுள்ளம் கொண்ட….!

அன்னமாய் நூல் பயந்தாற்கு……!!

முன் இவ்வுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப
எழில் வேதம் இன்றி மறைய பின்னையும் வானவர்க்கும் முனிவருக்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவைத்து நம்மை யாளும் அரசே !!

🙏
புள்ளாய் என்றும்
ஆழ்வார்கள்…!!🙏

ஸ்ரீகஜேந்த்ர வரதர்
ஹம்ச வாகனத்தில்
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்.. 🙏

———————

யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும்.

இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள்.
இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம்.
தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக் கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.

இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.

பொதுவாக யாளி யானையைத் தாக்குவது-தூக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.

யாளி வாஹனத்தில்
ஸ்ரீகஜேந்த்ர வரதர்

திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏

இரண்டாம் திருவந்தாதி

தொடர் எடுத்த மால் யானை* சூழ் கயம் புக்கு அஞ்சி*
படர் எடுத்த பைங் கமலம் கொண்டு அன்று,* இடர் அடுக்க-
ஆழியான்* பாதம் பணிந்து அன்றே,* வானவர் கோன்-
பாழி தான் எய்திற்று பண்டு?🙏

காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது

(கரைகாண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து

மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு
அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
செவ்வியழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ
அந்த கஜேந்திரன்
முற்காலத்தில்
தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
அடைந்தது…🙏

உயர்ந்தவர்களான தேவர்கள் தாம் எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு உரியவரேயன்றி

நம்போன்ற எளியவர் அப்பரமனை அடையுந்தரத்தினரன்று போலும் என்பதாக ஒரு சங்கை பிறக்கக்கூடுமாதலால்

எம்பெருமானை ஆச்ரயிக்கும் விஷயத்தில் சிறியார் பெரியாரென்னும் வாசியில்லை;
பிறப்பு முதலியவற்றால் தாழ்ந்தவர்களும் கூசாதே ஆச்ரயிக்கலாமென்னும் விஷயத்தை நிலைநாட்டுவதற்காக

ஸ்ரீகஜேந்திராழ்வானது செய்தியை அருளிச்செய்கிறாரிதில்.

மஹாவிஷ்ணு பக்தனான இந்த்ரத்யும்நனென்னும் அரசன் வழக்கப்படி ஒருநாள் விஷ்ணுபூஜை செய்து கொண்டிருந்தபோது

அகஸ்த்ய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும்

திருமாலைப் பூஜிப்பதில் செலுத்தியிருந்ததனால் அம்முனிவனது வருகையை அறியாதவனாய்

அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க,

அம்முனிவன் இப்படி அரசன் நம்மை அலக்ஷியஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து ,

‘யானைபோலச் செறுக்குற்றிருந்ததனால் யானையாகக் கடவை’ என்று சபிக்க,

அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத் தோன்றினனாயினும்

முன்செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையினால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும்

ஆயிரந்தாமரை மலர்களைக் கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்துவருகையில்,

ஒருநாள் பெரியதொரு தாமரைத் தடாதகத்தில் அர்ச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப்போய் இறங்கிற்று;

முன்பொருகால் தேவலனென்னும் முனிவன் ஒரு நீர்நிலையில் நின்று தவஞ்செய்து கொண்டிருந்த போது

அவனது காலைப்பற்றியிழுத்து அனாதற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற்

பெரிய முதலையாய்க் கிடந்த ஹூஹூவென்னுங் கந்தர்வன் அவ்யானையின் காலைக்கௌவிக்கொள்ள,

அதனை விடுவித்துக் கொள்ள முடியாமல் கஜேந்திராழ்வான் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க,

உடனே திருமால் கருடாரூடனாய் அப்பொய்கைக் கரையிலே அரைகுலையத் தலைகுலைய விரைந்தெழுந்தருளித்
தனது திருவாழியைப் பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன் வாயினின்று விடுவித்து

இறுதியில் அதற்கு முக்தியை அருளினன் என்ற வரலாறு உணர்க.

“தொடரெடுத்த” என்று யானைக்கு இட்ட விசேஷணம் சாதியியல்வைக் குறிப்பதாம். காலிலிட்ட விலங்கை

முறித்துக் கையிலே கொண்டு யதேச்சையாகத் திரியுந்தன்மை யானைச்சாதிக்கு இயற்கை யென்க.

எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு இன்னார் ஆவார், இன்னார் ஆகார் என்கிற நியதியில்லாமை

இப்பாட்டால் வெளியிடப்பட்டதாயிற்று.-🙏🙏🙏🙏

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்,
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா,
யாவகை உலகமும் யாவரும் அகப்பட,
நிலம் நீர் தீ கால் சுடர் இருவிசும்பும்,
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓராலிலை சேர்ந்த எம்பெருமா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே 🙏

கார்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்

பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்

சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின்

ஆழ்துயரை  என்நினைந்து போக்குவர் இப்போது  ?🙏

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை 🙏

எம்பெருமானுடைய அவதாரங்கள் பலவற்றினுள்ளும் த்ரிவிக்ரமாவதாரமும் க்ருஷ்ணாவதாரமுமே

இவ்வாழ்வார் தாம் மிகவும் ஈடுபட்ட துறைகள் என்பதை விளக்குதற்கே

உலகளந்த திருவடியையும் சாடுதைத்த திருவடியையும் பேசிப் பிரபந்த்த்தை முடித்தருளினாரென்று பெரியோர் நிர்வஹிக்கும்படி….
பின்னடியிலும் “தாயவனைக் கேசவனை” என்றது காண்க.

உபாயமும் உபேயமும் எம்பெருமானே; சைதந்ய கார்யமான இந்த அத்யவஸாயமொன்றே

நமக்கு வேண்டியது-என்று அருளிச்செய்கிறார்🙏🙏

மன்னும் பவளக் கால் செம்பொன்செய் மண்டபத்துள்………..என்று
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த படி-பவளக் கால் விமானத்தில்

ஸ்ரீ கஜேந்த்ரவரதன் ஸ்ரீதேவி பூதேவி நாச்சிமார்களுடன் பரமபத திருக்கோலத்தில்

திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏🙏

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

திருவல்லிக்கேணி அம்மாள் வார்த்தை —

May 14, 2022

திருவல்லிக்கேணி அம்மாள் வார்த்தை 1

வார்த்தை 1 – அடுப்பிடுகல் என்றேனோ எம்பாரை போலே?

எம்பார் என்பவர் எம்பெருமானாருடைய சிறிய தாயார் குமாரர்.

எம்பெருமானாருக்கடுத்தபடியான ஸ்ரீ வைஷ்ணவ ஓராண் வழி ஆசாரியர்.

திருவாய் மொழிக்கு அழகாகப் பொருள் சொல்ல வல்லவர். திருவாய் மொழியில்

எம்பெருமானின் பரத்வத்தை நிலை நாட்டும் பதிகங்களில் “ஒன்றும் தேவும்”

என்ற பதிகம் (4-10) ஒப்பற்றது. இந்தப் பதிகத்தின் வ்யாக்யாந ப்ரவேசத்தில்

(முன்னுரையில்) “எம்பார் அருளிச்செய்வர்” என்று ஒருவாக்யம் காணலாம்.

 

“ஸகலவேத சாஸ்த்ரங்களையும் அதிகரித்துவைத்து, பரதத்வம் இன்னது என்று

அறுதியிடமாட்டாதே’ சேம்புக்குக்கூரா சிற்றரிவாளுண்டோ? நமக்கு

உபாஸ்யரல்லாதாருண்டோ? ”என்று கண்டவிடமெங்கும் புக்குத் தலை சாய்த்துத்

தடுமாறித் திரியா நிற்க, எம்பெருமானார் தரிசனத்ஸ்தரில் எத்தனையேனும்

கல்வியில்லாத ஸ்த்ரீப்ராயரும் தேவதாந்தரங்களை அடுப்பிடுகல் லோபாதியாக

நினைத்திருக்கிறது. இவ்வொன்றுந் தேவும் இப் பக்ஷத்திலே உண்டாகையிறே”

என்று இவ்வாக்யம். வேதம் முதலான சாஸ்த்ரங்கள் நாராயணனை ஒப்பில்லாத

உயர்ந்த தெய்வமாகக் கூறினாலும் இதர தெய்வங்களையும் உயர்த்திப்

பேசுகையாலே எது பரதத்வம் என்று சாஸ்தரங் கொண்டு நிச்சயிப்பது கடினம்.

 

நாம் தாழ்ந்தவர்களாதலால் எல்லா தேவதைகளும் நமக்கு வணங்கத்தக்கவரே என்றே தோன்றும்.

அதனால் நிச்சய புத்தியில்லாமல் தடுமாறி நிற்பர்.

சாஸ்த்ரஜ்ஞாநம் மட்டுமேயுள்ள பலரும் எம்பெருமானார் தரிசனத்தைச்

சேர்ந்தவருக்குத் திருவாய்மொழியில் இப்பதிகம் நிச்சயபுத்தி அளிப்பதால்

சாஸ்தரங்கற்காத பேதைகளுக்கும் நாராயணனே பரம்பொருள்:

அவனையொழிந்த மற்ற தெய்வங்கள் அடுப்பிடுகல் போன்று

வணங்கத்தகவரல்லர் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உண்டு என்பது கருத்து.

அடுப்பிடுகல் அடுப்புக்கிட்ட கல்.

 

எம்பார் அருளிச்செய்த முக்தகச்லோகம் இத்தொடர்பில் அறியத்தக்கது. 

“த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குசவிபூதய:

ராமாநுஜபதாம்போஜ ஸாமாஸ்ரயணசாலிந:”

எம்பெருமானார் திருவடித் தாமரைகளையாச்ரியத்தவர்கள் ப்ரம்மாதி தேவதைகளையும் அவர்களுடைய

ஐச்வர்யங்களையும் புல்லென மதித்திருப்பர் – என்றபடி.

தேவதாந்தர விஷயத்தல் இப்படிப்பட்ட நிச்சயபுத்திவேணுமென்பதை வலியுறுத்துகிறது இவ்வார்த்தை.

——————

திருவல்லிக்கேணி அம்மாள் வார்த்தை 2

 “அவரோ நீர்?” எனக்கேட்டேனோ மணற்பாக்கத்தாரைப் போலே?


‘ஸ்ரீவசநபூஷணம்’ என்பது பிள்ளைலோகாசாரியர் அருளிய 18 ரஹஸ்ய நூல்களில்  மிகமுக்கியமானது. 

“ஆர்வசநபூடணந்தின் ஆழ்பொருளெல்லாம் ஆர்அறிவார்?” என்று உபதேசரத்தினமாலை (55)

இந்நூலின் அருமைப்பாட்டைக் காட்டும். இந்த திவ்யசாஸ்த்ரத்துக்கு மணவாள மாமுனிகளிட்டருளிய

வியாக்கியானத்தின் ப்ரவேசத்தில் இந்த நூலவதரித்த க்ரமத்தையருளிச் செய்கிறார்.

“முன்பே பேரருளாளப் பெருமாள் (கச்சி தேவராஜன்) தம்முடைய நிர்ஹேதுக் க்ருபையாலே

மணற்பாக்கத்திலே இருப்பாரொரு நம்பியாரை விசேஷகடாக்ஷம் பண்ணியருளி,

தஞ்சமாயிருப்பன சில அர்த்த விசேஷங்களை தாமேயவர்க்கு ஸ்வப்நமுகேந அருளிச்செய்து.

“ நீர் போய் இரண்டாற்றுக்கும் ( தென் திருக்கவேரி மற்றும் வட திருக்காவேரி ஆகிய இரு ஆறுகள்)நடுவேவர்த்தியும்

(ஸ்ரீரங்கத்திலே இரும்) இன்னமும் உமக்கிவ்வர்த்தங்களெல்லாம் விசதமாக( இன்னும் விரிவாக) நாமங்கே சொல்லுகிறோம் ”என்று

திருவுள்ளமாயருள அவரிங்கே (ஸ்ரீரங்கத்தில்) வந்து பெரிய பெருமாளை ஸேவித்துக் கொண்டு,

தமக்கு முன்பு அங்கருளிச் செய்தவர்த்தங்களையும் அசலறியாதபடி ( வேறொருவருக்கும் தெரியாதபடி)

அநுஸந்தித்துக் கொண்டு ஏகாந்தமானதொரு கோயிலிலே வர்த்தியாநிற்கச் செய்தே,

தம்முடைய ஸ்ரீ பாதத்துக்கு அந்தரங்கரான முதலிகளும் (சிஷ்யர்களுடன்) தாமுமாக

பிள்ளை உலகாசிரியர் ஒருநாள் அந்தக் கோயிலிலே யாத்ருச்சிகமாக வெழுத்தருளி அ

வ்விடம் ஏகாந்தமாயிருக்கை (தனித்து இருக்கை ) யாலே ரஹஸ்யார்த்தங்களை முதலிகளுக்கருளிச்

செய்து கொண்டெழுந்தருளியிருக்க அவை காதிற்பட்ட மணற்பாக்கத்து நம்பி அவை தமக்கு

பேரருளாளப் பெருமாள் அருளிச்செய்தவர்த்த விசேஷங்களாய் இருக்கையாலே போரவித்தராய் (ஆச்சர்யப்பட்டு)

உள்ளினின்றும் புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீ பாதத்திலே விழுந்து

“அவரோ நீர்? (அந்த தேவப் பெருமாள் தானோ தேவரீர்?) என்ன“ ஆவதேது “(ஆம் என்ன விஷயம்?”) என்று பிள்ளை கேட்டருள.

பேரருளாளப் பெருமாள் தமக்கிவ்வர்த்தங்களை ப்ரஸாதித் தருளியபடியையும்.

இத்தேசத்திலே போரவிட்டருளினபடியையும் இன்னமும் உமக்கங்கே விசத்தமாகச் ( விரிவாக)

சொல்லுகிறோமென்றருளிச் செய்த படியையும் விண்ணப்பஞ் செய்ய. கேட்டு மிகவும் ஹ்ருஷ்டராய் (மகிழ்ச்சியுடன்)

அவரையும் அபிமானித்தருள, அவரும் அங்குத்தைக்கு (உலகாசிரியருக்கு) அந்தரங்கராய் வர்த்திக்கிற நாளிலே

பெருமாள் அவர்க்கு ஸ்வப்நத்திலே “இவ்வர்த்தங்கள் மறந்து போகாதபடி இவற்றையொரு

ப்ரபந்தஸ்தமாக்கச் (புத்தகமாக) சொன்னோம் என்றுநீர்பிள்ளைக்குச் சொல்லும்” என்று திருவுள்ளமாக

அவர் “இப்படி பெருமாள் திருவுள்ள மாயருளினார்” என்ற விண்ணப்பஞ்செய்ய

“ஆனால் அப்படியே செய்வோம்” என்று திருவள்ளம்பற்றி அநந்தரம் இப்பிரபந்தம் (ஸ்ரீ வசநபூஷணம்) இட்டருளினாரென்று ப்ரஸித்தமிறே!

மணற்பாக்கத்து நம்பியைக் காஞ்சீபுரத்திலே தேவப்பெருமாள்நிர்ஹேதுகமாக விஷயீகரித்து

ஸ்ரீவசநபூஷண ரஹஸ்யார்த்தங்களை ஸாரமாக அருளிச்செய்து “இவற்றை’ மேலும் விவரமாக

ஸ்ரீரங்கத்தில் சொல்கிறோம் அங்கேபோயிரும் என்று நியமிக்க நம்பியுமப்படியே

ஸ்ரீரங்கத்தில் பெரியபெருமாளை ஸேவித்துக்கொண்டு பிறர்காதில் படாமல் –

இவ்வர்த்தங்களை தமக்குத்தமே சொல்லிக்கொண்டிருக்க: தற்செயலாகப் பிள்ளைலோகாசார்யர்

அவ்விடத்திற்கு வருகை தந்து தம் சிஷ்யர்களுக்கு ரஹஸ்யார்த்தங்களை அருளிச்செய்ய மறைந்திருந்த

நம்பி அதைக் கேட்டு அவை தாம் காஞ்சியில் கேட்டவையாக இருக்கையாலே 

“அவரோ நீர்” (கச்சி தேவப்பெருமாள் தானோ நீர்?) என்ன பிள்ளையும் ஆம் என்று சொல்லி

நம்பிக்கு மேலும் சில ரஹஸ்யங்கள உபதேசித்தார்.

அன்றிரவு பெரியபெருமாள் மணற்பாக்கத்து நம்பியின் கனவில் தோன்றி

“இந்த ரஹஸ்யங்களை எல்லாம் திரட்டி ஒரு நூலாக வெளியிடும்படி நாம் கேட்டதாகப் பிள்ளையிடம் சொல்லும் என்றார்.

நம்பியும் இதைப் பிள்ளையிடம் விண்ணப்பிக்க அதனடியாக அவதரித்ததே ஸ்ரீவசனபூஷணம் என்று

வரலாறு.இதனால் கச்சிப் பேரருளாளனே பிள்ளை லோகாசார்யராக அவதரித்தார் என்பது நிரூபணம் ஆகிறது.

இப்படிப் பெருமாள் மணற்பாக்கத்து நம்பிக்குப் போலே அடியேனுக்கு நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணி

யருளித் தம்மை ஆசார்யராக காட்டப் பெற்றேனோ? என்பது திருவல்லிக்கேணி அம்மையார் கேட்டபடி.

———–

திருவல்லிக்கேணி அம்மாள் வார்த்தை 3

ஆரோக்யம் வேண்டினேனோ பின்பழகியார் போலே?

பின்பழகிய பெருமாள் ஜீயர்என்பவர் நம்பிள்ளையின் அந்தரங்க சிஷ்யர்

“பின்பழகராம்பெருமாள் சீயர் பெருந்திவத்தில்,

அன்பதுவு மற்று ஆசையினால் நம்பிள்ளைக்கு.

ஆன அடிமைகள் செய் அந்நிலையை னெஞ்சே!

ஊனமற எப்பொழுதும் ஓர் (உபதேசரத்தினமாலை 66) என்கிறபடியே

இவர் நம்பிள்ளைக்கு குற்றேவல் புரிவதில் ஊக்கமிக்குள்ள வராயிருந்தார்.

ஒரு சமயம் ஜீயருக்கு உடல்நலம் குன்றி ஆசார்யஸேவை பண்ணமுடியாமலிருக்க,

அவர் பிள்ளையின் சிஷ்யர்கள் சிலரிடம்” நீங்கள் பெரிய பெருமாளிடம் எனக்காக

“ஆழியெழ” “ஏழை ஏதலன்” முதலான பாசுரங்களை விண்ணப்பஞ்செய்து,

உடல்நலம் பழையபடியாக வேண்டுமென வேண்டுங்கோள் ”என்று ப்ரார்த்திக்க,

அவர்களுமப்படியே பெருமாளை வேண்ட ஜீயர் பழையபடி உடல்நலமடைந்தார்.

சிஷ்யர்கள் நம்பிள்ளையிடம் சென்று ஜீயர் இப்படி எங்களை வேண்டிக்கொள்ளச் சொன்னார்.

பெருமாளிடம் ஆயுளையும் ஆரோக்யத்தையும் வேண்டுவது ஒரு ஸ்ரீவைஷ்ணவர் செய்யலாமா?” என்று கேட்க,

பிள்ளை அவர்களை, “ஜீயரின் கருத்துயாதாயிருக்குமென்று உங்கள் நினைவு?” என்று கேட்க,

இவர்களும் இங்கத்திய வாழ்க்கையில் பற்று ஜீயருக்கு விடவில்லை என்ற பொருள்பட பலவிதமாகப் பேசினர்.

ஸ்வாமி நம்பிள்ளை கோஷ்டி
ஸ்வாமி நம்பிள்ளை கோஷ்டி

ஜீயருடைய திருவுள்ளைத்தை பிள்ளை அறிந்தவராகையால் அவரை அழைத்து

“நீரிப்படி பெரிய பெருமாளை நிர்ப்பந்திக்கலாமா? இது ஸ்வரூபவிருத்தமன்றோ?’ ‘என்று கேட்டார்.

ஜீயர் பிள்ளையிடம் தம் உள்ளக்கருத்தை வெளியிட்டபடி:

’ தேவரீர் நீராடி எழுந்தருளி திருப்பரியட்டம் சாத்திக் கொள்ளும் போது மார்பிலும் முதுகிலும்

குறுவேர்வை முத்துக்களாக அரும்ப. அடியேன் ஆலவட்டத்தைச்(விசிறி வீச வேண்டும்) சுற்றிச் சுழன்று பரிமாற வேண்டும்.

இந்த கைங்கர்யத்தை இழக்க விரும்பாததால் பெருமாளை அப்படி வேண்டும்படி சொன்னேன்.

மற்றபடி வாழ்க்கையில் அடியேனுக்கு வேறு பற்று எதுவுமில்லை ”என்ற விண்ணப்பஞ் செய்தார். 
ஸ்வரூப விருத்தம் என்றதையறிந்தும் அதைப் பாராமல்’ ஆசார்யஸே வையேமுக்யம். தன்னையழியமாறியும்
அதைச் செய்தேனாக வேணும் ”என்ற திட அத்யவஸாயம் (உறுதிப்பாடு)
பின் பழகராம் பெருமாள் ஜீயரைப் போல் யாருக்கேனு முண்டோ? என்பது இவ்வார்த்தையின் கருத்து. 
———

திருவல்லிக்கேணி அம்மாள் வார்த்தை 4

வார்த்தை 4. உசாத்துணையாய்ச் சென்றேனா ஆழ்வானைப் போலே?

வேதங்கள் நமக்கு மேலான ப்ராமணங்கள். இவைகளில் பகவதாராதனமான கர்மாக்களைச் சொல்லுவது ஒரு பாகம்.

பரம் பொருளான ப்ரஹ்மத்தின் இயல்புகளைச் சொல்வது மற்றொரு பாகம்,

இவற்றின் பொருள்களை நிச்சயித்து ஸூத்ரங்களாக ரிஷிகள் கர்மமீமாம்ஸா, ப்ரஹ்மமீமாம்ஸா என்று

இரண்டு நூல்களைச் செய்தனர்.

இவற்றுள் பின்னதான ப்ரஹ்மமீமாம்ஸா வ்யாஸபகவானால் 4 அத்யாயங்களாக இயற்றப்பட்டது.

இதை ப்ரம்மஸூத்ரம் என்றும் சாரீரகம் என்று அழைப்பர். இந்த நூலுக்கு வ்யாஸரின் நேர்சிஷ்யரான

போதாயந முனிவரால் வ்ருத்தி என்றழைக்கப்படும் விளக்கம் வடமொழியில் எழுதப்பட்டது.

ப்ரஹ்மஸூத்ரத்திற்க்கு அத்வைதமதத்தின்படி ஆதிசங்கராசார்ய ஸ்வாமி ஒரு பாஷ்யமிட்டார்.

இவர் மதத்தை மாயாவாதம் என்பர்.

ஸ்ரீவைஷ்ணவ மதத்துக்குச் சேர ஒரு பாஷ்யமிட வேண்டுமென்று பரமாசாரியரான ஆளவந்தார் விரும்பினார்.

அவர் தம் வாழ்நாளில் போதாயந வ்ருத்தியை ஸேவிக்க (படிக்க) முடியாமல் போயிற்று.

அந்த நூல் காச்மீரத்தில் சாரதாபீட நூலகத்தில் ஒரே ஒரு பிரதி இருந்தது.

ஆளவந்தார் விருப்பத்தை ஸ்ரீராமாநுஜர் நிறைவேற்றி வைப்பதாக ப்ரதிஜ்ஞை பண்ணி

வ்ருத்தி க்ரந்தத்தை ஸேவித்து விட்டு ப்ரஹ்மஸூத்ர பாஷ்யம் பண்ணுவதாக காச்மீரத்துக்கு எழுந்தருளினார்.

 

ஸ்ரீகூரத்தாழ்வான் திருவவதார திருநக்ஷத்திர திருநாள் – தை ஹஸ்தம்


அப்போது தனக்குத் துணையாக அறிவுக்கூர்மையான கூரத்தாழ்வானை துணைக்கு அழைத்துச் சென்றார்.

காச்மீர நூலகத்தில் வருத்திக்ரந்தத்தை ஸ்ரீராமாநுஜரும் ஆழ்வானுமாக ஸேவித்தனர்.

ஆனால் ஒன்றிரண்டு நாட்களில் அங்குள்ள அத்வைத வித்வான்களின் சூழ்ச்சியினால்

ஸ்வாமியிடமிருந்து அந்த நூல் அபகரிக்கப்பட்டது. பூராவும் ஸேவிக்கவில்லையே என்ற குறை ஸ்வாமியை வாட்டியது.

ஆனால் ஸ்ரீராமானுஜர் தூங்கும் போதும் வேறுகாரியமா யிருக்கையிலும் ஆழ்வான் அந்த நூலை வாசித்திருந்தபடியால்

ஒரு முறை பூராவும் ஸேவித்து முடித்திருந்தார். அந்தக்ரந்ததை படித்ததை அப்படியே தரிக்கும் சக்தி ஆழ்வானுக்கு

மிக்கிருந்தபடியால் ஸ்வாமியிடம் தேவரீர் வருந்த வேண்டாம்: அப்படியே விண்ணப்பம் பண்ணுகிறேன்” என்று

ஸ்வாமியின் கவலையைப் போக்கினார்.

பிறகு பாஷ்யத்தைப் பண்ணும் போது ஸ்வாமி பங்கதிகளைச் சொல்ல ஆழ்வான் ஏடுபடுத்தினார்.

இதனால் வ்ருத்திக்கு இசையாத கருத்துக்கள் பாஷ்யத்தில் புக இடமில்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

ஸ்ரீ ராமானுஜர் ஸாதித்த சாரீரகமீமாம்ஸா பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம் என்று குலாவப்படுகிறது.

இதை எழுதிமுடிக்க உசாத்துணையாய் (உறுதுணையாக) இருந்தவர் கூரத்தாழ்வான்.

இப்படிப்பட்ட ஒரு பெரும் பணிக்கு ஆழ்வான் போல வேறொருவர் உசாத்துணையாக இருக்க முடியாது என்பது இவ்வார்த்தையின் கருத்து.

———

 

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா பிரதான 30 ஸ்லோகங்கள் —

May 12, 2022

ஸ்ரீ கீதா பிரதான 30 ஸ்லோகங்கள் —

ஸ்ரீ பகவத்கீதை — இரண்டாம் அத்தியாயம் –ஸாங்கிய யோகம்–

ஸ்லோகங்கள்–12,13,14

ஸ்ரீ பகவத்கீதை –மூன்றாம் அத்தியாயம் –கர்ம யோகம்–

ஸ்லோகங்கள்–13,19,27,37

ஸ்ரீ பகவத்கீதை — நான்காம் அத்தியாயம் –ஞான கர்ம ஸந்யாஸ யோகம்–

ஸ்லோகங்கள்–2,7,9,34

ஸ்ரீ பகவத்கீதை — ஐந்தாம் அத்தியாயம் — ஸந்யாஸ யோகம்–

ஸ்லோஹம்–18

ஸ்ரீ பகவத்கீதை — ஏழாம் அத்தியாயம் — ஞான விஜ்ஞான யோகம்–

ஸ்லோகங்கள்–1,8,14,19,23

ஸ்ரீ பகவத்கீதை — ஒன்பதாம் அத்தியாயம் — ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்–

ஸ்லோகங்கள்–10,11,13,14,22

ஸ்ரீ பகவத்கீதை –பத்தாம் அத்தியாயம் — விபூதி யோகம்–

ஸ்லோகங்கள்–8,9,10,11

ஸ்ரீ பகவத்கீதை — பன்னிரண்டாம் அத்தியாயம் — பக்தி யோகம்

ஸ்லோஹம்–5

ஸ்ரீ பகவத்கீதை – பதினைந்தாம் அத்தியாயம் -புருஷோத்தம யோகம்–

ஸ்லோஹம்–6

ஸ்ரீ பகவத்கீதை — பதினெட்டாம் அத்தியாயம் –மோஷ சந்நியாச யோகம்-

ஸ்லோகங்கள்–55,66.

——————

ஸ்ரீ பகவத்கீதை — இரண்டாம் அத்தியாயம் –ஸாங்கிய யோகம்–

12. நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்

ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன்,
ந த்வம் இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே,
அத: பரம்-இனி மேலும்,
வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்

இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே.
இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.

தேகங்களத்தனையும் தோன்றியவாறு அழியும். எது ஓயாது தகனமாய்க் கொண்டிருக்கிறதோ அது தேகம்.
தேகங்களுள் குடியிருக்கும் ஆத்மா அழிவற்றது; முக்காலத்திலும் அது பொதுவாயுள்ளது.
ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்தில் இல்லாமற் போய்விடுவது அதற்கில்லை.
எப்படி அது காலத்தில் அடிபடுவதில்லை என்று வினவின், அதற்கு விடை வருகிறது:

———-

13. தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி

யதா தேஹிந:-எப்படி ஆத்மாவுக்கு,
அஸ்மிந் தேஹே-இந்த உடலில்
கௌமாரம் யௌவநம் ஜரா-பிள்ளைப் பிராயமும் இளமையும்,
மூப்பும் ததா தேஹாந்தரப்ராப்தி-அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது
தீர தத்ர ந முஹ்யதி-தீரன் அதில் கலங்கமாட்டான்.

ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ
அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.

ஒருவன் குழந்தையாய்க் காளையாகிப் பிறகு கிழவனாகிறான் இந்த மாறுதல்களெல்லாம் ஒரே மனிதனிடத்து உண்டாகின்றன.
குழந்தையாக இருந்தவன் ஒருவன், காளையானவன் மற்றொருவன் என்று சொல்லுதல் பொருந்தாது.
அங்ஙனமே ஓர் உடலைவிட்டு இன்னோர் உடலுக்குப் போகிறவனும் அதே ஆள்.
ஞானிக்கு இவ்வுண்மை சுவானுபவமாக விளங்குவதால் அவன் மனக்கலக்க மடைவதில்லை.
பின்பு மனங்கலங்காதிருந்து பழகுபவன் தீரன் அல்லது ஞானி ஆவதற்குத் தன்னை ஆயத்தப்படுத்துகிறான்.
மாறுபாடு யாவும் உடலினுடையது என்றும், மாறாத்தன்மை ஆத்மாவினுடையதென்றும் அறிபவன் தீரன்.
ஆத்மா நித்தியப்பொருள் எனினும் அதற்குக் குளிர் வெப்பம், இன்ப துன்பம் முதலியன இருப்பது இயல்புதானே
என்ற எண்ணம் வரலாம். அதைப் பற்றிய உண்மை வருமாறு:

————–

14. மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஸீ÷க்ஷதாஷ்ணஸுகது:கதா:
ஆகமாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத

கௌந்தேய-குந்தியின் மகனே,
ஸீதோஷ்ண ஸுகது:கதா:-குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும்,
மாத்ராஸ்பர்ஸா: து-இயற்கையின் தீண்டுதல்கள்,
ஆகமாபாயிந:-உண்டாகி அழிபவை
அநித்யா:-அநித்யமானவை
பாரத – தாந் ஸ்திதிக்ஷஸ்வ-பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின்
தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

கண், செவி முதலிய ஐம்பொறிகள் அதனதன் புலனாகிய வடிவம், ஒலி முதலியவைகளில் உலவுகின்றன.
அதனால் உலகம் வேண்டப்படுபவை, வேண்டப்படாதவைகளாகப் புலனாகி இன்ப துன்பங்களை விளைவிக்கின்றன.
இந்திரியங்களுக்கு விஷயமாகும் பொழுது தோன்றவும், விஷயமாகாதபொழுது அவைகள் மறையவும் செய்கின்றன.
ஒரு வேளையில் இன்பம் தருகிற அதே பொருள் மற்றொரு வேளையில் துன்பம் தருகிறது.
குளிர் அல்லது வெப்பம் இதற்குச் சான்று. இன்பம் தரும் உணவு நோய் வாய்ப் பட்டிருக்கும் போது துன்பம் தருகிறது.
ஆகையால் அவையாவும் அநித்தியமானவைகள். அவைகளைப் பொறுத்துப் பழகுபவன் உறுதியைப் பெறுகிறான்.
திதிøக்ஷ அல்லது பொறையைப் பழகுதல் நல்வாழ்க்கைக்கு ஓர் இன்றியமையாத சாதனமாகிறது.
அத்தகையவன் இன்ப துன்பங்களுக்கு ஆளாவதில்லை; ஞானத்துக்குத் தகுதியுடையவன் ஆகிறான்.

————————-

ஸ்ரீ பகவத்கீதை –மூன்றாம் அத்தியாயம் –கர்ம யோகம்–

13. யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்

யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்த:-வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர்,
ஸர்வகில்பிஷை: முச்யந்தே-எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்,
யே பாபா: ஆத்மகாரணாத் பசந்தி-தம் பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள்,
தே து அகம் புஞ்ஜதே-பாவத்தை உண்ணுகிறார்கள்.

வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்.
தம் பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.

கர்மம் தன்னளவில் புண்ணியமுமல்ல, பாபமுமல்ல. எண்ணத்திற்கு ஏற்றாற்போன்று அது புண்ணியம் அல்லது பாபம் ஆகிறது.
தீயாரைத் தகர்த்து நல்லாரைப் பேணுதற்கென்று புரியும் வெம்போர் புண்ணியச் செயலாகும்.
தனது தனி நலத்தை நாடிச்செய்யும் தேவாராதனை பாபச் செயலாகும்.
எத்  தொழிலைச் செய்தாலும் அதன்மூலம் உலக நன்மையும் இறைவனது பெருமையும் முன்னணியில் நிற்க வேண்டும்.
தான் தனது என்னும் செருக்குப் பின்னணிக்குப் போகுமளவு அது புண்ணியச் செயலாம்.
நித்திய கர்மத்தில் தக்கதொரு சான்று எடுத்துக்கொள்ளுமிடத்து, சமைத்த உணவை மற்றவர்களுக்கு
முதலில் வழங்கியபின் மிஞ்சியதை உண்பவன் மேலோன். மற்றவர்களைப்பற்றிய எண்ணமில்லாது
தனக்கென்றே உணவைச் சமைப்பவன் அல்லது தேடிக்கொள்பவன் கர்மபந்தத்தைப் பெருக்குகிறான்.
அந்த அளவில் அவன் பாபத்தைப் புசிப்பவன் ஆகிறான்.

யக்ஞம் செய்யாத வாழ்நாளோ வீண்நாள் ஆகிறது. இல்வாழ்வான் ஒருவன் வீண் நாள் வழியடைப்பதற்கு
ஐம்பெரும் வேள்விகளை நாள்தோறும் செய்தாக வேண்டும். அவையாவன :

1. தேவ யக்ஞம் : கடவுள் வழிபாடு இல்லாது ஒரு நாளும் கழியலாகாது. இஷ்ட தேவதையை முறைப்படி
நாள்தோறும் வாழ்த்தி வணங்க வேண்டும்.
2. ரிஷி யக்ஞம்: உலக நன்மையின் பொருட்டுச் சான்றோர் சிறந்த சாஸ்திரங்களை இயற்றி வைத்திருக்கின்றனர்.
அவர்களில் பலர் தங்கள் பெயரையும் வெளிக்குக் காட்டாது வைத்துச் சென்றனர்.
அவர்கள் அமைத்த தெய்வ நெறி நூல்களை முறையாக ஆராய்வதும் அவைகளை மற்றவர்களுக்கு எடுத்து ஓதுவதும்
ஆகிய செயல்கள் அன்னவர்களைப் போற்றுதலுக்கு ஒப்பாகும்.
நூல்களை ஓதுதலிலும் ஆராய்தலிலும் ஒவ்வொரு நாளும் கழிய வேண்டும். இதற்குப் பிரம்ம யக்ஞம் என்றும் பெயர் உண்டு.
3. பித்ரு யக்ஞம்: மனிதன் வாழ்ந்து வரும் உடல் வாழ்க்கையில் தன் முன்னோர்களுக்குக் கட்டுப்பாடு உடையவன் ஆகிறான்.
அவர்கள் எவ்வுலகில் எந்நிலைமையில் இருப்பினும் இன்புற்றிருப்பார்களாக, என்று அவர்களைக் குறித்து
நித்தமும் நல்லெண்ணம் எண்ணுதல் வேண்டும். உயிரோடிருக்கும் பெற்றோர்களுக்கு
நாள்தோறும் பணிவிடை செய்வதும் பித்ருயக்ஞத்தின் பிரிவினையாகும்.
4. நர யக்ஞம்: மக்களது பசியைப் போக்குதல், பிணியை நீக்குதல், வாழ்க்கையைப் பண்படுத்துதல்,
கல்வியைப் பெருக்குதல் ஆகிய இவை யாவும் நரயக்ஞத்தில் அடங்குகின்றன.
காலத்துக்கு ஏற்றாற் போன்று நரயக்ஞத்தை மாற்றியமைத்தல் வேண்டும்.
5. பூத யக்ஞம்: ஆடு மாடு முதலிய ஜீவஜந்துக்கள் மக்களது வாழ்க்கைக்குப் பல விதங்களில் பயன்பட்டு வருகின்றன.
அவ்வுயிர் வகைகளை மக்கள் நன்கு பேணி வருதல் பூத யக்ஞமாகும்.

இங்ஙனம் பஞ்ச மகாயக்ஞத்தில் மனிதன் உறுதியாக ஈடுபடவேண்டும். வேள்வியாக அமைத்து வினைகளை
வெவ்வேறு விதமாக விரித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கைக்கு உற்ற துணை.
அதனால் இயற்கையின் நடைமுறை என்னும் சக்கரத்தின் பிரவிருத்தியும் நன்கு நடைபெறுகிறது.

———-

19. தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:

தஸ்மாத் ஸததம் அஸக்த:-ஆதலால், எப்போதும் பற்று நீக்கி,
கார்யம் கர்ம-செய்யத்தக்க தொழிலை,
ஸமாசர-செய்து கொண்டிரு,
ஹி அஸக்த:-ஏனெனில் பற்றில்லாமல்,
கர்ம ஆசரந் பூருஷ:-தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன்,
பரம் ஆப்நோதி-பரம்பொருளை எய்துகிறான்.

ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு.
பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.

ஓயாது ஹிருதயம் அடித்துக் கொண்டிருப்பதால் உடல் வாழ்க்கை நன்கு நடைபெறுகிறது.
ஆனால் ஹிருதயம் அடிப்பதில் மனிதன் கருத்துச் செலுத்துவதில்லை.
அது போன்று பல கருமங்களைப் பற்றற்றுச் செய்ய வேண்டும்.
பற்று நீங்குமளவு வேலைகளுக்கிடையில் விச்ராந்தி தானே உண்டாகிறது.
ஆத்ம சொரூபத்தை அறிதலும் அத்தகைய மனதுக்கு எளிதாகிறது.
வேலை செய்யாது விச்ராந்தி பெறமுடியாது. விச்ராந்தி என்பது மனவமைதி.

அப்படி ஏராளமாக வியவகாரங்களைச் செய்து கொண்டிருப்பதற்கு இடையில்
விச்ராந்தி யடைந்தவர்கள் உண்டா? உண்டு.

———–

27. ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே

ப்ரக்ருதே: குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால் எங்கும்,
கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள் செய்யப்படுகின்றன,
அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால் மயங்கியவன்,
கர்தா அஹம் இதி மந்யதே-“நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன.
அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக் குணங்களால் ஆகிய பிரகிருதி அல்லது இயற்கை கர்ம சொரூபமானது.
பிரகிருதி வேறு, ஆத்மா வேறு என்று அறியாதவன் அக்ஞானி. தனக்குப் புறம்பான ஒன்றைத் தன் மயமாகக் கருதுதல் அகங்காரம்.
பிரகிருதியை ஆத்மாவென்று அகங்கரித்து கர்மம் செய்யாத ஆத்மா கர்மம் செய்வதாக எண்ணி அவன் மயங்குகிறான்.
எதிரில் நிற்கும் ஒரு ரயில் வண்டித் தொடரைப் பார்த்து கொண்டிருப்பவன், அவ் வண்டி ஓட ஆரம்பித்ததும்
தானிருக்கும் ரயில் வண்டியே ஓடுவதாக மயங்குதலை ஒத்தது இது.

—————-

ஸ்ரீ பகவாநுவாச

37. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:
மஹாஸநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்

ஸ்ரீ பகவாநுவாச-பகவான் சொல்லுகிறான்,
ரஜோகுணஸமுத்பவ:-ரஜோ குணத்திற்பிறப்பது
ஏஷ: காம: க்ரோத-இஃது விருப்பமும் சினமும்,
மஹாஸந: மஹாபாப்மா-பேரழிவு செய்வது; பெரும்பாவம்,
யேநம் இஹ வைரிணம் வித்தி-இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது;
பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

உலகத்தவர் எல்லார்க்கும் பரம சத்துருவாயிருப்பது ஆசை, அந்த ஆசைக்குத் தடையுண்டாகும்போது அது கோபமாக வடிவெடுக்கிறது.
ஆகையால் காமத்தையும் குரோதத்தையும் ஒன்றாகப் பகவான் பகருகிறார். அது ரஜோ குணத்திலிருந்து உதிக்கிறது.
மேலும் ரஜோ குண வளர்ச்சியையும் உண்டு பண்ணுகிறது. நெருப்புக்கு எவ்வளவு விறகு கொடுத்தாலும் அதைப் பொசுக்கி விட்டு
மேலும் விறகை வேண்டி நிற்கிறது. அங்ஙனமே காமத்துக்கு விஷயங்களை ஊட்ட ஊட்ட அது அவைகளை உண்டு வளர்க்கிறது.
விஷயம் என்னும் உணவை வேண்டியவாறு அது உண்ண வல்லது. ஆசை பெருகப் பெருக பாவமும் பெருகுகிறது.
மனிதனுக்கு வரும் கேடுகளெல்லாம் ஆசையிலிருந்து வந்தவைகள். ஆகையால் அது இவ்வுலக வாழ்க்கையில் எல்லார்க்கும் பகையாம்.

————–

ஸ்ரீ பகவத்கீதை — நான்காம் அத்தியாயம் –ஞான கர்ம ஸந்யாஸ யோகம்–

2. ஏவம் பரம்பரா ப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப

பரந்தப-எதிரிகளை எரிப்பவனே !
ஏவம் பரம்பரா ப்ராப்தம்-இவ்விதம் வழி வழியாக வந்த
இமம் ராஜர்ஷய: விது:-இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தனர்,
ஸ: யோக மஹதா காலேந-அந்த யோகம் வெகு காலமாக,
ஹ நஷ்ட:-இவ்வுலகில் இழக்கப் பட்டது.

இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜ ரிஷிகள் உணர்ந்திருந்தனர்.
பரந்தபா, அந்த யோகம் கால மிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.

வழி முறை வழி முறையாக அரசர்கள் இந்த யோகத்தைக் கடைப்பிடித்து அதன்படி சிறப்படைந்து வந்தார்கள்.
நாளடைவில் தக்கார் குறைந்து, தகவிலர் மலிந்துவர யோகமும் பழுதுபட்டுப் போயிற்று.

நல்ல மனிதர் இல்லாத காலத்தில் நல்ல திட்டம் எதுவும் தலையெடுக்காது என்பது வெளியாயிற்று.
நிழல் மனிதனைத் தொடர்ந்து வருவதுபோன்று நல்லாரைத் தொடர்ந்தே நல்ல திட்டம் வருகிறது.
அதை பகவான் இங்ஙனம் நிரூபிக்கிறார்.

————–

7. யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்

பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது,
தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய்,
அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ,
ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ,
அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

சமூக முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் கர்மங்கள் தர்மங்களாகின்றன; தடையாயிருப்பவைகள் அதர்மங்களாகின்றன.
அதர்மம் தலையெடுத்துப் பெருங் குழப்பங்களை உண்டுபண்ணும் நெருக்கடிகளிலெல்லாம்
அவர் அவதரிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படி அவதரித்து வந்து அவர் என்ன செய்கிறார்?

————–

9. ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந

அர்ஜுந!-அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

எனது தெய்வத் தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்
உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

பிறவாத பரம்பொருள் பிறப்பவன் போன்று தனது மாயா சக்தியால் காட்டிக் கொள்கிறான்.
அங்ஙனமே கர்மத்துக்கு அதீதமான அவதார மூர்த்தி சத் கர்மங்கள் யாவையும் செய்து வருபவனாகத் தென்படுகிறான்.
இவ்வுண்மையை உள்ளபடி சுவானுபவத்தில் அறியும் ஆத்மசாதகர்கள் தாங்களும்
அங்ஙனம் உலகில் வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை நீத்த வல்லவராகின்றனர்.

ஒரு தத்துவத்தை விசாரித்து அறிந்துகொள்ளுதல் மிகக் கஷ்டமானது.
ஆனால் அதே தத்துவத்தை அவதார புருஷன் ஒருவன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான்.
மேலும் அவன் அருளுக்கு உறைவிடமாகிறான். அவனை நேரில் காண இயலாதவரும் அவனைப் பற்றி
நினைக்க நினைக்க அவனது சொரூபத்தை அறிகிற பரிபாகம் அடைகின்றனர்.

இராமபிரான், ஸீதாதேவி, கிருஷ்ணன், ராதை இவர்கள் சரித்திர பூர்வமானவர்களல்ல என்றும்,
சும்மா உருவகப்படுத்திக் கூறப்பட்டவர்களே யென்றும், இதிஹாஸங்கள் வெறும் அத்யாத்மிக அர்த்தங்களை மட்டும்
உடையன வென்றும் நினைக்காதே. அவர்கள் உன்னைப் போலவே
ஊனும் உதிரமும் பெற்ற சரீரத்தை யுடையவர்களாக இருந்தனர்.
ஆனால் அவர்கள் தெய்வீகம் வாய்ந்தவர்களாதலால் அவர்களுடைய வாழ்க்கைகளைச் சரித்திர பூர்வமாகவும்
ஆத்மீக உண்மைகளை விளக்குவனவாகவும் கொள்ளலாம்.
ஸமுத்திரமும் அதன் அலைகளும் போல பிரம்மமும் அவதாரங்களுமாகும்.

திவ்விய குணங்களுடனும் திவ்விய சக்திகளுடனும் அவதார புருஷர்கள் மண்ணுலகில் அவதரிக்கிறார்கள்.
அவர்கள் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்த எந்தச் சமாதி நிலையிலும் எளிதில் புகுவார்கள்; திரும்புவார்கள்.
அரசன் அரண்மனையில் அன்னியர் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்குந்தான் போக முடியும்.
அரசனுடைய குழந்தையோ அரண்மனையின் எந்த மூலைக்குப் போய் வரலாம்.
அவதார புருஷர்களை அறிந்துகொள்வது அரிதான காரியமாகும். எல்லையற்ற அகண்ட வஸ்து எல்லைக்குட்பட்ட
கண்டத்துள் அடங்கி இருப்பதற்கு ஒப்பாகும் அவர்களது வாழ்க்கை.
ஸ்ரீ ராமபிரான் இவ்வுலகில் அவதரித்தது ஏழு ரிஷிகள் மாத்திரமே
அவர் ஈசுவராவதார மென்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர்.
எனவே, இவ்வுலகில் எப்போது ஈசுவரன் வந்த போதிலும் சரியே,
சிலர் மட்டுமே அவருடைய தெய்வீக சுபாவத்தைத் தெரிந்துகொள்வர்.

ஈசுவரன் அனந்தன்; ஸர்வ சக்திமான். அவன் அருள் மயமான தனது தெய்வீக சக்தியை
மானிட சரீரத்தில் தோற்றுவித்து, நம்மிடையே ஓர் அவதார புருஷனாகத் தோன்றத் திருவுளங் கொள்ளலாம்.
ஈசுவராவதாரத்தினின்றும் அருள்வெள்ளம் பெருகிப் பக்தர்களை இன்புறுத்துகிறது.
வார்த்தைகளால் இவ்விஷயத்தை விளக்க முடியாது. ஞானக்கண்ணால் தான் இந்த உண்மையைப் பார்த்துத்
தெரிந்து கொள்ளவேண்டும். இதை நம்பவேண்டுமானால், ஈசுவரனை அனுபூதியில் காணவேண்டும்.

—————

34. தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந:

ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா-வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும்,
தத் வித்தி-அதனை அறிந்துகொள்,
தத்த்வதர்ஸிந: ஜ்ஞாநிந-உண்மை காணும் ஞானிகள்,
தே ஜ்ஞாநம் உபதேக்ஷ்யந்தி-உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்து கொள்.
உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

பண்டம் மாற்றுவது போன்று ஞானத்தைப் பெறமுடியாது. அதற்கேற்ற சீரிய இணக்கத்தை சிஷ்யன் குருவோடு
வைத்துக் கொள்ளவேண்டும். வீழ்ந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பதன் மூலம் சிஷ்யன் தன்னைக் குருவிடம் ஒப்படைக்கிறான்.
பந்தம் மோக்ஷம், ஆத்மா அநாத்மா ஆகியவைகளைப்பற்றி முறையாகக் கேள்விகள் கேட்பதால் தனது
மனபரிபாகத்தை அவன் தெரிவிக்கிறான். குற்றேவல் புரிவதால் குருவுடைய உடல் வாழ்க்கை என்ற
யக்ஞத்தில் சிஷ்யன் தன்னை ஆகுதியாகச் சமர்ப்பிக்கிறான். இங்ஙனம் முறையாக மெய், மொழி, மனம் ஆகிய
முக்கரணங்களும் ஆசாரியனுக்கென்றே அர்ப்பிக்கப்படுகின்றன.

அத்தகையவனிடத்து குரு கருணைகூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிக்கிறார். வெறும் வாசா ஞானி குருவாக முடியாது.
எரியும் விறகுக் கட்டைதான் மற்றொரு விறகில் தீ மூட்டும். அங்ஙனம் யாரிடத்துப் பிரம்ம ஞானம் பூர்த்தியாயிருக்கிறதோ
அவரே சிஷ்யனுக்கும் பிரம்மஞானத்தைப் புகட்டவல்லவராவார். பூரண ஞானமும் கருணையும் யாரிடத்து நிறைந்திருக்கிறதோ
அவர் குரு ஸ்தானத்துக்குத் தகுதியுடையவர் ஆவார்.

தனது குருவைக் கேவலம் மனுஷ்யராகக் கருதுபவனுக்குப் பிரார்த்தனையாலும் பக்தியாலும் என்ன பலனுண்டாகக்கூடும்?
குருவைக் கேவலம் மனுஷ்யரென அவன் கருதக்கூடாது. ஈசுவரனைக் காண்பதற்கு முன்னால்,
அத் திவ்விய தரிசனத்தின் முதல் அங்கமாகக் குருவைத்தான் சிஷ்யன் காண்கிறான்.
பிறகு அந்தக் குருவே ஈசுவரனாக மாறி ஈசுவர சொரூபத்தைக் காட்டுகிறார்.
அப்பால் ஈசுவரனும் குருவும் ஒருவரேயென்று சிஷ்யன் தெரிந்து கொள்கிறான்.
அவன் விரும்பும் வரங்களையெல்லாம் திவ்விய குரு அருளுவார். இம்மட்டோ! அவனைப் பிரம்ம நிர்வாணமாகிய
பரமானந்த சுகத்துக்கும் அழைத்துச் செல்வார். அன்றி, பக்தன், ஈசுவரன் என்ற சம்பந்தமுள்ள துவைத நிலைமையில்
அவன் இருக்கவேண்டினும் அங்ஙனமே இருக்கலாம். சிஷ்யன் எதைக் கேட்டாலும் குரு அதை நிச்சயமாகத் தருகிறார்.

மனுஷ்ய குருவானவர் மஹாமந்திரத்தை உனது காதில் மட்டும் உபதேசிக்கிறார்.
தெய்வ குருவோ, ஆத்மாவுக்குள் சைதன்யத்தைச் செலுத்துகிறார். ஈசுவரனுடைய ரகஸியங்களை அறிய வேண்டுமென்ற
தீவிர புத்தி உனக்கு இருக்குமானால், அவ்வீசுவரனே ஸத்குரு ஒருவரை உன்னிடம் அனுப்புவார்.
பக்தனே, குருவைத் தேடவேண்டிய விஷயத்தில் உனக்குக் கவலையே வேண்டாம்.

————

ஸ்ரீ பகவத்கீதை — ஐந்தாம் அத்தியாயம் — ஸந்யாஸ யோகம்–

18. வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி
ஸுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஸிந:

வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே -கவி ஹஸ்திநி ஸுநி ச ஏவ-பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும் கூட,
ஸ்வபாகே: ச-நாயைத் தின்னும் புலையனிடத்தும்,
பண்டிதா: ஸமதர்ஸிந:-பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும்,
நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

சூரிய வெளிச்சம் எல்லாப் பொருள்கள் மீதும் சமமாகவேபடுகிறது. இது கங்கை, இது சாக்கடை யென்று
சூரியன் பேதம் பாராட்டுவதில்லை. அங்ஙனம் பிரம்ம ஞானி பிரம்மத்தையே யாண்டும் காண்கிறான்.
வெறும் புஸ்தகங்கள் பல படித்தவன் பண்டிதன் அல்லன்; பிரம்ம சாக்ஷõத்காரம் பண்ணினவனே பண்டிதன்.
உலகத்தவர் காட்சியில் கல்வியடக்கமுடைய பிராம்மணன் மக்களுள் சிறந்தவன்; நாயை யுண்பவன் கடைப்பட்டவன்.
மிருகங்களுள் பரிசுத்தமானது பசு; அதிசயிக்கத்தக்கது யானை; அருகில் வரத் தகுதியற்றது நாய்.
அக்ஞானிக்கு வேற்றுமையை உண்டுபண்ணும் இந்த உயிர்வகைகளை யெல்லாம் ஞானி
பிரம்ம சொரூபமாகவே காண்கிறான். ஆக, அவனுக்கு வேற்றுமையில்லை.

பேத புத்தியைத் தருவது அக்ஞானம்; ஐக்கிய புத்தியைத் தருவது ஞானம்.

————–

ஸ்ரீ பகவத்கீதை — ஏழாம் அத்தியாயம் — ஞான விஜ்ஞான யோகம்–

ஸ்ரீ பகவாநுவாச

1. மய்யாஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந்மதாஸ்ரய:
அஸம்ஸயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு

ஸ்ரீபகவாநுவாச, பார்த-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த்தா,
மயி ஆஸக்தமநா:-என்பால் இசைந்த மனத்தினனாய்,
மத் ஆஸ்ரய:-என்னைச் சார்ந்து,
யோகம் யுஞ்ஜந்-யோகத்திலே அமர்ந்தவனாய்,
ஸமக்ரம் மாம்-எல்லா ஐஸ்வர்யங்களும், விபூதிகள் பொருந்திய என்னை,
யதா அஸம்ஸயம் ஜ்ஞாஸ்யஸி தத் ஸ்ருணு-எந்தவித ஐயமும் இன்றி உணருமாறு (சொல்கிறேன்), அதை கேள்!

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னைச் சார்ந்து,
யோகத்திலே அமர்ந்தவனாய் என்னை முழுதும் உணருமாறு சொல்லக் கேளாய்.

மத் ஆச்ரய: என்பது கர்மபலன் கீர்த்தி முதலியவைகளில் பற்று வைக்காது
இறைவனையே நாடியிருத்தல் எனப் பொருள்படுகிறது.
ஸமக்ரம் என்றால் விபூதி, பலம், சக்தி, ஐசுவரியம் ஆகிய குண சம்பன்னனாயிருக்கிற ஈசுவரன் என்பதாகிறது.

ஒரு அரசாங்கத்தின் அமைப்பு முழுவதையும் தெரிந்து கொள்ளுகிற அளவு நாம் அதைப் பாராட்டுகிறோம்.
அங்ஙனம் அறிவுக்கு எட்டுகிற அளவு இறைவனை நாம் தெரிந்துகொண்டால் அவன் பால் பக்தி நமக்கு அதிகரிக்கிறது.

———-

8. ரஸோऽஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஸஸிஸூர்யயோ:
ப்ரணவ: ஸர்வவேதேஷு ஸப்த: கே பௌருஷம் ந்ருஷு

கௌந்தேய-குந்தி மகனே!
அஹம் அப்ஸு ரஸ:-நான் நீரில் சுவையாகவும்,
ஸஸி ஸூர்யயோ: ப்ரபா-ஞாயிறிலும் திங்களிலும் ஒளியாகவும்,
ஸர்வவேதேஷு ப்ரணவ:-எல்லா வேதங்களிலும் பிரணவமாகவும்,
கே ஸப்த:-வானில் ஒலியாகவும்,
ந்ருஷு பௌருஷம் அஸ்மி-ஆண்களிடத்து நான் ஆண்மை.

நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி;
எல்லா வேதங்களிலும் நான் பிரணவம். வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.

சர்க்கரையில் செய்த பண்டங்கள் எத்தனை விதங்களாயிருந்தாலும் அவையாவும் தித்திக்கும் தன்மையுடையவைகளாம்.
பரம் பொருளினின்று உண்டாயிருக்கும் பிரபஞ்சம் முழுதிலும் பரம் பொருளின் மகிமை தோன்றுகிறது.
இயற்கையில் மிளிரும் ஈசனது மகிமையை விசாரித்து அறிதல் வேண்டும்.
அத்தகைய ஞானம் விக்ஞானமாக வடிவெடுப்பதும் அவசியமாகிறது. சுத்த ஜலத்துக்குச் சுவை கிடையாது.
ஆனால் ஜலத்தின் துணையில்லா விட்டால் எது கல், எது கற்கண்டு, எது படிகாரம் என்று தெரிந்துகொள்ள முடியாது.
பண்டங்களைக் கரைந்து அதன் தன் சுவையை வெளிப்படுத்துவது நீர்.
பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய நீரினுள் ஆத்மாவின் சொரூபம் சுவை என்னும் வடிவெடுத்திருக்கிறது என்று உணரவேண்டும்.
வடிவத்தைக் காட்டவல்லது ஒளி அல்லது வெளிச்சம். நமக்குத் தெரிந்துள்ள பொருள்களுள் வெளிச்சத்தை எங்கும்
வியாபகமாக வழங்கவல்லவை சூரியனும் சந்திரனுமாம். வடிவங்களின் அழகை விளக்கவும்,
அறிவைப் பெருக்கவும் சந்திர சூரியர்களுடைய பிரபை எவ்வளவு பயன்படுகின்றதென்று ஓர்ந்து பார்ப்பவர்களுக்கு அது விளங்கும்.

ஞானமானது சரியான பாங்கில் ஓங்கும்பொழுது அது விக்ஞானமாகிறது.
ஞான வளர்ச்சிக்கு ஐந்து பூதங்களும் துணைபுரிகின்றன. ஆகாசம் என்னும் பூதத்தின் தன்மாத்திரை சப்தம்.
ஓசைக்கு முதற்காரணம் ஆகாசம். ஆகாசவாணி அல்லது வான் ஒலி என்பது இன்றைக்கு எல்லாரும் அறிந்துள்ள விஷயம்.
ஒலியானது பேச்சுக்குரியதாக மாறும்பொழுது அது பாஷையாகின்றது. பிரணவம் அல்லது ஓங்காரம் மொழிகளுக்கு பீஜம் போன்றது.
எல்லா வேதங்களிலும் பீஜ மந்திரமாயிருப்பது ஓங்காரம். சப்த பிரம்மம் என்று அது அழைக்கப்படுகிறது.
அது எத்தனை பதங்களாக வடிவெடுத்து அவைகளின் அர்த்தத்தை இயற்கையின் வாயிலாகப்
புகட்டிக்கொண்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அதைப்பற்றிய உண்மை விளங்கும்.
ஓசையின் துணையில்லாவிட்டால் இத்தனை சாஸ்திரங்களும் ஞானங்களும் மறைந்துபோம்.
பரம்பொருளே நாத வடிவெடுத்துத் தன்னை ஓயாது விளக்கிக்கொண்டிருக்கிறது.
ஓசை அல்லது மந்திரத்தைச் சரியாக அறிதலும் அவ் ஓசையின் பொருளாகிய பரத்தை அறிதலும் ஒன்றே.

வெறும் மனித வடிவை எடுத்திருப்பதாலேயே ஒருவனுக்குச் சிறப்பு வந்துவிடாது.
அவன் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் ஆண்மை திகழவேண்டும்.
செயற்கரிய செயல் ஒருவனைச் சான்றோனாக்குகிறது. மனிதனிடத்திருந்து கிளம்பும் சீரிய செயல்களெல்லாம்
உண்மையில் தெய்வ சம்பத்துக்களாம். சீரிய செயலைப் போற்றுவது ஈசுவர ஆராதனையாகும்.

——–

14. தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே

ஹி ஏஷா குணமயீ மம தைவீ மாயா-ஏனெனில் இந்த குணமாகிய எனது தேவமாயை,
துரத்யயா-கடத்தற்கரியது,
யே மாம் ஏவ ப்ரபத்யந்தே-யாவர் என்னையே சரணடைவரோ,
தே ஏதாம் மாயாம், தரந்தி-அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.

இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள்
இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.

தேவமாயை என்பது ஈசுவரனிடத்திருந்து உண்டான மாயாசக்தி. அது அவனுக்குச் சரீரம் போன்று அமைந்திருக்கிறது.
விஷ்ணுவுக்கு மிகப்பெரியவன் என்பது அதன் பொருள். அவன் தன் சொரூபத்தை மாயையைக் கொண்டு மறைத்து வைத்திருக்கிறான்.
ஆனால் அவனிடத்து அடைக்கலம் புகுகின்றவர்களுக்கு அவன் தன்னைக் காட்டித் தருகிறான்.
அவனுடைய மெய்க் காட்சி கிட்டும்பொழுது மாயையின் பொய்க் காட்சி மறைகிறது.
கயிற்றைக் காணுமிடத்துப் பாம்பின் காட்சி மறைவது போன்றது அது.

திவ்விய மாதாவை நம்மால் ஏன் காணமுடியவில்லை? அவள் திரைக்குப் பின்னால் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்தி,
பிறர் கண்ணிற்படாமல் தான்மட்டும் எல்லாவற்றையும் பார்க்கும் உயர்குலத் துதித்த ஸ்திரீ போன்றவளாவாள்.
அவளுடைய உண்மையான பக்தர்கள் மட்டும், மாயையாகிய திரையைத் தாண்டி, சமீபத்தில் சென்று,
அவளைத் தரிசிக்கின்றனர். ஈசனைச் சரண்புகாதவர் யார்?

————–

19. பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:

பஹூநாம் ஜந்மநாம் அந்தே-பல பிறவிகளின் இறுதியில்,
ஜ்ஞாநவாந்-ஞானவான்,
ஸர்வம் வாஸுதேவ: இதி-எல்லாம் வாசுதேவனே என்று,
மாம் ப்ரபத்யதே-என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான்,
ஸ: மஹாத்மா ஸுதுர்லப:-அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.

பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், எல்லாம் வாசுதேவனே என்று கருதி என்னை
அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.

வாசுதேவ என்றால் பிரத்தியகாத்மன், எதிலும் ஊடுருவி நிலைத்திருப்பவன் எனப் பொருள்படுகிறது.
(ஸர்வம்) எல்லாம் என்பது சரம், அசரம், மேன்மக்கள், கீழ்மக்கள், நல்லார், பொல்லார் எனப் பொருள்படுகிறது.
ஞானிக்கு நித்தியவஸ்து எது என்பது மனதில் தெளிவடைந்த பிறகும் அது சுவானுபவம் ஆதற்குப் பல பிறவிகள் பிடிக்கின்றன.
காண்கின்ற அனைத்தும் பரமாத்ம சொரூபமாகத் தென்படும்போது ஞானம் பூர்த்தியாகிறது.
இத்தகைய பிரம்ம ஞானி நடமாடும் தேவதையாகிறான். இம் மகோன்னத நிலையை அடைந்த மனிதன் உலகில் அரியருள் அரியனாவான்.
இந்த அத்தியாயத்தின் மூன்றாவது சுலோகம் இதைக் குறிப்பிடுகிறது.

வேதாந்தத்தை அனுஷ்டானத்தில் கொண்டுவர முயலும் நல்ல ஆத்ம சாதகர்கள் உலகத்தில் உள்ள மக்கள் எல்லாரையும்
கடவுள் சொரூபமாகக் கருதி யொழுகுகிறார்கள். அதனால் தாங்கள் ஞானமடைவதுமன்றி சமூகத்திலுள்ள
பல கேடுகளைக் களைதற்கு அவர்களுடைய மனப்பான்மை ஊக்கங் கொடுக்கிறது.

பேத புத்தியைத் தருவது அக்ஞானம்; ஐக்கியபுத்தியைத் தருவது ஞானம்.

———-

23. அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம்
தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி

து அல்பமேதஸாம் தேஷாம்-எனினும், அற்ப மதியுடைய அன்னோர்,
தத் பலம் அந்தவத் பவதி-எய்தும் பயன் இறுதியுடையதாக ஆகிறது.
தேவ யஜ: தேவாந் யாந்தி= தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர்,
மத்பக்தா: மாம் அபி யாந்தி-என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.

எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர்
தேவர்களை எய்துகின்றனர். என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.

நிலைத்த இன்பம், நிலையற்ற இன்பம் இவ்விரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அற்ப அறிவாளர்களாம்.
காட்டுக்குச் செல்லும் விறகுத் தலையர் எல்லாரும் எடுத்துக்கொள்ளும் முயற்சி ஒரேவிதமானது.
ஆனால் எல்லைப் புறத்தில் சிறு விறகு எடுப்பவன் அடையும் பயன் அற்பமானது.
உட்புறத்தில் இருக்கும் விலை மிகுந்த மரம் எடுப்பவன் எய்தும் பயன் பெரியது.
அது போன்று தேவைகளை வணங்குவதிலும் சர்வேசுவரனை வணங்குவதிலும் முயற்சி யொன்று; பலன் வேறுபட்டது.
அதே முயற்சியால் அந்தமில்லா ஆனந்தத்தைப் பெறுதற்குப் பதிலாக அற்ப சுகத்தைப் பெறுபவர் சிற்றறிவாளர் ஆகின்றனர்.

————–

ஸ்ரீ பகவத்கீதை — ஒன்பதாம் அத்தியாயம் — ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்–

10. மயாத்ய÷க்ஷண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம்
ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே

கௌந்தேய-குந்தி மகனே,
அத்ய÷க்ஷண மயா-தலைவனான என்னால் (என் மேற்பார்வையில்),
ப்ரக்ருதி: ஸசராசரம்-ப்ரக்ருதியானது அசைவன, அசையாதன எல்லாம்,
ஸூயதே-தோற்றுவிக்கிறது.
அநேந ஹேதுநா-இந்த காரணத்தால்,
ஜகத் விபரிவர்ததே-உலகமே சுழல்கிறது.

என் மேற்பார்வையில் சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே, இந்த ஏதுவால் உலகமே சுழல்கிறது.

ஜகத் காரியங்களைச் செய்யும் வல்லமை வந்தமைகிறது என்கிறார்.
சூரியனுடைய முன்னிலையில் சூரிய கிரணங்களால் பொருள்கள் பரிணமிப்பது போன்று,
ஈசுவரனுடைய முன்னிலையில் அவனுடைய மாயா சக்தியால் உலகனைத்தும் உரு எடுப்பனவாகின்றன.

அத்யக்ஷன் என்பது சபாபதி அல்லது கண்காணிப்பவன் என்று பொருள்படுகிறது.
உலக நடைமுறைக்கு இறைவன் சபாபதியாகின்றான். அரசன் சிங்காசனத்தில் வீற்றிருக்கையில்

சிப்பந்திகள் தம் தொழில்களைப் புரிவது போன்று, பரமாத்மாவின் முன்னிலையில்

பிரகிருதியானது அண்டங்களை இயக்கவல்ல உயிரையும் அருளையும் பெற்றுத் தொழில் புரிகிறது.

——

11. அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தநுமாஸ்ரிதம்
பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஸ்வரம்

மம பரம் பாவம்-என்னுடைய மேலான இயல்பை,
அஜாநந்த: மூடா-அறியாதவர்களான மூடர்கள்,
மாநுஷீம் தநும்-மனித உடலை,
ஆஸ்ரிதம் பூதமஹேஸ்வரம்-தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு தலைவனான,
மாம் அவஜாநந்தி-என்னை புறக்கணிக்கிறார்கள்.

மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன்
நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.

கர்மத்தில் கட்டுப்படாதவன் வடிவத்திலும் கட்டுப்படுவதில்லை. ஜடாகாசத்தை எப்பொருளும் சிதைப்பதில்லை.
பின்பு, அதற்கப்பாலுள்ள சிதாகாசம் சிதைவுபடுகிறது என்பது பொருந்தாது. அது நித்ய-சுத்த-புத்த-முக்த-ஸ்வபாவமுடையது.
எல்லார்க்கும் பொதுவாக அந்தர்யாமியாயிருக்கின்ற பரமாத்மா உடலில் எங்ஙனம் வாழவேண்டும் என்பதை
மக்களுக்குக் காட்டுதற் பொருட்டே ஓர் அவதார புருஷராக தேகத்தைத் தரிக்கிறார். இதை அறியாதவர் அவரை அவமதிக்கின்றனர்.

யானைக்கு வெளியே தோன்றும் தந்தமும் உள்ளே இருக்கும் பற்களுமாக இரண்டுவகைப் பற்களிருக்கின்றன.
அவ்வாறு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா போன்ற அவதார புருஷர்கள் சாதாரணமான வெளித்தோற்றம் உள்ளவர்களாய்,
எல்லாருடைய பார்வைக்கும் மனுஷ்ய ரீதியை உடையவர்களாகப் புலப்படுகின்றனர்.
ஆயினும் அவர்கள் கர்மவசத்துக்கு வெகுதூரம் அப்பாற்பட்டவர்களாகிப் பரமசாந்தியில் நிலைத்திருக்கின்றனர்.

————

13. மஹாத்மாநஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஸ்ரிதா:
பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்

து பார்த-ஆனால் பார்த்தா,
தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா:-தெய்விக இயல்பைக் கைக் கொண்ட,
மஹாத்மாந:-மகாத்மாக்கள்,
மாம் பூதாதிம் அவ்யயம் ஜ்ஞாத்வா-என்னை எல்லா உயிர்களுக்கும் முதல் என்றும், அழிவற்றவன் என்றும் அறிந்து,
அநந்யமநஸ:-வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன்,
பஜந்தி-வழிபடுகிறார்கள்.

பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைகொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய
என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்.

தெய்விக இயல்பு சத்துவ குணத்தினின்று வருகிறது. ஜீவர்களெல்லாம் பகவானிடத்திருந்து தோன்றியவர்கள்.
இப் பேருண்மையை உணர்ந்து திரும்பி அவனைச் சென்று அடைய விரும்புபவர்கள் மகாத்மாக்கள் ஆகின்றனர்.
கரணங்களை அடக்குதல், அவனுடைய உயிர்களிடத்து அன்பாயிருத்தல், அவனை அடைதற்கு சிரத்தை காட்டுதல்
முதலிய நல்லியல்புகள் அத்தகைய மேலோர்க்கு எளிதில் வந்து அமைகின்றன.

—————

மேலோர் எப்படி யெல்லாம் வழிபடுகின்றனர் என்னும் வினா எழுமிடத்து :

14. ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா:
நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே

த்ருடவ்ரதா:-திடவிரதத்துடன்,
ஸததம் கீர்தயந்த: ச-இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும்,
யதந்த: ச-முயற்சி புரிவோராகவும்,
நமஸ்யந்த: ச-என்னைப் பக்தியால் வணங்குவோராய்,
நித்யயுக்தா: பக்த்யா உபாஸதே-நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால்
வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

மனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது;
எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை
பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்தியயோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள்.

—————

22. அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக÷க்ஷமம் வஹாம்யஹம்

அநந்யா: யே ஜநா-வேறு எதிலும் நாட்டமில்லாத எந்த பக்தர்கள்,
மாம் சிந்தயந்த:-என்னை தியானித்துக் கொண்டு,
பர்யுபாஸதே-எந்த பயனும் எதிர்பார்க்காது உபாசிக்கின்றாரோ,
நித்யாபியுக்தாநாம் தேஷாம்-இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுடைய,
யோக÷க்ஷமம் அஹம் வஹாமி-நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பாவேன்.

வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன்.

அனன்யம் என்றால் பரமாத்மா தங்களுக்கு அன்னியமானவர் அல்லர் என்று எண்ணுதல் அல்லது அவரைத் தவிர
வேறு எதையும் எண்ணாதிருத்தல். யோகம் என்பது வேண்டியதைப் பெறுதல்.
பின்பு பெற்றதை வைத்துக் காப்பாற்றுதல் ÷க்ஷமமாகும்.

கர்ப்பத்திலிருக்கும் சிசு தாய்க்கு அன்னியமானதல்ல; ஆதலால் அதன் போஷணை முழுதும் தாயினிடத்திருந்தே இயல்பாக வருகிறது.
பிறந்த பின்பும் தாயைத் தஞ்சமடைந்திருக்குமளவு அவள் உணவைத் தேடி வந்து ஊட்டுகிறான்.
அனன்னிய பக்தியில் ஈடுபடுவோர் அடையும் பேறு யாண்டும் அதைவிடப் பெரியது.

பொருளைத் தேடுபவர்க்குப் பொருள் அமையவும், பிறகு அழியவும் செய்கிறது. இறைவனது அருள் ஒன்றையே நாடுபவர்க்கு
அழியாத அவனது அருள் சுரக்கிறது. மேலும் உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளின் யோக ஷேமமும்
இறைவனாலேயே அளிக்கப்படுகிறது. பக்தர் மீது பித்தம் கொண்டுள்ள பகவான் தாயினும் சாலப்பரிந்து
அவர்களைப் பராமரித்து வருவதாக வாக்குக் கொடுக்கிறார். அனன்னிய பக்தி பண்ணுபவர்களுடைய பெரு வாழ்க்கையே
பகவானது பிரமாணிக்கத்துக்குப் பரம சான்றாகிறது. பக்தியின் பெருக்கால் தங்கள் உயிரையே அவர்கள் பொருள் படுத்துவதில்லை.
ஆகையால் அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு பகவானுடையதாகிறது.

பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி வைத்தால் பகவான் பக்தனை நோக்கிப் பத்து அடி வருகிறார்.

————-

ஸ்ரீ பகவத்கீதை –பத்தாம் அத்தியாயம் — விபூதி யோகம்–

8. அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா:

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:-நான் அனைத்திற்கும் தொடக்கம்,
மத்த: ஸர்வம் ப்ரவர்ததே-என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது,
இதி மத்வா-என்று புரிந்து கொண்டு,
பாவஸமந்விதா: புதா:- நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அறிஞர்கள்,
மாம் பஜந்தே-என்னை தொழுவார்.

நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த புலவர்
என்னை அன்புடன் தொழுவார்.

செடிகளின் வளர்ச்சிக்கு முதற்காரணம் பூமி என்று அறியும் கிருஷிகர் அந்தப் பூமியைப் பண்படுத்தலிலேயே
கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர். உலகு அனைத்துக்கும் முதற்காரணம் கடவுள் என்றும்,
கடவுளிடத்து மனதைத் திருப்புகிறவர்களுக்கே தெய்வப்பெற்றிகள் யாவும் வந்தமைகின்றன வென்றும் அறியும் சான்றோர்
அன்புடன் தங்கள் மனதைக் கடவுளிடத்துத் திருப்புகிறார்கள். ஏது நிகழ்ந்திடினும் அவர்கள் மனது கடவுளைவிட்டு மாறுவதில்லை.
செடி பூமியைப் பற்றிக்கொண்டிருப்பதுபோன்று அவர்களது இயல்பு முழுதும் ஈசனையே பற்றிக்கொண்டிருக்கிறது.
அப்படி அவனைப் பற்றுமளவு யோகம் அசைவற்றதாகிறது.

வாழ்க்கையில் மனிதன் கொண்டுள்ள வெவ்வேறு இயல்புகளுக்கு ஈசுவர உபாசனையில் இடமில்லையா?
விடை வருகிறது :

————

9. மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச

மத்சித்தா-அகத்தினை என்பால் வைத்து,
மத்கதப்ராணா-உயிரை என்னுள்ளே புகுத்தி,
பரஸ்பரம்-தங்களுக்குள்ளே,
போதயந்த: ச-விளக்கிக் கொண்டும்,
கதயந்த: ச-(என்னுடைய புகழைப் பற்றி) பேசிக் கொண்டும்,
நித்யம் துஷ்யந்தி ச மாம் ரமந்தி-எப்போதும் மகிழ்கிறார்கள்; என்னிடமே இன்புறுகிறார்கள்.

அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரை யருவர் உணர்விப்பாராய்,
எக்காலுந் தம்முள் என்னைக் குறித்தியம்புவார்; அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார்.

விரும்பிய பொருளில் மனதை வைப்பது மிக எளிது. தாய் தந்தையர்களிடத்திருந்து தங்களுக்கு எல்லாம்
வந்தமைந்தனவென்று அறியும் குழந்தைகள் முழுமனதையும் அவர்களிடத்தே திருப்புகின்றனர்.
தனக்குத் தோற்றமும் இருப்பிடமும் பகவான் என்பதை அறிகிற பக்தன் தன்னுடைய உள்ளத்தை இறைவன் பால் வைக்கிறான்.
தான் வளர்ந்தபின் பெற்றோரைப் பேணப் பிள்ளை ஒருவன் தன் உயிரையே கொடுக்கிறான்.
உயிரினும் மிக்க தொன்று யாருக்குமில்லை. பக்தன் அதைப் பகவானுக்குக் கொடுக்கிறான்.
காதலன் காதலிக்கு உயிர்கொடுப்பது போன்றது அல்ல பக்தன் செயல். காதலில் தனி நலமும் தனியுரிமையும் இருக்கிறது.
பக்தியில் மற்றவர்கள் எல்லாரும் சேர வேண்டுமென்று, தான் பகவானைக் காண்கிறவாறு மற்றவர்களுக்கு பக்தன் விளக்குகிறான்.
மற்றவர் புகட்டுவதையும் தெவிட்டாது சுவைக்கிறான். அதைப் பலதடவை சொல்லுதலிலும் கேட்பதிலும் மகிழ்வு வருகிறது.
ஆனால் சிற்றின்பம் போன்று அது முடிவில் மனக்கிலேசத்தையோ, குறையையோ உண்டுபண்ணுவதில்லை.
பக்தியினால் என்றைக்கும் நிறை மனது அமையப்பெறுகின்றது. அந்த நிறைவில் ஆனந்தமும் ஓயாது ஊற்றெடுக்கிறது.

வெறுங் கண்ணாடியில் யாதொரு உருவமும் பதிவதில்லை. ஆனால் தகுந்த ரசாயனப் பொருளை
அக் கண்ணாடியின் மேல் பூசிய பிறகு, படங்களை எழுதலாம். அதுபோல பக்தியாகிய ரசாயனப் பொருளை
ஹிருதயத்தின்மீது தடவினால், ஆங்கு ஈசுவரனுடைய ரூபத்தைப் பதியச் செய்யலாம்.

————-

இங்ஙனம் பக்தி பண்ணுகிறவர்களிடத்து பகவான் எப்படி நடந்துகொள்கிறார்? விடை வருகிறது :

10. தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே

ஸததயுக்தாநாம்-எப்போதும் யோகத்தில் இருப்பாராகில்,
ப்ரீதிபூர்வகம் பஜதாம்-அன்புடன் என்னை வழிபடும்,
தேஷாம்-அவர்களுக்கு,
யேந-எந்த உபாயத்தின் மூலம்,
மாம் உபயாந்தி-என்னை அடைவார்களோ,
தம் புத்தியோகம் ததாமி-அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கிறேன்.

எப்போதும் யோகத் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன்.
இதனால் என்னை யவர் எய்துவார்.

சர்க்கரையை நாவில் வைத்தால் அது தித்திக்கிறது என்பது தெரிகிறது. பிறகு அந்தச் சர்க்கரையை என்னென்ன
வகைப் பட்சணங்களாகச் செய்தால் அதன் சுவையை நன்கு ரசிக்கலாம் என்று அறிவது
சர்க்கரையைப் பற்றிய புத்தியோகமாகிறது. உள்ளன்போடும் உறுதியாகவும் யோகத்தில் நுழைபவர்க்கு
இறைவனது மகிமை கொஞ்சம் விளக்குகிறது. அது யோகத்துக்கு இன்னும் தூண்டுகோலாகிறது.
பகவான் தந்து கொண்டே வருகிற புத்தியோகத்தால் அவருடைய சொரூபம் மேலும் மேலும் அறியப்படுகிறது.
அவருடைய சொரூபத்தைத் தொடர்ந்து அறியுமளவு பக்தன் இன்னும் அதிகமாகப் பகவானைச் சார்ந்து நிற்கிறான்.
இங்ஙனம் புத்தியோகத்தின் மூலம் பக்தி வளர்கிறது.

ஒரு சிறு துவாரத்தின் வழியாக ஒரு இருட்டறைக்குள் ஒரு கிரணம் வெளிச்சம் வருகிறது.
அவ்வறைக்குள்ளிருப்பவனுக்கு வெளிச்சத்தைப் பற்றியிருக்கும் அபிப்பிராயமானது அந்தக் கிரணத்தின் அளவுக்குத் தகுந்தபடிதானிருக்கும்.
கதவுகளிலும் ஜன்னல்களிலும் துவாரங்கள் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகமான வெளிச்சம் வரும்.
அதைப்பற்றிய அறிவும் அதிகரிக்கும். அக்கதவுகளையும் சாளரங்களையும் நன்றாகத் திறந்துவிட்டால்
வெளிச்ச மயமாக அவ்வறை இருப்பதை அவன் காண்பான். ஆனால் வெட்ட வெளியில் நிற்பவனோ வெளிச்சத்திலேயே இருக்கிறான்.
அது போல பக்தர்களுடைய சுபாவத்துக்கும் சக்திக்கும் தகுந்தபடி ஈசுவரன் தன்னைத் தோற்றுவித்தருள்கிறான்.

————-

பகவான் கொடுக்கிற புத்தியோகத்தால் பக்தன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :

11. தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம:
நாஸயாம்யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா

தேஷாம் அநுகம்பார்தம்-அவர்களுக்கு இரங்கி நான்,
ஆத்மபாவஸ்த:-அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று,
அஹம் ஏவ-நானே,
அஜ்ஞாநஜம் தம:-அறியாமையால் உண்டான இருளை,
பாஸ்வதா-ஒளிமயமான,
ஜ்ஞாநதீபேந-ஞான வடிவான விளக்கினால்,
நாஸயாமி-அழிக்கிறேன்.

அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால்
அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.

அன்பர்களது உள்ளத்தில் நீங்காது குடியிருந்து, அவர்கள் நன்மையடைய வேண்டும் என்று கருதுவது கடவுளின் கருணையாகும்.
அவர் ஏற்றிவைக்கும் ஞான தீபத்தின் தத்துவங்களாவன: விவேகம் அந்த விளக்கின் உருவமாகிறது.
பக்தியினின்று வரும் மனத்திருப்தியே அதற்கு எண்ணெய். விஷக்காற்றில் விளக்கு எரியாது.
ஆழ்ந்த ஈசுவரத் தியானமே இவ்விளக்கை எரிப்பதற்கான தூய காற்று ஆகிறது.
தடைப்படாத பிரம்ம சரிய விரதத்தால் வளரும் பிரக்ஞை இதற்குத் திரியாகிறது.
ஓய்வடைந்த அந்தக்கரணமே இதற்கு அகலாக அமைகிறது. பெருங் காற்று வீசி தீபத்தை அணைத்துவிடலாகாது.
விருப்பு வெறுப்பற்ற தெளிந்த மனது அதற்கேற்ற வீடாக அமைகிறது.
தங்கு தடையற்ற ஒருமுகப்பட்ட தியானத்தினின்று உதிக்கும் நிறை காட்சியே இத்தீபத்தின் ஒளிப்பிழம்பாகும்.
இதுவே பக்தனது உள்ளத்தில் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஞான தீபமாகும்.
இதனால் அவன் கடவுள் காட்சியை உள்ளபடி அடையப்பெறுகிறான்.

தாணாக்காரன் தனது விளக்கின் வெளிச்சம் எவர்மீது படும் படி திருப்புகிறானோ அவரைப் பார்க்கக்கூடும்.
ஆனால் அந்த விளக்கைத் தன்மீது திருப்பாதிருக்கும் வரையில் அவனை ஒருவராலும் பார்க்க முடியாது.
அதுபோல ஈசுவரன் எல்லாரையும் பார்க்கிறான்.
ஆனால் தனது கிருபை மூலமாக அவன் தன்னைத் தோற்றுவிக்கும் வரையில் ஒருவராலும் அவனைக் காணமுடியாது.

———

ஸ்ரீ பகவத்கீதை — பன்னிரண்டாம் அத்தியாயம் — பக்தி யோகம்

5. க்லேஸோऽதிகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே

அவ்யக்த ஆஸக்த சேதஸாம்-உருவற்ற (அவ்யக்த) பிரம்மத்தில் மனதை ஏற்படுத்தும்,
தேஷாம் க்லேஸ: அதிகதர:-அந்த மனிதர்களுக்கு சாதனையில் உழைப்பு அதிகம்,
ஹி தேஹவத்பி-ஏனெனில் உடலில் பற்றுள்ளவர்களால்,
அவ்யக்தா கதி-உருவற்ற பிரம்ம விஷயமான மார்க்கம்,
து:கம் அவாப்யதே-மிகுந்த சிரமத்துடன் அடையப் படுகிறது.

ஆனால், அவ்யக்தத்தில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம், உடம்பெடுத்தோர் அவ்யக்த
நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.

இருதர உபாஸகர்களும் அடையும் குறி ஒன்றே. ஆனால் தேகாபிமானம் உடைய ஒருவனுக்கு நிர்க்குண
பிரம்ம உபாஸனையைவிட சகுண பிரம்ம உபாஸனை எளிது. நிர்க்குண பிரம்ம உபாஸகன் துவக்கத்திலேயே
உடல் பற்றை அறவே நீக்க வேண்டும். பிஞ்சாகிக் காயாகிக் கனியாகின்றவிடத்து
மேலோடு பழத்தினின்று தானாகப் பிரிந்து போகிறது. அங்ஙனம் ஞான முதிர்ச்சி யடைபவனுக்கு தேகாபிமானம் போய் ஒழிகிறது.
தேகப் பற்றுடையவனுக்கு எளிதாயிருப்பது சகுண பிரம்ம உபாஸனை.
அதில் துவக்கி மேல் நோக்கிப் போகின்றவனுக்கு சாதனத்தில் அதிக சிரமம் ஏற்படுவதில்லை.

ஞான யோகி நானே பிரம்மம் என்கிறான். ஆனால் சரீரத்தை ஆத்மன் என்று கருதும் வரையில் அவ்வித பாவனை
கெடுதியை உண்டுபண்ணும். அவனை அத்யாத்மிக வாழ்க்கையில் முன்னேறச் செய்யாமல் நாசப்படுத்திவிடும்.
அவன் மற்றவர்களை ஏமாற்றுகிறதோடு தன்னையும் ஏமாற்றிக் கொள்கிறான்.

————–

ஸ்ரீ பகவத்கீதை – பதினைந்தாம் அத்தியாயம் -புருஷோத்தம யோகம்–

6. ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக:
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம

யத் கத்வா-எதை அடைந்த பிறகு,
ந நிவர்தந்தே-திரும்பி வருவதில்லையோ,
தத் ஸூர்யோ ந பாஸயதே-அங்கே (பரமபதத்தில்) சூரியன் ஒளி தருவதில்லை,
ந ஸஸாங்க: ந பாவக:-சந்திரனும் தீயும் ஒளிருவதில்லை,
தத் மம பரமம் தாம-அதுவே என் மேலான வீடு (பரம பதம்).

அதனைச் சூரியனும், சந்திரனும், தீயும் ஒளி யேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ,
அதுவே என் பரமபதம்.

கடலினுள் பாய்ந்த நதி கடலாகிறது. அங்ஙனம் பரத்தைச் சார்ந்த மனிதன் பரவெளியில் ஒன்றுபடுகிறான்.
அதுவே சித் ஆகாசம் எனப்படுகிறது. இருட்டறையில் உட்கார்ந்திருக்கும் ஒருவனுக்கு நான் இருக்கிறேன் என்ற உணர்வு இருக்கிறது.
இந்த உணர்வை சூரிய வெளிச்சம் விளக்குமா? விளக்காது. அப்படியே சந்திரனும், தீயும் அதை விளக்கமாட்டா.
இருக்கிறேன் என்ற உணர்வை அந்த உணர்வே விளக்குகிறது. அந்த உணர்வு அல்லது பிரக்ஞை யாண்டும் நிலைத்துள்ளது.
அது தெளிவடைந்த நிலையே பரமபதம் எனப்படுகிறது. தெளிவடைந்த பிறகு அது அகண்டாகாரமாய் விரிகிறது.
அதன் கண் போக்குவரத்து இல்லை; பிறப்பு இறப்பு இல்லை. கால தேச வர்த்தமானம் எல்லாம் அதனுள் ஒடுங்கி மறைகின்றன.
இப் பரவெளியில் கலக்கின்ற ஜீவன் முக்தர்கள் திரும்பவும் ஜீவபோதத்துக்கு வருகிறதில்லை.

கற்பூரத்தைக் கொளுத்திவைத்தால் மிகுதி யொன்றுமிருப்பதில்லை. பகுத்தறிவு (விவேகம்) ஒழிந்து;
மகோன்னதமான ஸமாதி நிலையைப் பெற்றால், அப்பொழுது நான் என்பதும் நீ என்பதும் உலகமென்பதும் இரா.
ஏனென்றால் இந்த மனமும் மமகாரமும் விசுத்தப் பிரம்மத்தில் ஒன்றாய்க் கலந்துவிடுகின்றன.

———–

ஸ்ரீ பகவத்கீதை — பதினெட்டாம் அத்தியாயம் –மோஷ சந்நியாச யோகம்-

55. பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்

மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான்.
என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

ஆகாததை ஆகுமாறு செய்வது அன்பு அல்லது பக்தி. தெரியாததைத் தெரிவிப்பதும் அதே அன்பு.
டாக்டர் ஒருவர் வெறும் நோயை ஆராய்ச்சி பண்ணுவதைவிட நோயாளியிடம் அன்பு கொள்ளுவாராகில்,
அந்த அன்பால் நோயாளியின் வருத்தத்தை உள்ளபடி அறிகிறார். பின்பு அது நோயை உள்ளபடி அறிந்ததாகும்.
அன்பின் மூலம் எதை அறிந்தாலும் அது உண்மையான அறிவாகிறது.

பகவானிடத்து பக்தி பண்ணுபவர் அவரை நன்கு அறிகின்றனர். அவரை அறியுமளவு பக்தி அதிகரிக்கிறது.
ஞானத்தோடு கூடிய பக்தி மிகச் சிறந்தது. அவரே சகுண பிரம்மமாகவும் நிர்க்குணபிரம்மமாகவும் இருக்கிறார் என்பது பக்தனுக்கு விளங்குகிறது.
உலகெல்லாம் அவரிடத்திருந்தே வந்தது. தனக்கும் தன் தலைவனுக்கும் உள்ள தொடர்வு தெரியும்போது பக்தன் பகவானுக்கே உரியவன் ஆகிறான்.
இந்த உண்மையை அறிந்த அக்கணமே பக்தன் பகவானை அடைந்தவன் ஆகிறான்.

ஜீவாத்மாவால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும். அப்போதுதான் ஒருவன் அவனே நான் என்று உணர்ந்து சொல்லக் கூடும்.
ஒரு வீட்டில் நெடுநாளாக வேலை செய்து வந்த வேலைக்காரன் ஒருவன், காலக்கிரமத்தில் அவ்வீட்டார்களுள் ஒருவனாகவே பாவிக்கப்படலாம்.
வீட்டு எஜமானன் அவனுடைய வேலைத்திறமையைக் கண்டு மகிழ்ந்து, ஒருநாள் அவனைத் தன்னுடைய ஆசனத்தில் உட்காரச் செய்து
தன்னைச் சுற்றியுள்ளவர்களை நோக்கி, இந்த க்ஷணம் முதல் இவனுக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை.
நானும் இவனும் ஒன்று. எனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல இவனுடைய கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படியவேண்டும்.
இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று சொல்லலாம். அப்போது அந்த வேலைக்காரன் சங்கோசத்தினால்
இந்தப் புதிய கௌரவத்தைக் காட்டிக்கொள்ளத் தயங்கலாமானாலும், எஜமானன் அவனைக் கட்டாயப்படுத்தி
கௌரவ ஸ்தானத்தில் வைப்பான். ஈசுவரனை நெடுங்காலம் வழிபட்டு அவனுடன் ஐக்கியமான ஜீவனுடைய நிலைமையும் இப்படிப்பட்டதே.
ஈசுவரன் தன்னுடைய மஹிமையை இவர்களுக்கு அருளி, இவர்களைத் தனது ஒப்பற்ற ஸ்தானத்துக்கு உயர்த்துகிறான்.

————–

66. ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு,
மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ – என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும்,
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.

எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

ஜீவன் செய்கிற செயல்களிலெல்லாம் கடைசியான செயல் ஈசனிடத்து அடைக்கலம் புகுதலாம்.
அடைக்கலம் புகுதல் என்பதன் பொருள், தன் முயற்சி போதவில்லை அல்லது பலிதமாக வில்லை;
ஆகையால் தெய்வத்தினிடம் தஞ்சமடைந்து அவர் துணையையும் கொஞ்சம் தேடிக்கொள்ளலாம் என்பதல்ல.
சிற்றோடை பெரிய நதியில் கலந்து பிறகு சமுத்திரத்தில் சங்கமமாவது போன்றது சரணாகதி.
ஜீவனுடைய இச்சா சுதந்தரமெல்லாம் ஈசுவர சங்கற்பத்தில் சேர்ந்துவிடுகிறது.
தனக்கெனத் தனிச் செயல் ஒன்றுமில்லை. ஈசன் செயல் கடலின் செயல் போன்றது. ஜீவன் செயல் அலையின் செயல் போன்றது.
அலையானது கடலுக்கு அன்னியமானதல்ல. ஜீவன் செயலெல்லாம் உண்மையில் ஈசுவரன் செயல்.
கர்மயோகம் ஜீவனை முடிந்த இந்நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.

பக்தன் எப்பொழுதும் தன் தெய்வத்தைச் சார்ந்திருக்கிறான். தனக்கு வரும் நன்மை கேடுகளெல்லாம் கடவுளது ஆணை.
ஆகையால் ஒரு செயலை நன்கு என்றும் மற்றொரு செயலைக் கேடு என்றும் பக்தன் பொருள் படுத்துவதில்லை.
தர்மம் அதர்மம் ஆகிய இரண்டும் ஈசன் செயல் என்ற புனித நிலையை அடைவனவாகின்றன.

அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!

பக்தர்கள் எல்லாரும் அடைக்கலம் என்னும் பெருநிலையை அடைந்திருக்கிறார்கள். இறைவனது பேரன்பில் அவர்கள்
தங்களை மறந்துவிட்டார்கள். ஞாபகக் குறைவில் ஒருவன் நடுவீதியில் நடப்பானாகில் அவன் ஓடும் வண்டிகளால்
ஆபத்துக்கு உள்ளாவான். பக்தனோ அன்பில் தன்னை மறந்தவன் என்றாலும் ஒரு சிறு செயலிலும் சொப்பனத்திலும்
அவன் பிழைபோவதில்லை. ஒழுங்குப்பாடே வடிவெடுத்ததாக அவனது வாழ்க்கை நடை பெறுகிறது.
தாயின் மார்பில் அணைக்கப்பெற்ற சேய்போன்று அவன் சரணாகதியில் இன்பம் துய்க்கிறான்.

இனி ஞானியின் ஞானோதயமும் சரணாகதி எனப்படுகிறது. கண்ணாடியில் நல்லது கெட்டது ஆகிய இரண்டின் பிம்பங்கள் தோன்றலாம்.
எனினும் கண்ணாடியின் சொரூபம் மாறுவதில்லை. தர்மம் அதர்மம் என்று சொல்லப்படும் கர்மங்களெல்லாம் பிரகிருதியினுடையவைகள்.
அந்தராத்மாவாயிருக்கும் சித் சொரூபம் என்னும் பரவெளியை அவைகள் பாதிக்கமாட்டா.
சுத்த சைதன்யமாகிய தன்னில் தானாயிருப்பவன் உபாதிகளையெல்லாம் தியஜித்து பரவெளியில் ஒன்றாய்விடுகிறான்.
பேரறிவு அல்லது பேருணர்வு ஒன்றே பாக்கியிருக்கிறது. உள்ளும் புறமும் என்கிற பாகுபாடுகள் அப்பரவெளிக்கில்லை.
ஞானியடையும் சரணாகதி இதுவே.

யோகி, பக்தன், ஞானி ஆகிய மூவரும் அடையும் சரணாகதி ஒன்றேயாம். அது மூன்று விதமாக விளக்கப்படுகிறது.
சத் சொரூபத்தில் யோகி லயமாகிறான்; சித் சொரூபத்தில் ஞானி லயமாகிறான்; ஆனந்த சொரூபத்தில் பக்தன் லயமாகிறான்.

சிறு குழந்தையொன்று தாயின் மடியில் உட்கார்ந்திருக்கிறது. அதனிடத்து மற்றவர்கள் காட்டும் அன்பை
அங்கீகரிக்கும் பரிசு அதற்கு வந்திருக்கிறது. ஆனால் அதனுடைய மனது இன்னும் விகாரப்படவில்லை.
எந்த நாட்டுக்கு உரிய குழந்தை எந்த மொழி பேசும் குழந்தை, எத்தகைய பழக்க வழக்கங்களையுடையது
ஆகிய பேதங்களையும் பாகுபாடுகளையும் அது இன்னும் அறியவில்லை. பூர்வ ஜன்மத்திலிருந்து அது கொண்டு
வந்திருக்கும் இயல்புகளும் இன்னும் அவ்யக்தமாக மறைந்து கிடக்கின்றன. அதாவது அதன் மனத்தகத்து இருக்கும்
மனோதர்மங்களெல்லாம் இன்னும் வடிவெடுக்கவில்லை. இந்த நிலையில் குழந்தையானது ஞானிக்கு ஒப்பானது.
அதன்பால் உள்ள அபேத நிலை உயிரனைத்தையும் தனக்குரிய தாக்குகிறது. குழந்தையின் தூய அன்புக்கு வசப்படாத உயிர் இல்லை.

தான் அடைந்துள்ள மன பரிபாகத்தால் ஞானி குழந்தை போன்று ஆகிறான். அந்தக்கரண மடங்கத் துறப்பதுவே
எந்தத் துறவினும் நன்று என்பது கோட்பாடு. ஞானியாவதற்கு முன்பு விதவிதமான இயல்புகள் மனதைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
அவரவர் ஸ்வதர்மம் என்பது அதுவே. ஸ்வதர்மத்தைக் கையாளுதலே ஸ்வதர்மத்தை விட்டொழிப்பதற்கு உற்ற உபாயம்.
நோய் வந்தால் அது தன் வேலையைச் செய்ய இடங் கொடுப்பதே அதை ஒழிப்பதற்கு உபாயமாகிறது.
நோயை அடக்கினால் வேறு ஒரு நோயாக அது வடிவெடுக்கும். வந்துள்ள நோய் உடலில் வேலை செய்தால்
அந்நோய் ஓய்ந்து அறவே அகன்றுபோம். நாம் எடுத்துக்கொண்ட ஸ்வதர்மம் அத்தகையது.
ஸ்வ தர்மத்தைக் கையாண்டு அதன் வேகத்தை ஒழித்து விடுவது நம் குறிக்கோள். மழைபெய்து மேகம் ஒழிந்து போனால்
எஞ்சியிருப்பது வெட்டவெளி. பற்றற்று தர்மம் செய்து தர்மத்தை ஒழித்துவிட்டால் எஞ்சியிருப்பது சுத்த சைதன்யமாகிய ஆத்ம சொரூபம்.

தனக்கு அன்னியமானதெல்லாம் தன்னை வந்து சாரும் பொழுது அது அழுக்கு அல்லது பாபம் ஆகிறது.
ஜீவபோதம் பெற்றிருப்பது பாபம்; அது தனது நிஜ சொரூபமல்ல. கடலுக்குள் வந்த நதியின் நதித்தன்மையை
நீக்கி விட்டுக் கடலின் தன்மையைப் பெறும்படி அது செய்துவைக்கிறது. பரமாத்மாவை சரணடைந்த ஜீவனிடத்திருந்து
ஜீவ போதம் என்ற பாபத்தை அகற்றிவிட்டு பரபோதத்தை அது வழங்குகிறது. ஜீவபோதத்திலிருந்து விடுதலை யடைவதே மோக்ஷமாம்.
பரமாத்மா அமிர்த சொரூபம்; அதனுள் அழிவு என்பதில்லை. அது பரமானந்தம்.
ஆக, அதனுள் துன்பமில்லை. அது பரஞானச்சுடர் ; ஆக, அதனுள் அக்ஞான இருள் இல்லை.
சத்தியம், ஞானம், ஆனந்தம் பிரம்மம். அந்தக்கரணம் அகன்றபின் ஜீவன் பிரம்மமே.

கோழைத்தனத்தை அகற்று ; ஆண்மையுடன் எழுந்திரு; உன் கடமையைச் செய் என்ற கருத்துடன்
கீதா ஆசாரியன் கீதையைத் துவக்கினான். உன் கடமைகளை யெல்லாம் நீத்து விட்டு எனது அகண்ட
சத் சித் ஆனந்த சொரூபத்தில் திளைத்திருப்பாயாக என்று கீதாசாரியன் முடிவு கூறினான்.
இடையில் பகர்ந்துள்ள யாவும் கர்மத்தைக் கடப்பதற்கு உற்ற உபாயங்களாம். அவனைச் சரணடைந்து,
அவன் அருளை நாடி நிற்பவர்க்கு அவனருளால் அவனுடைய போதனையும் நன்கு விளங்கும்.
பிறகு ஜீவபோதத்தைக் கலைத்துவிட்டு அவனுடைய அகண்ட ஸத் சித் ஆனந்த சொரூபத்தில் இரண்டறக் கலத்தலும் எளிதாகின்றது.

பரிபூரண சரணாகதியின் தன்மை எப்படிப்பட்டது? களைப்படைந்தவன், அன்றைய வேலையை முடித்த பிறகு
தலையணையின் மீது சாய்ந்துகொண்டு, நிம்மதியாய் ஆனந்த நிலையைப் போன்றது அது. துயரமும் துன்பமும் இல்லாத நிலையாகும் அது.

இத்துடன் கீதா உபதேசம் முற்றுப் பெறுகிறது

—————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமாலை (என்னும் திவ்ய ப்ரபந்தம்) அறியாதார், ஸ்ரீ திருமாலையே (ஸ்ரீ யபதியை ) அறியாதார்—-15-24-

May 9, 2022

ஸ்ரீ திருமாலை (என்னும் திவ்ய ப்ரபந்தம்) அறியாதார், ஸ்ரீ திருமாலையே (ஸ்ரீ யபதியை ) அறியாதார்–
என்ற சொற்தொடருக்கு ஏற்ப,
எல்லோரும், தொண்டரடிப் பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற
திவ்ய ப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த பிரபந்தம், வடமொழியில் உள்ள “ஸ்ரீ விஷ்ணு தர்மம்” என்ற நூலின் அடிப்படையில் உள்ளது என்று
நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.

நம் ஆச்சார்யர்கள், இந்த ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும்படி,
“தொண்டரடிபொடி எம்பெருமானை எப்போதும் பேசு” என்று சொன்னார்கள்.
பெருமாளுக்கு தொண்டு செய்பவர்களுக்கு(பிரதம பர்வம்) பெருமாள், பெருமான் ஆவது போல்,
பெருமாளின் அடியவர்களுக்கு சேவை செய்யும் அடியவர்களுக்கு (சரம பர்வம்), இவர் பெருமான் ஆவார் என்று கூறுவார்கள்.

நாம் முன்பே பார்த்ததுபோல், இந்த ஆழ்வார், திருமந்திரத்தின் அர்த்தத்தை தெரிந்து கொண்டு,
இந்த உலக சுகங்களில் ஆசை கொள்ளாமல், பெருமாளிடம் பக்தி கொண்டு, ஸ்ரீரங்கம் சென்று பெரிய பெருமாளை சேவிக்க,
அவர் தம் வடிவழகை காட்டி, ஆழ்வாரை எப்போதும் தனது அருகிலேயே இருக்கும் படி செய்தார்.

அதனால், இந்த ஆழ்வார், பரமாத்மாவின் ஐந்து நிலைகளில்,
பர, வியூக, விபவ மற்றும் அந்தர்யாமி என்ற நான்கு நிலைகளையும் விலக்கி
மற்றும் அர்ச்சைகளில் உள்ள மற்ற எல்லா திவ்யதேசங்களையும் விலக்கி,
வைஷ்ணவர்களுக்கு வேர்ப் பற்றான திரு அரங்க திவ்ய தேசத்தை மட்டுமே பாடி, பெருமை பெற்றார்.
ஆகையால், ஆழ்வார், நமக்கு உதவி செய்யும் பொருட்டு, தெளிவாக, மற்ற எல்லா குழப்பங்களையும் நீக்கி,
திருவரங்கனை மட்டுமே, திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி முழுவதும் பாடி நமக்கு ஒரு நல்வழி காட்டி உள்ளார்.

இந்த ஆழ்வாரின் மற்றொரு சிறப்பு, நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை
திருமாலை என்கின்ற இந்த திவ்ய ப்ரபந்தத்தில் விளக்கியது.

நம் கர்ம பலன்களாகிய பாப, புண்ணியங்களை துறந்து பிரம்மத்தை அடைந்து, நித்யஸூரிகளைப் போல்,
பரமாத்மாவிற்கு சேவை செய்து, ஆனந்தம் அடையவேண்டியதே ஒவ்வொரு உயிரின் ஒரே குறிக்கோளாக
இருக்க வேண்டும் என்று வேதங்கள் உரைக்கின்றன.
அதற்கு நாம் அருகதை உடையவர்கள் ஆனாலும், அதை நாம் செய்யாது, மீண்டும் மீண்டும் பிறந்து (இறந்தும்),
இந்த சம்சாரத்திலேயே வாழ்ந்து அவதியுறுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல்,
ஸ்ரீவைகுந்ததில், மஹாலக்ஷ்மி தாயார், பெருமாளை வேண்ட, பெருமாள் இந்த ஆழ்வாரின் மூலம்,
தீவினைகள் மிகுந்த கலியுகத்தில் பரமாத்மாவை அடைவதற்கான எளிய வழியாகிய
நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமையை, சொல்லிக் கொடுக்க, அதையே திருமாலை என்ற
இந்த திவ்யப்ரபந்தத்திற்கு மூலப்பொருள் ஆக்கினார்.

இந்த பிரபந்தம், எட்டெழுத்து மந்திரம் “அஷ்டாட்சர மந்திரம்‘ ) போல் மிக்க சுருக்கமும் இல்லாமல்,
இருபத்தினான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட இராமாயணம் அல்லது ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ஸ்லோகங்கள்
கொண்ட மஹாபாரதம் போல் மிக்க நீண்டதாகவும் இல்லாமல், நாற்பத்தி ஐந்தே பாசுரங்களுடன்,
பரம்பொருளை தெளிவாக விளக்குவதால் தனிப்பெருமை உடையதாயிற்று.
இதனை அதிகமும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் அளந்து பேசும் திருவடி,
அனுமனின் சொல்லுக்கு ஒப்புமை கூறுவதும் ஒரு சிறப்பு.

திருமாலை அமைப்பு
திருமாலை என்ற இந்த திவ்யப்ரபந்தத்தை ஆழ்வார் கீழ்கண்ட தொகுப்புகளாக சொல்லி
தொடர்ச்சியை கையாண்டு இருக்கிறார்.

முதல் மூன்று பாசுரங்கள் –
ஆழ்வார் பெருமாள் தனக்கு கொடுத்த அனுபவத்தை ரசிக்கிறார்.

நான்கு முதல் பதினான்கு வரையிலான பதினோரு பாசுரங்கள் –
தன்னுடைய அனுபவத்தை கொண்டு நமக்கு உபதேசம் செய்கிறார்

பதினைந்து முதல் இருபத்தி நான்கு வரை பத்து பாசுரங்கள் –
உபதேசத்தின் படி மக்கள் நடந்து கொள்ளாததால், பெருமாள் தனக்கு செய்த
நன்மைகளை – உபகாரங்களை நினைத்துக் கொள்ளுகிறார்

இருபத்தி ஐந்து முதல் முப்பதினான்கு வரை பத்து பாசுரங்கள் –
இவ்வளவு நன்மைகள் பெருமாள் செய்தும், ஆழ்வார், தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்றும்,
எல்லா கெட்ட குணங்களும் உள்ளனவே என்றும் சொல்லி, பெருமாளிடம் இருந்து விலகப் பார்க்கிறார்.

முப்பத்தி ஐந்து முப்பத்தி ஆறு மற்றும் முப்பத்தி ஏழு என்ற மூன்று பாசுரங்களும்
பெருமாள் ஆழ்வாருக்கு சமாதானம் சொல்லி, தன்னுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்வது.

முப்பத்தி யெட்டாம் பாசுரம் –
இந்த பிரபந்தத்தின் முக்கிய பாசுரம் –
த்வய மஹா மந்திரத்தின் அர்த்தத்தை ஆழ்வார் நமக்கு விளக்குதல்

முப்பத்தி ஒன்பதாம் பாசுரம் முதல் நாற்பதினான்காம் பாசுரம் வரை ஆறு பாசுரங்கள் –
த்வய மஹா மந்திரத்தை நன்றாக புரிந்து கொண்ட ஜீவாத்மாவின்
குண நலன்களை ஆழ்வார் நமக்கு சொல்லுதல்

நாற்பத்தி ஐந்தாவது பாசுரம் –
இந்த பிரபந்தத்தை படிப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகளை சொல்வது –
பல ஸ்ருதி பாசுரம்

——-

பதினைந்து முதல் இருபத்தி நான்கு வரை பத்து பாசுரங்கள் –
உபதேசத்தின் படி மக்கள் நடந்து கொள்ளாததால், பெருமாள் தனக்கு செய்த
நன்மைகளை – உபகாரங்களை நினைத்துக் கொள்ளுகிறார்

மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போல,
பொய்யர்க்கே பொய்யனாகும், புட்கொடி உடைய கோமான்,
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஓருவன் என்று உணர்ந்த பின்னை,
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கமன்றே. திருமாலை 15

உண்மையாக பக்தி கொண்டவர்களிடம் உண்மையாகவும், பொய்யுடன் பக்தி உள்ளவர்களிடம் பொய்யாகவும்,
கருட கொடியுடைய பெருமாள், முக்தி அடையவேண்டும் என்ற ஆசை உடையவர்களுக்கு
அவர்களுடைய சந்தேங்களை தீர்த்து அழகாக இருக்கும் பெருமாள் உள்ள இடம்
திரு அரங்கம் என்பது இந்த பாடலின் மேல் எழுந்தவாரியான கருத்து ஆகும்.

இதில், நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள், உண்மையான பக்தி என்று பெருமாள் எதை எதிர்பார்க்கிறார்,
பொய்யான பக்தி என்பது பெருமாள் பார்வையில் என்ன, இப்படிப்பட்ட பக்தியை வெளிப்படுத்தும் நம் போன்ற
ஜீவாத்மாக்களுக்கு பெருமாள் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே இந்த பாடலின் முழுமையான கருத்தாகவும்
உரையாசிரியர்களின் கருத்தாகவும் அமையும். இனி அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம்.

கருடனை கொடியாக கொண்ட பெருமாள், நெடும் காலமாக பகவத் விஷயம் கிடைக்காமல் இருந்த
ஆழ்வாரைப் போன்று பெருமாள் மேல் வெறுப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு தன் ஸ்வரூபத்தை உள்ளபடி காட்டி கொடுத்தும்,
பகவானைத் தவிர மற்ற விஷயங்களில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்களுக்கு, தன்னை காட்டிக்கொள்ளாமலும் இருப்பான் என்றும்,
பெருமாள் ஒருவன் இருக்கிறான் என்று அறிந்து கொண்ட பின்பும், அவனை அடையவேண்டும் என்று
ஆசை கொண்ட பின்பும் அவர்களது சந்தேங்களை போக்கி, அழகுடன் காட்சி அளிக்கின்றவனாக விளங்கும் ஊர்
திருவரங்கம் என்பதே பாடலின் தெளிவுரைப் பொருளாக உரையாசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஆழ்வார், நன்றி உள்ளவர்கள் செய்யும் காரியமாகிய, நமக்கு நல்லது செய்தவர்களின் பெருமை கூறுவது
என்ற செயலை இந்த பாடலின் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார்.
நம் போன்று சம்சாரியாக இருந்த ஆழ்வாரை நம் போன்றவர்களுக்கு உபதேசிக்கும் அளவிற்கு உயர்த்தி,
ஆழ்வாரின் சந்தேகங்களை தீர்த்து, பக்தி, பரபக்தி, பரமபக்தி என்று பல படிகளில் ஏற்றிச் சென்ற
பெருமாளின் பெருமையும் அழகையும் சொல்லும் பாடல் இது.

இதே போல் என்ன கைம்மாறு செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நம்மாழ்வாரின்
திருவாய்மொழி பாசுரம் (2.7.8), “என்னைத் தீமனங் கெடுத்தாய்” என்பதாகும்.
இதற்கான ஈட்டு ஸ்ரீஸூக்தி; “அமிர்தத்தையும், விஷத்தையும் ஒன்றாக விரும்புவாரைப் போல உன்னையும் உகந்து,
மற்ற எல்லா விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்”.
அதாவது பெருமாளை மட்டும் உகக்கும் நெஞ்சத்தை தமக்குக் கொடுத்ததற்காக ஆழ்வார் நன்றி கூறுகிறார்.

மெய்யர்க்கே மெய்யனாகும்-இதில் வரும் மெய்யர்க்கே என்பது நம் போன்ற ஜீவாத்மாக்களைக் குறிக்கும்.
மெய்யானாகும் என்பது பரமாத்மாவாகிய பெருமாளின் செய்கைகளைக் குறிக்கும்.
இதே போல் அடுத்து வரும் பதங்களான ‘பொய்யர்க்கே பொய்யனாகும்’ என்பதில் வரும்
பொய்யர்க்கே என்பது ஜீவாத்மாக்களையும் பொய்யனாகும் என்பது பரமாத்மாவின் செய்கைகளையும் குறிக்கும்.

மெய்யர்க்கே
முதலில், பக்தி என்பதில் உள்ள பல நிலைகளை பார்க்கலாம்.
நாதிக்கவாதம் என்பது கடவுள் இல்லை அல்லது கடவுள் நம்பிக்கைகளை மறுப்பது போன்ற நிலை.
அதற்கு அடுத்த நிலை கடவுள் பக்திக்கு மறுப்பின்மை அல்லது கடவுளிடம் வெறுப்பின்மை.
இந்த நிலையில் உள்ளவர்கள் பெரியதாக ஒன்றும் சொல்லும் அளவிற்கு கடவுள் பக்தியில் திளைப்பதில்லை,
ஆனால் அதே சமயம் கடவுளுக்கோ அல்லது அந்த நம்பிக்கைகளுக்கோ எந்த வித எதிர்ப்பையும் காண்பிப்பதில்லை.
அடுத்த நிலை என்பது கடவுள் அல்லது அந்த நம்பிக்கைகளில் ஒரு ஆர்வம் வருவது.
இப்படி அந்த ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும் போது வரும் நிலைகள், பக்தி, பரபக்தி , பர ஞானம் மற்றும் பரமபக்தி என்று போகும்.
ஜீவாத்மாக்கள் ஒவ்வொருவரும் ஒரு சமயத்தில் இந்த நிலைகளில் ஏதாவது ஒன்றில் இருப்பார்கள்.
ஆக, வெறுப்பின்மை என்பது இந்த பக்தி என்ற பாதையில் உள்ள முதல் படி என்று நாம் கொள்வோம்.

‘மெய்யர்’ என்றால் இங்கு உண்மையானவன் என்பது பொருள்.
மெய்யர்க்கே என்பதில் ஆழ்வார் சொல்லும் பக்தியின் நிலை பெருமாளிடத்தில் வெறுப்பின்மை என்ற நிலை மட்டுமே.
தனக்காகவே மட்டும் வாழ்கின்ற வாழ்க்கை நிரந்தரமான பலனை தராததால் அது பொய் என்று கூறப்படுகிறது.
பெருமாளுக்காக வாழ்கின்ற வாழ்க்கையை தொடங்கி விட்டால், அது நிரந்தர பலன்களை தரும் என்பதால்
அதுவே மெய் எனப்படுகிறது. இப்படி பக்தியின் முதல் படி வெறுப்பின்மை என்பதில் தான் ஆரம்பமாகிறது.
இந்த நிலையில் இருந்தாலே, பெருமாள் அந்த ஜீவாத்மாவை மெய்யர் என்று கருதுகிறார்.

மெய்யனாகும்
நித்யஸூரிகள், நிஜமாகவே முற்றிலும் மெய்யர்கள், ஏன் என்றால் நித்யஸூரிகள் அவனுக்காகவே மட்டும் எப்போதும் இருப்பவர்கள்.
நித்யஸூரிகளுக்காக பெருமாள் மனம், மொழி, செயல்கள் மூலம் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவை எல்லாவற்றையும் செய்வான்.
நித்யஸூரிகளுக்கு, என்னவெல்லாம் செய்வானோ , அவைகளை, மேலே மெய்யர்க்கே என்பதில் சொன்ன வெறுப்பின்மை
என்ற முதல் படியில் இருக்கும் ஜீவாத்மாக்களுக்கும் பெருமாள் செய்கிறான்.

மெய்யர்க்கே மெய்யனாகும், என்பதில் வரும் மெய் என்ற வார்த்தை,
இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் வருவதை, உரையாசிரியர் நியாயப்படுத்தும் காரணங்கள்:

திருமாலையில் இந்த பகுதி, பெருமாளின் குண நலன்களை கூறுவதால், பெருமாளின் ஒருங்கிணைந்த
மனம், மொழி, செயல்களை ஒன்றாக காட்டும் பெருமாளின் குணத்தை,
ஆழ்வார் மெய்யானாகும் என்பதில் உள்ள மெய்யில் சொல்கிறார்.

எல்லா சிறந்த குணங்களையும் உடைய பெருமாளுக்கு வெறுப்பின்மை என்பது பொருத்தமாக இருக்காது,
அதனால் இரண்டு மெய்களுக்கும் வெறுப்பின்மை என்ற ஒரு பொருள் கூற இயலாது.
பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாக்களாகிய நமக்கும் நவவித (ஒன்பது) சம்பந்தம் உண்டு என்பது நம் முன்னோர்களின் வாக்கு.
அதில் ஒன்று தந்தை- மகன் சம்பந்தம்.
அதன்படி வெறுப்பின்மை என்ற ஒன்று இருந்தால் கூட பெருமாள் நமக்கு அருள் செய்து காப்பாற்ற வருகிறார்.
அவன் எல்லாவற்றையும் பெற்றவன் ஆதலால், அவன் இதற்கு மேல் எதிர்பார்ப்பது இல்லை.

பொய் வாழ்க்கையில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு உடனே பக்தி, பரபக்தி பரஞானம் பரமபக்தி போன்ற நிலைகள் ஏற்படக் கூடியதில்லை.
வெறுப்பின்மை மட்டுமே கொண்டு ஜீவாத்மாக்களை காப்பாற்றுவது பெருமாளுக்கு பெருமையே தவிர குறையில்லை.
மேலும் குற்றமற்ற மெய்யர்களாய் இருப்பது நித்யஸூரி போன்றவர்களுக்கு மட்டுமே கூடுமாகையால்,
நம் போன்ற ஜீவாத்மாக்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது என்பதும் நமக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டியதும் அவனுக்கு தெரியும்.

இதையே, யுத்த காண்டத்தில், இராவணனின் தம்பியாகிய விபீஷண சரணாகதியின் போது,
(இராமாயணம், யுத்த காண்டம், 18,3) யார் ஒருவன் நண்பன் என்று வேஷம் போட்டு வந்தாலும்,
அவனை ஒரு போதும் கைவிடமாட்டேன் என்று இராமபிரானே சொல்லி இருப்பதால்,
வெறுப்பின்மையோடு நாம் சென்றாலும், அவன் ஒருங்கிணைந்த மனம், மொழி, செயல்களை காட்டுவதாகவே கொள்ள வேண்டும்.

இப்படி நமக்கு பலன்கள் கிடைப்பதால், வெறுப்பின்மையை மோக்ஷத்திற்கு வழியாக எடுத்துக்கொள்ள முடியுமா
என்று கேட்டுக்கொண்டு, உரையாசிரியர் கீழ்கண்டவாறு மறுக்கிறார்.
ஜீவாத்மாக்களுக்கு தனக்காக வாழ்வதை தவிர்த்து, பெருமாளுக்காகவே வாழ வேண்டும் என்ற ஆசையும் உள்ளூர இருக்கும்.
அதற்காகவே அவர்களை ‘மெய்யர்‘ என்று ஆழ்வார் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், சாதனம் என்பது அடைய வேண்டிய இடத்தை அடையும் வரையில் மட்டுமே வேண்டும்,
வந்து சேர்ந்த பின் தேவை இல்லை.
ஆனால் பரமபதத்தில் வெறுப்பின்மை வேண்டும், பெருமாளுக்காகவே வாழ வேண்டிய இடம் ஆதலால்
வெறுப்பின்மையை தாண்டி மேலும் பல பக்தி நிலைகளையும் இந்த முக்தாத்மாக்கள் அடைய வேண்டும்.
எனவே வெறுப்பின்மை மோக்ஷ சாதனம் ஆகாது. (மோட்ஷம் அடைந்த ஜீவாத்மாக்கள், முக்தாத்மாக்கள் என்று அழைக்கப்படுவர்).

பொய்யர்க்கே பொய்யனாகும்
அடுத்து, பொய்யர்க்கே பொய்யனாகும் என்பதை பற்றி பார்ப்போம்.
இனிமேல், வெறுப்பின்மை என்ற முதல் நிலைகூட , இந்த ஜீவாத்மாவிற்கு வரவே வாராது என்று தெரிந்தபின்,
மிக வருத்தத்துடன் அந்த ஜீவாத்மாவை, பரமாத்மா கைவிடுகிறான்.
இதற்கு நாம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி, 5.1.1 பாசுரத்தில்,
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமேயாடி என்ற பதங்களை பார்க்க வேண்டும்.
ஆழ்வார், பகவத்விஷயங்களில் ஈடுபட்டவர் போல் நடித்து, பொய்யான சொல்லுக்கு மெய்யான பலன்களைத்
தான் பெற்று விட்டதாக அவர் சொல்லும் பாசுரம்.
இப்படி, உண்மை என்று கொள்ளலாம் என்று சொல்லும் படியான பொய்யை கூட இந்த ஜீவாத்மா இனி சொல்லி -செய்து,
வெறுப்பின்மை என்ற முதல் நிலையை அடையாது என்று பெருமாள் உணர்ந்த பின்பே
அந்த ஜீவாத்மாவை கை விடுவதாக கொள்ள வேண்டும்.

மெய்யர்க்கே, என்பதில் உள்ள ஏகாரம்
‘வெறுப்பின்மை என்ற பக்தியின் முதல் நிலையினை’ மட்டுமே சொல்வது;
இதனை குறைந்த பக்ஷம் (அளவு) என்று கொள்ளலாம்; பொய்யர்க்கே என்பதில், உள்ள ஏகாரம்
‘உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யை’ மட்டுமே குறிப்பது.
இதனை பக்தியின்மை அல்லது பொய்யான பக்தியின் அதிக பக்ஷம் (அளவு) என்று கொள்ளலாம்.
இந்த அளவு கூட வரவில்லை என்றால் மட்டுமே பெருமாள் கை விடுகிறான்.
மெய் என்பது ஆஸ்திக புத்தியையும், பொய் என்பது நாஸ்திக புத்தியையும் இங்கு சொல்கிறது.
பகவானை தவிர மற்ற விஷயங்கள் நிரந்தர பலனை தராததால் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவற்றை பொய் என்கிறார்.

மெய்யர் அல்லது ஆஸ்திகர்களுக்கு, மெய்யனாவான் அதாவது நித்யஸூரிகளுக்கு செய்யும் அத்தனையும் செய்கிறான்.
பொய்யர் அல்லது நாஸ்திகர்களுக்கு பொய்யனாவான், அதாவது கைவிட்டுவிடுவான் என்பதே இதன் தேர்ந்த கருத்து.

விதியிலா என்னைப் போல
ஆழ்வாரே ‘மெய்யர்க்கே மெய்யனாகும் ‘ என்பதையும் ,
பொய்யர்க்கே பொய்யனாகும் தன்னிடத்திலேயே கண்டதாகவும் சொல்வதை,
விதியிலா என்னைப் போல, என்று குறிப்பிடுகிறார். விதி என்பது பாக்கியத்தை குறிப்பது.
இவ்வளவு நாட்கள் வீணே கழித்து விட்டேனே என்று ஆழ்வார் புலம்புகிறார்.
இப்போது கிடைத்து பெரும் பகவத் இன்பத்தை விட அது கிடைக்காமல் இழந்த துன்பத்தை பெரியதாக நினைக்கும்
பொய்கை ஆழ்வாரின், ‘பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி அழுதேன்‘ என்ற
முதல் திருவந்தாதியில் 16 பாசுரத்தை இங்கே நாம் நினைவில் கொள்ளலாம்.
இராமாயணத்தில், வால்மீகி, எவன் ஒருவன் இராமனை காணவில்லையோ அல்லது எவன் ஒருவனுக்கு
ராமனின் அருள் இல்லையோ அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்
(அயோத்தியா காண்டம், 17.14) என்று கூறுவதையும் இங்கே நினைவு கூறலாம்.

விதியிலா என்னைப் போல என்பதை ஆழ்வார் ஒரு மத்திய நிலையாக கொள்கிறார்.
அதாவது பொய்யர்க்கும், மெய்யர்க்கும் இடையே உள்ள பக்தி நிலை.
எப்படி ஒரு தீபம் முன்னும் பின்னும் வெளிச்சம் தருவதை போல், பெருமாள் இந்த மத்திய நிலைமையில்
உள்ளவர்களையும் காத்து வருகிறான், ஆனால் தன்னை காட்டிக்கொள்ள மாட்டான்.
அந்த நிலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தான் இருந்ததாக சொல்வதை இங்கே நாம் நினைவில் கொள்ளலாம்.

இப்போது விடுபட்ட இரண்டு நிலைகளை சேர்க்கலாம்.
ஒன்று மெய் என்று கொள்ளும்படி பொய் சொல்லும் -செய்யும் நிலை,
இரண்டாவது ஆஸ்திகத்திலும் இல்லாமல், நாஸ்திகஸ்த்திலும் இல்லாமல் உள்ள நடுநிலைமை.
நாம் எங்கு இருக்கிறோம் என்று தெரியாவிட்டாலும், இன்னும் அடையவேண்டிய நிலைகள் பல உள்ளன
என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்வோம்.

புட்கொடி உடைய கோமான்
இப்படி மெய் என்று பெயர் சொல்லும்படி உள்ள பொய்யை கூறும் ஜீவாத்மாக்களுக்கு, ஆள் கிடைக்காததால் தான்,
பெருமாள் அருளுகிறாரோ என்றால், இல்லை என்று “புட்கொடி உடைய கோமான்‘ என்ற வாசகத்தினால் மறுக்கிறார்.
கருட கொடியை தனக்கு அடையாளமாக கொண்டவர் என்று சொல்லி, அவர்க்கு சேவை செய்ய
பல நித்ய ஸூரிகள் இருப்பதை சொல்கிறார். கருடன் என்று சொன்னது ஒரு உதாரணமே.
கருடன் செய்யும் சேவைகளை ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் எழுதிய ஸ்தோத்ர ரத்ன மாலை
என்ற நூலில் இருந்து 41 பாடலை மேற்கோள் காட்டுகிறார்.

வேதங்களை தமக்கு அங்கங்கள் ஆக கொண்டவர் கருடன்
பெருமாளுக்கு அடியவன், நண்பன்,
பெருமாளுக்கு வாஹனம், சிம்மாசனம், கொடி, மேல்தட்டு, சாமரம்
இப்படி பற்பல சேவைகளை உண்மையாகவே செய்யும் ஒரு நித்யஸூரி. அதாவது,
பற்பல நித்யஸூரிகள் செய்யும் வேலைகளை தனியொரு நித்யஸூரியாக செய்யும் கருடன்.
இதே போல் பற்பல சேவைகளை செய்யும் ஆதிசேஷன் என்ற இன்னொரு நித்யஸூரி. அவர் செய்யும் பணிவிடைகளாவன:

பெருமாள் எழுந்தருளி இருக்கும் திரு மாளிகை
பெருமாள் கண் மலர்ந்து அருளும் படுக்கை
பெருமாள் அமரும் ஸிம்மாஸனம்
பாதுகை, திருப்பரியட்டம், அணை மற்றும் குடை
இவ்வாறு பற்பல நித்ய ஸூரிகள் செய்ய கூடிய சேவைகளை செய்ய வல்ல பற்பல நித்ய ஸூரிகளை கொண்டவன் அவன்.
அப்படிப் பட்டவன் அவன் ஒருவனே. அதனால் அவன், அவனுக்கு ஆள் இல்லாமல் நம் வெறுப்பின்மையை ஏற்கவில்லை.
இந்த ஜீவாத்மாக்கள் அனைவரும் அவனுடைய உடமைப் பொருள்- சொத்து,
அதில் ஒன்று கூட விடாமல் கிடைப்பதற்காவே மிக குறைந்த தேர்ச்சி அளவை வைத்து,
ஆளில்லாதவன் தேடுவது போல் தேடி, அவன் நம்மை கரை ஏற்றுகிறான்.
இங்கு கோமான் என்று சொன்னதற்கு அயர்வரும் அமரர்கள் அதிபதி என்ற மேற்கோள் காட்டப்படுகிறது.

உய்யப்போம் உணர்வினார்கட்கு
இதுவரை இருந்த நிலையில்லாத பொய் வாழ்க்கையில் இருந்து, மாறி உய்ய வேண்டும் என்ற
உணர்வு உள்ளவர்களுக்கு என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது
இந்த நிலையில் இருந்து மாற என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு வருவதை குறிக்கும்.
இந்த உணர்வு வராதவர்கள் முடியப்போம் என்று உணர்வு உள்ளவர்கள் ஆவர்.
பகவத்கீதையில், (2-63), கிருஷ்ணன் சொன்னபடி நினைவு மழுங்குவதனால் புத்தி நாசம் அடைந்து,
அதனால் உலகவாழ்க்கை என்ற சக்கரத்தில் உழல்கின்றான்.

ஓருவன் என்று உணர்ந்த பின்னை
ஓருவன் என்று உணர்ந்த பின்னை, என்பது ஈஸ்வரன் என்று ஒருவன் உள்ளான் என்ற அறிவு வருவதைக் குறிக்கும்.
உடல் என்பது வேறு, அதனை விட உயர்ந்ததான ஆத்மா என்ற ஒன்று உண்டு என்றும்
அதனை வழிநடத்தி செல்பவனான பரமாத்மா அல்லது ஈஸ்வரன் என்ற ஒருவன் உண்டு என்று
அறிவு வந்த பிறகு என்பது இதன் பொருள்.

ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்
முதலில் நம் சம்பிரதாயத்தின் 26 தத்துவங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
திருவாய்மொழியில், பெருமாள் நம்மாழ்வாருக்கு “கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து ” (8.8) என்ற
பதிகத்தில் சொல்லியிருப்பதை நினைவில் கொள்ளலாம்.

பஞ்ச பூதங்கள் ஐந்து (நிலம், நீர், தீ, காற்று, வானம்)
ஞான இந்திரியங்கள் ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி)
கர்ம இந்திரியங்கள் ஐந்து (வாய், கை, கால், கழிவு துவாரங்கள் இரண்டு)
தன்மாத்திரை (ஐம்பொறிகளின் மூலம்) ஐந்து (சுவை, ஒளி, தொடுஉணர்ச்சி, ஓசை, வாசம்)
மனம்
அகங்காரம்
மஹான்(அறிவுத்தத்துவம்)
அவ்யக்தம்(சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் தோன்றுவதற்கு உள்ள மூலம் ) என்னும் இருபத்திநான்கு தத்துவங்கள்
ஜீவாத்மா (25)
பரமாத்மா (26)
ஜீவாத்மா என்ற 25 தத்துவங்களை ஒப்புக்கொண்ட பலர் பரமாத்மா என்ற 26வது தத்துவத்தை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளவதில்லை.
அதனால் சர்வேஸ்வரன் என்ற 26 தத்துவத்தில், ஐயம் அல்லது சந்தேகம் ஏற்படுகிறது.
பகவத் கீதையில் (2-7) சரணடைந்த அர்ஜுனனுக்கு சந்தேகங்களை கிருஷ்ணன் தீர்த்து வைக்கிறான்.
அவ்வளவு ஞான சிறப்பு இல்லாதவர்களுக்கு பெருமாள் தன் அழகை கொண்டு தீர்த்து விடுகிறார்.
பார்த்தவுடனே இவன் தான் பரமாத்மா என்ற பரம்பொருள் என்று புரியவைக்கும் அவன் அழகு.

அழகனூர் அரங்கம் அன்றே
திருவாய்மொழியில் சுவாமி நம்மாழ்வார் இவ்வடிவழகை பிரிந்தால் உயிர் தரிக்க முடியாது என்ற தொனியில், 9.7.3 பாடலில்,
“செக்கமலர்த்தவர் போலும், கண் கை கால் செங்கனிவாய அக்கமலத்திலை போலும் திருமேனியடிகளுக்கே” பாடுகிறார்.
இதற்கு ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில்,
“தமரோட்டை வாஸம் மறப்பித்த ஸெளந்தர்யத்தை யுணர்த்தும் அர்ச்சை நாலாந்தூதுக்கு விஷயம்” என்று
அவருடைய அழகை – சௌந்தர்யத்தை சிறப்பித்து சொல்லும்.
அதே போல், திருவாய்மொழி, 4.5.10 “கண்ட வாற்றால் தனக்கே யுலகென நின்றான்தன்னை,” என்ற
பாடலையும் நினைவில் கொள்ளலாம்.
இந்த அழகினை காண்பதற்கு பரமபதம் செல்ல வேண்டுமோ என்ற சந்தேகத்தை (ஐயப்பாடு), எழுப்பி
“அழகனூர் அரங்கம் அன்றே ” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் தீர்த்து வைக்கிறார்(அறுத்து தோன்றும்).

பரமபதம், ஸ்ரீவைகுந்த நாதரின் (பெருமாளின்) ராஜசபை என்றும்
அது முடிந்ததும் அவர் சென்று நன்றாகத் தங்கும் இடம் திருவரங்கம் என்றும் சொல்லி
உரையாசிரியர் இந்த பாசுரத்தின் விளக்கத்தை முடிக்கிறார்.

———–

சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்,
மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை,
போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால்,
ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்க மன்றே. (திருமாலை 16)

பெருமாளும் இல்லை, தர்ம அதர்மங்கள் இல்லை என்று சொல்லிக் கொண்டும்,
பெருமாளுக்கு சொந்தமான ஆத்மாவை தன்னது என்று நினைத்துக் கொண்டு உலக விஷயங்களில்
லயித்துக் கொண்டு இருப்பவருடன் சேர்ந்துகொண்டு இருந்த காலத்தில், மீன்களை போன்ற கண்களை உடைய
பெண்களின் வலைகளில் சிக்கி மூழ்கி கிடந்த ஆழ்வாரை, அவன் தன் பக்கம் வா என்று கூப்பிட்டு,
ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்த
வடிவழகு உள்ள பெருமாள் உறையுமிடம் திருவரங்கம் ஆகும்.

எம்பெருமானால் தாம் பெற்ற பேற்றை மற்றொரு வகையாகப் பேசுகிறார்.
முதல் இரண்டு வரிகளில் தான் முன்பு இருந்த நிலை கூறிய ஆழ்வார், பின் இரண்டு வரிகளால்
தான் பெற்ற நன்மையை சொல்கிறார்.
அடைய வேண்டிய பொருளும், அதற்கான வழியும் நானே என்று சந்தேகங்களை சென்ற பாடலில்
சந்தேகங்களைத் தீர்த்த பெருமாள் இந்த பாடலில், தன்மீது அன்பு வெள்ளம் பெருகும்படி செய்தார் என்கிறார் ஆழ்வார்.

சூதனாய்க் கள்வனாகி
இங்கு ஆழ்வார் தான் முன்னால் இருந்த காலத்தை நினைத்து பார்க்கிறார். ஒருவன் உலக விஷயங்களில் ஈடுபடும் போது
அதற்கு செலவு செய்ய நிறைய பொருள் தேவைப்படும்.
அதனை பெற களவிலும், அந்த பொருள் மேன்மேலும் வளர சூதிலும் ஈடுபடுவான்.
ஒருவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மற்றவரின் பொருளை எடுத்து செல்வது சூது எனப்படும்.
பிறருடைய பொருளை தன்னுடைய பொருளாக நினைப்பதை களவு என்று சொல்லப்படும்.
இப்படி சூதையும் களவையும் தனியாகவும் பின்னர் இன்னும் சிலரை சேர்த்துக் கொண்டு கூட்டமாகவும் செய்வார்கள்.
இதனால் பெண்கள் வீசும் கண் வலைகளிலும் விழுந்து முழுகுவார்கள்.
இத்தனையும் தனக்கு உண்டானதாக ஆழ்வார் முதல் இரண்டு வரிகளில் சொல்கிறார்.

இங்கு பெருமாளுக்கு சொந்தமான ஆத்மாவை தன்னது என்று நினைப்பதை களவு என்று ஆழ்வார் சொல்கிறார்.
அதே போல், வேதங்களும் மற்றைய தர்ம சாஸ்திரங்கள் சொல்லும் உண்மைகளை
(ஜீவாத்மா, பரமாத்மாவிற்கு அடிமை; எம்பெருமானுக்கு உகந்தது புண்ணியம்; எம்பெருமானுக்கு பிடிக்காதது பாவம்) மறுத்து,
தன் போலவே இன்னும் சிலரையும் நாஸ்திகர்கள் ஆக்குவது சூது என்று ஆழ்வார் சொல்கிறார்.
களவிற்கு கொடுக்கப்படும், தண்டனை, திருடப்படும் பொருளாலும், திருட்டு கொடுப்பவரின் தன்மையாலும்
வேறுபடும் என்ற காரணத்தினால், இந்த சூதும் களவும் உலகில் சாதாரணமாக சொல்லப்படும்
சூது மற்றும் களவை விட மிக அதிகமானவைகளாக கருதப்படும் என்று உரையாசிரியர் சொல்கிறார்.

காட்டில் உள்ள ஒரு குச்சியை திருடியவனை காட்டிலும், ஒரு தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்ததை திருடியவனுக்கு,
திருடப்பட்ட பொருளின் உயர்வினால், தண்டனை அதிகம்.
அதே போல், ஒரு பொருளை ஒரு அரசனிடமோ, உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரிகளிடம் இருந்து திருடியவனுக்கு,
அதே பொருளை சாதாரண மக்களிடம் இருந்து திருடுவதைக் காட்டிலும், திருட்டு கொடுப்பவரின் நிலையை கொண்டு
அதிக தண்டனை தருவது உலக நியதி என்கிறார்.
இங்கு திருடப்பட்டதோ மிக உயர்ந்த பொருளான ஜீவாத்மா,
பெருமாளின் மார்பில் உள்ள கௌஸ்துப மணி அளவிற்கு மதிப்பு உடையது,
பொருளின் உரிமையாளரோ மிகமிக உயர்ந்த பரமாத்மா ஆவார்.
அதனால் மிக பெரிய குற்றம் புரிந்தவனாக இருந்தவன் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்லிக் கொள்கிறார்.

தொண்டரடிபொடியாழ்வார் இங்கு பெருமாளிடம் தான் சூதனாகவும் கள்வனாகவும் இருந்ததை சொல்கிறார்.
மதுரகவி ஆழ்வார் இதே போன்ற கருத்தினை தன்னுடைய குருவாகிய -ஆச்சார்யனான சுவாமி நம்மாழ்வாரிடம் முறையிடுகிறார்.
“நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்” (கண்ணிநுண் சிறு தாம்பு, 5) என்று சொல்லும் போது,
நன்பொருள் என்று ஆத்மாவை குறிப்பிடுகிறார். நம்பினேன் என்பது விரும்பினேன் என்ற பொருளில் வருகிறது.

தூர்த்தரோடு இசைந்த காலம்
இப்படி மனதார குற்றம் செய்தவர்கள் அவைகளை வளர்ப்பவர்களுடன் தான் கூட்டு சேர்வார்கள் என்பதை,
‘தூர்த்தரோடு இசைந்த காலம்’ என்று ஆழ்வார் சொல்கிறார்.
இசைந்த என்று சொல்வதற்கு காரணம், அப்படிப்பட்டவர்களுடன் மிக நன்றாக பொருந்தி வாழ்ந்ததாக சொல்வது.
காலம் என்பது நேரம் என்ற குறுகிய காலத்தைக் குறிக்காமல், நீண்ட காலத்தை குறிப்பதாகவும்,
அல்லது அப்படிப்பட்ட நேரம் ஆழ்வார்க்கு மிக நீண்ட நேரமாக தோன்றுவதாகவும் கொள்ளலாம்.
பக்தர்களோடு சேர்ந்து இருப்பது பகவானுடன் சேர்ந்து இருப்பது மாதிரி;
ஆனால் தூர்த்தர்களோடு இருப்பது இன்னும் உலக விஷயங்களில் தம்மை அழுத்துவது என்கிறார்.
முதல் திருவந்தாதியில் (16) பொய்கையாழ்வார்
“பழுதே பலபகலும் போயினவென்று, அஞ்சி அழுதேன்” என்ற பாசுரத்தை நினைவில் கொள்ளலாம்.

மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
உலக விஷயங்களில் ஈடுபட்டவன், மீன்போன்ற கண்களை உடைய பெண் என்று தான் நோக்குவானே தவிர,
அந்த பெண்ணின் குணம், மற்றும் ஒழுக்கம் போன்றவற்றை ஆராய மாட்டான்.
வலை வைத்து பிடிக்கும் விலங்கினை போல் மனிதரை அகப்படுத்தும் வலை என்று பெண்களின் கண்களை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
வலை உள் பட்டு என்பதால்
உள்ளே சென்று திரும்ப முடியாதபடி இருப்பதை இங்கே ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
வலையுள் என்பதால், –
துன்பமே இருக்கும் என்றும், இன்பம் இல்லை என்றும் சொல்கிறார்.
அழுந்துவேனை என்றது,
இந்த துன்பத்தை, இன்பமாக நினைத்து மயங்கி இருப்பதை சொல்கிறார்.

மறுபடியும் மதுரகவி ஆழ்வாரின் கண்ணி நுண் சிறுதாம்பில் இருந்து அதே ஐந்தாம் பாசுரம்.
தொண்டரடிபொடியாழ்வார் இங்கு பெருமாளிடம் சொன்னது போல்,
“நம்பினேன் மட வாரையும் முன்னெல்லாம்” என்று மதுரகவி ஆழ்வார் சொன்னது
பிற மாந்தரை தான் முன்பு விரும்பியதை நம்மாழ்வாரிடம் சொல்வது போன்ற பாசுரம்.

திருப்பாணாழ்வாருக்கு பெரிய பெருமாள் தன்னுடைய திருமேனி அழகினை காட்டிய பிறகு அதில் மயங்கிய
திருப்பாணாழ்வார் இந்த உலகில் வேறு எதையும் பார்க்க விருப்பம் இல்லை என்பதை
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” (அமலனாதிபிரான் 10) என்று பாடினார்.
எம்பெருமான் அப்படியே ஸ்வீகரித்து ஏற்றுக் கொண்டான் என்பதும்,
அவர் அவன் திருமேனியில் கரைந்தார் என்பதும் நம் ஸம்ப்ரதாயம்.
திருப்பாணாழ்வார் பெரியபெருமாளின் கண்ணழகை
“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப் பெரியவாய கண்கள்
என்னைப் பேதைமை செய்தனவே” (அமலனாதிபிரான் 8), என்று பாடி உள்ளார்.

அடுத்தது, பிள்ளை உறங்காவில்லிதாஸர் என்பவரின் சரித்திரம்.
ஒரு முறை சுவாமி ராமானுஜர் தன் சிஷ்யர்களுடன் வந்து கொண்டு இருந்தபோது தாஸர் தன் மனைவிக்கு
குடை பிடித்துக்கொண்டு வந்தார்.
சுவாமி ராமானுஜர் கேட்டதற்கு, தாஸர் அவளுடைய கண்களின் அழகில் முழுமையாக அடிமையாகி விட்டேன்;
மேலும் அந்தக் கண்களின் அழகை பாதுகாக்கவே அப்படி செய்தேன் என்றும் கூறினார்.
இதைக் கேட்ட இராமானுஜர் தாஸரிடம் அந்த கண்களைவிட வேறு அழகான கண்களைக் காண்பித்தால்
அதற்கு அடிமையாகி விடுவீரா என்று கேட்க தாஸரும் ஒப்புக்கொண்டார்.
எம்பெருமானாரும் தாஸரை ஸ்ரீரங்கநாதரிடம் அழைத்துக் கொண்டு சென்று , எம்பெருமான் திருப்பாணாழ்வாருக்குத்
தாம் காட்டியருளிய அழகிய கண்களை தாஸருக்குக் காண்பித்தருளும்படி வேண்டினார்.
எம்பெருமானும் தம்முடைய அழகிய கண்களைக் காட்டியருள, தாஸரும் எம்பெருமானாரிடம் சரணடைந்து
தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பம் செய்தார்.

இதுவும் கண்களைப் பற்றியது, ஆனால், பெரிய பெருமாளை பற்றியது அல்ல.
நாலூரான் என்னும் அமைச்சரின் தந்திரத்தால் மதியிழந்த உறையூர்ச் சோழன், இராமானுஜரைக் கைது செய்ய ஆணையிட்டான்.
கூரத்தாழ்வார், இராமானுஜர் போல் வேடம் தரித்துக் கொண்டு அரசனிடம் சென்றார்.
முடிவில், அரசன் ஆணையால் கூரத்தாழ்வாரின் கண்கள் தோண்டப்பட்டன.
கூரத்தாழ்வார், இராமானுஜருக்காகவும் வைணவத்திற்காகவும் தன் இரு கண்களையும் இழந்தார்.
சோழன் மறைவுக்குப் பின் திருவரங்கம் திரும்பிய இராமானுஜரின் வேண்டுதலுக்கிணங்க
காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் வேண்டி இழந்த கண்ணை தெரியச் செய்யும்படி வேண்டினார்.
கூரத்தாழ்வான் அப்போதும் தனக்கு பார்வை வேண்டியது கூட தன் ஆச்சார்யரான இராமானுஜரையும் பெருமாளையும்
சேவிக்கவே என்பதால் தான் என்று கூறுவார்கள் உண்டு. வரதராஜப் பெருமாளும் அவருக்கு அருளினார்.

போதரே என்று சொல்லி
இப்படி அழுந்தி துன்பப்பட்டு இருந்த தன்னைப் பெரிய பெருமாள் தான் திருந்த வழி காட்டியதை
அடுத்த இரண்டு வரிகள் சொல்கின்றன.
மாதரார் கண்ணழகில் மயங்கி கிடந்த தன்னை, பெரியபெருமாள் தன்னுடைய மேற்கூறிய கண்ணழகை காட்டி
திருத்துவதாக ஆழ்வார் சொல்கிறார். இங்கு உரையாசிரியர் சொல்வது அருமை.
பெரியபெருமாள் எதை பார்த்து இப்படி மாதரிடம் மயங்கி கிடந்தீர் என்று ஆழ்வாரிடம் கேட்க,
அதற்கு ஆழ்வார், தன்னுடைய ரசிகத் தன்மையினால் பெண்களின் கண்ணழகினில் மயங்கியதாகவும்,
அதைவிட சிறந்த தார்மீகமான கண்ணழகினை காட்டினால், அதிலே மகிழ்ந்து இருப்பேன் என்று
பதில் உரைத்ததாகவும் சொல்கிறார்.
பெரியபெருமாளும் தன்னுடைய திருத்திரையை விலக்கி ஆழ்வாருக்கு தன்னுடைய அழகிய திருமுகத்தை காட்டி
அவரை திருத்தியதாக உரையாசிரியர் கூறுகிறார்.
திருமங்கை ஆழ்வார் அருளிய பெரிய திருமொழி 7.1.9 பாசுரத்தை இங்கு நினைவு கூர்ந்து,
“தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா” , அதாவது,
தாய் போன்று அருள்புரிகின்ற குளிர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை உடையவனே
என்று திரு கண்களின் பெருமையை கூறுகிறார்.

அனுமன் சீதையிடம், இராமனின் கண்ணழகை பற்றி கூறியதை இராமாயணத்தில் இருந்து இங்கே பார்ப்போம்.
இராமபிரானின் திரு கண்கள், தாமரை இதழை ஒத்ததாக இருந்தது என்றும்,
அவை, தன் போன்ற எல்லா பிராணிகளின் மனங்களையும் கவர்ந்து செல்ல வல்லன என்றும் கூறுகிறார்.
அனுமன் மேலும், வடிவழகு போன்ற பார்வைக்கு தெரியும் குணங்களையும்,
தாக்ஷண்யம் போன்ற ஆத்ம குணங்களையும் பெற்றவர் என்று இராமனை புகழ்கிறார்.

புந்தியில் புகுந்து
புந்தி என்பது நினைவினை குறிக்கும். இங்கு நினைவின் தொடக்கமாக உள்ள நெஞ்சத்தையும்,
நெஞ்சத்தில் உறைகின்ற அந்தர்யாமியாக புகுந்து என்றும் பொருள் கொள்ளலாம்.
இவ்வளவு காலமாக பெருமாளிடம் இருந்து ஆழ்வார் விலகி இருந்ததற்கு காரணமாக இருந்த நெஞ்சத்தினுள் நுழைந்து,
அது இனி விலகி செல்ல முடியாதபடி பெருமாள் ஆழ்வாரின் நெஞ்சத்தினுள் புகுந்தான்.
இனி ஆழ்வார் தன்னை விட்டு விலகக்கூடாது என்று விஷேசமான சங்கல்பத்துடன்
பெருமாள் இருந்ததாக உரையாசிரியர் சொல்கிறார்.
ஜீவாத்மா தனக்கே ஆக வாழ்வது, பெருமாள் என்ற நினைவினை விலக்கி விடும்.
ஆதலால் பெருமாள், ஆழ்வார் தனக்காக வாழ்வதை தவிர்த்து, பெருமாளுக்காக வாழ ஆரம்பித்ததை
பற்றாகக் கொண்டு இனி எப்போதும் இப்படியே ஆழ்வார் இருக்க வேண்டும் என்று ஆழ்வாரின் நெஞ்சினுள் புகுந்தான்.

இன்னும் ஒரு முறை கண்ணி நுண் சிறு தாம்பு, இந்த முறை பாசுரம் 9.
“மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்” என்று மதுரகவி ஆழ்வார் சொன்னது,
நம்மாழ்வார் திருவாய்மொழி பாடி, நன்றாக வேதம் படித்தவர்கள் சொல்லும் உள்ளுறை கருத்துகளை
தன்னுடைய நெஞ்சுனுள் நன்றாக பதியவைத்ததாக சொல்வது
‘புந்தியில் புகுந்து‘ என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்வது போன்று உள்ளது என்று நம் பெரியவர்கள் கூறுவார்கள்.

ஆதரம் பெருக வைத்த
பெருமாள், ஆழ்வாரின் நெஞ்சினுள் புகுந்து என்ன செய்தான் என்றால்,
இத்தனை காலம் வேறு எங்கோ செலுத்திய அன்பையெல்லாம், தன் பால் திருப்பி விட்டான்.
தரிசு நிலங்களில் பாய்கின்ற நீரை, பயிர் நிலங்களில் பாய விட்டு பயன் அடைவித்ததை போல்
பெருமாள் செய்தார் என்று ‘ஆதரம் ‘ என்பதற்கு உரையாசிரியர் விளக்கம் கூறுகிறார்.

‘பெருக ‘ என்பதற்கு உரையாசிரியர் எடுத்து கொள்ளும் மேற்கோள், திருவாய்மொழி பாசுரம் 10.10.10, ல்
வரும் “அதனில் பெரிய ” என்பதாகும்.
சித், அசித் என்ற தத்துவங்களைக் காட்டிலும் பெரியதாக உள்ள, அனுபவிக்கத்தக்கதான ஈஸ்வர தத்துவத்துவமாகிய
தன்னைக் காட்டிலும் பெரியதாக ஆழ்வாரின் அன்பை பெருக செய்தான் என்கிறார்.
பெருமாள் எதற்காக இப்படி அன்பை பெருக வைத்தான் என்று பார்த்தால் ஒரு காரணமும் இல்லாததால்
ஏதோ தண்ணீர் பந்தல் வைத்தாற்போல் என்று சொல்கிறார்.
தண்ணீர்பந்தல் எப்படி ஜீவாத்மாக்களுக்கு உபயோகமாக இருக்குமோ அதே போல் இவை,
ஆழ்வாருக்கும், அவர் மூலம் நமக்கும் மிகப்பயன் உள்ளதாக ஆகிறது.

அழகனூர் அரங்க மன்றே
எதைக் காட்டி இப்படி ஆதரம் பெருக வைத்தான் என்று கேட்டுக் கொண்டு,
தன்னுடைய திருமேனி அழகைக் காட்டியே ஆதரம் பெருக வைத்தான் என்று சொல்கிறார்.
இதற்கான மேற்கொள், திருவாய்மொழியில் 5.3.4 என்ற பாசுரத்தில் நம்மாழ்வார் கூறும்,
“பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த, காரமர் மேனி நம் கண்ணன்” என்பதாகும்.

நம்மாழ்வாருக்கு பெருமாள் மேல் காதல்; அதைப்பற்றி யாருக்கும் தெரியாத போது,
ஊரார்கள், ஏதோ ஒருமுறை இடும் உரம் போல், ஒரு பூசல் செய்து எல்லோருக்கும் தெரிய வைத்தார்கள்.
தாயார் தொடர்ந்து அந்த காதலைப் பற்றி பேசி, தினமும் நீர் பாய்ச்சுவதை போல் வளர்த்தாள்.
பெருமாளும் தன்பங்கிற்கு, மேகத்தில் இருந்து பெய்யும் மழை நீரையும் கொண்டு
அந்த காதலை வளர்த்ததாக ஆழ்வார் பாடுகிறார்.
அப்படி வளரும் காதலுக்கு நாயகியாகிய நம்மாழ்வார் சொல்லும் காரணம், நம் கண்ணனின் திருமேனி அழகே என்பதாகும்.

கர்ம ஞான வழியை பற்றி செல்பவர்களுக்கு, அவை அவர்களை பக்தி யோகத்திற்கு அழைத்து செல்லும்.
இங்கு எம்பெருமானின் திருமேனி அழகு, அந்த கர்ம ஞான ஸ்தானத்தில் இருந்து கொண்டு,
ஜீவாத்மாக்களை பக்தி யோகத்திற்கு அழைத்து செல்லும் என்பது கருத்து.
இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால்,
பெருமாள், நாம் மோக்ஷம் அடைவதற்கான வழியை, தன்னுடைய திருமேனி அழகினைக் கொண்டு
மேலும் எளிதாக்கியதால் ஆழ்வார், பெருமாளின் கருணையை மேலும் போற்றுகிறார்.

சென்ற பாசுரத்தில், ‘ ஐயப்பாட்டை அறுத்து தோன்றும் அழகன்’ என்று கூறிய ஆழ்வார்
இந்த பாசுரத்தில், ‘ஆதரம் பெருக வைத்த அழகன்‘ என்று சொல்லி,
எம்பெருமானின் திருமேனி அழகே ஆழ்வாருக்கு பக்தி வளர்வதற்கு சாதனமாக இருந்தது என்று சொல்கிறார்.
ஆழ்வார் நெஞ்சத்திற்குள் புகுவதற்கு சமயம் பார்த்து இருந்த எம்பெருமான்
வாழுமிடம் திருவரங்கம் ஆகும் என்று சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.
பரமபதம், ஸ்ரீவைகுந்த நாதரின் (பெருமாளின்) ராஜசபை என்றும்
அது முடிந்ததும் அவர் சென்று நன்றாகத் தங்கும் இடம் திருவரங்கம் என்றும்
முன் பாசுரத்தின் விளக்கத்தில் சொன்னபடி, இங்கும் அதனை சொல்லி,
பரம பதத்தை போல் அடைய முடியாததாக இல்லாமல், பக்தர்கள் ஆசை ஏற்பட்டவுடன் சென்று அனுபவிக்கும் இடம்
திரு வரங்கமே என்று சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.

—————-

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை,
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்,
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண் இணை களிக்கு மாறே. (திருமாலை 17)

ஆதரத்துடன் பெருமாளை வாயினால் துதி பாடி வணங்க மாட்டேன் என்றும்,
கைகூப்புதல் போன்ற காரியங்களையும் செய்தது இல்லை என்றும்,
ஈஸ்வரன் என்று ஒருவன் இருக்கிறான் என்று மனது நினைக்கவில்லை என்றும்,
இருந்த தன்னுடைய இரும்பு போன்ற கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்த,
வண்டுகள் அதிகம் உள்ள சோலைகள் சூழுந்த திருவரங்கத்தில் கோயில்கொண்ட எம்பெருமானை பார்த்து
தன் கண்கள் களிக்கின்றனவே என்று ஆழ்வார் ஆச்சர்யப்படும் பாசுரம்.

மிகவும் ஏழையாக இருக்கும் ஒருவனுக்கு தினமும் விருந்து கிடைத்தால் எப்படி மகிழ்வானோ அதுபோல்
ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அழகிய மணவாளனின் சேவையும் அருளையும் கிடைத்ததை எண்ணி மகிழும் பாடல்.

சென்ற பாசுரத்தில், நெஞ்சினுள் அன்புபெருகவைத்ததை ஆதரம் என்று ஆழ்வார் சொன்னார்.
நெஞ்சினுள் அன்பு பெருகி உருகினாலும், அது உடம்பில் தெரியாதபடி, அது கட்டு அழியாமல்,
கடினமாக இருக்கும் மக்களை போல் இல்லாமல், தன்னுடைய கண்கள் போன்ற புலன்கள் கூட
பெருமாளை கண்டு களிக்கின்றன என்று சொல்லும் பாடல்.

எப்பவும் ஆத்மா தான் உணர்வுகளை அனுபவிக்கும்,
ஆனால் இங்கு ஆழ்வார், புலன்களே மகிழ்ச்சி அடைகின்றன என்று சொல்கிறார்.

விரும்பி நின்ற ஏத்த மாட்டேன்
இந்த வார்த்தைகளால் மனம், உடல், வாக்கு என்ற தன்னுடைய முக்கரணங்களும் கடந்த காலத்தில்
இருந்த நிலையை ஆழ்வார் தெரிவிக்கின்றார்.
இந்த முக்கரணங்களை, ஆண்டாள்
தூமலர் தூவி (கை) தொழுது , வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, (திருப்பாவை, 5) என்று சொல்லி இருக்கிறார்.
ஆண்டாள் நாம் என்ன செய்யவேண்டும் என்று சொல்லியதை தான் முன்பு செய்யவில்லை என்று
தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தின் முதலில் கூறுகிறார்.
நித்யஸூரிகளுக்கும் தலைவனாகிய பெருமாளை துதிப்பதற்கும் அர்ச்சிப்பதற்கும் சக்தி இல்லாதவனாக இருப்பதால்
அவனிடமே தயை கேட்பது என்று விஷ்ணுபுராணத்தில்(5.7.70) குறிப்பிடப்பட்டுள்ளது போல்
மற்ற விஷயங்களை பேசுவதற்கு நாக்கிற்கு சக்தி இருந்தாலும் பெருமாளை பற்றி பேசுவதற்கு சக்தி இல்லாதவனாக
இருந்ததாக “விரும்பி நின்று ஏத்த மாட்டேன்” என்ற இந்த வார்த்தைகளால் ஆழ்வார் கூறுகிறார்.

விதி இலேன்
அமர கோசம் என்ற காவியத்தில், “விதிர் விதானே‘ என்று சொல்லும்போது விதி என்பது உடம்பினால் செய்யும்
காரியங்கள் என்ற கருத்தில் சொல்லப்படுகிறது.
பெருமாளை கருதி கை போன்ற அவயங்களால் தான் எந்த பக்தியான காரியங்களையும் பல காலங்களாக
செய்யவில்லை என்று ஆழ்வார் கூறுவது விதி இலேன் என்பதால் தெரிகிறது.

மதி ஒன்று இல்லை
விஷ்ணு தர்மம் என்ற நூலில்,
எந்த நாக்கு விஷ்ணுவை போற்றுகிறதோ அதுவே நாக்கு;
எந்த நெஞ்சு விஷ்ணுவிடம் சமர்ப்பிக்கப்படுகிறதோ அதுவே நெஞ்சு.
எந்த கைகள் அவனுக்கு பூஜை செய்கின்றனவோ அவையே சிறந்த கைகள் என்று சொல்லியிருந்தபடி
தான் முன் காலத்தில் நெஞ்சினால் கூட நினைத்தது இல்லை என்றும்,
ஈஸ்வரன் என்ற ஒருவன் உண்டு என்ற புத்தியும் இருந்தது இல்லை என்பதை மதி ஒன்று இல்லை என்று சொல்கிறார்.

நம் வேதங்களிலும், உபநிஷத்களிலும், எவன் ஒருவன் ப்ரஹ்மத்தை பற்றி அறிகின்றானோ அவனே சத் புருஷன் என்றும்
அதை அறியாதவன் இல்லாதவன் ஆகிறான் என்றும் சொல்லப்படுகிறது.

எந்த வித்தை, முக்திக்கு காரணமோ, அதுவே வித்தை, மற்றதெல்லாம் வீண், என்று ஸ்ரீ பராசரர் என்ற மாமுனிவர்
விஷ்ணு புராணத்தில் சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.
இவையே அறிவு என்பதால், தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனக்கு மதி ஒன்று இல்லை என்று இந்த பாடலில் கூறுகிறார்.

இரும்பு போல் வலிய நெஞ்சம்
இப்படி மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களால் தன்பக்கம் திரும்பாத ஆழ்வாரை,
இவைகளில் முக்கியமான மனதைத் திருத்தி பெருமாள் அவரை தனக்காக மாற்றினார் என்று ஆழ்வார் இங்கே சொல்கிறார்.
இரும்பு போல் வலிய நெஞ்சம் என்று சொல்லி தன்னுடைய முந்திய நிலையை ஆழ்வார் சொல்கிறார்.
இரும்பு போல் என்று கடினமான நெஞ்சம் என்று சொல்லி,
தன் மனது, அதையும் விட கடினமானது என்பதை வலிய என்பதால் குறிப்பிடுகிறார்.
இரும்பினைத் தீ கொண்டு உருக்கி விடலாம்,
ஆனால் தன மனதை மாற்றுவது அவனால் மட்டுமே முடியும் என்ற கருத்தினைத் தெரிவிக்கின்றார்.
இப்படி யாராலும் செய்யமுடியாததைச் செய்பவன் என்று பெருமாளின் பெருமையைக் கூட்டுகிறார்.

இரும்பை விடக் கடினமான தன் நெஞ்சத்தை தண்ணீரே காணாத கடினமான நிலத்திற்கு ஒப்பு சொல்லி,
அங்கே எவ்வளவு மழை பெய்தால், அந்த நிலம் தளர்ந்து சேறாக மாறுமோ
அது போல் பெரியபெருமாள் தன்னிடம் கருணை மழை பொழிந்தான் என்கிறார்.

வைரத்தை, வைரம் கொண்டே அறுக்கமுடியம் என்பது போல், மற்ற உலக விஷயங்களில் மட்டுமே ஈடுபட்டதால்
வைரம் போன்று இறுகிய தன்னுடைய நெஞ்சத்தை, பெரிய பெருமாள் விலையுயர்ந்த வைரமாகிய
அவரின் அழகினை காட்டி அறுத்தார் என்று ஆழ்வார் சொல்வதை பின்னால் பார்ப்போம்.

இறை இறை உருகும் வண்ணம்
ஆண்டாள் ‘செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ‘ என்று திருப்பாவையில் (22) பாடியது போல்
கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உருக்கியதாக ஆழ்வார் கூறுகிறார்.
திடீரென்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் சக்தி தனக்கில்லை என்பதை கருத்தில் கொண்டு
பெரிய பெருமாள் இவ்வாறு செய்ததாக ஆழ்வார் இங்கு தெரிவிக்கின்றார்.
அவர் சிறுசிறிதே விழித்ததால், ஆழ்வார் மெதுமெதுவாக உருகினார்.

சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
வண்டுகள் பொருந்தி இருக்கின்ற சோலை என்று பொருள்.
அமர் என்று சொல்வதால் அங்கேயே பிறந்து, அங்கேயே எப்போதும் இருக்கின்ற வண்டுகள் என்று கொள்ள வேண்டும்.
வண்டுகள் பறந்து வேறு இடம் செல்லாதா என்று கேட்டுக்கொண்டு, அந்த சோலைகளில் தேன் வற்றாததால்,
திருவரங்கத்தில் எப்போதும் வசந்த காலமே, அதனால் வண்டுகளும் வேறு இடம் செல்ல காரணம் இல்லை.
எப்படி பூக்களின் வாசம், அந்த சோலையில் உள்ள பூக்களில் இருந்து பிறந்து, அங்கேயே வளர்ந்து.
அங்கேயே இருப்பது போலே, ஸ்ரீரங்கத்து வண்டுகள் அந்த சோலையிலேயே பிறந்து வளர்ந்து இருக்கின்றன என்று சொல்கிறார்.

இங்கு நாம் மணவாள மாமுனிகளின் யதிராஜவிம்சதி என்ற நூலில் இருந்து இரண்டாம் பாசுரத்தில் உள்ள ஒரு கருத்தையும் பார்க்கலாம்.
“ ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜ ப்ரு ங்கராஜம்” என்று சொல்லும்போது,
சுவாமி ராமானுஜர் எப்போதும் நம்மாழ்வாரின் பாத கமலங்களில் நீங்காது இருக்கும் வண்டு என்று சொல்கிறார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்பது ராமானுஜருக்கு என்றும் மாறாத சுவையுடைய தேன் என்பதால்
அவர் எப்போதும் நம்மாழ்வாரின் திருவடிகளை விட்டு அகலாமல் இருக்கிறார்.

சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
அத்தகைய சோலைகள் சூழ்ந்த திருஅரங்கம் என்று சொல்லிவிட்டு, திருவரங்கத்தின் இனிமை,
சோலையின் இனிமையைவிட அதிகம் என்பதை ‘மா’ கோயில் என்பதைக்கொண்டு விளக்குகிறார்.
திருவரங்க நகரின் இனிமையை கனிக்கு ஒப்பிட்டால், சோலைகளின் இனிமையை புறத் தோலுக்கு ஒப்பிடலாம்படி உள்ளது என்கிறார்.
மேலும் திருவரங்கத்தை, பரமபதம் போல் சிறந்த கோவிலாக உள்ளதையும் இது தெரிவிக்கிறது.

கரும்பினை
இங்கு ஆழ்வார், பெரிய பெருமாளை கரும்பு என்கிறார்.
கரும்பு என்று சொல்வதால், இயற்கையாகவே இனிமையாக இருக்கும்;
தைத்ரீய உபநிஷத்தில் சொன்னது போல் அவன் ஆனந்த ஸ்வரூபன்,
அவனை அடைந்து ஜீவாத்மா ஆனந்தம் அடைகிறான் என்பதில் பரமாத்மா இயற்கையில் இனிமையானவர் என்று கிடைக்கிறது.

வைரம் போன்று இறுகிய ஆழ்வார் நெஞ்சத்தை, வைரம் கொண்டு அறுத்தார் என்று மேலே சொன்னதை,
வைரம் போன்ற ஆழ்வாரின் நெஞ்சத்தை, கரும்பு போன்ற மென்மையான, இனிமையான, இயற்கையான
தன்னுடைய திருமேனி அழகினைக் கொண்டு மாற்றினார் என்று கொள்ளலாம்.

கண்டு கொண்டு
ராமாயணம் யுத்தகாண்டம், 19.7 ல் சொன்னது போல்,
விபிஷணனை கண்களால் இராமன் பருகியதை போல் இங்கு,
பெரிய பெருமாள் கண்களால் பருகக்கூடிய கரும்பு என்று சொல்கிறார்.

என் கண் இணைக் களிக்குமாறே
மற்ற விஷயங்களில் லயித்த ஆழ்வாரின் கண்கள் பெரியபெருமாளை தரிசித்ததும் அவரை கண்டு களிக்கின்றன
என்று ஆழ்வார் ஆச்சர்யம் கொள்கிறார்.
‘இணை’ என்றது வலது கண்ணின் மகிழ்ச்சிக்கு இணை இடது கண் என்று தன்னுடைய இரண்டு கண்களை
மட்டுமே இணையாக ஆழ்வார் காண்கிறார்.
முன்பு சொன்னது போல் கண்கள், இந்திரியங்கள் என்ற நிலையை தாண்டி தானே ஒரு ஆத்மாவைப் போல் ரசிக்கின்றன.

மேல் சொன்னது, கண்கள் தாமாகவே இன்பம் கொள்ளும் காட்சி. கண்கள் தானாகவே துயரப்பட்ட காட்சியை
இராமாயணத்தில் காணலாம்.
இராமனைக் காட்டிற்கு அனுப்பியபின், தயரதன் தன்னுடைய கண்கள் இராமன் பின் போயின என்றும்,
கௌ ஸல்யையைப் பார்க்க முடியவில்லை என்றும் தன்னை தொட்டுப்பார்த்து தொடு உணர்ச்சி உள்ளதா என்றும்
கேட்கும் ராமாயண சுலோகத்தை (அயோத்தியாகாண்டம் 42.34) மேற்கோள் காட்டியுள்ளார்கள்.
தயரதன் தன் கண்கள் தன்னிடம் சொல்லாமல் தன்னிச்சையாக சென்றதை சொல்வது மேல் சொன்ன சுலோகம்.

இதே நிலையை தாம் அடைந்ததாக நம்மாழ்வார் சொல்லும் பதிகம்,
‘முடியானே’ என்னும் 3.8 திருவாய்மொழி ஆகும்.
இதில்
3.8.1ல், தனது மனதானது பெருமாளை காண வேண்டும் என்று உருகிக் கிடக்கின்றது என்றும்,
3.8.2ல், தனது வாக்கானது, நெஞ்சுக்கு அருள் செய்தது போல் தனக்கும் அருள் செய்ய வேண்டும் என்று பெருமாளிடம் சொன்னது என்றும்,
3.8.3ல் தனது கைகளானவை, வாக்கு மட்டுமே உங்களை போற்றி பாட வேண்டுமா, நாங்களும் பாட வேண்டுமே என்று அவனிடம் கோரிக்கை வைத்தன என்றும்,
3.8.4ல் தனது கண்களானவை, கைகளைப்போல் தொழவேண்டும் என்று ஆசைகொண்டன என்றும்
3.8.5ல் தனது செவிகளானவை, காணவும் கேட்கவும் வேண்டும் என்று ஆசை கொண்டன என்றும்,
3.8.6ல் தனது பிராணன்(ஆவி), ஆனது செவியைப்போல் கேட்கவேண்டும் என்று ஆசைகொண்டது என்றும்,
3.8.7ல் தனது மனம் ஆனது பெருமாளின் வடிவழகை காண பலகாலமாக ஆசை கொண்டது என்றும், அது இதுநாள் வரை கிடைக்கவில்லை என்றும்,
3.8.8 ல் தனது மனம் பெருமாளின் வடிவழகை எப்போது கண்டுகளிக்கும் என்றும்,
பரதாழ்வானுக்கு நாளிட்டுக் கொடுத்தாப்போலே தனக்கும் ஒருநாள் குறிப்பிட வேணும் என்றும்,
3.8.9 ல் தான் (ஆத்மா) எப்பொழுது அவனை அடைவது என்றும்,
3.8.10 ல் அவனுடைய திருவடிகளை காணப்பெறாமல் எத்தனை நாள் துயர் கொள்வது என்றும் சொல்லி
தன்னுடைய புலன்களின் நிர்வாகம் தன்னிடத்தில் இல்லை என்று பத்து பாசுரங்களில் சொல்லி இருக்கிறார்.
3.8.11 ல் ஆழ்வார் நலங்கொள் சீர் என்று சொல்வது மிக சிறப்பானது.
ஒரு புலனில் ஆசைப்பட்டதில் இருந்து மற்றொரு புலனுக்குப் பாய்ந்து அங்கேயே தங்கிவிடாமல்
இப்படி எல்லா புலன்களையும் தாண்டி, அவை எல்லாவற்றையும் விட மிக பெரிய விஷயமான
பரமாத்மாவிடம் லயிக்கும்படி சொல்லி இருப்பது மிகமிக சிறப்பாகும்.

———-

சென்ற பாசுரத்தில், ஆழ்வார் தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்று பாடினார்.
அதனால் வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க,
பெருமாளை முழுமையாக ரசிக்க முடியவில்லையே என்று இந்த பாடலில் ஏங்குகிறார்.

ஆழ்வார்கள் பொதுவாகத் தங்களைப் பாவிகளாக, அதிகமாக பாவம் செய்ததாகவும்,
அதனால் தான் பரமபதம் அடையமுடியவில்லை என்றும் என்று சோகமாக பாடுவார்கள்,
ஆனால் இந்த பாடல் அப்படி இல்லை.

இந்த பாசுரத்தில், ஆழ்வார், எம்பெருமானை தரிசிக்க கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்த போது,
அந்த ஆனந்தம் அளவிற்கு அதிகமாக போனதால், அதன் அடையாளமாக ஆனந்தக் கண்ணீர் பெருக,
ஐயோ! இக்கண்ணீர் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது தரிசிக்க முடியாமல் செய்கின்றதே என்று
கவலையுற்று கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாது போன்ற ஒரு பெரிய பாவத்தை எண்ணி தன்னையே வெறுத்துக் கொள்ளும் பாடல்.

இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே,
தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்,
கனி யிருந்து அனைய செவ்வாய், கண்ணனைக் கண்ட கண்கள்,
பனி அரும்பு உதிருமாலோ, என் செய்கேன் பாவியேனே. (திருமாலை 18)

இனிமையான அலைகளில் இருந்து வரும் நீர்த்துளிகள் அடிக்க,
அந்த குளிர்ந்த அலைகளை உடைய கடல் போன்ற காவிரியின் மேல், தனி ஒருவனாய் கண் வளர்ந்து அருளி,
அரசு செலுத்தும் செந்தாமரை கண்ணனும், தனக்கு ஸ்வாமியுமான, கொவ்வை கனி போன்று சிவந்த வாயினையுடைய
ஸ்ரீ கிருஷ்ணனை கண்ட கண்கள் குளிர்ந்த ஆனந்த கண்ணீரை பெருக விடுவதால், நன்றாக சேவிக்க முடியாத
பாவியாகிய தான் என்ன செய்வேன் என்று ஆழ்வார் சொல்வது போல் உள்ளது இந்த பாடலின் பொருள்.

இனி திரைத் திவலை மோத
இனிது என்பதில் கடைசி எழுத்து குறைந்து இனி திரை என்று வந்துள்ளது.
இதுபோல், ஒண்சங்கதைவாளாழியான் (திருவாய்மொழி 8.8.1) ஒண் சங்கு கதை வாள் ஆழியான் என்று உள்ளது.
இனிமையான சிறு துளிகள், பெரும் அலைகளில் இருந்து சிதறி
(அங்கு சயனித்து இருக்கும் பெரிய பெருமாளின் திருமேனியை) தொட்டு என்பதே இதன் பொருளாக கொள்ள வேண்டும்.
மோத என்று சொல்லியதால், பெரிய பெருமாளின் திருமேனியின் மென்மையை சொல்கிறார்.
சிறு துளி தான், மெதுவாகத்தான் பெருமாளை தொட்டது, இருந்தாலும், பெரியபெருமாளின் மென்மையை பார்க்கும் போது,
அது மோதுவது போல் இருந்தாக ஆழ்வார் சொல்கிறார்.

முன்பு (திருமாலை, 11) அரக்கர்கோனை செற்ற நம் சேவகனார் என்று பெரிய பெருமாள்
நம்மை காக்கும் போது, சக்தியை சொன்னார்.
இங்கு பெரிய பெருமாளை அனுபவிக்கும்போது மென்மையை சொல்கிறார்.

எறியும் தண் பரவை மீதே
பெருமாளின் களைப்பை போக்கும் விதமாக குளிர்ந்த அலைகளை கொண்ட கடலின் மீது சயனித்து இருக்கும்
பெருமாளை போல் இங்கு காவிரியின் மேல் கண்வளர்ந்து அருளுகின்ற பெரிய பெருமாளை ஆழ்வார் சொல்கிறார்.
பரப்பாலும் நீர்பெருக்காலும் காவிரி கடலை ஒத்து உள்ளது என்றும் கொள்ளலாம்.

தனிக் கிடந்து
தனி என்பது ஒப்புமை இல்லாதவர் என்று கொள்ளலாம்.
நினைவு அறிந்து அவனுக்கு மட்டுமே சேவை செய்ய காத்திருக்கும் நித்திய ஸூரிகளும், முக்தாத்மாக்களும் நிறைந்த
பரமபதத்தை விட்டு திருவரங்கத்திற்கு வந்து, இங்குள்ள பக்தர்களின் மேல் உள்ள ஆசையினால்,
யாராவது ஒருவராவது தன்னை வந்து சேர மாட்டார்களா என்று தனியாகக் காத்துகொண்டு இருப்பதாகவும் கொள்ளலாம்.

முக்தி பெறுவதற்கான காரியங்களை செய்யாமல், இந்த உலக வாழ்க்கையில் தங்கள் நேரத்தை செலவழித்து,
அதையே பெரிய இன்பமாக நினைக்கின்ற மனிதர்கள் நிறைந்த இந்த பூவுலகில்,
தனியேன் வாழ் முதலே(திருவாய்மொழி, 2.3.5) என்று பிரார்த்திக்கும் நம்மாழ்வார் போன்ற,
தனி ஒருவனைப் பெறுவோமா என்ற ஆசையினால் அன்றோ,
தனியாக வந்து சயனித்து இருப்பது என்று இன்னொரு பொருளும் கொள்ளலாம்.
நம்மாழ்வார், திருவாய்மொழி (10.10.1)ல், மறுபடியும் “தனியேன் ஆருயிரே” என்று சொல்லி,
தான் சாதாரண உலகத்தாருடன் பொருந்த வில்லை என்பதை தெரிவிக்கின்றார்.

அரசு செய்யும்
‘நீ என்னுடையவன்’ என்று பரமாத்மா -பெருமாள் சொன்னால், அதனை மறுத்து,
‘நான் எனக்கே உரியவன்” என்று சொல்லும் ஜீவாத்மாக்கள் இருந்தால் அது ஈரரசு (இரண்டு அரசு);
அத்தகைய ஈரரசினை தவிர்த்து தனியாக ஒரு அரசாக மாற்றி, ஜீவாத்மாக்கள்
‘நமஹ ‘ (நான் எனக்கு உரியவன் அல்லன்) என்று சொல்லும்படி மாற்றி ஆட்சி செய்வதே இங்கு அரசு எனப்படுகிறது.

மஹாபாரதத்தில் (சாந்தி 344.45) கூறியதுபோல் நித்யஸூரிகள் எப்போதும் அஞ்சலி செய்துகொண்டும்,
நமஹ என்று சொல்லிக்கொண்டும் அதில் ஆனந்தப்பட்டு கொண்டும் இருப்பதைப்போல்,
இந்த உலகத்தில் உள்ளவர்களையும் அகங்காரம், மமகாராம் இவற்றை தொலைக்க வைத்து
ஆட்சி செய்கிறான் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

தாமரைக் கண்ணன் அம்மான்
இந்த உலகத்தில் உள்ளவர்களின், அகங்காரம், மமகாராம் முதலியவற்றை எதை கொண்டு அழிக்கிறான்
என்று கேட்டுக் கொண்டு, தன்னுடைய கண் அழகினை காட்டி மயக்குகிறான் என்பதையே இந்த பதங்கள் சொல்கின்றன.
கையில் பிரம்மாஸ்திரம் இருக்கும் போது அதை கொண்டு வெல்லமுடியாத எதிரிகளே கிடையாது அல்லவா,
அதைபோல் தன்னுடைய தாமரை கண்களை கொண்டு பரமபதத்தில் உள்ளவர்களை வென்றதை போல்,
இவ்வுலகத்தில் உள்ளவர்களை வெல்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
நித்யஸூரிகள் இந்த தாமரைக்கண்களுக்கு தோற்று இருப்பார் என்பதை
“தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை”, (திருவாய்மொழி 2.6.3) என்று
நம்மாழ்வார் கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

இப்படி கண் அழகினால் மயங்கியவர் யார் என கேட்டுக்கொண்டு, இவ்வுலத்தாரில் மிகவும் கடைப்பட்டவனாக இருக்கும்
தன்னை தோற்கடித்தபின், இவரால் வெல்ல முடியாதவர் யாரும் இல்லை என்றும்,
தானே அப்படி அடிமைப்பட்டவர் என்பதையும் சேர்த்து ‘அம்மான்’ என்று சொல்லி இருக்கிறார்.

கனியிருந்து அனைய செவ்வாய்
இப்படி அகங்காரம் அறுக்கப்பட்டவர் அனுபவிக்கும் விஷயம், கனி போன்று இனிமையாகவும் அழகாகவும் இருக்கும்
பெரியபெருமாளின் திரு பவளவாய் என்று ஆழ்வார் கூறுகிறார்.
கனி என்று நேரிடையாக கூறாமல், கனி இருந்து அனைய என்று சொன்னதால், நாள் செல்லச் செல்ல
இந்த பவள செவ்வாய் என்ற கனி, மற்ற கனிகளை போல் அன்றி, புதுமை குறையாமல் அப்படியே இருக்கும் என்கிறார்.
விஷ்ணு புராணத்தில் பராசர முனிவர் கூறிய ‘அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே” (1.2.1) என்பதை குறிப்பிடலாம்.

கண்ணனை
பராசர பட்டர் என்னும் ஆச்சார்யர் பெரியபெருமாளே கண்ணன் என்றும்,
நம்பெருமாள் ஸ்ரீராமன் என்று கூறுவதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
கிருஷ்ணாவதார காலத்திற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற காரணத்தோடு திருவரங்கத்தில்
பள்ளி கொண்டு இருக்கின்ற பெரியபெருமாள் என்றும்
குழந்தை கிருஷ்ணன் ரொம்பவும் அதிகமாக விளையாட்டு காட்டினாலும் (துஷ்டத்தனமான), அவற்றைப் பொறுத்துக் கொண்டு
அவனுக்கு மென்மேலும் வெண்ணெய் மற்றும் தயிர் கொடுத்து வளர்த்த தோற்றம் தெரியும்படி உள்ள பெரியபெருமாள் என்றும்
திருவரங்க மூலவரைப் பற்றி பராசர பட்டர் கூறுவார்.
அதேபோல், எப்போதும் வசிஷ்டர் போன்ற அறிவார்ந்த முனிவர்களுடன் பழகியதால் உண்டான அடக்கம்
கண்களில் தெரியும்படி உள்ள நம்பெருமாள் என்று உற்சவ மூர்த்தியைப் பற்றியும் பராசர பட்டர் கூறுவது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ட கண்கள்
பலகாலங்களாக பெரிய பெருமாளை சேவிக்காத இழப்பை சரி செய்து, தற்பொழுது
அந்த பாக்கியத்தைப் பெற்ற கண்கள் என்று ஆழ்வார் பாடுகிறார்.

பனி அரும்பு உதிருமாலோ
கண்டு அனுபவிக்கின்ற காரணத்தால், ஆழ்வாரின் கண்களில், ஆனந்த கண்ணீர் வெள்ளம் போல் பெருகி வருகின்றது.
அது குளிர்ந்து இருந்ததாக சொல்லி இருப்பதும், வறுத்த பயிறு முளைக்கும்படி இருந்ததாக சொல்லி இருப்பதும்,
விரக தாபத்தில் இருந்தால் அந்த கண்ணீர் சுடும் என்றும் விளக்கம் கொடுத்து இருப்பது சுவாரஸ்யமே.

ஆலோ என்று சொல்வது
பின்னால் சொல்லப் போகும் வருத்தத்தின் மிகுதியை சொல்வது.

என் செய்கேன் பாவி யேனே
கண்ணீர் அருவி போல் பெருகி வருவதால் அது சுவர் போல் இருந்து பெரிய பெருமாளை சேவிக்க முடியாமல் மறைப்பதால்,
என் செய்வேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
காண்பதற்கு அரிய விஷயத்தை காணக் கிடைத்து இருந்தும்,
தொடர்ந்து தரிசிக்க முடியாமல் கண்ணீர் சுவர் போல் மறைத்து இருப்பதை நினைத்து, தான் பாவி என்று வருந்துகிறார்.
பெரிய பெருமாளின் பெருமைகள் அளவிடமுடியாதவை; அதனால் அவரை தரிசிக்கும் போது கிடைக்கும் இன்பமும்,
அதனால் வரும் கண்ணீரும் அளவிட முடியாதவைகளே.
கண்ணீர் வரும் போது இடைவெளி இருந்தால், அப்போதாவது பெரிய பெருமாளை காணப் பெறலாம்,
ஆனால் தொடர்ந்து கண்ணீர் வருவதால், அவரை காண முடிய வில்லையே என்று ஆழ்வார் மேலும்
வருந்துவதாக பாடல் அமைந்துள்ளது.
இப்படி ஆழ்வாரின் அனுபவம், தண்ணீரால் வரும் வெள்ளக் கேடும், வறட்சி கேடும் ஒருங்கே
அமைந்தது போல் உள்ளது என்று சொல்லி உரையாசிரியர் இந்த பாடலை நிறைவு செய்கிறார்.

———–

கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்னார்,
இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே,
என்ன செய்வேன் என்று கடைசி இரண்டு அடிகளில் சொல்கிறார்.
முதல் இரண்டு அடிகளில் தம்மை உருக்கியது எது என்று சொல்கிறார்.

குடதிசை முடியை வைத்துக் குணதிசைப் பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலு மாகண்டு,
உடல் எனக்கு உருகு மாலோ என் செய்கேன் உலகத்தீரே. (திருமாலை 19 )

பெருமாள், புண்ணியங்கள் நிறைய செய்த தேவர்களுக்காக வானுலகத்தை (மேல் உலகம்) படைத்தார்.
புண்ணியங்களும், பாவங்களும் கலந்து செய்யும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் வாழ்வதற்காக
பூமியை (கீழ் உலகம்) படைத்தார். இப்படி மேல் கீழ் என்ற இரு திசைகளுக்கு பயன் உள்ளதை ஆழ்வார் உணர்ந்தார்.
ஆனால் கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு போன்ற நான்கு திசைகளுக்கும் ஒரு பயனும் இல்லை என்று நினைத்தார்.
இந்த பாடலுக்குப் பிறகு அவைகளின் பயனை உணர்ந்து கொண்டார்.
மனிதர்களுக்கு படைத்த இந்த உலகத்தில், அவர்களை உய்விப்பதற்கும் உதவ வேண்டும் என்று இந்த திசைகளை படைத்து,
அவை ஒவ்வொன்றிலும் தன்னுடைய ஒவ்வொரு அவயவங்களை வைத்து
அவர்கள் அதன் அழகினைப் பார்த்து பலன் பெறட்டும் என்று ஆழ்வார் சொல்கிறார்.

குட திசை முடியை வைத்து
மேற்கு திசையில் (குடதிசை) உள்ளவர்கள் வாழும்படி அதாவது, அங்குள்ளவர்கள் பயன் அடையும்படியும்,
தானே இந்த பூலோகத்திற்கு (உபயவிபூதி ) நாயகன் அல்லது தலைமை வகிப்பவன் அல்லது ஸ்வாமியாக இருக்கும்
தன்மை உடையவன் என்று சொல்லும்படியாகவும் தன்னுடைய திரு அபிஷேகத்தை (கீரிடம்) உடைய திருமுடியை
மேற்கு பக்கம் வைத்து உள்ளான் என்று ஆழ்வார் பாடுகிறார்.
நம்மாழ்வார் திருவாய்மொழி 3.8.1 ல், எல்லா உலகுக்கும் தனிக்கோல் செலுத்துபவன் என்று
சொல்லும்படி கிடக்கிறான் என்பதை (முடியானே … என்று கிடக்கும் ) இங்கு நினைவில் கொள்ளலாம்.

குண திசை பாதம் நீட்டி
அதே திருவாய்மொழி பாடலில் (3.8.1), ‘மூவுலகும் தொழுதேத்தும் சீர் அடியானே,’ என்று நம்மாழ்வார் சொன்னபடி,
எல்லா உலகங்களும் வாழ்ச்சி பெறுவதற்கு விஷயமான தனது திருவடிகளை கிழக்குப் பக்கம் (குணதிசை)
நீட்டிவைத்து உள்ளார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார்.
நீட்டி என்று சொன்னதால், திருவடிகளை கிழக்குப் பக்கம் உள்ள ஆழ்வாரின் ஊரான மண்டங்குடி வரை நீட்டி
தன்னை வசீகரித்ததைச் சொல்கிறார்.
இதையே அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தின் முதல் பாடலில், திருப்பாணாழ்வார்,
“திருக் கமல பாதம் வந்து என் கண்ணில் உள்ளன ஒக்கின்றதே‘ என்று சொன்னதும்,
அந்த ஆழ்வார் இருந்த உறையூர் வரை திருப்பாதங்கள் நீண்டன என்ற பொருளிலே சொல்லப்படுகிறது.

பெருமாள், குணமுள்ளவர்களை வாழ்விப்பது, குணமற்றவர்களை கைவிடுவது என்ற கொள்கை இல்லாதவர் ஆகையால்,
குணவான்களோடு, துஷ்டர்களும் வந்து பணிந்து போற்றக்கூடிய திருவடிகளை பெற்றவர் என்பது சிறப்பு.
“பொய்யர்க்கே பொய்யனாகும்” என்று மேலே, பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்று
சொன்னது கூட, இந்த பிறவியில், அவர்கள் பாவம் செய்வதை நிறுத்தி,
அவர்களுக்கும் நன்மையே செய்து விடுவது என்பதை இங்கு கருத்தில் கொள்ளலாம்.

ஆளவந்தார் என்ற ஆச்சார்யர் எப்பொழுதும் கிழக்கு பக்கம் எழுந்தருளி, எம்பெருமானின் திருவடி பக்கமே,
பெரியபெருமாளை சேவிப்பார் என்றும், பெருமாளின் திருமுடி இருக்கும் மேற்கு திசையை
துரியோதனன் பக்கம் என்று சொல்லி தவிர்ப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

திருவடிகளின் பெருமையைப் பற்றி பேசும் போது, வேதாந்த தேசிகன் என்ற இன்னொரு ஆச்சாரியார்,
தன்னுடைய பாதுகா சஹஸ்ரம் என்ற நூலில், கூறியதை பார்ப்போம்.
இராமன், மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம அவதாரங்களை போல் தான் ஒருவனாகவே அவதரித்து எல்லாம் செய்து இருக்கலாம்.
ஆனால், தானே, பரத, லக்ஷ்மண, சத்ருக்னனாக தன் கூடவே அவதரிக்க காரணம்,
எல்லோரும் விரும்பும் தன்னுடைய திருவடிகளை தானும் விரும்பி ஆராதனம் செய்ய விரும்பினார்;
ஆனால் இந்த உலகம் பரிகசிக்குமே என்று தானே பரதனாக அவதரித்து அதனை செய்தார் என்று கூறுகிறார்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாளே, சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீராமன் ஆவார்;
இக்ஷ்வாகு குலத்தில் ஆராதிக்க பட்ட பெருமாளும் அவரே ஆவார்.
பட்டாபிஷேக சமயத்தில் விபீஷணனுக்கு பரிசளிக்கப்பட்டவரும் அவரே ஆவார்.
ஆக, ஸ்ரீ ராமன், ஸ்ரீரங்கம் பெருமாளான அரங்கநாதன், ஆகியவர்கள் எல்லோருமே ஸ்ரீமன் நாரயணனே.
இப்படி, தன்னை தானே ஆராதித்துக்கொள்வது சரியா என்று கேட்டால்,
அதற்கு, தன்னுடைய பெருமை தனக்கு மட்டுமே தெரியும் என்பதாலும்,
அது மற்றவர்க்கு உரிய நிலமில்லை என்பதாலும்,
அதற்கு என்று தனியாக ஆள் வைக்காமல் தானே ஆராதனை செய்கிறார் என்று பட்டர் சொல்கிறார்.
இவைகளை போல், அவரே தன்னுடைய அழகையும் ரசிக்கிறார் என்று பராசர பட்டர் என்னும் ஆச்சாரியார் சொல்கிறார்.

வட திசை பின்பு காட்டி
வடமொழி வல்லுநர்கள் நிறைந்த பகுதியாதலால் அங்கு ஆழ்வார்களின் கருணை நிறைந்த பாசுரங்கள் தெரியாதவர்கள் ஆகையால்,
அவர்களை திருத்துவதற்கு, தன்னுடைய முன்னழகை விட சிறந்ததான பின்னழகை
பெரிய பெருமாள் காட்டுகிறார் என்று ஆழ்வார் சொல்கிறார்.
பிள்ளை பெருமாள் அய்யங்கார் எழுதிய கோவிலந்தாதி என்ற நூலில், அழகிய மணவாளன் என்னும் ரங்கநாதனுக்கு
முன்னிலும் பின்னழகிய பெருமாள், ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள் என்ற திருநாமங்களும் உண்டு என்று சொல்கிறார்.

உத்சவ மூர்த்தியான நம்பெருமாள்,
தன் முன்னழகையும், முன்னிலும் பின்னழகிய பெருமாள் என்று ஏத்தும்படி உள்ள தன் பின்னழகையும்,
எதிரே வீற்று இருக்கும் பெரியதிருவடியின் (கருடன்) வடிவத்தையும்,
இரண்டு பக்கங்களில் உள்ள உபய நாச்சிமார்களின் வடிவங்களையும்,
பின்னால் அரவணை மேல் பள்ளி கொண்ட பெரிய பெருமாளின் அழகினையும் கண்டு ரசித்தும்
அதில் திருப்தி கொள்ளாதவராக உள்ளார் என்ற பட்டர் சொற்களையும் நாம் இங்கு ஞாபகம் கொள்ளலாம்.
இப்படி தன்னுடைய அழகை மேலும் மேலும் மெருகூட்டி கொள்வது, மேலும் அதிகமான அடியார்களை கவர்வதற்கே ஆகும்.

நம்முடைய ஆச்சார்யார்களில் ஒருவரான, நம்பிள்ளையின் சிஷ்யர்களில் பின்பழகிய பெருமாள் ஜீயர் என்று ஒருவர் உண்டு.
இவர் பின்பழகராம் பெருமாள் ஜீயர் என்றும் அழைக்கப்படுகிறார்.
எம்பெருமானின் (திருஅரங்கம் நம்பெருமாள்) பின்னழகுக்கு அடிமை ஆகி தன் பெயரை இப்படி மாற்றிக் கொண்டதாக வரலாறு.
அவர் குருபரம்பரை என்று நம்முடைய ஆழ்வார் ஆசார்யர்களின் சரித்திர விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
எப்படி நம்ஜீயர் என்ற சன்யாசம் பெற்ற ஆச்சார்யார் பட்டர் என்ற ஆச்சார்யாருக்கு கைங்கர்யங்கள் செய்தாரோ
அது போன்று சன்யாசியான பின்பழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை என்ற ஆச்சார்யார்க்கு கைங்கர்யங்கள் செய்தார்.
ஒரு ஆசார்யனின் திருமேனியில் ஒரு சிஷ்யனுக்கு முழுப் பற்றுதல் இருக்க வேண்டும் என்ற
உயர்ந்த கருத்தை வெளிப்படுத்திய சிஷ்யர் ஆவார். பட்டர், நம்பிள்ளை இருவரும் க்ரஹஸ்தர்கள்.

அதேபோல், மற்ற திசைகளுக்கு இல்லாமல், வடக்கு திசைக்கு மட்டும், காட்டி என்று சொன்னதற்கு உரையாசிரியர்,
வடக்கு பக்கம் வாழ்பவர்களுக்கு என்று குறிப்பிட்டு சொல்லி உள்ளார், மற்ற திசைகளை சொல்லும் போது,
அந்தந்த திசையை மட்டும் சொல்லி, அங்கு உள்ளவர்களுக்கு என்று உரையாசிரியர் குறிப்பிட்டு சொல்லவில்லை.
இது மற்ற திசைகளை வாழ்பவர்களை விட இவர்கள் கடினமானவர்கள் என்ற கருத்தால் இருக்கலாம்.

தென் திசை இலங்கை நோக்கி
மற்ற மூன்று திசைகளிலும் அவயங்களை வைத்ததிற்கு காரணம்,
அந்த திசைகளின் பயனில்லாமையை நீக்குவதற்காக என்று சொன்ன ஆழ்வார்,
தெற்கு திசையை நோக்கி பார்ப்பது மட்டும் பெருமாள், தன்னுடைய குறை நீங்குவதற்காக என்று சொல்கிறார்.
மற்ற மூன்று திசைகளுக்கும் தன்னுடைய கருணையின் காரணமாகப் பிறர்க்கு செய்த உதவி என்றும்,
தெற்கு திசையில் செய்வது மட்டும், தான் விபீஷ்ணனுடன் இலங்கை செல்லாமையைக் கருதி
பெருமாள் தானே தனக்கு செய்துகொண்ட உதவி என்று ஆழ்வார் கூறுகிறார்.

தென்திசை நோக்கி பள்ளி கொள்ளும் (பெருமாள் திருமொழி 1.10) என்று குலசேகர ஆழ்வார் சொல்வதை
நினைவில் கொண்டால் தனக்குப் பிரியமான விபீஷ்ணன் வாழும் திசையை நோக்கி கண்வளர்ந்து அருளுவதின் காரணம் தெரியும்.

பெரியாழ்வார் திருமொழியில் (4.9.2), விபீஷ்ணற்காகவே பெரியபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார் என்பதை பற்றி
பெரியாழ்வார் சொன்ன வார்த்தைகள்
“மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண் வைத்த, என்னுடைய திருவரங்கர் “.
விபீஷ்ணனின் விரோதியை ஒழித்து, இலங்கை ராஜ்யத்தை அவனுக்கு கொடுத்து அதை அவன் நன்றாக
ஆட்சி செய்வதைப் பார்த்தபடி பெரியபெருமாள் கண்வளர்ந்து இருப்பதை பெரியாழ்வார் சொல்கிறார்.
குழந்தைக்கு பால் கொடுத்தபடி, படுத்துக்கொண்டு அதன் முக மலர்ச்சியை கண்டு மகிழும்
தாயைப் போலே இருக்கிறது என்று உரையாசிரியர் சொல்வது சிறப்பு.

அடுத்தது, திருமங்கையாழ்வார். அதற்கு முன், நாம் இராமனுக்கு சுக்ரீவன் மேல் எவ்வளவு அன்பு என்பதை பார்க்க வேண்டும்.
யுத்த காண்டத்தில், சுக்ரீவன், இராமரின் தலையில் கீரிடம் இல்லாமல் இருப்பதை பார்த்தும்,
அதே சமயத்தில் இராவணனின் பத்து தலைகளிலும் பத்து கிரீடங்கள் இருப்பதைக்கண்டு பொறுக்காமலும்,
உடனே எதையும் சிந்தனை செய்யாமல், பாய்ந்து இராவணனின் தலைகளில் உள்ள அத்தனை கீரிடங்களையும் பறித்து
இராமனின் காலடியில் கொண்டு சமர்ப்பித்தான். அதற்கு இராமன், சுக்ரீவனைப் பார்த்து கவலையுடன்,
இப்படி ஆபத்தான காரியங்கள் செய்யும் போது, அவனுக்கு ஏதாவது நடந்து இருந்தால், தான் என்ன செய்வது,
தனக்கு சீதா, பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் என்று பலர் இருந்து என்ன பயன் என்று வருந்துவது
வால்மீகி ராமாயணத்தில் (யுத்த காண்டம், 41.4) சொல்லப்படுகிறது.
இவர்களுக்கு இணையாக சுக்ரீவனும் சொல்லப்படுவதே இராமனின் சுக்ரீவனிடத்தில் இருந்த பேரன்புக்கு எடுத்துக்காட்டு.

இப்போது இராமனுக்கு விபீஷ்ணனின் மேல் எவ்வளவு அன்பு என்பதை பார்ப்போம்.
விபீஷ்ணன் இலங்கையை விட்டு விலகி, இராமனிடம் சரணாகதி அடைய வரும்போது,
முதலில் சுக்ரீவன் அவர்களை தடுத்து வைத்து, இராமனிடம், அவர்கள் எதிரிகளிடம் இருந்து வந்தவர்கள்,
அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது என்று வாதிடுகிறான்.
அதற்கு இராமன் மறுப்பு தெரிவித்தபோது, சுக்ரீவன் அவர்களை சேர்த்தாலே, தானும் தன் படைகளான வானர சேனையும்
இராமனை விட்டு விலகிவிடுவோம் என்று சுக்ரீவன் சொன்னான்.
இராமன், விபீஷ்ணனை அன்று ஈன்ற கன்று போல கொண்டு, வானர சேனையும், சுக்ரீவனும் தன்னை விட்டு விலகினாலும்,
தாம் ஒருபோதும் விபீஷ்ணனை கைவிடமாட்டோம் என்று, முன்பு ஈன்ற கன்று போல உள்ள சுக்ரீவனிடம் சொன்னார்.
சுக்ரீவனும் மனம் மாறி இராமன் சொன்னதை ஆதரித்தான் என்பது சரித்திரத்தின் தொடர்ச்சி.
பெரியபெருமாள் இவ்வளவு பரிவு கொண்ட விபீஷ்ணன் என்பதை திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில், (6.8.5)
“செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை” என்றார்.
அத்தகைய விபீஷ்ணனனை நோக்கி கண்வளர்ந்து அருளுகிறார் என்பது தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாடலில் சொன்னது.

மேற்கு திசையில் (குட ) முடியை வைத்து என்றும், கிழக்கு திசையில் (குண) பாதம் நீட்டி என்றும்
வடக்கு திசையில் பின்பு காட்டி என்றும் சொன்ன ஆழ்வார் தெற்கு திசையில் மட்டும் நோக்கி என்று
பெருமானுடைய விருப்பமாக சொல்கிறார்.
அதாவது, வைத்து, நீட்டி மற்றும் காட்டி என்பவை ஒருமுறை செய்தால் போதுமானது,
ஆனால், நோக்கி என்பது தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் என்ற பொருளைத் தருவது.
நோக்கி என்பதன் மூலமும் எம்பெருமானுக்கு விபீஷ்ணன் மேல் உள்ள பரிவு தெரிகிறது.

இவ்வுலகத்தில் உள்ள 106 திவ்யதேசங்களில் தெற்கு நோக்கிய திருமுகம் 7 திவ்ய தேசங்கள் மட்டுமே.
அவை
ஸ்ரீரங்கம்,
திருமெய்யம்,
திருசிறுபுலியூர்,
திருநீரகம்,
திருகாரகம்,
திருவித்துவக்கோடு,
திருக்காட்கரை.

கடல் நிற கடவுள்
நித்யஸூரிகள் எப்பொழுதும் ஆசைப்படும் வடிவு பரமாத்மா ஆகும்.
அப்படிப்பட்ட பரமாத்மா, ஏதாவது ஒரு ஜீவாத்மா கிடைப்பானா என்று காத்துகொண்டு இருப்பதை ஆழ்வார் இங்கு கூறுகிறார்.
கடல், தன்னைக் கண்டவர்கள் களைப்பை போக்கும் தன்மை உள்ளது.
அதேபோல், பெருமாளின் திருமேனியும் கண்டுகளிப்பவர்களின் களைப்பை போக்குவதால், ஆழ்வார், கடல் நிறக் கடவுள் என்கிறார்.
கடலை , நிறத்திற்கு ஒப்பாக கூறலாமே அன்றி, பெருமாள் திருமேனி, அதையெல்லாம் கடந்து இருப்பதால்,
கடவுள் என்று ஆழ்வார் கூறுகிறார்.

எந்தை
இந்த வடிவழகைக் காட்டி ஆட்கொண்ட பெருமான் என்பதை, எந்தை என்று சொன்னார்.
புதிய கிணறு சரியாக உள்ள நிலையில் பழைய கிணறை தூர் வார்வது எதற்காக என்று ஆழ்வார் கேட்கிறார்.
புதிய கிணறு என்று ஆழ்வார், பெருமான் தன்னை தன்னுடைய வடிவழகை காட்டி ஆட்கொண்டதை சொல்கிறார்.
பழைய கிணறு என்று ஆழ்வார், நித்யஸூரிகளை பெருமான் தன்னுடைய வடிவழகை காட்டி ஏற்றுக்கொண்டதை சொல்வது.
தாழ்வுக்கு எல்லையாக உள்ள தன்னை பெருமாள் அழகை காட்டி திருத்திய பின்,
வேறு ஒருவரையும் சொல்ல வேண்டாம் என்பது ஆழ்வாரின் கருத்து.
நம்மாழ்வார் சொன்ன திருவாய்மொழியில் (3.3.4)
“ஈசன் வானவர்க்கு என்பான், என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு,
நீசனேன் நிறைவொன்றும் இல்லேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே” என்ற பாடல்
இங்கு மேற்கோளாக சொல்லப்படுகிறது.

அரவணைத் துயிலுமா கண்டு
மிக சிறந்த இரத்தினத்தை மிக விலை உயர்ந்த தங்க கட்டிலில் பொருத்தினால் எப்படி இருக்குமோ
அது போல் பெரியபெருமான் வடிவழகு ஆதிசேஷன் மேல் சாய்ந்த பின் மேலும் ஒப்பற்றதாகிறது.

உடல் எனக்கு உருகு மாலோ
ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு இருக்கும் அரங்கனின் அழகை ரசிக்க ஞானம் உள்ள ஜீவாத்மாக்களுக்கு
உடலும் உள்ளமும் உருகினால் அதில் ஆச்சர்யம் இல்லை என்றும்,
அதை அனுபவிக்க ஞானம் இல்லாத தான் கூட உருகுவதுதான் ஆச்சர்யம் என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வாருடன் கூட வந்தவர்கள் தாங்கள் உருக வில்லையே என்று சொன்ன போது, தான் உருகுகிறேன் (எனக்கு) என்றுசொல்லி உள்ளார்.

இராமானுஜர் சரணாகதி கத்யத்தில் “பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்” என்று (12) சொல்வது,
பரமாத்மாவின் ஸ்வரூபத்தை மறைக்கும் ஜீவாத்மாவின் உடலானது,
அதை கண்டால், கட்டுக்குலைகிறது அல்லது உருகுகிறது என்பதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
ஆன்மாவின் ஸ்வரூபத்தை நாம் அறிய முடியாமல் இருப்பதற்கு காரணம், ஆன்மா இந்த தேகத்துடன் சேர்ந்து
இருப்பது தான் என்பது பிரம்மசூத்திரத்தில் (3.2.5) சொல்லப்பட்டுள்ளது.
அப்படியான ஞானத்தை மறைக்கும் உடல் அல்லது உடலில் உள்ள கண்கள், அந்த ஆன்மாவை கண்டவுடன்
மறைக்காமல் இருந்து மொத்த உடலையும் உருக செய்வது ஆச்சர்யமாக உள்ளது.

என் செய்கேன் உலகத்தீரே
ஆற்றில் வெள்ளம் கரையை கடந்து, அருகிலுள்ள கரைகள் உடைந்தால் கரையைப் பாதுகாப்பவர்கள்,
கைவிட்டுக் ஆற்றைக் கடக்க உதவி வேண்டி கூப்பிடுவதை போலே,
தொண்டரடிப்பொடி ஆழ்வார் இங்கு நம்மை போன்ற சம்சாரிகளை கூப்பிடுகிறார்.
பெரிய பெருமாளின் அழகை சேவித்தும் கொஞ்சம் கூட கலங்காமல் புறப்படுகிற ஸம்ஸாரிகளைப் பார்த்து
அவர்களை போலே தன் உடலும் உருகாமல் கல்போன்று இருப்பதற்கு ஒரு உபாயம் சொல்லமாட்டீர்களோ என்று கேட்கிறார்.

தம்மை ஒத்த மற்றைய ஆழ்வார்களை கேட்கலாம் என்றால், ஓட்டை ஓடத்தோடு சேர்ந்த ஒழுகல் ஓடம்போல்,
அவர்கள் முன்னமே உருகி இருந்தார்கள். என் செய்கேன் பெருமாளே என்று பெருமாளிடம் கேட்கலாம் என்றால்
தன்னை உருகவிட்டதை நினைத்து, எதிர் தலையை உருக்கவிட்டது தன்னுடைய பெருமை ஆகும் என்று
பெருமாள் கர்வம் கொண்டு விடுவார், அதற்கு தான் காரணம் ஆக கூடாது என்று ஆழ்வார் அவரிடம் கேட்கவில்லை.
ஆகவே, பெருமாளை சேவித்து விட்டு வந்த பின்பும் உடம்பை இப்படி கெட்டியாக வைத்துக் கொண்டு உள்ள சம்சாரிகளிடம்
இப்படி இருப்பதற்கு காரணமாக உள்ள மருந்தை தனக்கு ஒரு கை அளவாவது கொடுக்க வேண்டுகிறார்.

————

சென்ற பாசுரத்தில், ஆழ்வார், தான் பெரிய பெருமாளை தரிசித்தவுடன் தனக்கு உள்ளத்துடன் சேர்ந்து உடலும் உருகுகிறதே,
ஆனால் அப்படி உருகாத சம்சாரிகளைப் பார்த்து தனக்கு அவர்கள் உபயோகிக்கும் மருந்தினை கொடுக்குமாறு கேட்டார்.
அதற்கு சம்சாரிகள், தங்களை போல் பகவத் விஷயத்தில் இருந்து வந்து விடுமாறு ஆழ்வாரைச் சொல்கிறார்கள்.
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும் போது,
அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப் போல் தன்னால் பெருமாளை விட்டு அகலமுடியாது என்று
ஆழ்வார் பதில் உரைக்கும் பாசுரம் ஆகும்.

பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட,
மாயனார் திருநன் மார்வும் மரகத உருவும் தோளும்,
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்,
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே. (திருமாலை 20)

இந்த பாசுரத்தில் பெரியபெருமாளின் அழகினை ஆழ்வார் விவரிக்க முயற்சிக்கிறார்.
காவேரியால் சூழப்பட்ட திருவரங்கத்திலே திருஅனந்தாழ்வானாகிய படுக்கையில் கண் வளர்ந்து அருளுகிற
ஆச்சர்யமான செயல்களை உடைய எம்பெருமானுடைய, பிராட்டி வாழ்கின்ற மிக சிறந்த திருமார்பும்,
மரகதமணி போன்ற திருமேனி நிறமும், திருத்தோள்களும், பரிசுத்தமான தாமரை மலரைப் போன்ற திருக்கண்களும்,
சிவந்த திருஅதரங்களும், பவளம் போன்ற திருவாயும், வெகுகாலமாக மேன்மையுடைய திருமுடியும்,
இவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே ஆகும்.
இவற்றை அடியவர்கள் இழக்கலாமோ என்று ஆழ்வார் இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

இந்த பாசுரத்தினால் எம்பெருமானின் வடிவழகும் அதில் ஆழ்வாருக்கு இருக்கும் ஈடுபாடும் நன்றாக தெரியவரும்.

பாயும் நீர் அரங்கம்
அணைகட்டி நீர் ஏற்றும்படி இல்லாமல், பாய்கின்ற நீருக்கு ஏற்ற பள்ளமாக இருக்கும் திருவரங்கம் என்பது ஒரு பொருள்.
நீரைப்போல், சுத்தப்படுத்துவதும் தெளிவாகவுள்ளதும் ஆன மற்ற பொருள்களையும் குறிக்கும்.
அத்தகைய பொருள்கள் வந்து சேரும் இடம் திருவரங்கம் ஆகும் என்பது இன்னொரு பொருள்.
ஆழ்வார்கள் பதின்மரும் ஆச்சார்யர்கள் அனைவரும் வந்து சேர்ந்த இடம் அன்றோ இந்த பெரியகோயில்.

வால்மீகி ராமாயண ஸ்லோகம் (1.2.5) இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது.
“பரத்வாஜனே, சேறு அற்றதாகவும், அழகியதாகவும், நல்லவர்களின் மனதைப்போல் தெளிந்த நீரை உடையதாகவும்
விளங்கும் இந்த நீரினை காண்பாயாக” என்று சொல்லும் போது,
இங்கு சொல்வதைப் போலவே, நீர், நல்லவர்களுக்கு உபமானமாக சொல்வதை காணலாம்.

பாம்பணை பள்ளி கொண்ட
எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏடுகளில் உள்ளது என்று எண்ணிவிடாமல்,
திருவரங்கத்தில், திருவனந்தாழ்வான்மீது
“தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி” (திருவாய்மொழி 8.10.8) என்றபடி
எல்லா அவயங்களின் அழகும் நன்கு விளங்கும்படி சாய்ந்து அருள்கின்ற தேஜஸை கண்டவர்களின்
கால்கள் அங்கிருந்து விலகுமோ என்று ஆழ்வார் வினவுகிறார்.
எம்பெருமானின் சயனத் திருக்கோலத்தை “தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி” என்று
விளக்கம் சொல்லியிருப்பதை மேலும் சில பாடல்களில் இங்கு காணலாம்.

பூவிலும் மென்மையான தன் திருமேனியை கடல் நீர் உறுத்தாமல் இருக்க வேண்டும் என்று அனந்தாழ்வான் மீது
சயனித்து இருக்கும் எம்பெருமான் என்று சொல்வதை, பெரியாழ்வாரின்,
“வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற’ (பெரியாழ்வார் திருமொழி 5.1.7)
பாடல் மேற்கோளாக காட்டப்படுகிறது.

பள்ளி கொண்ட மாயனார்
பள்ளிகொண்ட என்ற பதம், பாம்பணை பள்ளி கொண்ட என்றும் ‘பள்ளிகொண்ட மாயனார்” என்றும்
சேர்க்கப்பட்டு அர்த்தம் சொல்லப்படுகிறது. மாயம் என்பது ஆச்சர்யம் என்ற அர்த்தத்தில் உபயோகபடுத்த பட்டு உள்ளது.
பள்ளி கொண்டு இருக்கும் போதே மாயங்கள் அல்லது ஆச்சர்யங்கள் நடத்தும் பெருமான் என்றும் பொருள் கொள்ளலாம்.
திருவிளக்குப் பிச்சனுடன் பெரியபெருமாள், நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை கேட்க விழைந்த போது பேசியது அப்படி ஒரு ஆச்சர்யமே.

பள்ளிகொண்டு இருக்கும் அழகு ஆச்சர்யப்பட வைக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.
பள்ளிகொண்டு இருக்கும் இராமபிரானின் அழகை அனுபவிக்கும் சீதா பிராட்டியின் வார்த்தைகளை
யுத்த காண்டத்தில் (38.25) காணலாம். ( ச மயா போதிதஹ் ஸ்ரீமான் சுகசுப்தஹ் பரந்தபஹ )
காகாசுரனால் துன்பபடுத்தப்பட்ட போது, சுகமாக கண் வளர்ந்து அருளியவரும், அழகாக இருப்பவரும்,
எதிரிகளைத் தவிக்கச் செய்பவருமான இராமபிரான் எழுப்பப்பட்டார் என்று இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.

அப்படிப்பட்ட அழகிய ராமன், ஆராதித்த பெருமாள் திருவரங்கன்;
அதனால் அந்த அரங்கநாதனின் சயன திருக்கோல அழகை கண்டு மகிழ்ந்து தொண்டரடிப்பொடி ஆழ்வார்
இந்த பாசுரத்தில் கூறுவது ஆச்சர்யமில்லை.
அதே போல் கண்ணனை துயில் எழுப்பியவர் ஆண்டாள் ஆவார். (நீளாதுங்க ஸ்தனகிரிதடி ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் ).

நின்ற திருக்கோலத்தில் இருந்தாலும், அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தாலும் அகலலாம்,
ஆனால் பள்ளிகொண்ட திருக்கோலத்தில் அகல இயலாது என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி (5.8.1) “ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!” என்ற பாடலும்,
குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி (7.2), “ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் ”
(ஆனை கிடப்பதை போல் பள்ளி கொண்டு அருளும் அழகை சொல்கிறார்) என்ற பாடலும் இங்கு மேற்கோள் காட்டப்படுகிறது.

எம்பெருமானுடைய நீண்ட கைகளுக்கும் எட்டாமல் ஓடினேன் ஓடி என்று சம்சாரத்தினுள் வெகு தூரம் ஓடி கொண்டு இருந்த
தன்னை பிடித்து இழுத்துக்கொண்ட ஆச்சர்யத்தால் மாயனார் என்று
தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுவதுவதாக உரையாசிரியர் தெரிவிக்கிறார்.

திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் (7) என்ற பிரபந்தத்தில்,
“அரவு இன் அணை மிசை மேய மாயனார் ” என்று சொல்வதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.

திருநன் மார்வும்
பிராட்டி எப்போதும் அகலமாட்டேன் என்று வாழ்கின்ற மார்பு என்பதால், எம்பெருமானின் திருமார்பிற்கு சிறப்பு என்பது ஒரு அர்த்தம்.
அதாவது பிராட்டி வாழ்வதால் சிறப்பு பெரும் மார்பு என்று பொருள்.
நம்மாழ்வாரின் அகலகில்லேன் இறையும் என்ற திருவாய்மொழி (6.10.10) அந்த சிறப்புக்கு அர்த்தம் கூறும்.
பிராட்டி அணிந்த செம்பஞ்சுக்குழம்பும் (மகளிர் பண்டைக்காலததில் அழகிற்காகப் பூசிய சிவப்புக்கலவை),
பிராட்டி அணிந்த மாலைகளும் எம்பெருமானின் திருமார்பில் இருப்பதைக்கண்டு உபநிஷத்துக்கள் இவனே
பரம்பொருள் என்று முடிவு செய்கின்றன என்று பராசர பட்டர் சொல்கிறார். (ஸ்ரீ குணரத்ன கோஸம் 4).

நம்மாழ்வார், “திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும், திகழ்கின்ற திருமாலார்” (திருவாய்மொழி, 10.6.9 ) என்று
திருமாலுக்கும், அவரின் திருமார்பிற்கும், பெரிய பிராட்டியாருக்கும் உள்ள சிறப்புகளை சேர்த்து
ஒன்றோடு ஒன்று மேலும் மேலும் அழகு சேர்த்துக்கொள்வதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

மரகத உருவும் தோளும்
நீர் வெள்ளத்தை திறந்து விட்டால், அது எப்படி காண்பவர்கள் கண்கள் குளிரும்படி உள்ளதோ,
அதேபோல் எம்பெருமான், ஒளிரும் மரகத பச்சை நிற வடிவு கொண்டவர்.
இதே ஆழ்வார் பாடிய பச்சை மாமலை போல் மேனி என்பதையும் இங்கு நினைவு கொள்ளலாம்.
மார்பிற்கு சிறப்பு சேர்க்க திரு, நன் என்ற அடைமொழிகள் சேர்க்கப்பட்டன;
உருவிற்கு சிறப்பு சேர்க்க மரகத ஒளி சேர்க்கப்பட்டது. அப்படி எந்த சிறப்பும் சேர வேண்டிய அவசியம் இல்லாத
இயற்கையிலேயே சிறப்பு உள்ள தோள்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இந்த நீரோட்டத்தில் நீந்த விழைபவர்களுக்கு தெப்பம் போல் உள்ள தோள்கள் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

தூய தாமரைக் கண்களும்
பரிசுத்தமான தாமரை மலர்போன்ற திருக்கண்கள் என்பது நேரிடையான பொருள்.
இந்த திருக்கண்களால் கடாக்ஷிக்க பெற்றவர்கள் பரிசுத்தம் அடைவதால், அதற்கு காரண உறுப்பான
திருக்கண்களுக்கு ‘தூய‘ என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது.
பிராட்டியாக இருந்தாலும் சரி, ஹிரண்யன் போன்ற அசுரர்கள் ஆனாலும் சரி, எல்லோரையும், குளிர நோக்குகின்ற கண்கள்;
நோக்கு ஏன் தூய்மை என்றால், எம்பெருமான் எந்த ஒரு காரணமும் இல்லாமல்,
தன்னுடைய விருப்பத்தினால் மட்டுமே பார்ப்பதால், அதில் பாரபட்சம் இருப்பதில்லை.

நண்பன், பகைவன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா ஜீவராசிகளுக்கும் நண்பன்
அன்றோ எம்பெருமான். (பகவத் கீதை 5.29).

ஜிதந்தே ஸ்தோத்திரத்தில் (1.2), விஷ்ணு பக்தி உடையவர்களுக்கும், பகவத் பக்தி அற்றவர்களுக்கும்
எப்போதும் சமானமாக பற்றலாம்படி இருக்கும் அவனுடைய திருவடிகளை உபாயமாக நிச்சயிக்கிறேன்
என்று சொன்னது இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.
அதாவது எல்லோருக்கும் சமமாக இருப்பது அவனது உறவு.
பார்வை ஒன்றாக இருக்கும்போது, அசுரர்களுக்கு மட்டும் ஏன் கெடுதல் விளைகின்றது என்று கேட்டுக் கொண்டு,
அவை அசுரர்களின் தோஷத்தினால் வந்தது என்று பதில் உரைக்கிறார்.
எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் தென்றல், தாமரையை மட்டும் உலர்த்தி விடுவதைபோல் இதுவும் என்கிறார்.

தூய தாமரை என்று சொல்லும் போது, குளிர்ச்சிக்கும், நறுமணதிற்கும், மேன்மைக்கும் மட்டுமே எம்பெருமானுடைய
திருக் கண்களுக்கு தாமரை ஒப்பிடப் படுகிறது; திருக் கண்களில் வழியும் கருணைக்குத்
தாமரையை ஒப்பிடமுடியாது என்றும் குறிப்பிடுகிறார்.

துவரிதழ் பவள வாயும்
சிவந்த திருவதரங்களையும் (உதடுகளையும்), பவளம் போல் இருக்கும் பல்வரிசை உடைய வாயும் என்று சொல்லிவிட்டு,
உதடுகளின் சிவப்பு பிரதிபலிப்பதால் பல்வரிசையும் பவளம் போல் சிவப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்.
ஒருவரிடமும் பேசாமல், ஒரு வஸ்துவினுடனும் ஆதரம் இல்லாமல், மிக உயரிய நிலையில், இருக்கும் பரமாத்மா,
அத்தகைய காம்பீர்யத்தை குலைத்துக்கொண்டு தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்
வார்த்தைகளை கூறுகிறார் என்றபடி இருக்கும் பவள வாய் என்பது இன்னொரு விளக்கம்.
அதேபோல், தங்களுடைய குறைகளை நினைத்து, அவனை அணுகுவதற்கு அஞ்சும் அடியவர்களை பார்த்து
அஞ்சேல் என்று சொல்வது போல் புன்சிரிப்போடு இருக்கும் பவள வாய் என்பது இன்னொரு விளக்கம்.

ஆயசீர் முடியும்
ஆய என்பது, எப்பொழுதும் அழகாகவும், சித்தமாகவும் இருக்கும் என்பதை சொல்கிறது.
ஆயம் என்பது தங்கத்தைக் குறிக்கும் என்பதால் ஆயம் என்பதில் உள்ள கடைசி எழுத்து குறைந்து
ஆய சீர் முடி என்று எடுத்துக்கொண்டால், தங்கத்தாலே செய்தாற்போல் உள்ள திருமுடி என்றும் கொள்ளலாம்.
சீர் என்பது செல்வ சிறப்பை காட்டுகிறது.

தேசும்
தேசும் என்பது தேஜஸ் என்பதின் மருவு. திருமேனி முழுவதும் தேஜஸ் மிளிர்கிறது.
மேலே சொன்ன ஒவ்வொரு அவயத்தில் இருந்தும் தேஜஸ் ஜொலிக்கிறது.
திருநன்மார்பு, மரகத உரு, தோள், தூய தாமரை கண்கள், துவர் இதழ், பவளவாய், ஆயசீர்முடி என்று
ஒவ்வொரு அவயங்களையும் சொல்லிய, ஆழ்வார் இந்த ஒரு வார்த்தையினால்,
எம்பெருமானின் திருமேனியின் முழு உருவத்தின் அழகையும் உணர்த்துகிறார்.
மரகத உரு என்பது, அவயவ விளக்கமே தவிர அது முழு வடிவம் ஆகாது,
ஏன் எனில், எம்பெருமானின் திருமேனியில், எல்லா அவயங்களும் மரகத பச்சை நிறமாக இருப்பது இல்லை.

ஒவ்வொரு அவயவமாக சொல்வது சௌந்தர்யம் என்றும் முழுவதுமாக சொல்வது லாவண்யம் என்று சொல்வதுண்டு.
திவ்யதேசங்களில் சௌந்தர்யத்திற்கு நாகை சௌந்தர்ராஜ பெருமாளும்,
லாவண்யத்திற்கு திருக்குறுங்குடி நம்பியும் சொல்வது இங்கே குறிப்பிடலாம்.

அடியரோர்க்கு அகலலாமே
பெரிய பெருமாளின் இத்தகைய வடிவழகின் பெருமையை கண்டால், ஸ்வரூப ஞானம் உள்ள எங்களால் அகல முடியாது,
அதை அனுபவிக்க தெரியாத, நான், என்னது என்று அகங்காரம் மற்றும் மமகாராம் உள்ளவர்களால் மட்டுமே
அகல முடியும் என்று ஆழ்வார் கேட்டுக் கொண்டு அதற்கு சம்சாரிகள் சம்மதம் தெரிவிப்பது போல்,
‘ஆமே‘ என்று இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

——-

அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வாரிடம் அவரது நெஞ்சம்,
அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்று சொன்னதும்,
“கரும்பினைக் கண்டுகொண்டு” (17) என்றும்,
“அரவணைத் துயிலுமா கண்டு” (19) என்றும் சொன்ன ஆழ்வாருக்கு, அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான்
“என்செய்கேன்!(18)
என் செய்கேன்!!(19)” என்று ஆழ்வார் தவிக்கிறார் என்றும்,
ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும்,
சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அப் பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது,
இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று இந்த பாசுரத்தில் சொல்கிறார்.

பணிவினால் மனம் அது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்கு,
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்,
அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில்,
மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே (திருமாலை 21)

வெகு காலமாக பகவான் பற்றிய ஞானத்தை இழந்து, துணிவுடன் வாழ மாட்டாத நெஞ்சே,
பவளம் போன்ற திரு அதரங்களை உடைய திருஅரங்கன் விஷயத்தில், பணிவாக இருந்து, மனதை அந்த விஷயத்தில் பொருத்தி,
முழுமையான அழகுடன், சிவந்த பொன்னால் செய்யப்பட்ட, சிறந்த மேரு மலையை போன்ற, கோயிலிலே,
நீல ரத்னம் போன்ற எம்பெருமான், கண் வளர்ந்து அருளுகிற அழகை நெஞ்சினால் நினைக்க முடியுமோ என்று
நீயே சொல் என்று தன நெஞ்சத்தைப் பார்த்து கேட்கிறார்.
இங்கு துணிவு என்று சொல்லப்படுவது எம்பெருமானிடத்தில் “மஹா விஸ்வாசம் “ கொள்ளுதல் ஆகும்.

பணிவினால் மனம் அது ஒன்றி
பெரிய பெருமாளைப் பணிவோம் என்று உறுதி பூண்டு, மற்ற விஷயங்களில் இருந்து விலகி,
இவ் விஷயத்தில் ஊன்றி ஈடுபடுவது என்ற கருத்து.
இந்த உறுதியின் தொடக்கமே இங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது.
மனம் ஒன்றி என்று சொல்லாமல், மனம் அது ஒன்றி என்று சொல்வது, மனதைச் சொல்லாமல்,
மனதின் செயல்பாடான சிந்தனையைச் சொல்வது.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் (4.3.1) “பூசும் சாந்து என் நெஞ்சமே” என்று சொல்லும் போதும்,
நெஞ்சத்தின் செயல்பாடான சிந்தனையை சொல்வதே ஆகும்.

திருவாய்மொழி (2.10.9) “தொழ கருதுவதே துணிவது சூதே” என்ற பாசுரத்திலும் சொல்லும் விஷயம் அதுவே.
திருமாலிருஞ்சோலையை அடைந்து தொழ வேண்டும் என்ற சிந்தனையை எப்போதும் மனதில் நிறுத்துவதே
இந்த உலக வாழ்க்கையை வெல்வதற்கு வழி என்று நம்மாழ்வார் சொல்வதை நினைவில் கொள்வோம்.

எம்பெருமானை தவிர, மற்றவர்களிடம், முழுவதுமாக பணிந்து இருந்தாலும்
அவர்கள் மனம் இரங்குவார்களா என்பது நிச்சயம் இல்லை.
மனம் இரங்கினாலும் அதனால் நல்ல பலன் கிடைக்குமா என்று தெரியாது.
ஆனால் எம்பெருமானிடம் பிறக்கும் கருணையும் இரக்கமும் சொல்லி அளவிட முடியாது.

இராமாயணத்தில், இராவணன் தான் இரண்டாக பிளக்கப்பட்டாலும் இராமனிடம் பணிய மாட்டேன் என்று
சத்தியம் செய்து உள்ளதாக சொன்னான்; (இராமாயணம், யுத்தகாண்டம் 36.11).
அப்படிப்பட்ட இராவணன் தன் சத்தியத்தை மாற்றிக் கொள்வதாக சொன்னால் போதும்,
அவதாரம் முதலிய பெரிய பெரிய காரியங்களையும் செய்யவல்ல எம்பெருமானுக்கு, அவனிடம் இரக்கம் பிறக்கும்.
ஆக, சர்வேஸ்வரனிடம் நம் ஈடுபாட்டை காண்பித்தாலே போதுமானது, முழுதும் பணிவது என்பது தேவையில்லாது என்பது ஒரு கருத்து.

நாம் பணிவது என்பது பலன் தராது; சர்வேஸ்வரனின் இரக்கமே பலன் தர வல்லது என்பது மற்றொரு கருத்து.
எப்படி ஒருவன் மற்றொருவனை அடிக்க கையை தூக்கியதே , அவன் ஆயுள் முழுவதும் அடிபட்டது போல்
அவமானப்பட்டதற்கு காரணம் ஆகிறதோ அதே போல், இங்கும் எம்பெருமானிடம் பணியவேண்டும் என்பதற்கு
தொடக்கமான நினைவும், அஞ்சலி செய்ய தொடங்குவதுமே சர்வேஸ்வரனிடம் இரக்கம் பிறக்க செய்து
பலன் கிடைக்க வழிசெய்கிறது.

இதையே ஆளவந்தார் என்ற ஆச்சாரியர் ஸ்தோத்திர ரத்னம்(28) சுலோகத்தில் சொல்கிறார்.
எவனொருவன், எப்போதாவது, எம்மாதிரியாவது சர்வேஸ்வரனுடைய திருவடியை எண்ணி, ஒரு அஞ்சலி செய்கிறானோ,
அது பாவங்களை குறைத்து, நன்மையை அதிகரிக்கச்செய்து, ஒரு சமயத்திலும் குறையாமல் அவனை காப்பாற்றுகிறது
என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது.

ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?”
என்று அருளிச் செய்கிறார்..

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||–ஸ்தோத்திர ரத்னம்–ஶ்லோகம் 28 –

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

அடுத்தது, மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் (46.163) கிருஷ்ணன் சொல்வது.
ஒருவன் எம்பெருமானுக்கு சரியாக செய்யும் அஞ்சலியானது, பத்து அஸ்வமேத யாகத்திற்கு மேலானது என்றும்,
சமம் என்றும் சொல்லமுடியாது என்றும் கூறுகிறார். ஏனென்றால்,
அஸ்வமேத யாகம் செய்தவன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான்;
ஆனால் கிருஷ்ணனை வணங்கியவனோ பிறவா வரம் பெற்று பரமபதம் அடைகிறான்.

கருட புராணத்தில் (11.26), அஞ்சலி செய்வது எம்பெருமானை மிக சீக்கிரம் சந்தோஷப்பட செய்வது என்று சொல்கிறது.

பவள வாய் அரங்கனார்க்கு
இப்படி ஈடுபாட்டின் தொடக்கத்தை உடைய ஒருவன் கிடைத்து விட்டால், அவன் இத்தனை காலமாக இழந்த இழப்பை
நினைத்து வருந்தாமல் இருக்க ஆறுதல் கூறும்,
பவளத் திருவாய் உடையவர், திருவரங்கன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
ஈடுபாடு ஏற்பட்டு, அவன் நம்மை நினைக்கும் போது ரொம்ப தொலைவில் இருக்க கூடாது என்று
திருவரங்கத்தில், அருகிலேயே இருப்பவர்.

துணிவினால் வாழ மாட்டா
முன்பு சொன்ன பணிவும், இப்போது சொல்லப்படும் துணிவும் கூட ஜீவாத்மாவால் ஆரம்பிக்க பட்டது இல்லை,
அரங்கனின் அழகே பணிவையும், துணிவையும் உண்டாக்கி,
அனுபவம் என்ற உன்னத வாழ்க்கையும் அடையச் செய்கிறது என்பது அர்த்தம்.

துணிவு இல்லாததால் அனுபவத்திற்கு முயற்சி செய்தது இல்லை;
அதற்கான துணிவுதனை இப்போது வேண்டுவது ஆழ்வாரின் வார்த்தைகள்.
மஹாபாரதம் சாந்தி பர்வத்தில், (334.47),
கிருஷ்ணர், மனதில் நிச்சயம் இல்லாதவன் பரமாத்மாவை அடைய மாட்டான் என்று கூறுகிறார்.
ஜனகன், பரமபதம் அடைவதற்கான வழிக்கு துணிவு ஒன்றே பழுதுபடாத சாதனம் என்பதில்,
தன்னுடைய ஆச்சார்யரான வேத வ்யாஸரை விட, தெளிவாக இருந்தான்.

இப்படி எல்லா இடத்திலும் துணிவு என்று சொல்லப்படுவது எம்பெருமானிடத்தில் “மஹா விஸ்வாசம் “ கொள்ளுதலே ஆகும்.

தொல்லை நெஞ்சே
இந்த துணிவு இல்லாததால் இத்தனை காலமாக எம்பெருமானின் அனுபவத்தை இழந்து விட்டதாக
தன் நெஞ்சத்திடம் தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார்.

நீ சொல்லாய்
இப்படி அனுபவிக்காமல், இத்தனை காலம் அறிவுகெட்டு கிடந்த நெஞ்சைப்பார்த்து,
இந்த அனுபவத்தை அளவிடமுடியும் என்று நெஞ்சு சொல்வதும் அறிவு இல்லாத கூற்றே என்று ஆழ்வார் சொல்கிறார்.

அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில்
அழகு மிகுந்து இருப்பதும், செம் பொன்னில் செய்யப்பட்டதும் மேரு மலையை ஒத்து இருப்பதாகவும் உள்ள
திருவரங்கம் பெரிய கோவில், இந்த பூமண்டலத்திற்கு ஆபரணம் போல் விளங்குவதால் ‘அணியினார் ‘ என்பது மிக பொருத்தம்.
அதேபோல், மலை போல் நிலையாய் உலகுக்கு எல்லாம் ஆதாரமாய் இருப்பதால்,
திருவரங்கம் பெரிய கோவிலை ‘அருவரை அனைய ‘ என்று சொல்வதும் பொருத்தமே.

மணியனார் கிடந்தவாற்றை
அப்படி மேரு மலையை ஒத்து இருக்கும் மலையின் நடுவில் ஒரு உயர்ந்த நீல ரத்தினத்தை வைத்து
அழுத்தியத்தைப் போல் பெரியபெருமாள், ஸ்ரீரங்கவிமானத்தின் நடுவே பள்ளிகொண்டு இருப்பது என்கிறார் ஆழ்வார்.

மனத்தினால் நினைக்கலாமே
இப்படி கண் வளர்ந்து அருளுகின்ற பெரிய பெருமாளின் அழகை அளவிட்டு அனுபவிக்க முடியுமோ என்று
தன் நெஞ்சிடம் ஆழ்வார் கேட்கிறார்.
அவருடைய கல்யாண குண நலன்களையும், திருவிளையாடல்களையும் அளவிட்டு விடலாம்,
ஆனால், திருமேனியின் அழகை அளவிட்டுவிட முடியாது என்று ஆழ்வார் சொல்கிறார்.
மனதின் செயல்பாடு, நினைப்பது; வேறு ஒரு அவயம் எப்படி நினைக்க முடியாதோ
அதேபோல், மனத்தினாலும் திருமேனியின் அழகை அளவிட்டுவிட முடியாது என்பது கருத்து.

———-

சென்ற பாசுரத்தில், “மனத்தினால் நினைக்கலாமே ?” என்றதற்கு அளவிட்டு நினைக்க முடியாது என்று
சொன்ன ஆழ்வாருக்கு, வாய்விட்டு பேசினால் என்ன என்ற சிலர் சொல்ல,
மனதினால் முழுமையாக உட்கொள்ள முடியாத விஷயத்தை எப்படி பேசி தீர்ப்பது என்று ஆழ்வார் கேட்கும் பாடல்.

தைத்ரீய ஸ்ம்ஹிதை 7.5.3 ன் படி, முதலில் மனது, பிறகுதான் பேச்சு என்பது வரிசை.
அதாவது மனது நினைப்பதைத் தான் வாய் பேச முடியும்.
மனத்தால் அளவிடமுடியாததை, வாய் பேசி முடித்து விட முடியாது என்பது கருத்து–

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரலாகாது,
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலாவானும் அல்லன்,
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பதல்லால்,
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய் (திருமாலை 22)

ஆழ்வார் தன் மனத்திடம்,
“அறிவில்லாத மனமே, வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களை நாம் பேசமுடியுமே தவிர,
குற்றமற்ற பெரியவர்களின் நெஞ்சில் வாழும் எம்பெருமானின் பெருமைகளை நாம் அறிய முடியாது,
அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அவன் அறியமுடியாதவனாக இருப்பவன்.
அப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குவதை தவிர, அவனின் பெருமைகளை பாசுரம் எழுதி பேச முடியுமா” என்று கேட்கிறார்.

பேசிற்றே பேசல் அல்லால்
மனத்தால் நினைக்க முடியாவிட்டால், மற்ற விஷயங்களை வாய் பேசுவது போல்,
பகவத் விஷயத்தையும் வாயால் பேசலாமே என்றதற்கு, மற்ற விஷயங்கள் அளவிற்கு உட்பட்டவை,
அதனால் வாய் பேசமுடியும், ஆனால் இதுவோ, அளவிடமுடியாதது, அதனால் வாய் பேசி முடிக்க முடியாது என்று ஆழ்வார் சொல்கிறார்.

விஷ்ணு தர்மத்தில் சொன்னபடி,
எது விஷ்ணுவை பற்றி பேசுகிறதோ அது நாக்கு, எது விஷ்ணுவை நினைக்கிறதோ அது நெஞ்சு என்பது போல்,
பகவத் விஷயங்களை மட்டும் பேசி மற்ற விஷயங்களைப் பேசாமல் இருந்து விடவேண்டியது தானோ என்று
ஆழ்வாரிடம் சொன்னதற்கு, ஆழ்வார், முன்பு வேதங்களுக்கும், அவற்றை சாட்சியாக கொண்டவர்களும்
பேசிய பரமாத்மாவின் பெருமைகளையும் விஷயங்களையும் பேச முடியுமே தவிர,
வேறு ஒன்றும் நாம் பேசமுடியாது என்கிறார்.

மணவாள மாமுனிகள், இதனை
“முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு, பின்னோர்ந்து தாம் அதனை பேசாமல்
தம் நெஞ்சில் தோன்றினதே” பேசுபவர் மூர்க்கர் என்று உபதேச ரத்னமாலை (71) என்ற நூலில் கூறுகிறார்.

வேதங்களுக்கும், அவற்றை சாட்சியாக கொண்டவர்களும் பேசிய விஷயங்களுக்கு சில உதாரணங்கள் :

நாராயணவல்லி –
அந்த இதயக்கமலத்தின் நடுவில், சிறியதும், மேல்நோக்கி இருப்பதும் பரமாத்மாவின்
திவ்ய மங்கள விக்ரகம், அது நீல மேகம் கொண்ட மின்னல் போல் பிரகாசமாக காட்சி அளிக்கிறது

நீலமுண்ட மின்னன்ன மேனி (திருவிருத்தம், 29) –
மின்னல் கொடியை நடுவில் கொண்ட நீல மேகம் போன்ற
திருமேனி என்ற பொருளில், வருகிறது. மின்னல் என்பது திருமார்பில் உள்ள நாச்சியாரையும்,
எம்பெருமானின் மேனி என்று இரண்டினையும் குறிக்கும்.

மஹாபாரதம், சாந்தி பர்வத்தில் (46.118) சொல்வது,
அடியவர்களை நழுவ விடாதவனும், காயாம்பூவை போன்றவனும், பீதாம்பரத்தை உடையவனுமான
கோவிந்தனை நமஸ்கரிப்பவர்களுக்கு எங்கும் பயமில்லை.

சூரியனுக்கு நடுவில், தங்கம் போன்று அழகிய உருவுடன் உள்ள இந்த பரமபுருஷன்,
தங்கம் போன்ற மீசையும், கேசத்தையும், நகம் முதலான எல்லா அவயங்களுடன் சூரியனால் மலரும்
தாமரையைப்போல் இரண்டு கண்களும் உடையவன் என்று சாந்தோக்கிய உபநிஷத்தில் (1.6.6) (Chandogya Upanishad) சொல்லப்படுவது,

மநு ஸ்ம்ருதி (12.122) சொல்வது, எல்லாவற்றையும் நியமிப்பவனான பரமாத்மாவை,
உருக்கிய தங்கம் போல் ஒளி விடுபவனான அந்த பரமபுருஷனை, ஆச்சரியமான கனவில் வரும் ஞானத்தால்
அறியப்படவேண்டும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது சாதாரண ஞானத்தால் அவனை அறியமுடியாது என்பதே இதன் பொருள்.

திருவாய்மொழி 3.1.2 சொல்வது,
“சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது”, அதாவது, நெருப்பில் இட்டு சுட்டு,
உரைக்கல்லில் பட்டை தீட்டப்பட்ட நல்ல உயர்ந்த பொன்னானது எம்பெருமானின் திவ்யமங்கள விக்கிரகத்தின் ஒளிக்கு ஒப்பு ஆகாது.

நீலமேக ஸ்யாமளனான எம்பெருமானை எதற்கு பொன்னுடன் ஒப்பிடுவது என்று கேட்டால்,
“பொன்னிவர்மேனி மரகதத்தின் ” (பெரிய திருமொழி 9.2.1) என்றும்,
“கணபுரத்து பொன்மலை போல் நின்றவன்” (பெரிய திருமடல் 91), என்றும் சொன்னது போல்
இங்கும் பொன்னிறமாகவே விளங்குகிறது.

மேலும், “ருக்மாபம் ” என்றும் “
ஹிரண்மய புருஷோத்ருச்யதே” என்றும் கூறப்படுவதால்
பொன்மயமான தாயாரின் ஒளி சேர்க்கையால் எம்பெருமானும் அவ்வாறே தோன்றுகிறான் என்று சொல்வதும் உண்டு.

கண் முதலிய உறுப்புகளுக்கு புலப்படாதவற்றை விளக்க, இந்த உலகத்தில் உள்ள, கண்களுக்கு தெரியக்கூடிய
சில உதாரணங்களை கொண்டு வெளிப்படுத்து உலக வழக்கம்.
அதனால், விவரிக்கமுடியாத உயர்ந்த பகவத் விஷயமான திரு உருவத்திற்கு, தாழ்வான சிலவற்றை உதாரணமாக கூறியதால்.
எம்பெருமானை பற்றி முழுவதும் தெரிவித்து விட்டோம் என்று சொல்ல முடியாது.

தைத்ரிய உபநிஷத் – ஆனந்தவல்லி 9.1 –
எவன் ஒருவனின் மனம், ப்ரம்மத்திடம் சென்று அதனை வாக்கினால் (வார்த்தைகளால்) அளவிடமுடியாது என்று திரும்புகிறதோ,
அவன் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் என்றும் அவன் எதற்கும் பயப்படமாட்டான் என்றும் கூறுகிறது.
இதனால் பிரம்மத்தை அறிந்தவன், அதனை பேசி முடிக்க முடியாத விஷயம் என்று கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுவாக வாக்கினால் சொல்ல முடையாததை கூட மனம் உணரமுடியும்.
ஆனால் இங்கே மனதினால் கூட அளவிடமுடியாது என்று திரும்புவதை கவனிக்க வேண்டும்.

இராமாயணத்தில், வாலியின் மனைவி தாரை, இராமனை நேரே பார்த்த பின்பும்,
மனதிற்கு அப்பாற்பட்டவன் என்று சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.
த்வமப்ரமேயஷ்ச துராஸதஷ்ச, ஜிதேந்த்ரியஷ்சோத்தமதார்மிகஷ்ச. அக்ஷய்யகீர்திஷ்ச விசக்ஷணஷ்ச,
க்ஷிதிக்ஷமாவாந்க்ஷதஜோபமாக்ஷஃ (4.24.31) –
“நீங்கள், அளவிடமுடியாதவர், கட்டுப்படுத்த முடியாதவர், சுய கட்டுப்பாடு உடையவர், நீதிமான்களில் சிறந்தவர்,
உங்கள் புகழ் ஒரு நாளும் குறையாது”, என்று சொல்லிக் கொண்டே போகிறாள்.
இதில் நீங்கள்’ என்று சொன்னதால், நேரில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம்.
அளவிட முடியாதவர் என்பதால், மனதினால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கொள்ள வேண்டும்.

பெருமை ஒன்று உணரலாகாது
பிரம்மத்தை அறிந்தவன், அதனை பேச முடியாத விஷயம் என்று சொல்வதை ஏன் ஏற்க வேண்டும் என்றால்,
ஒரு உதாரணம் சொல்லும்போது உபமானம் எப்போதும் உபமேயத்தை விட உயர்ந்ததாகவே இருக்கும்.
ஆனால் எம்பெருமானுக்கு உபமானமாக எதைச் சொன்னாலும் அவை தாழ்ந்தவையாகவே இருக்கின்றன.
இங்கு எம்பெருமானுடைய ஸ்வரூபம், குணம், செல்வம், திவ்யமங்கள விக்கிரகம் என்று எதையும் அளவிடமுடியாது
என்று தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது மேலே சொன்ன ஸ்வரூபம் முதலிய
எந்த ஒன்றினுடைய பெருமையையும் முழுவதாக சொல்ல முடியாது என்பதையே “ஒன்று” குறிப்பிடுகிறது.

ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலாவானும் அல்லன்
அப்படி என்றால் யாராலும் அறிந்துகொள்ளவே முடியாததா என்று கேட்டு அதற்கு ஆழ்வார் சொல்வது,
மற்ற உபாயங்களை விட்டு, எம்பெருமானையே உபாயமாக கொண்டவர்களால் மட்டுமே அறியப்படுபவன்,
மற்றவர்களால் அறியமுடியாது என்பதே ஆகும்.
இதையே கீதையில் (7.3), கிருஷ்ணன்,
“பல்லாயிரமானவர்களில் ஒருவரே என்னை உள்ளபடி புரிந்து கொள்கிறார் என்று சொல்கிறார்.

இந்த வரியில் உள்ள “ஆசு” என்ற சொல்லும்,
அடுத்த வரியில் வரும் “மாசு” என்பதும் குற்றம் என்ற ஒரே அர்த்தத்தை சொன்னாலும்,
ஆழ்வார் இரண்டு விதமான குற்றங்களை சொல்கிறார். மேலே சொன்ன எம்பெருமான் தவிர,
மற்ற உபாயங்களை (கர்ம, பக்தி, ஞானம்), கொண்டு தங்களுடைய முயற்சியால்
அவனை அடைய நினைப்பவர்களின் மனதில் உள்ள அகங்காரத்தை ஆசு என்று குறிப்பிடுகிறார்.
அப்படி அவனை அடைந்தபின், அவனிடம் அவனை கேட்காமல் மற்றவற்றை கேட்பதை மற்றொரு குற்றமான மாசு என்கிறார்.

மாசு அற்றார்
மூன்று வகையான (எல்லா) ஜீவாத்மாக்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்போம்.

இந்த உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை வேண்டும் ஜீவாத்மாக்கள்
பரமனையே வேண்டும் பகவன்லாபார்த்திகள்
இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை வேண்டும் கைவல்யார்த்திகள்
இதில் நாம் அடையவேண்டியது பரமனையே;
ஐஸ்வர்யமும் கைவல்யமும் நாம் அடையவேண்டியவே என்று ஜீவாத்மா நினைத்தால் அது மனதின் இன்னொரு குற்றம் ஆகும்.
இதே ஆழ்வார் மாசு என்று இந்த பாசுரத்தில் கூறுகிறார்.
அவனை உபாயமாக கொண்டு, அவனிடம் கைவல்யம், மற்றும் ஐஸ்வரியம் வேண்டாம் என்று நிராகரித்து,
அவனையே வேண்டுபவர்களை ஆழ்வார் மாசு அற்றார் என்று இங்கு கூறுகிறார்.

மனத்து உள்ளானை
இப்படி உபாயங்களையும், மற்ற அடையத்தக்கவைகளையும் விலக்கி, இந்த சம்சார வாழ்க்கையை விட்டு,
பரமபதத்தில் எப்பொழுதும் எம்பெருமானையே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு,
எல்லா பொறுப்புகளையும் அவனிடத்தில் விட்டு, அதாவது மாசு அற்றவர் ஆகவும், ஆசு அற்றவர் ஆகவும் உள்ள
அடியவர்களின் இதய கமலத்தில், என்றும் வாழ்பவன் என்பதை மனத்து உள்ளானை என்று ஆழ்வார் கூறுகிறார்.
எப்படி காட்டு தீயை எந்த ஜீவராசியும் தாங்கிக் கொள்ள முடியாதோ, எப்படி மீன் முதலிய ஜீவராசிகள்
தண்ணீரை விட்டு வெளிய வந்தால் தாங்கிக்கொள்ள முடியாதோ அது போல் எம்பெருமானாலும்
மாசு, ஆசு உள்ள நெஞ்சகளில் இருப்பது என்பது தரிக்க முடியாதது என்றும் ஆழ்வார் கூறுவது போல் ஆயிற்று.

ஆசு, மாசு அற்றவர்களை கண்டுகொண்டு அவர்களின் நெஞ்சத்தில் நித்யவாஸம் செய்ய வேண்டியே,
எம்பெருமான் திவ்யதேசங்களில் கண்வளர்ந்து அருளுகிறார்.

ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒரு சிறப்பு இருப்பது என்பதும்
திருமழிசைஆழ்வார் எம்பெருமானின் ஐந்து நிலைகளில் ஒன்றான, அந்தர்யாமியில் மிகவும் ஆழ்ந்து இருப்பார்
அவருடைய திருச்சந்தவிருத்த பாடல்கள் 64 மற்றும் 65, உரையாசிரியரின் உரையில்
மனத்து உள்ளானை என்பதற்கு இடம் பெற்று உள்ளன.

வணங்கி நாம் இருப்பதல்லால்
அவன் அடியார்களின் நெஞ்சத்தைவிட்டு அகலாதவனான பின், நாம் செய்ய வேண்டியது
அவனை அனுபவிப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார்.
இங்கு வணங்கி என்று சொல்வது, மனம், உடல், மொழி ஆகிய முக்கரணங்களாலும், எல்லா காலங்களிலும்,
எல்லா தேசங்களிலும், எல்லாவிதமான பகவத் அனுபவங்களையும் உள்ளடக்கியது.

பேசத்தான் ஆவது உண்டோ
அவனுடைய பெருமைகளை நினைத்து பார்க்கையில், அவற்றை பாசுரமிட்டு பேச முடியுமோ என்று கேட்டுக் கொண்டு,
முடியாது என்று அர்த்தத்தில் ஆழ்வார் முடிக்கிறார்.

பேதை நெஞ்சே நீ சொல்லாய்
பல காலங்களாக தாழ்ந்த விஷயங்களையே பேசி வந்த நெஞ்சே, இவ்வளவு பெருமைகள் பெற்ற விஷயத்தை
பேசி விடலாம் என்று உன்னுடைய அறிவின்மையாலே நினைக்கிறாயோ,
அளவிட்டு விடலாம் என்று பேச ஆசைப்படும் நீ சொல்வாயாக என்று ஆழ்வார்
தன் நெஞ்சத்திடம் கேட்பதுடன் இந்த பாசுரம் நிறைவடைகிறது.

—————-

நினைக்கவும் பேசவும் முடியாதென்றால், மறந்து போவது தானே என்று
ஆழ்வாரிடம் மற்றவர்கள் சொன்ன போது,
அரங்கனின் சயனத் திருக் கோலத்தை திருஅரங்கத்தில் கண்டு ரசித்த பின்
அதனை மறந்து எப்படி வாழ்வேன் என்று சொல்வது கங்கையில் புனிதமாய – என்று சொல்லும் பாசுரம்.

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே. (திருமாலை 23)

கங்கையில் புனிதமாய காவிரி
அழகாலும், நீரின் இனிமையாலும் கங்கையை காட்டிலும் சிறந்த காவிரி,
பிறரை புனிதப்படுத்துவதிலும் கங்கையை விடச் சிறப்பான காவிரி ஆறு என்று
இந்த பாசுரத்தை ஆழ்வார் தொடங்குகிறார்.

ஸ்ரீரங்க மஹாத்மியம் என்ற நூலில்,
ப்ரஹ்மாவிடம் கடும் தவம் புரிந்து கங்கையுடன் சமம் என்ற நிலையை அடைந்தபின்,
காவிரி, ஸ்ரீரங்கவிமானம் திருவரங்கத்தில் நிறுவப்பட்ட பின்,
கங்கையை விட உயர்ந்தவள் என்ற பெருமையை அடைந்ததாகக் கூறுகிறது.

ஈஸ்வர சம்ஹிதை என்ற நூலில்,
விஷ்ணுவிடம் இருந்த பக்தியினால், தர்மம், தண்ணீராக மாறியது என்றும்,
அப்படிப்பட்ட தண்ணீரை, சிறந்த பக்தியுடன் விஷ்ணுவின் திருவடிகளை, அவர் திருவிக்ரமனாக உலகு அளந்த போது,
தான் சுத்தம் செய்து மரியாதை செய்ததாகவும் பிரம்மன் கூறுகிறார்.
அந்த தண்ணீரைத் , தான், பரிசுத்தப்படுத்தபடத் தயாராக உள்ளதாகக் கூறி, சிவபெருமான் தன்னுடைய தலையினால்
தாங்கிக் கொண்டு பிறகு சிறிது சிறிதாக பூமிக்கு விடுகிறார். அதுவே கங்கை என்று ஆனது.

அதனால் கங்கைக்கு சிவன் (ருத்ர) சம்பந்தம் கொண்டது என்ற ஒரு குற்றமும் உண்டு.
ருத்ர சம்பந்தம் கொண்டதால், அவனுடைய மாலை மற்றும் பிரசாதங்களை, ‘நிர்மால்யம்’ என்று
அவனுடைய பக்தர்களும் தொடத்தக்கதாக கொள்ளவில்லை.
ருத்ர சம்பந்தம் என்பது, ரஜோ தமோ குணங்களுடன் தொடர்பு உள்ளது.

திருவெழு கூற்றிருக்கை என்ற பிரபந்தத்தில் திருமங்கைஆழ்வார்,
“முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன் அறிவு அருந் தன்மைப் பெருமையுள் நின்றனை” என்று
கூறியபடி, கங்கைக்கு சிவனின் சடையின், சிடுக்கு நாற்றமும், மயிர் தொடர்பும் உள்ளது.
இருந்தாலும், இப்படிபட்ட கங்கைக்கு, விஷ்ணுவின் ஸ்ரீபாத சம்பந்தம் ஒரே ஒரு முறை ஏற்பட்டு இருந்ததால்,
கங்கைக்கு புனித தன்மையே இறுதியில் இருக்கும்.

இதே போல், பொய்கை ஆழ்வாரும், முதல் திருவந்தாதியில்(97),
“உன்றன் அடிசேர்ந்து அருள் பெற்றாள் அன்றே, பொடிசேர் அனற்கு அம் கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,
புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்” சொல்லியது,
சிவபெருமானின் சடைமேல் பாய்ந்த நீரை புனிதமாக அருள் செய்தது விஷ்ணுவின் திருவடி சேர்ந்ததாலே என்று கூறுவது.

இதையே பராசர பட்டர் எனும் ஆச்சார்யர், ரங்கராஜஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தில் (22),
ஒரு க்ஷண ஸ்ரீ பாத சம்பந்தத்தால் பெருமை வாய்ந்தது என்று அஹங்கரித்து இருக்கும் கங்கை என்கிறார்.
திருவரங்கன் புறப்பாடு முன் திருவரங்கத் தெருக்களைச் சுத்தம் செய்வது, திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் தருவது,
எப்போதும் பெரியபெருமாளின் திருவடிகளைத் தடவிக் கொடுத்து சேவை செய்வது போன்ற செய்கைகளால்
கங்கையை விடச் சிறந்தவள் அன்றோ காவிரி என்று கூறுகிறார்.

தீர்த்தம் என்று பெயர் பெற்ற எல்லா புண்ணிய நதிகளும், ஐப்பசி மாதத்தில் காவிரிக்கு வந்து,
பாவிகளான மக்களைத் தீண்டியதால் ஏற்பட்ட பாவங்களை போக்கி கொள்வதாக
துலா காவிரி மஹாத்மியத்தில் காவிரியின் பெருமை கூறப்பட்டு உள்ளது.

ஆக கங்கைக்கு ருத்ர சம்பந்தம் என்ற குறை உண்டு. மேலும் விஷ்ணுவின் சம்பந்தம் ஒரே ஒரு முறை மட்டுமே.
ஆனால், காவிரிக்குக் குறை எதுவும் இல்லை, மேலும் அப்படிப்பட்ட திருவடிகளைக் கொண்ட திருவரங்கன்
இந்த காவிரி கரையில் இருக்க வேண்டும் என்று இங்கு வந்து இருப்பதால்,
திருவரங்கனின் திருவடித் தொடர்பு காவிரிக்கு எப்போதும் உண்டு.
அதனால் தொண்டரடிப்பொடியாழ்வார் கங்கையில் புனிதமாய காவிரி என்று பாடி உள்ளார்.

நடுவு பாட்டு
வட திருக்காவிரி மற்றும் தென் திருக்காவிரி இரண்டுக்கும் நடுவே திருவரங்கம் இருப்பதை இப்படி ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
கண்ணன் எம்பெருமான் யசோதை பிராட்டியின் மடியினில் சாய்ந்து இருப்பது போல்,
காவிரியின் நடுவில் பள்ளிகொண்டு திருவரங்கன் அருள்கிறான் என்கிறார்.

தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற நான்கும் புருஷார்த்தம் என்று கூறப்படும்.
இவைகளில் தர்மம், மற்றும் மோக்ஷம் என்பவை நிரந்தரமானவை என்றும்,
காமம் மற்றும் அர்த்தம், தற்காலிகமானவை என்றும் சொல்வதுண்டு.
தர்மம், மற்றும் மோக்ஷம் என்பவை எப்பொழுதும் பரமாத்மாவிற்கு நெருங்கியவை.

திருவரங்கத்தில் வடக்கு பக்கம் கொள்ளிடம் என்ற வட திருக்காவிரி மற்றும் காவேரி என்ற தென் திருக்காவிரியும் ஓடுகின்றன.
ஆக, திருஅரங்கம் நான்கு காவிரிக் கரைகளை கொண்டது.
பெரிய பெருமாளுக்கு அருகில் உள்ள காவிரி கரைகள் மோக்ஷமாகவும், தர்மமாகவும் உள்ளன என்று சொல்வதுண்டு.
திரு அரங்கத்திற்கு வெளிப் பக்கம் உள்ள மற்ற இரண்டு காவிரிக் கரைகள், அர்த்தம் மற்றும் காமம் என்றும் சொல்லப்படும்.

வட திருக்காவிரியின் வடக்கு பக்கக் கரையை “காமம்” என்றும், தெற்கு பக்கக் கரையை ‘தர்மம்’ என்றும்,
தென் திருக்காவிரியின் வடக்கு பக்கக் கரையை ‘மோக்ஷம்’ என்றும்,
தெற்குக் பக்க கரையை ‘அர்த்தம்’ என்று சொல்லப் படுகின்றன.

பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில்
காவிரி ஒரு அமைதியான நதியை போல் இல்லாமல், இருகரைகளையும் அடித்துக் கொண்டு செல்கிறது.
அதிகமான நீர் வருவதாலும், பெரிய பெருமாளை காண வருகிறோம் என்ற மகிழ்ச்சியினாலும்
அலைகளை எறிந்து கொண்டு கலங்கி கொண்டு வருகிறது என்று பராசரபட்டர் ரங்கராஜஸ்த்வத்தில் (22) குறிப்பிடுகிறார்.
காவிரிக்கு, பெரியபெருமாள், மாப்பிளை ஆனபடியால், திருவரங்கம் வருவதற்கு முன்பு, ஒருவித கவலையோடு வருமாம்,
திருவரங்கத்தைக் கடந்தபின், இனிமேல் பார்க்க முடியாதே என்ற ஏக்கத்துடன் விலகுமாம்,
அதனால் எப்போதும் அது கலக்கத்துடன் உள்ளது என்று குறிப்பிடுகிறார்.
காவிரியின் நீர் பெருக்கால், திருவரங்கத்துச் சோலைகள் எப்போதும் பூத்து குலுங்கிக் கொண்டு
என்றும் வசந்த காலமாகவே இருக்கும்.
அதனால் எல்லோருக்கும் களைப்பினை போக்கும் தேசமாக திருவரங்கம் உள்ளது என்கிறார்.

கங்கையில் புனிதமாய என்பதால், புனிதம் மற்றும் தூய்மையும்,
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் என்பதால், இனிமையும் காவிரிக்குச் சொல்லப் படுகின்றன.

எங்கள் மால் இறைவன் ஈசன்
மால், இறைவன், ஈசன் என்ற மூன்று சொற்களுமே அரங்கனையே குறிக்கின்றன.
மால் என்பதற்கு பித்துபிடித்து என்று ஒரு அர்த்தம் உண்டு.

மால் என்றால் அரங்கன் அடியார்கள் மேல் பித்து பிடித்து இருக்கிறான் என்று கொள்ளலாம்.
அடியார்களிடம் அளவுக்கு அதிகமான அன்பு உடையவன் என்றும் கூறலாம்.
பெரிய பெருமாளிடம் தங்களை காக்கும் பொறுப்பை விட்டிருக்கும் மற்ற ஆழ்வார்களையும் இவர் சேர்த்துக் கொண்டதால்,
‘எங்கள்’ மால் என்று அழைக்கிறார்.
மேலே சொன்ன புனிதத் தன்மையாலும், இனிமையினாலும் பெரிய பெருமாள், திருவரங்கத்தில்
எழுந்தருளி உள்ளார் என்பது போல் தோன்றும்,
ஆனால், ஆழ்ந்து பார்த்தால், அடியவர்களிடம் கொண்ட அன்பினால் தான்
இங்கு எழுந்தருளி உள்ளான் என்பது உரையாசிரியரின் விளக்கம்.

இறைவன் என்பதற்கு எல்லாவற்றிற்கும் தலைவன், மற்றும் உரிமை உள்ளவன் என்பது பொருள்.
இறைவனாக இருப்பதால் அடியார்கள் மேல் அன்பு கொண்டு உள்ளான்.

ஈசன் என்பதற்கு தலைமைக்கு தகுந்தபடி ஆளத் திறமை உள்ளவன் அல்லது எல்லாவற்றையும்
நடத்தி செல்பவன் அல்லது நடத்தி செல்ல வல்லவன் என்று பொருள்.

இப்படி இந்த மூன்று பதங்களால் அன்பு உடையவன், நல்வழி காட்டி, நடத்தி செல்ல வல்ல, தலைவன் என்று கூறுகிறார்.
நம் சம்ப்ரதாயம், அன்பு உடையவன் என்பதற்கு வாத்ஸல்யம்(பரிவு) , சௌலப்யம்(எளிமை)
மற்றும் சௌசீல்யம் (நீர்மை) என்ற பதங்களால் சொல்லும்;
நியந்த்ருத்வம் என்பது நல்வழி காட்டி நடத்தி செல்ல வல்லவன் என்பதை சொல்லும்;
ஸ்வாமித்துவம் என்பது தலைமையும் உணர்த்தும்.

அடியவர்கள், உலகில் உள்ள பொருட்களின் மேல், தங்களுடைய சத்வ, ரஜோ, மற்றும் தமோ என்ற
முக்குணங்களால் கவரப்படுவதைத் தடுத்து, அவர்களை எப்போதும் அனுபவிக்கவல்ல பரமபதத்திற்கு
அழைத்துச் செல்ல எண்ணி, அவர்கள்மேல் உள்ள பாசத்தால் தூண்டப்பட்டு, தன் உடைமையை,
தன் இஷ்டத்திற்கு, தனதாக்கி கொள்வதற்காக, இங்கு வந்து காத்து கிடக்கிறான் என்பது உரையாசிரியரின் விளக்கம்.

கிடந்தது ஓர் கிடக்கை
ஆழ்வார் பெரிய பெருமாளின் திவ்ய குணங்களை ஒரு கணம் தள்ளி வைத்து விட்டு, அவன் கிடந்த
திருக் கோலத்தில் தான் அகப்பட்டுக்கொண்டதை சொல்கிறார்.
ஒப்பற்ற என்ற பொருளில், கிடந்த திருக்கோலத்தின் சிறப்பை ஓர் என்று சொல்கிறார்.
நின்ற அல்லது அமர்ந்த திருக்கோலமாக இருந்தால் ஒருவேளை மறந்து இருக்கலாம்,
கிடந்த திருக்கோலத்தை மறக்க முடியாது என்பதை ஓர் என்ற வார்த்தையால் சொல்கிறார்.
மற்றவர்கள் படுத்துக்கொண்டு இருந்தால், அழகின்மையே மிகுந்து இருக்கும்,
ஆனால் பெரியபெருமாள் சயனித்து இருக்கும், அழகு மிகுந்து இருக்கிறது என்று உரையாசிரியர் கூறுகிறார்.

பாயும் நீர் அரங்கம் தன்னில் என்ற பாசுரத்தின் விளக்கத்தில்,
“பள்ளி கொண்டு இருக்கும் இராமபிரானின் அழகை அனுபவிக்கும் சீதா பிராட்டியின் வார்த்தைகளை
யுத்த காண்டத்தில் (38.25) (ச மயா போதிதஹ் ஸ்ரீமான் சுகசுப்தஹ் பரந்தபஹ )
காகாசுரனால் துன்பபடுத்தப்பட்ட போது, சுகமாக கண் வளர்ந்து அருளியவரும், அழகாக இருப்பவரும்,
எதிரிகளைத் தவிக்கச் செய்பவருமான இராமபிரான் எழுப்பப்பட்டார்” என்று சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.

ஆழ்வார்களை பொறுத்தவரையில் எம்பெருமான் நின்ற நிலையாய் இருந்தாலும்,
அமர்ந்த நிலையாய் இருந்தாலும் சயனித்து இருந்தாலும், அவற்றை உயர்வாகவே சொல்வார்கள்.
உதாரணமாக, பெரிய திருமொழியில், (6.9.5)
“நிலையார நின்றான் தன் நீள்கழலே அடை நெஞ்சே”, திருமங்கை ஆழ்வார் எம்பெருமான், திருநறையூரில்,
மிகவும் பொருந்தி, நிலையாக நின்றான், என்று நின்ற நிலையின் பெருமையை கூறுகிறார்.
அதேபோல், திருவாய்மொழியில் (6.5.5), “பிரான் இருந்தமை காட்டினீர்” என்று
திருத் தொலை வில்லி மங்கலத்தில் எம்பெருமான் அமர்ந்த திருக்கோல பெருமையை நம்மாழ்வார் கூறுகிறார்.

இந்த பாசுரத்தில், ஆழ்வார் முதலில் கங்கையில் புனிதமாய காவிரி என்று சொல்லி,
பிறகு கிடந்ததோர் கிடக்கை என்று சொல்கிறார்.
ஆனால் அரங்கனின் திருவடிகளை வருடிச் சொல்வதாலேயே கங்கையை விட புனிதமான நிலையை
காவிரி அடைவதாக மேலே பார்த்தோம்.
ஆக, கிடந்ததோர் கிடக்கையை முதலில் சொல்லிவிட்டு,
பிறகு கங்கையில் புனிதமாய காவிரி என்று சொல்லி இருக்க வேண்டும்.
ஆனால், ஆழ்வார்களுக்கு திவ்ய தம்பதிகளை காட்டிக் கொடுத்த திவ்ய தேசத்தின் மேல்
கொஞ்சம் அதிக ஈடுபாடு ஆனதால், இந்த வரிசையில் சொல்கிறார்.

கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன்
காணாமல் இருந்தால், மறந்து வாழலாம், பெரியபெருமாளின் சயன திருக்கோலத்தைக் கண்டு அனுபவித்தபின்
எப்படி மறந்து வாழ்வேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
சுவாமி நம்மாழ்வாரின் “எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்?,
நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின், (திருவாய்மொழி, 5.5.1) என்ற வார்த்தைகள்,
இதனையே பிரதிபலிக்கின்றன. இந்த விஷயத்தை அனுபவித்தபின் மறக்க முடியாது,
அப்படியே மறந்தாலும், மற்ற விஷயங்களைக்கொண்டு வாழ முடியாது என்று பொருள்.

ஏழையேன் ஏழையேனே
ஆழ்வார் பகவத் விஷயத்தில் தான் ஏழை அல்லது வறுமை உள்ளவன் என்கிறார்.
தான் இந்த விஷயத்தை அனுபவிக்க பேராசையுடன் இருந்தாலும், முன்னே சொன்னது போல்,
முழுவதும் அனுபவித்து முடிக்க முடியாத விஷயம் ஆகையால், ஏழையேன் என்று சொல்கிறார்.
அதைப் பிரிந்தால், வாழ முடியாதவன் ஆவதால், ஏழையேன் என்கிறார்.
ஏழைமை என்பதற்கு தளர்ச்சி என்று ஒரு பொருள் உள்ளது.
பல காலமாக கர்மா வினை பயன்களால் தளர்ச்சியடைந்த ஆழ்வார், இப்போது அளவிட்டு முடிக்கமுடியாத
பகவத் விஷயத்தை கண்டு தளர்ச்சி அடைந்தவராக உள்ளார் என்பதால்,
ஏழையான தான் மீண்டும் ஏழையாகிவிட்டேன் என்பதை ஏழையேன் ஏழையேனே என்றும் கொள்ளலாம்.

———-

எம்பெருமான் தனக்கு செய்த உதவிகளை பேசுதல் என்ற இந்த உபபகுதியின் இறுதி பாடல்

ஆழ்வார், முந்திய பாசுரங்களில், மனத்தினால் நினைக்கலாமே என்றும்,
‘பேசித்தான் ஆவதுண்டோ என்றும் எங்கனம் மறந்து வாழ்கேன் என்றும்
தன்னுடைய அன்பினை காட்டியதற்கு பதிலுக்கு
பெரிய பெருமாள், ஆழ்வார் மேல் தமக்குள்ள உள்ள அன்பினைக் காட்ட,
அதனை பார்க்கும் போது தனது அன்பு மிகவும் தாழ்ந்தது என்று ஆழ்வார் உணர்ந்து,
பைத்தியம் பிடித்தவனுக்கு ஒரு சமயம் வரும் தெளிவு போல் உள்ள தன்னுடைய பக்தியை
கள்ளத்தனம் என்று பாடும் பாடல்.

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம் தன்னுள்,
கள்ளனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும்,
உள்ளமே வலியைப் போலும் ஒருவன் என்று உணர மாட்டாய்,
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே. (திருமாலை 24)

வெள்ளநீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம்
பொங்குநீர் பரந்து பாயும் என்று சென்ற பாசுரத்தில் பாடியது இன்னும் ஆழ்வார் நினைவில் இருக்க,
இங்கே தொடர்ந்து “வெள்ளநீர் பரந்து பாயும்” என்று காவிரியின் பெருமையில் இந்த பாசுரத்தையும் தொடர்கிறார்.

காவிரி, தன் உற்பத்தி ஸ்தானத்தில் இருந்தே திருவரங்கம் வர வேண்டும் என்று நோக்கோடு வருவதால்,
ஆர்வம் வெளியே தெரியும்படி, பெருவெள்ளமாக நீரை கொண்டு எவராலும் அணைகட்டி தடுக்க முடியாதபடி
எல்லா பக்கங்களிலும் பாய்ந்து செல்லும்.
ஆற்றின் ஆர்வத்திற்கு முடிவு இல்லாததால், ஆழ்வார் பாய்ந்தது என்று இறந்த காலத்தில் சொல்லாமல்,
பாயும் என்று நிகழ் காலத்தில் கூறி உள்ளார்.
காவிரியின் வெள்ளநீர் எங்கும் பாய்வதால், சோலைகளும் எல்லா இடங்களிலும் பரவுகிறது.

அரங்கம் தன்னுள், கள்ளனார்
கள்ளமில்லாத நித்ய ஸூரிகளுடன் பரம பதத்தில் நேர்மையோடு இருப்பதை விட்டு,
திரு வரங்கத்தில் கண் வளர்ந்து இருப்பது, இங்குள்ள கள்ளத்தனம் உள்ள சம்சாரிகளைத்
தன் கள்ளத் தனம் கொண்டு, வலைவீசி, கவர்ந்து கொள்வதற்காக என்பதால்
ஆழ்வார் ‘கள்ளனார்’ அல்லது ‘கள்வனார்‘ என்று கூறுகிறார்.

பலவகை துர் எண்ணங்களுடன் கோவிலுக்குள் செல்லும் மக்களை தன் வடிவழகு போன்றவற்றை கொண்டு திருத்தி,
அவர்களை அடியவர்கள் என்று மாற்றும் எம்பெருமானை கள்வனார் என்று ஆழ்வார் சொல்வது பொருத்தமே.

மிகப் பெரிய தீவட்டித் திருடன் என்பதால் ‘கள்வன்’ என்று சொல்லாமல்
‘கள்வனார்’ என்று சொன்னதற்கு காரணம் என்று உரையாசிரியர் கூறுகிறார்.
எம்பெருமானுக்குச் சொந்தமான ஆத்மாவைத் தன்னது என்று உரிமை கொண்டாடும் ஜீவாத்மாக்களைக் கவரும் போது,
அதை சொல்லிக் கொண்டு வந்தால் யாரும் கிடைக்க மாட்டார்கள் என்பதால், கள்வனாக கிடக்கிறார்.

மேலே சொன்ன நீர்வளத்தையும் சோலைகளின் வனப்பையும் கொண்டு எம்பெருமான்
இங்கு வந்து பள்ளி கொண்டு உள்ளான் என்று நினைக்க தோன்றினாலும்
உண்மையில் ஜீவாத்மாக்களை கவரவே என்பதால் கள்வன் என்று சொல்லலாம்.

நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை திவ்யதேச எம்பெருமானை பாடும்போது,
“செஞ்சொற் கவி காள், உயிர் காத்து ஆட் செய்மின்” என்று பாடுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

திருப்பாணாழ்வார், பெரியபெருமாளை அருகில் சேவித்தபோது அவரது திருமுக மண்டலத்தில்
ஒரு கள்ளத்தனம் தோன்றி இருப்பதால் தானோ, அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில் (7),
‘செய்ய வாய் ஐயோ ! என் சிந்தை கவர்ந்ததுவே‘ என்று சொல்கிறார்.
அதாவது எதோ ஒரு காரணத்தினால் தன்னை அணுகுகிறவர்களின் ஆத்மாவை திருடி தன் சட்டைப்பைக்குள்
வைத்து கொள்வார் அல்லது அவர்களை தன்னுடைய அந்தரங்கர்கள் ஆக்கி கொள்வார்.
எம்பெருமானுக்குச் சொந்தமான ஆத்மாவை தன்னது என்று பலகாலமாக நினைத்து கொண்டு இருக்கும்
ஜீவாத்மாவிடம் இருந்து அது அறியாத வண்ணம், எம்பெருமான் சேர்த்துக் கொள்வதால் கள்வனார் என்கிறார்.

இதை ஜிதந்தே ஸ்தோத்திரம் முதல் ஸ்லோகத்திலேயே
‘செந்தாமரை கண்ணா, உன்னால் இந்த ஆத்மா ஜெயிக்கப்பட்டது, இந்த ஆத்மா என்னுடையது அல்ல, உன்னுடையது,
உலகையெல்லாம் உண்டாக்கினவனே, இந்திரியங்களை நியமிப்பவனே, கொடுப்பதில் சிறந்தவனே,
முற்பாடானாக பிறப்பவனே, இந்த ஆத்மா எனக்காக இல்லாமல் உனக்காகவே ஆகவேண்டும்” என்றபடி
எம்பெருமான் தன்னுடைய வடிவழகை காட்டி இந்த ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்.

பற்பல காலமாக ஜீவாத்மா, இந்த ஆத்மாவை தன்னதாகவே நினைத்துக் கொண்டு இருப்பதால்,
இப்பொழுது பரமாத்மா தனக்கு சொந்தமான ஆத்மாவை எடுத்துக் கொண்டாலும் அது,
ஆயர்பாடியில் கண்ணன் வெண்ணையை திருடியது போல், கள்ளத்தனமாகவே தெரிகிறது, என்று உரையாசிரியர் சொல்கிறார்.

எம்பெருமானுடைய உலகங்களையெல்லாம் அவனுக்கே மாவலி தானம் கொடுத்தது போல்,
நாமே இந்த ஆத்மாவை அவனுக்கு சமர்ப்பித்தாலும் அதுவும் ஒரு கள்ளத் தனமே.

கிடந்தவாறும்
ஆழ்வார் தன்னை வசப்படுத்தியது, எம்பெருமானின் எளிமை மற்றும் பற்பல திருக் குணங்கள் அல்ல என்றும்,
கண் முதலிய அவயங்களின் தனிப்பட்ட அழகு இல்லை என்றும்,
“கிடந்ததோர் கிடக்கை” (திருமாலை 23) என்ற பெரிய பெருமாள் திருமேனியின் முழுவதுமான
அழகே (சமுதாய சோபை) என்றும் கூறுகிறார்.

கமல நன் முகமும்
தாமரை, எம்பெருமானின் திருமுகத்துடன் ஒப்பிடப்படுகிறது. மலர்ச்சி, நறுமணம், குளிர்ச்சி, புதுமை என்ற
குணங்களால் ஓரளவு ஒன்றாக இருந்தாலும், நன்முகம் என்று சொன்னதால், முற்றிலும் சமமானது என்று சொல்லமுடியாது.
சுத்த சத்வ மயமானதாலும் ஜோதிமயம் ஆனதாலும் தாமரை போன்ற ஒரு ஜட பொருளுக்கு எம்பெருமானின்
திருமுக மண்டலத்தை ஒப்பிட முடியாது.
ஆதித்தனை கண்டு மலரும் தாமரைக்கு அடியார்களை கண்டு மலரும் எம்பெருமானின் திருமுகத்திற்கு
ஒப்பு ஆகாது என்பது ஆழ்வாரின் கருத்து.
எல்லா உலகங்களிலும், எம்பெருமானின் திருமுகம் மட்டுமே மிக குளிர்ச்சியான முகம் என்றும்
மற்றவை கடுமையானவை என்பதை ‘நன்முகம் ‘ என்ற சொல்லால் உணர்த்துகிறார்.

இதே உரையாசிரியர், வங்கக்கடல் கடைந்த பாசுர விளக்கத்தில் ஆண்டாள், பெரியாழ்வாரை புகழும் போது,
‘தண் தெரியல் பட்டர் பிரான்‘ என்று சொன்னது, பெரியாழ்வார் குளிர்ச்சியான மாலையை அணிந்து கொண்டு உள்ளார்,
எம்பெருமான் உட்பட மற்றவர்கள் சூடானவற்றை அணிந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இரண்டையும் சேர்த்து பார்க்கும் போது, ஆழ்வார்கள் எம்பெருமானையும் விட இன்னும் சாத்விகர்களாக
இருப்பார்கள் என்பதால் உரையாசிரியர்,
ஆழ்வார்கள் தவிர மற்றவர்களை பார்க்கும் போது எம்பெருமான் குளிர்ச்சியாகவும்,
ஆழ்வார்களை பார்க்கும் போது ஆழ்வார்கள் எம்பெருமானை விடவும் குளிர்ச்சியாகவும் இருப்பர் என்று சொல்வது போல் தெரிகிறது.

கண்டும், உள்ளமே வலியைப் போலும்
எம்பெருமான் கண் வளர்ந்து அருளும் அழகினை சேவித்த பிறகும், ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் மனதை
பார்த்து ஆழ்வார் அதன் வலிமையை கண்டு வியக்கிறார்.
இதற்கு முந்தைய பாசுரங்களில்
கண்ணினை களிக்குமாறே (17),
பனிஅரும்பு உதிருமாலோ (18),
உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று மனது கேட்ட போது,
ஆழ்வார், எம்பெருமான் பெருமைகளைப் பார்க்கும்போது, ஆழ்வார் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களாக
மேலே சொன்னவை, மிக சிறியவையே என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஒருவன் என்று உணர மாட்டாய்
ஆழ்வார் மேலும், எம்பெருமான் தன்னிகர் இல்லாதவன் அல்லது ஒப்பற்றவன் என்று
உணராத நெஞ்சம் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.
அப்படி உணர்ந்தால், எம்பெருமானின் பெருமைகளும், குணங்களையும் உள்ளபடி உணரவேண்டும்.
அதற்கு ஏற்ப ஈடுபாடும் பிறக்க வேண்டும். அது பிறக்காததால், நெஞ்சை வன்மை உள்ளது என்று கூறுகிறார்.

கள்ளமே காதல் செய்து
கண்ணினை களிக்குமாறே (17),
பனிஅரும்பு உதிருமாலோ (18),
உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று சொன்னது மற்ற உலக விஷயங்களில் எப்படி கள்ளத்தனமாக
நடக்கிறோமோ அதே போல் பகவத் விஷயத்திலும் கள்ளத்தனமாக நடந்து கொண்டதாக ஆழ்வார் சொல்கிறார்.

உன் கள்ளத்தே கழிக்கின்றாயே
ஆழ்வார், மேலும் நெஞ்சத்திடம் உலக விஷயத்தில் செய்த கள்ளத்தனம், பற்பல காலங்களாக, பற்பல பிறவிகளாக
செய்து வருவதால், இந்த பகவத் விஷயத்திலும் பொய்யான அன்பை நன்றாக காட்டிவிட்டதாக ஆழ்வார் சொல்கிறார்.
மெய்யான அன்பு செலுத்தவில்லை என்றும் இந்த விஷயத்திற்கு ஏற்ற உண்மை அன்பை, பக்தியை
செலுத்தவில்லை என்று தன் மனத்திடம் சொல்லி, இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

எம்பெருமானின் திருமுகத்தை தரிசித்த பின்னும் ஆழ்வாரின் வலிமையான நெஞ்சம்,
அவரிடம் பொய்யான பக்தியை காண்பித்ததாகவும், அதனால் தன்னிடம் சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் இல்லை
என்று தன்னை எம்பெருமான் சரணாகதிக்கு தயார் செய்ததை, ஆழ்வார்க்கு செய்த உபகாரமாக இந்த பாசுரம் சொல்கிறது.

இதே போல், பெரியாழ்வார் தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியில், (5.2.8),
“ஏதங்களாயின எல்லாம் இறங்க லிடுவித்து என்னுள்ளே, பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து,
போதில் கமல வன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில், பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே”, என்று
சொல்லி எம்பெருமான் தன்னுடைய வலிமையான நெஞ்சத்தில் உள்ள பாவங்களை விலக்கி விட்டு,
அதனுள் புகுந்து அவனுடைய திருவடிகளை ஆழ்வாரின் தலையில் வைத்து உபகாரம் செய்ததை சொல்லி உள்ளார்.

இத்துடன் ஆழ்வார், எம்பெருமான் தனக்கு செய்த உதவிகள் என்ற தலைப்பில் சொன்ன தொகுப்பு முடிகின்றது.
அடுத்து ஆழ்வார், நிரந்தர இன்பம் அளிக்கும் பரமபத்திற்கான உபாயங்களை கடைபிடிக்க
தமக்கு ஒரு தகுதியும் இல்லை என்ற தொகுப்பில் 25 முதல் 34 வரை சொன்ன பத்து பாசுரங்கள்–

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ திருமாலை (என்னும் திவ்ய ப்ரபந்தம்) அறியாதார், ஸ்ரீ திருமாலையே (ஸ்ரீ யபதியை ) அறியாதார்–1-14–

May 9, 2022

ஸ்ரீ திருமாலை (என்னும் திவ்ய ப்ரபந்தம்) அறியாதார், ஸ்ரீ திருமாலையே (ஸ்ரீ யபதியை) அறியாதார்
என்ற சொற்தொடருக்கு ஏற்ப,
எல்லோரும், தொண்டரடிப் பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்ய ப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த திவ்ய பிரபந்தம், வடமொழியில் உள்ள “ஸ்ரீ விஷ்ணு தர்மம்” என்ற நூலின் அடிப்படையில் உள்ளது என்று
நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.

நம் ஆச்சார்யர்கள், இந்த ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும்படி,
“தொண்டரடிபொடி எம்பெருமானை எப்போதும் பேசு” என்று சொன்னார்கள்.
பெருமாளுக்கு தொண்டு செய்பவர்களுக்கு(பிரதம பர்வம்) பெருமாள், பெருமான் ஆவது போல்,
பெருமாளின் அடியவர்களுக்கு சேவை செய்யும் அடியவர்களுக்கு (சரம பர்வம்), இவர் பெருமான் ஆவார் என்று கூறுவார்கள்.

நாம் முன்பே பார்த்ததுபோல், இந்த ஆழ்வார், திருமந்திரத்தின் அர்த்தத்தை தெரிந்து கொண்டு,
இந்த உலக சுகங்களில் ஆசை கொள்ளாமல், பெருமாளிடம் பக்தி கொண்டு, ஸ்ரீரங்கம் சென்று பெரிய பெருமாளை சேவிக்க,
அவர் தம் வடிவழகை காட்டி, ஆழ்வாரை எப்போதும் தனது அருகிலேயே இருக்கும் படி செய்தார்.

அதனால், இந்த ஆழ்வார், பரமாத்மாவின் ஐந்து நிலைகளில்,
பர, வியூக, விபவ மற்றும் அந்தர்யாமி என்ற நான்கு நிலைகளையும் விலக்கி
மற்றும் அர்ச்சைகளில் உள்ள மற்ற எல்லா திவ்யதேசங்களையும் விலக்கி,
வைஷ்ணவர்களுக்கு வேர்ப் பற்றான திரு அரங்க திவ்ய தேசத்தை மட்டுமே பாடி, பெருமை பெற்றார்.
ஆகையால், ஆழ்வார், நமக்கு உதவி செய்யும் பொருட்டு, தெளிவாக, மற்ற எல்லா குழப்பங்களையும் நீக்கி,
திருவரங்கனை மட்டுமே, திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி முழுவதும் பாடி நமக்கு ஒரு நல்வழி காட்டி உள்ளார்.

இந்த ஆழ்வாரின் மற்றொரு சிறப்பு, நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை திருமாலை என்கின்ற இந்த திவ்ய ப்ரபந்தத்தில் விளக்கியது.

நம் கர்ம பலன்களாகிய பாப, புண்ணியங்களை துறந்து பிரம்மத்தை அடைந்து, நித்யஸூரிகளைப் போல்,
பரமாத்மாவிற்கு சேவை செய்து, ஆனந்தம் அடையவேண்டியதே ஒவ்வொரு உயிரின் ஒரே குறிக்கோளாக
இருக்க வேண்டும் என்று வேதங்கள் உரைக்கின்றன.
அதற்கு நாம் அருகதை உடையவர்கள் ஆனாலும், அதை நாம் செய்யாது, மீண்டும் மீண்டும் பிறந்து (இறந்தும்),
இந்த சம்சாரத்திலேயே வாழ்ந்து அவதியுறுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல்,
ஸ்ரீவைகுந்ததில், மஹாலக்ஷ்மி தாயார், பெருமாளை வேண்ட, பெருமாள் இந்த ஆழ்வாரின் மூலம்,
தீவினைகள் மிகுந்த கலியுகத்தில் பரமாத்மாவை அடைவதற்கான எளிய வழியாகிய
நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமையை, சொல்லிக் கொடுக்க, அதையே திருமாலை என்ற
இந்த திவ்யப்ரபந்தத்திற்கு மூலப்பொருள் ஆக்கினார்.

இந்த பிரபந்தம், எட்டெழுத்து மந்திரம் “அஷ்டாட்சர மந்திரம்‘ ) போல் மிக்க சுருக்கமும் இல்லாமல்,
இருபத்தினான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட இராமாயணம் அல்லது ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ஸ்லோகங்கள்
கொண்ட மஹாபாரதம் போல் மிக்க நீண்டதாகவும் இல்லாமல், நாற்பத்தி ஐந்தே பாசுரங்களுடன்,
பரம்பொருளை தெளிவாக விளக்குவதால் தனிப்பெருமை உடையதாயிற்று.
இதனை அதிகமும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் அளந்து பேசும் திருவடி, அனுமனின் சொல்லுக்கு ஒப்புமை கூறுவதும் ஒரு சிறப்பு.

திருமாலை அமைப்பு
திருமாலை என்ற இந்த திவ்யப்ரபந்தத்தை ஆழ்வார் கீழ்கண்ட தொகுப்புகளாக சொல்லி தொடர்ச்சியை கையாண்டு இருக்கிறார்.

முதல் மூன்று பாசுரங்கள் –
ஆழ்வார் பெருமாள் தனக்கு கொடுத்த அனுபவத்தை ரசிக்கிறார்.

நான்கு முதல் பதினான்கு வரையிலான பதினோரு பாசுரங்கள் –
தன்னுடைய அனுபவத்தை கொண்டு நமக்கு உபதேசம் செய்கிறார்

பதினைந்து முதல் இருபத்தி நான்கு வரை பத்து பாசுரங்கள் –
உபதேசத்தின் படி மக்கள் நடந்து கொள்ளாததால், பெருமாள் தனக்கு செய்த நன்மைகளை – உபகாரங்களை நினைத்துக் கொள்ளுகிறார்

இருபத்தி ஐந்து முதல் முப்பதினான்கு வரை பத்து பாசுரங்கள் –
இவ்வளவு நன்மைகள் பெருமாள் செய்தும், ஆழ்வார், தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்றும்,
எல்லா கெட்ட குணங்களும் உள்ளனவே என்றும் சொல்லி, பெருமாளிடம் இருந்து விலகப் பார்க்கிறார்.

முப்பத்தி ஐந்து முப்பத்தி ஆறு மற்றும் முப்பத்தி ஏழு என்ற மூன்று பாசுரங்களும்
பெருமாள் ஆழ்வாருக்கு சமாதானம் சொல்லி, தன்னுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்வது.

முப்பத்தி யெட்டாம் பாசுரம் –
இந்த பிரபந்தத்தின் முக்கிய பாசுரம் –
த்வய மஹா மந்திரத்தின் அர்த்தத்தை ஆழ்வார் நமக்கு விளக்குதல்

முப்பத்தி ஒன்பதாம் பாசுரம் முதல் நாற்பதினான்காம் பாசுரம் வரை ஆறு பாசுரங்கள் –
த்வய மஹா மந்திரத்தை நன்றாக புரிந்து கொண்ட ஜீவாத்மாவின்
குண நலன்களை ஆழ்வார் நமக்கு சொல்லுதல்

நாற்பத்தி ஐந்தாவது பாசுரம் –
இந்த பிரபந்தத்தை படிப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகளை சொல்வது –
பல ஸ்ருதி பாசுரம்

——-

ஆழ்வாரின் அனுபவம்
முதல் பாசுரம் – காவலில் புலனை வைத்து-

காவலிற் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்-தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகருளானே

திருநாமம் எம பயத்தை போக்கிவிடும் என்பதை திருநாமம் கற்றதனால், எமன் தலை மீது சந்தோஷமாக
சப்தம் போட்டு நடப்போம் என்று இந்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார்.
இந்த பாசுரம் திருநாமத்தின் புனிதத் தன்மையையும் நமக்கு விளக்குகிறது.

இந்த பாடலுக்கான உரையில் இருந்து சில சிறப்பான பகுதிகளை மட்டும் காண்போம்.

“காவலில் புலனை வைத்து ” என்பதை நம் ஆச்சார்யர்கள்,
நம் இந்திரியங்களை காவலில் வைத்து என்றும்,
இந்திரியங்களை காவலில் வைக்காமல் (காவல் இல்லாமல்) என்று இரண்டு விதமாகவும் சுவாரஸ்யமாக விளக்குவார்கள்.

முன்பு தன்னுடைய இந்திரியங்கள் தன்னை சிறையில் வைத்தது போல்,
தான் இப்போது தன்னுடைய இந்திரியங்களை சிறையில் வைத்ததாக ஆழ்வார் சொல்கிறார்.

இராவணனின் மனைவி மண்டோதரி, இராவணன் போரில் அடிபட்டு விழுந்தபோது,
அவன் இந்திரியங்களை வென்று யாகங்கள் செய்த போது பற்பல பலன்களை பெற்றதாகவும்,
இந்திரியங்களை கட்டுப் படுத்த முடியாத போது சீதையை சிறை பிடித்ததால்,
இக் கேடு நடந்ததாகவும் சொல்லி கதறி அழுததை, உரையாசிரியர் இதற்கு மேற்கோள் காட்டுவார்கள்.

தன்னுடைய இந்திரியங்களை காவலில் வைக்காத போதும்,
இந்திரியங்களை அடக்கியவர்களுக்கு கிடைக்காத பலன்களைக் கூட திருநாம வைபவத்தால்,
தான் அடைந்து விட்டதாகவும் பொருள் கூறுவார்கள்.

காவல் என்பது எல்லாவற்றையும் காக்கின்ற பெருமாள் என்று அர்த்தம் கொண்டு,
தன்னுடைய இந்திரியங்களை உலக விஷயங்களில் இருந்து நீக்கி
பெருமாளிடம் வைத்தது என்றும் பொருள் கூறுவார்கள்.

கலி தன்னை கடக்கப் பாய்ந்து என்றது
திருநாமம் கற்றதால் ஆழ்வார், பாவங்கள் அதிகம் சூழ்ந்துள்ள இந்த யுகத்தை தாண்டி,
எல்லா பாவங்களையும் தொலைத்து, கிருதயுகத்தில் இருப்பவர் போல் இருந்தார் என்று பலரும் கூறுவதாக
நம் உரையாசிரியர் தெரிவிக்கின்றார்.
இங்கு கலி என்பதற்கு கலி காலம் என்றும், பாவம் என்றும் இரண்டு பொருள்களில் விளக்கம் தருகிறார்கள்.

“நாவலிட்டு உழிதருகின்றோம் ” என்று பன்மையில் சொன்னதால்,
ஆழ்வார் ஒருவரே, பலர் போல் பலம் உடையவராக உணர்கிறார் என்று ஒரு அர்த்தம்.
புண்ணியம் செய்த ஒருவரால், பலரும் பலன் அடைவது உலக நியதியே என்று இன்னொரு அர்த்தம்.
அனுமன் ஒருவனே கடலைத் தாண்டி சீதாபிராட்டியை தரிசித்து வந்தாலும்
அவருடன் சென்ற அத்தனை வானரங்களும் மகிழ்ச்சியுடன், சுக்ரீவனுக்கு பிரியமான மதுவனத்தை அனுபவித்தது போல்,
ஒருவனுடைய நற்செயலுக்கு பலரும் பயன் அடைவதை போல் என்கிறார்.

‘நமன் தமர் தலைகள் மீதே’ என்று பன்மையில் சொன்னது, ஆழ்வாருடன் மற்றவர்கள் இருந்ததால்,
அவர்களுக்கு தேவையான தலைகளை எமன் தன் பரிவாரங்களுடன் கொடுத்ததை சொல்கிறார்.
எமன் மற்றும் அவன் பரிவாரங்களின் தலைகள் மீது ஆழ்வாரும் மற்றவர்களும் கால் வைத்து இருப்பதாக சொல்வது,
ஆழ்வாரின் பெருமைக்காகவோ அல்லது எமனை சிறுமைப் படுத்தவோ சொல்லவில்லை என்றும்,
எமனே தானாக முன்வந்து திருநாமம் சொல்பவரின் பெருமையை அறிந்து அவர்களின் திருவடிகளை தேடி வந்ததாக உரையாசிரியர்கள் கூறுகிறார்.

இந்த பாசுரத்தில், திருநாமத்தின் பலன்களை முதல் இரண்டு வரிகளில் சொல்லிவிட்டு
அதன் பிறகே ஆழ்வார் “மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ” என்று திரு நாமம் சொல்கிறார்.
திருநாமம் சொல்வதற்கு முன்பே பலன் கிடைக்கும் என்று சுவாரசியமாக உரையாசிரியர் கூறுகிறார்.

திருநாம பலன்களுக்கு சில உதாரணங்கள் :

வாலியிடம் பயம் கொண்டிருந்த சுக்ரீவன், ஸ்ரீராமனின் துணை கிடைத்த பின்பு அதனால் பலம் பெற்று
அவனை போருக்கு அழைப்பது போல், திருநாம மஹிமையினால் ஆழ்வார் அதேபோல் பலம் பெற்றதாக உணர்கிறார்.
ஸ்ரீராமனின் கருணையினாலும், கையில் அவரது மோதிரத்தை கொண்டு இருந்ததாலும்,
திருவடி (அனுமன்) சமுத்திரத்தைத் தாண்டினார்,

இங்கே ஆழ்வார் சம்ஸாரம் என்னும் சமுத்திரத்தை திருநாமத்தின் துணையால் தாண்டினார்

‘கோவிந்தா’ என்ற திருநாம வைபவத்தாலே தான், ஆபத்தில் திரௌபதிக்கு புடவை வந்து கொண்டே இருந்தது.
திருநாமத்தின் அர்த்தத்தை தெரிந்து கொண்டு உச்சரித்தால் தான் பலன் என்பதில்லை என்றும்,
அர்த்தம் தெரியாமல் திருநாமங்களை உச்சரித்தால் கூட பலன் உண்டு என்பதையும்
சில உதாரணங்கள் மூலம் உரையாசிரியர் கூறி இருப்பது தனி சிறப்பு.

————-

இரண்டாவது பாசுரம்
இந்த உலகத்தில் இருந்து விலகி, பரமபத்திற்கு சென்று அதனை ஆளுவதற்கு அருள் கிடைத்தாலும்,
அதைவிட திருநாமங்கள் சொல்லி திருவரங்கத்தில் இருப்பதில் உள்ள ருசி அதிகம் என்று சொல்லி,
ஆழ்வார் பரமபதத்தையே மறுப்பது போல் இந்த பாசுரம் அமைந்துள்ளது.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது,
திருநாமம் சொல்வது, பரமபதம் இவற்றில் எது உயர்ந்தது என்று ஆழ்வார் பேச வரவில்லை
பரமபதத்தை ஆளும் சுவை இனியது இல்லை என்று அவர் சொல்லவில்லை.
அப்படி சொல்லி இருந்தால், பரமபதத்தை மதிக்காதவர் என்று சொல்லப்பட்டு இருப்பார்.
அவர் பரமபதம் தனக்கு வேண்டாம் என்று தான் மறுத்தார்.
அதற்கு சில காரணங்கள் :

திருநாமங்களை இன்றே, இப்போதே, இந்த உடலுடனே, இங்கேயே (பூலோக வைகுந்தமாகிய ஸ்ரீரங்கத்திலேயே)
சொல்லி அனுபவிக்க முடிகிறது. ஆகவே இவை இச்சுவை என்று தனக்கு மிகநெருக்கமாக, ஆழ்வாரால் கொண்டாடப்பட்டது.
மேலும் மிகவும் சிரமப்பட்டு பெருமாளின் குணங்களை அறிந்துகொண்டு அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லாமல்,
திருநாமங்களை, அவற்றின் அர்த்தங்கள் தெரியாமல் சொன்னால்கூட சுவை கிடைக்கும் என்று ஆழ்வார் சொல்கிறார்.

‘சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம், மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” (திருவாய்மொழி, 9.10.5)
என்று நம்மாழ்வார் சொன்னது போல் மோக்ஷமாகிய அவ்வுலக இன்பம் கிடைப்பதற்கு காத்திருக்க வேண்டும் என்பதையும்,
பரம பதம் செல்வதற்கு வேறு உடல் பெற்று அதனுடன் அனுபவிக்க வேண்டும் என்பதையும் ஆழ்வார் அறிவார்.
ஆகவே பரமபதம் “அச்சுவை” ஆயிற்று.
ஸ்ரீவைகுந்ததைப்பற்றி தெரிந்தது எல்லாம், யாரோ ஒருவர் வாய் சொல்லி கேட்டது மட்டுமே,
அவரும் வைகுந்ததை நேரடியாகப் பார்த்தது கிடையாது,
அவருக்கும் அது வாய்ச் சொல்லே என்பது போன்ற சில கேள்விகள் ஒரு சிலருக்கு எழலாம்.
ஆனால், திருநாமங்கள் சொல்லி மகிழ்கின்ற இன்பத்தினை ஒருவரால் இப்போதே அடைய முடிகின்றது.

பச்சை மா மலை போல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய், இந்திரலோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகருளானே

ஆழ்வார் பரமபதத்தையே மறுப்பது போல் உள்ள இந்த பாசுரத்திற்கு முன்னால், பரமபதத்தை மறுத்தவர்களில் சிலர் உள்ளனர்.
அவர்களில் முதலாவதாக உள்ளவர், திருவடி என்று மிகுந்த பக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன்.
இராமாயணத்தில், அனுமன், “பாவோ நாந்யத்ர கச்சதி “-
இராமனை விட்டு எனது நினைவானது வைகுந்தநாதனிடம் கூட செல்வதில்லை என்றார்.
இவர் வைகுந்தம் செல்லாமல், இந்த உலகத்திலேயே எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ,
அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டு இருக்கிறார்
என்பதை கீழ் கண்ட ஸ்லோகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம், மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

திருப்பாணாழ்வார்
அடுத்து, அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில், திருப்பாணாழ்வார்,
“என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே“ என்று சொல்வதால்,
ஸ்ரீரங்கநாதனாகிய அமுதத்தைத் தவிர மற்றொரு அர்ச்சாவதாரத்தையோ அல்லது
பர, வியூஹ, விபவ, அந்தர்யாமி போன்ற மற்ற நிலைகளிலும் பரமாத்மாவையும் காண வேண்டாம் என்று மறுக்கிறார்.

பராசர பட்டர் என்னும் ஆசார்யன், தனக்கு பரமபதம் கிடைத்த போது, தான் ஸ்ரீவைகுந்ததில்,
அரங்கநாதனை தரிசிக்க முடியாவிட்டால், அங்கிருந்து குத்திக்கொண்டு குதித்து
ஸ்ரீரங்கம் வந்து அரங்கனை தரிசிப்பேன் என்று சொன்னதாக ஐதீகம்.

அதே போல் சுவாமி தேசிகன்
ஆசார்யன் ஸ்வாமி தேசிகன், வைகுண்டவாஸேபி நமேபிலாஷஃ என்று,
காஞ்சிபுரம் வரதனின் ஸேவையை விட்டு ஸ்ரீவைகுண்டத்திலும் ஆசை இல்லை என்றார்.
புதிய புதிய உத்ஸவங்களால் மிகவும் ஸந்தோஷத்துடன் பெரியபிராட்டியுடன் வரதன், ஸ்ரீஹஸ்திகிரியில், நித்யவிபூதியான
ஸ்ரீவைகுண்டத்தையும் மறந்து எழுந்தருளி உள்ளார்.
காஞ்சியில் ஸ்ரீதேவாதிராஜன்(வரதன்), இம்மாதிரி உத்ஸவங்களால் ஸ்ரீவைகுண்டத்தையே மறந்தார் என்பதாக அனுபவம்.

முதல் பாசுரத்தில் திருநாம வைபவம், எம பயத்தை போக்கிவிடும் என்று சொன்ன ஆழ்வார்
இந்த இரண்டாவது பாசுரத்தில் பெருமாளின் வடிவழகினை ரசித்துப் பாடுகிறார்,
ஏனென்றால், பயம் சென்ற பின் தான் எதையுமே ரசிக்க முடியும் என்பது உலக வழக்கு.

முதல் பாசுரமானது, ரிஷிகள் எப்படி பெருமாளை பயத்துடன் அணுகுவார்களோ அது போன்றும்,
இரண்டாவது பாசுரமானது ஆழ்வார்கள் எப்படி பெருமாளை ரசித்து அனுபவித்து அணுகிறார்களோ அதுபோன்றும்,
இந்த ஆழ்வார் முதல் இரண்டு பாசுரங்களை கொண்டு திருநாம வைபவங்களை அணுகுகிறார்.

பெருமாளுக்கு திருநாமங்கள் பற்பல என்று பார்த்தோம், அவை ஏனெனில்,
ஒவ்வொரு திருநாமமும் பெருமாளுடைய ஸ்வரூபத்தையோ, ரூபத்தையோ, குணநலன்களையோ அல்லது
அவரது திருவிளையாடல்களையோ (சேஷ்டிதங்களை) குறிப்பனவாக இருக்கும். கீழே சில உதாரணங்கள்.

ஸ்வரூபம் – விஷ்ணு( எங்கும் வியாபித்து இருப்பவன்), நாராயணன் (எல்லாவற்றையும் தாங்குபவன்)
ரூபம் – கேசவன் (நீண்ட கேசம் உடையவன்)
குண நலன்கள் – வத்சலன் (வாத்சல்யம் உடையவன்) – சுசீலன் (எளிதில் அடையமுடிபவன், சுலபன்)
சேஷ்டிதங்கள் – பார்த்தசாரதி (அர்ச்சுனனுக்கு தேர் ஒட்டியவன்)

இவை அனைத்திலும் ஆழ்வாருக்கு ஆனந்தம் அளிப்பது, ரூபம் சம்பந்தப்பட்ட திருநாமங்களே என்றும்
அவைகளே எல்லோருக்கும் எளிமையாக இருக்கும் என்றும் உரையாசிரியர் சொல்கிறார்.

பச்சை மா மலை போல் மேனி
மலை என்பது எம்பெருமானின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் மட்டுமே ஒப்பாகும்.
நம் கண்களையும் நெஞ்சினையும் குளிர்வித்து நம்முடைய பாபங்களை போக்குவதாலும்,
பெருமாள், பெரும் கருணைக்கு இருப்பிடமாதலாலும்
‘பச்சை மா‘ என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு “பச்சை மாமலை” என்றானது.
போல் என்று சொன்னதால், எல்லா பெரிய மலைகளும் பரமாத்மாவிற்கு இணையாகாது என்பது தெளிவாகிறது,
ஏனென்றால், பரமாத்மாவின் எண்ணிறந்த குணங்கள் எந்த மலைக்கும் கிடையாது.

ஒன்பதாவது ஆழ்வாரான திருப்பாணாழ்வார் அவரது அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில், ஏழாவது பாசுரத்தில்,
” நீள் வரைபோல் மெய்யனார்” (7) என்று அரங்கநாதனைக் குறிப்பிடுகின்றார்.
வரை என்றால் மலை என்பதால், நீண்ட மலையைப் போல் இருக்கும் பெருமாளின் திருமேனி என்ற பொருளுடன்
இருக்கும் அந்த பாசுரம், தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இந்த பாசுரத்துடன் ஒப்பிடலாம்.

பவள வாய்
பவளவாய் என்பதை, சிவப்பு நிற பவள கற்கள், பச்சை நிற மலையில் பொறிக்கப் பட்டதாக ஒரு விளக்கமும்
பச்சைநிற மரகதக் கல்லில் பவள நிறம் ஓடியது போல் மற்றொரு விளக்கமும் கொடுக்கப்பட்டு உள்ளது இன்னொரு சிறப்பு.
உரையாசிரியர், திருமேனி மற்றும் திரு அதரம் இவற்றின் நிறத்தை மட்டும் குறிப்பிடாமல்,
பெருமாள் திரு அதரத்தின் மூலம் அருளிய சில முக்கிய விஷயங்களையும் சொல்லி இருப்பது மிக சிறப்பு.

விபீஷண சரணாகதியின் போது சுக்ரீவன் மற்றும் அங்குள்ளோரிடமும் பேசி அவர்களை சம்மதிக்க வைத்தது இதே பவள வாய் தான்.
விபீஷ்ணன் நேரில் வந்தபோது அவனை ஆசுவாசப்படுத்தி ஆறுதல் வார்த்தைகள் கூறியதும் இதே பவள வாய் தான்.
முன்பு சொன்ன அமலனாதிபிரான் ப்ரபந்தத்தின் அதே (7) பாசுரத்தில், திருப்பாணாழ்வார்
” செய்ய வாய் ! ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே” என்று முடிப்பதும் இந்த ஆழ்வார்களுக்குள்ள ஒற்றுமையே.
ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் இருந்து
“தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார், பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே” (11.8) என்றதும் சொல்லவேண்டிய ஒன்று.
அதே போல், பவள வாய் சொன்ன மூன்று சரம ஸ்லோகங்களையும் உரையாசிரியர் இங்கு குறிப்பிட்டது மற்றொரு சிறப்பு.

கமலச் செங்கண்
செங்கண் என்றது, தாமரைக்கு ஒப்பு சொல்லப்பட்டது. சூரியனின் உதயமும் அஸ்தமனமும் தாமரையை பாதிக்கும்,
ஆனால் திருமாலின் செங்கண் எப்போதும் கருணை பொழிந்து கொண்டு இருக்கும்.
பவள வாய்க்குப் பிறகு கண் என்றதால், வாய் சொல்லி முடிக்கும் முன்
தன்னுடைய பார்வையினாலே பெருமாள் சொல்லி முடித்து விடுவார் என்பது பொருள்.

முதலில் திருமேனியை சொன்னது, பெருமாளின் சௌந்தர்யத்தை சொல்வதாவும்,
அதன்பின் சொல்லப்பட்ட பவளவாய், மற்றும் கமலச்செங்கண் அங்கங்களின் அழகினை அல்லது
லாவண்யத்தை சொல்வதாகவும் அமைக்கப்பட்டு உள்ளது.

பவள வாய், கமல செங்கண் என்று திருவாய், திருக்கண் இரண்டை மட்டும் சொன்னது
எல்லா அவயவங்களையும் சொன்னதற்கு சமமானதாகிறது.
இதேபோல், திருவாய், திருக்கண் இவற்றை ஒரே பாடலில் சொன்ன ஆழ்வார்களும் பல, பாசுரங்களும் பல.
உதாரணத்திற்கு நம்மாழ்வார் பாசுரங்களில் இருந்து ஒன்று,
“செந்தாமரைக்கண் செங்கனிவாய் நால் தோளமுதே. எனதுயிரே ” (திருவாய்மொழி, 6.10.9).

அச்சுதா
அச்சுதா என்பதற்கு நழுவுதல் இல்லாதவன் என்று அர்த்தம்.
பெரியவாச்சான்பிள்ளை இங்கு மூன்று விதமான விளக்கங்கள் தெரிவிக்கின்றார்.

1-“அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே ” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் சொன்னதற்கு ஏற்ப
பச்சை மா மலை போல் திருமேனியை கொண்டதில் அச்சுதன் ;
பவளம் போல் திருவாய் இருப்பதில் அச்சுதன் ;
கமலம் போல் செங்கண் உள்ளதில் அச்சுதன் என்று சொல்வதன் மூலம்,
அவை என்றும் மாறுவதில்லை என்று முதல் விளக்கம் தெரிவித்தார்.

இரண்டாவது விளக்கத்தில், ஆழ்வார் பெருமாளுக்கு பல்லாண்டு பாடுகிறார் என்கிறார்.
அரங்கநாதன், பச்சைமாமலை போல் மேனி கொண்டதில் மாறுதல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும்,
பவளம் போல் வாய் என்றும் இருக்க வேண்டும் என்றும்,
கமலம் போல் செங்கண் எப்போதும் இருக்கவேண்டும் என்றும் பல்லாண்டு பாடுகிறார்.

இப்படி திருநாமங்களை சொல்பவர்களை என்றும் நழுவ விடாமல் பார்த்துக் கொள்கிறான் என்றது மூன்றாவது அர்த்தமாகும்.

அமரர் ஏறே
தேவர்களுக்கு தலைவன் என்பதால் பரமாத்மா உயர்ந்தவர் என்று சொல்லி பெருமாளின் பரத்துவத்தை இங்கு ஆழ்வார் தெரிவிக்கின்றார்.
இங்கு “ஸதா’ பஶ்யந்தி ஸூரயஃ ” என்ற விஷ்ணு ஸுக்த வாக்கியம் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.
புண்ணியம் அதிகம் செய்ததால் நம்மை விட சிறிது காலம் அதிகம் வாழ்கின்ற இந்திரன், அக்னி போன்ற தேவதைகள் போல் அல்லாமல்,
எப்போதும் மரணம் இல்லாமல் இருக்கின்ற அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனன் போன்ற நித்யஸூரிகள்,
விஷ்ணுவினுடைய அந்த மேலான பரம பதத்தில், எப்போதும் அவருக்கு சேவை செய்வதையே தொழிலாகக் கொண்டு,
எந்நேரமும், விழிப்புடன் விளங்குவார்கள்.
அந்த அனுபவம் சிறிது கணம் இல்லை என்றால் கூட அவர்களுக்கு எல்லாம் முடிந்து விடும் என்பதை
‘அமரர்‘ என்ற ஒரே வார்த்தையில் ஆழ்வார் தெரிவிக்கின்றார்.

ஆயர் தம் கொழுந்தே
இந்த பதத்தால் திருஅரங்கன் எளியவன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
மேன்மைக்கு எல்லை நிலமான, பிராட்டி, விஷ்வக்ஸேன, அனந்த, கருடன் போன்றவர்கள் அனுபவிக்கும்படி இருக்கும் எம்பெருமானை,
எளியவர்களும் அனுபவிக்கலாம் என்கிறார். மேன்மைக்கு எல்லை நிலமானவர்களை நியமிக்கும் தலைவனாக இருப்பது போல்,
ஆடுமாடு மேய்க்கும் இடையர்களாலும் பசுக்களாலும் நியமிக்கத் தகுமவனாய் இருந்து,
எளிமைக்கும் எல்லை நிலமாக பரமாத்மா இருக்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

பச்சை மா மலை, பவள வாய், கமலச் செங்கண், அச்சுதா, அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே என்ற
ஆறு பதங்களை சொல்லி அவற்றை
அறு சுவை உணவோடும்,
அவற்றை உண்பவர்களோடும் ஒப்பிட்டு,
தன்னால், ஆறு பதங்களில் ஒன்றில் இருந்து கூட நகர முடியாத போது,
அறுசுவை உண்பவர்களால் எப்படி ஒரு சுவையில் இருந்து மற்றொன்றுக்குச் செல்ல முடிகிறது என்று வியக்கிறார்.

யான் போய்
யான் போய் என்றதில் முதலில், யான் என்பதை பார்ப்போம்.
திருநாமங்களை சொல்ல வல்ல நாவினை கொண்ட நான் என்று முதல் பொருள்.
இன்னும் சில காலம் காத்திருந்து வேறு ஒரு தேசம் சென்று அனுபவிக்க பொறுமையுடன் இருக்க மாட்டாத நான் என்று இரண்டாவது பொருள்.
“போய்” என்று சொன்னது வேறு ஒரு தேசத்துக்கு செல்வதை சொன்னது.
திருமங்கை ஆழ்வாரின் “ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே” என்ற சிறிய திருமடல் பாசுரத்தின் வரியையும் மேற்கோளாக காட்டப்பட்டு உள்ளது.

இந்திர லோகம்
இந்திர லோகம் என்று சொன்னது இந்திரன் ஆளும் சொர்க்கத்தை அல்ல என்றும்
இந்திர என்ற சொல்லுக்கு முக்கிய அர்த்தமாக உள்ள பெருமாளையே குறிக்கும் என்று ஓர் விளக்கமும்,
எல்லோருக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவின் உறைவிடமான பரம பதத்தையே குறிக்கும் என்ற
இரண்டாவது விளக்கமும் சொல்லப்பட்டது.

அச்சுவை பெறினும் வேண்டேன்
“அச் சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகருளானே ” என்று சொன்னதில்,
பரம பதத்தை விட்டு அரங்க மா நகர் வந்து, தன்னுடைய அழகையும் குண நலன்களையும் இங்குள்ளோர் அனுபவிக்க வேண்டும்
என்று வந்த பெருமானை, தான் ஏன் அங்கு(பரம பதத்திற்கு) சென்று அனுபவிக்க வேண்டும் என்று ஆழ்வார் சொல்வது போல்
இந்த பாசுரம் அமைந்துள்ளது.

நம்மைப் போல், தாழ்ந்தோர்க்கு திரு அரங்கன், இங்கு வந்து சேவை கொடுக்கும் அழகை ரசிப்பதற்கு,
மேலுலகத்தில் இருந்து அங்குள்ள தேவர்கள் இங்கு (திருஅரங்கம்) வந்து தரிசிக்கும் போது,
தான் ஏன் அங்கு செல்ல வேண்டும் என்பது இன்னொரு கருத்து.

முதல் பாசுரத்தில் திருநாம வைபவத்தால் எமபயம் நீங்கியது என்று சொன்ன ஆழ்வார்,
இரண்டாவது பாசுரத்தால், இப்போது கிடைக்கும் திருநாம வைபவச் சுவை, என்றோ, எங்கோ, எப்படியோ கிடைக்கும்
பரமபத அனுபவத்தைவிட தான் அதிகம் ரசிப்பதாக சொல்லி ஸ்ரீவைகுந்தத்தை மறுக்கிறார்.

———-

மூன்றாவது பாசுரத்தால், இந்த பூவுலகமும் வேண்டாம் என்று மறுப்பதை காண்போம்.

வேத நூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகருளானே

வேதங்கள் எல்லோரும் பொதுவாக நூறு ஆண்டுகள் வாழ்வார்கள் என்றும்,
அதில் மனிதர்கள் எவராவது நூறு ஆண்டுகள் வாழ்ந்தால், அதில் பாதியாகிய ஐம்பது ஆண்டுகள் தூக்கத்திலும்,
மீதி ஐம்பது ஆண்டுகளை குழந்தை, சிறுவயது மற்றும் இளமை அல்லது வாலிப வயது போன்ற பருவங்களைக் கடந்து வந்தாலும்,
நோய், பசி, முதுமை போன்ற கொடுமைகளுக்கு தள்ளப்பட்டு விடுவதாலும்,
திருநாமங்களை சொல்லி அனுபவிப்பதற்கு நேரம் இல்லாமல் மொத்த காலத்தையும் இழந்து விடுவதால்,
தனக்கு இந்த பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் ஆழ்வார் முறையிடும் பாசுரம்.

இதற்கு முந்தைய பாசுரத்தில் ஸ்ரீவைகுந்தம் வேண்டாம் என்றவர்,
பூலோக வைகுந்தம் எனப்படும் திருஅரங்கம் தவிர வேறு எந்த இடமும் இவ்வுலகத்தில் வேண்டாம் என்று இந்த பாடலில் சொல்கிறார்.

ஆழ்வாரைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் உள்ள துன்பங்களை சொல்லி பெருமானிடம் முறையிடுவதைவிட,
திருநாமங்களை சொல்லும் காலம் குறைந்துவிட்டதே என்று உருகுகின்றதை தன்னுடைய அனுபவமாக சொல்லும் பாசுரம்.

நின்றதில் பதினைந்து ஆண்டு
ஒளவையார் என்ற பெரும் தமிழ் புலவரின் தனிப்பாடலின் படி,
“அரிது அரிது மானிடர் ஆதல் அரிது, மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது” என்ற
சொற்களின் படி மனிதர்களாய் பிறப்பதே கடினம்.
கர்ப்பத்திலும், பிறந்து சில நாட்களுக்கும், அல்லது சில மாதங்களிலும் அல்லது சில வருடங்களிலும் இறப்பவர்கள் அதிகம்.
அப்படியே தீர்க்க ஆயுள் என்ற நூறு ஆண்டுகள் வாழ்ந்தவர்களும் திருநாமங்களை சொல்ல நேரம் இல்லாமல்
வாழ்ந்து, இறந்து, மறுபடி பிறந்து அல்லல் படுவதால் இந்த பிறவியே வேண்டாம் என்று ஆழ்வார் சொல்கிறார்.

பேதை, பாலகன் மற்றும் வாலிபம் என்ற மூன்று பருவங்களுக்கும், தனித்தனியே
ஒவ்வொன்றுக்கும் பதினைந்து ஆண்டுகள் என்று முதல் அர்த்தம் கொள்ளலாம்.
அல்லது மூன்று பருவங்களுக்கும் சேர்த்து பத்து முறை ஐந்து ஆண்டுகள் (10 x 5) ( பதினையாண்டு) என்ற
ஐம்பது ஆண்டுகள் என்று இரண்டாவது விளக்கம் கொள்ளலாம்.

பேதை என்பது, பசி வலி என்றால் அழத்தெரியுமே தவிர அது என்னது என்று சொல்லத்தெரியாத பருவம்.
அதாவது திருநாமம் சொல்ல வராத வயது.
பாலகன் என்பது திருநாம சொல்ல முடிந்தாலும், அவைகளை சொல்லாமல் விளையாடித் திரியும் அறியாமை நிறைந்த பருவம்.
அது என்று ஆழ்வார் சொன்னது, தீமைகள் அதிகம் சூழுந்த வாலிபப் பருவம்.
தீமைகள் சூழ்ந்து இருப்பதால், இந்த வயதில் திருநாமம் சொல்வதும் அரிதாகிறது.
மேலும், ஆழ்வார் தனக்கு வாலிப பருவத்தில் நிகழ்ந்த பயங்கரமான அனுபவங்களால் வாலிபம் என்று சொல்லாமல் பயந்து அது என்கிறார்.
அதே போல், வாலிப பருவத்தில் செய்யும் குறும்புகளின் பலனாக வரும் விளைவுகளைக் குறிக்கவே
பிணி என்பதை வாலிபத்திற்கு பின்னே உடனே சொன்னார்.
மூப்பிற்கு பிறகாவது நிம்மதி வருமா என்றால், அதுவும் உறுதியாக தெரியாது ஏனென்றால்,

புனரபி ஜனனம் புனரபி மரணம், புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே க்ருபயா பாரே பாஹி முராரே – (பஜ கோவிந்தம் 21)

என்று ஆதிசங்கரர் சொன்னது போல், மறுபடி பிறப்பு மறுபடி இறப்பு என்று ஒரு சூழலில் திரியும் ஜீவாத்மா.
(கரையே இல்லாததும் கடப்பதற்கு மிகவும் கடினமானதுமான இந்த ஸம்ஸாரத்தில் மறுபடியும் மறுபடியும்
பிறக்க வேண்டும், இறக்க வேண்டும், மறுபடியும் தாயின் வயிற்றில் தங்கி பிறக்க வேண்டும்.
இப்படி முடிவில்லாத பிறத்தல் இறத்தல் ஆகிய சூழலில் சிக்கி தவிக்கும் என்னை கிருஷ்ணா
கருணை கூர்ந்து நீ தான் கரை சேர்த்து காப்பாற்ற வேண்டும் என்பது மேலே சொன்ன பாடலின் அர்த்தம்.)

பிணி பசி மூப்பு துன்பம்
ஆக தூக்கம், பசி, பிணி, மூப்பு மற்றும் துன்பம் போன்றவைகளால் திருநாமங்களை சொல்ல முடியாமல்,
நேரம் இல்லாமல் இருக்கும் இந்த பூவுல வாழ்க்கை தனக்கு வேண்டாம் என்று ஆழ்வார் மறுக்கிறார்.
முந்தைய பாசுரத்தில் ஸ்ரீவைகுண்டம் ஆகிய மேலுலகம் வேண்டாம் என்றவர் இப்போது இந்த பூவுலகம் வேண்டாம் என்கிறார்.
அதனை அறிந்த பெருமாள் ஆழ்வாரை பூவுலகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட (தோள் தீண்டி) பூலோக வைகுந்தம் எனப்படும்
ஸ்ரீரங்கத்தில் இருந்து திருநாமங்களை சொல்லி வருமாறு பணிக்கிறார்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இந்த பூவுலகத்தில் பசி பிணி மூப்பு துன்பம் இவை இருக்கும்.
ஆனால் பெரிய பெருமாளும், நம்பெருமாளும் உறையும், திருஅரங்கத்தில் அவை இருந்தாலும்,
நாம் திருநாமம் சொல்லி மகிழ்ந்து வாழலாம் என்று பொருள். இதற்கு காரணம் என்னவென்றால்,
சிறு வயதில், பெருமாள் அருகில் அன்ன ப்ராசனம் என்ற சடங்கு செய்வதால்,
குழந்தைக்கு (பேதை பருவத்திலேயே) பெருமாள் தொடர்பு இந்த பூலோக வைகுந்தத்தில் சிறுவயதிலேயே ஏற்படுகிறது.

அந்த குழந்தை, பாலகனாகும் போது, பெருமாள் புறப்பாடு நடைபெறும் போது
தாங்களும் தங்கள் விளையாட்டு பொருள்களை வைத்துக் கொண்டு அவர்களும் அவனுடன் சேர்ந்து புறப்பாடு நடத்துவதால்,
அவர்களுக்கு அரங்கன் சம்பந்தம் கூடுகிறது.
திருவரங்கத்தில் பெருமாளுக்கு வருடத்திற்கு சுமார் 250 நாட்கள் ஏதாவது ஒரு கொண்டாட்டம் அல்லது புறப்பாடு நடப்பதால்,
சிறுவர்கள் எல்லாவற்றிலும் பங்கு கொள்கிறார்கள்.
காவிரிக் கரையில், குழந்தைகள் பெரிய பாவாடை உத்ஸவம் செய்து விளையாடிடும் போது
அவர்களின் மணல் பிரசாதத்தை வாங்கி ஸ்ரீராமானுஜர் மகிழ்ந்த ஐதீகம் இங்கு மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது.
அதில் “தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே, தமர் உகந்தது அப்பேர்” என்ற
பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி (44) பாசுரத்தையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது.

வாலிப பருவத்தில் தங்களுக்கு வேண்டியவர்கள் கோவிலுக்கு வருவதால், தானும் கோவிலுக்கு வந்து,
திரு அரங்கனின் தொடர்பினை அதிகப் படுத்திக்கொள்கிறார்கள்.

மூப்பு வந்தால் அவர்களால் கோவிலுக்கு செல்ல முடிவதில்லை.
ஆனாலும் அரங்கனே நம்பெருமாளாக, வருடத்திற்கு 250 நாட்களுக்கு மேல் புறப்பாடு மேற்கொண்டு
அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து தரிசனம் கொடுத்து தன்னுடைய சம்பந்தத்தை உறுதி செய்து கொள்கிறார்.
இப்படி அரங்கனின் தொடர்பு எல்லா வயதிலும் இருப்பதால், கனவிலும் காண்பது அரங்கனின் வடிவழகாகத் தான் இருக்கும் ஆதலால்,
திருவரங்கமாகிய இந்த பூலோக வைகுந்தம் தனிச்சிறப்பு பெறுகிறது.

மூன்றாவது விபூதி
ஸ்ரீவைகுந்தம் முதல் விபூதி என்றும், இந்த பூவுலகம் இரண்டாவது விபூதி என்றும் பூலோக வைகுந்தமாகிய
திருஅரங்கம் மூன்றாவது விபூதி என்றும் இந்த பாசுர விளக்கத்தில் பார்த்தோம்.
பெரியாழ்வார் திருமொழியின் (5.4), இறுதியில், சென்னியோங்கு என்ற பதிகத்தில்,
பெரியவாச்சான் பிள்ளை விளக்கம் கொடுக்கும் போது, திருவேங்கடத்தை மூன்றாவது விபூதியாக சொல்கிறார்.
ஆண்டாளின் நாச்சியார் திருமொழி (103) பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காகும் சோராமே
ஆள்கின்ற எம் பெருமான்” என்ற பாசுரத்தில் எம் பெருமான் என்பதற்கு விளக்கம் கொடுக்கும் போது,
ஆண்டாளையே மூன்றாவது விபூதி என்று சொல்கிறார்.

இத்துடன் ஆழ்வாரின் அனுபவம் என்ற திருமாலையின் முதல் பகுதியான முதல் மூன்று பாசுரங்கள் முடிகிறது.

———————

நான்கு முதல் பதினான்கு வரையிலான பதினோரு பாசுரங்கள் –
தன்னுடைய அனுபவத்தை கொண்டு நமக்கு உபதேசம் செய்கிறார்

ஆழ்வார் தன்னுடைய அனுபவத்தை தொடராமல், நம் போன்றவர்களுக்கு உபதேசம் செய்வது ஏனென்றால்,

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் உபதேசம் செய்வது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளில் ஒன்று,
அதனால் அது இயற்கையில் அவர்களுக்கு உள்ள ஒரு பண்பு.

ஆழ்வார்களுக்கெல்லாம் தலைவராக கொண்டாடப்படும் நம்மாழ்வாரும் தன்னுடைய முதல் பத்திலேயே
‘வீடு மின் முற்றவும்” (1.2) என்ற இரண்டாம் பகுதியில் நமக்கு உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார்.

பெரியாழ்வாரும், முதலில் தான் திருப்பல்லாண்டு பாடி, அதில் திருப்தி கொள்ளாமல்,
தன்னுடன் ஐஸ்வர்ய, கைவல்யார்த்திகள் மற்றும் பகவத்லாபார்த்திகள் என்று எல்லோரையும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளுகிறார்.
அவர்களை ஒன்றன் பின் ஒன்றாக அழைத்தது மூன்று பாசுரங்கள்,
அவர்கள் வந்து சேர்த்தது மூன்று பாசுரங்கள்,
அவர்களுடன் சேர்ந்து பல்லாண்டு பாடியது மூன்று பாசுரங்கள் என்று ஒன்பது பாடல்களாக,
மொத்தம் பன்னிரண்டு பாசுரங்களுடன் தன்னுடைய பல்லாண்டு பதிகத்தை முடித்தார்.

நம் போன்றவர்கள் பகவான் கிருபைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தும், அதை இழக்கிறார்களே என்ற வருத்த பட்டு,
நம் மீது வெறுப்புற்றும், நம்மை நிந்தித்துக் கொண்டும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் உபதேசம் செய்ய தொடங்குகிறார்.

நல்ல உணவை ஒருவன் தனியாக உண்ணக் கூடாது என்றும்,
தனி ஒருவனாக வழிப்பாதையில் செல்லக் கூடாது என்றும்,
பலர் தூங்கும் போது, ஒருவன் மட்டும் தனியாக விழித்து இருக்கக் கூடாது என்றும் சொல்வதுண்டு.
அவைகளைப்போல், தொண்டரடிப்பொடி ஆழ்வார், ‘இன் கனி தனி அருந்தேல்” என்று பெருமாளின் இந்த இனிய அனுபவத்தை,
தான் மட்டும் தனியாக அனுபவிக்க விரும்பாதவராய் நம்மையும் அழைக்கிறார்.

இதேபோல் மற்ற ஆழ்வார்கள் சொல்வதை காண்போம்
“தொண்டீர்! வம்மின் நம்சுடரொளி ஒரு தனி முதல்வன்…. அணிதிரு மோகூர் …… கோயிலை வலம் இங்கு ஆடுதும் கூத்தே ”
(திருவாய்மொழி, 10.1.5) என்று நம்மாழ்வார், எந்த தொண்டரும் இந்த அனுபவத்தை இழக்கக் கூடாது என்றும்
திருமோகூர் கோவிலுக்கு சுற்றி வந்து எல்லோரும் ஒன்றாக கூத்து ஆட வேண்டும் என்றும்,

“தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி, ஆராத மனக்களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி ” (பெருமாள் திருமொழி, 1.9) என்று குலசேகராழ்வார்,
பெருமாளுடன் உண்டான அனுபவத்தை தனியே அனுபவிக்கக் கூடாது என்றும் சேர்ந்து பாடி, சேர்ந்து அனுபவித்து,
சேர்ந்து அழுது உருகிவிட வேண்டும் என்று சொல்வதும்,

“பெண் படையாரும் உன் மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்” (நாச்சியார் திருமொழி 7.8) என்று ஆண்டாள்,
எல்லோருக்கும் பொதுவான ஒன்றை, தான் மட்டுமே அனுபவிக்கும் பாஞ்ச ஜன்யம் என்ற சங்கிடம் முறையிடுவதும்
இது போன்ற வேறு சில உதாரணங்கள்.

மொய்த்த வல்வினை உள் நின்று, மூன்றெழுத்து உடைய பேரால்,
கத்திர பந்தும் அன்றே, பராங்கதி கண்டு கொண்டான்,
இத்தனை அடியனார்க்கு, இரங்கும் நம் அரங்கனாய,
பித்தனைப் பெற்றும் அந்தோ, பிறவியுள் பிணங்கு மாறே (திருமாலை 4).

பிராயச்சித்தம் செய்து போக்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பாபங்கள் செய்த க்ஷத்திர பந்து போன்றவர்களுக்கே
மிக உயர்ந்த பதவியான பரமபதம் கொடுக்க வல்லவனான நம் திரு அரங்கன் இருக்கும் போது,
அவனுக்கு நாம ஸங்கீர்த்தனம் செய்யாமல், இந்த பிறவிப் பிணியோடு உழல்கிறார்களே என்று ஆழ்வார் வருத்தம் அடையும் பாசுரம்.

மொய்த்த என்பதற்கு உரையாசிரியர் கொடுக்கும் விளக்கங்கள்:
அளவுக்கு அதிகமான பாபங்கள்-தேன்கூட்டை ஈ மொய்த்துக்கொள்வது போல்
நெய்குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிறைந்து நிற்கும் நோய்காள் என்று பெரியாழ்வார் சொல்வது போல் (பெரியாழ்வார் திருமொழி 5.2.1)
இராமாயணத்தில், சீதையை கண்ட அனுமனுடன் வந்த குரங்குகள் அனைத்தும் நான் முந்தி, நீ முந்தி, என்று
ராமனிடம், செய்தி சொல்ல வந்த ஆவலை போல்,
அளவுக்கு அதிகமான வேகத்துடன் நம்மை வந்து அடையும் பாவங்கள்
உலகை படைப்பதில் பரமாத்மாவிற்கு உள்ள சர்வ சக்தியைப் போல்
இந்த ஜீவாத்மாவிற்கு பாவங்களை செய்வதில் அளவு கடந்த சக்தி உள்ளது

பட்டு பூச்சி எப்படி வெளியே வராதபடி தன்னை சுற்றி ஒரு கூடு கட்டிக் கொள்ளுமோ அதேபோல்,
இந்த ஜீவாத்மாக்கள் தன்னை சுற்றி பாபங்கள் ஆகிய மிக பெரிய கூட்டை கட்டிக் கொள்ளுகின்றன.
மேரு மந்திர மலைகளை போல் அளவுக்கு அதிகமான பாவ குவியல்கள், கேசவா என்று சொன்னவுடன் அழிவது
அளவு கடந்த பாவங்களை செய்த நாம், ஒரு பாவத்தைப் போக்குவதற்கு, இரு பிறவி அல்ல, பல பிறவிகள் அல்ல,
இந்த கால தத்துவம் உள்ள அளவும் ஒரு ஜீவாத்மா போராடவேண்டி உள்ளது.
இத்தனை பாவங்களை போக்குவதற்கு உள்ள வழி, திருநாம ஸங்கீர்த்தனமே ஆகும்.
அவற்றால், நெருப்பிலிட்ட பஞ்சு பொதி போல் எல்லா பாவங்களும் அழியும்.
கொடுமையான பாவங்களுக்கு நடுவே நன்றாக உள்ளே இருந்து, ஆழ்ந்து வெளியே வர முடியாமல் இருக்கும்
நிலையை தெரிவிப்பதற்காக, ஆழ்வார், வல்வினையில் நின்று என்று சொல்லாமல்,
வல்வினை உள் நின்று என்று சொல்கிறார்.

மூன்று எழுத்து கொண்ட பெயர் என்ன என்று கேட்பதற்காகவது ஆழ்வாரை அணுகுவோம் என்ற நம்பிக்கையில்,
கோவிந்தா, விஷ்ணுவே, கேசவா, மாதவா என்று ஏதாவது ஒரு பெயரைக் கூறாமல்,
மூன்று எழுத்து உடைய பெயரால் என்று மறைத்து சொல்கிறார்.
பெரியாழ்வாரும் “மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்” (பெரியாழ்வார் திருமொழி (4.7.10)) என்று
மறைத்து கூறுவது இன்னொரு உதாரணம்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10.2.1) “கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன ” என்பதனை பார்த்தால்,

திரு நாம ஸங்கீர்த்தனம் செய்த அளவில், திருவனந்தபுரம் செல்வதற்கு உள்ள தடை எல்லாம் நீங்கும் என்றும்,
கேசவா என்று மூன்று எழுத்துடைய பெயரை சொன்னால், விரோதி என்று பெயர் பெற்ற எல்லாம் நீங்கும் என்றும்
ப்ராரப்த கர்மங்கள் (இந்த பிறவிக்கு முந்திய பிறவிகளில் கிடைத்த கர்ம பலன்கள்) ,
ஸஞ்சித கர்மங்கள் (இந்த பிறவியில் கிடைத்த கர்ம பலன்கள்) என்று பாகுபாடு இன்றி எல்லாம் கெடும் என்றும்,
கேசவ நாமத்தை சொன்னால், நரக வேதனை அனுபவிக்க வேண்டாம் என்றும்,
உள்ள கருத்துக்கள், இந்த பாடலுடன் உள்ள தொடர்பினை ரசிக்க வைக்கும்.

நாம் பாவம் செய்த காலத்தின் அளவை வைத்து பார்த்தாலும்,
செய்த பாவங்களின் தாக்கத்தை வைத்து பார்த்தாலும்,
இத்தனை பாவங்களை தீர்க்கும் திருநாமம் அவ்வளவு வலிமையானதா என்ற சந்தேகம் வரும் போது,
திருநாமத்தின் ஒவ்வொரு எழுத்துமே பாபங்களை போக்கி மோக்ஷம் கொடுக்க வல்லது என்பதை தெரிவிக்கவே,
ஆழ்வார் ஒரு சொல் என்று கூறாமல், மூன்று எழுத்து என்று கூறுகிறார்.

யாவரும் சொல்லலாம், எந்த விதிமுறையும் இன்றி சொல்லலாம் என்பதை எடுத்து உரைப்பதற்காக,
ஆழ்வார் மூன்று எழுத்து உடைய மந்திரத்தால் என்று சொல்லாமல், மூன்று எழுத்து உடைய ‘பேரால்‘ என்று சொல்கிறார்.

ப்ரஹ்ம பந்து என்பவர் ப்ராஹ்மணர்களில் மிக தாழ்ந்தவர் என்றும்,
க்ஷத்திர பந்து என்பவர் க்ஷத்திரர்களில் மிக தாழ்ந்தவர் என்றும் சொல்வார்கள்.
க்ஷத்திர பந்து ஒருவனுக்கும் கோவிந்த என்ற நாமம் சொன்னதால், மோக்ஷம் கிடைத்தது என்று விஷ்ணு தர்மம்
என்ற நூலில் சொல்லப்பட்டதை இங்கு ஆழ்வார் கூறுகிறார்.
க்ஷத்திர பந்து என்று ரிஷிகள் கூட்டத்தில் சொன்னால், அவர்கள் மிகவும் பயந்து வெறுப்பார்கள் என்றும்,
அதே போல், நாலூரான் என்று நம் வைணவ அடியவர்கள் குழுவில் சொன்னால்,
கூரத்தாழ்வான் தன்னுடைய ஊனக் கண்கள் இழந்த சரித்திரத்தை நினைத்து பதறுவார்கள் என்று
பெரியவாச்சான் பிள்ளை சொல்வதை இங்கே குறிப்பிட வேண்டும்.

திருநாமம் சொல்வதற்கு பாபங்கள் நீங்குவதே பெரிய பலனாக இருக்க,
அதையும் தாண்டி, ஐஸ்வர்ய, கைவல்ய பலன்கள் இல்லாமல், நித்யஸூரிகள் எப்போதும் அனுபவிக்கின்ற
பரமபத ப்ராப்தியை கொடுப்பதையே, ஆழ்வார் பராங்கதி என்று சொல்கிறார்.

திருநாம வைபவம் என்பது, மணியில் உள்ள அழுக்கை நீக்கி ஒளிவிட செய்வது போலவும்,
பள்ளம் தோண்டி, தண்ணீரை வெளியே வரச்செய்வது போலவும் ஆகும்.
ஒளியோ, தண்ணீரோ அங்கு உருவாக்கப்படவில்லை, அவை இருப்பது வெளியே உலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

‘கண்டுகொண்டான்‘ என்று சொன்னது,
எதோ புதிதாக பெற்ற பலனாக கருதாமல், ஏற்கனவே அனுபவித்து வந்ததை, இழந்து, பின் திரும்பி பெற்றதைப் போல்
ஜீவாத்மா உணர்கிறது என்று ஆழ்வார் சொல்கிறார்.

இப்படி இந்த ஜீவாத்மாவிற்கு மோக்ஷத்தை அளித்த பின்பும், தான் அவனுக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று
கலங்கும் அரங்கன் என்பதை, இரங்கும் நம் அரங்கன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
‘உன் அடியார்க்கு என் செய்வேன் என்று இருத்தி,” (பெரிய திருவந்தாதி, 53) என்று நம்மாழ்வார் சொல்வதை நினைவில் கொள்ளலாம்.

முன்பு நடந்தவைகளை மறந்து, அவ்வப்போது இருக்கும் நிலையை கொண்டு காரியம் புரிதல் பித்தர்களின் சுபாவம்.
திருஅரங்கனும் நாம் முன் காலங்களில் செய்த பாபங்களை எடுத்துக் கொள்ளாமல், நாம் சொல்லும் நாம ஸம்கீர்த்தனத்தை மட்டும்
மனதில் கொண்டு நமக்கு அருள் புரிவதால், திருவரங்கனை பித்தன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இதே போல், பித்தர்கள் தன்னுடைய முன்னாள் நிலையையும் மறந்து விடுவார்கள்,
மற்றவர்களின் நிலைமையையும் மறந்து விடுவார்கள்.
திருஅரங்கனும், தன்னுடைய மிக உயர்ந்த நிலையான ஸ்ரீவைகுந்தத்தில் இருந்து வந்ததை மறந்து விட்டு,
திருஅரங்கத்தில் மிக எளியவனாக, நம்மை போன்ற தாழ்ந்தவர்கள் செய்த எண்ணிலடங்கா பாபங்களையும்
ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், நமக்கு கொடுக்கும் பலனாக வைகுண்ட ப்ராப்தியின் பெருமையும் நினைவில் கொள்ளாமல்,
அதையே நமக்கு அளிப்பதால், ஆழ்வார் திருஅரங்கனை பித்தன் என்று கூறுகிறார்

——–

சர்வேஸ்வரனுக்கு கௌஸ்துப மணியைப் போல ஆசைப்படத்தக்க இந்த ஆத்மா,
இப்படி அழிந்து போவதைக்கண்டு பொறுக்க முடியாமல், இந்த பாடலில் ஆழ்வார் கதறுகிறார்.

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான், பெரியதோர்
இடும்பை பூண்டு, உண்டு இராக் கிடக்கும் போதும், உடலுக்கே கரைந்து நைந்து,
தண் துழாய் மாலை மார்பன், தமர்களாய்ப் பாடி யாடி,
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர், சோறு உகக்குமாறே. (திருமாலை 5)

எல்லா திருமாலை பாசுரங்கள் போல் இந்த பாசுரமும் எளிமையானது, ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடைக்கியது.

சிறந்த பகவத் அனுபவத்தை விட்டு, தாழ்ந்த உலக விஷயங்களில் ஈடுபட்டு, வாழ்க்கையை வீண் அடிக்கிறார்களே
என்று சென்ற பாட்டில் கவலைப்பட்ட ஆழ்வார், இந்த பாசுரத்தின் முக்கிய கருத்தாக சொல்வது,
இந்த உடம்பு கொண்டு நாம் பெரும் இன்பங்கள் தாழ்ந்தது, நிரந்தரம் இல்லாதது, அடைவதற்கு கடினமானது என்றும்,
பெருமாள் அனுபவம் எளியது, இனிமையானது, நிரந்தர பலன் தருவது என்பதே.

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் என்று ஆழ்வார் சொல்வது,
எப்படி பெண்களால் ஆண்கள் சுகம் அடைவார்களோ, அதே போல், ஆண்களால் பெண்களும் சுகம் அடைவார்கள்
என்று பெண்களுக்கும் பொருந்தும்.
இப்படிப்பட்ட சுகங்கள்,தீயை அணைத்துக் கொள்வது போன்றும்,
படமெடுக்கும் பாம்பின் நிழலில் இளைப்பாறுவது போன்றும்,
விஷம் கலந்த உணவை உண்டு உயிர் வாழ நினைப்பதை போன்றும் உள்ளது என்கிறார்.

துன்பத்திற்கு காரணமான இவைகளை இன்பம் என்று மக்கள் நினைப்பதை ஆழ்வார் இங்கு வருத்தப்பட்டு கூறுகிறார்.
நம்மாழ்வார் சொன்னபடி “கொண்ட பெண்டிர்” (9.1.1) என்றாலும் அல்லது வேறுவிதமான பெண்களாய் இருந்தாலும்,
பணம், பொருள் உள்ள வரையில் தான் அவர்கள் அன்பு செலுத்துவார்கள் என்று சொல்வது மிக பொருத்தம்.
மேலும் இருவருடைய நோக்கங்களும் (ஒருவருக்கு பொருளின் மீது நாட்டமும் மற்றவர்க்கு இன்பத்தின் மீது ஆசையும்)
வேறு வேறாக இருப்பதால் இருவரும் வேண்டியதை முழுவதுமாக அடையமுடியாமல் தவிப்பார்கள் என்கிறார்.

பெரியதோர் இடும்பைப் பூண்டு என்று சொன்னதில்,
தாழ்ந்த பலனுக்காக நாம் பெரும் துன்பங்களை அனுபவிக்கிறோம் என்று தெரிகிறது.
ஆனால் மிக உயர்ந்த பலனான பெருமாள், நாம் செய்யும் மிக எளிதான காரியத்திலேயே கிடைத்து விடுகிறான்.
நாம் வெறும் அஞ்சலி செய்தால் கூட, அவன் நீராக உருகி நமக்கு எல்லாவற்றையும் செய்ய தயார் ஆகிறான்.
அஞ்சலி செய்வதும் எளிது, அதன் பலனும் நிரந்தரம்.

அஞ்சலி என்ற வார்த்தைக்கு வேதாந்த தேசிகன் என்ற ஆச்சாரியார் சொல்லும் அர்த்தம்,
அ என்பது அகார வாச்சன் ஆன பரமாத்மாவையும்,
சலி என்பது அவன் அந்த முத்திரைக்கு, நீர் பண்டமாக உருகிவிடுவதையும் குறிக்கிறது என்று சொல்கிறார்.

உடலுக்கே கரைந்து நைந்து என்று சொல்வதால், உடல் வேறு ஆத்மா வேறு என்று கூட அறியாதவன் என்றும்,
தொடர்ந்து வரும் பிறவி துன்பங்களை அறியாதவன் என்றும்,
அதனால் அவற்றை தவிர்க்கும் வழி பற்றி சிந்திக்க தவறுகிறானே என்று ஆழ்வார் வருந்துகிறார்.

பாடி ஆடி, என்பதில், பெருமாள் அனுபவத்தில், அனுஷ்டானங்கள் அதிகம் இல்லை என்றும்,
தான் அவனுக்கு அடியவன் என்ற இயற்கையான உறவை ஒத்துக் கொண்டால் போதும் என்று சொல்வதாகிறது.

அமுதம் உண்ணா என்பதற்கு
உரையாசிரியர் சொல்லும் ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினத்தின் 55ம் பாடலை நினைவு கூறுகிறார்.
அதில் ஆளவந்தார், பெருமாளுக்கு அடிமைப்பட்டு இருப்பதிலேயே சுகம் காண்பவர்கள் இல்லத்தில்,
தான் ஒரு புழுவாகப் பிறந்தாலும் ஒரு பாக்கியமே என்றும்,
வேறு எங்கும் பிரமனாக பிறந்தாலும் அது வேண்டாம் என்றும் சொல்கிறார்.

தொழும்பர், சோறு உகக்குமாறே என்பதற்கு
அத்தகைய அமுதத்தின் இனிமை அறியாமல், தாழ்ந்த விஷயங்களை விரும்பும் நீசர் என்று பொருள் கொள்ள வேண்டும்.

துன்பத்திற்கு காரணமானவைகளையே இன்பமாக எடுத்துக் கொள்ளும் ஜீவாத்மாக்களை திருத்த
ஆழ்வார் செய்யும் இன்னொரு முயற்சி என்று இந்த பாடலை கொள்ளலாம்.

———

மறம் சுவர் மதிள் எடுத்து, மறுமைக்கே வெறுமை பூண்டு,
புறம் சுவர் ஓட்டை மாடம், புரளும் போது அறிய மாட்டீர்,
அறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆட் செய்யாதே,
புறம் சுவர் கோலஞ் செய்து, புள் கவ்வக் கிடக்கின்றீரே. (திருமாலை 6)

இவ்வுலக இன்பங்கள் நிரந்தம் இல்லை என்றும், பல குற்றங்கள் இருக்கின்றன என்றும்,
சென்ற பாடலில் ஆழ்வார் சொன்னதை, நம் போன்றவர்கள், ஒப்புக் கொண்டாலும்,
அவர்கள் இப்படியே பல சிறு சிறு இன்பங்களை அனுபவித்து கொள்கிறோமே என்று விலகி செல்ல ஆரம்பித்த போது,
ஆழ்வார் நிலையற்ற இந்த இன்பங்களை போல் அவர்களும் நிலை இல்லாத உடலினை கொண்டவர்களே என்பதை விளக்கும் பாடல்.

மறம் சுவர் மதிள் எடுத்து என்றதில் மறம் என்று சொன்னது, அறம் என்பதற்கு எதிர் சொல்லாக உபயோகித்து,
அருள் இல்லாமை, கோபம், கர்வம் மற்றும் அகங்காரம் போன்ற குணங்களை தனக்கு சுவராக கொள்ளும் மனிதன் என்கிறார்.
இப்படிப்பட்ட குணங்களால் தங்களைச் சுற்றி ஒரு மதிள் எடுத்து, நல்ல நண்பர்கள் கூறும் அறிவுரைகளை மதிக்க தவறி விடுவதால்,
மாரீசன், மால்யவான், கும்பகர்ணன், மற்றும் விபீஷணன் போன்றவர்கள் இராவணனுக்கு சொன்னது போல் பலன் இன்றி போகிறது.

கர்வமின்மை, தற்பெருமையின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை,
ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுப்படுத்துதல் போன்றவை கீதையில் நமக்காக சொல்லப்பட்ட நல்ல குணங்கள். (13- 7 பகவத்கீதை)

நாம் கர்ம பலன்களை துறந்து பிரம்மத்தை அடைய வேண்டியதே ஒவ்வொரு உயிரின் ஒரே குறிக்கோளாக
இருக்க வேண்டும் என்று வேதங்கள் உரைக்கின்றன.
பரமாத்மா, நாம் மறுமைக்கும் (இந்த பிறவிக்குப் பிறகு), இந்த பிறவியிலேயே, நல்லன பல செய்து வைக்க வேண்டும்
என்று எண்ணங்களுடன் நமக்கு கை, கால் உடம்பு மற்றும் மனம் புத்தி எல்லாம் அளித்தார்.

இதை நாம் பெரியாழ்வாரின் சரித்திரத்தைப் படிக்கும் போதும் உணரமுடியும்.
ஒரு மனிதன் இந்தப் பிறவியில், கடவுளைப் பற்றி அறிந்து கொண்டும், அவரை நினைத்துக் கொண்டும் வாழ்ந்தால் தான்,
அவனால் இந்தப் பிறவிக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று ஒரு யோகி சொன்னதை மனதில் கொண்டு தான்,
அரசர் வல்லபதேவன், தனது குருவான செல்வ நம்பியிடம் ‘முழு முதல் பொருளான கடவுள் யார்’ என்பதை அறிய முற்பட்டதும்,
பெரியாழ்வார் அரசவைக்கு வந்து அரசனின் சந்தேகத்தை தீர்த்தும், கருட வாகனனாக பெருமாள் வானில் தோன்றியதும்,
பெரியாழ்வார் பல்லாண்டு பாடியுதும் ஒரு இனிய சரித்திரமே.

ஆனால், நாம் தீய காரியங்களை இந்த பிறவியில் செய்வதாலும், இறந்த பிறகு உள்ள காலத்திற்கு ஒன்றும் செய்யாததாலும் ,
மறுமைக்கே வெறுமை பூண்டு என்று ஆழ்வார் சொல்கிறார்.
உரையாசிரியர் இங்கு ” ஸ்த்திதே மநஸி ” என்று தொடங்கும் வராக சரம ஸ்லோகத்தை நினைவு படுத்துகிறார்,
நாம் நல்ல நிலைமையில் இருக்கும் போது அவனை ஒரு கண நேரம் உண்மையாக நினைப்போம் என்றால்,
நாம் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் கிடக்கும்போது, அவன் நம்மை நினைவில் கொண்டு
மேலான கதிக்கு அழைத்து செல்கிறான் என்பதே வராக சரம ஸ்லோகத்திற்கு பொருள்.

இதை நம்மாழ்வார் திருவாய்மொழியில், (3.10.11), “அவன், நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி,
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தருமொரு நாயகமே” என்று சொல்லி,
நம் காரியங்களை, அவன் தன் காரியங்களாக நினைத்து செய்வான் என்கிறார்.

நாம் ஆத்மா என்று உள்ளே இருக்கிற சத்தான விஷயத்திற்கு உண்டான நன்மைகளை செய்யாமல்,
வெளி விஷயங்களில் கவனம் செலுத்துவதால், நம் உடம்பினை புறம் சுவர் என்று ஆழ்வார் சொல்கிறார்.
நிலையற்றதான ஓட்டை குடிசை போல் உள்ள உடம்பினை, நாம் நிலையான ஒரு மாளிகையைப் போல் நினைப்பதால்,
அதனை ஆழ்வார் ஓட்டை மாடம் என்கிறார்.
இவ்வுலகில் வாழும் நாட்கள் எவ்வளவு என்று அறிய மாட்டோம் என்பதை, புரளும் போது அறிய மாட்டீர் என்கிறார்.

அறம் சுவராகி நின்ற என்று சொல்வதன் மூலம், தர்மமே இயல்பானவர் என்றும், தர்மத்தைக் காப்பவர் என்றும்
திருஅரங்கனை குறிப்பிடுகிறார்.
இராமாயணத்தில் மாரீசன் என்ற அரக்கனின் வாக்காக, “இராமன் தர்மமே உருவெடுத்தவன்” சொல்லப்படுகிறது.
(ராமோ விக்ரஹவான் தர்ம) வேதம் அறிந்த ப்ராஹ்மணர்களும் ஆத்ம ஸ்வரூபம் அறிந்த பெரியோர்களும்,
கிருஷ்ணனையே தர்மமாக அறிகிறார்கள் என்றது மஹாபாரத வாக்கியம். (கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்).
எல்லா ஜீவராசிகளையும் கரை ஏற்றினால் அன்றி இங்கிருந்து எழுந்திருக்க மாட்டேன் என்று
காவேரி கரையில் பள்ளிகொண்டு இருக்கும் பெருமாளை இங்கு ஆழ்வார் “அறம் சுவர்” என்று மேற்கோள் காட்டுகிறார்.

நெடுங்காலமாக தான் செய்த பாவங்களினால், பெருமாளுக்கு அடிமைப் படாமல், தொடர்ந்து கர்மாக்களுக்கே
அடிமைப்பட்டு இருப்பதை ஆட்செய்யாதே, என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஆத்மாவிற்கு அலங்காரம் செய்வது என்பது, அவனுக்கு அடிமை செய்வதாகும்.
அப்படி செய்யாமல், தங்கள் உடம்பிற்கு அலங்காரம் செய்வது என்பது,
புது வீட்டைக் கட்டி அதனுள் பெருச்சாளி இருக்கும் போது வெளியே அலங்காரம் செய்வது போன்றதாகும்
என்ற விளக்கத்தை உரையாசிரியர் புறம் சுவர் கோலம் செய்து என்ற பதத்திற்கு கூறுகிறார்.

இப்படிப்பட்ட மனிதர்கள் இறந்த பின்பு, மாமிசம் உண்ணும் பறவைகளும் இவர்க்ளின் உடலை உண்பதில்லை என்பதை
புள் கவ்வ கிடக்கின்றீரே என்று ஆழ்வார் சொல்கிறார்.
‘உண்ணாமல்’ என்று சொல்லாமல், ‘கவ்வ‘ என்று சொல்வதன் மூலம் அந்த பறவைகளும் இப்படிப்பட்ட மனிதர்களின்
உடலை வெறுக்கின்றன என்று ஆழ்வார் சொல்கிறார்.
நமக்கு என்று பெரிய பெருமாள் அருகில் இருக்க, அவரை இவர்கள் அலட்சியம் செய்தது போல்,
இந்த பறவைகளும் அவர்களை வெறுக்கின்றன என்று சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.

இப்படி இவர்கள் உயிரற்று கிடக்கும் போது ஆழ்வார் இப்படி சொல்கிறாரா என்றால், இல்லை,
அவர்கள் உயிரோடு இருக்கும் போதே எச்சரிக்கை செய்கிறார்.
இராவணன் சிம்மாசனத்தில் இருக்கும் போது, இராமபிரானிடம் கொண்ட விரோதத்தால் இராவணனும், இலங்கையும்,
அழிந்துவிடும் என்று திருவடி, எச்சரித்ததை இங்கு மேற்கோள் காட்டுகிறார்.
அதே போல் மகாபாரதத்தில், யுத்தத்தின் முடிவில் இறந்து கிடக்கும் கௌரவர்களை பார்த்து தான் சொன்னதை கேட்காததால்
அவர்களுக்கு கிடைத்த முடிவை நினைத்து வியாசர் வருந்துவதும் இங்கு மேற்கோள் காட்டப்படுகிறது.

————–

அடுத்து வரும் நான்கு பாடல்களும் உபதேசத்திற்குள் ஒரு இனிமையான சிறு தொகுதி
அல்லது ஒரு கருத்து செறிவுள்ள முக்கிய சிறு உட்பிரிவு.

ஸ்ரீராமனே தேவன் ஆவான்

புலை அறமாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்,
கலை யறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம்,
தலை யறுப் புண்டும் சாவேன் (சாகேன் )சத்தியம் காண்மின் ஐயா,
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான். (திருமாலை 7)

தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர், என்றும்
புள் கவ்வக் கிடக்கின்றீரே என்றும் சென்ற பாசுரங்களில் ஆழ்வார் சொன்னதை கேட்ட நம் போன்றவர்கள்,
இப்படி தங்களை இகழ்வதால் பயன் ஒன்றும் இல்லை என்றும்,
இதுவே உலக இயற்கையாக உள்ளது என்றும்,
தண் துழாய் மாலை மார்பன் என்று சொல்லப்படும் பரமபதநாதன் எங்கோ எட்டாத தூரத்தில் உள்ளான்,
அவனை அடைய பல தடைகளும் உள்ளன, அத்தகைய தடைகளை தாண்ட வழிகளை சொல்லித் தந்து
அவன் யார் என்பதையும் தங்களுக்கு எளியதாக சொல்லும்படி ஆழ்வாரிடம் வேண்டினார்கள்.
அதற்கு ஆழ்வார், இங்கு வந்து அவதரித்து, தடைகளை நீக்குவதே இயல்பாக கொண்டவனாக
சக்ரவர்த்தித் திருமகன் என்னும் ஸ்ரீராமனையே அடைய வேண்டும் என்று தெளிவாக சொன்ன பாசுரம்.

வேதத்தை ஒப்புக் கொள்ளாதவர்களையும், வேதத்தை ஒப்புக் கொண்டு அதற்கு தப்பான அர்த்தத்தை கற்பிப்பவர்களையும்,
பாடலின் முதல் வரியில் ஆழ்வார் குறிப்பிட்டு அவர்களை அறவே விலக்குவது,
அதாவது, அவர்களை பார்க்காமலும், அவர்கள் வார்த்தைகளை கேட்காமலும் இருக்க வேண்டும் என்பது
வழக்கம் என்பதை நமக்கு தெரிவிக்கின்றார்.

கூரத்தாழ்வான், இஷ்ட சித்தி என்ற புறச் சமய நூலை, மற்றவர்கள் படிப்பதை சிறிது நேரம் கேட்டதற்காக
அவரின் திருத் தகப்பனார், “கலையறக்கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம் ” என்ற ஆழ்வார் வாக்கியம் இருக்க,
இப்படி செய்யலாமோ என்று சொல்லி அவருக்கு ஸ்ரீபாத தீர்த்தம் கொடுத்து அவரை பரிசுத்தப் படுத்தினார்
என்பது இங்கு குறிப்பிட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான ஐதீகம்.

மேலும் கலையறக் கற்ற மாந்தர் என்பதற்கு,
வேதம் மற்றும் மனு முதலானவர்கள் இயற்றிய தர்மசாஸ்திர நூல்களை கற்றவர்களும்,
இதிகாச புராணங்களை நன்கு தெரிந்தவர்களும்,
நல்ல தர்க்கங்கள் போன்ற உண்மைகளை பற்றியவர்களும் ஆவார்கள் என்றும்,
அவர்களுக்கு கூரத்தாழ்வானையே ஒரே உதாரணமாகவும் பெரியவாச்சான்பிள்ளை கூறுகிறார்.

சக்ரவர்த்தி திருமகனாகிய ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே நாம் பற்ற வேண்டிய பரம்பொருள் என்ற உண்மையை
நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆழ்வார்,
தன்னுடைய தலையை வெட்டினாலும் சாக மாட்டேன் என்று சத்தியம் செய்வதாவும்,
அதைப் பார்த்த பிறகாவது, நாம் அதில் உறுதி கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
இங்கு சாகேன் என்று ஒரு பாடமும், சாவேன் என்று இன்னொரு பாடமும் இருக்கின்றன. இரண்டுக்கும் அர்த்தம் ஒன்று தான்.
ஆழ்வார் சத்யம் செய்ததே போதும் என்று அனைவரும் ஆழ்வார் சொல்வதை ஏற்றுக்கொள்ள தயார் ஆனார்கள்.

ஸ்ரீராமன், தர்மாத்மாவாகவும், சத்தியவானாகவும், வீரத்தில் எவருக்கும் ஒப்பு இல்லாதவனாகவும் இருப்பது சத்தியமானால்,
யாரும் தன் தலையை அறுக்க முடியாது என்று வரம் வாங்கியிருந்த இந்திரஜித்தை தன் அம்பு அழிக்கட்டும் என்று
லட்சுமணன் சத்தியம் செய்து அதை செய்து காட்டியதையும் இங்கு பெரியவாச்சான் பிள்ளை நினைவு கூறுகிறார்.

இராவணனின் பலம் பெருகுமாறு வரம் கொடுத்த தேவதைகள் தங்களுடைய பதவிகளை காத்துக்கொள்ள,
பெருமாளிடம் வரம் வேண்டியதால், அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த பூமியில் இராம அவதாரம் எடுத்து
தன்னுடைய கை வில்லினாலே இலங்கையை அழித்த ஸ்ரீராமனே நாம் அடையவேண்டிய தெய்வம் ஆகும்
என்று ஆழ்வார் அடுத்த வரியில் கூறுகிறார்.
இந்த இராவணனை பெருமாள் ஸ்ரீ வைகுந்ததில் இருந்து தன்னுடைய சங்கல்ப சக்தியினால் அழித்து இருந்தால்,
யார் செய்தார் என்பது விளங்காமல் போயிருக்கும்.
இதிலிருந்து தேவதைகளையும், மற்றும் எல்லோரையும் காக்கும் தெய்வம், ஸ்ரீராமன் என்று உறுதியாக தெரிய வரும்.
இராவணனை கொன்ற பிறகு, தனி வீரனுக்கு உள்ள அழகுடன் தோன்றும் அவனே(தேவனே) நமக்கு கதி என்று
சொல்லும்படி உள்ள பரம்பொருள் (தேவன் ஆவான்) என்று முடிக்கிறார்.

———

இனி அடுத்த பாசுரம்–வேதத்திற்கு புறம்பான வார்த்தைகள்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்,
பொறுப்பு, அரியனகள் பேசில் போவதே நோயதாகி,
குறிப்பு எனக்கு அடையுமாகில் கூடுமேல், தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய், அரங்கமா நகரு ளானே. (திருமாலை 8)

சென்ற பாசுரத்தில், சக்கரவர்த்தி திருமகனாகிய ஸ்ரீ ராமனை பின்.பற்றுங்கள் என்று தெளிவாக சொன்ன பிறகும்,
சம்சாரிகள் அவனை பின் பற்றாமல், உண்டு உறங்கி, எம்பெருமானை குறித்து பொறுக்க முடியாத
வார்த்தைகளை பேசுவதற்கு காரணம், அவர்களுக்கு பிற சமயங்களில் ஏற்பட்டிருக்கும் ஈடுபாடே ஆகும் என்றும்,
அவர்கள் மிக பெரிய தண்டனைக்கு உரியவர்கள் என்றும் பெரிய பெருமாளை குறித்து பாடும் பாசுரம்.

அனைவர்க்கும் பெரியவனாகவும், நல்ல குணம் உடையவர்களில் தலை சிறந்தவனாகவும் விளங்கும் பரமாத்மாவான
ஸ்ரீமன் நாராயணனை இழித்து உரைக்கும் வார்த்தைகள் வைதீகர்களுக்கு பொறுக்க முடியாதவைகளாகும் என்பதை
‘பொறுப்பறியன‘ என்று ஆழ்வார் உரைக்கிறார்.
மேலும் அந்த வார்த்தைகளை தன் வாயால் சொல்லக் கூடாது என்று அவற்றை எந்த வார்த்தைகள் என்று கூறாமல்,
‘பொறுப்பறியன‘ என்று ஆழ்வார் விட்டு விட்டார்.
ஆண்டாள், திருப்பாவை இருபத்தி ஐந்தாம் பாசுரத்தில், ‘தான் தீங்கு நினைந்த‘ என்றும்,
நாச்சியார் திருமொழி (47), ‘அன்று இன்னாத செய் சிசுபாலனும்‘ என்றும்,
நம்மாழ்வார் திருவாய்மொழி (7.5.3) ‘கீழ்மை வசுவுகளே வையும் ‘ சொல்பவை இதே போன்ற உதாரணங்கள்.

பிள்ளை திருநறையூரரையர் என்ற சத்வ குணம் நிரம்ப பெற்ற ஸ்ரீ வைஷ்ணவர், திருச்சி மாவட்டத்தில் உள்ள
திருநாராயணபுரத்தில் எம்பெருமானுக்காக உயிரை விட்டது போல்,
எம்பெருமானை பற்றிய நிந்தனையை கேட்டால், அதையே காரணமாக கொண்டு உயிரை விட வேண்டும் என்றும்,
உயிரை விட துணிவு இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்றும் உரையாசிரியர் கூறுகிறார்.
இப்படி சொல்வது, எந்த இடத்தில், ஆசார்யனைப் பற்றி அவதூறு பேசப்படுகிறதோ காதுகளை பொத்திக்கொள்ள வேண்டும்
அல்லது அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்று மனுஸ்ருதியில் கூறப்பட்டு உள்ளதை ஒத்து உள்ளது.
இதுவே ஆழ்வார் கூற்றில் ‘போவதே நோயதாகி‘ என்றாயிற்று.

அரங்கமாநகருளானே என்று சொன்னதற்கு,
விபவதிற்கு பின்பு பிறப்பவர்களின் எதிரிகளை போக்குவதற்காகவே இருக்கும்
அரங்கன் என்று சொல்லி இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

————-

கண்ணன் கழலிணை பணிமின்-

மற்றுமோர் தெய்வம் உண்டே, மதியிலா மானிடங்காள்,
உற்றபோது அன்றி, நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்,
அற்றம் மேல் ஒன்று அறியீர், அவனல்லால் தெய்வமில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமினீரே. (திருமாலை 9)

நம் போன்ற சம்சாரிகள், ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து, சென்ற பாசுரத்தில், ஆழ்வார் சொன்னது போல்,
பிற சமயங்களில் உள்ள ஈர்ப்பால் தாங்கள் எம்பெருமானை பின்பற்றாமல் இல்லை என்றும்,
அவர் சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமனை பின்பற்ற சொன்னதால், அவனை அடையவிடாமல் தடுக்கும்,
அரண்மனை காவலாளிகளை காரணம் காட்டி, ஸ்ரீ ராமனை பின்பற்ற முடியவில்லை என்றும் சொன்னார்கள்.

அப்படியே உள்ளே சென்றாலும், வசிட்டர் போன்ற பெரியவர்கள் தங்கள் தகுதிகளை காட்டி அவனை
அணுகவிட மாட்டார்கள் என்று கூறி, அப்படி தகுதிகள் பார்க்காத ஒருவனை தங்களுக்கு காட்டுமாறு
ஆழ்வாரிடம் வேண்ட ஆழ்வாரும், அப்படிப்பட்ட, தானே மேல் விழுந்து ஆட்கொள்ளும் கண்ணனை,
பின்பற்ற வேண்டும் என்று எடுத்துரைத்த பாசுரம்.

கீதையில் (9.23), மற்ற தேவதைகளை அவரது பக்தர்கள் சிரத்தையுடன் பூஜை செய்தாலும்,அது
ஸ்ரீகிருஷ்ணனையே வந்து அடையும் என்று கூறியதைப்போல்,
ஆழ்வாரும் இங்கு அவனல்லால் தெய்வம் இல்லை என்று கூறுகிறார்.

‘மற்றும் ஓர் தெய்வம்‘ என்று சொன்ன இடத்தில, ‘உண்டே‘ என்று சொன்னது இல்லை என்ற பொருளில் வருகிறது.
மேலும், ஆபத்து வந்த காலத்திலே அப்படிப்பட்ட மற்ற தேவதைகளை காத்தருளினவனாக எ
ம்பெருமானே கண்ணன் என்று சொன்ன நம்மாழ்வார் பாசுரத்தையும்
(‘ஏ பாவம்,பரமே, ஏழுலகும், ஈ பாவம் செய்து அருளாலளிப்பார் ஆர் ‘, திருவாய்மொழி, 2.2.2),
‘உண்டே‘ என்ற பதத்திற்கு, பெரியவச்சான் பிள்ளை மேற்கோள் காட்டி உள்ளார்.
இதிலிருந்து எம்பெருமானே சர்வ ரக்ஷகன் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகிறது.

மற்ற தேவதைகளுக்கு தெய்வத் தன்மை இல்லையா என்று கேட்கிற ஸம்ஸாரிகளை
‘மதி இலா மானிடர்கள்‘ என்று ஆழ்வார் கூறுகிறார்.
இங்கு சில மேற்கோள்கள் அல்லது உதாரணங்கள் :

திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில், (11.7.9),
“ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார், மானிடவர் அல்லர் ” என்று சொன்னதை போல்,
பெருமாளை வணங்காதார், மானிடர் அல்ல என்று இங்கு தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் சொல்கிறார்.

பூதத்தாழ்வாரும், இரண்டாம் திருவந்தாதியில், (44) பாசுரத்தில்,
“செங்கண்மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்” என்கிறார்.

அதே போல், பொய்கையாழ்வார், முதல் திருவந்தாதியில், (67)
“உன் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு “, என்று சொன்னதில்,
பெருமாள் பற்றிய அறிவே அறிவு, மற்றதெல்லாம் வீண் என்று சொன்னதும் இங்கு நினைவு கூறப்படுகிறது.

எந்த வித்தை, முக்திக்கு காரணமோ, அதுவே வித்தை, மற்றதெல்லாம் வீண், என்று ஸ்ரீ பராசரர் என்ற
மாமுனிவர் கூறியதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.
எல்லா யாககளிலும் தானே இறைவனாக தானே இருந்து பலன் அளிப்பவனாகிறேன் என்று
கீதையில் (9.24) கண்ணன் சொன்னதும் இது போல ஒன்றே.
எவர் பித்ருக்களையும், தேவர்களையும், பிராமணர்களையும், அக்னியையும், வணங்குகிறார்களோ, அவர்கள்
எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக உள்ள கண்ணனையே வணங்குகிறார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன.

‘உற்றபோது அன்றி ‘ என்பதற்கு, பிரளய காலத்தில், மற்ற தெய்வங்கள் ஒன்றன் பின் ஒன்றாக
எம்பெருமான் வயிற்றில் புகும் போதுதான் அவன் பரம்பொருள் என்று நாம் உணர்ந்து கொள்வோம் என்று ஒரு கருத்து.

இராவணன், ஹிரண்யன், பஸ்மாசுரன் போன்ற தீயவர்களால் துன்பப் படுத்தப்பட்டு, எம்பெருமானிடம்
மற்ற தெய்வங்கள் வருவதை பார்த்த பின்பு தான் இவனே பரம்பொருள் என்று ஒப்புக்கொள்வோம் என்பது இன்னொரு விளக்கம்.

மற்ற தெய்வங்களிடம் வைக்கும் அன்பை கூட, தலைசிறந்த பலனான, சம்சாரத்திற்கு திரும்பி வரமாட்டாத
மோக்ஷ சாம்ராஜ்யத்தை தரும் எம்பெருமானிடம் காண்பிக்க மாட்டோம் என்பதே
‘உணர மாட்டீ ர்‘ என்பதில் ஆழ்வார் உரைக்கும் உட்பொருள் ஆகும்.

வேதத்தில் சொல்லி இருப்பவைகளுக்கு, மேல் எழுந்தவாரியாக உள்ள அர்த்தத்துடன், உள்ளர்த்ததையும் நன்கு உணராமையே,
சம்சாரிகள் அறியாமைக்கு காரணம் என்பதை, அற்றம் மேல் ஒன்று அறியீர், என்பதின் பொருளாக ஆழ்வார் கூறுகிறார்.

பகவத்கீதை (15.15), கிருஷ்ணன்,
தானே எல்லா வேதங்களாலும் அறியப்படுபவன் என்றும்,
எல்லோருடைய இதயங்களில் நுழைந்து இருப்பவன் என்றும்,
எல்லோருக்கும் நினைவையும், அறிவையும், அறிவின்மையையும் கொடுப்பவன் என்றும்,
வேதங்கள் சொல்லப்பட்ட பலத்தைக் கொடுப்பவனும் தானே என்று சொல்வது இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

வேத வாக்கியங்கள் பற்பல தெய்வங்களைப்பற்றி தெரிவித்தாலும், அவை யாவையும் அவைகளின் அந்தர்யாமியாக இருக்கும்
நாராயணனையே குறிக்கின்றன என்பதும் அவனை தவிர மற்ற எவர்க்கும் நிறைந்த தெய்வத் தன்மை இல்லை என்பதுவுமே
பாகவதத்தில் (2.5.15) இருந்து, அவனல்லால் தெய்வமில்லை என்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்.
அவனை என்று இங்கே குறிப்பிடுவது, பின்னால் சொல்லப்போகும் கண்ணனைப் பற்றியது.

மற்ற தெய்வங்களைப் போல் வணங்குவதற்கு அரியதானவன் அல்லன் என்றும்,
பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட தானே வந்து எளியவனாக இருப்பவன் என்பதை காட்டுவதற்கே,
கிருஷ்ணன் என்று சொல்லாமல், கற்றினம் மேய்த்த எந்தை என்று ஆழ்வார் சொன்னது.

தன்னை தானே காப்பற்றிக் கொள்ளுகிற வல்லமை உள்ள மாடுகளை குறிப்பிடாமல்,
அத்தகைய வல்லமை அற்ற கன்றுகளை காப்பதில் கண்ணனுக்கு ஒரு தனி ஈடுபாடு என்பதை சுட்டிக்காட்ட,
ஆவினம் என்று சொல்லாமல், கற்றினம் என்று ஆழ்வார் கன்றுகள் இனத்தை சொல்கிறார்.

மற்ற ஆழ்வார்கள் பாடல்களில் இருந்து சில உதாரணங்கள்:

திவத்திலும் பசு நிரை மேய்ப்புவுத்தி என்று நம்மாழ்வார் திருவாய்மொழி (10.3.10)

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் என்று திருமங்கை ஆழ்வார் திருநெடுந்தாண்டகம் (16)

காலி மேய்க்க வல்லாய் என்று நம்மாழ்வார் திருவாய்மொழி (6.2.4)

கன்று மேய்த்து விளையாட வல்லானை என்று திருமங்கையாழ்வார்,பெரிய திருமொழி (2.5.3)

தான் அனுபவித்த கிருஷ்ணாவதாரத்தில் நம்மையும் ஈடுபட ஆழ்வார் ‘கழலிணை பணிமின்‘ என்று அழைக்கிறார்.
இராமனின் குணங்களுக்கு தான் அடிமைப்பட்டவன் என்று லக்ஷ்மணன் சொன்னது போல்,
தொண்டரடிப்பொடி ஆழ்வார், கண்ணனின் கன்றுகளை மேய்க்கும் இந்த எளிமை என்ற பண்பிற்கு வசப்பட்டு
அவன் திருவடிகளில் வீழ்ந்தேன் என்று உரைக்கிறார்.

மற்ற தெய்வங்கள் போல் அல்லாமல், பெருமாள் ஒருவரே, தன்னை தாழ்த்திக்கொண்டு இந்த உலகத்தில் அவதரித்து,
நமக்கு அவனுக்கு இணையான பேரின்பத்தை அளிக்க வல்லவன் என்பதை கன்றுகளை மேய்த்த இந்த செய்கையினாலும்
இதிகாச புராண சரித்திரங்களில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் மற்ற தெய்வங்கள், தங்களுக்கு இணையான நிலையை யாருக்கும் வழங்க மாட்டார்கள் என்றும்,
மஹாவிஷ்ணு ஒருவனே எல்லாவற்றையும் வழங்கிய பிறகும் இவர்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே என்று
குறைப் பட்டு இருப்பார் என்றும் உரை ஆசிரியர் கூறி இந்த பாடலை முடிக்கிறார்.

————

திருஅரங்கம் காட்டினான்

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே,
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பிமீர்காள். கெருட வாகனனும் நிற்க,
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே (திருமாலை 10)

பரம பத நாதனை சென்று அடைய முடியாதாகையால், ஸ்ரீராமனை அடையுங்கள் என்று ஆழ்வார் சொன்ன போது,
அவரும், மிக வுயர்ந்த சக்கரவர்த்தி ஆனதால், அவரையும் அடைய முடியாததால், தொடர்ந்து எளிமையான
கண்ணனைப் பற்ற வேண்டும் என்று ஆழ்வார் சொன்னது சென்ற பாசுரம்.

தேசத்தாலும் காலத்தாலும் அடைய முடியாத, பர வாசுதேவன் மற்றும் ஸ்ரீராமன், கிருஷ்ண அவதாரங்கள் போல் இல்லாமல்
எல்லோரும் இப்போதும் அடையும்படி, ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அரங்கனை பின்பற்ற வேண்டும் என்றும்,
மற்ற தெய்வங்களை மோக்ஷத்திற்காக வேண்டி வணங்குவது, ஐஸ்வர்யங்களை அடைய மூதேவியை வேண்டுவது போல்
ஆகும் என்று இந்த பாசுரத்தில் ஆழ்வார் கூறுகிறார்.

‘நாட்டினான் தெய்வம் எங்கும் ‘ என்பதற்கு சொல்லும் விளக்கம் மிக அருமை.
முதலில், எதற்கு பல தெய்வங்கள் என்று கேட்டுக் கொண்டு,
மனிதர்கள் சத்வ, தாமஸ, ராஜஸ குணங்களின் பலவித கலவைகளுடன் பிறப்பதால்,
அவரவர்களின் குணங்களுக்கு ஏற்ற தெய்வங்களுடன் ஈடுபாடு ஏற்பட்டு படிப்படியாக சத்வ குணம் அதிகப்பட
அவர்கள் பெருமாளை வந்து அடைவார்கள் என்பது தனி சிறப்பு.

நாட்டினான் என்பதற்கு
அவர்களுக்கு அந்தர்யாமியாக இருந்து கொண்டு அவர்களை வழி நடத்துகிறான் என்பது இன்னொரு விளக்கம்.
ராஜஸ, தாமஸ குணங்கள் அதிகம் உடையவர்கள் நேரடியாக தன்னைப் பற்ற மாட்டார்கள் என்று
ஒரு சுள்ளிக் கால் அல்லது கொடி படர்வதற்கான ஒரு பற்றுக் கொம்பு போல் மற்ற தெய்வங்களை நாட்டினான் என்பது மற்றொரு விளக்கம்.
திருவாய்மொழியில் நம்மாழ்வாரும் இதை போன்ற கருத்தை சொல்வதற்கு
“நிறுத்தினான் தெய்வங்களாக” (5.2.8) என்பதும்
“அவரவர் விதி வழி அடைய நின்றனரே” (1.1.5) மேற்கோள் சொல்லப் படுகின்றன.

‘நல்லதோர் அருள் தன்னாலே‘, திருஅரங்கம் காட்டினான் என்றும்,
‘நல்லதோர் அருள் தன்னாலே‘, நாட்டினான் தெய்வம் எங்கும் என்றும் கொள்ளலாம்.
ஜீவாத்மாக்கள் தன்னை அடையாமல், இப்படிக் கெட்டு போகிறார்களே என்று, அவர்கள் கேட்காமலே,
தன்னை காட்டினான் என்பது சிறப்பு.

யாருக்கு காட்டினான் என்றால், ‘ உய்பவர்க்கு ‘, அதாவது
மோக்ஷம் பெற வேண்டும் என்று ஆசை உள்ளவர்களுக்கு அல்லது,
அவன் கருணையை காட்டும் போது அவனை விட்டு விலகி செல்லாமல் இருப்பவர்களுக்கு என்று ஆழ்வார் சொல்கிறார்.
திருவரங்கத்திற்கு சென்று அவனையே வழியாகவும்,
அவனை அடைவதையும் கொள்வது எல்லாருக்கும் பொருந்தும் என்று உரையாசிரியர் சொல்வதும் இன்னொரு சிறப்பே.

கெருட வாகனனும் நிற்க என்பதில் உள்ள நிற்க என்பது,
நமக்கு மிக அருகில் இருக்கிறான் என்றும்,
தம்மை அடையமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் நிற்கிறான் என்றும் பொருள் படும்.

சக்ரவர்த்தியின் மனைவி மக்கள் அவனுடைய வேலைக்காரர்களை மதிக்காமல் இருப்பது போல்,
எம்பெருமானை பற்றியவர்கள் மற்ற தெய்வங்களை பற்றி கவலை படாமல் இருப்பார்கள் என்றும்,
திருமழிசை ஆழ்வார் ஆகாயத்தில், சிவனும், பார்வதியும் சென்று கொண்டு இருந்த போது,
கந்தலை தைத்துக் கொண்டு இருந்தும் மேற்கோள் காட்டப்படுகிறது.

—————-

இப்போது இந்த உபதேசத்தின் கடைசி பகுதியை பார்ப்போம்.

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர், அனைத்து உலகங்கள் உய்ய,
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்,
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே. (திருமாலை 11)

ஒரு வில்லினால், கொந்தளிக்கின்ற கடலில் ஒரு அணை கட்டி, அனைத்து உலகங்களிலும் உள்ள அனைவரும் வாழும்படி,
போர்க் களத்தில், அரக்கர்களின் தலைவனான இராவணனை கொன்று, நமக்கு என்றும் உதவும் பெருமாள் இருக்கும் இடம்,
பெரிய மதிள்களை உடைய திருக்கோவில் ஸ்ரீரங்கம் அன்றோ,
அதன் பெருமை தெரியாமலும், இராமாவதார காலத்திற்கு பிற்பாடு உள்ளவர்கள் வழிபடவும் இங்கு இருக்கின்ற
அவனின் திருநாமத்தை சொல்லாமல் காலத்தைக் கழிக்கின்ற நம் போன்றவர்கள்,
கருவில் இருக்கும் போது கூட பெருமாளின் கருணையைப் பெறாதவர்கள் என்று எண்ணி ஆழ்வார் வருத்தப்படுகிறார்.

இராமாயணத்தில், அனுமன் இலங்கை சென்று இராவணனால் கவரப்பட்ட சீதாப் பிராட்டியை கண்ட பின்,
இராமன், வானர சேனையுடன் கடற்கரைக்கு சென்று கடலை கடக்க உதவி செய்ய வேண்டும் என்று
சமுத்திர ராஜனிடம் விண்ணப்பித்து, அந்த கடற்கரையிலே (திருப்புல்லாணி), தர்ப்பையில் சயனித்து இருந்தான்.
இராமனின் பெருமையை அறியாத சமுத்திர ராஜன், அதற்கு செவி சாயாமல் இருந்ததால், கோபம் கொண்ட இராமன்,
இலக்குவனைப் பார்த்து, கடலினை வற்ற செய்ய வேண்டும் என்று வில் அம்பினை கேட்க,
உடனே பயந்து ஓடி வந்த சமுத்திர ராஜன் தன் மேல் அணை கட்ட உடன் பட்டான் என்பது சரித்திரம்.
அதனால் இராமன், வானரங்களின் உதவியுடன், கல்லினால் அணையை கட்டி இருந்தாலும்,
வில்லினால் கட்டினார் (ஒரு வில்லால் ) என்று ஆழ்வார் சொல்கிறார்.

ஓங்கு என்பது சாதாரணமாக கடலில் எழும் கொந்தளிக்கின்ற அலைகளை பற்றியது இல்லை என்றும்
இராமனின் கோபத்தையும் சீற்றத்தையும் கண்டு சமுத்திரமானது அவசரம் அவசரமாக, கீழே உள்ள மண்ணை மேலே எறிந்து,
ஆசிரியர் பிரம்பை எடுத்தவுடன் காலில் விழும் மாணவர்கள் போல், சயனித்து இருந்த இராமனின் திருவடிகளில்,
சமுத்திரம், கடலின் கீழ் உள்ள மண் மற்றும் வெள்ளம் முதலியவற்றை அவசரம் அவசரமாக கொண்டு சேர்த்தது என்று
நம் ஆச்சார்யர்கள் அருமையாக கூறுவார்கள்.
முந்நீர் என்பது, ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர் (மழை நீர்) கொண்ட கடலை குறிப்பது.

இராவணன், பொய் மானைக் காட்டி, ராம லட்சுமணர்களை அந்த இடத்தை விட்டு நகரச் செய்து,
ஒரு கோழையாய், சீதையை அபகரித்து வந்தது போல் இல்லாமல்,
நேருக்கு நேர் போரில் மோதி வெற்றி கண்ட இராமன் என்பதால் இங்கு செருவிலே என்று ஆழ்வார் கூறியுள்ளார்.

நம் எல்லோரையும் ரஷிப்பது அவன் விருப்பமுடன் செய்வது தான் என்றாலும்,
அதை ஒவ்வொருவரும் இருக்கும் இடம் சென்று செய்வது கொஞ்சம் அரியதாக இருப்பதால்,
எல்லோருக்கும் துன்பம் கொடுத்து வந்த இராவணனை கொன்று விட்டால்,
அனைத்து உலகத்தில் உள்ள அனைவரையும் காத்து விடலாம் என்பதால், போரில் அரக்கர்களின் தலைவனான
இராவணனை கொன்று (அரக்கர் கோனை செற்ற) நம் இராமன்,
‘அனைத்து உலகங்களும் உய்ய” வழி செய்தார் என்று ஆழ்வார் கூறுகிறார்.

இதே போல், அரிதான காரியங்களை அவன் எளிமையாக கையாண்ட மேலும் இரண்டு இடங்களை,
நம் பூர்வாச்சார்யார்கள் கூறுவார்கள். அவை

கண்ணன், பிருந்தாவனத்தில் உள்ள ஆயிரம் ஆயிரம் பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் கொடுப்பது சிரமமாக இருந்ததால்,
தன்னுடைய சங்கல்ப சக்தியால், பிருந்தாவனத்தை ஒரு பசுமையான பகுதியாக மாற்றி
பசுக்களுக்கு புல்லும் நீரும் அளிப்பதை எளிதாக்கினார்.

ஒரு நம்மாழ்வாரை இவ்வுலகிற்கு அனுப்பி, இங்கு உள்ள எல்லோரையும் எளிதாக திருத்தினார்

இராவணனை கொன்று அவன் அராஜகமாக கைப் பற்றிய சொர்க்கம், பாதாளம், பூமி போன்ற உலகங்களில்
உள்ளவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக வாழும்படி செய்ததால், ‘அனைத்து உலகங்களும் உய்ய‘ என்று சொல்வதும் சரியே.

கங்கை கடலில் கலப்பதை பார்த்தாலும், இராமன் கடலின் மேல் கட்டிய இந்த சேதுவை (பாலத்தை) பார்த்தாலும்
எல்லா காலங்களிலும் வாழ்பவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதாலும்
அனைத்து உலகங்களும் உய்ய‘ என்று சொல்லலாம்.

‘சேவகனார்’ என்பது நமக்கு சேவை செய்யும் பரமாத்மாவை பற்றியது.
அடியான் ஒருவன், பெருமாளை நோக்கி அஞ்சலி என்ற ஒன்றை செய்து விட்டால்,
அந்த பெருமாள் அவனுக்கு சேவகம் செய்யும் பணிவினை இங்கு உரையாசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.
உதாரணமாக, மஹாபாரதத்தில், ‘இன்னார் தூதன்’ என்று நின்றவன் அன்றோ அவன்.

சேவகம் என்பதற்கு வீரம் என்ற ஒரு பொருளும் உண்டு.
‘இன்று போய் நாளை வா’ என்று வீரத்தின் எல்லையை காண்பித்த ராமன் என்றும்,
தன்னுடைய அகந்தையினால், தன் கண் முன்னே தனக்கு துணையாய் இருந்தவர்களை இழக்க செய்தும்,
பிள்ளைகளை இழக்க செய்தும், தன்னுடைய தலை அறுந்து வீழ்வதை தானே பார்ப்பது போன்று,
உலகத்தில் யாருக்கும் நேராத அவமானம் அளித்தும், பல சித்ர வதைகளை செய்து இராவணன் கதையை முடித்த
இராமனின் வீரம் என்பதையும் ‘சேவகம்‘ என்றதன் மூலம் உணரலாம்.

நாச்சியார் திருமொழியில், ஆண்டாள் சொன்ன “தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன்‘ (5.3) என்று
இராவணனின் முக்கிய தலை மீண்டும் மீண்டும் அறுந்து வீழ்ந்ததை செய்த இராமன் என்று கூறுவதை
இங்கு நினைவில் கொள்ளலாம்.
சீதா பிராட்டியுடன் சேர்வதற்கு தடையாக இருந்த இராவணனை அழித்ததால், அதே போன்று,
நம்முடைய விரோதிகளை அழிப்பதற்கு உதவுவான் என்பதால், சேவகன் என்பது சரியே.
பிராட்டி தான், சரணாகதி காலத்தில், நமக்கு பெருமாளிடம் சிபாரிசு செய்வதால், அந்த பிராட்டியின் விரோதியை ஒழித்தால்,
அதுவே நமக்கு உதவியது போல் ஆனதாலும், சேவகன் என்பது பொருத்தமே.

நஞ்ஜீயர் என்ற ஆச்சாரியார் இந்த பாடலை அவரது குருவான பட்டரிடம் கேட்டு தெரிந்த அன்று
அதன் விளக்கத்தை ஒரு சாதாரணமாக பெண்ணின் இடம் இருந்து கேட்டதை எண்ணி, வியப்பு அடைந்து உள்ளார்.
அந்த பெண்ணின் கணவன், அவளை மிரட்ட, அதற்கு அவள், ‘உன்னால் என்ன செய்ய முடியம்,
உன் போன்றவர்களிடம் இருந்து காப்பதற்கே, அரசன் ஆயுதத்துடன் உள்ளான்’ என்று
தைரியமாக கூறுவதே இந்த பாடலின் விளக்கமாக நஞ்ஜீயர் வியந்தார்.

பட்டரிடம் வந்து சேர்ந்த சோழ சிகாமணி பல்லவராயர் என்பவருக்கு பட்டர் ‘கடற்கரையை நினைத்து இரும்’ என்றாராம்.
அதாவது பல்லாயிர கணக்கான வானர சேனைகளை இராமனும் இலட்சுமணனும் கடற்கரையில்
இரவில் பாதுகாத்து வந்ததையே இங்கு பட்டர் குறிப்பிட்டு
நமக்கு இராமனே தஞ்சம் என்று சொல்வது இன்னொரு ஐதீகம்.

‘மருவிய பெரிய கோவில்‘ இராவணனை கொன்ற பிறகும், இராமாவதார காலம் முடிந்த பின்பு உள்ளவர்களுக்கும்
அருள் பாலிப்பதற்காகவே இங்கே திருவரங்கத்தில் பள்ளி கொண்டு இருக்கும் திருவரங்கனை குறிக்கும்.

இதே ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி என்ற பிரபந்தத்தில்,
‘மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே ‘ என்று
இதே கருத்தை தெரிவித்தது இங்கு குறிப்பிடவேண்டியது.
மருவிய என்பதற்கு,
பெருமாள் திரு உள்ளம் மகிழ்ந்து என்றும் வாழும் இடம் என்று பொருள் கொள்ள வேண்டியது.

பெரிய கோவில் என்றது
பரப்பளவை சொல்லவில்லை என்றும், முக்கியத்துவத்திற்காக சொல்லப்பட்டது என்றும் உரையாசிரியர் கூறுகிறார்.
இந்த கோவிலில் தன்னை பற்றும் அடியார்களை காப்பாற்றுவதால், இது பெரிய கோவில் ஆனது.

இராமாவதாரத்தில் வந்த எதிரிகள் இங்கும் வருவார்களோ என்று பயந்து, திருமங்கை ஆழ்வார் போன்றவர்கள்
கட்டிய பெரிய மதிள்களை உடைய கோவில் என்பதை இங்கே மதிள் திருவரங்கம் என்று பாடுகிறார்.

ஸ்ரீரங்கத்தில் உள்ள மூலவர் (பெரிய பெருமாள்), கண்ணனின் பிரதிநிதி என்றும்,
உத்சவர் (நம்பெருமாள்), இராமனின் பிரதிநிதி என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.
இப்படி கண்ணனும், இராமனுமாக அவதரித்தவர் அன்றோ இந்த ஸ்ரீரங்கத்தில் இருந்து நமக்கு அருள் புரிகிறார்.

அன்னையின் கர்ப்ப வாசத்தில் இருக்கும் போது,பிறக்கப் போகின்ற குழந்தைக்கு அதிக சத்வ குணம் வளர வேண்டும்
என்று பெருமாள் தன்னுடைய குளிர்ச்சி மிகுந்த பார்வையை அந்த சமயத்தில் நோக்குவார் என்ற ஒரு கருத்து உள்ளது.
அதையே ஆழ்வார், அரங்கநாதனின் அருளை பெறாமல் காலத்தை கடத்துபவர்களை நினைத்து,
இங்கு கருவிலே திரு இலாதீர் என்று சொல்லி, அவர்களை எண்ணி வருத்தப்படுகிறார்.

பொய்கை ஆழ்வார் அருளி செய்த முதல் திருவந்தாதி என்ற பிரபந்தத்தில் ஆறாவது பாசுரத்தில்,
“அன்று கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன்” என்று கூறியதையும்,
பூதத்தாழ்வார் அருளி செய்த இரண்டாம் திருவந்தாதியில் (87) பாசுரத்தில்,
“அன்று, கருக் கோட்டியுள் கிடந்து கை தொழுதேன்” என்று கூறியதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.

—————-

நித்ய ஸூரிகளுக்கு கிடைக்கும் அனுபவத்தை நமக்கும் கொடுத்தற்காக இங்கே வந்து காத்து இருக்கும்
பெருமாளை நினைக்காமல் இருக்கும் நம்மை பார்த்தும்,
பெருமாளின் குண நலன்களை விளக்கும் ஆயிரம் ஆயிரம் நாமங்களை சொல்ல தேவை இல்லாமல்,
அவன் இருக்கும் இடமான திருவரங்கம் என்ற ஒரு சொல்லே போறும் என்று சொல்லியும்
அதைக் கேட்காதவர்களை பார்த்தும் ஒரு அபாரமான வருத்தத்தை ஆழ்வார் இந்த பாடலில் காட்டுகிறார்.

நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்க மாகும் நாமங்களுடைய நம்பி, அவனது ஊர்
அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்தளிய மாந்தர்,
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே. திருமாலை 12

திருநாமங்களை சொல்ல சொன்ன ஆழ்வாரிடம், அது தங்களால் முடியவில்லை என்று முறையிட்டவர்களுக்கு,
திருநாமங்களை காதினால் கேட்டாலும் பலன் கிடைக்கும் என்று விளக்கிய பாசுரம்.

யமனும் முத்கலன் என்பவரும், நரகத்தில் பேசிக்கொண்டு இருக்க,
அந்த வார்த்தைகளை, நரகத்தில் பாவத்தின் பலன்களை அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள் கேட்க,
அந்த நரகம், சொர்க்கம் ஆனது என்றால், அத்தகைய பெருமைகளும் மேன்மைகளையும் கொண்ட
திருநாமங்களை உடைய பெருமாளின் திவ்யதேசம் திருவரங்கம் ஆகும் என்று சொல்லாமல் காலத்தை கழிக்கிறார்கள்,
அதை எண்ணி தான் வருந்துவதாக ஆழ்வார் சொல்லும் பாடல்.

ஆழ்வார் வருத்தப் படுவதற்கான காரணங்களை முதலில் பார்ப்போம்.
திரு நாமங்கள் பெருமைகளை தான் அறியா விட்டாலோ, மானிடப் பிறவி எடுப்பதற்கு எளிது என்றாலோ,
மானிடர் உஜ்ஜீவனம் ஆவதற்கு செய்ய வேண்டிய காரியம் கடினம் என்றாலோ தான் கவலைப்பட மாட்டேன் என்றும்,
கிடைப்பதற்கு அரியதான மானிடப்பிறவி எடுத்தும், திருநாமங்கள் மேன்மைகளோ சொல்லி முடிவதில்லை என்பதாலும்,
செய்ய வேண்டிய காரியமா, மிக எளிது என்பதாலும், அந்த திருவரங்கம் என்ற நாமத்தை சொல்லாமல்,
இந்த மண்ணுலக இன்பங்களுக்காகவே, காலத்தை வீணாக கழித்தால் தான் வருந்தாமல் எப்படி இருப்பது என்று ஆழ்வார் கூறுகிறார்.

விஷ்ணு தர்மம் என்ற நூலில், முத்கலன் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
அவன் ஒரு மிகப்பெரிய பாவி என்றும் அவன் ஒருநாள் பசு தானம் செய்யும் போது கிருஷ்ணார்ப்பணம் என்று சொன்னான்.
அவன் இறந்த பிறகு எம கிங்கரர்கள் அவனை நரகத்திற்கு எடுத்து செல்ல அங்கே,
மாறாக யமன் அவனை மரியாதையுடன் வரவேற்றான்.
அது ஏன் என்று முற்கலன் கேட்க, அதற்கு எமன், அவன் ஒருநாள் கிருஷ்ணா என்ற நாமம் உரைத்ததாக பேசிக் கொண்டு இருந்தான்.
அதை, நரகத்தில் தண்டனைகளை அனுபவித்து கொண்டு இருந்தவர்கள் கேட்ட போது,
அவர்கள் இருந்த துக்க மயமாக இருந்த நரகம், ஆனந்த மயமான சொர்க்கமாக மாறியது.
இங்கு பட்டியல் இடப்படும் திரு நாமத்தின் பெருமைகள் யாவை என்றால்,

யமன், திரு நாமங்கள் சொல்ல வேண்டும் என்று மனதில் கொண்டு, ‘கிருஷ்ணா’ என்று மிகவும்
மரியாதையுடன் சொல்லவில்லை, இருந்தாலும் திருநாம சப்தத்தின் பலன் அங்கு கிடைத்தது.

முற்கலன் யமனிடம், தனக்கு திருநாமங்கள் சொல்லித்தர வேண்டும் என்று அர்ச்சுனன், கிருஷ்ணனிடம்
கீதை கேட்டது போல், வேண்டவும் இல்லை.

யமன் நரகத்தில் உள்ளவர்கள் இந்த திருநாமத்தை கேட்டு பலன் பெற்று கொள்ள வேண்டும் என்று
எண்ணி இந்த திருநாமத்தை சொல்ல வில்லை;

மேலும், பாவம் செய்தவர்கள், அதை நினைத்து வருந்தி, பிராயச்சித்தம் செய்யும் போது இந்த திருநாமத்தை கேட்கவில்லை.
பாவத்திற்கு பலனாக தண்டனை அனுபவித்து கொண்டு இருந்தார்கள்.

தண்டனை அனுபவிப்பவர்களும், இதனை விரும்பி கேட்டதாக தெரியவில்லை;
இருந்தாலும் திருநாம சப்தத்தின் பலன் அங்கு கிடைத்தது.

மேலும் அப்பொழுது முற்கலன், கிருஷ்ணா என்று சொல்லவில்லை, என்றோ சொன்னதற்கு இப்போது பலன் கிடைக்கிறது

இது திருநாமத்திற்கு ஆன பலன், பரமாத்மா அங்கு வந்து பலன் கொடுக்கவில்லை.
‘நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள்‘ என்றும்,
‘நாமங்கள் உடைய நம்பி ‘ என்றும் நாமங்கள் என்ற வார்த்தை இரண்டு பக்கமும் சேரும்படி பாசுரம் அமைந்துள்ளது.

நம்பி என்றால், பூர்ணன் (முழுமையானவன்) என்று பொருள்.
நாமங்களால் பெருமாள் பூரணன் என்னும் பெருமையை பெறுகிறார் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இப்படி எதோ போகிற போக்கில் திரு நாமம் காதில் விழுந்ததற்கே நரகத்தை சுவர்க்கம் ஆகும் அளவுக்கு
பலன் என்றால் திருநாமங்களின் பெருமைகள் சொல்லி முடிவதில்லை என்பதே உண்மையாகும்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில், சங்கீர்த நாராயண சப்த மாத்ரம் என்ற சொற் தொடரையும்
இங்கு திருநாம பெருமைகள் சொல்லும் போது சேர்த்து நினைவில் கொள்ளலாம்.

‘தேவோ நாம சஹஸ்ரவான்‘ என என்று பாரதத்தில் சொல்லும் வாக்கியத்தையும் இங்கு நினைவில் கொண்டு,
‘தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது,
நாமங்கள் ஆயிரமாயிரம் இருப்பதால் அவன் தேவன் எனப்படுகிறான்’ என்பது பெரியோர்கள் வாக்கு.
இதனால் இங்கு நாமங்களின் பெருமைக்கு முக்கியத்துவம் கொடுக்க படுகிறது.

இங்கு உரையாசிரியர் ஒரு கேள்வி கேட்டு ஒரு தத்துவத்தை நமக்கு சொல்கிறார்.
அதாவது, நரகத்தில், பாவங்களுக்கு தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கும் திருநாமங்கள் காதில் விழுந்ததனால்
பலன் கிடைத்தது போலே, பாவம் செய்து கொண்டு இருக்கும் போதே ஏன் இந்த திருநாமங்கள் காதில் விழவில்லை என்றும்,
அப்போதே விழுந்திருந்தால், இவர்கள் நரகத்திற்கே வந்திருக்க மாட்டார்களே என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆனால் பாவம் செய்யும் போது, இருக்கும் கர்வத்தினால், இந்த நாமங்கள் காதில் விழுந்து இருக்காது.
துன்ப காலத்தில் தான், யாரவது உதவ மாட்டார்களா என்று செவியினை திறந்து காத்து இருப்பார்கள்
என்று உண்மையை நமக்கு உரையாசிரியர் போதிக்கிறார்.

நரகமே சுவர்க்கம் ஆகும் என்றதற்கு இராவணன் ஆட்சிக்கு உட்பட்ட இலங்கை, வீபீஷணன் ஆட்சி மாறிய உடன்
‘தாமஸபுரி’, ‘சாத்விகபுரி’ ஆனது போல், துக்ககரமான நரகம், இனிமையான ஸ்வர்கம் ஆனது என்றார்.

அவனது ஊர் அரங்கம் என்று எளிதில் சொல்லக் கூடிய திருநாமம் இருக்கும் போது, அதை சொல்ல விடாமல் தடுப்பது
ஒருவர் செய்யும் பாவத்தின் கனமே என்று உரையாசிரியர் தெளிவு படுத்துகிறார்.
திரு நாமம் சொல்பவர்கள் அருகில் இருக்கக் கூடாது என்று சொன்னவர்களும்,
அவர்களை நாட்டை விட்டு துரத்தும் கிருமிகண்ட சோழன் போன்றவர்களும்,
திருநாமம் சொன்னதே காரணமாக பிரகலாதனுக்கு துன்பம் கொடுத்த ஹிரண்யன் போன்றவர்களும்
உலகில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

பெரியாழ்வார் தன்னுடைய பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தின் நான்காம் பத்தில் ஆறாம் பதிகத்தில்,
குழந்தைக்கு பெயர் வைக்கும் போது நாயகன், நாரணன், கோவிந்தா, கண்ணன், கேசவன் என்று
பெருமாள் திருநாமம் இட்டால், தாய் நரகம் செல்ல மாட்டார் என்று பாடுகிறார்.
திருநாமம் சொல்ல நேரம் இல்லாவதர்கள் இப்படி செய்தால் குழந்தையை அழைக்கும் போது,
திருநாமம் சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஆழ்வாரின் வாக்கு.
இந்த பாடலின் விளக்கம் கொடுக்கும் போது, மணவாளமாமுனிகள் தந்தையும் இதற்குள் அடக்கம் என்று கூறி உள்ளார்.

‘அயர்த்து வீழ்ந்து ‘ நமக்கு இயற்கையிலே உறவினனான எம்பெருமானின் திருநாமங்களை மறந்து,
உலக விஷயங்களிலே மூழ்கி தலைகுப்புற வீழ்ந்தவர்கள் என்கிறார்.
திருமங்கை ஆழ்வார், திருவிண்ணகர் பெருமாளை பற்றி பாடும் போது,
“மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால் இறந்தேன் ” (பெரிய திருமொழி 6.2.2), என்று
கூறுவது இங்கு மேற்கோள் காட்டப்படுகிறது.
நினைவின் ஊற்றுவாயில் இருக்கும் மறக்கவே முடியாத உன்னை மறந்தேன் என்று ஆழ்வார் வருந்தி பாடுகிறார்.

‘அளிய மாந்தர் ‘ திருநாமம் சொல்வதற்கு உரிய நாக்கும், நன்றாக உடல் நலனும் மனநலமும் உள்ள மனிதர்கள்,
திருநாமம் சொல்ல முயற்சி எடுக்காதவர்கள் என்று ஆழ்வார் கவலை படுகின்றார்.

பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி (21) பாசுரம்,
“தாமுளரே, தம் உள்ளம் உள் உளதே, தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுதுண்டே,
வாமன் திருமருவு தாள் மரூவு சென்னியரே, செவ்வே அருநரகம் சேர்வது அரிது “ இதே கருத்தை சொல்கிறது.
எம்பெருமானை பணிவதற்கு உரிய உடம்பும், சிந்திப்பதற்கு ஏற்ற உள்ளமும், தாமரை பூவும்,
அவனை வணங்குவதற்கு உரிய நேரமும், வாமன மூர்த்தியின் திரு வடிகளை தாங்கக் கூடிய தலைகளை படைத்தவர்கள்
என்று எல்லாம் இருந்தும், நரகத்திற்கு செல்கின்றார்கள் என்று இந்த ஆழ்வார் ஆச்சர்யப் படுகின்றார்.

இதே கருத்தை, பொய்கையாழ்வார் தன்னுடைய முதல் திருவந்தாதி (95) பாசுரத்தில்
‘ நா வாயில் உண்டே, நமோ நாரணா என்று, ஓவாது உரைக்கும் உரையுண்டே,
மூவாத மாக் கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர் தீக் கதிக்கட் செல்லும் திறம்” கூறுகிறார்.
நமோ நாராயண என்று சொல்வதற்கான நாக்கு வாயில் உள்ளது,
அதை உச்சரித்து மோக்ஷம் செல்லாமல், தீய வழிக்கு செல்கிறார்களே என்பது இதன் பொருள்.

அதனுக்கே கவல்கின்றேனே என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்வது
அவர் தனக்காக கவலைப் படவில்லை என்றும்,
இந்த சம்சாரிகள் வாழ்க்கையை நினைத்தே கவலைப்படுகின்றார் –

———–

எறியும் நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம்,
வெறி கொள் பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த,
அறிவிலா மனிதர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பார் ஆகில் ,
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே (திருமாலை 13)

அலைகள் வீசுகின்ற தண்ணீரையும், மாமிசம் போன்றவைகளால் துர்நாற்றத்தை கொண்டிருக்கிற
கடலினால் சூழப்பட்ட இந்த உலகத்தில் உள்ள ஜீவாத்மாக்கள்,
நல்ல வாசனையுடன் கூடிய திருத்துழாய் மாலை அணிந்துள்ள, தேவர்களுக்கெல்லாம் தேவன் ஆன
பரமாத்மாவாகிய பெருமாளை போற்றி பாட தங்களுக்கு அறிவு இல்லையே என்று கவலை படும் மனிதர்கள்,
திருஅரங்கம் என்று அழைத்தால், ஐம்புலன்களுக்கு கட்டுப்பட்டு வாழும் இந்த உலகத்தில் வாழ்கின்ற
நரகம் போன்ற வாழ்க்கை முடிந்து எல்லோரும் மோக்ஷத்திற்கு சென்று விடுவதால்,
இந்த பூவுலகம் புல் அதிகமாக வளர்ந்து ஒழிந்து விடும் என்பது இந்த பாடலின் உரைநடை பொருள்.

திருஅரங்கத்தின் திருநாமத்தை எல்லோரும் சொல்வாராகில், அவர்களுக்கு பரமபதம் கிடைத்து,
நரகத்திற்கு செல்வார் இன்றி, அதற்கு வேலையே இல்லாமல், அது புல் முளைத்து நரகம் பயன் அற்றதாகிவிடும்
என்று இன்னொரு அர்த்தமும் சொல்வார் உண்டு.

இந்த பாடலில் ஆழ்வார் தம் நெஞ்சோடு தானே தனக்குள் வருந்துகிறார்.

பரமாத்மா, ஜீவாத்மாக்கள் தம்மை வந்து அடைய, வேதங்களையும் கை கால், மற்றும் உடல் கொடுத்து வழி காட்டினார்.
அதற்கு ஏற்ப கடவுளை அடைவதற்கு தத்துவ ஞானம் தேவை உள்ளது.
அது இல்லாதவர்களும் திருவரங்கம் என்று சொல்வார்கள் என்றால் திவ்யதேசத்தின் பெயரைச்
சொன்னதன் காரணமாக மோக்ஷம் அடைவார்கள்,
பின்பு பாவத்தின் காரணமாக இங்கு வசிக்கும் பிராணி ஒன்றும் இல்லாததால்
இந்த பூவுலகம் முழுவதும் புல் முளைத்து பாழ் ஆகி விடும் என்று ஆழ்வார் சொல்கிறார்.

நலம் அந்தம் இல்லாதோர் நாடாகிய பரமபதத்தை அடைந்து, அங்கு எம்பெருமானுடைய திருத்துழாய் நறுமணத்தை
அநுபவித்துக் கொண்டு அப் பெருமானை போற்றி இனிதாக இருக்க வேண்டிய ஜீவாத்மாக்கள்,
”வெள்ளத்து இடைப்பட்ட நரியினம் போலே” (பெரிய திருமொழி, 11.8.5),
கலங்கி மீன் போன்ற மாமிச துர்நாற்றம் வீசுகிற கடல்வெள்ளத்துக்கு உட்பட்ட இப்பூமியிலே
கிடந்து வருந்துகின்றார்களே! என்பதை “எறியுநீர் வெறி கொள் வேலை மாநிலத்துயிர்கள்” என்கிறார்.

வெறிகொள் பூந்துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த என்பதற்கு,
நறுமணத்தை உடைய திருத்துழாய் மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் அழகுக்கும்
பரத்துவத்திற்கும் தோற்று நித்யஸூரிகள் பெருமாளை துதிப்பதைப்போல்,
சம்சாரிகளான நம் போன்றவர்களும் அவனை போற்றுவதற்கே உருவானவர்கள்.

இங்கு உரையாசிரியர் கொடுக்கும் உதாரணம் மிக அருமை.
இராமன் காட்டுக்கு போவதற்கு முன், லட்சுமணனின் தாய் சுமித்ரா தேவி, லட்சுமணனிடம்,
அவன் காட்டுக்கு போவதற்கு என்றே படைக்கப்பட்டவன் என்றும்,
அவன் ராமனின் நடை அழகில் கவனம் செலுத்த கூடாது என்றும் அப்படி செய்தால்,
அந்த அழகில் மயங்கி அவனுக்கு வரும் எதிரிகளை கண்காணிக்க தவறிவிடுவான் என்றும் எச்சரிக்கிறார்.

எப்படி லட்சுமணன் வனவாசத்திற்காகவே படைக்கப்பட்டானோ அது போல்
ஜீவாத்மாக்களாகிய நாமும் பெருமாளை துதிப்பதற்கு என்றே படைக்க பட்டவர்கள் ஆவோம்.

அழைப்பாராகில் என்பதை,
பாவிகளான இவர்கள் கடும் சொல் சொல்வதை எளிது என்று கொண்டுள்ள இவர்கள்,
அரங்கம் என்று சொல்வதை அரிது என்று காண்கிறார்கள்.

எல்லா துன்பங்களும் தன்னிடத்தில் வந்து மாட்டிக் கொள்கிறபடியால் ஐம்புலன்களை கொண்ட
இந்த உடலை பொறி என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஐம்புலன்களும் ஒவ்வொரு வகையான ஈர்ப்புகள் இருப்பதை, சப்த, ஸ்பர்ச, ரஸ, ரூப, கந்த என்ற
உணர்ச்சிகளுக்கு உதாரணமாக, சில உயிரினங்களை கொண்டு விளக்குகிறார்.

மான் சப்தத்திற்கு அடிமையாகி விடுவதை அறிந்த வேடன் இனிமையான சப்தத்தினால் அதனை தன் பக்கம் ஈர்க்கிறான்.
பெண் யானையின் உடல் ஸ்பரிசத்திற்கு மயங்கும் ஆண் யானையை பிடிப்பதற்கு பெண் யானையை பயன் படுத்துவது ஒரு தந்திரமே.
தூண்டில் தொங்கும் புழுவின் சுவையினால், மீன்கள் ஈரக்கப்படுவதும் இதே போல் ஒரு உபாயமே.
நெருப்பின் வடிவத்தை (ரூபம்) பார்த்து அதில் மயங்கும் விட்டில் பூச்சிகள் விழுவதும் இந்த வகையே.
பூக்களின் வாசனையால் வண்டுகள் பூக்களை அடைவதும் ஒரு பொறி வைப்பதைபோலே ஆகும்.
இவை சிக்குவதற்கு ஒரே ஒரு பொறி தான் வைக்கப்பட்டு உள்ளது, ஆனால் நம் போன்ற மனிதர்களுக்கு
ஐந்து பொறிகள் வைக்கப்பட்டு ஏதாவது ஒன்றில் சிக்க வைத்துவிடும் இந்த சம்சார வாழ்க்கை என்ற நரகம்.

இராமன் காட்டிற்கு செல்வதற்கு முன்பு நரகம், சொர்க்கம் பற்றி சீதா தேவி சொன்ன வார்த்தைகள்,
இங்கு பொருத்தம் ஆக இருக்கும். சொர்க்கம் என்பது ஆனந்தத்தை அளிக்கும் இடம் என்றும்,
நரகம் என்பது தண்டனை அனுபவிக்கும் இடம் என்றும் பொதுவாக சொல்வது சரியாக இருக்காது என்றும்,
அவை யாருடைய பார்வையின் என்பது தான் உண்மையான சொர்க்கமும் நரகமும் என்று சொன்னதை போல்,
சுவாமி நம்மாழ்வார் போன்று அறிவுடையார்க்கு இந்த உலக வாழ்க்கை, நரகம் போன்று உள்ளது.

சுவாமி நம்மாழ்வார், திருவாய்மொழி (8.1.9) பாசுரத்தில்,
‘நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்” என்று சொன்னது நரகம் சொர்க்கம் இரண்டுமே அவனால் படைக்கப்பட்டதால்,
அங்கு இருந்தாலும், இங்கு இருந்தாலும் ஒன்றே என்று சொல்லிவிட்டு,
ஆனால் அந்த ஞானம் நிலையாக இருக்க இந்த உலக வாழ்க்கை உதவுவது இல்லை ;
ஆகையால் இந்த உலக வாழ்க்கையை நரகம் என்றும் தான் அதற்கு அஞ்சுவதாகவும் சொல்கிறார்.

திருவாய்மொழி இருபத்தினான்காயிரம் விளக்கத்தில்,
‘அகப்பட்ட பகவத் ஞானத்தையும் இந்த சம்சாரத்தில் இருந்தால் இழந்துவிடுவேன்’ என்று
ஆழ்வார் பயப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

சுவாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில், (10.6.1)
‘இருள் தருமா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்” என்று கூறுகிறார்.
அதாவது, இங்கு இருக்க இருக்க, அஞ்ஞானத்தை மேலும் மேலும் வளர்கின்ற இந்த நிலத்தில் இருப்பதை
யான் இனி வேண்டேன் என்று உறுதியாக கூறுகிறார்.

பொறியில் வாழ் நரகம்‘ என்று இந்த வாழ்க்கையை
நரகம் என்று தொண்டரடிபொடி ஆழ்வார் கூறுவதும் அதே போன்றதே.

—————-

வண்டு இனம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை,
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்க மென்னா,
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமி னீரே. (திருமாலை 14)

இந்த பாடல், ஆழ்வார் உபதேசம் என்ற நான்கு முதல் பதினான்கு வரையிலான ஒரு பிரிவில் வரும் இறுதி பாசுரம்.
நம் போன்ற சம்சாரிகளை நேருக்கு நேர் பார்த்து சொல்லியும், அவர்கள் கேட்காது போனதால்,
தமக்கு தாமே சொல்வது போல் மற்றவர்களுக்கு நன்மை அளிக்க கூடிய உபதேசங்களை செய்தும்,
கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும், அழுகைக் குரல் அன்றி அங்கு ஒன்றும் இல்லை என்பது போல்,
நம் போன்றவர்களுக்கு பகவத் விஷயத்தில் ஈடுபாடு ஏற்படாததால் , தன் வாயில் ஏற்பட்ட கசப்பினை போக்குவதற்காக
திருவரங்கத்தின் இனிமையை சொல்லி வரும் போது, இந்த சம்சாரிகளும் இதை செய்ய கடமைப்பட்டவர்கள் தாமே
என்று எண்ணி அவர்களை இகழ்ந்து பாடும் பாசுரம்.

இந்த பாசுரம், ஆழ்வாரின் அனுபவத்தை சொன்னாலும்,
அது மற்றவர்களுக்கும் ஒரு உபதேசமாக இருப்பதால், இதுவும் இந்த உள்பகுதியில் சேர்க்கப்பட்டது.

வண்டினம் முரலும் சோலை, என்பதற்கு,
நதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீராடுவது போல், இங்குள்ள சோலைகளில், தேன் வெள்ளம் பாய்வதால்,
வண்டுகள் கூட்டம் கூட்டமாக உள்ளன என்று உரையாசிரியர் ஆரம்பிக்கிறார்.
தேன் வெள்ளம் பாய்வதை, திருமங்கையாழ்வாரும், திருகுறுந்தாண்டகம் என்ற பிரபந்தத்தில், எட்டாவது பாசுரத்தில்,
‘வரையிடைப் பிரசம் ஈன்ற, தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை ‘ என்று குறிப்பிடுகிறார்.
மலைகளில் உள்ள தேன் கூடுகளில் இருந்து தேன் எடுக்காததால் வெள்ளம் போல் வரும் தேனில் வளர்ந்த
கரும்புகளின் சாற்றைப் போல் இருக்கும் தேவுக்கும் தேவாகிய எம்பெருமானை பற்றி திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்.

முரலும் என்பதற்கு, மதுபானம் அதிகம் அருந்தி, இருந்த இடத்தில இருக்க முடியாமல்,
வழக்கம் போல் சப்தம் இடாமல் ரீங்காரம் செய்கின்றன. அது வைகுந்ததில், நித்ய முக்தர்கள் பெருமாள் அனுபவத்தில்
திளைத்து சாம கானம் வாசிப்பதை போல் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வண்டுகள் கூட்டமாக இருப்பதனாலும் அவற்றின் சப்தத்தினாலும், சோலைகளின் பசுமையினாலும்,
அவற்றை மழைக் காலத்தின் மேகக் கூட்டங்களின் வருகை என்று எண்ணி,
மயில்கள் ஆடி களித்ததை மயிலினம் ஆலும் சோலை என்று சொல்கிறார்.

வண்டுகளின் கூட்டத்தையும், சோலைகளின் பசுமையையும் கண்டு, மேகங்கள் திருவரங்கத்தை கடலாக நினைத்து,
ஆழியுள் புக்கு முகந்து ஆர்த்தெறி செய்வதற்காக சோலைகளின் மேல் படர்ந்து இருந்தது என்பதை
‘கொண்டல் மீது அணவும் சோலை ‘ என்று குறிப்பிடுகிறார்.
மேலும் இந்த சோலைகள் மேகமண்டலம் வரை உயர்ந்து உள்ளன என்றும் சொல்லலாம்.

நம்மாழ்வார், திருவாய்மொழியில் (2.10.3), ‘மயல் மிகு பொழில் சூழ் மாலிரும்சோலை ‘ என்று
திருமாலிருஞ்சோலை மலையில் உள்ள சோலைகளின் இருட்சியாலே
மேகங்களுக்கு புறப்பட இடமும், புகுந்த இடமும் தெரியாது என்கிறார்.
இப்படி மயக்கும் சோலைகளை போலவே இங்குள்ள (திருவரங்கத்திலுள்ள) சோலைகளும்
மேகங்களை மயங்க வைத்து, இதை கடலாக நினைக்க வைத்தன.

வண்டுகள், மயில்கள், மேகங்கள் போல் அங்கும் இங்கும் நகராமல், குயில்கள் இருந்த இடத்தில இருந்தே
ஒன்றை ஒன்று அழைக்கின்றன. இது “குயிலனம் கூவும் சோலை‘ என்பதில் தெரிகிறது.

‘அண்டர் கோன் அமரும் சோலை‘ என்பதற்கு வண்டுகள், மயில்கள், மேகங்கள், குயில்கள்
இந்த சோலையின் பரப்பையும் இனிமையும் கண்டு மகிழ்ந்து இருப்பது போல்,
நித்ய ஸூரிகளால் போற்றப்படும் பரமபதத்தையும் மறந்து இங்கே நித்யவாஸனாக இருக்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

இங்கு ஐந்து நிலைகளில் ஒன்றான பர நிலையை மட்டும் சொன்னது,
வியூஹ, விபவ நிலைகளை சொன்னது போல் என்று உரையாசிரியர் கூறுகிறார்.
அமரும் என்ற பதம் நித்ய வாஸம் செய்வது சொல்வது. அண்டர் கோன் என்றால் இந்த பிரும்மாண்ட உலகில்
வாழும் ஜீவராசிகளுக்கு தலைவனாக இருந்து அவர்கள் வேண்டியதை அருள்வதாகவும் கொள்ளலாம்.

சோலை அணித் திரு அரங்கம் என்பதால், சோலைகள் திருவரங்கத்திற்கு ஆபரணங்களாக உள்ளன.
அப்படிப்பட்ட திருஅரங்கத்தில், அவன் வந்து இவர்களுக்காக பொருந்தி இருக்கும் போது,
திருவரங்கம் என்று சொல்லாத மூடர்கள் என்பதை, திருஅரங்கம் என்னா மிண்டர் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
மிண்டர் என்பதை ‘இப்போதைய நிலையையும் வரப் போகும் நிலையையும் அறியாதவர்கள்’ என்றும் மேலும் விளக்குகிறார்.

திருவரங்கம் என்று போற்றி பாடவேண்டிய வாயை அதற்கு பயன் படுத்தாமல், சோறு உண்பதற்கு உபயோகிப்பதால்,
ஆழ்வார், நன்றி இல்லாத அவர்கள் உண்ணும் அந்த சோற்றினை எடுத்து நன்றி உள்ள நாய்களுக்கு
இடுவார் இல்லையோ என்று கூறி, உபதேசங்களில் இருந்து விலகுகிறார்.
இங்கு பெரியாழ்வார் திருமொழியில் இருந்து (4.4.5)
“நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடைப், பூமி பாரங்கள் உண்ணுஞ் சோற்றினை வாங்கிப்
புல்லைத் திணிமினே” என்ற பெரியாழ்வார் பாசுரம் மேற்கோள் காட்டப்படுகிறது.
திருக்கோட்டியூர் பெருமாளை நினைக்காத வலிய நெஞ்சம் கொண்ட பாவிகளின்
(இங்கு ஆழ்வார், மனிதர் என்று கூற மனமில்லாமல், ‘பூமி பாரங்களே’ என்று சொல்வது கவனிக்க வேண்டியது)
சோற்றை பிடுங்கி அவர்கள் வாயில் – வயிற்றில் புல்லை திணிக்குமாறு கூறுகிறார்.

நாய்க்கு சோறு கொடுக்க வேண்டும் என்று ஆசை பட்டால் வேறு ஏதாவது கொடுக்க வேண்டியது தானே,
மற்றவர்களிடம் இருந்து பிடுங்கி கொடுக்க இவர்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது என்று கேட்டு கொண்டு,
‘அசத்துக்களின் – தீயவர்களின் பொருளை பிடுங்கி சத்துகளுக்கு – நல்லவர்களுக்கு அளியுங்கள்’ என்ற
சாஸ்திர வாக்கியத்தை மேற்கோள் காட்டுகிறார்.
அதோடு நில்லாமல் அது மாதிரி வாழ்ந்து காட்டியவர் திருமங்கை ஆழ்வார் என்று முடிக்கிறார்.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்– 391-421-திரு நாமங்கள்–

May 9, 2022

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை – இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)

391. பரர்த்தயே நமஹ:(Pararddhaye namaha)

ஸ்ரீராமபிரானுக்குப் பட்டாபிஷேகம் ஆகி, ராமராஜ்ஜியம் நடைபெற்று வந்த சமயம். தமசா நதிக்கரையில் உள்ள
வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு நாரத முனிவர் வந்தார். அப்போது நாரதரை அடிபணிந்த வால்மீகி,
அவரிடம், “பூமியில் இப்போது வாழ்பவர்களுக்குள் அனைத்து மங்கல குணங்களும் நிரம்பப்பெற்றவர் யார்?” என்று கேட்டார்.

ராமனின் ஆட்சியில் வாழும் வால்மீகி பகவானுக்கு, ராமனே பரமாத்மா என்பதும்,
ராமன் அனைத்து விதமான மங்கல குணங்களும் நிறைந்தவன் என்பதும் நன்றாகவே தெரியும்.
ஆனாலும் இறை வனைப் பற்றி நாமாக அறிந்துகொள்வதை விட, குருவின் மூலம் அறிந்துகொள்வதே விசேஷம் ஆகும்.
அதனால் தான் நற்குருவுக்கு உரிய இலக்கணங்கள் அனைத்தும் நிறைந்த நாரதரிடம் பணிவோடு தனது கேள்வியை முன்வைத்தார் வால்மீகி.

அதற்கு விடையளித்த நாரதர்,
“இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனை: ச்ருத:
நியதாத்மா மஹாவீர்யோ த்யுதிமான் த்ருதிமான் வசீ”-(வால்மீகி ராமாயணம் பால காண்டம் 1-8)
என்று தொடங்கி, “இட்சுவாகு குலத்தில் அவதரித்த ராமன் என்பவனே அனைத்து விதமான மங்கல குணங்களும் பரிபூரணமாக நிறைந்தவன்!”
என்று சொல்லி ராமனுடைய குணங்களையும் அவற்றின் பெருமையையும் பட்டியலிடுகிறார்.

“ஸ ச ஸர்வகுண உபேத: கௌஸல்யா ஆனந்த வர்த்தன:
ஸமுத்ர: இவ காம்பீர்யே தைர்யேண ஹிமவான் இவ”–(வால்மீகி ராமாயணம் பாலகாண்டம் 1-17)

“கௌசல்யா தேவியின் மகனாக அவதரித்த திருமாலாகிய ராமனே வேதாந்தங்கள் போற்றும் அனைத்து நற்குணங்களும் நிறைந்தவன்.
அவனே பரமாத்மா ஆவான். இவ்வுலகில் பெருமை மிக்க பொருள்கள் அனைத்தும் தத்தம் பெருமைகளை அவனிடம் இருந்துதான் பெற்றிருக்கின்றன.
கடல் தனக்குள் முத்து, ரத்தினங்கள் போன்ற பல விலை உயர்ந்த பொருள்களை வைத்திருந்தாலும் அவற்றை வெளியே காட்டாது.
அதுபோல் தானே இறைவன் என்பதை ராமன் நன்கு அறிந்திருந்தாலும், தனது இறைத்தன்மையை அவன் வெளியே
காட்டிக் கொள்ளாமல் மனிதனைப் போல நடிப்பான். எத்தனை துக்கங்கள் வந்தாலும்,
தன் நிலை மாறாமல் இருப்பதிலே மலையைப் போன்றவன் ராமன்.”

“விஷ்ணுனா ஸத்ருசோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்சன:
காலாக்னி ஸத்ருச: க்ரோதே க்ஷமயா ப்ருதிவீ ஸம:”(வால்மீகி ராமாயணம் பால காண்டம் 1-18)

“வீரத்தில் திருமாலைப் போன்றவன். அமுதைப் பொழிந்து மகிழ்விப்பதில் நிலவைப் போன்றவன். அடியார்களைத் துன்
புறுத்துவோர் மீது கோபம் கொள்ளுகையில் ஊழிக் கால நெருப்பைப் போன்றவன். பொறுமையிலே பூமியைப் போன்றவன்.”

“தனதேன ஸமஸ்த்யாகே ஸத்யே தர்ம: இவாபர:
தம் ஏவம் குணஸம்பன்னம் ராமம் ஸத்ய பராக்ரமம்”(வால்மீகி ராமாயணம் பாலகாண்டம் 1-19)

“தியாகம் செய்வதில் குபேரனைப் போன்றவன். ‘த்யாகே ச தனதோ யதா’ என்று குபேரனைப் பற்றிப் பழமொழி பிரசித்தமாக உண்டு.
சத்தியத்தில் நிலை நிற்பதில் தரும தேவதையைப் போன்றவன். அவனே அனைத்து வித நற்குணங்களும் நிறைந்த பரம்பொருள் ஆவான்.
அவனது குணங்கள் என்றுமே மாறாமல் அவனிடம் நிறைந்திருக்கும்.”
இவ்வாறெல்லாம் பலபடிகளில் ராமனின் குணத்தை நாரதர் வால்மீகிக்கு விவரித்ததால் தான்,
அந்தக் குணங்களால் ஈர்க்கப்பட்ட வால்மீகிக்கு ராமனின் வரலாற்றை ஒரு காவியமாக எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
அதன்பின், பிரம்மாவின் நியமனப்படி, நாரதர் கூறிய வரலாற்றின் அடிப்படையில் ஸ்ரீராமாயணத்தை இயற்றினார்
வால்மீகி பகவான் என்பது வாசகர்கள் அறிந்த செய்தியே.

இப்படி பால காண்டத்தில், வால்மீகிக்கு நாரதர் வர்ணித்த படி, பற்பல மங்கல குணங்கள் நிறைந்தவனாக ராமன் இருப்பதால்,
அவன் ‘பரர்த்தி:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘பர’ என்றால் உயர்ந்த மங்கல குணங்கள் என்று பொருள். ‘ரித்தி:’ என்றால் நிறைந்திருத்தல்.
பர + ரித்தி = பரர்த்தி: என்றால் மிக உயர்ந்த மங்கல குணங்கள் நிறைந்தவன் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 391-வது திருநாமம்.
“பரர்த்தயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நற்குணங்களோடு விளங்கும்படி ஸ்ரீராமன் அருள் புரிவான்.

————

392. பரம ஸ்பஷ்டாய நமஹ:(Parama Spashtaaya namaha)

(வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் 114-ம் சர்க்கம்) ராம பாணத்தால் தாக்கப்பட்டுப் போர்க்களத்தில் இறந்துகிடந்த
ராவணனின் சடலத்தைக் கண்ட அவனது மனைவி மந்தோதரி, அவன்மேல் விழுந்து புலம்பி அழுதாள்.
அப்போது ராவணனின் சடலத்தைப் பார்த்து, “மூவுலகையும் ஆக்கிரமித்து, தேவர்களையும் வீழ்த்திய உங்களை
ஒரு சாதாரண மனிதன் வென்று விட்டாரா? பற்பல வரம் பெற்ற உங்களை, ஒரு மனிதனின் சரம் அழித்துவிடுமா?”
என்று சிந்தித்துக் கூறத் தொடங்கினாள் மந்தோதரி.

“ஜனஸ்தானத்தில் பல அரக்கர்களுடன் கூடியிருந்த உங்கள் தம்பி
கரனை இந்த ராமன் முன்பே தனி ஒருவராக இருந்து அழித்திருக்கிறார். எனவே இவர் நிச்சயமாக மனிதராக இருக்க முடியாது.
தேவர்களாலும் புக முடியாத இலங்கைக்குள்ளே அநுமன் என்ற தூதுவனை அனுப்பி நுழைய வைத்த ஸ்ரீராமன்,
நிச்சயம் சாதாரண மனிதர் அல்லர்.
கடலில் அணைகட்டி ஒருவர் இலங்கைத் தீவுக்கு வந்திருக்கிறார் என்னும் போதே அவர் சாதாரண மானிடராக இருக்க முடியாது என்று நான் எண்ணினேன்.
உங்களை அழிக்க நினைத்த யமன், சீதை என்ற அழகான பெண்ணை உருவாக்கி, உங்களை மயக்கி,
அந்த யமனே ராமனாக வடிவம் கொண்டு வந்து உங்கள் உயிரைப் பறித்துச் சென்று விட்டாரோ? இல்லை,
ராமன் யமனாக இருக்க முடியாது. யமன் இலங்கைக்குள் நுழையவே அஞ்சுவாரே!

அல்லது, உங்களால் வீழ்த்தப்பட்ட இந்திரன் உங்களைப் பழிவாங்குவதற்காக ராமன் என்ற மனிதனாக வேடமிட்டு
வந்து அழித்து விட்டானோ? சாத்தியமில்லை! உங்களைப் பார்க்கும் சக்திகூட அந்த இந்திரனுக்குக் கிடையாதே!
இந்த ராமன் பரமாத்மாவான திருமாலாகத் தான் இருக்கவேண்டும்.

“வ்யக்தம் ஏஷ மஹாயோகீ பரமாத்மா ஸநாதன:
அநாதி மத்ய நிதன: மஹத: பரமோ மஹான்”
இவர் திருமால் என்பது அடியேனுக்குத் தெளிவாகத் தெரிகிறது. உலகைக் காக்க வேண்டும் என்று எப்போதும் சிந்திப்பவரும்,
பரமாத்மாவும், உலகியல் மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவரும், தொடக்கம் நடு முடிவு இல்லாதவரும்,
இந்திரன் பிரம்மா உள்ளிட்ட தேவர்களை விட உயர்ந்தவருமான திருமாலே இவர் என்பதை இப்போது தெளிவாக உணர்கிறேன்.

“தமஸ: பரமோ தாதா சங்க சக்ர கதாதர:
ஸ்ரீவத்ஸ வக்ஷா: நித்யஸ்ரீ: அஜய்ய: சாச்வதோ த்ருவ:”

சம்சார மண்டலத்துக்கு அப்பாற்பட்ட வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பவரும், உலகைப் போஷிப்பவரும்,
காப்பதற்கு உறுப்பாக சங்கு சக்கரம் கதை ஏந்தியவரும், திருமார்பில் ஸ்ரீவத்சம் என்ற மறுவைக் கொண்டவரும்,
திருமகளோடு எப்போதும் இணைந்திருப்பவரும், திருமகளோடு இணைந்திருப்பதால் எப்போதும் வெல்பவரும்,
எக்காலத்திலும் இருப்பவரும், மாறுதலற்றவருமான திருமாலே இவர்.

அந்தத் திருமால்தான் உலகுக்கு நன்மை செய்வதற்காகவும், தீயசக்திகளை அழிப்பதற்காகவும், மனிதனாக அவதாரம் செய்து வந்துள்ளார்.
வானவர்கள் அவருக்கு உதவி செய்வதற்காக வானரர்களாக வந்துள்ளார்கள். உலகைக் காக்கும் திருமால்,
உலகுக்குத் தீங்கிழைத்த உங்களை உங்களது பரிவாரங்களோடு அழித்துவிட்டார்!” என்று சொல்லிப் புலம்பினாள் மந்தோதரி.

இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், ராமன் பொதுவாகத் தனது இறைத்தன்மையை வெளியிடாமல் இருந்தாலும்,
மந்தோதரி, தாரை போன்ற கற்புக்கரசிகளுக்கும், அநுமன் போன்ற பக்தர்களுக்கும் தனது சொரூபத்தை
அவரே தனது கருணையால் நன்றாக வெளிப்படுத்திவிடுவார்.
அல்லது, தனது நடவடிக்கைகளால் தானே பரம்பொருள் என்பதை அவர்கள் உணரும்படிச் செய்துவிடுவார்.

இப்படிச் சிறந்த அடியார்களுக்கும் மகான்களுக்கும் தனது பெருமையைத் தெளிவாக உள்ளபடி காட்டுவதால்,
ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸ்பஷ்ட’ என்றால் தெளிவாக என்று பொருள். ‘பரம’ என்றால் மேன்மை.
தனது மேன்மையை ஸ்பஷ்டமாக தெளிவாக அடியார்களுக்குக் காட்டும் ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 392-வது திருநாமம்.
“பரமஸ்பஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் தெளிவான ஞானத்தோடு திகழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்.

————-

393. துஷ்டாய நமஹ:(Thushtaaya namaha)

ராவண வதம் ஆனபின், குபேரன், யமன், இந்திரன், வருணன், சிவன், பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் அனைவரும்
வானில் கூடி ராமபிரானைத் துதித்தார்கள்.
“த்ரயாணாம் த்வம் ஹி லோகானாம் ஆதிகர்த்தா ஸ்வயம் ப்ரபு:”
“பிரம்மதேவர் உட்பட அத்தனை உயிர்களையும் உலகங்களையும் படைக்கும் ஆதி கர்த்தாவாக, ஊழி முதல்வனாகத் திகழ்பவர் நீங்கள்.
ஆனால் உங்களைப் படைத்தவர் என்று யாரும் இல்லை.”
“அந்தே ச ஆதௌ ச லோகானாம் த்ருச்யஸே த்வம் பரந்தப”
“உலகங்கள் படைக்கப்படுவதற்கு முன்னும் நீங்கள் இருந்தீர்கள். உலகங்கள் யாவும் ஊழிக்காலத்தில் அழிந்த பின்னும் நீங்கள் இருப்பீர்கள்.
”இப்படி எல்லாம் பிரம்மாவும் மற்ற தேவர்கள் ராமனைப் பார்த்துத் துதி செய்தவாறே, அவர்களைத் தடுத்து ராமன்
கீழ்க்கண்ட வாக்கியத்தைச் சொன்னான்:

“ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்” (வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் 120-11)
பொதுவாக இவ்வாக்கியத்துக்குப் பொருள் உரைப்பவர்கள், ராமன் தன்னை இறைவன் என்று அறியவில்லை,
அதனால் தேவர்கள் கூறும் பெருமைகளை எல்லாம் மறுத்துப் பேசி, “நான் வெறும் தசரதன் மகன் தானே ஒழிய
நீங்கள் சொல்லும் பெருமைகள் ஏதும் எனக்கு இல்லை!” என்று சொல்வதாகக் கூறுவார்கள்.
ஆனால் வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ராமாநுஜருக்கு அவரது தாய்மாமாவான திருமலை நம்பிகள்
கீழத் திருப்பதியில் ஒரு புளிய மரத்தடியில் உபதேசம் செய்தார்.
திருமலை நம்பிகள் ராமனின் இந்தக் கூற்றில் ஒரு விசேஷ அர்த்தம் இருப்பதாக விளக்கினார்.

அது என்ன விசேஷ அர்த்தம்?
ராமனின் வாக்கியத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள் –

1. ஆத்மானம் மானுஷம் மன்யே, 2. ராமம், 3. தசரதாத்மஜம்.
ராமன் சொல்கிறான், “1. ஆத்மானம் மானுஷம் மன்யே – தேவர்களே! நீங்கள் என்னைத் துதிக்கும் போது
நானே உலகுக்கு மூலக் காரணம் என்றும், பிரம்மாவைப் படைத்தவனும் நானே என்றும் இப்படிப் பலவாறாக
எனது பெருமைகளை எல்லாம் சொல்லித் துதி செய்துவிட்டீர்கள்.
ஆனால் இந்தப் பெருமைகள் எல்லாம் ஏற்கனவே வேதங்களில் சொல்லப்பட்டு விட்டனவே!
தேவர்களான உங்களுக்கு அருள்புரியத் தானே மனிதனாக எளிமையோடு அவதரித்தேன்?
அந்த எளிமையைச் சொல்லி என்னைத் துதி செய்யலாமே! என் பெருமையைச் சொல்லித் துதிப்பதை விட
என் எளிமையைச் சொல்லித் துதிப்பதையே நான் பெரிதாகக் கருதுகிறேன்.

2. ராமன் – அவ்வாறு எளிமையைச் சொல்லித் துதிக்கும் போதும், நாராயணன், வாசுதேவன், வைகுண்டநாதன் போன்ற
எனது பெயர்களைச் சொல்லித் துதிக்காமல், நான் எளிமையோடு பூமியில் அவதாரம் செய்தமைக்கு அடையாளமான
ராமன் என்ற திருப்பெயரைச் சொல்லி அழைத்துத் துதிசெய்யுங்கள்.

3. தசரத ஆத்மஜம் – ராமன் என்று என்னை அழைப்பதை விட, சக்கரவர்த்தி தசரதனின் மகன் என்று
என்னை நீங்கள் அழைத்தால் மேலும் மகிழ்வேன்.”
ராமன் கூறவரும் கருத்து – மற்ற விஷயங்களை எல்லாம் சொல்லி அவனைத் துதிப்பதைக் காட்டிலும்,
தசரதனின் மகன் என்று அழைத்துத் துதி செய்தால் அதுவே ராமனுக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.

ஏன் அப்படி? வைகுண்டத்திலேயே திருமால் இருந்தால், பக்தர்களால் அவரை அணுகவே முடியாது.
அங்கிருந்து இறங்கி வந்து தசரதன் மகனாக அவதாரம் செய்தபடியால் தான், எல்லா பக்தர்களாலும்
அந்த இறைவனை எளிதில் அணுக முடிந்தது. தனது தந்தையைத் தானே தேர்ந்தெடுக்க வல்ல அந்த இறைவன்,
ராமாவதாரத்துக்குத் தந்தையாகத் தசரதனைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு மகனாக வந்து பிறந்து,
தனது எளிமையை அடியார்களுக்கு நன்கு வெளிப்படுத்திக் காட்டினார்.

‘தசரதன் மகனா’கத் திருமால் அவதரித்தது தான், எல்லா பக்தர்களும் அவரை அணுகுவதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
எனவே தன்னை எப்போதும் ‘தசரதன் மகன்’ என்று சொல்லிக் கொள்வதிலே மகிழ்வாராம் ஸ்ரீராமன்.
அதனால் தான் இன்றளவும் வைணவ நெறியில் ஸ்ரீராமன் என்று சொல்லாமல் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்றே சொல்வார்கள்.
மூதறிஞர் ராஜாஜி ராமாயண வரலாற்றை எழுதிய போது, அந்நூலுக்குச் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்றே பெயர் சூட்டினார்.

இப்படித் தசரதன் மகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு மகிழ்வதால் ராமன் ‘துஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘துஷ்ட:’ என்றால் மகிழ்பவர் என்று பொருள். தசரதனின் மகனாகி, அதனால் எல்லோராலும் எளிதில் அணுகப்படக் கூடியவராய் ஆகி,
மகிழ்ச்சி பெற்றதால், ராமனுக்கு ‘துஷ்ட:’ என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 393-வது திருநாமம்.
“துஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்.

————-

————-

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை –
இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)
{398-வது திருநாமம் ‘விரதோ மார்க:’ என்றும் ‘விரஜோ மார்க:’ என்றும் இருவிதமாக ஓதப்படுகிறது.
இரண்டுமே ஆழ்ந்த பொருள் கொண்டு இருப்பதால், உரையாசிரியரான பராசர பட்டர் இரண்டு விதமான பாடங்களையும் ஏற்று
இந்த ஒரு திருநாமத்துக்கு இரு விதமாக விளக்கவுரை அருளியுள்ளார்.
அதன் அடிப்படையில், ‘விரதோ மார்க:’ என்ற முதல் பாடத்தின் அடிப்படையில் இத்திருநாம விளக்கத்தை இப்போது காண்போம்.
அடுத்த கட்டுரையில், ‘விரஜோ மார்க:’ என்ற பாடத்தின் அடிப்படையில் திருநாம விளக்கத்தைக் காண்போம்.}

398 (அ). விரதாய மார்காய நமஹ:
(Virathaaya Maargaaya namaha)
ராமனுக்கு மன்னன்முடி சூட்டப்போகிறார்கள் என்று அயோத்தி நகரமே குதூகலித்திருக்க, பட்டாபிஷேகத்தன்று காலை
ராமனைத் தனது அரண்மனைக்கு வரவழைத்தாள் கைகேயி.
ராமனைப் பார்த்து, “உன் தந்தை இரண்டு வரங்கள் எனக்கு அளித்துள்ளார். அவற்றை நீ நிறைவேற்ற வேண்டும்!” என்று தொடங்கி,

“ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டாண்டில் வா என்று இயம்பினன் அரசன்!”–என்று ராமனுக்குக் கட்டளை இட்டாள் கைகேயி.

“கடல்சூழ்ந்த இந்த நிலவுலகம் முழுவதும் பரதன் ஒருவனே ஆள வேண்டும். நீ ஜடாமுடி தரித்துக்கொண்டு காட்டில் தவம் புரிந்து,
புண்ணிய தீர்த்தங்களிலே நீராடிவிட்டுப் பதினான்கு ஆண்டுகள் கழித்துத் திரும்பலாம். இது மன்னருடைய கட்டளை!” என்றாள் கைகேயி.

நேற்று இரவு வரை எனக்குப் பட்டாபிஷேகம் என்று சொல்லப்பட்டது, இப்போது திடீரென எனக்கு வனவாசமா என்று
ராமன் வருத்தம் கொள்ளவில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகேயியைப் பார்த்து,
“மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பனோ? என்பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?”
“தாயே! இதை மன்னர்தான் சொல்ல வேண்டுமா? நீங்கள் சொன்னாலே அடியேன் அதை அடிபணிந்து நடக்க மாட்டேனோ?
என் தம்பி முடிசூடினால், அடியேன் சூடியதாகவே அதைக் கருதுகிறேன்!” என்று சொல்லிக் காட்டுக்குப் புறப்படுகிறான்.

அப்போது ராமனின் முகம் எப்படி இருந்தது?
“அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா!” என்கிறார் கம்பர்.
இதற்கு வால்மீகியும் அழகான ஓர் உவமை கூறுகிறார்.
“ந சாஸ்ய மஹதீம் லக்ஷ்மீம் ராஜ்யநாச: அபகர்ஷதி
லோக காந்தஸ்ய காந்தத்வாத் சீதரச்மே:இவ க்ஷபா”

உனக்கு ராஜ்ஜியம் கிடையாது என்று கைகேயி சொன்னபோதும் கூட, ராமன் முகத்தில் இருந்த
பொலிவோ அழகோ அணுவளவும் குறையவில்லை.
உலகுக்கெல்லாம் குளிர்ச்சியும் ஒளியும் தரும் சந்திரனின் ஒளியை இருளால் மறைக்க முடியுமா?
அதுபோலத்தான் ஆயிரம் துயரங்கள் வந்தாலும், ராஜ்ஜியம், செல்வம் போன்றவற்றில் ஆசை இல்லாத ராமனின்
அழகைக் குலைக்க முடியாது என்கிறார் வால்மீகி. ஆசை இல்லா மனிதர் தம்மைத் துன்பம் எங்கே நெருங்கும்?

இப்படி உலகியல் விஷயங்களில் விருப்பமோ நாட்டமோ கொள்ளாதவனாக ராமன் திகழ்ந்தபடியால், ‘விரத:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘விரத:’ என்றால் பற்றில்லாதவர் என்று பொருள்.
அத்துடன் ‘மார்க:’ என்ற பதமும் சேர்ந்து ‘விரதோ மார்க:’ என்று இத்திருநாமம் வருகிறதே!
‘மார்க:’ என்றால் என்ன? ‘மார்க:’ என்றால் (இவ்விடத்தில்) விரும்பப்படுபவர் என்று பொருள்.
பரத்வாஜர், விசுவாமித்ரர் போன்ற பற்றில்லாத முனிவர்களால் விரும்பப்படுகிறான் ராமன். அதனால் ‘மார்க:’ என்று அழைக்கப்படுகிறான்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”–என்றார் வள்ளுவர்.

அந்த வகையில், பற்றில்லாத முனிவர்கள் ராமனின் திருவடி களைப் பற்றிக் கொண்டு உய்வடைகிறார்கள்.
அத்தகைய பக்தர்களிடம் ராமனும் பற்று வைக்கிறான்.
உலகியல் செல்வங்களில் தான் அவன் பற்றில்லாமல் இருக்கிறானே ஒழிய, அடியார்கள் மேல்
மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருக்கிறான் அந்த ஸ்ரீராமன்.அதனால்தான் ராமன் ‘விரதோ மார்க:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘விரத:’ என்றால் உலகியல் விஷயங்களில் ஆசையற்றவர், ‘மார்க:’ என்றால் முனிவர்களாலும் விரும்பப் படுபவர்.
உலகியல் பற்றற்றவனாகவும், முனிவர்களால் வணங்கப்படுபவனாகவும் விளங்கும் ராமன் ‘விரதோ மார்க:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 398-வது திருநாமம்.“விரதாய மார்காய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும்
அன்பர்களுக்குத் தாழ்ந்த விஷயங்களில் உள்ள பற்று நீங்கி, இறைவனிடத்தில் பேரன்பு உண்டாகும்படி ஸ்ரீராமன் அருள் புரிவான்.

————

399 (ஆ). விரஜாய மார்காய நமஹ:
(Virajaaya Maargaaya namaha)
பஞ்சவடி பர்ணசாலையில் சீதையைக் காணாமல் தேடிக் கொண்டு வந்த ராமனும் லட்சுமணனும், வழியில் ஒரு கழுகு
ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார்கள். “சீதையை உண்டுவிட்டு யாரோ அரக்கன் படுத்திருக்கிறான் போலும்!” என்று
சொல்லிக் கொண்டே அந்தக் கழுகை நோக்கி வேகமாகச் சென்றான் ராமன்.

அந்தக் கழுகு ராமனைப் பார்த்து,
“யாம் ஓஷதிம் இவ ஆயுஷ்மன் அன்வேஷஸி மஹாவனே
ஸா தேவீ மம ச ப்ராணா ராவணேன உபயம் ஹ்ருதம்”

“ராமா! நீ நீண்ட ஆயுளோடு நலமுடன் வாழ வேண்டும்! நீ இக்காட்டில் எந்த சீதையைத் தேடிக் கொண்டு வருகிறாயோ,
அந்த சீதையையும் எனது உயிரையும் ராவணன் கொண்டு சென்று விட்டான்!” என்று சொன்னது.
அருகில் சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அக்கழுகு ஜடாயு என்பதை ராமனும் லட்சுமணனும் உணர்ந்து கொண்டார்கள்.
மேலும் ஜடாயு ராமனைப் பார்த்து, “ராமா! சீதையை அபகரித்துச் சென்ற ராவணனைத் தடுத்து அவனோடு போரிட்டேன்.
அவன் தனது வாளால் எனது சிறகு களை வெட்டிவிட்டான்! தன்னை அபகரித்துச் சென்றவன் ராவணன் என்பதை
உனக்கு எப்படியாவது தெரிவிக்க வேண்டும் என்று சீதை கெஞ்சினாள்.
எனவே அந்தச் செய்தியை உன்னிடம் சொல்வதற்காகவே உயிரை வைத்துக் கொண்டு காத்திருந்தேன்!” என்று சொன்னார்.
ராமனின் கண்கள் குளமாயின.

நெஞ்சில் துன்பச் சுமை ஏறியது. ஜடாயு மேல் விழுந்தான் ராமன்.
“தம் தாதையரைத் தனயர் கொலை செய்தார்
முந்தாரே உள்ளார் முடிந்தான் முனை ஒருவன்
எந்தாயே எற்காக நீயும் இறந்தனையால்
அந்தோ வினையேன் அருங்கூற்றம் ஆனேனே”

“நாட்டில் ஒரு தந்தை என்னைப் பிரிந்த துயரால் இறந்துவிட்டார்.
காட்டில் ஒரு தந்தை எனக்கு உதவி செய்யப்போய் இறக்கப் போகிறாரே! நாட்டில் ஒரு
தந்தையும் காட்டில் ஒரு தந்தையும் மரணம் அடைய இந்த மகன் காரணமாகி விட்டேனே!” என்று புலம்பினான் ராமன்.

ஜடாயு, “ராமா! நீ துயரத்தையும் கோபத்தையும் விட்டு, அடுத்து நடக்க வேண்டியதைப் பார்.
சீதையை மீட்டு அவளது துயரத்தைத் தீர்த்து, ராவணனை வதம் செய்து தேவ காரியத்தை நிறைவேற்று! நீ நீடூழி வாழ்க!” என்றார்.
ராமன், “ராவணன் சீதையோடு எங்கே போனான்?” என்று கேட்டான்.
மிகுந்த தளர்ச்சியால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் வருந்தினார் ஜடாயு. அந்த வருத்தத்தோடே ஜடாயுவின் உயிர் பிரிந்தது.

அப்போது ராமன் ஜடாயுவைப் பார்த்து,
“யா கதிர் யஜ்ஞசீலானாம் ஆஹிதாக்னேச்ச யா கதி:
அபராவர்த்தினாம் யா ச யா ச பூமிப்ரதாயினாம்
மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான்
க்ருத்ர ராஜ மஹாஸத்த்வம் ஸம்ஸ்க்ரு தச்ச மயா வ்ரஜ”

“வேள்வி செய்பவர்கள், தவம் புரிபவர்கள், துறவிகள், தானம் செய்பவர்கள் உள்ளிட்ட சான்றோர்கள் எல்லோரும் பெறுகின்ற
மிக உயர்ந்த இலக்காகிய வைகுண்டத்தை நீங்கள் அடைவீர்கள். நான் ஆணையிடுகிறேன்.
எனது ஆணைப்படி வைகுண்டத்தை நோக்கிய பாதையான அர்ச்சிராதி மார்க்கத்தில் பயணித்து நீங்கள் முக்தி அடைவீராக!” என்றான்.
அவ்வாறே ஜடாயுவின் ஆத்மாவும் அர்ச்சிராதி மார்க்கத்திலே பயணித்து வைகுண்ட லோகத்தை அடைந்தது.

இப்படி முக்தியை நோக்கிய தூய பாதையை அடியார்களுக்குக் காட்டுவதால், ராமன் ‘விரஜோ மார்க:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘மார்க:’ என்றால் பாதை. ‘விரஜ:’ என்றால் மாசில்லாத, தூய என்று பொருள்.
‘விரஜோ மார்க:’ என்றால் தூய பாதையை அடியார்களுக்குக் காட்டுபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 399-வது திருநாமம்.
“விரஜோ மார்காய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மிகச்சிறந்த பாதையை ஸ்ரீராமன் காட்டியருள்வான்.

———–

399. நேயாய நமஹ:(Neyaaya namaha)
(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421[பரிக்ரஹ:] வரை –
இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீ ராமனின் சரித்திரம்)

சரபங்கருக்கு முக்தி அளித்த பின், சரபங்க ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டு, லட்சுமணனோடும் சீதையோடும்
தண்டகாரண்ய வனத்தினுள் செல்லத் தயாரானான் ராமன். அச்சமயம் ராமனைத் தேடிப் பல முனிவர்கள் அங்கே வந்தார்கள்.
அம்முனிவர்கள் யாவரும் வெவ்வேறு விதமான முறைகளில் தவத்தில் ஈடுபடுபவர்கள்.
சிலர் சூரிய, சந்திரர்களின் ஒளியை மட்டுமே உண்பார்கள். சிலர் கல்லில் படுத்து உடலை வருத்திக் கொள்வார்கள்.
சிலர் இலைகளை மட்டுமே புசிப்பார்கள். சிலர் அரைக்காத தானியங்களையே உண்பார்கள்.

சிலர் கழுத்தளவு நீரில் தவம் புரிபவர்கள். சிலர் வெட்ட வெளியில் தவம் புரிவார்கள். சிலர் ஈர ஆடை மட்டுமே அணிவார்கள்.
சிலர் தண்ணீரை மட்டும் உண்பார்கள். சிலர் காற்றை மட்டும் உண்பார்கள்.
இத்தகைய பல குழுக்களாக இணைந்து வந்த முனிவர்கள் மொத்தமாக ராமன் திருவடிகளிலே சரணாகதி செய்து
தங்களது பிரார்த்தனையை ராமனிடம் முன் வைத்தார்கள்.

“ஸோயம் ப்ராஹ்மண பூயிஷ்டோ வானப்ரஸ்த கணோ மஹான்
த்வந்நாத: அநாதவத் ராம ராக்ஷஸை: வத்யதே ப்ருசம்”
“ஸ்ரீ ராமா! காட்டில் வசிக்கும் முனிவர்களான நாங்கள் அரக்கர்களாலே மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறோம்.
ராவணனைச் சேர்ந்த அரக்கர்கள் பல முனிவர்களைக் கொன்று விட்டார்கள்.
உனது தொண்டர்களான நாங்கள் இன்று அநாதைகளைப் போல் இருக்கிறோம்.”

“பரா த்வத்தோ கதிர் வீர ப்ருதிவ்யாம் நோபப்தயதே
பரிபாலய நஸ் ஸர்வான் ராக்ஷஸேப்யோ ந்ருபாத்மஜ”
“ராமா! உன்னை விட்டால் எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை.
ஆகையினால் அந்த அரக்கர்களிடம் இருந்து எங்கள் அத்தனை பேரையும் நீ தான் காத்தருள வேண்டும்!”
என்று ராமனிடம் முனிவர்கள் பிரார்த்தித்தார்கள்.

“இருளிடை வைகினேம் இரவி தோன்றினாய்
அருளுடை வீர நின் அபயம் யாம் என்றார்”–என்று இக் காட்சியைப் பாடுகிறார் கம்பர்.
“ராமா! நாங்கள் இருளில் வாடி இருந்த நேரத்தில் கதிரவன் போல் நீ தோன்றி இருக்கிறாய்.
துயராகிய இருளைப் போக்கி, ஒளிதந்து எங்களுக்கு நீ அபயம் நல்க வேண்டும்!” என்று முனிவர்கள் ராமனிடம் கோரினார்கள்.

அப்போது ராமன் அவர்களைப் பார்த்து, “ஏன் என்னிடம் வந்து பிரார்த்தனை செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
“நைவம் அர்ஹத மாம் வக்தும் ஆஜ்ஞாப்யோஹம் தபஸ்வினாம்”
“முனிவர்களே! அடியேன் உங்களின் தொண்டன். நீங்கள் ஆணையிட்டால், அதை நடத்துபவன் நான்.
அடியேனுக்கு ஆணையிடாமல், நீங்கள் ஏன் பிரார்த்தனை செய்கிறீர்கள்? கட்டளை இடுங்கள்!
உங்களைத் துன்புறுத்தும் அத்தனை அரக்கர்களையும் நான் அழிப்பேன்! இது உறுதி!”

“பிதுஸ்து நிர்தேசகர: ப்ரவிஷ்டோஹம் இதம் வனம்
பவதாம் அர்த்தஸித்யர்த்தம் ஆகதோஹம் யத்ருச்சயா
தஸ்ய மேயம் வனே வாஸோ பவிஷ்யதி மஹாபல:”

“நான் என் தந்தையின் வாக்கை நிறைவேற்றுவதற்காகக் காட்டுக்கு வரவில்லை.
அதைச் சாக்காக வைத்துக் கொண்டு, நல்லோர்களான உங்களுக்கு நன்மை செய்வதற்காகவே காட்டுக்கு வந்துள்ளேன்.
உங்களுக்குத் தீங்கு செய்யும் அரக்கர்களை அழித்து உங்களைக் காப்பேன்.
எனது வீரத்தையும் எனது தம்பியின் பராக்கிரமத்தையும் விரைவில் நீங்கள் காண்பீர்கள்.
எப்போது நீங்கள் கட்டளை இட்டு விட்டீர்களோ, இனி அதை அப்படியே நிறைவேற்றாமல் நான் ஓய மாட்டேன். வருந்தாதீர்கள்!”
என்று சொல்லி முனிவர்களைத் தேற்றினான் ராமன்.

இதிலிருந்து பக்தர்களும் நல்லோர்களும் இடும் கட்டளையைப் பின்பற்றி நடப்பவனாக ராமன் இருக்கிறான்
என்பதை நாம் அறிய முடிகிறதல்லவா?
‘நேய:’ என்றால் வழிநடத்தப்படுபவர் என்று பொருள். பக்தர்களுக்கு வசப்பட்டு, அவர்களின் சொல்படி நடந்து,
அந்த பக்தர்களாலேயே வழிநடத்தப் படுவதால், ஸ்ரீ ராமன் ‘நேய:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 399-வது திருநாமம்.
“நேயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நினைக்கும் நற்காரியங்களை ராமன் நடத்தி முடித்துத் தருவான்.

———

400. நயாய நமஹ: (Nayaaya namaha)
ஆரண்ய காண்டத்தின் முதல் சர்க்கம் சீதையோடும் லட்சுமணனோடும் தண்ட காரண்யம் என்னும் காட்டுக்குள்ளே
ராமன் நுழைந்த விதத்தை வர்ணிக்கிறது.
“ப்ரவிச்ய து மஹாரண்யம் தண்டகாரண்யம் ஆத்மவான்
ததர்ச ராமோ துர்தர்ஷஸ் தாபஸாச்ரம மண்டலம்”–என்கிறார் வால்மீகி.

அந்த தண்டகாரண்யத்தில் வேள்விக்குப் பயன்படுத்தப்படும் தர்ப்பைப் புற்கள், மரவுரிகள் போன்றவை இருந்தன.
வேத ஒலி அங்கே ஒலித்துக் கொண்டே இருந்தது.
துஷ்ட மிருகங்கள் கூட பரஸ்பரம் துவேஷம் காட்டாமல் ஒற்றுமையாக அங்கே வாழ்ந்துவந்தன.
முனிவர்கள் உண்ணும் காய் கிழங்குகளையும், இனிய பழங்களையும் கொடுக்கும் பற்பல மரங்கள் அங்கே இருந்தன.
அங்கு வாழ்ந்துவந்த முனிவர்கள் யாவரும் ராமனின் அவதார ரகசியத்தை நன்கு அறிந்தவர்கள்.
அவர்கள் ராமன் வந்திருப்பதை அறிந்து, ராமன் சீதை லட்சுமணன் ஆகிய மூவரையும் எதிர்கொண்டு அழைத்து வரவேற்றார்கள்.
அப்போது ராமனின் திருமேனி அழகினாலே அத்தனை முனிவர்களும் ஈர்க்கப்பட்டு, வைத்த கண் வாங்காமல்
ராமனையே பார்த்துக்கொண்டு இருந்தார்களாம். அதை வால்மீகி,

“ரூபஸம்ஹனனம் லக்ஷ்மீம் ஸௌகுமார்யம் ஸுவேஷதாம்
தத்ருசுர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வனவாஸின:”–என்கிறார்.

இதில் முனிவர்களை ஈர்த்த ராமனின் அழகைப் பல கோணங்களில் வர்ணித்துக் காட்டியுள்ளார் வால்மீகி பகவான்.

*ரூப ஸம்ஹனனம் – ராமனுக்கு அருகில் வந்து, அவனது ஒவ்வோர் அவயவமாகப் பார்த்தால்,
திருமேனியின் ஒவ்வோர் அங்கமும் முழுமையான அழகோடு விளங்கும் தன்மை.
*லக்ஷ்மீம் – தூரத்தில் இருந்து ராமனைத் தரிசித்தால், மொத்த திருமேனியும் அழகு நிறைந்து திகழும் தன்மை.
*ஸௌகுமார்யம் – மென்மை.
*ஸுவேஷதாம் – ராமன் நாட்டில் இருந்தவரை பற்பல ஆபரணங்களாலே அவனது திருமேனி அழகு மறைக்கப்பட்டு விட்டது.
இப்போது அந்த ஆபரணங்களைக் களைந்து விட்டு, வெறும் மரவுரியோடு ராமன் காட்டுக்கு வந்ததால்,
அவனது திருமேனி அழகு இப்போதுதான் நன்றாகப் பிரகாசிக்கிறது.
*தத்ருசுர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வனவாஸின:- பற்றுகளைத் துறந்த முனிவர்களே ராமனின் இத்தகைய அழகில் மயங்கி,
ஈடுபட்டு, ராமன் மீது யாருடைய கண் எச்சிலும் படக்கூடாதே என்று பல்லாண்டு பாடத் தொடங்கினார்கள்.

அதன்பின், ராமன், சீதை, லட்சுமணனைத் தங்களது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று இளைப்பாறச் செய்த முனிவர்கள்,
ராமனிடம் தங்களது பிரார்த்தனையை முன்வைத்தார்கள். “ராமா! நீ தர்மத்தைக் காப்பவன்! துன்பப்படும் முனிவர்களுக்கு ஒரே புகலிடம்!
எங்களுக்கு வணங்கத்தக்க தெய்வமும் நீயே! போற்றத்தக்க மன்னனும் நீயே! உனது அடியார்களான எங்களை
இந்த தண்டகாரண்யத்தில் வாழும் கொடிய அரக்கர்களிடம் இருந்து நீயே காத்தருள வேண்டும்!” என்று ராமனிடம் முனிவர்கள் பிரார்த்தித்தார்கள்.
(குறிப்பு: சரபங்க ஆசிரமத்தில் இருந்து ராமன் புறப்படும்போது ராமனிடம் சரணாகதி செய்த முனிவர்கள் வேறு.
ராமன் முதன் முதலில் தண்டகாரண்யத்துள் நுழையும் போது சரணாகதி செய்த முனிவர்கள் வேறு.)

“ரக்ஷிதவ்யாஸ் த்வயா சச்வத் கர்யபூதாஸ் தபோதனா:”

“உங்களது தவ வலிமையால் நீங்களே உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் சொல்லி விடாதே ராமா!
நாங்கள் புலன்களை அடக்கிக் கடுந்தவம் புரிபவர்கள்! தவக்கேடு நேராமல் இருக்கக் கோபத்தை அடக்கிக் கொண்டிருப்பவர்கள்!
எனவே நாங்கள் அரக்கர்களுக்குச் சாபம் கொடுப்பதில்லை. நீதான் எங்களைக் காத்தருள வேண்டும்!” என்றும் அவர்கள் வேண்டினார்கள்.

“அஞ்ச வேண்டாம்! அரக்கர்களை அழித்து உங்களைக் காப்பேன்!” என்று அவர்களுக்கு உறுதி அளித்தான் ராமன்.
“வேறு ஏதாவது பிராத்தனை உள்ளதா?” என்று ராமன் கேட்க, “உன்னை ஆரத் தழுவிக் கொள்ள விரும்புகிறோம்!” என்றார்கள் முனிவர்கள்.

“இப்போது உங்களை நான் தழுவிக் கொள்வது பொருத்தமாக இருக்காது. அடியார்களோடு ஒருநீராகக் கலந்து பரிமாறவே
அடுத்து கண்ணனாக நான் அவதரிக்கப் போகிறேன். நீங்கள் அத்தனை பேரும் ஆயர்பாடியில் ஆயர்குலப் பெண்களாக வந்து பிறப்பீர்களாக!
நான் கண்ணனாக வந்து உங்களைத் தழுவிக்கொள்கிறேன்!” என்று அவர்களிடம் சொன்னான் ராமன்.

உலகப் பற்றுகளை எல்லாம் விட்ட முனிவர்களுக்குக் கூட ராமனின் அழகைக் காணும் போது அவனைத் தழுவிக் கொள்ள வேண்டும்
என்கிற அவா வருகிறதல்லவா? ‘நய:’ என்றால் தன்பால் இழுத்துக் கொள்பவர் என்று பொருள்.
தனது அழகாலும் குணங்களாலும் முனிவர்கள் உட்பட அத்தனை மக்களின் மனங்களையும் தன்னிடம் ஈர்த்துக் கொள்வதால்,
ராமன் ‘நய:’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 400-வது திருநாமம்.
“நயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ஸ்ரீராமன் தன்பால் ஈர்த்துக்கொள்வான்.

——–

401. அநயாய நமஹ:(Anayaaya namaha)

ராம ராவணப் போரின் இரண்டாம் நாள். ராவணனுக்கும் லட்சுமணனுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.
அப்போது பிரம்மா தந்த பாணத்தால் லட்சுமணனின் நெற்றியில் அடித்தான் ராவணன்.
அதனால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்தான் லட்சுமணன். ஆனால் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த லட்சுமணன்,
தனது பாணங்களால் ராவணனின் பத்து வில்லையும் முறித்து, மேலும் மூன்று பாணங்களை ராவணன் மேல் வீசினான்.
லட்சுமணனின் பாணங்களால் தாக்கப்பட்டு ராவணன் மயங்கிக் கீழே விழுந்தான்.
சிறிது நேரம் கழித்து ரத்தத்தில் குளித்தவன் போல் எழுந்த ராவணன்,
பிரம்மா தந்த சக்தி ஆயுதத்தை லட்சுமணனின் மார்பை நோக்கி எய்தான்.

லட்சுமணன் அதைத் தடுப்பதற்காகப் பல பாணங்களை எய்த போதும், அந்தச் சக்தி ஆயுதத்தைத் தடுக்க முடியவில்லை.
அது நேராக லட்சுமணனின் மார்பில் பாய்ந்துவிட்டது. மயங்கிக் கிடந்த லட்சுமணனைப் பார்த்த ராவணன்,
“இவன் மிகப் பெரிய வீரனாகவும் பலசாலியாகவும் இருக்கிறான். இவன் மீண்டும் எழுந்து வந்தால்
நம்மையும் நமது சேனையையும் அழித்து விடுவான். எனவே மயங்கி இருக்கும் நிலையிலேயே இவனைச் சிறை
பிடித்துக் கொண்டு சென்று விடுவோம்!” என்று முடிவெடுத்தான்.

தனது இருபது கைகளாலும் லட்சுமணனைத் தூக்கப் பார்த்தான் ராவணன். என்ன ஆயிற்று?
வால்மீகி மற்றும் கம்பரின் வார்த்தைகளைக் கொண்டு அதை அனுபவிப்போம்:

“ஹிமவான் மந்தரோ மேருஸ் த்ரைலோக்யம் வா ஸஹாமரை:
சக்யம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந ஸங்க்யே பரதாநுஜ:”–என்கிறார் வால்மீகி.

இமயமலை, மந்தரமலை, மேருமலை ஆகிய மலைகளையும், மூன்று உலகங்களையும், ஒட்டு மொத்த தேவர்
களையும் தூக்கவல்ல ராவணனுடைய கரங்களால் லட்சுமணனைத் தூக்க முடியவில்லை.

இதை அப்படியே கம்பர்,
“தொடுத்த எண்வகை மூர்த்தியைத் தூக்கி வெண்பொருப்பொடு
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையோன்”–என்று பாடுகிறார்.

ஏன் ராவணனால் லட்சுமணனைத் தூக்க முடியவில்லை?
“சக்த்யா ப்ராஹ்ம்யாபி ஸௌமித்ரிர் நாடிதஸ்து ஸ்தனாந்தரே
விஷ்ணோர் அசிந்த்யம் ஸ்வம் பாகம் ஆத்மானம் ப்ரத்யநுஸ்மரத்”–என்று வால்மீகியும்,

“அடுத்த நல்லுணர்வு ஒழிந்திலன் அம்பரம் செம்பொன்
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே!”–என்று கம்பரும்
இதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

லட்சுமணன் ராவணனால் தாக்கப்பட்டு விழுந்து கிடப்பது வெறும் நாடகமே ஆகும்.
மனித சுவபாவத்தை அனுசரித்து அவதாரம் செய்திருப்பதால், மனித இயல்பை ஒட்டி மயங்கி இருப்பது போல் நடிக்கிறான் லட்சுமணன்.
உண்மையில் அவனது உள்ளுணர்வும் நல்லறிவும் நீங்கவில்லை. எனவே ராவணன் லட்சுமணனைத் தூக்க வரும் போது,
தானும் ராமனுடைய ஒரு பகுதியே என்று தியானித்தானாம் லட்சுமணன்.

தசரதன் செய்த வேள்வியில் கிடைத்த பாயசம் சாட்சாத் திருமாலின் வடிவம்.
அந்தப் பாயசத்தின் கால் பகுதியிலிருந்து தோன்றியவன் லட்சுமணன். அதனால் அவனுக்குள் திருமாலின் அம்சமும் உண்டு.
ஆதிசேஷன், திருமால் ஆகிய இருவரும் சேர்ந்த அவதாரமே லட்சுமணன். எனவே ராவணன் தன்னைத் தூக்கப் பார்த்த போது,
தன்னை ராமனின் ஒரு பகுதியாக நினைத்துக் கொண்டான் லட்சுமணன்.
அதனால் ராவணனால் அவனை அசைக்கக்கூட முடியவில்லை. தீய சக்திகளாலும், ராவணனைப் போன்ற
அரக்கர்களாலும் ராமனை அசைக்கவே முடியாது என்பது தாத்பரியம்.

‘நய’ என்றால் இழுத்துக் கொள்ளுதல். ‘அநய:’ என்று இழுத்துக் கொள்ள முடியாதவர்.
தீய சக்திகளால் இழுக்க முடியாதவனாக, அசைக்க முடியாதவனாக ஸ்ரீ ராமன் திகழ்வதால், ‘அநய:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 401-வது திருநாமம்.“அநயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்,
என்றுமே தீய சக்திகளுக்கு வசப்படாமல் நல்வழியில் வாழ்வதற்கு ஸ்ரீ ராமன் அருள்புரிவான்.

———

402. வீராய நமஹ:(Veeraaya namaha)

இரண்டாம் நாள் போரில், மாலைப் பொழுதில் நிராயுதபாணியாக நின்ற ராவணனைப் பார்த்து,
“இன்று போய்ப் போர்க்கு நாளை வா!” என்று ராமன் சொன்னவாறே, தலைகுனிந்த நிலையில் ராவணன்
போர்க் களத்தில் இருந்து தனது அரண்மனையை நோக்கி நடந்தான்.

“வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டு போனான்”–என்று கம்பர் இக்காட்சியைப் பாடுகிறார்.

திக் கஜங்களாகிய எட்டு யானைகளை வென்ற ராவணனின் மார்பு, அனுமனால் தாக்கப்பட்டு வலிமை இழந்திருந்தது.
கைலாசத்தை ஆட்டிய ராவணனின் தோள்கள் லட்சுமணனைத் தூக்க முடியாமல் அவமானப்பட்டன.
நாரதருக்கு இணையாக வீணை வாசித்து, சாமகானம் செய்த ராவணனின் நாவால்,
இன்று போய்ப் போர்க்கு நாளை வா என்று ராமன் சொன்ன போது பதில் பேச முடியவில்லை.
ராவணனின் கர்வத்துக்கு அடையாளமாய் இருக்கும் பத்துக் கிரீடங்களும் ராம பாணங்களால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்து விட்டன.
சிவபெருமான் தந்த வாளையும் ராமன் பாணத்தால் உடைத்து விடுவானோ என அஞ்சி வாளையே ஒளித்து வைத்து விட்டான் ராவணன்.

இப்படி மார்பின் வலிமை, தோள் வலிமை, நா வன்மை, கிரீடங்கள், வாள் மட்டுமின்றி வீரத்தையும் போர்க்களத்திலே
விட்டு விட்டு வெறுங்கையோடு இலங்கைக்குள் சென்றான் ராவணன்.
தேரில் ஏறிப் போர்க்களத்துக்கு வந்தவன் இப்போது தரையில் நடந்தபடித் திரும்புகிறான்.
திசைகளை எல்லாம் செருக்கோடு பார்த்தபடிப் போருக்கு வந்தவன், நிலத்தைப் பார்த்தபடி இலங்கை திரும்புகிறான்.
ராவணனின் பாட்டனான மால்யவான் என்ன ஆயிற்று என்று கேட்க,

அதற்கு ராவணன்,
“முப்புரம் முருக்கச் சுட்ட மூரி வெஞ்சிலையும் வீரன்
அற்புத வில்லுக்கு ஐய அம்பெனக் கொளலும் ஆகா
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒருபொருள் இல்லை வேதம்
தப்பின போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா!” என்று பதில் சொன்னான்.

“ஏதோ கூனி முதுகில் மண் உருண்டை எய்வது போல் அநாயாசமாகப் பாணங்களைத் தொடுத்து என்மீது எய்தான் ராமன்.
முப்புரங்களை எரிக்கப் பரமசிவன் பயன்படுத்திய வில்லைக் காட்டிலும் ராமனின் வில் வலிமை மிக்கது.
வேதமே பொய்த்தாலும், ராமனின் வில் பொய்க்காது. அவனது கரவேகமும் சரவேகமும் என் கண்ணில் நிற்கின்றன!” என்றான் ராவணன்.
அன்று இரவு முழுவதும் ராமனின் பாணங்களைப் பற்றிய எண்ணம் ராவணனை வாட்டியதாக வால்மீகி வர்ணிக்கிறார்.

“மாதங்க இவ ஸிம்ஹேன கருடேனேவ பன்னக:
அபிபூத: அபவத் ராஜா ராகவேண மஹாத் மனா”

சிங்கத்தால் தாக்கப்பட்ட யானை போலவும், கருடனால் தாக்கப்பட்ட பாம்பு போலவும்,
ராமனால் தாக்கப்பட்ட ராவணன் கொட்டம் அடக்கப்பட்டவன் ஆனான்.

“ப்ரஹ்மதண்ட ப்ரகாசானாம் வித்யுத் ஸத்ருச வர்சஸாம்ஸ்மரன் ராகவ பாணானாம் விவ்யதே ராக்ஷஸேச்வர:”

முனிவர்களின் சாபம் போல் தப்பாது பலன் தருவதும், வசிஷ்டரின் தண்டம் போல் மகிமை கொண்டதும்,
மின்னலைப் போல் ஒளிவீசுவதும், ஊழிக் கால நெருப்பு போல் வெப்பம் மிக்கதுமான ராம பாணத்தை நினைத்து நினைத்து,
மனம் வெம்பி மிகவும் வருந்தினான்.
அதன் பின்னர் தான், கும்பகர்ணனை எழுப்பிப் போருக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு வந்தான் ராவணன்.

இப்படி அரக்கர்களுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் தரக்கூடிய வீரம் மிக்கவனாக
ராமன் திகழ்வதால் ‘வீர:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘வீர:’ என்றால் அரக்கர்களுக்கு பயம் உண்டாக்கக் கூடிய வீரம் மிக்கவர் என்று பராசர பட்டர் விளக்கவுரை வழங்கியுள்ளார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 402-வது திருநாமம்.“வீராய நம:” என்று தினமும் சொல்லி வரும்
அன்பர்கள் வாழ்வில் வீரம் மிக்கவர்களாக விளங்கும்படி ஸ்ரீ ராமன் அருள்புரிவான்.

————-

403. சக்தி மதாம் ச்ரேஷ்டாய நமஹ:(Shakthimathaam Sreshtaaya namaha)

சிவ தனுஸ்ஸை முறித்துச் சீதா தேவியைத் திருக்கல்யாணம் செய்து கொண்டு, அயோத்தி நோக்கி
ராமன் திரும்பி வந்த போது, அந்தப் பிரம்மாண்டமான கல்யாண ஊர்வலத்தைப் பரசுராமர் வழிமறித்தார்.
“ராமா! நீ சிவபெருமானின் வில்லை முறித்த செய்தியைக் கேட்டு மகேந்திர மலையில் இருந்து உன்னைத் தேடி வந்துள்ளேன்!
உன்னுடைய வலிமையைப் பரிசோதிக்க விழைகிறேன்! இதோ என்னிடம் உள்ள விஷ்ணுதனுஸ்ஸை வாங்கி நாண் ஏற்றிக் காட்டு!
அவ்வாறு நாண் ஏற்றினால் உன்னை வீரன் என ஏற்கிறேன்.
அதன்பின் நாம் இருவரும் மல்யுத்தம் செய்து யார் பலசாலி என்று முடிவு செய்து கொள்ளலாம்!
முதலில் என்னோடு மோத உனக்குத் தகுதி உள்ளதா இல்லையா என்பதை இந்த வில்லில் நாண் ஏற்றுவதன் மூலம் காட்டுக!”
என்று ராமனை நோக்கி முழங்கினார் பரசுராமர்.

பரசுராமர் முகத்தில் தீப்பிழம்பு போல் பொங்கி வரும் கோபத்தைக் கவனித்த தசரதன், நெஞ்சுருகிக் கைகூப்பி,
“முனிவர் பெருமானே! ராமன் தான் எனது உயிர்! அவன் இல்லாவிடில் நாங்கள் யாருமே வாழமாட்டோம்!
அவனைப் போய்ப் போருக்கெல்லாம் அழைக்காதீர்கள்!” என்று மன்றாடினான்.

ஆனால் பரசுராமர் அதைப் பொருட்படுத்தாமல், “ராமா! இந்த வில்லில் நீ நாண் ஏற்றினாயானால்,
என்னோடு மோதும் தகுதி உனக்கு உள்ளது என்று பொருள். அதன்பின் நாம் மோதலாம்!” என்றார்.

ராமன் தனது தந்தை தசரதனை வணங்கி விட்டு, பரசுராமரைப் பார்த்து, மெல்லிய குரலில்,
“நான் வீரம், ஆற்றல் இல்லாதவன் என எண்ணி ஏதேதோ பேசி விட்டீர்கள்.
எனது தேஜஸ்ஸையும் பராக்கிரமத்தையும் இப்போது காண்பீர்கள்!” என்று சொல்லிப் பரசுராமர் கையில் இருந்து
வில்லை வாங்கிக் கொண்டான்.அனாயாசமாக அதில் நாண் ஏற்றிய ராமன், அந்த வில்லில் அம்பையும் பூட்டி,
“பரசுராமரே! இந்த ராமன் ஒரு பாணத்தைப் பூட்டிவிட்டால், அது வீணாகக் கீழே விழுந்ததில்லை.
இப்போது நீங்கள் தந்த விஷ்ணு தனுஸ்ஸில் அம்பைப் பூட்டிவிட்டேன். இதை எய்வதற்கு ஓர் இலக்கு தாருங்கள்.
நீங்கள் எனது குருவான விச்வாமித்ர முனிவருக்கு உறவினர், வேதம் கற்றவர், தவம் புரிந்து உயர்ந்த முனிவர்.
உங்கள் மீது பாணம் போட எனக்கு விருப்பமில்லை. அதனால் பாணத்துக்கு வேறோர் இலக்கு தாருங்கள்!” என்று பரசுராமரிடம் சொன்னான்.

ராமனது சாகசத்தைக் கண்ட பரசுராமர், தனது பொலிவு, வீரியம், கர்வம் அனைத்தையும் இழந்தவராய்,
“ராமா! எனது தவ வலிமையையே இலக்காகத் தருகிறேன்!
உன் பாணத்தால் என் தவ வலிமையைத் தாக்கி எடுத்துக் கொள்!” என்றார். ராமனும் அவ்வாறே செய்தான்.
அதன்பின் ராமனிடம் இருந்து விடைபெறும் முன், பரசுராமர் ராமனைப் பார்த்து,
“ராமா! உன்னிடம் தோற்றதை அவமானமாக நான் எண்ணவில்லை. நீ பரமாத்மாவாகிய திருமாலின் பூரண அவதாரம்.
நான் அந்த இறைவனுடைய ஒரு சக்தியைக் குறிப்பிட்ட காரணத்துக்காகப் பெற்று வந்த ஆவேச அவதாரமே ஆவேன்.
பூரண அவதாரமான உன் முன்னே ஆவேச அவதாரமான என்னால் நிற்க முடியாது.

இந்த வில்லின் நாணை நீ ஏற்றியதன் மூலம் நீயே பரமாத்மா, திருமால் என்பதை உணர்ந்தேன்.
உனக்கு மங்கலம் உண்டாகுக.
வலிமை மிக்க தேவர்கள் அத்தனை பேரும் மொத்தமாக இணைந்து வந்தாலும் கூட உன்னை வெல்ல முடியாது.
இதோ தேவர்கள் கூடி வந்து உனது வீரத்தை வியந்து துதிக்கிறார்கள், பார்!
உனக்கு நிகரான வரும் இல்லை, உன்னை விட மேம்பட்டவரும் இல்லை!” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார்.

இதை வர்ணிக்கும் வால்மீகியின் சுலோகங்கள்:

“அக்ஷயம் மதுஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸுரோத்தமம்”
“ஏதே ஸுரகணாஸ் ஸர்வே நிரீக்ஷந்தே ஸமாகதா:
த்வாம் அப்ரதிம கர்மாணம் அப்ரதி த்வந்த்வம் ஆஹவே”

ஆக, வலிமை மிக்கவர்கள் என்று சொல்லப்படும் தேவர்களாலும் போற்றப் படுபவனாக,
வலிமை மிக்கவர்கள் அனைவரை விடவும் உயர்ந்த வலிமை மிக்கவனாக ராமன் விளங்குவதால்,
‘சக்திமதாம் ச்ரேஷ்ட:’ என்று அழைக்கப் படுகிறான். ‘சக்திமான்’ என்றால் சக்தி மிக்கவன்.
‘சக்திமதாம்’ என்றால் சக்தி மிக்கவர்களுக்கு எல்லாம். ‘ச்ரேஷ்ட:’ என்றால் மிகப்பெரியவர், உயர்ந்தவர்.
‘சக்திமதாம் ச்ரேஷ்ட:’ என்றால் சக்திமான்களை விடவும் உயர்ந்த சக்தி மிக்கவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 403-வது திருநாமம்.
“சக்திமதாம் ச்ரேஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஸ்ரீ ராமன் சக்தி கொடுத்தருள்வான்.

—————

404. தர்மாய நமஹ:(Dharmaaya namaha)

ஒரு வார காலம் நடைபெற்ற ராம ராவணப் போரின் ஐந்தாம் நாளில்,
லட்சுமணனுக்கும் ராவணனின் மகனான இந்திரஜித்துக்கும் கடும் போர் நடந்தது.
விபீஷணன் லட்சுமணனுக்கு உறுதுணையாக இருந்து, அவ்வப்போது இந்திரஜித் செய்யும் மாயங்களைப் பற்றிய
குறிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“இரவுப் பொழுது வந்து விட்டால் இந்திரஜித் பல மாயங்கள் செய்யத் தொடங்கி விடுவான்!
இப்போது பகல் வேளை! சூரியன் இருக்கும் போதே இவனை விரைந்து அழித்து விடுங்கள்!” என்று
லட்சுமணனுக்கு விபீஷணன் ஆலோசனை சொன்னான்.

அடுத்த நொடியே லட்சுமணனின் வில்லில் இருந்து பாணங்கள் மின்னல் வேகத்தில் புறப்பட்டு வந்து
இந்திரஜித்தின் சேனை, தேர்ப்பாகன், தேர், குதிரைகள் ஆகியவற்றை அழித்தன.
தேரை இழந்த இந்திரஜித், திடீரென வானில் மறைந்தான். மறைந்திருந்தபடி லட்சுமணன் மீது கல்மழை பொழியத் தொடங்கினான்.
இந்திரஜித் எங்கே ஒளிந்திருக்கிறான் என அறிய முனைந்த லட்சுமணன்,
வானில் அனைத்துத் திசைகளையும் நோக்கி அம்புகளைத் தொடுத்தான்.
ஓங்கி உலகளந்த திரிவிக்கிரமப் பெருமாளின் திருவடிகள் எப்படி அனைத்துத் திசைகளையும் வியாபித்ததனவோ,
அது போல் லக்ஷ்மணனின் பாணங்கள் அனைத்துத் திசைகளையும் வியாபித்தன.

வானில் ஒளிந்து கொண்டிருந்த இந்திரஜித்தை அந்த பாணங்கள் தாக்கியதால், அவனது உடலிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து வந்தது.
இருண்ட மேகத்துக்கு நடுவே செவ்வானம் தெரிவது போல், லட்சுமணன் வானில் வீசிய பாணங்களுக்கு மத்தியிலே
இந்திரஜித்தின் சிவந்த ரத்தம் சிந்துவதைக் கண்டான் லட்சுமணன்.

இதைக் கம்பர்,
“மறைந்தன திசைகள் எங்கும் மாறுபோய் மலையும் ஆற்றல்
குறைந்தனன் இருண்ட மேகக் குழாத்திடைக் குருதி கொள் மூ
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான் காணா இனையதோர் நினைவதானான்”என்று பாடுகிறார்.

சிவந்த ரத்தம் வானில் இருந்து சிந்துவதைக் கொண்டு இந்திரஜித் ஒளிந்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டான் லட்சுமணன்.
இந்திரஜித்தின் வில்லை முறிக்க நினைத்தான் லட்சுமணன்.
ஆனால் விபீஷணனோ, “இவன் சிவபெருமான் தந்த வில்லை ஏந்தி இருக்கிறான். அதை உடைப்பது கடினம்!”
என்று லட்சுமணனிடம் சொன்னான்.
அதைக் கேட்ட லட்சுமணன், வில்லைப் பிடித்திருந்த இந்திரஜித்தின் கையையே தனது பாணத்தால் அறுத்தெறிந்தான்.

கையிழந்த பின்னும் இந்திரஜித், “உன்னை அழிக்காமல் நான் மடியமாட்டேன்!” என்று லட்சுமணனை நோக்கிச் சபதம் செய்து,
காற்று, இடி, மின்னல் போல வடிவங்கள் கொண்டு மாயப் போர் புரிந்தான்.
அப்போது லட்சுமணன் தனது வில்லில் பாணத்தைப் பூட்டி, ஐந்த்ராஸ்திரத்துக்குரிய மந்திரத்தை ஜபித்து,

“தர்மாத்மா ஸத்யஸந்தச்ச ராமோ தாசரதிர் யதி
பௌருஷே சாப்ரதி த்வந்த்வ: சரைனம் ஜஹி ராவணிம்”
என்று சொல்லி அதை இந்திரஜித் மேல் ஏவினான்.

இதன் பொருள் – “தசரதனின் மகனான ஸ்ரீ ராமன், தருமமே வடிவெடுத்தவராகவும், வாய்மையைக் கடைபிடிப்பவராகவும்,
வீரத்தில் ஒப்பற்றவராகவும் இருப்பது உண்மையானால், ஏ பாணமே! நீ இந்திரஜித்தை அழித்துவிடு!

”ராமன் தர்மாத்மா என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா லட்சுமணன் சொன்னபடியே அந்த பாணம் இந்திரஜித்தின் தலையை
அறுத்துக் கீழே தள்ளிவிட்டது. இங்கே ராமனை தர்மாத்மா என்று இரண்டு காரணங்களால் குறிப்பிட்டிருக்கிறான் லட்சுமணன். ஒன்று,
தர்மாத்மா என்றால் அறநெறியே வடிவெடுத் தவர் என்று பொருள்.
மற்றொரு பொருள் என்னவென்றால், வடமொழி இலக்கணப்படி ‘தாரணாத் தர்ம:’ என்று சொல்வார்கள்.
எல்லாவற்றையும் எது தாங்கி நிற்கிறதோ அதற்குத் தருமம் என்று பெயர்.
(தர்மோ ரக்ஷதி ரக்ஷித: – அறத்தைத் தாங்குவோரை அறம் தாங்கும் என்ற ரீதியில் தான் அறநெறியும் தர்மம் என்றழைக்கப்படுகிறது.)
செல்வச் செழிப்பு முதல் முக்தி வரை அனைத்து நன்மைகளையும் தந்து அனைவரையும் தாங்கி நிற்பவன் ஸ்ரீ ராமன்.
அந்தக் காரணத்தாலும் அவனை தர்மாத்மா என்று இங்கே லட்சுமணன் சொல்லி இருக்கிறான்.

அனைத்து உயிர்களுக்கும் செல்வச் செழிப்பு, முக்தி உள்ளிட்ட அனைத்து வித நன்மைகளையும் அருளி,
அனைவரையும் தாங்கி நிற்பதால், (‘தாரணாத் தர்ம:’ – தாங்கி நிற்பவர்க்கு தர்மம் என்று பெயர்)
ராமன் ‘தர்ம:’ என்று அழைக்கப் படுகிறார். ‘தர்ம:’ என்றால் (இவ்விடத்தில்) தாங்கி நிற்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 404-வது திருநாமம்.
(ராமன் அறநெறிகளைக் கடைப்பிடித்ததால், தர்ம: என்று அழைக்கப்படுவதாக இங்கே பொருள் உரைக்கலாமே என ஐயம் எழலாம்.
ஆனால் ராமன் அறநெறி வழுவாது இருக்கும் பண்பு அடுத்த திருநாமத்தில் சொல்லப் படுகிறது.)
‘‘தர்மாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ஸ்ரீ ராமன் என்றென்றும் தாங்கி நிற்பான்.

————–

405. தர்மவித்-உத்தமாய நமஹ: (Dharmavidh-uthamaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)
இலங்கை அசோக வனத்தில் சீதா தேவியைத் தரிசித்த அனுமன், தன்னை ராமதூதன் என்று
அடையாளப் படுத்திக்கொள்ளும் பொருட்டு, முதலில் ராமனின் வரலாற்றைப் பாடினார்.
அதைத் தொடர்ந்து, ராமனுடைய அங்க அடையாளங்களைச் சொன்னார்.
பின், சீதைக்கும் ராமனுக்கும் மட்டுமே தெரிந்த சில ஏகாந்தமான குறிப்புகளைத் தெரிவித்தார்.

அதன்பின் ராமபிரானுக்கே விசேஷமாக இருக்கும் பெருமைகளைப் பட்டியலிட்டார்.
ராமன், மொத்த உலகங்களையும் காப்பவர். தன்னைச் சார்ந்தவர்களையும் நன்கு காப்பவர்.
தமது கடமையையும், அறத்தையும் என்றும் விடாமல் காப்பவர். தீயவர்களான எதிரிகளை அழிப்பவர்.
உலகிலுள்ள எல்லா மனிதர்களும் நியாயத்துக்கும் தருமத்துக்கும் கட்டுப்பட்டு நடக்கும்படி செய்பவர் ஸ்ரீராமன்.
அவர் ஒளிமிக்கவர், அனைவராலும் பூஜிக்கத் தக்கவர். மனதையும் புலன்களையும் நன்றாக அடக்கி வைப்பதில் உறுதி மிக்கவர்.
நல்லோர்களுக்கு உதவியாளர். எல்லாவிதச் செயல்களையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் மிக்கவர். ராஜநீதியில் வல்லவர்,
வேதம் வல்லார்களைப் போற்றித் துதிப்பவர். சாஸ்திரங்கள் கூறும் கருத்துகளைக் கசடறக் கற்றுத் தேர்ந்தவர்.
அடக்கம் மிக்கவர். அதே நேரம், மக்களுக்கு ஆபத்து வரும்போது போர் புரிந்து எதிரிகளை வீழ்த்தும் வீரமும் ஆற்றலும் கொண்டவர்.

“யஜுர்வேத வினீதச்ச வேதவித்பிஸ் ஸுபூஜித:
தனுர்வேதே ச வேதேஷு வேதாங்கேஷு ச நிஷ்டித:”

அனைத்து வேதங்களிலும், வேத அங்கங்களிலும், வில் வித்யையிலும் வல்லவராக இருக்கும் ஸ்ரீராமனை வேதங்களைக் கற்றுணர்ந்த
எல்லாப் பெரியோர்களும், தருமம் அறிந்த நல்லோர்களும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.
இப்படிப்பட்ட பல அடையாளங்களை உரைத்த பின், ராமனின் முத்திரை மோதிரத்தை முக்கிய அடையாளமாக
அனுமன் சீதையிடம் காட்டித் தான் ராமதூதன் என்பதை நிரூபித்தார்.
இங்கே, அனுமன் ராமனுக்குரிய பெருமைகளைச் சொல்லும் போது, அதன் முக்கியப் பகுதியாக ‘
வேதம் அறிந்தோர்களும், தருமம் அறிந்தோர்களும் ராமனைப் பூஜிப்பதாகக்’ குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறே வால்மீகி ராமாயணத்தின் தொடக்கத்திலும், நாரதர்ராமனின் குணங்களை வால்மீகிக்கு எடுத்துரைக்கும்போது,

“ஸர்வதாபிகதஸ் ஸத்பிஸ் ஸமுத்ர இவ ஸிந்துபி:” என்கிறார்.
நதிகள் எல்லாம் எப்படிக் கடலை நோக்கிப் போகின்றனவோ, அதுபோல், சான்றோர்கள் அனைவரும் தருமத்தின்
நுட்பங்களைக் கேட்டு அறிவதற்காக ராமனை நாடி வருவார்கள் என்பது இதன் பொருளாகும்.
கிஷ்கிந்தா காண்டத்திலும் ராமபாணத்தால் தாக்கப்பட்டுக் குத்துயிரும் கொலை
யுயிருமாக விழுந்து கிடந்த வாலியைக் காண வந்த வாலியின் மனைவி தாரை, ராமனைத் தரிசித்தவாறே,
மனத்தூய்மை பெற்று ராமனைத் துதித்தாள்:

“த்வம் அப்ரமேயச்ச துராஸதச்ச
ஜிதேந்த்ரியச்ச உத்தம தார்மிகச்ச
அக்ஷய்ய கீர்த்திச்ச விசக்ஷணச்ச
க்ஷிதிக்ஷமாவான் க்ஷதஜோபமாக்ஷ”

இதிலும் ‘உத்த தார்மிக:’ என்று ராமனைக் குறிப்பிடுகிறாள் தாரை. உத்தம தார்மிக: என்றால்
தர்மம் அறிந்தவர்களுள் உயர்ந்தவர் என்று பொருள். “ஒருபுறம் சரணடைந்த சுக்ரீவனுக்கும் நன்மை செய்தீர்கள்.
மறுபுறம் என் கணவர் வாலியின் மீது பாணம் எய்தி, அதனால் அவரது பாபங்களைப் போக்கி அவருக்கும் நற்கதி தந்து விட்டீர்கள்.
இப்படி தருமப்படி அவரவருக்குச் சேர வேண்டியதைச் சரியாகத் தந்த உத்தம தார்மிகர் நீங்கள்!” என்று ராமனிடம் சொல்கிறாள் தாரை.

இப்படி அறநெறிகளை நன்றாக அறிந்து பின்பற்றிய ராமன், அறத்தின் வழி வாழ நினைப்போர்க்கு முன்மாதிரியாகவும்,
அறத்தை அறிந்த சான்றோர்களால் போற்றப்படுபவனாகவும் விளங்குவதால், ராமன் ‘தர்மவித் உத்தம:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘தர்மவித்’ என்றால் தர்மம் அறிந்தவர் என்று பொருள்.
‘உத்தம:’ என்றால் (இவ்விடத்தில்) தலைவர். (தர்மவித்+உத்தம:)
‘தர்மவிதுத்தம:’ என்றால் தர்மம் அறிந்தவர்களுக்கு எல்லாம் தலைவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 405-வது திருநாமம்.
“தர்மவிதுத்தமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் என்றும்
அறவழியில் நிலைத்திருக்கும்படி ராமன் அருள்புரிவான்.

—————

406. வைகுண்டாய நமஹ:(Vaikuntaaya namaha)

ராமன் வனவாசத்துக்காக அயோத்தியை விட்டுப் புறப்பட்ட போது, அயோத்தியில் உள்ள மக்கள் எல்லோரும்
எல்லையில்லாத் துயரத்தில் மூழ்கினார்கள். சீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமன் அயோத்தியை விட்டு நீங்கும்
அக்காட்சியைக் காணும் போது, உயிரை இழந்த உடல்போல் மொத்த அயோத்தி நகரும் வாடிக் கிடந்தது என்கிறார் கம்பர்.
“ஓவில் நல்லுயிர் உயிர்ப்பினோடு உடல்பதைத்து உலைய மேவு தொல்லழகு
எழில்கெட விம்மல் நோய் விம்ம தாவில் ஐம்பொறி மறுகுறத் தயரதன் என்ன
ஆவி நீக்கின்றது ஒத்தது அவ்வயோத்தி மாநகரம்”
கன்றை விட்டுப் பிரிந்த தாய்ப்பசு கதறி அழுவது போல் அயோத்தியில் உள்ள பெண்களெல்லாம் கதறி அழுதார்கள்.

வேதியர்கள் அக்னிஹோத்ரம் போன்ற வைதிகச் சடங்குகளைச் செய்யவில்லை.
எந்த வீட்டிலும் உணவு சமைக்கப் படவில்லை. சூரியன் கூட ராமன் வனம் செல்வதைக் காண மனமில்லாமல் மறைந்து விட்டான்.
மாலைப்பொழுது வந்ததை வால்மீகியும் கம்பரும் தற்குறிப்பேற்ற அணியால் இப்படித் தெரிவித்துள்ளார்கள்.
மனிதர்கள் மட்டுமின்றி, அயோத்தியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே ராமனைப் பிரிந்து வாடியதாக
வால்மீகி பகவான் தெரிவிக்கிறார்.

“வ்யஸ்ருஜன் கபலான் நாகா காவோ வத்ஸான் ந பாயயன்
புத்ரம் ப்ரதமஜம் லப்த்வா ஜனனீ நாப்யனந்தத”

பாம்புகள், தாங்கள் உண்ட உணவை வெளியே கக்கி விட்டன. பசுக்கள் கூடத் தங்கள் கன்றுகளுக்குப் பாலூட்டவில்லை.
முதல் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் கூட அக்குழந்தையைப் பார்த்து மகிழவில்லை.
மேலும், “கோசல தேசம் கைகேயியுடையதாக ஆகி விட்டதால், இனி இதில் வாழ வேண்டாம்!
ஒன்று காட்டில் ராமன் இருக்கும் இடத்தைச் சேர்ந்து அவனது திருவடிவாரத்தில் வாழ்வோம்!
இல்லாவிட்டால் விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வோம்!” என்று மக்கள் பேசிக் கொண்டதாக வால்மீகி கூறுகிறார்.

“தே விஷம் பிபதாலோட்ய க்ஷீணபுண்யாஸ் ஸுதுர்கதா:
ராகவம் வா அனுகச்சத்வம் அச்ருதிம் வாபி கச்சத”

இப்படி மக்கள் கதறி அழுது கொண்டிருக்க அயோத்தி மாநகரம் நீரில்லாத கடல்போல் ஆனது.
ஆடல், பாடல், வாத்தியம், திருவிழா ஏதுமில்லாமல் வெறிச்சோடிப் போனது.
இச்சம்பவங்களில் இருந்து அயோத்தி மக்கள் ராமபிரான் மேல் எவ்வளவு அன்பும் பக்தியும் கொண்டிருந்தார்கள்
என்பதை நம்மால் அறிய முடிகிறதல்லவா?
இத்தகைய அடியார்கள் தன்னை விட்டுப் பிரிந்து தவிப்பதைப் பார்த்து ராமனும் பொறுத்திருக்க மாட்டான்.

தேவகாரியமான ராவண வதத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால்,
ராமன் வனவாசம் மேற்கொண்டாக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதேநேரம், நாட்டில் தன்னைப் பிரிந்து வாடும் பக்தர்களைத் தேற்ற வேண்டும் என்றும் கருதிய ராமன்,
தனது பிரதிநிதியாகத் தன் பாதுகையைப் பரதனிடம் தந்து அனுப்பி வைத்தான்.
அந்தப் பாதுகா தேவி பட்டாபிஷேகம் செய்து அயோத்தியை ஆள்கையில்,
ராம ராஜ்ஜியத்தில் இருப்பது போன்ற உணர்வு அயோத்தி மக்களுக்கு ஏற்பட்டது.

பாதுகையைத் தந்ததோடு அயோத்தி மக்களை ராமன் அப்படியே கைவிடவும் இல்லை.
தேவ காரியமான ராவண வதம் ஆனபின், மக்கள் விரும்பிய படியே அயோத்திக்குத் திரும்பி வந்த ராமன்
சீதையோடு சேர்ந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டு சிம்மாசனத்திலே வீற்றிருந்து
அவர்கள் விரும்பிய ராமராஜ்ஜியத்தை அருளினான்.

‘குடி’ என்றால் தடை என்று பொருள், இங்கே இறைவனை அடைவதற்குத் தடையாக இருப்பவற்றை ‘குடி’ என்ற சொல் குறிக்கிறது.
அடியார்கள் தன்னை அடைய விடாமல் தடுக்கும் தடைகளாகிய ‘குடி’களைத் தனது பாதுகை மூலமாகவும்,
ஸ்ரீசீதா ராம பட்டாபிஷேகம் மூலமாகவும் தகர்க்கும் ராமன்,
தன் அடியார்களை ‘விகுண்ட:’ – ‘குடி’ (தடை) இல்லாதவராக – ஆக்கி விடுகிறான்.
இறையநுபவத்தில் தடையில்லாத அந்த விகுண்டர்களின் தலைவனான ராமன் ‘வைகுண்ட:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘வைகுண்ட:’ என்றால் தன் அடியார்கள் தன்னை அடையவிடாது தடுக்கும் தடைகளைத் தகர்ப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 406- வது திருநாமம்.
“வைகுண்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஏற்படும் தடைகளை ஸ்ரீராமன் தகர்த்தெறிவான்.

————–

407. புருஷாய நமஹ: (Paravhaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை – இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)
ராஜா, ராமனாக அயோத்தியை ராமன் ஆண்டு வந்த காலம். ஒருமுறை ராமனைச் சந்தித்த தேவர்கள்,
“அகத்திய முனிவரின் தபோவனத்தைத் தரிசிப்பதற்காக நாங்கள் எல்லோரும் செல்கின்றோம்.
பன்னிரண்டு வருட காலம் தண்ணீருக்குள்ளே தவம் செய்து வந்த அகத்திய முனிவர், தனது தவத்தை நிறைவு செய்து விட்டார்.
அவரைத் தரிசிக்க நீங்களும் வாருங்கள்!” என்று அழைத்தார்கள்.

அதை ஏற்ற ராமன், புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டு அகத்தியரின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றான்.
தேவர்கள் பலவித விமானங்களில் ராமனைப் பின் தொடர்ந்து அகத்தியரின் ஆசிரமம் நோக்கிச் சென்றார்கள்.
ராமனையும் தேவர்களையும் அகத்திய முனிவர் வரவேற்றார். அவர்களுக்குச் செய்ய வேண்டிய உபசாரங்களை எல்லாம் செய்தார்.
அகத்தியரை வணங்கி விட்டு தேவர்கள் எல்லோரும் தங்கள் தேவலோகத்துக்குத் திரும்பி விட்டார்கள்.
அதன்பின் ராமன், தனியாக அகத்தியரை அடிபணிந்தார்.

அகத்தியர் ராமனைப் பார்த்து, “புருஷோத்தமா! நீ இங்கே எழுந்தருளியது அடியேனுக்கு மிகப்பெரும் பாக்கியம் என்று கருதுகிறேன்.
எண்ணிலடங்காத மங்கல குணங்கள் நிறைந்த உன்னை எப்போதும் என் உள்ளத்தில் வைத்து ஆராதித்து வருகிறேன்.
தேவர்கள் சென்று விட்டார்கள், ராமா! நீ இப்போது செல்ல வேண்டாம்!
இன்று இரவு என்னுடன் இங்கே தங்கி விட்டு நாளை போகலாம்!” என்றார்.
மேலும், விஸ்வகர்மா தயாரித்த மிக உயர்ந்த ஓர் ஆபரணத்தை ராமனுக்குப் பரிசாக வழங்கினார் அகத்தியர்.
அதன்பின் அகத்தியருடன் ராமனும், மாலை செய்ய வேண்டிய சந்தியாவந்தனத்தைச் செய்தான்.
பல விதக் காய், கிழங்குகள், கீரை வகைகள் நிறைந்த விருந்தை ராமனுக்கு அளித்தார் அகத்தியர்.
அதைத் தேவாமிருதமாகக் கருதி அமுது செய்த ராமன், அன்றிரவு அகத்தியரின் ஆசிரமத்திலேயே பள்ளி கொண்டார்.

காலை எழுந்து நீராடி, சந்தியாவந்தனம் உள்ளிட்ட கடமைகளை நிறைவு செய்த ராமன், அகத்தியரிடம் இருந்து
விடைபெற்றுக் கொண்டு புறப்பட எண்ணினான். அகத்தியரை அடிபணிந்து, “உங்களது தரிசனத்தால் அடியேன் தன்யன் ஆனேன்!
மீண்டும் உங்களைத் தரிசிக்க விழைகிறேன்! இப்போது அடியேன் எனது நகரத்துக்குப் போக அனுமதி
அளித்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.
இதைக் கேட்ட அகத்தியர்,“அத்யத்புதம் இதம் வாக்யம் தவ ராம சுபாக்ஷரம்பாவனஸ் ஸர்வபூதானாம் த்வம் ஏவ ரகுநந்தன”
(வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 82-9)“ராமா! என்ன விசித்திரமான வார்த்தையைப் பேசுகிறாய்?
அடியேனைத் தரிசிப்பது உனக்கு பாக்கியமா? நீ சாட்சாத் திருமால் என்பதை அடியேன் அறிவேன்.
உனது எளிமையால் உன்னைத் தாழ விட்டுக் கொண்டுஎங்களுடன் நீ கலந்து பழகுகிறாய்.
உண்மையில், அனைத்து உயிர்களுக்கும் தூய்மை அளிப்பவன் நீயே!”

“ஈத்ருசஸ்த்வம் ரகுச்ரேஷ்ட பாவனம் ஸர்வ தேஹினாம்
புவி த்வாம் கதயந்தோபி ஸித்திம் ஏஷ்யந்தி ராகவ”
(வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 82-12)

“நீ அனைவரையும் தூய்மையாக்குபவனாக இருப்பதால் தான், உனது கதையை ஒருமுறை கேட்பவர் கூட
அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபட்டு, தூயவராகி முக்தி அடைந்து விடுகிறார்.
நீ அடியேனின் குடிலுக்கு வந்தது அடியேனின் பாக்கியம். மீண்டும் மீண்டும் வருகை தந்து அடியேனைத் தூய்மை
ஆக்கி அருள்புரிய வேண்டும்!” என்று ராமனிடம் பிரார்த்தித்து அவனுக்கு விடைகொடுத்தார்.
அகத்தியர் கூறிய படி, தூய்மையானவனாகவும், தன்னைச் சார்ந்தோரைத் தூய்மை ஆக்குபவனாகவும்
ஸ்ரீராமன் திகழ்வதால், ஸ்ரீராமன் ‘புருஷ:’ என்றழைக்கப்படுகிறான்.

‘புருஷ:’ என்பதற்கு (இவ்விடத்தில்) பாபங்களால் தீண்டப்படாது, தூய்மையாக இருந்து
பிறரையும் தூய்மை ஆக்குபவர் என்று பராசர பட்டர் பொருள் உரைத்துள்ளார் –
‘ஸ யத் பூர்வோஸ்மாத் ஸர்வஸ்மாத் பாப்மன: ஓஷ: தஸ்மாத் புருஷ:’
‘புருஷ:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 407-வது திருநாமம்.“புருஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும்
அன்பர்களின் பாபங்களைப் போக்கி அவர்கள் என்றும் தூய்மையாக இருக்கும்படி ராமன் அருள்புரிவான்.

—————

408. ப்ராணாய நமஹ:(Praanaaya namaha)
தசரதனுடைய அரண்மனைக்கு வந்த விஷ்வாமித்ர முனிவர், “மன்னா! நான் சித்தாசிரமத்தில் ஒரு வேள்வி செய்யப் போகிறேன்.
அதற்கு மாரீசன், சுபாகு என்னும் இரண்டு அரக்கர்களால் இடையூறு ஏற்பட உள்ளது.
எனவே, அவர்களைத் தடுத்து என் வேள்வியைக் காக்கும் பொருட்டு உன் மகன் ராமனை
என்னோடு அனுப்பி வைப்பாயாக!” என்று தசரதனைப் பார்த்துச் சொன்னார்.

அதைக் கேட்டவாறே நடுங்கிப் போன தசரதச் சக்கரவர்த்தி, “முனிவரே! தங்களுக்கு எல்லாப் பணிவிடைகளும்
செய்யக் காத்திருக்கும் தொண்டன் அடியேன். உங்கள் வேள்வியைப் பாதுகாக்க என் மொத்த சேனையோடு நானே வருகிறேன்.
ஆனால், என் ராமனைக் கேட்காதீர்கள்! அவன் பதினாறு வயது கூட நிரம்பாத சிறு குழந்தை!
அவனுக்கு அரக்கர்களுடன் போரிடத் தெரியாது!” என்று கெஞ்சினான்.
மேலும், “ராமன் தான் எனது உயிர். என் உயிரையே கேட்டாலும் தந்து விடுகிறேன்.
ஆனால், ராமனை மட்டும் என்னால் கொடுக்க முடியாது!” என்று கதறி மூர்ச்சையானான்.

தசரதன் தெளிந்து எழுந்தவாறே விஷ்வாமித்ரர், “மன்னா! ராமனின் பெருமையை நீ அறிய மாட்டாய்! நான் தான் அறிவேன்!
ராமன் மஹாத்மா, மாறாத பராக்கிரமம் கொண்டவன். தசரதா! உன் குருவான வசிஷ்டரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார்!
நான் சொன்னது சரி என்று அவரும் ஏற்பார்!” என்று கூறினார்.
வசிஷ்டரும் தசரதனிடம், “உன் மகனின் நன்மைக்காகத் தான் அவர் அழைக்கிறார்.

நீ நிச்சயமாக ராமனை, அவரோடு அனுப்பி வைக்கலாம். ராமனுக்கு அவரால் பல நன்மைகள் நடக்கப் போகின்றன!” என்றார்.
குருவின் வாக்கை மீறலாகாது என்பதால், தசரதன் ராமனை விஷ்வாமித்ரரோடு அனுப்பச் சம்மதித்தான்.
லக்ஷ்மணன் ராமனை விட்டுப் பிரியாதவன் என்பதால், அவனும் ராமனைப் பின்தொடர்ந்து சென்றான்.
இப்படி விஷ்வாமித்ரரோடும், லக்ஷ்மணனோடும் தன்னை விட்டு ராமன் பிரிந்து செல்லும் காட்சியைக் கண்ட தசரதன்,
தன் உயிர் தன் உடலை விட்டுப் பிரிந்து செல்வதைத் தானே தன் கண்ணால் பார்ப்பது போல் உணர்ந்தானாம்.

இதைக் கம்பர்,
“அன்ன தம்பியும் தானும் ஐயனாம்
மன்னன் இன்னுயிர் வழிக்கொண்டால் என
சொன்ன மாதவன் தொடர்ந்து சாயைபோல்
பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான்”
என்று பாடுகிறார்.

காவியக் கவிஞர் திரு.வாலி அவர்கள், சமீபத்தில் ஒரு பேட்டியில், கம்பரின் இப்பாடலைத் தழுவியே,
“தன் உயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை – நான் என் உயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்”
என்ற பாடலைத் தான் இயற்றியதாகக் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது.

அவ்வாறே ராமன் சீதையோடும், லக்ஷ்மணனோடும் வனவாசம் புறப்பட்டுச் செல்லும் வேளையிலும்,
அக்காட்சியைக் கண்ட தசரதன்,
“ராமம் மே அநுகதா த்ருஷ்டிர் அத்யாபி ந நிவர்ததே
ந த்வா பச்யாமி கௌஸல்யே ஸாது மா பாணினா ஸ்ப்ருச”

“கௌசல்யா! என் கண் ராமனைப் பின் தொடர்ந்து சென்று விட்டது! என் உயிரும், அவனைப் பின்
தொடர்ந்து செல்வதாகவே உணர்கிறேன். ராமன், பின் சென்ற என் கண்ணும், உயிரும் என்னிடம் திரும்ப வரவில்லை!” என்று
புலம்புவதாக வால்மீகி, அயோத்தியா காண்டத்தில் வர்ணித்துள்ளார்.
இவ்வாறு தசரதன் போல் தன்னிடம் அன்பு பூண்டவர்கள் எல்லோர்க்கும் ராமன் தானே உயிர்மூச்சாக இருப்பதால்,
ஸ்ரீராமன் ‘ப்ராண:’ என்று அழைக்கப்படுகிறான். ‘ப்ராண:’ என்றால் உயிர்மூச்சாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 408-வது திருநாமம். “ப்ராணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு
ராமனே உயிர்மூச்சாக இருந்து அவர்களைக் காத்தருள்வான்.

—————-

409. ப்ராணதாய நமஹ:(Praanadhaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை – இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)
வடமொழியில், வால்மீகி பகவான் இயற்றிய 24,000 சுலோகங்கள் கொண்ட மத் ராமாயணத்தின் அடிப்படையில்,
தமிழில் 10,000 பாடல்கள் கொண்ட ராமாவதாரம் என்னும் நூலைக் கம்பர் இயற்றினார்.
நாம் இன்று கம்ப ராமாயணம் என்று குறிப்பிட்டாலும், நூலாசிரியரான கம்பர், ராமாவதாரம் என்று இந்நூலுக்குப் பெயர் சூட்டியிருந்தார்.
கம்பர் தாம் இயற்றிய ராமாயணத்தை ராமனால் பூஜிக்கப்பட்ட, ஸ்ரீரங்கநாதன் எழுந்தருளியிருக்கும் திருவரங்கத்தில்
அரங்கேற்றம் செய்ய விரும்பினார். அதனால், திருவரங்கத்தில் உள்ள குருமார்களை அண்டினார்.
அந்த குருமார்கள், “கவியே! தமிழகத்தில் இப்போது ரங்கம், சிதம்பரம் என இரண்டு பெரும் தலங்கள் உள்ளன.
சைவத்துக்குச் சிதம்பரம், வைணவத்துக்கு ஸ்ரீரங்கம். முதலில், சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் தீட்சிதர்களைச் சந்தித்து
அவர்களுக்கு நீங்கள் எழுதிய காவியத்தை வாசித்துக் காட்டி, அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்று வந்தால்,
மேற்கொண்டு ரங்கத்தில் இக்காவியத்தை அரங்கேற்றம் செய்ய ஆவன செய்வோம்!” என்றார்கள்.

அதனால், தனது காவிய ஓலைச்சுவடிகளை எடுத்துக் கொண்டு சிதம்பரத்துக்குச் சென்றார் கம்பர்.
அங்கே ஆறு மாதங்கள் தங்கிப் பல முயற்சிகள் எடுத்த போதும், கம்பரால் அங்குள்ள மூவாயிரம் தீட்சிதர்களைச் சந்தித்துத்
தனது காவியத்தை வாசித்துக் காட்டி அங்கீகாரம் பெற முடியவில்லை. மிகவும் மனம் வெறுத்துப் போன கம்பர்,
ஒருநாள் மாலை தில்லை கோவிந்த ராஜப் பெருமாளைத் தரிசித்து, “கோவிந்தராஜா! இதே தில்லை நகர்த் திருச்சித்திரகூடத்தைப்
பாடும் போது தான் ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகரப் பெருமாள், பத்தே பாடல்களில் உன் ராமாவதார வரலாற்றை அமுதத் தமிழில் வடித்தார்.
அதைத் தழுவியே பத்தாயிரம் பாடல்களாக உன் வரலாற்றைத் தமிழில் பாடியுள்ளேன். இது அரங்கேற வேண்டும் என்று நினைத்தால்,
நாளைக்குள் ஆவன செய்வாயாக! இல்லாவிடில் இந்த ஓலைச் சுவடிகளைத் தீயில் போட்டு நானும் தீக்குளிப்பேன்!” என்றார் கம்பர்.

மறுநாள் விடியற்காலை கம்பர் கனவில், சுடுகாட்டில் பிணம் எரியும் காட்சி தெரிந்தது.
இறைவன் நம்மை அங்கீகரிக்கவில்லை போலும் என்று கருதிய கம்பர், தன் நூலை எரித்து விட்டுத் தானும்
தீக்குளிக்கச் சுடுகாட்டை நோக்கி ஓடினார். அங்கே பார்த்தால் ஆச்சரியம்! மூவாயிரம் தீட்சிதர்களும் சுடுகாட்டில் கூடி இருக்கிறார்கள்!
அவர்களுள் ஒருவரின் ஐந்து வயது சிறுவன் பாம்பு தீண்டி இறந்து விட்டதால், துக்கம் தாளாமல் பிரிந்திருந்த அத்தனை பேரும்
ஒரே இடத்தில் சுடுகாட்டில் கூடிவிட்டார்கள். இதுவே சந்தர்ப்பம் என்று கருதிய கம்பர்,
ஸ்ரீராமாயணத்தை வாசித்துக் காட்ட அனுமதி கோரினார். துக்கத்தில் இருந்த அவர்கள், கோபம் கொண்டு, “
என்ன பெரிய ராமாயணம் எழுதியுள்ளாய்? இதைப் பாடினால் இறந்த குழந்தை எழுந்தா வரப்போகிறது?” என்று கேட்டார்கள்.
கவிஞனுக்கே உரிய கருவத்தோடு கம்பர், “நிச்சயம் எழும்!” என்றார். பாடுங்கள் என்றார்கள் தீட்சிதர்கள்.

கம்பர் பாடத் தொடங்கினார். பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம்
நிறை வடைந்து யுத்த காண்டம் வந்தது. இந்திரஜித்தின் நாகபாசத்தால் கட்டப்பட்டு கம்ப ராமாயணத்தின் படி
லக்ஷ்மணனும் மொத்த வானர சேனையும் விழுந்து கிடக்கிறார்கள்.
அப்போது, வானிலே பொன் மலை இறக்கை கட்டி வருவது போல் கருடன் தோன்றினார்.

கருடனின் திருமேனி ஒளிபட்டவாறே, நாக பாசங்கள் அனைத்தும் நீங்கி, விழுந்தவர்கள் அத்தனை பேரும் எழுந்தார்கள்.
இதை வர்ணிக்கும் விதமாக,
“வாசம் கலந்த மறைநாள நூலின் வகை என்பது என்னை மழையென்று
ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல் சரராமன் வெண்ணை அணுகும்
தேசம் கலந்த மறைவாணர் செஞ்சொல் அறிவாளர் என்று இம்முதலோர்
பாசம் கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம் என்று பாடினார் கம்பர்.
சடையப்ப வள்ளல் வீட்டு வாசலில் வந்து நிற்போரின் பசி பறந்தோடுவது போல், கருடனின் ஒளிபட்டு
நாகபாசம் பறந்தோடியது என்று உவமை கூறுகிறார்.

இப்பாடலைப் பாடியவாறே, அந்தச் சிறுவனைப் பிடித்திருந்த நாகபாசம் விலகியது, அவன் மீண்டெழுந்தான்.
ஸ்ரீ ராமாயணத்தின் பெருமையை உணர்ந்து தீட்சிதர்களும் அங்கீகரித்தார்கள். பின் திருவரங்கத்தில் வாழ்ந்த குருமார்களின்
அங்கீகாரமும் பெற்றுக் கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்ததாக வரலாறு.
பாம்பு தீண்டி இறந்த அச்சிறுவனுக்கு உயிர்தந்தது போலவே, இறந்தவருக்கும் உயிரளிக்கும் தெய்வமாக
ஸ்ரீராமன் திகழ்வதால், ‘ப்ராணத:’ என்று ஸ்ரீ ராமன் அழைக்கப்படுகிறான்.
‘ப்ராணத:’ என்றால் உயிர் தந்து காப்பவர் என்று பொருள். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 409-வது திருநாமம்.
“ப்ராணதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை உயிர்காக்கும் தெய்வமான
ஸ்ரீ ராமன் எல்லா ஆபத்துகளில் இருந்தும் காத்தருள்வான்.

——-

410. ப்ரணமாய நமஹ: (Pranamaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை – இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ராமனின் சரித்திரம்)

ராமனைக் காட்டுக்குப் போகாதே என்று சொல்லிப் பலவாறு தடுத்துப் பார்த்தாள் கௌசல்யா தேவி.
ஆனால், தந்தையின் வாக்கை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதிலே ராமன் உறுதியாக இருப்பதை
நன்கு உணர்ந்து கொண்ட அவள், ராமபிரானுக்கு மங்கலம் பாடி வழியனுப்பி வைக்கிறாள்.
அதை வால்மீகி பகவான் மத் ராமாயணத்தின் அயோத்தியா காண்டம் 25ம் சர்கத்தில் வர்ணித்துள்ளார்.

ராமா! எந்த தர்மத்தை நீ இத்தனை நாட்களாகக் காத்து வருகிறாயோ,அந்த தர்மம் துணைநின்று உன்னைக் காக்கட்டும்.
வேள்விச் சாலைகளில் நீ எந்தெந்த முனிவர்களை எல்லாம் வணங்கி இருக்கிறாயோ, அந்த முனிவர்கள் காட்டில் உனக்குத் துணை நிற்கட்டும்.
விச்வாமித்ரர் அருளிய தெய்வீகமான படைக்கலங்கள் உனக்குத் துணையாக இருக்கட்டும்.
பெற்றோர் மனம் கோணாத படி நீ செய்த பணிவிடைகள் உன்னைக் காக்கட்டும்.நீ காத்து வரும் சத்தியம் உன்னைக் காக்கட்டும்.

அரக்கர்கள், பிசாசுகள், குரங்குகள், கொசுக்கள், காட்டு ஈக்கள், மலைப் பாம்புகள், புழுக்கள், யானைகள், சிங்கங்கள்,
புலிகள், காட்டு எருமைகள், பேய் பிசாசுகள் உனக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்கட்டும்.
மங்கலம் பகவான் விஷ்ணுர் மங்கலம் மதுஸூதன, மங்கலம் புண்டரீகாக்ஷோ மங்கலம் கருடத்வஜ:- திருமால் உனக்கு அனைத்து
வித மங்கலங்களையும் தந்து காத்தருளட்டும்.
இவ்வாறு ராமனுக்கு ஆசீர்வாதம் செய்து, விசல்யகரணி என்ற மூலிகையை ராமன் கையில் ரட்சையாகக் கட்டி வழியனுப்பினாள் கௌசல்யா தேவி.

மேலே சீதையிடம் செய்தி சொல்லி விட்டுக் காட்டுக்குப் புறப்படலாம் என்ற திருவுள்ளத்தோடு கௌசல்யாவின்
மாளிகையை விட்டு வெளியேறினான் ராமன். ராமன் வனவாசம் செல்லப் போகிறான் என்ற செய்தி
அதற்குள் ஊர் முழுதும் பரவியிருந்த படியால், ராமன் வெளியே வந்தவாறே ஊர்மக்கள் அத்தனை பேரும்
ராமனை எதிர்நோக்கி நின்றிருந்தார்கள். கண்களில் நீர்மல்க, முகம் வாட, உடல்சோர பட்டுப் போன மரம் போல்
மக்கள் ராமனைச் சுற்றி நின்றிருந்தார்கள், ராமனை விழுந்து வணங்கினார்கள்.

கௌசல்யாவின் மாளிகையில் இருந்து சீதையின் மாளிகையை நோக்கி ராமன் செல்ல, மக்களும் செய்வதறியாது
ராமனைப் பின் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார்கள்.
இந்த மக்கள் ராமன் மீது இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்துள்ளமைக்கு எது காரணம்?
வால்மீகி பகவான் அயோத்தியா காண்டம் 26ம் சர்கம் 2ம் ஸ்லோகத்தில் காரணம் சொல்கிறார்:

“விராஜயன் ராஜஸுதோ ராஜமார்கம் நரைர்வ்ருதம்
ஹ்ருதயானி மமந்தேவ ஜனஸ்ய குணவத்தயா”

ராஜவீதிக்குத் தன் திருமேனி ஒளியால் ஒளி சேர்த்தபடி ராமன் செல்ல, மக்கள் எல்லாரும் பின் தொடர்ந்து சென்றார்கள். ஏன்?
தனது குணங்களால் அனைத்து மக்களின் உள்ளங்களையும் கடைந்து எடுத்துக் கொள்ளை கொண்டு விட்டான் ராமன் என்கிறார் வால்மீகி.
தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல், மக்கள் மனங்களைத் தன் குணங்களால் கடைந்து
அவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறான் ராமன். அதனால் தான் எந்த ஒருவருமே ராமனைக் கண்ட மாத்திரத்தில்
தம்மை அறியாமல் விழுந்து நமஸ்கரித்து விடுவார்களாம்.
ஏனெனில், ராமனைத் தரிசித்த மாத்திரத்தில், அவனது குணங்கள் நமது உள்ளத்தைக் கடைந்து ஈர்த்து விடும்.

இப்படித் தன் குணங்களால் எல்லோரையும் கவர்ந்து எல்லோராலும் வணங்கப்படுபவனாக ராமன் திகழ்வதால்,
‘ப்ரணம:’ என்று ராமன் அழைக்கப்படுகிறான்.
‘ப்ரணம:’ என்றால் எல்லோரையும் வணங்க வைப்பவர் என்று பொருள்.
ராமனைப் பொறுத்த வரை, அவன் தனது இறைத்தன்மையைக் காட்டிப் பிறர் தன்னை வணங்கும்படிச் செய்வதில்லை.
மாறாகத் தன் குணங்களால் அனைவரையும் ஈர்த்து அவர்கள் தன்னைவணங்கும்படிச் செய்து விடுகிறான்.
இவ்வாறு அனைவராலும் வணங்கப்படும் ராமன் ‘ப்ரணம:’ – அது தான் ஸஹஸ்ரநாமத்தின் 410-வது திருநாமம்.
“ப்ரணமாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், உரிய இடத்தில் உரிய நேரத்தில்
உரிய மரியாதைகளைப் பெற்று விளங்கும்படி ராமன் அருள்புரிவான்.

———–

411. ப்ருதவே நமஹ: (Pruthave namaha)
ராமனுடன் நட்பு பூண்ட சுக்ரீவன், ராமனின் உதவியோடு வாலியை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றான்.
ராம லக்ஷ்மணர்களையும் தனது வானர அமைச்சர்களையும் அழைத்துக் கொண்டு வாலியின் இருப்பிடமான
கிஷ்கிந்தையை அடைந்தான் சுக்ரீவன். “அடேய் வாலி! போருக்கு வாடா!” என்று உரத்த குரலில் வாலியைப் போருக்கு அழைத்தான்.

கடும் கோபத்துடன் போருக்கு வந்த வாலி, சுக்ரீவனைப் பலவாறு தாக்கினான். ஒரு மரத்தின் பின் மறைந்திருந்து
வாலி மேல் பாணம் எய்வதாகச் சுக்ரீவனிடம் சொல்லி இருந்த ராமன், வாலி மீது பாணத்தை எய்யவில்லை.
குத்துயிரும் கொலையுயிருமாக அடிபட்டு ரத்தம் கக்கியபடி திரும்பி வந்தான் சுக்ரீவன்.
நூலிழையில் உயிர் பிழைத்து வந்த சுக்ரீவனைப் பார்த்து ராமன், “சுக்ரீவா! நீயும் வாலியும் உருவத்தில்
ஒத்தவர்களாக இருக்கிறீர்கள். அதனால் யார் வாலி, யார் சுக்ரீவன் என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை.

இதோ! என் தம்பி லக்ஷ்மணன் உன் கழுத்தில் கஜபுஷ்பி என்னும் மலர்மாலையை அணிவிப்பான்.
இதைக் கொண்டு நான் உன்னை அடையாளம் கண்டுகொள்வேன். இப்போது போருக்குச் செல்!” என்றான் ராமன்.
லக்ஷ்மணன் அணிவித்த கஜபுஷ்பி மாலையுடன் மீண்டும் போருக்கு வந்தான் சுக்ரீவன்.
“அடேய் வாலி! போருக்கு வாடா!” என்று மீண்டும் அழைத்தான்.
அந்தக் குரலைக் கேட்டவாறே, வாலியின் குடிமயக்கம் நீங்கியது. கடும் கோபம் முளைத்தெழுந்தது.

தான், எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியாலும் பூமி நடுங்கும்படி சுக்ரீவனை நோக்கி நடக்கத் தொடங்கினான் வாலி.
அப்போது வாலியின் மனைவியான தாரை, வாலியைத் தடுத்தாள். “சுவாமி! இப்போது தான் உங்களால் புடைக்கப்பட்டுத்
தோல்வி அடைந்து உயிர்பிச்சை வாங்கிக் கொண்டு ஓடி இருக்கிறான் சுக்ரீவன்.
அவன் மறுபடியும் போர் புரிய அழைக்கிறான் என்றால் நாம் சற்று யோசிக்க வேண்டும்.
அவன் ஏதோ ஒரு பெரிய துணையோடு வந்திருக்க வேண்டும்.
நம் மகன் அங்கதன் அவனது நண்பர்கள் மூலம் ஒரு செய்தி அறிந்து வந்து என்னிடம் சொன்னான்.

இட்சுவாகு குலத்தில் உதித்த அயோத்தி மன்னரின் புதல்வர்களான ராம லக்ஷ்மணர்களோடு சுக்ரீவன் நட்பு கொண்டிருக்கிறானாம்.
அதிலும் ராமர் உலகப் பிரசித்தி பெற்ற தலைசிறந்த வீரர் ஆவார். போரில் அவரது பராக்கிரமத்துக்கு எல்லையே இல்லை.
ஊழிக் காலத் தீ போல் எதிரியின் ஆற்றலை மொத்தமாக அழிக்க வல்லவர் அவர். நல்லவர்களைக் காக்கும்
கற்பக மரம் போன்றவர் அவர். இடருற்றவர்கள் அத்தனை பேருக்கும் மேலான புகலிடம் அவர். திக்கற்றவர்களுக்குச் சிறந்த காவலர் அவர்.
புகழுக்கு உரிய பாத்திரமாகத் திகழ்பவர். இதைத் தெரிவிக்கும் வால்மீகியின் ஸ்லோகம்:

“நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூனாம் ஆபந்நானாம் பரா கதி:
ஆர்த்தானாம் ஸம்ச்ரயச்சைவ யசஸச்சைக பாஜனம்”

எப்போது அந்த ராமர் சுக்ரீவனோடு நட்பு கொண்டிருக்கிறாரோ, அவன் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்று பொருள்.
ராமர் இருக்கும் பக்கம் தான் வெற்றியும் இருக்கும்.
எனவே ராமனிடம் நட்பு கொண்ட சுக்ரீவனை எதிர்த்து இப்போது போர் புரியச் செல்லாதீர்கள்.
அந்த ராமரோடு நீங்களும் நட்பு கொண்டு விடுங்கள். ராமனைச் சரணடைவதே உங்களுக்குச் சிறந்த நன்மையைத் தரும்!”
என்றெல்லாம் பலவாறு அறிவுரை சொன்னாள். அவற்றை மீறிப் போருக்குச் சென்ற வாலி தனது முடிவைச் சந்தித்ததை நாம் அறிவோம்.

இங்கே ராமனைத் தாரை குறிப்பிடும்போது, “யசஸச்சைக பாஜனம்” என்று குறிப்பிடுவதாக வால்மீகி காட்டுகிறார்.
“யசஸச்சைக பாஜனம்” என்றால் புகழுக்கு உரிய ஒரே பாத்திரமாக இருப்பவர் என்று பொருள்.
அயோத்தியில் எழுந்தருளியிருந்த ராமனின் பெருமைகள் கிஷ்கிந்தையில் வாழும் வானரப் பெண்ணான தாரை வரை,
அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கிறதல்லவா?
அப்படி எல்லோராலும் நன்கு அறியப்பட்ட புகழோடு ராமன் விளங்குவதால் தான் ராமன் ‘ப்ருது:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ப்ருது:’ என்றால் புகழால் உயர்ந்து நிற்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 411-வது திருநாமம்.
“ப்ருதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பேரோடும் புகழோடும் பெருமை பெற்று விளங்கும்படி ஸ்ரீ ராமன் அருள்புரிவான்.

———–

412. ஹிரண்யகர்ப்பாய நமஹ: (Hiranyagarbhaaya namaha)

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப் பிரம்மம் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள்,
ராமபிரான் மீது அபார பக்தி கொண்டிருந்தார். அவர் திருப்பதியில் இருந்து திருவொற்றியூருக்குப் பயணித்துக் கொண்டிருந்தார்.
அவரது சீடர்கள் அவரைப் பல்லக்கில் சுமந்தபடி அழைத்துச் சென்றார்கள்.
கோவூர் சுந்தர முதலியார் என்னும் பெரியவர், இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
தியாகராஜ சுவாமிகள் எந்தச் செல்வத்தையும் ஏற்க மாட்டார் என்பதால், தியாகராஜரின் சீடர்களிடம்
சில தங்கக் காசுகளைக் கொடுத்து அனுப்பி இருந்தார் அவர்.
தியாகராஜரைப் பல்லக்கில் சுமந்தபடி சீடர்கள் செல்லும்போது, காட்டுப் பாதை வழியே பயணிக்க வேண்டிய சூழல் வந்தது.
காட்டுக்குள் நுழையச் சீடர்கள் அஞ்சினார்கள். அப்போது தியாகராஜர்,
“மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்? நம்மிடம் எந்தச் செல்வமும் இல்லையே! நாம் ஏன் அஞ்ச வேண்டும்?” என்றார்.

சீடர்களும் கோவூர் சுந்தர முதலியார் கொடுத்த செல்வத்தைப் பற்றி, அதுவரை தியாகராஜரிடம் தெரிவிக்கவில்லை.
இறைவன் மீது பாரத்தைப் போட்டு விட்டுக் காட்டுப் பாதையில் செல்லத் தொடங்கினார்கள்.
நடுக் காட்டில் அவர்கள் பயணிக்கும் போது சில திருடர்கள் பல்லக்கைச் சூழ்ந்து கொண்டார்கள்.
திருடர்களைக் கண்டு அஞ்சிய சீடர்கள், தியாகராஜ சுவாமிகளிடம்,
“குருவே! திருடர்கள் நம் பல்லக்கைச் சூழ்ந்து கொண்டார்கள்!” என்று சொன்னார்கள்.
“நம்மிடம் தான் எந்தச் செல்வமும் இல்லையே! நாம் ஏன் அஞ்ச வேண்டும்?” என்று கேட்டார் தியாகராஜ சுவாமிகள்.

அப்போது வேறு வழியில்லாமல் உண்மையைச் சொன்னார்கள் சீடர்கள். அதற்கும் தியாகராஜர் கலங்கவில்லை.
“இந்தச் செல்வத்தை நாம் நமக்காகப் பயன்படுத்தப் போவதில்லை. ராமனுக்காகத் தானே பயன்படுத்தப் போகிறோம்?
அப்படியானால் இது ராமனுடைய செல்வம்!அவனது செல்வத்தைக் காத்துக் கொள்ள அவனுக்குத் தெரியும்!
நீங்கள் யாரும் அஞ்ச வேண்டாம்!” என்றார். அந்த நடுக்காட்டில்,
திருடர்களால் சூழப்பட்ட நிலையில், ‘முந்து வேனுக…’ என்று தொடங்கும் ஒரு கீர்த்தனையை தர்பார் ராகத்தில்
ஸ்ரீராமனைக் குறித்து இயற்றிப் பாடினார் தியாகராஜர். அவர் பாடிய அளவில், அந்தத் திருடர்கள் அத்தனை பேரும்
தியாகராஜ சுவாமிகளின் பாதங்களில் வந்து விழுந்து விட்டார்கள்.
“என்ன ஆயிற்று?” என்று திருடர்களைப் பார்த்துக் கேட்டார் தியாகராஜர்.
“சுவாமி! இரண்டு இளைஞர்கள் கையில் வில்லும் அம்பும் ஏந்திக் கொண்டு உங்கள் பல்லக்கைச் சுற்றிச் சுற்றி
வருவதை நாங்கள் கண்டோம். அந்த இருவரும் எங்களைத் தாக்க முற்பட்டார்கள்.
அவர்களின் கால்களில் நாங்கள் போய் விழுந்தோம். உங்கள் காலில் விழுந்தால் உயிர் பிழைக்கலாம் என்று
அந்த வில் பிடித்த இளைஞர்கள் கூறினார்கள். அதனால் தான் உங்கள் கால்களில் வந்து விழுந்து விட்டோம்!” என்று சொன்னார்கள் திருடர்கள்.

தன்னைக் காப்பதற்காக, வில்லும் அம்பும் கையில் ஏந்தி சாட்சாத் ராமனும் லக்ஷ்மணனுமே வந்திருக்கிறார்கள் என்பதை
உணர்ந்து பக்திப் பரவசத்தில் பூரிப்படைந்தார் தியாகராஜ சுவாமிகள். ராமனின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
இதன்மூலம் நாம் அறியும் செய்தி என்னவென்றால், ராமனின் அவதாரக் காலம் மட்டுமின்றி,
அதற்குப் பிற்பட்டவர்கள் ராமனைத் தியானித்து வணங்கினாலும், அவர்களையும் தேடி வந்து அருள்புரிபவனாக
ஸ்ரீராமன் விளங்குகிறான். அதனால் தான் ராமனுக்கு ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று திருநாமம்.

இங்கே, ‘ஹிரண்ய’ என்பது இனிமையான இதயத்தைக் குறிக்கிறது, அதாவது, ராம பக்தர்களின் இனிய இதயங்கள்.
அந்த இதயங்களிலே மனத்துக்கு இனியவனாக எப்போதும் ஸ்ரீராமன் குடியிருப்பதால், ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘கர்ப்ப’ என்றால் உள்ளே வசிப்பவர். இனிய இதயங்களுக்குள்ளே வசிப்பவர்
‘ஹிரண்யகர்ப்ப:’; அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 412-வது திருநாமம்.
“ஹிரண்யகர்ப்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், நம் மனங்களிலும் ராமன் வந்து குடிகொண்டு ஆனந்தம் தருவான்.

—–

413. சத்ருக்னாய நமஹ: (Shathrughnaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை –
இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)ராமாவதாரத்தின் மூலம் ஸ்ரீராமன்
நமக்கு உணர்த்தும் வேதாந்த தத்துவத்தை சுவாமி வேதாந்த தேசிகன்,
சங்கல்ப சூரியோதயம் என்னும் காவியத்தில் தெரிவிக்கிறார்:

“தர்ப்போதக்ர தசேந்த்ரியானன மனோ நக்தஞ்சராதிஷ்டிதே
தேஹேஸ்மின் பவஸிந்துனா பரிகதே தீனாம் தசாம் ஆஸ்தித:
அத்யத்வே ஹநுமத் ஸமேன குருணா ப்ரக்யாபிதார்த்த புமான்
லங்காருத்த விதேஹ ராஜ தனயா ந்யாயேன லாலப்யதே”

ராமன் தான் பரமாத்மா.
மகாலட்சுமியின் அம்சமான சீதாதேவி பிறவிப் பிணியில் சுழலும் ஜீவாத்மாவின் பாத்திரத்தை ஏறிட்டுக்கொள்கிறாள்.
கடல்சூழ்ந்த இலங்கையே பிறவிப் பெருங்கடல். அசோக வனமே நம் உடல்.
சீதை என்னும் ஜீவாத்மாவை ராமன் என்னும் பரமாத்மாவிடம் இருந்து பிரித்து,
பிறவிப் பிணியாகிய இலங்கையில் உடலாகிய அசோகவனத்தில் ராவணன் சிறைவைத்துள்ளான்.
இந்த ராவணன்தான் நம் மனமும் பத்து இந்திரியங்களும்
மனதுக்குப் பத்து இந்திரியங்கள் தலைபோன்றவை.
மெய், வாய், கண், மூக்கு, செவி, நாக்கு, கை, கால், மலத்துவாரம், ஜலத்துவாரம் ஆகிய பத்து இந்திரியங்களோடு
கூடிய மனமே பத்து தலைகொண்ட ராவணன் ஆவான்.
இந்த மனமும் புலன்களும் சேர்ந்து தான் ஜீவாத்மாவைப் பிறவித்துயரில் அழுத்தி
இறைவனை அடையவிடாமல் தடுக்கின்றன. இந்த மனம், புலன்களை மூன்று குணங்கள் பாதிக்கின்றன.

சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகியவையே அந்த மூன்று குணங்கள்.
சத்துவ குணமே சாந்தமான விபீஷணன். ரஜோகுணம் தான் காமம், கோபம் நிறைந்த சூர்ப்பணகை.
தமோ குணம் தான் சோம்பலில் ஆழ்ந்த கும்பகர்ணன். ராவணன் என்னும் மனமும் புலன்களும் விபீஷணனாகிய
சத்துவ குணத்தை விரட்டிவிட்டு, சூர்ப்பணகை கும்பகர்ணனாகிய ரஜோகுணம், தமோகுணம் ஆகியவற்றைத்
தன்னுடன் வைத்துக்கொள்வதாலே, ஜீவாத்மாவாகிய சீதை மேலும் துன்புறுகிறது.

இந்நிலையில், பரமாத்மாவாகிய ராமனை அடைய வேண்டும் என்று ஜீவாத்மாவாகிய சீதை தவிக்கும்போது,
பரமாத்மாவான ராமன், ஆஞ்ஜநேயரை அனுப்பி வைக்கிறார். அந்த ஆஞ்ஜநேயர் தான் குரு,
ஆசார்யன். இறைவன் எல்லாச் சமயங்களிலும் நேராக வருவதில்லை, குருவை அனுப்பிவைத்து,
குருவருளின் மூலம் திருவருள் நமக்குக் கிட்டும்படிச் செய்கிறான்.
ஆஞ்ஜநேயர் சீதையைக் கண்டுபிடித்து, ராமாயணம் பாடியது போல்,
ஆசார்யன் ஜீவாத்மாவுக்கு இறைவனின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறார்.

ஆஞ்ஜநேயர், ராமனின் முத்திரை மோதிரத்தைச் சீதைக்கு வழங்கியது போல்,
ஆசார்யன் சீடனாகிய ஜீவாத்மாவுக்கு இறைவனின் சங்கு சக்கர முத்திரைகளைத் தோளில் பொறிக்கிறார்.
நிறைவாக, அனுமன் இலங்கையை எரித்தது போல், பிறவிப் பிணியையே எரிக்கிறார் ஆசார்யன்.
அதன்பின் ராமனைத் தன் தோளில் சுமந்தபடி இலங்கைக்கு அனுமன் அழைத்து வந்ததுபோல்,
நம்மைக் காக்கும் பொருட்டு இறையருளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறார் ஆசார்யன்.

அனுமனின் துணையோடு ராமன் இலங்கையில் உள்ள மொத்த அரக்கர்களையும் அழித்தது போல்,
ஆசார்யன் துணையோடு இறைவன் ஞானம் என்னும் அம்பை எய்து நமது மொத்தப் பாபங்களையும் அழித்து விடுகிறான்.
அனுமன் சீதா-ராமர்களை இணைத்து வைத்தது போல், ஆசார்யன் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைத்து வைக்கிறார்.

இதே கருத்தை ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தின் ஸாத்வத ஸம்ஹிதையில் உள்ளது.

“தசேந்த்ரியானனம் கோரம் யோ மனோ ரஜனீசரம்
விவேக சர ஜாலேன சமம் நயதி யோகினாம்”-என்ற ஸ்லோகம் தெரிவிக்கிறது.

இப்படி ஆத்மாவுக்கு எதிரிகளாக இருக்கும் பாபங்களையும், தறிகெட்டு ஓடும் புலன்களையும்
ஞானம் என்னும் அம்பால் வீழ்த்தி வெல்வதால், ஸ்ரீராமன் ‘சத்ருக்ன:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘சத்ரு’ என்றால் எதிரி. ‘சத்ருக்ன:’ என்றால் எதிரிகளை அழிப்பவர்.
தறிகெட்டு ஓடும் மனம், புலன்கள் மற்றும் பாபங்களாகிய எதிரிகளை அழிப்பதால் ராமன் ‘சத்ருக்ன:’ என்று அழைக்கப்படுகிறான்.